Surata Saptaham

A 7-day long lecture series in Tamil by Sri Visiri Shankar at Madurai Kurukshetram on the divine life of Yogi Ramsuratkumar. A summary in Tamil is given here.

surata-saptaaham

மதுரை குருஷேத்திரத்தில் பகவான் யோகி ராம்சுரத்குமார் திவ்ய சரித சுரத சப்தாஹம்!

சப்தாஹ பாரம்பர்யம் கலியுகத்தின் துவக்கத்தில் ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷிகள் நைமிசாரண்யத்தில் பாண்டவர் குலவாரிசு பரீட்ஷித்து மகாராஜாவிற்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்த போது துவங்கியது!

ஏழு நாட்களாக ஸ்ரீ கண்ணன் சரிதத்தை எடுத்தோதுவது போல் தெய்வக்குழந்தை யோகி ராம்சுரத்குமார் திவ்ய சரிதத்தை
சுரத சப்தாஹம் விஸ்தாரமாக விளக்கிச் சொல்கிறது.

1 “சுரத ஸப்தாஹ மாகாத்மியம் ” மற்றும்  பகவானின் நர்தரா வாழ்வை விளக்கும் “பாலகாண்டம்”

2 யோகியின் இறைத்தேடல் – மகான் அரவிந்தர் – மகரிஷி ரமணர் – பப்பா ராமதாசர் தரிசனம் – 1952ல்  பப்பாவின் திருவடிகளில் – யோகியின் ஞான மலர்ச்சியை விவரிக்கும்  ” ஞானகாண்டம் ”

3 1952 முதல் 1959 வரை பாரத நாடெங்கும் யோகி பவனி வந்த
அவரே வெளிப்படுத்திய சம்பவங்களின் வருணனை
” திரிதரு காண்டம் ”

4 1959 ல் அருணையை வந்தடைதல் . அருணையில் நிலை கொள்தல் –
1976 முதல் ஜெயந்தி வரையுள்ள ஆரம்பகால சரிதம்
” அருணைக் காண்டம் ”

5 1976 முதல் யோகியின் கருணை வீச்சில் நாலா திசைகளில் இருந்தும் அன்பர்கள் அருணையை நோக்கி ஈர்க்கப்பட்ட  யோகியின் கருணை  விளையாடல்களை தொகுத்து வழங்கும்  ” கருணைக் காண்டம் ”

6 எழுபதுகளில் “உலகம் உனை வணங்கி  உன் உருவை வழிபடும்” என்று  கரிவரத சுவாமிகளின்  அருளிய வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் –  குமார கோவில் – காணிமடம் -ராஜ பாளையம் – ஸ்ரீவில்லிபுத்தூர் – திருவண்ணாமலை ஆஸ்ரமம் – ஓசூர் – தூத்துக்குடி புதுக்கோட்டை – மதுரை குருஷேத்திரம் – விருதுநகர் குரு  பகவான் ஆலயம் – சென்னை ராகவாஸ்ரமம் – கபாலிநகர் – என ஆலயங்கள் உருவான வரலாறை விளக்கும்  ” ஆலய காண்டம் ”

7 “உலகத்தந்தை யோகி ராம்சுரகுமாரின் பட்டாபிஷேகம்”  சிறப்பு பூஜையுடன் சரதஸப்தாஹம் நிறைவு பெறும் .

யோகி ராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜயகுருராயா


மதுரை குருஷேத்திரத்தில் சுரத ஸப்தாஹம் முதல் நாளில் …

பாலகாண்டம்

ரிஷிமூலம் நதிமூலம் பார்ப்பதில்லை நாம்! தெய்வம் மானுட அவதாரம் எடுக்கையில் ஒரு பூர்வாஷ்ரம வரலாறு தவிர்க்க முடியாதது!

” இந்தப் பிச்சைக்காரன் காசி அருகே கங்கை கரையில் சிறிய ஊரில் பிறந்தான் ” என்றுதான் பகவான் வெளிப்படுத்தினார்.

உ.பி. மாநிலம் பலியா மாவட்டத்தில் நர்தரா என்னும் சிறிய கிராமத்தில் 1/12/1918 ல் யோகி பிறந்தார்.

அவர் வீட்டின் பின்புறம் கங்கா நதி ஓடுகிறது கங்கா புத்ரனாகவே யோகி வளர்ந்தார். கங்கா பரிக்ரமா வரும் சாதுக்கள் நர்தராவில் கங்கை கரையில் தங்கிச் செல்வதுண்டு. சிறுவனான ராம்சுரத் சாதுக்களோடு ஈடுபாடு கொண்டு சத்சங்கத்தில் இருந்தார்.

கபாடியா பாபா என்னும் ஞானியால் ஆத்மதாகம் ஊட்டப்பட்டார். 12 வயதில் தம் அன்னைக்காக கிணற்றில் நீர் இறைக்கச் சென்றபோது கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்த குருவியின் மீது விளையாட்டாக தாம்புக் கயிற்றை வீச, குருவி துடிதுடித்து இறந்தது ! பதறிப் போன சிறுவன் சுரத், ஒரு உயிரின் மறைவுக்கு தான் காரணமாகி விட்டோமே என்று வருத்தமுற , அது அவரை தீவிர ஆத்ம விசாரணைக்கு இட்டுச்சென்றது.

16ம் வயதில் கையில் காசு ஏதுமின்றி காசி சென்றடைந்தார். விஸ்வநாதர் ஆலயத்தில் ஒரு பேரொளி தம்மை ஆட்கொள்ளும் அனுபவத்திற்கு உள்ளானார்.

காசியில் கங்கை கரையில் சில நாட்கள் அலைந்து திரிந்தார்
சாரநாத் சென்றபோது மீண்டும் ஓர் பேரனுபவத்திற்கு உள்ளானார்

ஊர் திரும்பி படிப்பைத் தொடர்ந்தார். பள்ளி செல்லும் வழியில் இரண்டு முறை சுவாமி விவேகானந்தரின் குரலை கேட்டுள்ளார் :

“தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை உன்னுடையதல்ல ”

யோகியின் பால பருவத்திலேயே அவரது ஆன்மிக அம்சங்கள் வெளிப்பட்டுள்ளன!


மதுரை குருஷேத்திரத்தில் சுரத ஸப்தாஹம் இரண்டாம் நாளில் …

ஞானகாண்டம்

கங்கைக்கரை கபாடியா பாபா வழிகாட்டலில் 1946 மற்றும் 1947 கோடை விடுமுறையில் குருவைத் தேடி தென்திசைப் பயணம்.

புதுவை அரவிந்தர் ஆஸ்ரமத்தில் அன்னை தரிசனம். அன்னை அளித்த மலரை ஸ்பரிசிக்கையில் எல்லையற்ற சாந்தியை உணர்ந்து மனித நிலையினும் மேம்பட்ட வாழ்வு ஒன்று உண்டு என உணர்தல்.

அருணை சென்று மகரிஷி ரமணரை தரிசித்தல். இரண்டு மாதம் அங்கேயே தங்குதல். ரமண மகரிஷியிடம் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்படுதல். அவரது கருணை விழியில் கரைதல்.

கேரள மாநிலம் காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமம் சென்று பப்பா ராமதாஸரை தரிசித்தல். அவர்பால் பெரிய ஈடுபாடு ஏற்படாது திரும்பி விடுதல்.

1950 கோடையில் ரிஷிகேஷத்தில் குருவைத் தேடி அலைதல். அங்கே இருந்த போது மகரிஷி ரமணர் மற்றும் மகான் அரவிந்தர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைதல்.

ஊருக்குத் திரும்பி தவவாழ்வு மேற்கொள்தல். சமைக்காத உணவு பழங்கள் பச்சைப் பால் மட்டுமே அருந்துதல்.

1952 ஆகஸ்டில் திடீரெனக் கிளம்பி கேரளா ஆனந்தாஸ்ரமம் சென்று பப்பா ராமதாஸரை தரிசித்தல் இம்முறை அவரிடம் நெருக்கம் உணருதல். இவரே தாம் தேடிய ஞானத்தந்தை என்பதை உணர்தல்.

பப்பாவிடம் ராமநாம தீட்சை பெறுதல். ஏழுநாட்கள் இடை விடாத ராம நாம ஜபத்தில் இருத்தல்.

யோகி ராம்சுரத்குமார் பப்பாவின் திருவடிகளில் அவதரித்தல்.


மதுரை குருஷேத்திரத்தில் சுரத ஸப்தாஹம் மூன்றாம் நாளில் …

திரிதரு காண்டம்

1952 முதல் 1959 வரை ஏழு ஆண்டுகள் பகவான் யோகி ராம்சுரத்குமார் பாரத தேசமெங்கும் அலைந்து திரிந்த நாட்களின் அரிய நிகழ்வுகள்:

1952 ன் இறுதியில் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாளத்தில் கால் சிக்க, தந்தையின் உத்தரவு இல்லாததால் அப்படியே சிலையென நின்று விபத்துக்குள்ளாதல். குஜராத்தி அன்பர் ஒருவரால் மருத்துவமனை சேர்க்கப்படல். மீண்டும் தஹியா சென்று சேர்தல்.

1953 ஜனவரி இறுதியில் இரண்டு நாட்கள் மட்டும் ஆசிரியப்பணி
பணிக்குச் செல்லாமல் பாலன் நதிக்கரையில் உன்மத்த நிலையில் ராமநாமம் பாடித் திரிதல்.

உறவினர்கள் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துச் செல்ல தெளிவாக மருத்துவரிடம் பேசி வெளியேறுதல்.

1953 டிசம்பர் 3 பப்பாவை குஜாராத் பவநகர் ஆஸ்ரமத்தில் சந்தித்தல்.
ஆஸ்ரமத்தில் யோகியின் உன்மத்த நிலையால் எழும் பிரச்சனைகள்!
கிர்னார் அனுப்பி வைக்கப்படுதல். முடிவில் ஆஸ்ரமத்தை விட்டு வெளியேற்றப்படுதல்.

1954 – மனைவி இரு குழந்தைகளுடன் ஆனந்தாஸ்ராமம் சென்று நிரந்தரமாகத் தங்க வேண்டுதல்! பப்பா மறுத்து “ஒரு விருட்ஷத்தின் கீழ் புற்புதர்கள்தான் மண்டும்” என்று கூறி வெளியேற்றுதல்.

யோகியின் தனித்த பயணம் தொடருதல்.

பாரதமெங்கும் யோகியின் பாதம் படாத இடமேயில்லை என்னும்
அளவிற்கு யோகி எண்திசைககளையும் சுற்றித் திரிதல்.

பெங்களூரில் விஞ்ஞானி சர். சி.வி.ராமனை சந்தித்தல்.

திருவனந்தபுரம் முதல் கன்னியாகுமரி வரை நடந்து வந்த சாலையின் அழகை ரசித்து மெய் சிலிர்த்தல் !

கோகர்ணத்தில் தினமும் அக்னி ஹோத்ரம் செய்யும் அந்தணர் இல்லத்தை சென்று தரிசித்தல்.

இமயத்தில் வசிஷ்ட குகைக்கு சென்று வருதல்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தரிசனம். ஓர் இரவு எதிரே கடை வாசலில் சயனம்.

பகவானே பகிர்ந்து கொண்ட பலப்பல அரிய செய்திகள்!

இறுதியாக 1959 ல் அருணை வந்தடைதல்!


மதுரை குருஷேத்திரத்தில் சுரத ஸப்தாஹம் நான்காம் நாளில் …

அருணைக் காண்டம்

1959 ல் அருணையை அடைந்த யோகி பழைய பேருந்து நிலைய அரசமரத்தடி, குகை நமச்சிவாயர் ஆலயம், ஆலமரக்குகை போன்ற இடங்களில் ஆரம்ப நாட்களில் வாசம் செய்தார்.
1961 ல் ரமணாஸ்ரமத்தில் சாதுபோஜனம் துவங்கியது.
1962 ல் பிருந்தாவன்ஹோட்டல் திரு கோவிந்தபட் அவர்கள் யோகியை அழைத்துச் சென்று உணவளிக்கிறார்.

1961 முதல் 1964 வரை ஜே.கே. அவர்கள் சென்னை வரும் போதெல்லாம் யோகியும் சென்னை வசந்த் விகார் சென்று ஜே.கே. அவர்கள் உரை கேட்கிறார்.

1962ல் ஆனந்தாஸ்ரம பக்தர் சென்னை திரு தேவசேனாதிபதி இல்லத்தில் யோகி தொடர்ந்து தங்கிட அனுமதி கிட்டவில்லை.
அடையாறு தியாசபிக்கல் சொசைட்டி வாயிற் பிள்ளையார்கோவில்தான் யோகியின் உறைவிடமாகிறது !

1963 ல் ஜே.கே. அவர்களைத் தொடர்ந்து ரிஷிவேலி, மும்பை, டில்லி, காசி செல்கிறார்.

1964 ல் அருணை கோவில் அருகேயுள்ள பாத்திரக்கடை உரிமையாளர் சித்தம் சிவணனைந் பெருமாள் என்ற சடையனை தடுத்தாட் கொண்டு தம் அடியவராக்குகிறார்! அந்நாட்களிலேயே யோகி ராம்சுரத்குமார் நாமத்தை உபதேசிக்கிறார் ! சடையன் தலைமையில் யோகியின் மூடைகளை பாதுகாக்கும் குழு ஒன்றை யோகி உருவாக்குகிறார்.

1965 ல் பலரும் யோகியை திருக்கோவிலூர் ஞானானந்தகிரி தபோவனத்தில் பார்க்கின்றனர்.
குச்சிப்பாளையம் அய்யா முத்துவேல் வைத்தியர், சீனிவாசன் யோகியின் தொண்டர்களாகி யோகிக்கு தொடர்ந்து தங்கள் கிராமங்களில் இருந்து மூடைகளைப் பேணத் தொண்டர் குழாமை அனுப்பி வைக்கின்றனர்.

யோகியுடன் அருணையில் வெளிநாட்டவர் தொடர்பு அறுபதுகளிலேயே துவங்கி விடுகிறது. யோகியுடன் ஆறு மாதங்கள் உடன் இருந்த அமெரிக்க இளைஞர் 1971 ல் யோகியை குறித்து Yogi Ramsuratkumar, The Godchild of Thiruvannamalai என்னும் ஆங்கில நூலை எழுதி வெளியிடுகிறார்.

திருக்கோவிலூர் ஞானானந்த சுவாமிகள் யோகியை தம் பக்தர்களுக்கு அறிமுகம் செய்விக்கிறார். யோகிக்கு அருணையில் தொந்தரவுகள் வந்த போது காவல்துறை உயரதிகாரி திரு பொன்பரமகுரு அவர்களிடம் யோகிக்கு உதவிட வேண்டுகிறார்.

யோகியும் தபோவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். ஞானானந்த சுவாமிகள் சமாதிக்குப்பின் பல தபோவனம் பக்தர்கள் யோகியின் வழிகாட்டுதலை ஏற்றனர்.

திரு ராஜமாணிக்க நாடார், திரு ராஜதுரை நாடார் போன்ற சிவகாசி அன்பர்கள் யோகியின் அடியவர்கள் ஆகினர். யோகியின் பக்தர்கள் வட்டம் அவர்களால் விரிவடைந்தது.
திரு ஞானகிரி கணேசன், SP ஜனார்த்தனன், பார்த்தசாரதி, முருகேசன்ஜி என யோகியின் அடியவர்கள் பெருகினர்.

தமிழறிஞர்கள் டாக்டர் தெ.பொ.மீ. பெரியசாமித்தூரன், அ.ச.ஞானசம்பந்தன் என கவிஞர்கள் குழாம் யோகியின் மீது கவி மழை பொழியலாயானர்!

தமிழ்கூறும் நல்லுலகு யோகியைப் போற்றத் துவங்கியது!

1976 டிசம்பர் 1 ல் அருணை சுப்பையா மடத்தில் அன்பர்கள் யோகியின் முதல் ஜயந்தியை சிறப்புடன் கொண்டாடினர்!


மதுரை குருஷேத்திரத்தில் சுரத சப்தாஹம் 5 ம் நாளில்

கருணைக் காண்டம்

1959 ல் அருணையில் நிலைகொண்ட யோகியின் கருணை விளையாடல்கள் அளவற்றவை!

காம தேனுவாய், கற்பக விருட்சமாய், யோகி அருள் மழை பொழிந்தார்

புன்னை மரத்தடியிலும், தேரடி மண்டபத்திலும், பாத்திரக்கடைத் திண்ணையிலும், எளிவந்த நாயகனாய் அமர்ந்து அருள் பாலித்த யோகிக்கு
1975 ல் அன்பர்கள் அருணை சன்னதித் தெரு இல்லத்தில் வீடொன்று வாங்கி வந்தமர வேண்டி நின்றனர்! சிறிது காலத்திற்கப்பின் சன்னதித் தெரு இல்லம் அவர்தம் அருள் விளையாடல்களின் மையமாகியது!

அருணை கோவில் கும்பாபிஷேகத்தின்போது யோகியைத் தரிசித்த கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. யோகியின் அடியவராகி யோகியின் மீது பாமாலைகள் பாடி மகிழ்ந்தார்! பல பாடற்தொகுதிகள் நூல்களாக வந்துள்ளன!

பாடகர் K.J. ஜேசுதாஸ் யோகியின் அருளுக்குப் பாத்திரமாகி காணிமடம் ஆலய நிதிக்காக மூன்று இடங்களில் இசைக்கச்சேரி நடத்தி உதவினார்!

இசைஞானி இளையராஜா யோகியை பற்றி தமது அனுபவங்களை ஹிந்து நாளிதழில் எழுதினார். யோகியின் மீதான தூரன் பாடல்கள் ஒலிநாடாவை ஆயிரம் பிரதிகள் பதிவுசெய்ளித்தார்!

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களை யோகி தடுத்தாட்கொள்ள அவரது எழுத்துக்கள் பல்லாயிரம் உள்ளங்களை யோகியைத் தரிசிக்க அருணையை நோக்கி ஈர்த்தது!

குமரி மாவட்ட பக்தர் திரு பொன்னையா அய்யப்பன் யோகியின் அடியவராகி மாதாஜி ஓம் பிரகாஷ் யோகினியை யோகியின் அருள் வளையத்திற்குள் கொண்டு சேர்க்கிறார். யோகியின் அருளாணைக் கிணங்க திரு ராஜமாணிக்கனார் குமாரகோவிலில் ஸ்ரீ ராம்ஜி ஆஸ்ரமத்தை கட்டி மாதாஜிக்கு அளிக்க அங்கே யோகியின் நாமம் கோடி அர்ச்சனைகள் திருவிளக்கு வழிபாடுகள், ஜயந்தி விழாக்கள் மூலமாக யோகி நாமம் திரளான மக்கள் பகுதிக்கு அறிமுகமாகிறது!

அடுத்து காணிமடத்தில் தபஸ்வி பொன் காமராஜ் அவர்களால் யோகியின் முதல் ஆலயம் எழுகிறது! அதற்காக அருணையில் யோகியின் முன்னிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது! தபஸ்வி தமது ரம்யம் பஜன்ஸ் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்குகள்தோறும் யோகியின் நாமத்தைச் சென்று விதைக்கிறார்!

யோகியின் நாமம் மக்களளைச் சென்றடைகிறுது!

சென்னை சாது ரங்கராஜன் அவர்களின் தத்வ தர்சன் ஆங்கில காலாண்டிதழ் அவரது நிவேதிதா அகடமி வெளியீடுகள் பகவானின் கருணையை வெளிப்படுத்தும் செய்திகளை தாங்கி வந்தன!

மதுரை திருநகர் கோ. சங்கராசுலு அவர்கள் அருணை அரசுக்கல்லூரி
முதல்வராக இருந்த போது தினமும் மாலை யோகியைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறார். யோகியின் கருணையில் நெகிழ்ந்து இனிய பாடல்கள் புனைகிறார்!

சேலம் சாரதா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஒரு தெய்வீக வாழ்விற்கு தன்னை அர்ப்பணிக்க காத்திருந்த மாதேவகி அவர்களை யோகி ஆட்கொள்கிறார்.

வருமானவரித்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றிய அன்னை விஜயலட்சுமி அவர்களும் தம் வாழ்வை யோகியின் பணிக்கு அர்ப்பணிக்கிறார்கள்.

யோகியின் கருணையினால் சுதாமா உருவாகி சுதாமா சோதரிகள் யோகியின் சேவையில் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கின்றனர்!

சென்னை அன்னை ஓம் பவதாரிணி அவர்கள் யோகியின் கருணைக்குப் பாத்திரமாகி யோகியின் ஜயந்தி விழாக்களை பிரமாண்டமாக நடத்தி தமிழ்கூறும் நல்லுலகெங்கும் யோகியின் புகழை கொண்டு சேர்க்கிறார்கள். யோகி ஜயந்திமலர் சிறப்பாக வெளியிடுகிறார்கள். இவரது நவசக்தி விஜயம் மாத இதழ் யோகியின் செய்திகளை தாங்கி வந்தது!

பகவானால் சுசீந்திரம் ராஜலட்சுமி என அழைக்கப்பட்ட அன்னை யோகியின் அருளால் ராம நாம இயக்கத்தை துவங்கி கொளத்தூரில் யோகிக்கு ராகவாஸ்ரமம் உருவாகச் செய்தார்.

நெய்வேலி லிக்னைட்டில் பணியாற்றிய திரு ஆர் கே ஆழ்வார்
யோகியின் அன்பிற்கு பாத்திரமாகி யோகியின் எழில் வண்ண புகைப்படங்களை பாதுகாத்து நமக்கு வழங்கி யோகியின் வரலாற்றில் இடம் பெறுகிறார்.

ஜஸ்டிஷ் அய்யா அவர்களுக்கு சன்னதித் தெரு இல்லத்தில் பூட்டிய அறைக்குள் சிவத்தாண்டவ காட்சி அருள்கிறார்.

பகவானின் கருணை வெள்ளம் பலரையும் அருணை நோக்கி ஆகர்ஷித்தது !


மதுரை குருஷேத்திரத்தில் சுரத ஸப்தாஹம் ஆறாம் நாளில் …

ஆலய காண்டம்

” இந்தப் பிச்சைக்காரருக்கு நிறைய மந்திர்கள் வரும்” என்ற யோகியின் வார்த்தைகள் தொண்ணூறுகளில் நிதர்சனமான உண்மைகளாகியது!

1989 குமரி மாவட்டம் குமாரகோவிலில் ஸ்ரீ ராம்ஜி ஆஸ்ரமம் யோகியின் முதல் வழிபாட்டு மையம் உருவானது ! மாதாஜி ஓம் பிரகாஷ் யோகினி
சகோதரர் முருகதாஸ் அந்த மையத்தை யோகியின் நாம கேந்திரமாக்கினர் !

15/4/1990 யோகியின் முதல் ஆலயம் அமைக்கும் பாக்கியம் தபஸ்வி பொன் காமராஜ் அவர்களுக்கு அருளப்பட்டது . காணிமடம் மந்திராலயம் அடிக்கல் நாட்டுவிழா! காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமம் சச்சிதானந்த சுவாமிகள் அடிக்கல் நாட்டினார்கள்!

14/1/1991 காணிமடத்தில் பகவானின் விக்ரகம் மகர ஜோதி தோன்றுகையில் பிரதிஷ்டை!

1/9/1993 காணிமடம் மந்திராலயம் கும்பாபிஷேகம்!

15/10/1993 திருவண்ணாமலை ஆஸ்ரம முட்கம்பி வேலி அமைக்கும் பணி யோகி துவங்கி வைத்தார்.

26/2/1994 அருணை யோகி ஆஸ்ரம அடிக்கல் நாட்டுவிழா ஆனந்தாஸ்ர சச்சிதானந்த சுவாமிகள் அடிக்கல் நாட்டினார்கள்!

1995 ஆஸ்ரம கட்டிட நிதிக்காக சிறப்புமலர் வெளியீடு ஸ்வாகத மண்டபம் GRACE திறப்புவிழாக்கள்!

1998 ல் ஓசுரில் பகவான் யோகி ராம்சுரத்குமார் பஜன் மந்திர் கட்ட திரு சொர்ணநாதன் செட்டியார் அவர்களுக்கு பகவான் அனுமதி.

25/1/1998 ஒசூர் பஜன் மந்திர் அடிக்கல் நாட்டுவிழா தத்துவஞானி பெருமாள் ராசு அய்யா அவர்கள் தலைமையில்! 10/3/2000 கும்பாபிஷேக விழா!

1998 ல் தூத்துக்குடி புதுக்கோட்டையில் திரு கைலாசம் அவர்கள் ஆலயம் கட்ட அரசுநிலம் ஒதுக்கீடு! கூரை வேய்ந்து யோகி தியான மையம் துவக்கம்.

1/2/2002 ராஜபாளையம் முறம்புவில் திரு சற்குணம் அய்யா அவர்கள் யோகி ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம்.

யோகி ஸித்தியான பின்னும் யோகி முன்னுரைத்தபடி ஆலயங்கள்  எழுந்த வண்ணம் உள்ளன !

சென்னை கொளத்தூரில் யோகி சிலையுடன் ராகவாஸ்ரமம்.

தூத்துக்குடி புதுக்கோட்டையில் பிரம்மாண்ட ஆலயம்.

நாகர்கோவில் பேயோடில் யோகி ஆலயம்.

சேலம் யோகி ஆலயம்.

மதுரை குருஷேத்திரம்.

விருதுநகர் யோகி குரு பகவான் ஆலயம்.

நாசரேத் யோகி பஜன் மந்திர்.

சென்னை கூடுவாஞ்சேரி கபாலிநகர் யோகி அபயம் ஆலயம்.

கோவையில் ராம்ஜி மையம்.

திண்டுக்கல் அருப்புக்கோட்டை ஆலய கட்டுமானங்கள் நடந்து வருகின்றன!

ஈரோடு, மாம்பலம், கரூர், கோலார், சென்னை சத்சங்கம், மயிலை சத்சங்கம் என எண்ணற்ற யோகி மையங்களில் யோகி நாம ஜபம் முறையாக நடந்து வருகின்றன!

இல்லந் தோறும் யோகி நாமம் அன்பர்கள் உள்ளங்களில் ஆயிரமாயிராம் கோவில்கள் எழுந்து வருகின்றன!


மதுரை குருஷேத்திரத்தில் சுரத ஸப்தாஹம் 7 ம் நாளில் …

உலகத் தந்தை யோகி பட்டாபிஷேக விழா!

எண்பதுகளின் இறுதியில் உலகத் தந்தை யோகி ராம்சுரத்குமார் எனப் பிரகடனம் செய்தனர் காணிமட பக்தர்கள் தபஸ்வி பொன்காமராஜ் தலைமையில்!

எழுபதுகளில் அருளப்பட்ட கரிவரத சுவாமிகள் பாடலிலேயே உலகம் உன்னை வணங்கும் என்ற வரிகள் யோகி உலகத் தந்தையாவார் என்பதை முன்னறிந்து வெளிப்படுத்தின!

யோகியைப் பற்றிய முதல் நூலை எழுதியவரே ட்ரூமன் கெய்லர் என்ற அமெரிக்க இளைஞர்! யோகி துவக்க நாளில் இருந்தே உலகோர் பலராலும் போற்றப்பெற்றார் அவரைச் சுற்றி இந்தியர்களும் வெளி நாட்டவர்களும் எப்போதும் இருந்து வந்துள்ளனர்!

யோகி தமது அவதார நோக்கத்தை தந்தையின் பணி என்றே குறிப்பிடுவார். அது பிரபஞ்சம் தழுவியது என்பதையும்வெ ளிப்படுத்தியுள்ளார்!

யோகியின் வெளிநாட்டு பக்தர்களில் முக்கியமானவர்கள் அமெரிக்காவின் லீ லோஸோவிக், பிரஞ்சு தேசத்தவர் மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் கிருஷ்ணா போன்றவர்கள்.

யோகியின் கருணை உலகளாவியதாக உள்ளது! உலகோர் நேசிக்கும் உத்தமத் தந்தையாக அவர் திகழ்கிறார்!

சுரத சப்தாஹ நிறைவு நிகழ்ச்சியாக ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் போல்
மங்கள நிகழ்வாக உலகத் தந்தை யோகி ராம்சுரத்குமார் பட்டாபிஷேகம் நடைபெற்றது! உலகம் உய்ய யோகி விட்டுச் சென்றுள்ளது அவர் திருநாமம் ஒன்றே!

யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா!