ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.30

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.30 

ஸ்ரீ பாரதமாதா மந்திர் பிரதிஷ்டையும் & கும்பாபிஷேகமும்

நமது ஜன்ம்பூமி, புண்ணிய பூமி, கர்ம பூமி மற்றும் மோக்ஷபூமியை வணங்குதல் நமது ஹிந்து தர்மத்தின் அதிகாரமுத்திரை ஆகும். வேதங்களும், புராணங்களும் நமது அன்னை பூமியின் மகிமைகளை கூறுகிறது. ஸ்ரீ ராமர் “அன்னையும், அன்னைபூமியும் சொர்க்கத்தைவிட சிறப்பானவை” ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயஸீ என்கிறார். நாம் வணங்குகின்ற அனைத்து கடவுளர்கள், துறவிகள், முனிவர்கள், புனிதமானவர்கள், யாருக்கெல்லாம் பாரதத்திலும் வெளிநாடுகளிலும் கோயில்கள் நிறுவப்பட்டுள்ளனவோ, அவர்கள் அனைவருக்கும் தாயானவள் பாரத அன்னையே. இருப்பினும் நாம் பாரதமாதாவிற்கான கோவிலை மிக அரிதாகவே காண இயலும். பங்கிம் சந்திரர், சுவாமி விவேகானந்தர், மஹாயோகி ஸ்ரீ அரவிந்தர், சகோதரி நிவேதிதா, வீர சாவர்க்கர், மற்றும் மகாகவி பாரதியார் போன்றோர் பாரத மாதாவை மஹாசக்தியாக போற்றி நம் முன் ஆனந்த மடம், மற்றும் பவானி மந்திர் போன்ற கருத்துக்களை வைத்துள்ளனர். பாரத அன்னையின் மக்களின் உள்ளத்தில் பாரத பவானியை மஹாசக்தியாக போற்றி வழிபடும் மிக உயர்ந்த பண்பாட்டை நிலைநாட்ட,  பாரதமாதா மந்திர் அமைப்பதற்கான பூமிபூஜை, வெள்ளிக்கிழமை மே – 21 , 2004 அன்று, பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், சீனிவாச நகரில், பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மைய வளாகத்தில், நடைபெற்றது. மந்திரின் கட்டுமானப்பணிகள் சிறப்பாக நடைபெற சாது ரங்கராஜன் மற்றும் பிற பக்தர்கள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில்,  திரு. B.K. ஸ்ரீனிவாசமூர்த்தி, பூஜையை கணபதி, நவக்ரஹ மற்றும் சுதர்சன ஹோமங்களுடன் நடத்தினர். 

உடுப்பி பேஜாவர் மடத்தின் ஸ்ரீ விச்வேச  தீர்த்த சுவாமிஜி அவர்களால் புதன்கிழமை டிசம்பர் 8 , 2004 அன்று ஸ்ரீ பாரதமாதா விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மந்திர் புனிதப்படுத்தப்பட்டது.  சுவாமிகள் அன்று ஒரு உணர்ச்சிமிக்க அறைகூவல் விடுத்து,  ஹிந்துக்கள் அனைவரும் ஓன்றுபட்டு சகோதரத்துவத்தை பேண வேண்டும் என்றார். நம்மிடையே பல மொழி மற்றும் மாநில பிரிவுகள் இருப்பினும் நாம் அனைவரும் பாரத அன்னையின் குழந்தைகள். இந்த எண்ணத்தை நாம் கொண்டிருந்தால் நம்மிடையே இருக்கும் வேறுபாடுகள் நீங்கி சகோதரத்துவம் வெளிப்படும். பாரத மாதாவின் பிள்ளைகளான நாம்தான் நமது அன்னையை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். அன்னிய சக்திகளின் அபஹரணம் (சுரண்டல்) மற்றும் அத்யாசாரம் (அநீதி) காரணமாக இன்று அவள் கண்ணீர் வடிக்கிறாள். ராமாயணத்தில் ஒரு கிராமத்தின் பசு துன்பப்படுவது கண்டு காமதேனு கண்ணீர் விடுவதாக ஒரு காட்சி இருக்கு. ஆனால் இன்றோ நூற்றுக்கணக்கான பசுக்கள் கருணையின்றி கொல்லப்படுகின்றன. யாரும் கண்ணீர் விடுவதில்லை. இத்தகைய அநீதிகளை நிறுத்தவே சாது ரங்கராஜன் இந்த பாரத மாதா  மந்திரத்தை இங்கு நிறுவி,  பாரத மாதாவை இங்கு பிரதிஷ்டை செய்து, பாரதத்தின் புராதன மற்றும் தேசிய வாழ்க்கை மூல்யங்களை   புத்துணர்ச்சி பெறச் செய்வதற்கான மாபெரும் செயலை மேற்கொண்டுள்ளார். நாம் அன்னைக்கு வெறும் ஆரத்தி மட்டும் காட்டாமல், முழுமையாக நம்மையே அவளது பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டு, அவளை மகிழ்வாக வைக்க வேண்டும். இன்றைய சூழலில் அவளை மகிழ்விக்க நாம் நமது கரங்களின் சக்திக்கும் மேற்பட்டு பணிபுரிந்து அவளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும், என்று சுவாமிஜி கூறினார்.

திரு. H.V. சேஷாத்திரி, ஆர்.எஸ்.எஸ் ன் அகில பாரத பிரச்சார பிரமுகர், இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் சுவாமி விச்வேச தீர்த்தர் இந்த நிகழ்ச்சியில் கூறியது அனைத்தும் 1989 ல் உடுப்பியில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சம்மேளனத்தில் விவாதிக்கப்பட்டது என்றார். நாமெல்லாம் ஹிந்துக்கள் பாரத மாதாவின் குழந்தைகள், மற்றும் ஹைந்தவா சஹோதரா சர்வே — “இந்துக்கள் அனைவரும் சகோதரர்கள். என்ற முழக்கத்தை அங்கு சுவாமி விச்வேச தீர்த்தாஜி தந்தார். காஷ்மீர், நாகாலாந்து, மற்றும் பங்களாதேசம் போன்ற இடங்களில் பெருமளவு ஹிந்துக்களின் மதமாற்றத்தால் ஹிந்துக்களின் எண்ணிக்கை விரைவாக குறைந்து வருகிறது. மதம் மாறியவர்கள் திரும்பி வர இயலவில்லை என்றால் நமது தேசத்தில் நாமே சிறுபான்மையினராக மாறும் அவலம் நேரும். ந ஹிந்தூர் பதிதோ பாவேத் – “ஹிந்து ஒருபோதும் வீழமாட்டான்” என்பது நமக்கு வழங்கப்பட்ட மற்றொரு முழக்கம். “ஹிந்து ரக்‌ஷா மம தீக்ஷா “ – “ஹிந்துக்களை காப்பதே எனது தீக்ஷை” மற்றும் “ஹிந்து மந்த்ர சமானதா“ – “சமத்துவமே ஹிந்துக்களின் மந்திரம்” போன்ற முழக்கங்கள் நம் முன் வைக்கப்பட்டன, என்றார். திரு. சேஷாத்திரி, சிக்மங்களூர் அருகே ஒரு தேவி கோயில் கட்டப்பட இருந்த நிலையில், தேவி பூசாரியின் கனவில் தோன்றி அடித்தட்டு மக்கள் , குழந்தைகள் வசிப்பதற்கு குடிசையே இல்லாதபோது தனக்கு கோயில் வேண்டாம் என்று கூறிய நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி, ஏழைகளுக்கான குடிசைகள் அமைக்கப்பட்ட பின்னரே அங்கே கோயில் அமைக்க முடிந்தது என்று கூறினார். நமது தாய்மார்கள் சகோதரி நிவேதிதையை  பின்பற்றி சமூகத்திற்கு தொண்டாற்ற முன்வர வேண்டும் என்றார். சகோதரி நிவேதிதா தன்னைப் பற்றி கவலைப்படாமல், ப்ளேக் பாதிக்கப்பட்ட பகுதியில் அங்கிருக்கும் மக்களுக்காக இரவும் பகலும் துணிவோடு சேவை செய்தார். அவர் மேலும் கூறுகையில், பாரதமாதா மந்திர் அமைக்கப்பட்டுள்ளது எல்லா ஹிந்து சகோதரர்களும் ஒருங்கிணைந்து ஒரே கூரையின் கீழ் கூடி புனித அன்னை பாரத மாதாவிற்கு வழிபாடு செலுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

முன்னர், பாரதமாதா மந்திரை நிறுவியுள்ள பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இன்டோலோஜிக்கல்  ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் ஸ்தாபகத் தலைவர், சாது பேராசிரியர் வே. ரங்கராஜன், பூஜனீய சுவாமி விச்வேச தீர்த்தர்   மற்றும் திரு ஹெச்.  வி. சேஷாத்ரி அவர்களையும்  மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரையும் வரவேற்றார். பல்வேறு வழிபாட்டு முறைகள் மற்றும் சமயப் பிரிவுகள் காரணமாக பிரிந்து நிற்கின்ற ஹிந்து  சகோதரர்கள் அனைவரையும் விழித்தெழசெய்து, தாங்கள் அனைவரும் ஒரே தாயின் மக்கள், மற்றும் அந்த புனித அன்னை எல்லா கடவுளர்கள், குருமார்கள், மற்றும் அனைத்து சமயங்களுக்கும் தாயானவள் என்பதை உணர்த்தவே இந்த  கோயில் எழுப்பப்பட்டுள்ளது என்றார். சிறு வயது முதல் தான் கலந்துகொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் சங்கஸ்தானத்தில் அன்றாடம்  பாடப்பட்டு வந்த பிரார்த்தனை, பாரத மாதாவை வழிபடும் பண்பை தனது உள்ளத்தில் நிலைநாட்டி, பாரத மாதாவை மகா சக்தியாக கண்டு, அவளுக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்ற உத்வேகத்தை தனது உள்ளத்தில் ஏற்படுத்தியது என்று கூறினார் அந்த கனவு தான் இப்பொழுது நிறைவேறுகிறது என்றும் அவர் கூறினார். இது வெறும் வழிபாட்டு சடங்குகளுக்காக கட்டப்பட்டுள்ள கோயில் அல்ல, மாறாக பாரத மாதாவின் மக்களான  ஹிந்துக்களின் உள்ளத்தில் தேசபக்தி மற்றும் நமது புராதன கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் ஆழ்ந்த பற்றுதல் ஏற்படுத்துவதற்கான  ஒரு பெரும் முயற்சி ஆகும் என்று அவர் கூறினார். இந்த மாபெரும் புனிதப்பணியில் தனக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்த தனது சுயம்சேவக சஹோதரர்களுக்கு அவர் நன்றியை தெரிவித்தார்.

பிரதிஷ்டை விழா சண்டி ஹோமம் மற்றும் பூர்ணாஹூதியோடு நடைப்பெற்றது. அதில் பூஜ்ய சுவாமிஜி மற்றும் சிறப்பு விருந்தினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கோயில் திறப்பு விழா, யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தியோடு டிசம்பர் – 1 , 2004 அன்று துவங்கப்பட்டு, அதனை தொடர்ந்த நாட்களில், தாய்மார்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விசேஷ கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பு சண்டி பாராயணம் மற்றும் பூஜைகள் உடன் பிரதிஷ்டை   தினம் ஆன டிசம்பர் – 7 , 2004, அன்று அருகாமையில் உள்ள கிராமங்களைச் சார்ந்த சிறுவர் சிறுமியர்களின் சிறப்பான சத்சங்கம் மற்றும் பஜனை நிகழ்ச்சிகளுடன் முடிவு பெற்றது. அந்த விழாவில் உரைநிகழ்த்திய சாதுஜி,  பாரத மாதாவிற்கு கோயில் அமைக்க வேண்டும் என்ற “பவானி மந்திர்” திட்டம் மகாயோகி அரவிந்தர் அவர்கள் வழங்க, அதை நிறைவேற்றுவதை  கனவாக கொண்டவர் மாபெரும் தேசபக்தர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்,  துறவி சுப்பிரமணிய சிவம் ஆவர் என்றும், இந்தத் திட்டம் தனது  தீக்ஷா குரு யோகிராம்சுரத்குமார் அவர்களுடைய உள்ளத்திற்கும் மிக  நெருக்கமாக இருந்தது என்றும் கூறினார்.  பல ஆண்டுகளுக்கு முன்னரே, பகவான் யோகி ராம்சுரத்குமார் சாதுவிடம், அவரது இந்த திட்டம் கண்டிப்பாக நிறைவேறும் என்று உறுதியளித்திருந்தார். அந்த கனவு இன்று  நனவாகிறது என்றும் இது நிறைவேற ஒவ்வொரு நிலையிலும் பகவான் தனக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை , அக்டோபர் 23, 2011 அன்று ஸ்ரீ பாரதமாதா மந்திரின் மஹாமேரு மற்றும் கோபுரத்தின் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. டாக்டர். R. L. காச்யப் என்ற புகழ்பெற்ற அறிவியல் மற்றும் வேதக்கல்வி வல்லுநர், மற்றும் ஸ்ரீ அரவிந்தோ கபாலி சாஸ்திரி வேத ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர், இதை நிறைவேற்றினார். திருமதி பிரேம குமாரியின் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. திரு B.K. ஸ்ரீனிவாசமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். இந்த பாரதமாதா மந்திர் சாது பேராசிரியர் ரங்கராஜன் அவர்களின் வாழ்நாள்  கனவாக இருந்தது என்று அவர் கூறினார். கர்நாடகாவின் வி.எச்.பி தலைவரான டாக்டர். சிவக்குமார் சுவாமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அவர் வேதத்தின் பூமி சூக்தத்தில் இருந்து சில மந்திரங்களை விளக்கிக் கூறி பாரதமாதாவை வழிபடுவதன் அவசியத்தைப்பற்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்கள் ஹிந்துவாக, சனாதன தர்மத்தை பின்பற்றுவது குறித்தும், பாரத தேசத்தில் பிறந்தமைக்காகவும், பெருமை கொள்ள வேண்டும் என்று அவர்  கூறினார். அவர், சாது பேராசிரியர் ரங்கராஜனுடன் தனது நெருங்கிய தொடர்பு பற்றி குறிப்பிட்டு, இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதில் தான் மிகவும் பெருமைகொள்வதாகவும் கூறினார். வித்யா பாரதியின், தக்ஷிண மத்திய க்ஷேத்திரிய  சஹ  சங்கடனா  காரியதரிசி, திரு ஜெகதீஷ், இந்த தேசத்தின் புராதனமான தனிச்சிறப்புகளை பற்றி குறிப்பிட்டு, அனைத்து துறைகளிலும் இந்த தேசம் முன்னணியில் நின்றிருந்தது என்றும், மீண்டும் இந்த நாட்டை அந்த நிலைக்கு கொண்டு செல்ல, நாம் நமது தாய் திருநாட்டை வழிபடும் பண்பை வளர்க்கவேண்டும் என்றும் கூறினார்.

சாது பேராசிரியர் ரங்கராஜன் தனது உரையில், தனது நீண்ட கால முயற்சியான இந்த ஆலயம் குறித்து பேசினார். மேலும் அவர், மஹாயோகி அரவிந்தர் வழங்கிய  பவானி பாரதி திட்டத்திற்கேற்ப, சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தேசபக்த துறவி சுப்பிரமண்ய சிவா, பாரதமாதாவிற்காக கோயில் கட்ட முயன்றதையும்,  இறுதியாக அந்த கனவு இப்பொழுது நிறைவேறி உள்ளதையும் குறித்து விளக்கினார். மற்ற கோயில்களில் உள்ளது போல் இந்த கோயிலில் எந்த கட்டுபாடுகளும் இல்லை, பக்தர்களில் எவர் வேண்டுமானாலும் உள்ளே சென்று பாரதமாதாவிற்கு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யலாம் என்றார்.

டாக்டர் R.L. காஷ்யப் தலைமை விருந்தினராக உரையாற்றுகையில் காஸ்மிக் கதிர்களின் தன்மை குறித்தும், அது கோபுரம் வழியாக மந்திரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மேருவை அடைந்து, மந்திர் முழுவதும் பரவுவதைப்பற்றி குறிப்பிட்டார். அவர் உண்மையான ஞானம் பெற வேதபுத்தகங்களை வாசிக்கும்படி கூறினார். பரிபூரணமான சரணாகதி அடைய காயத்ரி  மந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து கூறினார். இயற்கை அன்னை நாம் உயிர் வாழ்வதற்கு அனைத்தையும் அளிக்கின்ற பொழுதும் நாம் இயற்கைக்கு திரும்பச் செய்யும் பணி மிக அற்பமானது என்றார். நமது வாழ்க்கைக்கு ஆதாரமான பூமித்தாயை, தாய்த்திரு நாட்டை, வணங்குவதுதான்  நாம் செய்யக்கூடிய நன்றிக்கடன் என்று அவர் உரைத்தார். ஹிந்து என்பவன், இனம், மொழி, ஜாதி வேறுபாடுகள் இவைகளுக்கு அப்பாற்பட்டு, தாய்த்திரு நாட்டை வணங்குபவனாகத்தான் இருக்க வேண்டும். மொகலாயர்களும், பிரிட்டிஷாரும் தங்கள் ஆட்சிக்காலத்தில் ‘ஹிந்து’ என்ற பெயரின்  தோற்றம் குறித்த தவறான கருத்துக்களை பரப்பினார்கள் என சுட்டிக்காட்டினார். ஹிந்துவிற்கு இல்லை என்பதைபற்றியும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  தனக்கு வாய்ப்பளிக்கப்பட்டதற்கு  அமைப்பாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஸ்ரீ பாரதமாதா மந்திரின் டிரஸ்டியான திருமதி பாரதி, வருகை தந்த பிரமுகர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார் திரு. விவேகானந்தன் நன்றியுரை ஆற்றினார். சௌ பிரேமாகுமாரி பிரார்த்தனை கீதம் பாட, “வந்தே மாதரம்” தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

பாரத மாதா மந்திர் அமைக்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவுற்றதை அடுத்து, மந்திர்க்கான மஹாகும்பாபிஷேகம், வெள்ளிக்கிழமை நவம்பர் 25, 2016, அன்றும், அத்துடன் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி நவம்பர் 26 அன்றும் பாரதமாதா பக்த சம்மேளனம் நவம்பர் 27 அன்றும் கொண்டாடப்பட்டது. வெள்ளியன்று ஸ்ரீ ஸ்ரீநிவாச மூர்த்தி அவர்களின் மேற்பார்வையில் பூஜாரிகளின் ஒரு குழு விசேஷ ஹோமங்கள் நடத்தி, ஸ்ரீ பாரதமாதாவிற்கும், மந்திரின் மேல் தளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமஹாமேருவிற்கும் , மற்றும் மெருகோபுரத்தின் மீதுள்ள கலசத்திற்கும் அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்தனர். சென்னையை சேர்ந்த ஸ்ரீ ஞான அத்வைத பீடத்தின் ஆன்மீக தலைவர் சுவாமி ஸ்ரீஹரிபிரசாத் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பாரத மாதாவை “லோக குரு”வாக வழிபட வேண்டியது குறித்து உரையாற்றினார். அடுத்தநாள் நவம்பர் 26 ஆம் தேதி நடந்த யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் ராமநாம ஜபம் மற்றும் பஜனைகளுக்குப் பிறகு சுவாமி ஸ்ரீஹரிபிரசாத்  அருள் உரை நிகழ்த்தினார். விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றிய, மொரிஷியஸிலிருந்து வந்த, அகில உலக ராம நாம இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணா கார்ஸில், பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களை தான் சந்தித்தது குறித்தும் ராமநாம இயக்கத்தின் பணிகளை பாரதத்திற்கு வெளியே பரப்புவதில் ஈடுபட்டுள்ளது குறித்தும் விளக்கினார். 

சாது ரங்கராஜன் தனது தீக்ஷா குரு யோகி ராம்சுரத்குமார் அவர்களுடைய அருளாசி மற்றும் ஊக்குவித்தல் காரணமாக, அகில உலக ராமநாம இயக்கத்தை துவக்கிய யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம், பாரதமாதா குருகுல ஆசிரமம், மற்றும் யோகி ராம்சுரத்குமார் இன்டோலோஜிக்கல்  ஆராய்ச்சி மையம் ஆகியவைகளை சகோதரி நிவேதிதா அகாடமியின் கீழ் துவங்கவும் ஸ்ரீ  பாரதமாதா மந்திர் அமைத்தபின் பெங்களூரில் ஸ்ரீ குருஜி கோல்வால்கர் ஹிந்து ரிசோர்ஸ்   சென்டர் துவங்கவும் முடிந்தது குறித்து  பேசினார். ஒவ்வொரு ஆண்டும் அக்ஷய திருதியை நாளில் (ஏப்ரல் அல்லது மே மாதத்தில்) பாரத மாதா மந்திரில்,  சிறப்பான பூஜைகள் மற்றும்,  தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், கேரளாவில் ஆற்றுகாலில் பகவதி கோவிலில்  நடத்துவது போன்ற பொங்காலா விழா நடத்தி, கொண்டாடுவது பற்றி குறிப்பிட்டார். நவராத்திரியும் பாரத மாதா மந்திரில்  மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது பற்றி விளக்கினார்.

அகில இந்திய பாரதீய ஜனதா கட்சியின் பொது செயலாளர் திரு. ராம் மாதவ் பாரத மாதா பக்த சம்மேளனத்தில் உரையாற்றுகையில், பாரத மாதாவின் வழிபாடு, பாரதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அவளது மக்களுக்கு செய்யும் சேவையே ஆகும் என்றார். ஹிந்துக்கள் முப்பத்துமுக்கோடி தேவேர்களை வழிபடுபவர்கள் ஆயினும் அந்த அணைத்தது கடவுளர்களும் ஒரே பரம்பொருளின் பல்வேறு தோற்ற்றங்கள்தான் என்பதை உணர்ந்தவர்கள் ஆவர். பாரத மாதா அனைத்து ஜாதி, மதம், மொழி ஆகியவற்றை சார்ந்தவர்களுக்கும் தாயானவள் ஆவாள் என்றும், நாட்டிற்க்கு தொண்டுபுரிவதுதான் அவளுக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த வழிபாடு என்றும் அவர் கூறினார். அமெரிக்காவில் சர்வ சமய பாராளுமன்றத்தில் உரையாற்றி புகழ் எய்திய சுவாமி விவேகானந்தர் பாரதம் திரும்பிய பின் “கொழும்பு முதல் அல்மோரா” வரை பயணம் செய்து அவர் நிகழ்த்திய உரைகளில் அவர் விடுத்த அறைகூவல், நாட்டில் வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான ஏழைகள் மற்றும் எளியோருக்கு சேவை செய்வதை வலியுறுத்தியதாகும் என்று திரு ராம் மாதவ் கூறினார். கல்விகற்ற ஒவ்வொரு இந்தியனும் தாய்த்திருநாட்டின் சேவையில் தன்னை அர்பணித்துக்கொள்ள வேண்டும் என்று சுவாமிகள்  வற்புறுத்தினார். மானிட சேவையே மகேசன் சேவை என்று அவர் முழங்கினார். அதற்கு மூன்று விஷயங்கள் தேவை  என்று சுவாமிகள் கூறினார். நாட்டிடமும் நாட்டு மக்களிடமும் ஆழ்ந்தபற்றுணர்வு, தியாக உணர்வு அல்லது பற்றற்ற சேவை உணர்வு, மற்றும் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்வதற்கான மன உறுதி ஆகியவையாகும் அவை என்று திரு ராம் மாதவ் சுட்டிக்காட்டினார்.  ஸ்ரீ ராம் மாதவ், “தத்துவ தர்சனா” காலாண்டிதழின் சிறப்பு மலரை வெளியிட்டார். முதல் பிரதியை திரு கிருஷ்ணா கார்ஸில் பெற்றுக்கொண்டார். பிரகதி கிருஷ்ணா கிராமீய வங்கியின் இயக்குனர் திரு ராகவேந்திரா கூட்டத்தில் உறை நிகழ்த்தினார்.

இன்று பெங்களூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாரதமாதா மந்திர், உத்வேகம், மற்றும் ஒற்றுமையை அனைத்து பகவானின் பக்தர்களுக்கு மட்டுமன்றி பல்வேறு நாடுகளின் இருந்து வருபவர்களுக்கும் தருகின்ற ஒரு மையமாக திகழ்கிறது. பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ஆரவாரமான அறைகூவல்  இதுவே: 

“நீங்கள் எப்போதும் நமது மகத்தான குருமார்கள் காட்டிய சரியான பாதையில் பயணிக்க முயற்சி செய்யுங்கள். வாழ்க்கையின் லட்சியம் தன்னைத்தான் உணர்வதே. தன்னைத்தான் உணர்ந்த ஒரு ஞானி இருந்தால் அவர் இந்த மொத்த மனிதகுலத்திற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் சரியான பாதையை காட்டுவார். 

பழங்காலத்தில் அனைத்து ஆட்சியாளர்களும், அரசர்களும் சாதுக்களையும், சன்னியாசிகளையும் மற்றும் தன்னையறிந்தவர்களையும் போற்றிப் பாதுகாத்து,  உரிய மரியாதையை வழங்கி வந்தனர். அக்காலத்தில் சாதுக்களையும் , துறவிகளையும் காப்பதற்காக தீய சக்திகளையும், அசுரர்களையும் ஆட்சியாளர்கள் நிர்மூலமாக்கினர். அதனாலேயே இந்த நாட்டில் என்னைப்போன்ற பிச்சைக்காரர்களுக்கு மிகுந்த மரியாதை வழங்கப்பட்டது. 

ஏதேனும் ஒரு காலகட்டத்தில் ஒரு சக்தி உயரும் போது இன்னொன்று தனது முக்கியத்துவத்தை இழக்கும். இன்னொரு சக்தி தோன்றுகையில் முந்தைய ஒன்று காணாது போகும். இதுவே இயற்கையின் நியதி. ஆனால் என் தந்தை எப்போதும் இந்த அனைத்து சக்திகளின் பின்னால் இருந்துக்கொண்டு அவர் சிறந்தது வெல்வதை பார்ப்பார். 

நமது நாடு, ஞானிகள், துறவிகள், சாதுக்கள் மற்றும் தன்னையறிந்தவர்களின் நிலமாகும். அவர்கள் இந்தியாவை வழிநடத்தி மொத்த பிரபஞ்சத்திற்கும் பின்பற்ற வேண்டிய வழியை காட்டுமாறு செய்வார்கள். எனவே நீங்கள் எனது தந்தை மற்றும் அனைத்து சாதுக்களின் மொழிகளையும் பின்பற்ற வேண்டும். சுவாமி ராம தீர்த்தா கூறுகையில், அவர் எப்போதும் நம்மிடையே ஏதேனும் ஒரு மனித வடிவில் இருந்து நமது இலக்கை நாம் அடைகிறோமா என்பதை பார்ப்பார் என்று உரைத்துள்ளார். 

சுவாமி ராம்தாஸ் , அரவிந்தர், ராம் தீர்த்தா , மகாத்மா காந்தி , சுப்பிரமண்ய பாரதி மற்றும் பிற மகா குருமார்கள் முன்னறிந்து  கூறியது போல்  இப்பொழுது நேரம் வந்திருப்பதால், இந்தியா மட்டிலுமே சரியான பாதையை காட்ட இயலும். 

சிறிது காலம் ஜப்பான் செழித்தது, பின்னர் ஜெர்மனி, இத்தாலி , அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து. இனிமேல், இந்தியா மட்டுமே மொத்த பிரபஞ்சத்தையும் வழிநடத்தும். என் தந்தை அந்த பணியை சிறப்பாக செய்வார்.

பாரதமாதாவே லோக குரு மற்றும் லோக மாதா. அவள் மட்டுமே இந்த மொத்த பிரபஞ்சத்தையும் வழிநடத்துவாள். “ 

வந்தே மாதரம் ! ஜெய் ஸ்ரீ ராம் ! ஜெய் யோகி ராம் சுரத்குமார் !

ஸ்ரீ பாரதமாதா மந்திர்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s