Thooran Songs in Tamil

Source: https://www.gospelofyogiramsuratkumar.com/amarakavyam/18—the-earlier-devotees-/the-earlier-devotees-

திரு.ம.ப.பெரியசாமி தூரன் பாடல்கள்
குருதேவர் அருட்பாமாலை

பாடல் – 1
விருத்தம் – ராக மாலிகை
(ஹம்சத்வனி, கௌளை, தேவகாந்தாரி, வலஜி)

1. பார்த்தாலே பாட்டு வரும் ராம்சுரத் பரமயோகி பாதம்
சென்னி சேர்த்தாலே துன்பமெல்லாம் தீர்ந்து போகும்
அண்டிக் கண்ணீர் வார்த்தாலே மறுபிறவி மறைந்து போகும்
ரகுராமன் பேர் சொல்லி ஆர்த்தாலே இன்பமெலாம்
ஆகுமெனில் அவர்பெருமை உரைக்கலாமோ?

2. என் குருவே ராம் சூரத் குமாரெனும் பரமயோகி
அன்புருவே அல்லலெனும் ஆழ்கடலில் அமிழ்ந்தலைந்தேன்
இனகருணை காட்டி எனை ஈடேற்றிக் காத்தருள்வாய்
இதுவுமொரு லீலையென கருதல் நன்றோ இறைஞ்சுகிறேன்
பதமலரே
துன்பமொரு முடிவில்லை துயர்போக்கி ஆட்கொள்வாய்
தேவதேவே.

பாடல் – 2
கும்மிப்பாடல் ராகம்

1. சின்னக் குழந்தையாய்த் தோன்றுவான் மனதில்
தெய்வக் குழந்தையாய் ஊன்றுவான்
என்னென்னவோ பல பாடல்கள் – ஞானம்
எண்டிசைவீசுரையாடல்கள்
கண்ணிலே பேரொளி வீசுதே – அதைக்
காண்பதற்கே மிகக் கூசுதே
எண்ணரும் ராம்சுரத் யோகியாம் – தந்தை
ஈசனைக் காட்டும் நல் தேகியாம்.

2. வல்லப் பிணிகளை ஓட்டுவான் – என்றும்
வாதனை தவிர்த்தின்பம் ஊட்டுவான்
எல்லையில் அன்பெனும் ஜோதியாம் – நமக்
கேற்றம் தருவதில் ஆதியான்
மெல்ல வரும் தென்றல் போன்றவன் – ஞான
மெய்ப்பொருள் காட்டிடும் சான்றவன்
சொல்லரும் வேத மெய்த் தந்தையாம் – ராம்
சுரத் குமார் என்னும் எந்தையாம்.

பாடல் – 3
ராகம் – சாரங்கா
தாளம் – ஆதி
பல்லவி

ராம்சுரத் குருபாதம் போற்றிக் கொண்டாடு
ராமர் பாதுகை யென்னும் புகழ் பெறும் திருப்பாதம் (ராம்)

அனுபல்லவி

முக்தியளிக்கும் பாதம் முன்தலை வைக்கும் பாதம்
பக்தி பெருக்கும் பாதம் பவநாச ராம்ஜி பாதம் (ராம்)

சரணம்

தொல்லை ஒழிக்கும் பாதம் தூரன் வண்ங்கும் பாதம்
எல்லையிலா இன்பம் எனக்கருள் குருபாதம்
ஏகாந்த பெருவெளியில் எளியேனைச் சேர்க்கும் பாதம்
ராம்சுரத் குருபாதம் போற்றிக் கொண்டாடு
ராமர் பாதுகையென்னும் புகழ்பெறும் திருப்பாதம் (ராம்)

பாடல் – 4
விருத்தம் – ராக மாலிகை
(கேதார கௌளை, காபி, ஹம்சாநந்தி, கானடா, சிந்து பைரவி)

1. சரணம், சரணம் தாளினை சரணம்
சஞ்சலம் முடிவில்லை அஞ்சலி செய்தேன்
திருவடித் தாமரையில் அன்புடன் பணிந்தால்
ஜென்மம் கடைத்தேறும் மற்றொன்றும் வழி காணேன்

2. கருணைக் கடல் என்னும் கார் வண்ண மேனியனே
காத்தருள்வாய் என்றே முற்றிலும் உணர்ந்தேன்
ராம் சுரத்குமாரா தயை செய்வாய் நீ
இரக்கமில்லையோ நான் படும் பாடெல்லாம் அறியாயோ நீ !

3. ராம்ஜி திருப்பாதம் மீண்டும் ஒரு முறை தொழுதேன்
இரக்கம் உள்ளாய் எனின் என்குறை தீர்ப்பாய்
ஏங்கியே பணிந்தேன் அபயமளிப்பாய்
திருத்தமிழ் பணியெல்லாம் செய்து முடிக்க
என்னை ஆதரிப்பாயே.

4. வருந்தி அழைத்தேன் வணங்கினேன் ஐயா
புரி பிழைகளெல்லாம் பொறுத்தருள்வாயே புண்ணிய ராம்ஜி
தாளடி சரணம் போற்றினேன் ஐயா
சரணம் சரணம் தாள் மலர் சரணம் தயை செய்வாயே.

5. திருவண்ணாமலை வாழ் யோகியே சரணம்
சரணம், சரணம் திருவடி தொழுதேன்
அருள் உளம் ஒன்றே அபயம் என்றுணர்ந்தேன்
கருணா சொரூபனே கண்ணிய ரூபனே
இருள் உளம் போக்கி ஜோதியே வேண்டும்
இரங்கியே அருள்வாய் ! சரணம், சரணம்.


பாடல் – 5
பஜனைப் பாடல்

யோக சத்குரு ஸ்ரீராம சத்குரு
யோகி ராம் சுரத்குமார் ஞான சத்குரு
நாத சத்குரு, ராம நாம சத்குரு
ராம, ராம, ராம, ராம, ராம சத்குரு
நித்ய சத்குரு, ஜோதி நேத்ர சத்குரு
சித்த சத்குரு, தெய்வ குழந்தை சத்குரு


பாடல் – 6
ராகம் – வராளி
தாளம் – மிச்ரசாபு

பல்லவி

என்ன புண்ணியம் செய்தேனோ நான் – உன்
திருப்பாதத்தில் இருக்கவும், பாடாவும் நான்
(என்ன)
அனுபல்லவி

கன்னல் மொழி ராமன் ரகுவம்சதிலகன்
கற்புடையோர்க்கெல்லாம் காவலன் போன்றவன்
(என்ன)

சரணம்

அன்புடனே போற்றும் ராம் சூரத்குமாரன்
அண்டினவர்க்கெல்லாம் தஞ்சம் அளிப்பவன்
தெய்வக் குழந்தையாம் அண்ணாமலை வாழும்
தசரத குமாரன் தாள்மலர் போற்றிட
(என்ன)


பாடல் – 7
ராகம் – ஸரஸாங்கி
தாளம் – கண்ட சாபு

பல்லவி

உனையன்றித் துணை காணேன் – ஸ்ரீ ராமச்சந்த்ரா
எனை யாட்கொண்டருள்வாய்
(உனை)
அனுபல்லவி

அனவரதமும் உன்றன் அரவிந்த பாதம் எண்ணி
மனங்கசிந்துருகினேன் வள்ளலே இரங்குவாய்
(உனை)

சரணம்

குகனென்ற வேடனையும் குரங்கின வேந்தனையும்
சரணென்ற வீடணன் தன்னையும் தம்பியாய்
அகமகிழ்ந் தேற்றதோர் அருள்நிறை புண்ணியனே
ரகு வம்சதிலகனே ரமணீய ராமனே
(உனை)

பாடல் – 8
கிளிக்கண்ணி மெட்டு

1. தெய்வக் குழந்தை பேரை
தெருவிலே கேட்ட போதும்
மெய்சிலிர்த்தே நிற்கிறேன் – கிளியே
செயல் மறந்தும் நிற்கிறேன் – கிளியே
செயல் மறந்தும் நிற்கிறேன்.

2. பச்சைப்பச்சையாயுடுத்தி
பச்சைமயில் வாகனன்போல்
இச்சையெல்லாம் தருவார் – கிளியே
எமதிடர் போயொழியும் – கிளியே
இன்னல்கள் மாய்ந்தொழியும்

3. காளியன் நடனமோ
கடையூழி நடனமோ
ஏதும் அறிந்திலனே – கிளியே
போதம் நான் வேண்டுகிறேன் – கிளியே
போதம் நான் வேண்டுகிறேன்.

பாடல் – 9
விருத்தம் – ராகமாலிகை
(மாயா மாளவ கௌளை, நாட்டகுறிஞ்சி, ஹம்ஸானந்தி, சுருட்டி)

அருள்பொழியும் தனி முகிலே ஆனந்தப் பரவெளியில்
அருணனென மிதந்து வரும் பூரணமே ஆத்ம ஞானத்
திரள் அமுதே மன இருளை சுடர் விழியால் களைந்திடுமோர்
தெய்வீகமே ராம்சுரத் குமாரெனும் அற்புதமே
இருள் செறிந்த வாழ்க்கையென்னும் பெருங்கானில் ஏங்கி நின்று
ஏதும் வழி அறியாமல் இடர்ப்படுவோர் தமக்கெல்லாம்
மருள் ஒழித்துப் புகல் அளிக்கும் மாதவனே உன்றனிரு
மலரடியே தஞ்சமென வந்தடைந்தேன் ஏற்றருளே.


பாடல் – 10
பஜனைப் பாடல்

ராம்சூரத் குமாரம்
ராம்சூரத் குமாரம் (2)
ஜெய ஜெய ராம் சுரத் குமாரம்
ஜெய ஜெய ராம் சுரத் குமாரம் (ராம்)
ராம், ராம், ராம் சுரத் குமாரம்
ராம், ராம், ராம் சுரத் குமாரம் (ராம்)
தசரத ராம் சுரத் குமாரம்
தசரத ராம் சுரத் குமாரம் (ராம்)
ராகவ ராம் சுரத் குமாரம்
ராகவ ராம் சுரத் குமாரம் (ராம்)
ஹரி, ஹரி ராம் சுரத் குமாரம்
ஹரி, ஹரி ராம் சுரத் குமாரம் (ராம்)
ஹரி ஓம் ராம் சுரத் குமாரம்
ஹரி ஓம் ராம் சுரத் குமாரம் (ராம்)
நிறை தவ ராம் சுரத் குமாரம்
நிறை தவ ராம் சுரத் குமாரம் (ராம்)
தவ நிறை ராம் சுரத் குமாரம்
தவ நிறை ராம் சுரத் குமாரம் (ராம்)
ரகுவீர் ராம் சுரத் குமாரம்
ரகுவீர் ராம் சுரத் குமாரம் (ராம்)
அருள்மிகு ராம் சுரத் குமாரம்
அருள்மிகு ராம் சுரத் குமாரம் (ராம்)
எழில் மிகு ராம் சுரத் குமாரம்
எழில் மிகு ராம் சுரத் குமாரம் (ராம்)
ஒளிசேர் ராம் சுரத் குமாரம்
ஒளிசேர் ராம் சுரத் குமாரம் (ராம்)
ஓம், ஓம் ராம் சுரத் குமாரம்
ஓம், ஓம் ராம் சுரத் குமாரம் (ராம்)
வடிவேல் ராம் சுரத் குமாரம்
வடிவேல் ராம் சுரத் குமாரம் (ராம்)
சிவ, சிவ ராம் சுரத் குமாரம்
சிவ, சிவ ராம் சுரத் குமாரம் (ராம்)
நகைமிகு ராம் சுரத் குமாரம்
நகைமிகு ராம் சுரத் குமாரம் (ராம்)
ஸ்ரீஹரி ராம் சுரத் குமாரம்
ஸ்ரீஹரி ராம் சுரத் குமாரம் (ராம்)
திருவளர் ராம் சுரத் குமாரம்
திருவளர் ராம் சுரத் குமாரம் (ராம்)
தெய்வீக ராம் சுரத் குமாரம்
தெய்வீக ராம் சுரத் குமாரம் (ராம்)
திருமிகு ராம் சுரத் குமாரம்
திருமிகு ராம் சுரத் குமாரம் (ராம்)
அருள் சேர் ராம் சுரத் குமாரம்
அருள் சேர் ராம் சுரத் குமாரம் (ராம்)
புனித நல் ராம் சுரத் குமாரம்
புனித நல் ராம் சுரத் குமாரம் (ராம்)
பத மலர் சரணம், பதமலர் சரணம்
சரணம், சரணம், யோகியே சரணம் (ராம்)
தஞ்சமென்றடைந்தோம், ஏற்றருள்வாயே
தஞ்சமென்றடைந்தோம், ஏற்றருள்வாயே
ராம் சுரத் குமாரம், ராம் சுரத் குமாரம்,
ராம் சுரத் குமாரம், ராம் சுரத் குமாரம்.பாடல் – 11
கிளிக்கண்ணி மெட்டு

1. எங்கும் நிறைந்திருப்பான்,
இருந்தும் இல்லாதிருப்பான்
இவன் பெருமை யார் கூறுவார் – கிளியே
இவனடி தஞ்சம் என்போம் – கிளியே
இவனடி தஞ்சம் என்போம்.

2. சித்தர்கள் போலத் தோன்றி
முக்தர்கள் ஆகச் செய்வான்
முக்தி நிலை பெற்று விட்டால் – கிளியே
முன்னால் செய்த புண்ணியமே – கிளியே
முன்னால் செய்த புண்ணியமே

3. தெய்வக் குழந்தையின்
திருவடி போற்றுகின்றேன்
மெய்தவ ஞானியடி – கிளியே
எல்லாம் வல்ல சித்தனடி – கிளியே
எல்லாம் வல்ல சித்தனடி

4. அருணையில் வந்துதித்த
ராம் சுரத் குமாரனடி
என்றன் குருதானடி – கிளியே
ராமனருள் பெற்றவன்டி – கிளியே
ராமனருள் பெற்றவன்டி

5. கிட்டியும் கிட்டாதிருப்பான்
அட்டமா சித்தி பெற்றான்
வெட்ட வெளிச் சித்தனடி – கிளியே
வேகமுடன் தாள் பணிவோம் – கிளியே
வேகமுடன் தாள் பணிவோம்.

பாடல் – 12
ராகம் – காம்போதி
தாளம் – ஆதி

பல்லவி

புண்ணியம் பல கோடி செய்தேனோ – நான்
பொன்னிழல் புன்னையின் கீழ் என்குருவைக் காண
(புண்ணியம்)

அனுபல்லவி

கண்ணிலே ஜோதி காட்டி கரமலர் அபயங் காட்டி
எண்ணிலா இன்பங் கூட்டி என்னையும் ஏற்றருள
(புண்ணியம்)

சரணம்
ஜெயராமா, ஸ்ரீராமா, ஜெய ஜெய ராமா எனும்
தாரக மந்திரமே உருவான தவயோகி
தயை ஓங்கும் ராம் சுரத் குமாரர் தம்பொன்னடியில்
சரணென்று வந்தவுடன் தமியேனை ஆட்கொள்ள
(புண்ணியம்)

பாடல் – 13
விருத்தம் – ராக மாலிகை
(சண்முகப்ரியா, மலையமாருதம்,
ஹிந்தோளம், சிந்து பைரவி, மத்யமாவதி)

அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஐம்புலனை அடக்கி வென்ற வீரா
தப்பேது நான் செய்யினும், பிள்ளை மதி என்றே
தவறு செய்யினும் அடியேனைப் பொறுத்தருளல் வேண்டும்
இப்பாரும் ராமனெனக் காணுகின்ற ஒளியே
இனி வேறு கதி இல்லை ராம் சூரத் குமாரா
அப்பாலும் உலகமெல்லாம் கடந்து ஆடல் புரிகின்ற என்றன்
குருநாதா

உன்றன் அடியிணையே தஞ்சமென வந்தடைந்தேன் ஐயா
ஒப்பாரும் உன்பெருமைக்கு அளவில்லை கண்டாய்
உலகத்தை அருள் நோக்கால் நோக்கிடுவாய் சரணம்
ஒளி வீசும் உன்றன் திருப் பார்வையாலே
உனை அடைந்தேன் புண்ணியனே சரணம்.