ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.29

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.29 

எனது குருவின் பக்தர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

பரம்பூஜ்னீய ஸ்ரீ குருஜி கோல்வால்கர் இந்த சாது ரங்கராஜனின் வழிகாட்டிகளில் ஒருவர். அவர் சமயம் அல்லது ஆன்மீக இயக்கங்கள் நித்திய கங்கையை போல் எப்போதும் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்றும் அது ஒரு ஆசிரமம் அல்லது மத அமைப்பின் நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டால் அது தேங்கி மாசடையும் என்றும் கூறுவார். பாரத தேசத்தின் மத வரலாற்றில் பல வலிமையான சமய மற்றும் ஆன்மீக இயக்கங்கள் பல பெரும் மகாத்மாக்களால் துவங்கப்பட்டன. அவைகளில் பல ஆணவமும் அதிகார மோகவும் கொண்ட  தலைவர்களால், மற்றும் தமக்குள்ளேயே  மோதிக்கொள்ளும் குழுக்களால் இன்று தேங்கிய குட்டைகளாக அல்லது பாழடைந்த கிணறுகளாக மாறியுள்ளன. பக்தர்களுக்கு ஆன்மீக ஆற்றலை ஊட்டும் ஜீவநதிகள் ஆக இருப்பதற்கு பதிலாக ஆணவமிக்க சில பேர்களின் அதிகார போராட்டத்திற்கான மையமாகவும், ஏமாளி பக்தர்களை சுரண்டுகின்ற இடங்களாகவும் மாறியுள்ளன. 

பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் மஹாசமாதிக்குப்பின் அவரது ஆசிரமம் அவரது பக்தர்களை ஒன்றிணைத்து பகவானின் நோக்கத்தை பரப்பாமல், அனைத்து மத நிறுவன அமைப்புக்களைப்போல் பல உட்பிளவுகளுக்கு ஆளாகியது இந்த சாதுவிற்கு பெரும் வலியை தந்தது. மே 6 2001 அன்று இந்த சாது யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தின் யோகா வகுப்புகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கையில், பகவானின் பக்தரான திரு. ராஜகோபால் என்பவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பை பெற்றார். அவர் ஜஸ்டிஸ் திரு. அருணாச்சலம் அவர்கள் பெங்களூர் வந்திருப்பதாகவும், அவர் சாதுவை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். சாது ஜஸ்டிஸ் அவர்களை காந்திநகரில் உள்ள ஓட்டல் கனிஷ்காவில், அவர் தங்கியிருந்த இடத்தில் சந்தித்தார். அங்கே சாது திரு. அருணாச்சலம் அவர்களிடம், யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் உள்ளவர்களிடையே உள்ள தொடர்புகள் நல்லுறவிற்கு வெகு தொலைவே இருப்பதைப்பற்றி மனம் விட்டு பேசினார். விவாதித்து முடிந்தப்பின், இந்த சாது, திரு. சக்திவேல் மற்றும் திரு. ராஜகோபால் அவர்களால், பாரதமாதா குருகுல ஆசிரமத்த்திற்கு திரு. அருணாச்சலம் அவர்களின் காரில் திரும்ப அழைத்து வரப்பட்டார்.

சாது பகவானின் பணிகளில் ஈடுபட்டிருந்தமையால் அவருக்கு ஆசிரமத்திற்கு செல்வதற்கான நேரம் வாய்க்கவில்லை. ஆகஸ்ட் 2, 2001 ல் சாது சிங்கப்பூர் செல்லும் முன் ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சிங்கப்பூர் லஷ்மி நாராயணா கோயிலில் சாது பகவத்கீதை குறித்த தொடர் விரிவுரைகளை ஹிந்தி மொழியில் வழங்கினார். மேலும் ஆகஸ்ட் 10 அன்று இந்தியா திரும்பும் முன் ராமநாம ஜப யக்ஞத்தை நடத்தினார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், சாது, தென்ஆப்பரிக்கா மற்றும் கென்யா பயணத்தில் மும்முரமாக இருந்தார். தென் ஆப்பிரிக்காவின் க்வாஸுளு நேடாலில், சாட்ஸ்வர்த்தின் சர்வ தர்ம ஆசிரம வளாகத்தில், செப்டம்பர் 24, 2001, திங்கள் அன்று, சாது, “யோகி ராம்சுரத்குமார் ராம்நாம் பரிக்ரமா மந்திர்” என்னும் பிரார்த்தனை அறையை துவக்கி வைத்தார். அந்த மந்திரின் திறப்பு விழா    கணபதி, காயத்ரி, ம்ருத்யுஞ்ஜய மற்றும் ராமநாமதாரக ஹோமங்களுடன் நடைப்பெற்றன. சாதுஜி, ராமநாமத்தின் சிறப்பு, மற்றும் அந்த தாரக மந்திரத்தை இடைவிடாது ஜெபித்து ஆன்மீகத்தின் உச்ச நிலையை எட்டிய பப்பா ராமதாஸ் மாதாஜி கிருஷ்ணா பாய் மற்றும் யோகி ராம்சுரத்குமார் ஆகியவர்களின் வாழ்க்கை குறித்து உரையாற்றினார். பல இனம், மொழி, மதங்களை சேர்ந்தவர்களும் ராமநாம தாரக மந்திரத்தை தொடர்ந்து அங்கே, யோகி ராம்சுரத்குமார் அவர்களின் குருநாதர் பப்பா ராமதாஸ் ஏற்படுத்திய ஆனந்தாசிரமத்தில் உள்ளதுபோல், வருஷத்தின் 365 நாட்களும், அனைத்து நேரமும் ஜபிக்கப்படுகிறது. அந்த மந்திரின் மையத்தில் உள்ள மேடையில், காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமம் மற்றும் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித மண்ணை பாதுகாத்து அதன்மீது ஒரு புனித விளக்கு நிறுவப்பட்டது. அந்த விளக்கைச்சுற்றி பல தெய்வங்கள் மற்றும் யோகி ராம்சுரத்குமார் படங்கள் வைக்கப்பட்டது. பக்தர்கள் அங்கே சுற்றி வந்து ராமநாம தாரக மந்திரத்தை நாள் முழுவதும் கூறுவார்கள். இந்தியர்கள் மட்டுமல்லாது பல கறுப்பின மக்களும் மற்றும் வெள்ளையர்களும் இந்த கோயிலை வலம் வருவார்கள். 

சாது கென்யாவிற்கு தீபாவளி நாளுக்கு முன் மாலையில் வந்து, நைரோபியில் ஹிந்து  சகோதர சகோதரிகளுடன் விழாவை கொண்டாடினார். அவர் கென்யாவில் தங்கியிருந்த போது, சனாதன ஹிந்து தர்ம சபை கோயில், ஜெயின் மந்திர், சுவாமி நாராயண் கோயில், ஹரே கிருஷ்ணா கோயில், தியாசஃபிகல் சொஸைட்டி, தீனதயாள் பவனில் அமைந்த பாரதீய ஸ்வயம்சேவக் சங்க், குஜர்  சுத்தர் விஸ்வகர்மா கோயில், ஸ்ரீ அரவிந்தோ சங்கம், மற்றும் ஆர்ய சமாஜ் போன்ற இடங்களில் சொற்பொழிவு நிகழ்த்தினார். மேலும் அவர் கென்யா ஹிந்து கவுன்சிலின்  செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு “ஹிந்து அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு“ குறித்து பேசினார். கென்யாவிலும் சகோதரி நிவேதிதா அகாடமி மையம் நிறுவப்பட்டது. 

பகவானின் ஜெயந்தி பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் டிசம்பர் 1 2001 அன்று நடைபெற்றது. பகவானின் முதல் திதி பூஜை மார்ச் 10, 2002 அன்று  கொண்டாடப்பட்டது. மே – 31, 2002 அன்று சாதுஜி, திருமதி. பாரதி, அமெரிக்காவின் திரு. நந்தி ஜேத்தி, டெல்லியை சேர்ந்த திரு. P.N. கல்ரா, பெங்களூரை சேர்ந்த திரு. அசோக் மட்டூ  மற்றும் அவரது மகள் ரோஹிணி ஆகியோருடன் திருவண்ணாமலைக்கு காரில் பயணித்து, யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்திற்கு வந்தனர். அடுத்தநாள் காலை, கிரிபிரதட்சணம் செய்தபிறகு, ராமநாம ஜபம் மற்றும் ஆரத்தியை பகவானின் சன்னதியில் நிகழ்த்தினர். அவர்கள் ஜஸ்டிஸ் அருணாச்சலம், மா தேவகி, மா விஜயலட்சுமி, திரு. சுவாமிநாதன், மற்றும் பல ஆசிரமத்தினரை சந்தித்துவிட்டு, அருணாச்சலேஸ்வரர் கோயில், ரமணாச்ரமம், மற்றும் சேஷாத்ரி சுவாமி ஆசிரமம், ஆகிய இடங்களில் தரிசனம் செய்துவிட்டு, பாண்டிச்சேரிக்கு பயணித்தனர். அங்கே ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் போன்ற இடங்களுக்கு பயணித்தப்பின் அவர்கள் திருக்கோயிலூர் வந்தனர் அங்கே ஞானானந்தா தபோவனத்தில், சுவாமி சதாசிவ கிரி, அவர்களை வரவேற்றார். பின்னர் அவர்கள் உலகளந்தபெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு  பெங்களூர் திரும்பினர். செப்டம்பரில் பக்தர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தபோது சாது ஆனந்தாஸ்ரமத்திற்கு சென்றார். அங்கே சுவாமி சச்சிதானந்தர் மற்றும் சுவாமி முக்தானந்தா போன்றோர் சாதுவை வரவேற்றனர். அவர்கள் நித்தியானந்தா ஆசிரமத்திற்கும் பயணித்து பின்னர் அவர்கள் தர்மஸ்தலாவிற்கு சென்றனர். அங்கே அவர்கள் திரு. விரேந்திர ஹெக்டே அவர்களை பெங்களூர் திரும்பும் முன் சந்தித்தனர். 

அக்டோபர் 28, 2002, திங்கள்கிழமை அன்று, திருமதி. ரெஜினா சாரா ரயன் மற்றும் திருமதி. உடே அகஸ்ட்டினியக்  போன்ற திரு. லீ லோசோவிக்கின் சீடர்கள் பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு மூன்று நாட்கள் தங்குவதற்கு வந்திருந்தனர். அப்போது சாதுவிடம் ரெஜினா ஒரு விரிவான, ஆழமான நேர்காணலை, பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்து, தனது பெரும் பணியான, “ஒன்லி காட் – எ பயோகிராபி ஆஃப் யோகி ராம்சுரத்குமார்“ (Only God—A Biography of Yogi Ramsuratkumar) என்ற புத்தகத்திற்காக, நிகழ்த்தி, பல புகைப்படங்களை சாதுவிடம் கேட்டு பெற்றார். ‘தத்துவ தர்சனா’வின் பழைய இதழ்களையும் வாங்கிக் கொண்டார். பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி குருகுல ஆசிரமத்தில் அகண்ட ராமநாம ஜபத்துடன் டிசம்பர் – 1, 2002 ஞாயிற்றுக்கிழமையன்று நடைப்பெற்றது அவ்விழாவில் தர்மாச்சாரியர்களான சுவாமி சதானந்தா மற்றும் சுவாமி அபய சைதன்யா போன்றோர் உரையாற்றினா். 

சாது திரு. அருணாச்சலம் அவர்களை ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 2, 2003 அன்று, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அகில உலக ராம நாம இயக்கத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர், திரு. D.S.கணேசன், அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற சத்சங்கத்தில் சந்தித்தார். மார்ச் 27, 2003, வியாழன் அன்று பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் பகவானின் இரண்டாம் ஆண்டு திதி பூஜை நடைப்பெற்றது. ரெஜினா, பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்த மேலும் விவரங்களை கேட்டு ஒரு கேள்வி பட்டியலை அனுப்பியிருந்தார். சாது அவரது கேள்விகளுக்கு விரிவான பதிலை வெள்ளிக்கிழமை அன்று அனுப்பினார். 

சாது 5-4-2003 அன்று திரு.A. வைத்தியநாதன் மற்றும் திரு. R. குருராஜ் என்னும், கடலூர் வழக்கறிஞர்களிடமிருந்து, திரு. S. பார்த்தசாரதி, திருவண்ணாமலை, பகவானின் பக்தர், சார்பாக ஒரு சட்ட நோட்டீஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி திரு சதாசிவம் முன்  சமர்ப்பிக்கப்பட்டிருந்த  உறுதிமொழி மற்றும் மனுக்களின் பிரதிகளுடன், பெற்றார். அதில் மனுதாரர் திருவண்ணாமலை துணை பதிவாளரை முதல் பதிலளிப்பவர், யோகி ராம்சுரத்குமார் டிரஸ்ட்டை இரண்டாம் பதிலளிப்பவர், மற்றும் சாது ரங்கராஜன், N.S.மணி, திருமதி. ப்ரபா சுந்தரராமன், T.S. ராமனாதன், ஜஸ்டிஸ். T.S. அருணாச்சலம், மா தேவகி, அன்னை. விஜயலட்சுமி, அன்னை விஜயக்கா, திரு. R. ஆஞ்சனேயலு, சென்னை வருமான வரி இலாகா ஆணையர், மா தேவகி வேதபாடசாலை டிரஸ்ட், திரு. விஸ்வநாதன் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, திருவண்ணாமலை, ஆகியோர் மூன்று முதல் பதினாறு வரையிலான பதிலளிப்பவர்களாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். மனுதாரர் யோகி ராம்சுரத்குமார் டிரஸ்ட் புனரமைக்கப்பட்டதை எதிர்த்ததோடு அல்லாமல் அதைச் செய்ய பகவானுக்கு அதிகாரம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். யோகி ராம்சுரத்குமார் அவர்களின் மஹாசமாதிக்கு பிறகு  வாரிசு  உரிமைக்காக போராட்டம் நடப்பதாகவும், அந்த ட்ரஸ்ட் இக்கட்டான நிலையில் உள்ளதாகவும், மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த வழக்கு முடியும் வரை, இப்பொழுது உள்ள மற்றும் பழைய  டிரஸ்டிகள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டிருந்தார்.

ஏப்ரல் 10, 2003 அன்று, ஜஸ்டிஸ் அருணாச்சலம் எழுதிய ஒரு கடிதத்தில், அந்த ரிட் பெட்டிஷன் குறித்து விவாதிக்க, ஏப்ரல் 27 , 2003 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு அன்று, ஆசிரம வளாகத்தில், பகவானின் பக்தர்கள் பங்குபெறும் ஒரு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள, சாதுவை அழைத்திருந்தார். ஆனால் சாது, ஆசிரமத்தின் டிரஸ்டி என்ற நிலையில் இருந்து, எப்போது எந்த காரணத்திற்காக, எந்த முன் அறிவிப்போ தகவலோ தரப்படாமல், நீக்கப்பட்டிருந்தார் என்பது அவருக்கே தெரியாது. அவர் அதனை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அவரது பகவான் மீதான நம்பிக்கை, பகவானின் சித்தம் இன்றி எதுவும் நடைபெறாது என்ற ஆழந்த நம்பிக்கையின் காரணமாக, அவர் தனக்கு பகவான் இட்ட பணிகளை செய்ய விரும்பினாரே அன்றி எந்த பதவியையும் அடைய அவர் ஆசைக்கொள்ளவில்லை. மேலும் பகவான் சாதுவிற்கு  தீக்ஷை அளித்தபின், பதிமூன்று வருடங்களில் பல முறை, சாதுவுடனும் மற்ற நெருங்கிய பக்தர்களிடமும் உரையாடுகயில், சாது தான் தனது முதன்மையான சிஷ்யர் என்றும், தனது தந்தை அளித்துள்ள மிக முக்கியமான ஒரு பொறுப்பை தான் அவர்க்கு வழங்கியுள்ளதாகவும், ஆஸ்ரம வேலைகளில் அவரை சிக்க வைக்கலாகாது என்றும் கூறியுள்ளார். பகவான் சாதுவை, ஏதேனும் பெரிய பிரச்சனைகள் ஏற்படும்பொழுது, அல்லது பகவான் சார்பில் ஏதாவது மிக முக்கியமான பொறுப்பை நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்படும் பொழுது மட்டும், தன்னருகில் அழைப்பார்.

சாது பகவானின் பக்தர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை போன்ற கடிதம் ஒன்றை எழுதி, அதனை ஜூன் 2003 இதழான ‘தத்துவ தர்சனா’விலும் வெளியிட்டார்: 

“தலையங்கம் 

எனது குருவின் பக்தர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு!” – “எத்தனை மகான்கள் தோன்றியுள்ளனரோ அத்தனை பேர்களுக்கும் எங்கள் வந்தனங்கள்” –. இது ஸ்ரீ தியாகராஜர் அவர்களின் பாடல். எனது தீக்ஷா குரு யோகி ராம்சுரத்குமார் எல்லாவிதங்களிலும் அந்த மகானின் மறு அவதாரம் போல்  திகழ்ந்தவர் அவர். அவர் மிகுந்த எளிமை மற்றும் தாழ்மையான வாழ்க்கையை வாழ்ந்தார். அவரது குரு, காஞ்சன்காடு ஆனந்தாசிரமத்தின் பூஜ்ய பப்பா ராமதாஸ் அவர்கள் அவருக்கு தீக்ஷை அளித்த மந்திரத்தின்  நாயகனை, ஸ்ரீ ராமனை, தனது தந்தையாக ஏற்று, அனவரதம் அவரிடம் தீவிர பக்தி கொண்டிருந்தார். இந்த மந்திரத்தை தன் வாழ்நாள் முழுவதும் ஜெபித்து வந்தார். அனைத்து சாதுக்கள் சன்யாசிகள் மற்றும் மகாத்மாக்கள் இடம் அபாரமான மதிப்பும் மரியாதையும் அவர் வைத்திருந்தார். ஸ்ரீ தியாகராஜர் பாடுகிறார், நிதி சால சுகமா ராமுனி சன்னதி சேவா சுகமா?“ — “ஆனந்தம் எங்கே இருக்கிறது? பணத்திலும் பொருளிலுமா  அல்லது ராமபிரானின் சேவையிலா?” அரச மரியாதைகளும்  பேரும் புகழும் அவரது இல்லக் கதவுகளை தட்டிய பொழுதிலும், அவற்றை தூக்கி எறிந்து,   மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் அவர். அதுபோலவே எனது குருநாதர் யோகி ராம்சுரத்குமார், பெயர், புகழ், மற்றும் பணம் படைத்தவர்கள் மற்றும் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்கள் ஆதரவு,  ஆகியவற்றை   துச்சமாக தள்ளினவர் ஆவர். அவருக்கு உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாடு இருந்ததில்லை. இந்த சாது, பலமுறை, பகவான் ஒரு விவசாய தொழிலாளி, அல்லது தெருவில் காய்கறி விற்பவர் போன்றவர்களையும் பெரும் தொழிலதிபர், உச்ச நீதிமன்ற நீதிபதி, பெரும் அரசியல்வாதி, புகழ்மிக்க திரைநட்சத்திரம் ஆகியோரையும் ஒன்றாக பாவித்து தனதருகே அமரச் செய்வார். அவர் தனக்கும் தனது சிஷ்யனிற்கும் இடையேயும் எந்த பாகுபாடும் பார்த்ததில்லை. பல நேரங்களில் நாங்கள் ஒன்றாக, கரங்களை பற்றிக் பற்றிக்கொண்டு அமர்ந்திருக்கிறோம், தெருவில் நடந்து இருக்கிறோம், ஒரே இலையில் சாப்பிட்டு, அருகருகே. தரையில், நீண்ட கால நண்பர்களைப் போல ஒன்றாக படுத்திருக்கிறோம். பல்வேறு ஹிந்துசமய மற்றும் ஆன்மீக இயக்கங்களில், பல பொருப்புகளில், இந்த சாதுவின் முப்பதாண்டு ஹிந்து சேவையில், உலகப் புகழ்பெற்ற துறவியர்கள், பல மகான்கள், மற்றும் சாதுக்கள் பலருடைய தொடர்பை பெற்றிருந்துள்ள  போதிலும், யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு இணையாக எவரையும் இந்த சாது சந்திக்கவில்லை. யோகி ராம்சுரத்குமார், மஹாயோகி என்ற வரையறைக்கு, தபஸ்வி பாபா அவதூத் குறிப்பிடுவதை போல், மிகவும் பொருத்தமானவர்: ம்ருதவத் – பாராட்டு அல்லது கண்டனம், , நன்மை அல்லது தீமை எது ஏற்பட்டாலும் சலனப்படாதவர், ப்ரஷ்ட பீஜவத் – முளைக்காத விதையைப்போல் அனைத்திலும் பற்று இல்லாதிருப்பவர், பாலவத் – குழந்தையை போன்று வெகுளியாக இருப்பவர், உன்மத்தவத் – பித்தனைப் போல் இருப்பவர், பிசாசவத் – பேய் போல், குளித்தோ அல்லது குளிக்காமலோ, நன்றாக உடுத்தியோ அல்லது அழுக்கு கோணிகளை உடுத்தியோ, உடல் பற்றி கவலை கொள்ளாமல் இருப்பவர், ஆனால் அதே சமயம் கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் எப்பொழுதும் காணப்படுபவர்: முதிதா  – பெருங்களிப்பு, கருணா – இரக்கம், மைத்ரீ – நட்புணர்வு, உபேக்‌ஷா –அலட்சியம். 

இத்தகைய துறவுநிலையில் வாழ்கின்ற ஒரு மஹானுடன் சில கணங்கள் இருப்பது கூட வாழ்க்கையின் பெரும் ஆசிர்வாதம். பல தூர தேசங்களில் இருந்து வருபவர்கள் சில நிமிடங்கள் அல்லது சில மணிநேரங்கள் அவருடன் இருந்தாலே அந்த மகிழ்வான தருணங்கள் தரும் அனுபவம் அவர்களின் வாழ்க்கை முழுவதும் நினைவில் பேணுவார்கள். அவரை ஒரு முறை கூட நேரில்  தரிசிக்க வாய்ப்பு பெறாத பலர், தென் ஆப்பிரிக்காவின் சார்ட்ஸ்வர்த்தில் உள்ள சர்வதர்ம ஆசிரமத்தில், யோகி ராம்சுரத்குமார் ராம்நாம் பரிக்ரமா மந்திரில், அவரது பெயரை பாடி, அவரது படத்தை சுற்றிச் சுற்றி வருகின்றனர். பலர் தங்கள் வாழ்க்கையில் விவரிக்க இயலாத பெரும் மாற்றங்களை தங்கள் உலகாயத மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் பெற்று வருகின்றனர். 

ஆனால், பகவானோடு நீண்டகாலமாக தொடர்பிலிருந்துள்ளவர்கள், உண்மையில் பகவானுக்கு ‘நெருக்கமான’ அல்லது ‘தொலைவான’ வட்டங்கள் என எதுவும் இல்லாதபோதும், தங்களை அவரது ‘நெருக்கமான’ வட்டத்தை சேர்ந்தவர்களாக கருதிக்கொள்கிறவர்கள், தங்களது  கர்வம், அகங்காரம் , தற்பெருமை , ஆசைகள் , பரஸ்பர பொறாமை , பொல்லாங்கு போன்ற குணாதிசயங்களை துடைத்து நீக்காமல் இருப்பது மிகவும் விசித்திரமானதாகும். எனது குரு அனைத்து வகையான மக்களையும் அவருக்கு அருகே வர அனுமதிப்பார். நிலையான இருப்பிடம் அற்றவர்கள், காசில்லாதவர்கள் மற்றும் குடிபோதையில் இருப்பவர்கள் வந்து அவரது அருகில் அமர்வதை இந்த சாது பார்த்திருக்கிறான். அதே நேரத்தில் வேறு சாது அல்லது மஹாத்மா அவர்முன் அமர்ந்திடுக்கக்கூடும். ஆனால், பாகவான், தன் முன் அமர்ந்திடுப்பவர்களிடையே எந்த பாகுபாடும் கண்டதில்லை. ஒரு முறை கிராமத்துப் பெண்மணி ஒருவர்  பகவான் முன் தோன்றி தனது கணவன் குடிபோதையில் ஒரு போலீஸ்காரரை தாக்கினதால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதாக கூறி அழுது புலம்பினாள். பகவான் அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசியதோடு, அவளது கணவனை விடுவிக்க “எனது தந்தையிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறி, அந்த பெண்மணிக்கு இரவு உணவையும் தங்குமிடத்தையும் ஏற்பாடு செய்தார். பகவானது இரக்கமும், கருணையும் அளவற்றது, கீழே விழுந்தவர்களை கூட எழுந்து நிற்கச் செய்து திருந்தி வாழ வழி வகுத்து கொடுத்துள்ளது. ஆனால், அதே சமயம், கல்வி கற்ற, வசதிபடைத்த, சமூகத்தில் மேல் நிலையில் உள்ள, பல பேர்கள், அவர்கள் ஒழுக்க குறைவு  உடையவர்கள் ஆக  இருந்தால்கூட,   பகவானிடம் நெருங்கி  சில ஆயிரம் ரூபாய்களை செலவழித்து பகவானுக்காக பிறந்தநாள் விழா கொண்டாடவோ  அல்லது ஆசிரமம் அல்லது கோயில் கட்ட  நன்கொடை அளித்தாலோ,    பகவானுடைய அருள்  கிடைத்துவிடும் என்றும்  அதன்மூலம் தங்கள் உலகாயத பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்றும்  நம்புகின்றனர். பக்தர்களை காண்பதற்கு பகவானின் உடல்நிலை சரியில்லாத காலத்திலும் தொலைவில் நின்று அவரை தரிசித்து விட்டு செல்ல வேண்டும் என்று எண்ணி அவர் இருக்கும் இடத்திற்கு வந்த  பாமர மக்களை விட, பகவானிடம் நெருங்கிய தொடர்பிலுள்ள  தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைத்த சிலபேரும் இருக்கத்தான் செய்தார்கள். சந்தனமரத்தின் மரத்தின் கீழ் நீண்டகாலமாக கிடந்தால்  கற்கள் சந்தானத்தின் வாசத்தை பெற்றுவிடுமா? அதைப்போலவே குருவுடன் அருகாமையில் இருந்த போதும் அவர்கள் குருவின் அருளாசியை பெறுவதில்லை. இத்தகைய நிகழ்வுகளை நாம் மஹா குருவின் லீலைகளாகவே காண்கிறோம். 

1996 ல் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் திருவண்ணாமலையில் எழுப்பப்பட்டு வந்த நேரத்தில், இந்த சாது குருநாதரின் ஆணையை ஏற்று ஒரு சிறப்பு கட்டுரை, “எனது தீக்ஷா குருவிற்கு வணக்கங்கள்” என்ற தலைப்பில்,  ஆசிரம நினைவு மலருக்காக எழுதினான். அதே கட்டுரை மீண்டும் ‘தத்துவ தர்சனா’வில் நவம்பர் 1995 – ஜனவரி 1996 இதழில், நினைவு மலரில் அச்சிடாமல் விட்டுவிடப்பட்ட ஒரு பத்தியும் சேர்க்கப்பட்டு, வெளிவந்தது. அந்த விடுபட்ட பத்தியில் நாங்கள் குரு தந்த தீர்க்க தரிசனத்தோடேயே குறிப்பிட்டிருந்தோம்: “கோயில்களும், ஆசிரமங்களும் சாதனா செய்வதற்கான இடங்கள், தனிப்பட்ட மனிதர்கள் தங்களை லௌகீக வாழ்விலிருந்து ஆன்மீக வாழ்க்கைக்கு உயர்த்திக்கொள்ள உதவும் ஒரு தளம். இவைகள் தெய்வத்தோடோ, தெய்வீகத்தோடோ ஒருவரின் லௌகீக விருப்பத்திற்கோ அல்லது சுகத்திற்கோ பேரம் பேசும் இடமல்ல. அவைகள் பொழுதுபோக்கும் இடமோ அல்லது விடுமுறைகளில் வந்து தங்கி கதைகளையும், அற்புதங்களையும் மற்றும் கற்பனைகளையும் விவாதிக்கும் இடமும் அல்ல. ஆகம மற்றும் சில்ப சாஸ்திரங்களும், தொடர்ச்சியான சாதனா மற்றும் பரிபூரண எண்ணங்களின் பரிசுத்தம், சொல் மற்றும் செயல்களின் பரிசுத்தம் போன்றவற்றை ஆன்மீக மையங்களின்  கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்களிடமும்  ஆசிரமத்தை பராமரிப்பவர்களிடமும் அதனை பயன்படுத்துபவர்களிடமும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன, அனைத்து பெரிய மற்றும் புராதனமான கோயில்களும், ஆன்மிக இல்லங்களும் அபாரமான ஆன்மீக வலிமையும், சாதனாக்களும் கொண்ட மனிதர்களாலேயே கட்டப்பட்டன. இத்தகைய புனிதமான மையங்கள் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல,  அவை நிரந்தரமாக இருப்பதற்கும், தொடர்ந்த சாதனா அதன் பக்தர்களிடமும்  இத்தகைய நிறுவனங்களை பராமரிப்பதில் ஈடுபடுபவர்களிடமும் மிகவும் அவசியம். எங்கேயெல்லாம்  தவறுகிறார்களோ அங்கேயெல்லாம் அந்த நிறுவனமானது, அதில் நிறுவப்பட்ட சக்திமிக்க தெய்வம் அல்லது அதனை உருவாக்கிய குருமார்கள் எட்டியிருந்த ஆன்மீக உயரம் ஆகியவைகளைகடந்தும் வீழ்ச்சி அடைந்து விடுகிறது.”

இப்போது பகவான் யோகி ராம்சுரத்குமார் நம்மிடையே   ஸ்துலமாக இல்லை. குருதேவரின் உண்மையான பக்தன் அல்லது பக்தையாக இருப்பதற்கு ஒவ்வொருவரும் அவர் கடைபிடித்த எளிய வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். அவரது  காலடித.தடங்களை பின்பற்றி, அவர் வாழ்ந்ததுபோல் புனித வாழ்வு வாழாமல்,  அவரது பெயரை பாடுவதும், “யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார்” என கூக்குரல் எழுப்புவதும் பலன் அளிக்காது. அவரது பக்தர்கள் அவர் இருந்தபோது நிறுவிய ஆன்மீக சகோதரத்துவம், இன்று பக்தர்களிடையே பொறாமை, தப்பெண்ணங்கள், மற்றும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொள்ளுதல் போன்றவைகளால் உடைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். இது நடைபெறவில்லையெனில், அது அவரது தோல்வியோ அல்லது அவரது இலக்கின் தோல்வியோ அல்ல, ஆனால் அவரது  பக்தர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் அவர் வாழ்ந்து காட்டிய மற்றும் போதித்த உயர்ந்த இலட்சியங்களை வாழ்க்கையில கடைபிடிக்க தவறியதையே சுட்டிக்காட்டும். மழைபோல் பொழிகின்ற பகவானது  அருளை ஏற்றுக்கொள்வதற்கு தங்களது இதயங்களை திறந்துவைக்க தவறியவர்கள் ஆக அந்த பக்தர்கள் ஆகிவிடுவார்கள்.

இந்த பாரததேசமானது பல ஞானிகளையும், மகான்களையும் வெவ்வேறு காலநிலைகளிலும் கண்டுள்ளது. இருப்பினும் சூரிய உதயத்தின் பொழுது தாமரைகள் மலர்வது போல் இந்த மகான்களின் வருகையினால், சில பாக்கியம் செய்த புண்ணியாத்மாக்கள் தான் ஆன்மீக உணர்வை பெறுகின்றனர்.. நமது வாழ்க்கை மிகவும் குறுகியது. நமது பெயர், புகழ், பணம், ஆரோக்கியம், பெருமை, அகங்காரம் போன்றவை நமது வாழ்க்கை முடியும்போது காணாமல் போகும். ஒரு புத்திசாலி எப்போதும் வாழ்க்கையின் நிலையாமையை அறிந்து கொள்வான். நாம் நமது ஆன்மீக பாதையில் பயணிக்கும் பொழுதும், உலக வாழ்க்கையில் நாம் சேமித்து வைத்துள்ள நமது வாசனைகள் அல்லது விருப்பு வெறுப்புகள், தெரிந்தோ தெரியாமலோ நமது இதயத்தை பாதித்து, நமது ஆன்மீக முயற்சிகளை குலைக்கும். மகாத்மாக்கள் வருவார்கள், போவார்கள்; நிறுவனங்கள் வரும், போகும்; ஆனால் தனிமனிதன் ஆன்மீக வாழ்வில் அடையும் முன்னேற்றம் அவனது சுயமுயற்சியினாலேயே சாத்தியமாவது. 

 உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்।

 ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந:॥ (பகவத் கீதை – 6.5)

“உன்னை நீயே உயர்த்திக்கொள். உன்னை இழிவு படுத்திக் கொள்ளாதே. நீயே உனக்கு நண்பன். நீயே உனக்கு பகைவன்”.

இது பகவத்கீதையின் வாக்கு, நமது முயற்சிகளை நாம் சுயமாக மேற்கொண்டால் மட்டுமே பகவான் யோகி ராம்சுரத்குமார் நமக்கு உதவ இயலும். பகவான் சொர்க்கம், பூமி, அல்லது நரகத்தில் இல்லை. அவர் எல்லா உயிர்களின் உள்ளத்திலும் இருக்கிறார். அவர் இந்த உலகத்தின் மிகப்பெரிய பாவியின் உள்ளத்திலும் இருக்கிறார். அறியாமையே பாவத்திற்கு காரணம். ஞானம் பிறக்கும் பொழுது கொடிய பாவிகூட மஹா ஞானி ஆகிவிடுவான்.  அறியாமையை களைந்து, ஞானத்தின் ஒளியை நோக்கி, நாம் அனைவரும் பயணிப்போம் ஆக.

மூத்தவர் மற்றும் ஞானம் பொருந்தியவர் என்று தங்களைத்தானே நினைத்துக்கொள்பவர்களுக்கு அறிவுரை வழங்க, இந்த சாது மிக தாழ்மையானவன், அவசியமற்றவன். இருப்பினும் எனது தீக்ஷா குருவின் சீடனாக, இந்த சாதுவின் உள்ளம், குருவின் பிள்ளைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு எனது குருநாதனின் பெயரில் உள்ள ஆசிரமத்தின்  நிர்வாகம் சம்பந்தமாக நீதிமன்றத்தில்  வழக்கு தொடர முன்வந்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது., இது ஒன்றும் எனது சகோதரர்களிடம் மட்டும் காணப்படும் பலவீனமல்ல, பெரும்பான்மையான ஒழுங்கமைக்கப்பட்ட மத நிறுவனங்கள் சந்தித்து வந்துள்ள ஒரு சாபக்கேடாகும். மதமும், ஆன்மீகமும் நிறுவனமயமாக்கப்படும் போது சிதைந்துவிடும். புகழும், சொத்து சேரலும், நிறுவனத்திற்கு உயர்கையில், அங்கே அதிகாரத்திற்கும், பதவிக்கும் போராட்டங்கள் நடப்பது சாதாரணமாகும். அனைத்து புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமய நிறுவனங்களும் இது போன்ற உள் அமைப்பு சண்டைகள் பலவற்றை சந்தித்துள்ளன. ஆனால் இவ்விதம் பரஸ்பரம் இழிவுபடுத்திக் கொள்ளுதல் மற்றும் குற்றச்சாட்டுகளை வீசிக்கொள்வது எந்த மஹாத்மாவின் பெயரில் இந்த ஸ்தாபனங்கள் அமைக்கப்படுகின்றனவோ  அதை களங்கப்படுத்துகிறது. இத்தகைய ஒரு நிலை எனது குருநாதனை  பின்பற்ற விரும்புவர்களுக்கு ஏர்ப்படாமல் இருக்கட்டும். இத்தகைய குழிகளில் விழாமல் இருக்க, நம் அனைவருக்கும் நல்லறிவு ஏற்பட்டு, நமது குருவின் கருணையும் நம்மை காக்கட்டும். இதுவே நமது தாழ்மையான ஸ்ரீ குரு பூர்ணிமா பிரார்த்தனையாகும்.

வந்தே மாதரம் ! ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் !

யோகி ராம்சுரத்குமார் , யோகி ராம்சுரத்குமார் ,

யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா!

– சாது ரங்கராஜன்

திரு. S.P. ஜனார்த்தனன் யோகி ராம்சுரத்குமார் டிரஸ்ட் துவக்கப்பட கருவியாக இருந்தவர். பகவானிடம் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலகினார். பகவான் சாதுவை அனைத்து பணிகளையும் நிறுத்திவிட்டு ஆசிரமத்தின் டிரஸ்டியாக உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டு, ஆசிரமத்தின் கட்டுமான பணிகளின் பிரச்சனைகள் சீரடையும் வரை அந்தப் பொறுப்பை கவனிக்குமாறு கூறியிருந்தார். ஜூன் 20, 2003 அன்று திரு. S.P. ஜனார்த்தனன் சாதுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சாது அவரிடம், எளிய மற்றும் தாழ்மையான வாழ்க்கை வாழ்ந்த ‘பெரும் யாசகன்’ பகவானின் பெயரில் தொடரப்படும் எந்த வழக்கிலும் தான் ஆர்வம் காட்ட விரும்பவில்லை என்று தெளிவாகக் கூறினார். சாது விற்கு மற்றொரு கடிதம், ஆசிரமத்திற்கு வெளியே நடக்கும் வேறு ஒரு கூட்டத்திற்கு வருமாறு வந்திருந்தது. ஜூலை 2, 2003 ல் திரு. S.P.ஜனார்த்தனன் சாதுவை மீண்டும் ஒரு முறை தொலைபேசியில் அழைத்தார். சாது மீண்டும் தீவிரமான வேண்டுகோள் ஒன்றை 5-7-2003 அன்று இமெயில். மூலம் பகவானின் பக்தர்களுக்கு அனுப்பி, தான் ஏற்கனவே கூறியதை மீண்டும் வலியுறுத்தி, பகவானின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு பக்தர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை வலியுறுத்தினார்:.

“ஆசிர்வதிக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமாரின் பக்தர்களே, 

வந்தே மாதரம் ! ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! எனது குரு உங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கிறார்! 

இந்த சாது ஒரு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை சில நாட்களுக்கு முன் யோகி ராம்சுரத்குமார் ஆசிரம ட்ரஸ்ட் விஷயமாக பெற்றான். பின்னர் இது சம்பந்தமாக விவாதிப்பதற்காக ஆசிரம வளாகத்தினுள் நடைபெறும் பகவானின் பக்தர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டி கடிதம் ஒன்றை நாங்கள் பெற்றோம். இப்பொழுது நாங்கள் ஆசிரமத்திற்கு வெளியே நடக்கும் மற்றொரு கூட்டத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டு இன்னொரு கடிதம் ஒன்றை பெற்றுள்ளோம்.

மூத்தவர் மற்றும் ஞானம் பொருந்தியவர் என்று தங்களைத்தானே நினைத்துக்கொள்பவர்களுக்கு அறிவுரை வழங்க, இந்த சாது மிக தாழ்மையானவன், அவசியமற்றவன். இருப்பினும் எனது தீக்ஷா குருவின் சீடனாக, இந்த சாதுவின் உள்ளம், குருவின் பிள்ளைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு எனது குருநாதனின் பெயரில் உள்ள ஆசிரமத்தின்  நிர்வாகம் சம்பந்தமாக நீதிமன்றத்தில்  வழக்கு தொடர முன்வந்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது., இது ஒன்றும் எனது சகோதரர்களிடம் மட்டும் காணப்படும் பலவீனமல்ல, பெரும்பான்மையான ஒழுங்கமைக்கப்பட்ட மத நிறுவனங்கள் சந்தித்து வந்துள்ள ஒரு சாபக்கேடாகும். மதமும், ஆன்மீகமும் நிறுவனமயமாக்கப்படும் போது சிதைந்துவிடும். புகழும், சொத்து சேரலும், நிறுவனத்திற்கு உயர்கையில், அங்கே அதிகாரத்திற்கும், பதவிக்கும் போராட்டங்கள் நடப்பது சாதாரணமாகும். அனைத்து புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமய நிறுவனங்களும் இது போன்ற உள் அமைப்பு சண்டைகள் பலவற்றை சந்தித்துள்ளன. ஆனால் இவ்விதம் பரஸ்பரம் இழிவுபடுத்திக் கொள்ளுதல் மற்றும் குற்றச்சாட்டுகளை வீசிக்கொள்வது எந்த மஹாத்மாவின் பெயரில் இந்த ஸ்தாபனங்கள் அமைக்கப்படுகின்றனவோ  அதை களங்கப்படுத்துகிறது. இத்தகைய ஒரு நிலை எனது குருநாதனை  பின்பற்ற விரும்புவர்களுக்கு ஏர்ப்படாமல் இருக்கட்டும். இத்தகைய குழிகளில் விழாமல் இருக்க, நம் அனைவருக்கும் நல்லறிவு ஏற்பட்டு, நமது குருவின் கருணையும் நம்மை காக்கட்டும்.

பகவானின் பக்தர்களிடையே எந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அல்லது பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை பகவானின் இல்லம் என்ற ஒரே கூரையின் கீழ் அமர்ந்து பேசி தீர்க்கலாம். எப்படி ஆசிரமத்தின் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு, பகவானின் பக்தர்கள் ஆசிரமத்திற்கு உள்ளே ஒன்று கூடுவதை தடுக்க உரிமை இல்லையோ, அதுபோல், பக்தர்கள் ஆசிரம விஷயங்களை விவாதிக்க, ஆசிரமத்தின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் கலந்து கொள்ளாமல், ஆசிரமத்திற்கு வெளியே கூட்டம் நடத்துவதும் முறை அல்ல.

பகவான் பல வருடங்கள் மிகுந்த தாழ்மையான மற்றும் எளிமையான வாழ்க்கையை மரத்தடியிலும், சாலையோர கடைகளின் வராண்டாவிலும், கோயில் வளாகத்திலும் வாழ்ந்தார். பின்னர் பக்தர்களை திருவண்ணாமலை சன்னதி தெருவில் ஒரு பழைய வீட்டின் வராண்டாவிலும் வரவேற்றார். அவர் தனக்கென ஆசிரமத்தை வேண்டியதில்லை. தன்னை சுற்றி ஒரு சீடர்கள் அல்லது பக்தர்களின் கூட்டத்தை உருவாக்கவும் அவர் விரும்பவில்லை. தனது பக்தர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவே தனது பெயரில் ஒரு ஆசிரமத்தை அமைக்க அனுமதி அளித்தார். அவரது எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப வாழ்ந்து அவரது கருணையையும் , ஆசியையும் பெறுவது பக்தர்களின் கடமையாகும். 

ப்ரேம் மற்றும் ஓம் உடன்,  சாது ரங்கராஜன். “

வியாழக்கிழமை, செப்டம்பர் 25, 2003 அன்று மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை புவனேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைப்பெற்றது. அங்கே பகவானின் பல பழைய பக்தர்கள் கூடினர் . அவர்களிடம் சாது, பகவானின் விருப்பப்படி ராமநாமத்தை பரப்பும் காரியத்தில் முழுமையாக அர்ப்பணிப்போடு கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மீண்டும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா பெங்களூர் பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் டிசம்பர் – 1 , 2003 அன்று நடைப்பெற்றது. அதில் எண்பது வயதான பகவானின் பக்தரான திரு. தண்டபாணி ஐயர் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ்-ன் திரு. நாகராஜ் பக்தர்களிடையே உரையாற்றினார். பல பகவானின் பக்தர்கள் கூடியிருந்த அந்த நிகழ்வில் சாது அனைவரும் ஒன்றாக இருந்து பகவானின் பணியை நிறைவேற்றுவோம் என்றார். 

பகவான் ஒருபோதும் தனது பெயரில் எந்த வழிபாட்டு இயக்கம் அல்லது சமய நிறுவனம் துவங்குவதை விரும்பவில்லை. அவரது  திடமான  கருத்து எந்த அமைப்போ, அல்லது தனிமனிதனோ, எந்த பக்தனுக்கும் மீட்பை தர இயலாது, மாறாக அவரவர்களின் தவமும், சாதனாவும் மட்டிலுமே அவர்களுக்கு ஆன்மீக ஆனந்தம் மற்றும் சுயம் அறிதலை தர இயலும் என்பதாகும். அவரது ஆன்மீகம் ஒருபோதும் கண்மூடித்தனமான வழிபாடு, மூடநம்பிக்கை, மற்றும் சடங்குகளை சுற்றி இருந்ததில்லை. அவர் ஒரு முதலில் முற்றிலும் ஒரு தேசபக்தர். அன்னை பாரதத்தை வழிபடுபவர். அவர் பலமுறை உரத்த குரலில் பெருமை பொங்க, “இந்தியா எனது நிலம் ! இந்தியா எனது தாய்நிலம் ! இந்தியா என் தந்தையின் நிலம் ! இந்தியா புனித நிலம் ! இந்தியா தர்ம பூமி ! இந்தியா வேத பூமி ! இந்தியா புண்ணிய பூமி ! இந்தியா இந்தப்பிச்சைக்காரனின் இதயம் ! இந்தியா இந்தப் பிச்சைக்காரனின் விளையாட்டுத்திடல் ! இந்தியா தவசிகளும், முனிவர்களும் என்னைப் போன்ற பிச்சைக்காரன்க ளும்  வசிக்கும் நிலம்! இந்தியா எப்போதும் இருக்கும், மேலும் இந்தியா இந்த உலகத்தை மிக விரைவில் வழிநடத்தும்.!” 

தேசபக்தி மற்றும் தேசிய உணர்வு களுக்கு மேலானதாக  சமயச் சடங்குகளையும் சாதனைகளையும் போற்றுகின்ற எந்த ஒரு அமைப்பும் இந்த சாதுவை கட்டுப்படுத்த முடியாது என்று யோகிராம்சுரத்குமார் அவர்கள் மிக நன்றாக அறிந்திருந்தார். யோகி, ராமநாம தாரக மந்திர சாதனையில் சாதுவிற்கு தீக்ஷை  வழங்கி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதை பரப்புகின்ற ஒரு பெரும் பொறுப்பை அவருக்கு வழங்கியிருந்த போதிலும், மதமும் ஆன்மீக சாதனையும்  நமது தேசத்தின் இருப்பிற்கான அடிப்படைகள் என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டது இந்த சாதுவின் தேசப்பற்றை எவ்விதத்திலும் குறைக்கவில்லை என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். அனைத்து பக்தர்கள் கூடியிருக்கும் கூட்டத்திலும், நமது அன்னை பாரதம் மீது கொண்டிருக்க வேண்டிய தேசப்பற்றை குறித்து பேசுமாறு, பகவான், பலமுறை, சாதுவை தூண்டியுள்ளார். இந்த சாதுவின் நீண்டநாள் கனவான பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் டிசம்பர் – 1, 1999 அன்று பகவானின் ஆசியால் நிஜமானது. அதில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு,  நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியம் போன்றவற்றில் ஆழ்ந்த பயிற்சி பெறுவதற்கு உத்வேகம், வழிகாட்டல், உதவி போன்றவற்றை அளித்து, அவர்கள் ஒரு குறிப்பிட்ட மத வழிபாட்டு முறை, ஸ்தாபனம் அல்லது இயக்கத்தை சாராமல், பாரத அன்னையின் தூதுவர்களாக, பாரதநாட்டின் பழம்பெரும் ஆன்மீக பண்பாடு மற்றும் உலகளாவிய கலாச்சாரத்தை, மனித இனம் உய்ய, உலகெங்கும் பரப்ப செல்வார்கள். பகவான் ஒருமுறை இந்த சாதுவிடம், சங்க  பிரார்த்தனை ( ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரார்த்தனை பாடல் ) வரிகளில்  மிகுந்த உத்வேகத்தை அளிக்க வல்லது எது என்று வினவினார். சாது அனைத்து வரிகளுமே உத்வேகத்தை தரவல்லவை என்று பதிலளித்தார். ஆனால் பகவான் இந்த பிரார்த்தனையில் ஒரு வரியை சுட்டிக்காட்டி அது மிகவும் அதிகமாக உத்வேகத்தை அளிக்கவல்லது என்றார். “த்வதீயாய கார்யாய பாத்தா கடீயம் “ –- “நாங்கள் உனது ( அன்னை தேசத்தின் ) பணியை செய்ய உறுதி ஏற்று சிறந்த முறையில் தயாராகியுள்ளோம்” — என்ற வரியை பகவான் சுட்டிக்காட்டினார். இதையே இன்று ஸ்ரீ பாரதமாதா மந்திர் மூலம் அடைவதற்கான முயற்சிகளை சகோதரி நிவேதிதா அகாடமி செய்து வருகிறது. பாரத அன்னையின் மக்களின் உள்ளத்தில் பாரத  தேவியை போற்றி வழிபடும் மிக உயர்ந்த பண்பாட்டை நிலைநாட்ட,  பாரதமாதா மந்திர் அமைப்பதற்கான பூமிபூஜை, வெள்ளிக்கிழமை மே – 21 , 2004 அன்று, பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், சீனிவாச நகரில், பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மைய வளாகத்தில், நடைபெற்றது.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s