ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.31

Glimpses of A Great Yogi in Tamil – Part 2
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – II
சீடன் கண்ட தீக்ஷா குரு

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 2.31 

பகவானின் தூதர்

நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை அன்று சிரஞ்சீவி. விவேகானந்தனும், குமாரி. நிவேதிதாவும் பகவானின் இல்லத்திற்கு காலை 11 மணிக்கு சென்றனர். அங்கிருந்து அவர்கள் இந்த சாதுவை தொலைபேசி மூலம் அழைத்து, பகவான் சாதுவை ஒரு முக்கியமான விஷயம் பேசுவதற்காக உடனடியாக திருவண்ணாமலைக்கு கிளம்பி வரும்படி கூறியதாக தகவலை பரிமாறினார்கள். விவேக்கையும், நிவேதிதாவையும் பகவான் பார்த்த மாத்திரத்திலேயே அவர் திரும்ப திரும்ப, “விவேக் வந்து விட்டான். நிவேதிதா வந்து விட்டாள் இந்த பிச்சைக்காரனின் கவலைகள் நீங்கின” என்றார். முதலில் அவர் எதற்காக இவ்விதம் கூறுகிறார் என அறியாது விவேக் மற்றும் நிவேதிதா தவிக்கையில், யோகி நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என வினவினார். நிவேதிதா பகவானிடம் தாங்கள் சென்னையில் இருந்து வருவதாகவும், விவேக் இங்கிருந்து சிதம்பரம் சென்று எம்.இ சேர இருப்பதாகவும், தான் சென்னை திரும்பி செல்ல இருப்பதாகவும் கூறினாள். பகவான் நிவேதிதாவிடம் தனக்காக ஒரு வேலையை செய்ய இயலுமா எனக் கேட்டார். அவளும் நிச்சயமாக அவர் என்ன விரும்புகிறாரோ அதனை செய்வேன் என்றாள. யோகி, “ நீ சென்று உனது தந்தையை அவரசமாக அனுப்ப இயலுமா ? “ என்றார். அவள், சாது, குருவை சந்தித்து முடிந்தப்பின் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கூறியதாகவும் எனவே தான் உடனடியாக அவரை தொலைபேசியில் அழைப்பதாக கூறினாள். பகவான் “ உடனடியாக அதனை செய்” என்றார். பின்னர் நிவேதிதா தனது தந்தையை உடனடியாக அழைத்தார். அவளது குரலில் இருந்தே சாது, பகவான் ஏதோ முக்கியமான ஒன்றிற்காகவே தன்னை அவசரமாக அழைத்திருக்கிறார் என புரிந்து கொண்டார். சாது, நிவேதிதாவிடம், தான் உடனடியாக கிளம்பி வருவதாகவும் சில மணி நேரத்தில் தான் அங்கே இருப்பேன் என்றும் பகவானிடம் கூறிவிடுமாறு சொன்னார். அன்று காலையே சாது பாண்டிச்சேரியில் மறுபதிப்பாக வெளிவர இருக்கும், ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் எழுதிய “ யோகி ராம்சுரத்குமார் – கடவுளின் குழந்தை திருவண்ணாமலை “ என்ற நூல் வெளியீடு குறித்த அழைப்பிதழை பெற்றார். எனவே அது சம்பந்தமாகவே யோகி தன்னை அழைக்கிறார் என்று சாது ஓரளவு யூகித்தார். 

மதிய நேரம் திருவண்ணாமலை அடைந்த உடன் சாது பகவானின் முன்னிலையில் ஆஜரானார். விவேக், நிவேதிதா மற்றும் பகவானின் உதவியாளர் சசி மட்டுமே அங்கிருந்தனர். பகவான் சாதுவை உள்ளே அழைத்து தன் அருகே அமரவைத்தார். அவர் பாண்டிச்சேரியில் இருந்து வந்திருந்த அழைப்பிதழை சாதுவிடம் காட்டி, அதனை படிக்குமாறு கூறினார். சாது தனக்கு ஏற்கனவே இந்த அழைப்பிதழ் வந்துவிட்டதாக கூறினார். அவர் தனக்கு அழைப்பிதழ் இப்போதுதான் கிடைத்ததாகவும் கூறி தொடர்ந்தார்: “இந்தப் புத்தகம் 1979ல் பதிப்பிக்கப்படது. அதன்பின் சிலர் அதனை மறுபதிப்பு செய்ய நினைத்து, அவர்கள் ட்ரூமன் கெய்லருக்கு கடிதம் எழுதினார்கள் அவர் மௌனமாகவே இருந்தார். எனவே அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்பொழுது இவர்கள் மறுபதிப்பு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தப்பிச்சைக்காரன் அவர்கள் அனுமதி பெற்றிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். இதுவும் அதே குழுவினரான, ராஜமாணிக்கம், டாக்டர். K. வெங்கடசுப்பிரமணியன் மற்றும் ரவீந்திர பாண்டியன், அவர்கள் செய்வதே. சிலகாலங்களுக்கு முன், அவர்கள் ஒரு டிரஸ்ட் துவங்க முயன்றார்கள், இந்தப் பிச்சைக்காரன் தேவகியை அது தொடர்பாக உன்னிடம் அனுப்பி வைத்தேன். உனக்கு நினைவிருக்கிறதா?“ சாதுஜி தனக்கு நினைவிருக்கிறது என்றார். மேலும் யோகி இரண்டு வருடங்களுக்கு முன்பே சாதுவிடம் அந்த புத்தகம் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக போடப்பட்டது என்றும், எனவே இதற்கு மறுபதிப்பு தேவையில்லை என்றும் கூறியதை யோகியிடம் நினைவு கூர்ந்தான். பகவான், “ ஆமாம். இந்த மனிதர்கள் எவருடைய அனுமதியும் இன்றி இதனை செய்கின்றனர். இது குற்றம். அப்படித்தானே ? “ 

சாதுஜி : “ ஆமாம் மஹராஜ் . இது குற்றச்செயல். ஒரு புத்தகத்தை உரியவரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக்கூடாது. “ 

பகவான் : “ ஆமாம். இது குற்றச்செயல். இப்பொழுது என்ன செய்வது ? நீ எந்த வழியில் இதனை நிறுத்த இந்த பிச்சைக்காரனுக்கு உதவி செய்ய இயலும்? இந்தப்பிச்சைக்காரன் இந்த அழைப்பிதழை பார்த்ததில் இருந்து மிகுந்த மனக்குழப்பமும் கவலையும் அடைந்துள்ளான். விவேக்கும், நிவேதிதாவும் சரியான நேரத்தில் இங்கு வந்தனர். இந்தப் பிச்சைக்காரன் நிவேதிதாவிடம் உன்னை உடனடியாக அழைக்குமாறு சொன்னேன். இப்பொழுது நீ எந்த வகையில் இந்தப்பிச்சைக்காரனுக்கு உதவ இயலும்?” 

சாது : “ மஹராஜ் நான் உடனடியாக நேராகவே பாண்டிச்சேரிக்கு சென்று அங்கே சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுகிறேன். அவர்கள் இதனை அனுமதியின்றி செய்கிறார்கள் எனில், நான் அவர்கள் அச்சுப்பணியை  முடித்திருந்தாலும், புத்தக வெளியீட்டை நிறுத்துகிறேன்.“ 

பகவான் : “இந்தப் பிச்சைக்காரன் மிக நிச்சயமாக கூறுவான் அவர்கள் எந்த அனுமதியும் பெற்றிருக்க மாட்டார்கள். அதனை அவர்கள் அனுமதியோடுதான் செய்வதாக கூறினால், அவர்களிடம் அந்த அனுமதியை காட்டுமாறு கோரி, அதனை நீ சரிபார். அவர்களிடம் அனுமதி ஏதும் இல்லையெனில் நீ நமது பலத்த எதிர்ப்பை காட்டு. அவர்களை நாம் கடுமையாக எதிர்ப்போம் என்பதையும் அவர்களிடம் கூறிவிடு.” 

சாதுஜி அதனை செய்வதாக ஏற்றுக் கொண்டார். பகவான் மேலும் சாதுவிடம் அவர்களிடம் மீண்டும் நாங்கள் இந்த நூலை மறுபதிப்பு செய்யமாட்டோம் என எழுத்து மூலம் தரச்சொல்வதோடு, அவர்களை புத்தக வெளியீட்டு விழா ரத்தானதாக பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு கேள். மேலும் யோகி சாதுவிடம் இது குறித்து நீ ஜஸ்டிஸ் ராஜூ அல்லது அருணாச்சலத்திடம் ஏதேனும் பேசவேண்டுமா என்று கேட்டார். சாது, தானே ராஜமாணிக்க நாடார், டாக்டர் K. வெங்கடசுப்பிரமணியன் மற்றும் ரவீந்திரபாண்டியன் ஆகியோரிடம்  பேசுவதாகவும் கூறினான். எனினும் மற்றவர்களிடமும் இது பற்றி தெரிவிப்பதாகவும் கூறினான்.

குரு சாதுவுடன் ஒரு மணி நேரத்திற்கு இது குறித்து விவாதித்தார். மற்றவர்கள் வெளியே காத்திருந்தனர். அவர் சாதுவிடம் ரூ.200 கொடுத்து அதனை செலவுக்கு வைத்துக்கொள்ளுமாறு கூறினார். மேலும் அவர் சாது ஜெயந்தி விழாவிற்கான  பல்வேறு பணியில் இருக்கையில் சாதுவை தொந்தரவு செய்துவிட்டதாகவும் கூறினார். சாது பகவானிடம் இந்தப் பணி ஜெயந்தி விழாவை விட மிக முக்கியம், மற்றவர்கள் விழாவிற்கான பணியை பார்த்துக்கொள்வார்கள் என்றும் கூறினான். சாது பகவானிடம் ஜெயந்தி விழா குறித்தும், விவேக் எம்.இ. சேருவது குறித்தும் விளக்கினார். பகவான் எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். பின்னர் அவர் சாதுவின் தண்டத்தையும், தேங்காய் சிரட்டையையும் மந்திரித்து கொடுத்தார். யோகி தன் முன் இருந்த அத்தனை பழங்களையும் எடுத்து நிவேதிதாவிடம் பை நிறைய கொடுத்தார். மீண்டும் அவர் நிவேதிதாவையும், விவேக்கையும் ஆசீர்வதித்து அனுப்பினார். நாங்கள் அவரிடமிருந்து விடைப்பெற்று உடுப்பி பிருந்தாவன் வந்து அங்கு திரு. ராமசந்திர உபாத்யாயாவை சந்தித்தோம். விவேக், பிரபா மற்றும் சுந்தரராமன் வீட்டிற்கு அவர்களோடு தங்க சென்றனர். சாதுவும், நிவேதிதாவும் உடுப்பி பிருந்தாவனில் தங்கினர். சசி எங்களை பிருந்தாவனில் சந்தித்தார். காலையில் நிவேதிதா வருவதற்குமுன், பகவான் சாதுவின் விலாசத்தை தேடிக்கொண்டிருந்தார் என்றும், ஜெயராமன் வந்ததும் பகவான் ஜெயராமனிடம் சாதுவின் முகவரி என்னவென்று கேட்டதாகவும், சாது உடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும் சொன்னார். அந்த நேரத்தில்தான் நிவேதிதாவும், விவேக்கும் அங்கே சென்றிருக்கிறார்கள். குரு தனது சீடனான சாதுஜி மீது கொண்டிருந்த நம்பிக்கையை அந்த நிகழ்வு உணர்த்தியது. 

அடுத்தநாள் சாதுஜியும், நிவேதிதாவும் பாண்டிச்சேரிக்கு சென்று திரு. ரவீந்திரபாண்டியன் அவர்களின் இல்லத்திற்கு சென்றனர். அவரது மனைவி பிரபா மற்றும் பிள்ளைகள் லஷ்மி பாய் மற்றும் அரவிந்த் போன்றோர் சாதுவையும், நிவேதிதாவையும் வரவேற்றனர். பிரபா, ரவீந்திரபாண்டியனுக்கு தொலைபேசியில் தகவல் சொல்ல அவர் உடனே வந்து சேர்ந்தார். சாது அவரிடம் பேசி குருவின் உத்தரவை தெரிவித்தார். அவர் மிகுந்த பணிவோடு தாங்கள் தவறிழைத்து விட்டதாக ஒப்புக்கொண்டார். சாதுவிடம் அவர் புத்தகத்தின் அச்சுப்பணி முடிந்துவிட்டதாகவும், அட்டைப்படம் மட்டுமே அச்சடிக்கப்பட வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார் . சாது அவரிடம் அச்சுப்பணியை நிறுத்துமாறும், புத்தக வெளியீட்டு விழாவை ரத்து செய்யுமாறும் கூறினார். அவர் ஒப்புக் கொண்டப்பின் அவரிடம் சாது கடிதம் ஒன்றை எழுத்து மூலமாக தருமாறு கூறினார். அவர் அதற்கு இணங்கினார். அவர் திரு.ராஜமாணிக்க நாடார் இந்த பணியை தன்னை மேற்கொள்ள சொன்னதாக கூறினார். அவர் ஒரு தந்தியை பகவானுக்கு அனுப்பி விட்டு அதன் நகலை சாதுவிடம், ஒரு கடிதத்துடன் கொடுத்தார். அவர் சாதுவையும், நிவேதிதாவையும் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அன்னை மற்றும் அரவிந்தர் சமாதிக்கு அவர்கள் தங்கள் பிரார்த்தனையை சமர்ப்பித்துவிட்டு அவரது இல்லத்திற்கு திரும்பவும் வந்தனர். சாது அவர்களை ஆசீர்வதித்து விட்டு சென்னைக்கு மாலையில் திரும்பினார். சாதுஜி, திரு. AR.PN. ராஜமாணிக்கம் அவர்களை தொலைபேசியில் அழைத்தார். அவர் சாதுவின் இல்லத்திற்கு மாலை பிரார்த்தனைக்கு வந்து சேர்ந்தார். சாது அவரிடம் பேசினார், அவர் தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டார், ஆனால் அவர் பழியை ரவீந்திரபாண்டியன் மீது சுமத்தினார். சாதுஜி ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களிடமும் பேசினார். வியாழக்கிழமை நவம்பர் 26 கலையில் சாதுவிற்கு டாக்டர். K. வெங்கடசுப்பிரமணியம் அவர்களிடம் இருந்து தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. சாது ஜஸ்டிஸ் ராஜூவிடமும் பேசினார். அதன் பிறகு சாது ஒரு விரிவான கடிதம் ஒன்றை பகவானுக்கு எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

இந்த சாது பாண்டிச்சேரிக்கு நேற்று காலை சென்றடைந்து நேரடியாகவே திரு. ரவீந்திரபாண்டியன் அவர்களின் இல்லத்திற்கு சென்றேன். அவரது மனைவி அவரை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அழைக்க அவர் வந்து இந்த சாதுவை வரவேற்றார். அவர் மிகவும் கருணையோடும்  அன்புடனும் நடந்து கொண்டார். இந்த சாது அவரிடம் நீங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழை பெற்றுக் கொண்டதாகவும், இந்த புத்தகத்தை மறுபதிப்பு செய்ய திரு. ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் அவர்களிடம் ஏதேனும் அனுமதி பெறப்பட்டதா என நீங்கள் அறிய விரும்புவதாகவும் கூறினேன். அவர் எந்த அனுமதியும் நூலின் ஆசிரியரிடம் பெறப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டதோடு அவர் ஆல் இந்தியா பிரஸ்ஸில் புத்தகத்தை அச்சிடுவதாகவும் கூறினார். இந்த சாது அனுமதி பெறப்படாமல் புத்தகத்தை இவ்விதம் மறுபதிப்பு செய்வது ஒரு குற்றச்செயல் என்று நீங்கள் என்னிடம் அவர்களுக்கு தெரிவிக்கச் சொன்னதையும், உங்களின் பலத்த எதிர்ப்பு இத்தகைய செயலின் மீது இருப்பதையும் அவர்களுக்கு உணர்த்தினேன். அவர் திரு. ராஜமாணிக்க நாடார்  சிலநாட்களுக்கு முன் தங்களிடம் அனுமதி பெற்றதாக கூறியதனால் இந்தப் பணியை தான் மேற்கொண்டதாகவும் இந்த தெய்வீக காரியத்திற்கு எந்தவித எதிர்ப்பும் இருக்காது என தான் நினைத்ததாகவும் கூறினார். இந்த சாது அவரிடம் மிகத் தெளிவாக, ட்ரூமன் கெய்லரின் புத்தகத்தை அவருடைய அனுமதி இல்லாமல் மறுபதிப்பு செய்ய, நீங்கள் அனுமதி வழங்கவில்லை என்றும், நல்லெண்ணத்துடன் செய்யப்படும் செயல்களாக இருந்தாலும், அனைத்து சட்ட திட்டங்களையும் பின்பற்றுவது அவசியம் என்றும் உணர்த்தினேன். அவர் தனது தவறான செய்கைக்கு வருத்தம் தெரிவித்ததோடு புத்தகத்தின் அச்சுப்பணி மற்றும், புத்தக வெளியீட்டு விழாவையும் ரத்து செய்வதாக தெரிவித்தார். நான் அவர்களிடம் தாங்கள் கூறியதைப் போலவே புத்தக வெளியீடு நடக்காது என்ற பொது அறிவிப்பை செய்திதாள்களிலும் வெளியிடுமாறும், கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதி தருமாறும் கூறினேன். நாங்கள் அவரது இல்லத்தில் அமர்ந்திருந்த போதே அவர் தனது அலுவலகத்திற்கு சென்று உங்களுக்கு தந்தி ஒன்றை அனுப்பினார் அதன் நகலையும், அதே விவரங்களை கடிதம் மூலமாகவும், தந்தார். இத்துடன் அந்த கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. 

நான் சென்னை திரும்பியவுடன் மாலையில், திரு.  AR.PN. ராஜமாணிக்கம் அவர்களை தொலைபேசி மூலம் அழைத்து, எனது இல்லத்திற்கு உடனடியாக வரச்சொன்னேன். அவர் வந்து என்னை சந்தித்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, சிலகாலங்களுக்கு முன் அவர் டாக்டர். K. வெங்கடசுப்பிரமணியன் அவர்களை உங்களிடம் ட்ரூமன் கெய்லரின் புத்தகத்தை மறுபதிப்பு செய்ய அனுமதி கேட்டு அனுப்பியதாகவும், அப்போது நீங்கள் அதற்கு அனுமதி அளித்ததாகவும், அதனை அவர் திரு.ரவீந்திரபாண்டியனிடம் கூறியதாகவும், ஆனால் பின்னர் புத்தகம் அச்சிட ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் திரு. சங்கர்ராஜூலு அவர்களை உங்களிடம் அனுப்பிய பொழுது, நீங்கள் அனுமதி மறுத்ததாகவும் கூறினார். இறுதியாக நடந்த அனுமதி மறுப்பு தகவல் திரு. ரவீந்திரபாண்டியன் அவர்களுக்கு தெரியாமல், திரு. ராஜமாணிக்கம் நாடார் அவர்களிடமும் கலந்தாலோசிக்காமல்,  அச்சிட ஆரம்பித்து விட்டதாகவும் அவர் கூறினார். மேலும் திரு. நாடார் இரு தினங்களுக்கு முன்னர் பாண்டிச்சேரி சென்றபோதுதான் புத்தகம் அச்சிடப்பட்டு வரும் தகவல் அறிந்ததாகவும், உங்களின் அனுமதியின்றி இவ்விதம் செய்தல் தவறு என்று கூறியதாகவும் திரு. நாடார் கூறினார். இந்த சாது நாடாரிடம், நீங்கள் எவருக்கும் ட்ரூமன் கெய்லர் புத்தகத்தை மறுபதிப்பு செய்ய அனுமதி தரவில்லை என்றும், இவ்விதமான செயல்களை உங்களிடம் நேரடியாக பேசிய பின்னரே மேற்கொள்ள வேண்டும் என கூறியப்பின், அதனை ஒப்புக்கொண்ட திரு.ராஜமாணிக்க நாடார், திரு .ரவீந்திரபாண்டியன் அவர்களின் மீது பழிசுமத்தி, அவர் செய்தது தவறு என்று கூறியதோடு, அவர் உங்களுக்கு இது குறித்து மன்னிப்பு கேட்டு எழுதுவதாகவும் கூறினார். 

இந்த சாது டாக்டர். வெங்கடசுப்பிரமணியனை  தொடர்பு கொள்ள முயன்றான். ஆனால் அவர் டெல்லி சென்றிருந்தார். இன்றுகாலை டாக்டர். வெங்கடசுப்பிரமணியன் சென்னை திரும்பிய பிறகு இந்த சாதுவை தொடர்பு கொண்டார். நான் அவரிடம், புத்தகம் மறுபதிப்பு குறித்து திரு. நாடாரின் சார்பில், அவர் தங்களிடம் தொடர்புகொண்டு அனுமதி பெற்றாரா என்று கேட்டபோது அவர் முற்றிலும் அதனை மறுத்தார். மேலும் தனக்கு இது குறித்த எந்த விவரமும் தெரியாது என்றும், நாடார் சொல்வது முற்றிலும் தவறு என்றும் கூறினார். மேலும் அவர் ஆசிரியரின் அனுமதியின்றி வெளியிடுவதை கண்டித்தார். இது குறித்து நாடாரிடம் பேசுவதாகவும் குறிப்பிட்டார். 

எப்படி ஆயினும், அதிகாரபூர்வமற்ற முறையில் நடக்கும் புத்தக மறுபதிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த சாதுவும் சம்பந்தப்பட்ட அனைவரையும் எச்சரித்துவிட்டான். இத்தகைய சூழல்கள்  ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தங்களுடைய அனுமதியின்றி இத்தகைய செயல்கள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்தேன்.

இந்த சாது மாண்புமிகு நீதிபதிகளான ஜஸ்டிஸ் அருணாச்சலம் மற்றும் ராஜூ அவர்களிடமும் இது குறித்து தகவல் தந்து வைத்துள்ளான். 

திரு. ரவீந்திரபாண்டியன் அவர்களின் தந்தியை நீங்கள் ஏற்கனவே பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன். அவர் நடந்த அனைத்திற்கும் வருத்தம் தெரிவித்ததோடு, உங்களின் மன்னிப்பிற்காகவும் பிரார்த்தித்தார். 

உங்கள் ஆசியாலும், கருணையாலும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் விவேக் எம்.இ (கட்டமைப்பு) சேர்ந்துவிட்டு இன்று காலை திரும்பினான். அவனது கல்லூரி டிசம்பர் – 14ல் திறக்கப்பட இருக்கிறது. அவன் ஜெயந்தி விழாவிற்கு இங்கே இருப்பான். அகண்ட ராமநாமத்தில் பங்கேறக பலர் விருப்பப்பட்டு முன்வந்து தங்கள் பெயர்களை பதிவு செய்திருக்கின்றனர். திரு. பாலகுமாரன் இன்று காலை இந்த சாதுவை சந்தித்து அவரது இல்லத்தில் ஹோமங்களை நடத்துவது குறித்து சில வழிக்காட்டுதல்களைக் கேட்டார். 

பிரார்த்தனைகளுடனும், நமஸ்காரங்களுடனும்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். “

வியாழக்கிழமை மாலை குன்றத்தூரில் நடந்த ராம்நாம் சத்சங்கத்தில் பல பக்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் இந்த சாது உரையாற்றினான். 

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி அதிகாலையில் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் – 1, 1992ல் அகண்ட ராமநாம ஜெபத்துடன் தொடங்கியது. சுரேஷ் ஹோமங்களை நடத்தினார். வேதபாடசாலை வித்யார்த்திகள் வேத கோஷங்களை முழங்கினர். திரு. வெங்கடராமன் சாமகானம் பாடினார். முற்பகலில், ஜஸ்டிஸ் T.S.  அருணாச்சலம் கூட்டத்தினரிடையே உரையாற்றினார். வசந்தா குழுவினரின் பஜனை, ஜன கல்யாண் உறுப்பினர்களின் பஜனை, மற்றும் ஜவந்தி நாதனின் உரை போன்றவை நடைப்பெற்றது. மதியம், தெற்கு ரயில்வே பணியாளர்களின் குவாட்டர்ஸை சேர்ந்த பக்தர்கள், அண்ணாநகர் பக்தர்கள் குழுவினர், மற்றும் திரு. கல்யாணராமனின் குழுவினர் பஜனை நடத்தினர். மாலை 6 மணிக்கு அகண்ட ராமநாமம் முடிந்தப்பின் விழாவின் நிறைவு நிகழ்ச்சி நடந்தேறியது. திரு. D.S. சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சுவாமி ராக்கால் சந்திர பரமஹம்சா, சுவாமி விஸ்வநாத் லிமாயே, தங்காடு மோகன் மற்றும் சாதுஜி போன்றோர் கூட்டத்தினரிடையே உரையாற்றினர். திரு. சுகவனம் தனது பகவான் பற்றிய கவிதைகளை பகிர்ந்தார். தென்னாப்பிரிக்க தமிழ் வேதிக்  சொசைட்டியின் தலைவர், திரு.N.C.நாயுடு, விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். டாக்டர். ராதாகிருஷ்ணன் நன்றியறிவித்தார். அடுத்தநாள் காலையில் நிவேதிதா, பிஹாரில் இருந்து வந்திருந்த பக்தர்கள் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் காயத்ரி,  ஆகியோர் திருவண்ணாமலைக்கு சென்று பகவானிடம் விழா பற்றிய முழுமையான தகவல்களை தெரிவித்தனர். ‘விவேகானந்த கேந்திர பத்திரிகா’வை அவள் யோகி இடம் சேர்ப்பித்தாள். பகவான் அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதித்து, பிரசாதங்களை நிவேதிதா மூலம் அனுப்பி வைத்தார். 

சனிக்கிழமை, டிசம்பர் 19, 1992 அன்று சாது, பகவானுக்கு, கடிதம் ஒன்றை, தனது 23 ஆம் தேதி பயணம் குறித்து எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

‘தத்துவ தர்சனா’வின் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி சிறப்பு மலர் இப்போது அச்சில் உள்ளது. அது தயாரானவுடன் அதன் முதல் பிரதியை எடுத்துக்கொண்டு புதன்கிழமை டிசம்பர் 23 ஆம் தேதி 1992ல் நாங்கள் திருவண்ணாமலைக்கு வர இருக்கிறோம். 

சந்த் ஸ்ரீ வி்ஸ்வநாத் லிமாயே என்ற சுவாமிகள் 10 அடி உயர ஸ்ரீ ராமர் சிலையை ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்ததில் பாரத் ஏகாத்மதா பவனில் நிறுவுவதற்கான பணியை மேற்கொண்டு இருக்கிறார். அவரும் எங்களுடன் வர இருக்கிறார். அவர் வால்மீகி ராமாயணத்தை ஆங்கிலத்தில் இரண்டு பாகங்களாக  எழுதியுள்ளார். அதனை அவர் தங்கள் புனிதமான பாதங்களில் சமர்பித்து ஆசிபெற நினைக்கிறார். 

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா ஏற்பாடு செய்ய எங்களுக்கு பெரிதும் உதவிய திருமதி மற்றும் திரு.N.S. மணி, அமெரிக்காவில் ஒரு கணிணி பொறியியல் மாணவரான அவரது மகன் திரு. ஸ்ரீனிவாஸ், ஆகியோரும் எங்களுடன் உங்கள் ஆசியை பெற வருகிறார்கள். உங்கள் தரிசனத்திற்கு நாங்கள் பிரார்த்திக்கிறோம். 

செவ்வாய்க்கிழமை டிசம்பர் 22, 1992 அன்று குமாரி நிவேதிதா காஞ்சன்காடு செல்கிறாள். அவள் ஆனந்தாஸ்ரமத்தில் பத்து நாட்கள் தங்க இருக்கிறாள். அவளும், திருமதி. பாரதியும் தங்களது நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். சிரஞ்சீவி விவேக், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சென்னைக்கு திரும்பும் முன், திருவண்ணாமலைக்கு 24 ஆம் தேதி அன்று வருவான். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். “

நிவேதிதா, ஆனந்தாஸ்ரமத்திற்கு செல்வதற்கு முன் பகவானின் ஆசியைப் பெற, சுப்பிரமணி என்ற பக்தர் உடன், திருவண்ணாமலைக்கு ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 20 அன்று சென்று, அடுத்தநாள் திரும்பி வந்தாள். பின்னர் செவ்வாய்க்கிழமை டிசம்பர் 22 அன்று அவள் ஆனந்தாஸ்ரமத்திற்கு பயணித்தாள். 

டிசம்பர் 23, 1992 அன்று சாதுஜி திருமதி. பாரதி, திரு. N.S. மணி மற்றும் சுவாமி விஸ்வநாத் லிமாயே போன்றோர் காரில் சென்று, மதியம் யோகியின் இல்லத்திற்கு சென்று சேர்ந்தோம். திருமதி. பவதாரிணி மற்றும் பல பக்தர்கள் அங்கே இருந்தனர். பகவான் சாதுவை உள்ளே வரச.சொல்லி அவரிடம் நேரம் என்ன என்று கேட்டார். சாது நான்கு மணி என்றார். யோகி சாதுவை கோயிலுக்குச் சென்று ஐந்து மணிக்கு வருமாறு கூறினார். நாங்கள் கோயிலுக்குச் சென்று 5 மணிக்கு யோகியின் இல்லத்திற்கு வந்தடைந்தோம். அவர் அனைத்து பக்தர்களையும் அனுப்பி வைத்து விட்டு எங்களை வரவேற்று அமரவைத்தார். சாது யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி சிறப்பு மலரான ‘தத்துவ தர்சனா’ மற்றும் லிமாயேஜியின் இராமாயணம் போன்றவற்றை பகவானின் முன் வைத்தனர். பல பக்தர்கள் வந்தும், சென்றவண்ணமும் இருப்பதன் காரணமாக  தன்னால் யாரிடமும் ஓய்வாக அமர்ந்து எதையும் பேச இயலவில்லை என யோகி  புகார் அளித்தார். அவர் அனைவரையும் அனுப்பிவிட்டு எங்களிடம் திரும்பினார். பகவான் திரு லிமாயே பற்றி வினவினார். சாது, திரு. லிமாயே மற்றும் மணியை அறிமுகப்படுத்தினார். திரு. லிமாயே, ராஷ்ட்ரிய சுயம்சேவக சங்கத்தில், உ.பி.யின் மாநில பிரசாரக்காக இருந்ததையும், காஞ்சி காக்கோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் தீக்ஷை பெற்றபின் தனது பணிகள் குறித்தும், பகவானிடம் ஹிந்தியில் பேசினார். அவர் பகவானின் ஆசியை வேண்டினார். யோகி, “என் தந்தையின் ஆசிகள்” என்றார். யோகி பின்னர் திரு. லிமாயே அவர்களின் படைப்புக்களை ஒரு பார்வை பார்த்தார்.  பின்னர் ‘தத்துவ தர்சனா’ இதழினை ஒரு பார்வை பார்த்தார். யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவின் புகைப்படங்களை பார்த்தார். சாதுஜி திரு. மிசேல் கோகே (ஷிவ் சங்கர்) எழுதிய கடிதத்தை பகவானிடம் காட்டினார். பகவான் சாதுவை அந்த கடிதத்தை படிக்குமாறு கூறினார். அதில் மிசேல், யோகி ராம்சுரத்குமார் குறித்த ஒரு நூலை பிரென்ச் மொழியில் எழுத வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். பகவான் சாதுவிடம், “ நீ அவருக்கு அவர் அதனை செய்யலாம் என்று எழுதி விடு“ என்றார். சாது பகவானிடம் திரு.V.V. நாராயணசுவாமி எழுதிய கடிதம் பற்றியும் அவர் தன்னை கோயம்புத்தூர் வர கேட்டிருப்பதையும் கூறினார். சாது பகவானிடம் சக்தியின் வீட்டில் நடக்க இருக்கும் சத்சங்கம் மற்றும் காஷ்மீரின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட வேண்டி சென்னையில் நடத்த இருக்கும் சண்டி ஹோமம் குறித்தும் கூறினோம். யோகி சண்டி ஹோமம் குறித்த முடிவுகளை எங்களையே எடுத்துக்கொள்ளுமாறு கூறினார். சாது நிவேதிதாவின் காஞ்சன்காடு பயணம் பற்றி கூறினார். யோகி யாருடன் நிவேதிதா சென்றிருக்கிறாள் என்று கேட்டார். சாது, “ லலிதா “ என்றார். 

யோகி பத்து பிரதி ‘தத்துவ தர்சனா’வை எடுத்துக்கொண்டார். அவர் ஒரு பிரதியை சசியிடமும், இன்னொன்றை சுந்தரராமன் இடமும் தந்துவிட்டு மீதமுள்ளவற்றை தன்னிடம் வைத்துக்கொண்டார். அவர், வேறு எட்டு பிரதிகளில் தனது கையொப்பத்தை இட்டு இந்த சாதுவிடம் நமது நூலகத்திற்காக கொடுத்தார். சாது பகவானிடம் லீ யின் பாடல்கள் தவிர அவரது கட்டுரையும் இந்த இதழில் வெளியிட்டு இருப்பதாக கூறினார். அந்த நேரத்தில் ஒரு கூட்டமாக பக்தர்கள் யோகியின் வாசலை அடைந்தனர். பகவான் சங்கடத்திற்கு உள்ளானதாக உணர்ந்தார், அவரால் அமர்ந்து இயல்பாக பேச இயலவில்லை. சாதுஜி பகவானிடம் தான் விடைப்பெற்று கொண்டு அடுத்தநாள் காலை 10 மணிக்கு வருவதாக கூறினார். பகவான், “வேறு வழியில்லை, நாளை நாம் சந்திப்போம்“  என்று பதிலளித்தார். சாது விவேக் மற்றும் மஹேந்திராவும் நாளை எங்களோடு இணைவார்கள் என்றார். அவர் பரவாயில்லை என்றார். சாதுவும் அவரது குழுவினரும் பிருந்தாவனுக்கு வந்து தங்கினர். பகவானின் பக்தர்கள் சாதுவை வந்து சந்தித்தனர் அவர்களுக்கு பகவானின் படத்தையும், புத்தகங்களையும் பிரசாதமாக வழங்கினார். விவேக் இரவில் வந்து சேர்ந்தான்.. 

அடுத்தநாள் காலை சாதுஜி பக்தர்களோடு அருணாச்சல கிரிவலத்திற்கு சென்றதோடு சேஷாத்திரி சுவாமி ஆசிரமம், ரமணாச்ரமம், மற்றும் அடி அண்ணாமலை போன்ற இடங்களுக்கு சென்று, பிறகு, பகவானுக்கு விருப்பமான டீக்கடைக்கு  சென்று டீ அருந்தினர். பின்னர், இடுக்குப்பிள்ளையார் கோயிலுக்குச் சென்று விட்டு, உடுப்பி பிருந்தாவனில் காலை உணவை மேற்கொண்டனர். பின்னர் யோகியின் இல்லத்திற்கு காலை 10 மணிக்கு அடைந்தனர். பகவான் எங்களை உள்ளே அழைத்தார். சாது, பாரதி, விவேக், மணி மற்றும் லிமாயே யோன்றோர் அமரவைக்கப்பட்டோம். அவர்தனது குழந்தைகளுடன் வந்திருந்த சாந்த சரஸ்வதி என்ற பக்தரை ஆசீர்வதித்து அனுப்பினார். யோகி திரு. லிமாயேஜி அவர்களின் முழுப்பெயரை கேட்டார், சாதுஜி, “ ஸ்ரீ விஸ்வநாத் லிமாயே “ என்றார். திரு லிமாயே ராமேஸ்வரத்தில் அமைய இருக்கும் ராமர் கோயிலின் உத்தேச வரைப்படத்தை பகவானின் காலடியில் சமர்ப்பித்தார். பகவான் அதனை ஆர்வத்தோடு பார்த்து ஆசீர்வதித்தார். அவர் விவேக்கிடம் நிவேதிதா எங்கே என வினவினார். விவேக் பகவானிடம் நிவேதிதா காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்திற்கு சென்றிருப்பதாக சொன்னான். அவர் பாரதியிடம் மலர்களை வழங்கினார். திரு.லிமாயே மறுபடியும் குருவின் ஆசீர்வாதங்கள் வேண்டி பிரார்த்தித்தார். குரு அவரிடம் தான் ஒரு பூஜயம் என்றும் தனது தந்தையே அனைத்தும் என்றார். தன்னிடம் வழங்க எதுவுமில்லை என்றார். திரு. லிமாயே முன்பு மக்கள் தாங்கள் அவருக்கு ஏதேனும் தரவேண்டும் என்று நினைத்தனர் என்றும், ஆனால் அவர்கள் இப்பொழுது நீங்கள் ஏதேனும் தருவீர்கள் என அறிந்து கொண்டதாகவும் கூறினார். பகவான் உரக்க சிரித்தார். மேலும் யோகி காலையில் திரு.ஜெயராமனிடம் ஸ்ரீ லிமாயேஜி எழுதிய ராமாயணத்தை காண்பித்து அதை படிக்க நினைவூட்டுமாறு கூறியதாக சொன்னார். பின்னர் அவர் கூறத் துவங்கினார்: “ரங்கராஜா, நீ இந்த சுவாமியிடம்  கூறு, இந்தப்பிச்சைக்காரன் பப்பா ராம்தாஸ் அவர்களின் பாதங்களில் 1952ல், தீக்ஷைக்குப்பின் ஏழு நாட்கள். கழித்து, இறந்துவிட்டான் என்று. அனைத்தும் தந்தையே, தந்தை மட்டுமே இருக்கிறார். அவர் எங்கும் இருக்கிறார். அனைவரும் அவருள் இருக்கிறார்கள்.” ஸ்ரீ லிமாயே பகவானிடம் தந்தை எப்போதும் மகாத்மா மற்றும் பகவானைப் போன்றவர்களின் வடிவத்தில் வருவார்கள் என்றார். யோகி மீண்டும் சிரித்தார். யோகி தான் இருக்கமாட்டேன், ஆனால் தந்தை மட்டிலும் இருப்பார். எனவே தான் ஆசி வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை, தந்தை மட்டுமே ஆசீர்வதிக்க முடியும். என்றார். யோகிஜி தன் முன்னால் இருந்த மலர்கள், பழங்கள் மற்றும் தூசினை காட்டி அனைத்தும் தந்தையே என்றார். பின்னர் அவர், லா குடியா….” எனத்துவங்கும் கபீரின் பாடலை பாடினார். திரு.லிமாயே இந்த பாடல் மீராவுடையதாக இருக்கலாம், ஏனெனில் இது ஒரு பெண் பாடியது போல் உள்ளது, என்றார். அதற்கு பகவான் ஆண்கள் கூட பெண்பக்தர்களைப் போல் பாடல்களை எழுதலாம். இது கபீருடையதுதான் என்றார். இந்த பாடலின் அர்த்தம் ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தை அளக்கச்சென்று அந்த கடலில் கரைந்து ஒன்றானது என்பதே ஆகும் என்றார். பகவான் மகாயோகி ஸ்ரீ அரவிந்தர் பற்றியும் குறிப்பிட்டார். 

பக்தர்கள் குவியத் தொடங்கினர். பகவான் சாதுவுடன் சில முக்கியமான விஷயங்களை பேச விரும்பி அவரை வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்றார். அந்த உரையாடலுக்குப்பின் பகவான் சாதுவிடம், தான் குறிப்பிட்ட விஷயம் குறித்து சிலரிடம் தனது சார்பாக பேசுமாறு கூறினார். பின்னர் நாங்கள் வெளியே வந்து மற்றவர்களோடு இணைந்தோம். சாதுவுடன் வந்த மஹேந்திராவை சாது பகவானுக்கு அறிமுகப்படுத்தினார். பகவான் அவரை உள்ளே வர அனுமதித்தார். மீண்டும் 11.40 மணிக்கு யோகி சாதுவை உள்ளே வருமாறு கூறி தனியே அழைத்துச் சென்று, சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்தப்பின் இருவரும் வெளியே வந்தனர். அவர் எங்களை வழியனுப்பினார். சாது பகவானிடம், தானும் தனது குழுவினரும் சென்னைக்கு திரும்பும் முன் திருக்கோயிலூர் செல்ல இருப்பதாக கூறினார். அவர் இரண்டு பெரிய பொட்டலங்கள் நிறைய கல்கண்டை பாரதியிடம் தந்து பிரசாதமாக மாலையில் சாதுவின் இல்லத்தில் நடைபெறும் சத்சங்கத்திற்கு வரும் பக்தர்களிடம் வழங்குமாறு கூறினார். மற்றவர்கள். அனைவருக்கும் பழங்களை வழங்கினார். சாதுவிடம், “ இந்தப் பிச்சைக்காரனின் பணியை செய் “ என்றார். பின்னர் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து வழக்கம்போல் ஆசீர்வதித்து தந்தார். பின்னர் எங்களை வழியனுப்பினார். பிருந்தாவனில் மதிய உணவை முடித்துவிட்டு நாங்கள் ஸ்ரீ  ஞானானந்தா தபோவனத்திற்கு சென்றோம். அங்கே திரு.D.S. சிவராமகிருஷ்ணன் எங்களை வரவேற்றார். வள்ளியம்மை ஆச்சி எங்களை வந்து பார்த்தார். நாங்கள் சுவாமி நித்யானந்தா, திரு. முத்து வீரப்பன் போன்றவர்களை சந்தித்தோம். நாங்கள் வள்ளியம்மை அவர்களின் காட்டேஜ்க்கும் சென்றோம். உலகளந்த பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு, நாங்கள் சென்னைக்கு இரவில் வந்து சேர்ந்தோம்.

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 25, 1992 அன்று சாதுஜி திரு. K. வெங்கடசுப்பிரமணியன் அவர்களின் இல்லத்திற்கு சென்றிருந்தான். அவரும் அவரது மனைவியும் இந்த சாதுவை வரவேற்றனர். இந்த சாது சிலமணிநேரங்கள் டாக்டர். வெங்கடசுப்பிரமணியன் அவர்களிடம் பகவான் கூறிய விஷயங்களை குறித்து விவாதித்து விட்டு அடுத்தநாள் காலை பகவானுக்கு கடிதம் ஒன்றை எழுதினான்: 

”பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

உங்கள் கருணையால் இந்த சாதுவிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டான். டாக்டர் K. வெங்கடசுப்பிரமணியன் டெல்லியில் இருந்து நேற்று காலையே திரும்பி வந்தார். இந்த சாது மாலையில் அவரை சந்தித்தான். அவரும், அவரது மனைவி, மற்றும் மகள் மிகுந்த கருணையோடு இந்த சாதுவை வரவேற்றனர். 

அவர் தனியாக இருக்கும்போது இந்த சாது அவரிடம் உங்கள் தகவலை தெரிவித்தேன். அவர் உடனடியாக, உங்கள் சொல் ஒவ்வொன்றையும் இனிமேல் அவர் அப்படியே பின்பற்றுவதாகவும், திரு.ராஜமாணிக்க நாடார் அவர்களின் வற்புறுத்தலின் பேரில் மட்டுமே இவ்விதமான தவறுகள் நடந்ததாகவும், இனி அவ்விதம் நடக்காது என்றும் கூறினார். அவர் என்னை அவரது படுக்கையறைக்கு அழைத்துச் சென்று அங்கே உங்களது படத்தைக்காட்டி, “யோகி ராம்சுரத்குமார் எங்கள் குடும்பத்தின் தலைவர். நான் அவர் கூறுவதை அப்படியே பின்பற்றுவேன், ” என்றார். அவர் இந்த உறுதியை உங்களிடம் தெரிவிக்க சொன்னார். அவரும் இரண்டொரு நாட்களில் உங்களுக்கு கடிதம் எழுதுவார் என்றார். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்.” 

சிரஞ்சீவி விவேகானந்தன் மற்றும் டாக்டர் ராஜலட்சுமி மாண்புமிகு நீதியரசர் வெங்கடசாமி அவர்களை டிசம்பர் – 31 அன்று சந்தித்து அவரை ஜனவரி – 12, 1993 அன்று சுவாமி விவேகானந்தர் ஜெயந்திக்கு தலைமை விருந்தினராக அழைத்தார்கள். ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 3, 1993 அன்று ஒரு சிறப்பு ராம்நாம் சத்சங்கம் திருமதி. சக்தி அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது. அடுத்தநாள் நிவேதிதா காஞ்சன்காட்டில் இருந்து திரும்பி வந்தாள். பகவானின் ஒரு உதவியாளரான யோகராஜ் மாலையில் நடந்த பிரார்த்தனைக்கு வந்தார். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் விவேகானந்தா ஜெயந்திக்கான ஏற்பாடுகளும் தேசிய இளைஞர் தினம் பேச்சுப்போட்டிக்கான பணிகளும் முழு வீச்சில் நடைப்பெற்றது. ஒரு சுழற் கேடயம் ஜூனியர் அளவிற்கான போட்டிக்கு தயாராக இருந்தது. சாது பகவானுக்கு ஜனவரி 8, 1993 அன்று ஒரு கடிதம் எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

உங்கள் கருணையாலும் ஆசியாலும் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினரால், செவ்வாய்க்கிழமை, 12 ஆம் தேதி ஜனவரி 1993, அன்று திருவல்லிக்கேணி இந்து சீனியர் உயர்நிலைப்பள்ளியின் விவேகானந்தா ஹாலில், மாலை 6 மணிக்கு நடைப்பெற இருக்கிறது. பத்திரிக்கைகள் இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளன. இத்துடன் பத்திரிக்கை செய்தியை இணைத்துள்ளோம். மாண்புமிகு நீதியரசர்  திரு K. வெங்கடசாமி இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்க இருக்கிறார். 

யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயத்திற்கான, மாணவர்களுக்கிடையேயான சுவாமி விவேகானந்தர் குறித்த போட்டி ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 10, 1993 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயம் ஜூனியர் அளவிற்கான போட்டிகளுக்கு உரியதும் தயாராக உள்ளது. நாங்கள் உங்களிடம் பரிசுப் பொருட்களை திங்கள்கிழமை ஜனவரி 11, 1993 அன்று கொண்டுவந்து ஆசிபெற நினைக்கிறோம். நாங்கள் உங்களின் தரிசனத்திற்கு பிரார்த்திக்கிறோம். 

இந்த சாது, பாண்டிச்சேரியில் இருந்து கடிதம் ஒன்றை வரப்பெற்றான். அதற்கு பதில் எழுதும் முன் உங்களின் வழிகாட்டுதலை வேண்டுகிறேன். 

குமாரி நிவேதிதா காஞ்சன்காட்டில் இருந்து, பன்னிரண்டு நாட்கள் தங்குதலுக்கு பிறகு, திங்கள்கிழமை அன்று வந்துள்ளாள். அவள் தனது பயணம் குறித்து நேரடியாக வந்து தங்களிடம் பகிர விருப்பம் கொண்டுள்ளாள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்

சாது ரங்கராஜன் 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

சுவாமி விவேகானந்தர் குறித்த தேசிய இளைஞர் தின பேச்சுப்போட்டி  மாநகர் மாணவர்களுக்கு ஜனவரி 10 தேதி திருவல்லிக்கேணி இந்து சீனியர் செகண்டரி பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் நடுவர்களாகவும், விவேகானந்தா கல்லூரியின் மூத்த மாணவர்கள் விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆகவும் கொண்டவர்களாகவும் பணிபுரிந்தனர் திங்கள்கிழமை, ஜனவரி 11, 1993 அன்று சாதுஜி திரு.N.S.மணி அவர்களுடன் இணைந்து திருவண்ணாமலையில்  பகவானின் இல்லத்திற்கு காலை 10.30 மணிக்கு சென்றனர். அவர் எங்களை வரவேற்றார். நாங்கள் சுழல் கேடயம் மற்றும் மாணவர்களுக்கான பரிசுகளை அவர் முன் வைத்தோம். பகவான் அவைகளை கூர்மையாக உற்று நோக்கினார். பின்னர் அவர் அங்கே கூடியிருந்த மக்களை ஆசீர்வதித்து அவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் அனைவரும் சென்றபிறகு பகவான் சாதுவிடம் திரும்பி, “இந்தப்பிச்சைக்காரன்  உனக்கு அளித்த பணியை செய்தமைக்காக உனக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறான். நாங்கள். உனது கடித்த்தை பெற்ற பின்னரே அவரது (டாக்டர். K. வெங்கடசுப்பிரமணியன்) கடிதத்தைப் பெற்றோம். நீ மிக சிறந்த பணியை செய்திருக்கிறாய்.” அவர் எழுந்து உள்ளே சென்று, லீ லோசோவிக் எழுதிய கடிதங்களைக் கொண்டு வந்து சாதுவிடம் கொடுத்தார். மீண்டும் நிறைய மக்கள் வந்து சேர்ந்தனர். அவர் ஒருவர்பின் ஒருவராக அனுப்பத் தொடங்கினார். சித்தூரைச் சேர்ந்த கனவான் ஒருவர் ஒரு கருவூல அதிகாரி மற்றும் ஒரு திரைப்பட  தயாரிப்பாளருடன் வந்திருந்தார். அந்த திரைப்பட தயாரிப்பாளர் பகவானிடம் தான் 20 லட்சம் செலவழித்து ஒரு படம் எடுத்ததாகவும் அந்த படத்தை முடிக்க முடியாதமையால் தனக்கு 20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். பகவான் அந்த படத்தின் பெயரைக் கேட்டார். அந்த திரைப்பட தயாரிப்பாளர் படத்தின் பெயரைக் கூற பகவான் மிகவும் அமைதியாக, இன்னொரு 20 லட்சம் செலவு செய்து படத்தை முடி என்று கூறி அனுப்பி வைத்தார். திரு. பாலகுமாரன் அனுப்பி வைத்த ஒரு தம்பதியினரை யோகி ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். சுவாமிநாதன் யோகியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். யோகி ராம்சுரத்குமார் ஜூனியர் சுழல் கேடயத்தை கவனித்து அதில் அருகருகே இருக்கும் சுவாமி விவேகானந்தர் மற்றும் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ப்ளைவுட் கட்அவுட்களைபார்த்து, “ நீ இந்தப் பிச்சைக்காரனின் படத்தை சுவாமி விவேகானந்தர் பக்கத்தில் போட்டிருக்க கூடாது. பெரும் மகானாக உலகளவில் அறியப்பட்ட விவேகானந்தா எங்கே, இந்த அழுக்குப்பிச்சைக்காரன் எங்கே !“ என்றார். சாதுஜி சிரித்தவாறே பதிலளித்தார், “இது யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினரால் வழங்கப்படுவதனால் பிள்ளைகளை விவேகானந்தர் பற்றி அதிகம் அறிந்து கொள்ளவும், உங்கள் புனிதத்தன்மையை அறிந்து கொள்ளவுமே வடிவமைக்கப்பட்டது குருவே” பகவான் கூறினார்: “சரி, இந்தமுறை செய்து விட்டாய், ஆனால் அடுத்தமுறை இவ்விதம் இந்தப் பிச்சைக்காரனின் படத்தை சுவாமி விவேகானந்தர் பக்கத்தில் போடாதே. ராமகிருஷ்ண மிஷனை சார்ந்தவர்கள் என்ன நினைப்பார்கள் ? “ 

பகவான் சாதுவை இல்லத்தின் உள்ளே அழைத்துச் சென்று மீண்டும் மீண்டும் அவனது தாழ்மையான பணிக்கு நன்றி தெரிவித்தார். சாது அவரிடம் தான் அவரது ஒரு கருவி மட்டும் தான் என்றார். பகவான் சாதுவின் கடிதத்தை தேடி எடுத்தார். அவரால் டாக்டர் K. வெங்கடசுப்பிரமணியன் கடிதத்தை கண்டெடுக்க  முடியவில்லை. சாது பகவானிடம் பாண்டிச்சேரியில் இருந்து ட்ரூமன் கெய்லர் அவர்களின் முகவரியை கேட்டு ஒரு கடிதம் வந்திருப்பதாகவும் அதற்கு என்ன பதில் அளிக்கலாம் என்று கேட்டதற்கு யோகி முகவரியை தரவேண்டிய அவசியமில்லை என்றார். சாதுஜி அதனை ஏற்று, அதற்கேற்றாற் போல் பதில் எழுதுவதாக கூறினார். பின்னர் யோகி வெளியே வந்து சுழல் கேடயம் மற்றும் பரிசுகளுக்கு முன்னால் அமர்ந்து கொண்டார். அவர் கேடயங்களை பார்த்து, மீண்டும் ஒருமுறை தனது படத்தை சுவாமி விவேகானந்தர் அருகில் போடவேண்டாம் என்றார். அவர் மீண்டும் நகைச்சுவையாக சுவாமி மதுரானந்தா ஒரு முறை தன்னிடம் தான் ராமகிருஷ்ணரின் அவதாரம் என்று கூறியதை கூற, சாதுஜி தான் சுவாமிஜியின் கருத்துடன் இணைவதாக கூறினார்.  அதைக்கேட்டு பகவான் விழுந்து விழுந்து சிரித்தார். பகவான் சாதுவிடம் ஸ்ரீ லிமாயேவின் குரு பற்றி கேட்டார். சாதுஜி நாங்கள் அனைவரும் ஸ்ரீ குருஜி கோல்வால்கர் அவர்களின் கீழ், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்., பின்னர் நாங்கள் விவேகானந்தரின் நினைவுச்சின்னத்தை ஏற்படுத்திய ஸ்ரீ ஏக்நாத் ரானடே அவர்களுடன் செயல்பட்டோம். ஸ்ரீ லிமாயேஜி காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் இந்தியா முழுமைக்கும் பயனப்பட்டார்கள். சாதுஜி, ஸ்ரீ லிமேயேஜி மீண்டும் ஒருமுறை பகவானின். தரிசனத்தை பெற இந்த சாதுவுடன் வர நினைப்பதாக கூறினார். ஆனால் அவர் இப்பொழுது பெங்களூர் போயிருக்கிறார் என்றார். பகவான் சாதுவிடம், “ராமேஸ்வரத்தின் திட்டப்பணி சம்பந்தமாகத்தானே அவர் பயணித்திருக்கிறார?. அப்படித்தானே?“ என்று கேட்டார் . சாது “ ஆமாம் “ என்றார். மேலும் சாது திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த திட்டத்திற்கான சிலையை செய்து தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்றார். பகவான் எந்த பொருளில் சிலை அமையும் என்று கேட்டார். சாது, “ கல்லில் “ என பதிலளித்தார். கணபதி ஸ்தபதி என்பவர், சுவாமி சித்பவானந்தர் கன்னியாக்குமரியில் நிறுவிய விவேகானந்தர் சிலை உருவாக்க, ராமேஸ்வரத்திற்கு அருகே பணி புரிந்த்தாக கூறிய பகவான், அந்த ஸ்தபதி தனது உதவியாளரிடம், “ஒரு நல்ல சுவாமி விவேகானந்தர் சிலையை உருவாக்க, ஒருவர் சதாகாலமும் அவரை பற்றியே சிந்திப்பவராக இருக்க வேண்டும்“ என்று கூறியதை நினைவு கூர்ந்தார்.

சாது யோகிஜியிடம் நிவேதிதாவின் ஆனந்தாஸ்ரமத்தின் பயணம் குறித்து கூறினார். யோகி நிவேதிதாவின் அனுபவம் குறித்து சாதுவிடம் கேட்டார். சாது அவளுக்கு அது இனிய அனுபவமாக அமைந்தது என்றும், சுவாமி சச்சிதானந்தர் அவளது சேவையில் மகிழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார். பகவான், “அவளும், லலிதாவும் ஒன்றாகத்தானே இருந்தார்கள். அப்படித்தானே ? “ என்று கேட்டார். சாது, “ ஆமாம்” என்றார். மேலும் நிவேதிதா வந்து தனது பயணம் குறித்து உங்களிடம். தெரிவிப்பாள் என்றார் சாது. யோகி கேடயங்களை தனது கரங்களில் எடுத்து ஆசீர்வதித்தார். யோகி டாக்டர். ராஜலட்சுமி குறித்து சாதுவிடம் விசாரித்தார், சாது ராஜலட்சுமி அவர்களின் குடும்பத்தில் நடந்த ஒரு மரணம் காரணமாக அவர் வரவில்லை என்றார்.. பின்னர் பகவான் விவேகானந்தர் ஜெயந்தி அழைப்பிதழை பார்த்தார். யோகி நடுவராக இருந்தவர்களின் பெயர் குறித்து கேட்டார். மேலும், “நீங்கள் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பரிசு அளிக்கிறீர்களா?“ எனக் கேட்டார். சாது முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கான பரிசுகளை தவிர்த்து பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசு உண்டு என்றார். யோகி, “நீங்கள் பங்கேற்கும் 130 பேருக்கும் பரிசளிக்க இருக்கிறீர்களா?“ எனக்கேட்டார். சாது, “ ஆமாம் “ என்றார். யோகி, “ அவர்களுக்கு என்ன தருவீர்கள் ? “ என்று கேட்க, சாதுஜி, “ புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள்” என்றார். யோகி, “ நாளை எத்தனை மணிக்கு விழா ? “ சாது, “ மாலை 6 மணிக்கு “ என்று பதிலளித்தார். பகவான் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்து, “ என் தந்தையின் ஆசிகள், விழா பெரும் வெற்றி பெரும்” என்றார். அவர் பை நிறைய பழங்கள் இன்னும் பிறவற்றை பிரசாதமாக கொடுப்பதற்கு கொடுத்தார். பின்னர் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்து தந்தார். பின்னர் சாதுவையும், மணியையும் பகவான் ஆசீர்வதித்தார். நாங்கள் அவரிடமிருந்து விடைப்பெற்று சென்னை வந்தடைந்தோம். 

சுவாமி விவேகானந்தா ஜெயந்தி யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினரால் சிறப்பாக ஜனவரி – 12, 1993 அன்று நடைப்பெற்றது. சென்னை உயர்நீதி மன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் K.வெங்கடசாமி அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தின் நிர்வாக இயக்குனரான  திரு. K.M. நாராயணன், சென்னை விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் டாக்டர். தியாகராஜன், மற்றும் தென் ஆப்பிரிக்காவின் தமிழ் வேத சங்கத்தின் தலைவர் திரு. N.C..நாயுடு மற்றும் சாது போன்றோர் மாணவர்களிடையே உரையாற்றினர். டாக்டர். ராதாகிருஷ்ணன் விருந்தினர்களை வரவேற்றார். சுழல் கேடயங்கள் மற்றும் பரிசுகள் வெற்றி பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பேச்சாளர்கள் விழா மேடையிலும் பேசினர். விழாவின் நிறைவாக வந்தே மாதரம் பாடப்பட்டது. ஜஸ்டிஸ் திரு. வெங்கடசாமி, டாக்டர். தியாகராஜன் மற்றும் பிற விருந்தினர்களும் சாதுவின் இல்லத்திற்கு வருகை தந்து, யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆய்வு மையத்தின் நூலகத்தை பார்த்தனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் பலர் மாலையில் நடைப்பெற்ற சத்சங்கத்தில் கலந்து கொண்டனர். சாது பகவானுக்கு ஜனவரி 30, 1993 அன்று ஒரு கடிதம். ஒன்றை எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

உங்கள் கருணையாலும், ஆசியாலும் நமது சுவாமி விவேகானந்தா ஜெயந்தி விழா பெரும் வெற்றி பெற்றது. மாண்புமிகு நீதியரசர் K. வெங்கடசாமி அவர் விழாவிற்கு தலைமையேற்றதோடு எங்களின் இல்லத்திற்கும் விஜயம் செய்தார். அவரோடு விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் டாக்டர். தியாகராஜன் அவரும் ஜனவரி 12 அன்று வந்திருந்தார். இத்துடன் இந்த விழா குறித்து வெளியான இரண்டு பத்திரிகை செய்தி குறிப்புகளை இணைத்துள்ளோம். 

திரு. கிருஷ்ணா கார்செல் பிரான்ஸில் இருந்து திரு. சிவ சங்கர் அவர்களின் கட்டுரையை நகலெடுத்து அனுப்பியுள்ளார். அது பிரென்ச் மொழியில், “லே மாண்டே இன்கொம்மூ “ என்ற இதழில், “ஜப நாமஸ்மரணா” என்ற தலைப்பில், வெளியாகியுள்ளது. அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். 

அகில இந்திய வானொலியின் சென்னை – A வில் “சான்றோர் சிந்தனை” என்ற பெயரில் இந்த சாதுவின் உரை காலை 6.55 மணிக்கு தினமும் பிப்ரவரி 22, 23 மற்றும் 24 அன்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு ஒலிபரப்பாகும். இதன் ஒலிப்பதிவு 1-2-1993 அன்று நடைபெறும் இந்த சாது அதற்கு உங்கள் ஆசியை வேண்டுகிறான். 

நமது ராம்நாம் பணி மிக வேகமாக முன்னேறி வருகிறது. நாளை காலை முதல் மாலை வரை நாங்கள் இங்கே அகண்ட ராமநாம ஜபத்தை நிகழ்த்த உள்ளோம். இனி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த அகண்ட ராமநாமத்தை நடத்த இருக்கிறோம். 

குமாரி. நிவேதிதா மற்றும் திருமதி. பாரதி தங்களது நமஸ்காரத்தை உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள். சிரஞ்சீவி. விவேக் உங்கள் கருணையால் அண்ணாமலை நகரில் தனது படிப்பில் சிறப்பாக முன்னேறி வருகிறான். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்.

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி. “

ஆசிரமத்தில் யோகி ராம்சுரத்குமார் கட்டிட பணியாளர்களை ஆசீர்வதிக்கிறார்

      யோகி ராம்சுரத்குமார், கடவுளின் குழந்தை, திருவண்ணாமலை. 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.30

Glimpses of A Great Yogi in Tamil – Part 2
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – II
சீடன் கண்ட தீக்ஷா குரு

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 2.30 

முதன்மை சிஷ்யனை வடிவமைத்தல்

அக்டோபர் 28, 1992ல் புதன்கிழமை அன்று  சென்னை மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனின் தத்துவ லோகா ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த ஒரு பெரும் கூட்டத்தில் சாது உரையாற்றினார். அதில்,  “பகுத்தறிவின் அடிப்படையில் மதம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த கூட்டத்தில்  தமிழர்களின் முன்னணி தலைவரான  திரு. ம.பொ.சிவஞானம், திரு. விஸ்வநாத சிவாச்சாரியார் மற்றும் திருமதி. பவதாரிணி போன்றோரும் உரையாற்றினா். அடுத்தநாள், யோகியின் பக்தரும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அலுவலக பணியாளருமான திரு. பரிமேலழகன் யோகியை தரிசிக்க அவரது இல்லத்திற்கு சென்றபோது திரு. பாலகுமாரன் அவர்களும் அங்கு வந்திருந்தார். அவர்கள் முன்னிலையில் ஒரு இளைஞனிடம் பகவான், “சாது ரங்கராஜன் எனது ஒரே சீடன்“ என்றுரைத்தார். அதற்கு அந்த இளைஞன் அப்படி என்றால் நான் சாதுவை எனது குருவாக ஏற்கலாமா என்று கேட்டார். அதற்கு பதிலாக பகவான் உரக்க சிரித்தார். ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 1 அன்று, ராயபுரத்தை சேர்ந்த திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இல்லத்தில், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்ட காயத்ரி ஹோமம் மற்றும் ராம்நாம் சத்சங்கம் நடைப்பெற்றது. மாகாணத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.D.S.கணேசன் சத்சங்கத்தில் கலந்து கொண்டார். நவம்பர் 6 வெள்ளிக்கிழமை அன்று, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் செயற்குழு, யோகி ஜெயந்தி குறித்த திட்டங்களை விவாதித்தனர். பகவான் சாதுவின் பணியை ஆசீர்வதித்து திரு. D.S. கணேசன் மூலம் சேதியை அனுப்பியிருந்தார். 

நவம்பர் 11, புதன்கிழமை 1992 அன்று, சாது, டாக்டர் ராஜலட்சுமி, திரு. N.S.மணி, ராஜீ, ஷெரீன் மற்றும் விவேக் போன்றோர் உடன், காரில் திருவண்ணாமலைக்கு சென்றார். செல்லும் வழியில் பகவானுக்கு என எடுத்து வைத்த பையை மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்து அவர் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நிவேதிதா, பாரதி ஏற்கனவே பையோடு பேருந்தில் கிளம்பி விட்டாள் என்றும், திருவண்ணாமலையில் எங்களோடு இணைவாள்  என்றும் கூறினாள். நாங்கள் திருவண்ணாமலையில் பகவானின் இல்லத்தை அடைந்தபோது, எத்தனைபேர்கள் இருக்கிறீர்கள் என பகவான் கேட்க, “ஆறு“ என்றும் பாரதி பேருந்தில் வந்து கொண்டிருக்கிறாள் என்றும் சாது கூறினார். பகவான் எங்கள் அனைவரையும் மாலை நான்கு மணிக்கு வரச்சொன்னார். நாங்கள் திருக்கோயிலூர் சென்று ஞானானந்தா தபோவனத்தில் பக்தர்களை சந்தித்தோம். திரு. D.S. சிவராமகிருஷ்ணன் விழுப்புரத்திற்கு சென்றிருப்பதாக சாதுவிற்கு தகவல் பரிமாறப்பட்டது. நாங்கள் அனைவரும் பகவானின் இல்லத்திற்கு அவரை சந்திக்க வந்து சேர்ந்தோம். பாரதியும் அங்கு வந்து சேர்ந்திருந்தார். பேரா. தேவகியும் அங்கே இருந்தார். வழக்கம்போல் அங்கே பெரும் கூட்டம் இருந்தது. பகவான் சாதுவையும் அவரது குழுவினரையும் உள்ளே வரச் சொன்னார். அவர் சாதுவை தன் அருகே அமரச்சொன்னார். பாரதியையும் அவருக்கு அடுத்து அமரச்சொன்னார். மற்றவர்களை தன் எதிரே அமரச்சொன்னார். சாது, திரு. K.N.வெங்கடராமன் மற்றும் நீல லோசனி தந்த தேன் பாட்டில், மற்றும் கல்கண்டு பொட்டலங்கள், பழங்கள் ஆகியவற்றை அவர்முன் வைத்தார். 

பகவான்: “ரங்கராஜா, உனது நீண்ட உ.பி. மற்றும் வட இந்தியா சுற்றுப்பயணத்திற்கு பிறகு முதன்முறையாக இன்று தானே வருகிறாய். அப்படித்தானே? “ 

சாது : “ஆமாம். மஹராஜ், நான் திரும்பி வந்த பிறகு முன்பே திட்டமிட்டபடி யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தேன்.” 

பகவான் : “ஆமாம். டாக்டர்.ராதாகிருஷ்ணன் இந்தப்பிச்சைக்காரனிடம் சொன்னார். மேலும் அவர் நீ புதன்கிழமை வருவாய் என்றும். கூறினார். சுற்றுப்பயணம் எப்படி இருந்தது? “ 

சாது : “மஹராஜ், உங்கள் கருணையால் மகத்தான வெற்றியடைந்தது “ 

பகவான் : “ தந்தையின் கருணை ! “ 

சாது : “ எல்லா இடங்களிலும் எங்களுக்கு இனிய வரவேற்பு கிடைத்தது – பிரயாக், அயோத்யா, காசி, சித்திரகூட், பாந்தா, அத்ரா, ஜான்பூர், மீரட், பரேலி, லக்னோ, இன்னும்பிற இடங்கள். நாங்கள் உங்களைப் பற்றியும், ராம்நாமம் குறித்தும் சித்திரகூட் பல்கலைக்கழகம், பாந்தாவின் D.A.V. கல்லூரி, அத்ராவின் P.G.கல்லூரி, இன்னும் பிற இடங்களிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினோம்.  எல்லா இடங்களிலிருந்தும் தன்னிச்சையாக இப்பொழுது ராமநாமம் வந்து கொட்டுகிறது.“ 

பகவான் : “ அப்படியா ? அனைத்தும் தந்தையின் கருணை ! “ 

சாது : “ மஹராஜ், ராமநாம ஜபத்தின் எண்ணிக்கை இப்பொழுது பெருத்துக் கொண்டே வருகிறது. மாத சராசரி இப்பொழுது 20 கோடிக்கும் மேல் “ 

பகவான் ஆச்சரியத்துடன், “ அப்படியா !” என்றார். அவர் எழுந்து உள்ளே சென்று ஆனந்தாஸ்ரமத்தின் இதழான ‘தி விஷன்’ மற்றும் இரண்டு கடிதங்களை கொண்டு வந்தார். இதழை சாதுவிடம் கொடுத்து அதில் நாம ஜப யக்ஞ எண்ணிக்கை கடைசி பக்கத்தில் கொடுக்கப்பட்டிருப்பதை வாசிக்கச் சொன்னார். சாது அதனை படித்து, “இங்கே அவர்கள் சென்றமாதம் 21 கோடிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்“ என்றார். பகவான், “அப்படியா ?“ என வினவிவிட்டு, “அனைத்தும் தந்தையின் கருணை! “ என்றார். 

பகவான் சாதுவிடம் இரண்டு கடிதங்களையும் படிக்கச் சொன்னார். ஒன்று பேராசிரியர். M.S. உதயமூர்த்தி எழுதியது. மற்றொன்று லீ லோசோவிக் இடம் இருந்து வந்த அவரது பாடல் கடிதம். பகவான் அதனை சாதுவிடம் கொடுத்து ‘தத்துவ தர்சனா’ இதழில் வெளியிட அதனை வைத்துக் கொள்ளுமாறு கூறினார். சாது பகவானிடம், “கடவுள் உணர்வின் கானகத்தில்“ (In the Woods of God-realization)  என்ற நூலின் ஏழாம் தொகுப்பினை தந்தார். “ இதனை நீங்கள் பார்த்ததில்லை என்று கூறியதால் சுவாமி ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானின் தலைவர் திரு. R.K. லால் உங்களுக்கு பரிசளித்தார் “ என சாது கூறினார். 

பகவான், “ஆம்“ என்று கூறி அந்த புத்தகத்தை கையில் எடுத்து அதில் உள்ள பக்கங்களை புரட்டிவிட்டு, சுவாமி ராம்தீர்த்தா அவர்களின் புகைப்படத்தை பார்த்தார். பின்னர் அவர் பாரதியிடம் புத்தகத்தை தந்து, “பாரதி, இந்த புத்தகத்தை திறந்து ஏதேனும் ஒரு பக்கத்தை எடு“ என்றார். பாரதி அந்த புத்தகத்தின் மையப்பகுதியை திறந்தார். பகவான் பின்னர் சாதுவிடம், “ரங்கராஜா நீ இந்த பக்கத்தில் இருந்து நீ விரும்பும் ஏதேனும். ஒரு பகுதியை படி“ என்றார். சாது பாரதியிடம் இருந்து புத்தகத்தைப் பெற்று அதில் 202 ஆம் பக்கத்தின் இரண்டாம் பகுதியை படித்தார். அது, “உரையாடல் சிறந்ததாக இருக்கும் பொழுது” மற்றும் “மனிதர்களை உருவாக்கும் கவிதை“ போன்றவற்றை சாது படித்து முடித்தவுடன் பகவான் தேவகியிடம் புத்தகத்தை கொடுத்து அவரை படிக்குமாறு சொன்னார். 

சாதுஜி பகவானிடம் லக்னோவில் நடைப்பெற்ற ராம்தீர்த்தா ஜெயந்தி விழா குறித்து கூறத் தொடங்கினார். மற்றும் தான் சந்தித்த பிருந்தாவனின் டாட் பாபா, யோகி ராம்சுரத்குமார் பற்றி விசாரித்ததையும் கூறினார். பகவான் பாபாவிற்கு தன்னை எப்படி தெரியும் என வினவினார். சாதுஜி, “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” என்ற நூலின் வழியாகவும், “தத்துவ தர்சனா” இதழின் மூலமாகவும்“ என்று கூற பகவான், “ஓ ! அவர் உனது நூல்களை படித்தாரா“ என்று கேட்டதோடு அவரின் முழுப்  பெயர் என்னவென்றும் கேட்டார். சாது, “அவரது பெயர் ஸ்ரீ ஆனந்த தேவ் மஹராஜ். அவர் எப்போதும் டாட் – அதாவது கனமான சணல் துணியை — தனது இடுப்பைச்சுற்றி அணிந்திருப்பார். எனவே அவர் ‘டாட்வாலா பாபா’ என்றழைக்கப் படுகிறார். அவர் பிருந்தாவனை சேர்ந்தவர், ” என்றார்.

பாண்டிச்சேரியை சேர்ந்த திரு. கணேசன் பகவானின் தரிசனத்திற்காக வந்திருந்தார்  சுவாமி ராம்தீர்த்தா அவர்களின் புத்கத்திலிருந்த, “நீ செய்திதாள்களை படிக்ககூடாது“ என்ற வரிகளை மேற்கோள் காட்டி, அந்த  வரியை திரும்ப திரும்ப எங்களை படிக்க வைத்து, நகைச்சுவையாக, “ பட்டயக் கணக்காயர் (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) கணேசன் இதனை செய்கிறார். அவர் செய்திதாள்களை படிப்பதில்லை. அவர் எப்போதும், ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என்று உச்சரிப்பார். இப்பொழுது அவர் தனது சகோதரரையும் அதனை செய்ய சொல்கிறார் “ என்றார்.

சாதுஜி, “மஹராஜ் அவர் நமது ராம்நாம் பிரச்சார நிகழ்ச்சியின் போது உரையாற்றினார். நாங்கள் அவரது இல்லத்திற்கு கூட சென்றிருக்கிறோம்“ என நினைவு கூர்ந்தார். 

பகவான் ஆச்சர்யத்தோடு, “அப்படியா !“ என்று கேட்டு, “ நீ அவரது பாண்டிச்சேரி இல்லத்திற்கு விஜயம் செய்தாயா? “ என வினவ, சாது, “ஆமாம்“ என பதிலளித்தார். 

வெளியே பெரும் கூட்டமாக பக்தர்கள் இருந்தனர். “இதுவே இந்தப பிச்சைக்காரனின் விதி“ என பகவான் முணுமுணுத்து, பின்னர் ஒவ்வொருவராக வரவழைத்து ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். சுஜாதாவின் தந்தை வந்து பிரச்சனைகள் பற்றிய ஒரு பெரிய பட்டியலை அவர்முன் வைத்தார். பகவான். அவைகளை பொறுமையோடு கேட்டு அவற்றின் தீர்வுகளுக்காக ஆசீர்வதித்தார். யோகி, விவேக், ராஜி மற்றும் மணியை இன்னமும் நெருக்கமாக வரச் சொன்னார். தேவகியும் அவரது குழுவினரும் பகவானின் பெயரை பாடியவாறு இருந்தனர். அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு குழுவினர் வந்தனர். பகவான். அவர்களை அடுத்தநாள் வருமாறு கூறினார். 

இரண்டு மணி நேர அமர்வில், பகவான் சாதுவிடம் விசிறி விடுமாறு கூறினார். எங்களை வழியனுப்பி வைக்கும் முன், யோகி சாதுவுடன் வந்த ஒவ்வொருவரையும்  அழைத்து ஆசீர்வதித்து பிரசாதம் கொடுத்தார். சாது ஷெரின் அவர்களின் உடல் நலக்குறைவு பற்றி கூற யோகி அவர் விரைவாக குணமடைய வாழ்த்தினார். மணியை சாது அறிமுகப்படுத்தினார். இந்த சாது பகவானிடம் தினமும் மணி பகவானுக்கு கடிதம் எழுதுவதாக கூறினார். பகவான் அவரது பெயரைக் கேட்டார்.  “மணி. எனது முழுப்பெயர் N.S. சுப்பிரமணியன்” என மணி பதிலுரைத்தார். பகவான் கூறினார்: “ நான் அந்த அஞ்சல் அட்டைகளைப்  பெறுகிறேன். ஆனால் நான் அவைகளினால் மிகவும் களைத்து போய்விட்டேன். இதற்கு மேல் எதையும் அனுப்பாதீர்கள்” என்றார். 

சாது பகவானின் காலடியில் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை வைத்து, “ மஹராஜ், எனது தந்தையின் சிரார்த்தம் நவம்பர் – 17 அன்று வருகிறது, “ என்றார். பகவான், “ஆமாம். ஒவ்வொரு வருடமும் நீ இந்த காணிக்கையை தருகிறாய். சரி, “ என்றார். காணிக்கையை ஏற்றுக்கொண்ட யோகி “உனது தந்தையின் பெயர் என்ன?“ என்று கேட்டார். சாது, “வேணுகோபாலன்“ என்றார். குரு கைகளை உயர்த்தி ஆசீர்வதித்து சாதுவிடம், “உனது தந்தை இதனை ஏற்றுக் கொண்டார்“ என்றார். சாது பகவானிடம் நிவேதிதா தனது தேர்வுகளை எழுதி வருகிறாள் என்றும், அவள் 14 ஆம் தேதி வருகிறாள் என்றும், தன்னுடன் வந்தவர்கள் இன்றே சென்னை திரும்புகிறார்கள் என்றும், தான் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாள்கள் திருவண்ணாமலையில் தங்க இருப்பதாகவும், எனவே நாளை காலை வருவேன் என்றும் கூறினார். யோகி, ”சரி. நாளை காலையில் வா“ என்றார். பகவான் சாதுவின் தண்டம் மற்றும் பிக்ஷய்  பாத்திரத்தை எடுத்து ஆசீர்வதித்தார். நாங்கள் விடைப்பெற்று, உடுப்பி பிருந்தாவன் ஓட்டலுக்கு வந்தோம். மற்றவர்கள் இரவு உணவிற்கு பின் கிளம்பினார்கள். சாது அங்கேயே தங்கினார். 

வியாழக்கிழமை, நவம்பர் 12 அன்றி இந்த சாது அருணாச்சல மலையை சுற்றிவிட்டு, ரமணாச்ரமம், சேஷாத்திரி சுவாமி ஆசிரமம் மற்றும் அடி அண்ணாமலை வந்து பகவானின் விருப்பமான டீ கடையான தண்டபாணி – சக்கரபாணி சகோதரர்கள் கடையில் டீ சாப்பிட்டார். அவர்கள் டீயை தந்துவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்தனர். ஆனால் சாது அவர்களுக்கு பணம் மற்றும் யோகியின் புகைப்படங்களை அவர்களின் பிள்ளைகளிடம் கொடுத்தார். பகவானின் இல்லத்திற்கு சாது காலை பத்து மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கே ரோஸோரா, ஓம் பிரகாஷ் யோகினி, மற்றும் குமாரகோவில்  முருகேசன், தேவகி மற்றும் அவரது நண்பர்கள் எங்களோடு இணைந்தனர். அனைவரும் அவரது முன்னிலையில் அமரவைக்கப்பட்டோம். பகவானின் உதவியாளராக இருந்த ஜெயராமனை கிளம்புமாறு கூறி அவரிடம் இருந்த வுசிறியை சாதுவிடம் தந்து விசிறிவிடச் சொன்னார். யோகி சாதுவை தீவிரமாக சிறிது நேரம் உற்று நோக்கி விட்டு பின்னர் தனது உரையாடலை துவங்கினார். 

பகவான் : “ ரங்கராஜா, நீ சந்தோஷமாக இருக்கிறாயா? “ 

சாது: “ஆமாம், மஹராஜ். உங்கள் கருணையால் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.” 

பகவான் : “ தந்தையின் கருணை ! “ அவர் சாதுவை ஆசீர்வதித்து மிக தீவிரமாக அவரைப் பார்த்தார். பின்னர் அவர் மீண்டும், “உனக்கு கவலைகளும், பிரச்சனைகளும் வராதா?“ 

சாது : “உங்கள் கருணையால் பிரச்சினைகள் ஏதுமில்லை. எப்பொழுதாவது  ஏதேனும் பிரச்சனைகள் வந்தாலும் நான் உங்கள் பெயரை நினைவு கொள்வேன். பிரச்சனை தீர்ந்துபோகும்.” 

பகவான் : “ஓ, அது என் தந்தையின் கருணை! உனக்கு சகோதரி நிவேதிதா அகாடமி மற்றும் ‘தத்துவ தர்சனா’ நடத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா?“ 

சாது : “இல்லை, குருவே. உங்கள் கருணையால், அனைத்தும் சமூகமாகவே செல்கின்றன. எங்களிடம் எந்த தொகையும் கையிருப்பில் இருப்பதில்லை எனினும், அனைத்திற்கும் நாங்கள் உங்கள் கருணையை பெற்று, அவ்வப்போது எழும் தேவைகளை பூர்த்தி செய்யும் சக்தியை பெறுகிறோம்.“ 

பகவான் : “ அனைத்தும் தந்தையின் கருணையே” 

பின்னர் அவர் ஓம் பிரகாஷ் யோகினியை சுட்டிக்காட்டி, “இவர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். சென்ற வருடம் மிகுந்த கடன். சிலர் இவர்களது ஆசிரமத்தில் பிரச்சனைகளை உருவாக்கினார்கள்.“ பகவான் ஓம் பிரகாஷ் யோகினியிடம் திரும்பி பிரச்சனைகள் இன்னமும் இருக்கின்றனவா என வினவினார். அவர் உங்களிடம் சொல்லியபிறகு, உங்கள் ஆசியை பெற்றபிறகு பிரச்சனைகள் தீர்ந்து போயின என்றார். பகவான், “இந்த வருடம் அவர்களால் 12000 ரூபாய்தான் சேகரிக்க முடித்தது. அப்படித்தானே?“ என்று அவர்களிடம் வினவினார். ஓம் பிரகாஷ் யோகினி தனது தலையை அசைத்தார். பகவான் தொடர்ந்தார், “உங்களின் அனைத்து செலவுகளும் அதற்குள் அடங்கி விட வேண்டும். விருந்துக்காக, இன்னும் பிறவற்றுக்காக, கடன் பெறுதல் என்பதற்கான கேள்வியே இல்லை.” என்றார். “சிலர் உனது ஆசிரமத்திற்கு அருகே வந்திருக்கிறார்கள் என முன்பு நீ சொன்னாய் அல்லவா? அது மிகவும் தனித்திருக்கும் ஒதுக்குப்புறமான இடம் என்றாய் அல்லவா?“ என்று அவர்களிடம் வினவினார். 

ஓம் பிரகாஷ் : “இப்பொழுது குமாரகோவிலின் குழந்தைகளும், தாய்மார்களும், தொடர்ச்சியாக ஆசிரமத்திற்கு வருகின்றனர். பக்கத்து ஆசிரமம் சாதுக்களுக்கு உணவளிக்க அமைக்கப்பட்டு வருகிறது. “ 

பகவான் : “ உனக்கு அதனால் எந்த பிரச்சனையும் இல்லை அல்லவா?“ 

ஓம் பிரகாஷ் : “இல்லை குருவே, அந்த இடத்தையும் முருகேஷ் தான் கவனித்துக் கொள்கிறார்“ 

தேவகி அந்த இடம் ஓம் பிரகாஷ் யோகினியின் உறவினர்களால் நிறுவப்பட்டிருக்கிறது என கூற, ஓம் பிரகாஷ் யோகினி இடைமறித்து, “யோகி ராம்சுரத்குமாரின் உறவினர்களால்” என்றார். 

பகவான் ஒரு நெல்லிக்காய் பாட்டிலை எடுத்து சாதுவிடம், “நீ இதனை பயன்படுத்த முடியுமா?“ எனக்கேட்டார். சாது “சரி” என பதிலளிக்க, அவர் அந்த பாட்டிலை சாதுவிடம் கொடுத்து விட்டு, சாதுவிடம், “உனது சுற்றுப்பயணத்தில் உனக்கு எந்த சிரமங்களும் ஏற்படவில்லையா? “ என வினவினார். 

சாது : “இல்லை குருவே. உங்கள் கருணையால் அனைத்தும் நன்றாகவே சென்றன. எங்களுக்கு தன்னிச்சையான ஆதரவு கிடைத்தது. குறிப்பிட்டு சொல்வதெனில் சித்திரகூட பல்கலைகழகம், இன்னும் பிற அமைப்புகள், எங்களை மீண்டும் அடுத்த வருடமும் வரச் சொன்னார்கள்.” 

பகவான் : “ யார் அந்த பல்கலைக்கழகத்தை நடத்துகிறார்? “ 

சாது : “டெல்லியை சேர்ந்த தீனதயாள் ஆராய்ச்சி நிறுவனம். தற்போது அது அண்ணாமலை பல்கலைக்கழகம் போல் வளர்ந்து பரவியுள்ளது. அவர்களிடம் பொறியியல், மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் யோகா, கலை அறிவியல் இன்னும் பிற துறைகளின் வசதிகள் அங்குள்ளன. திரு. நானாஜி தேஷ்முக் என்பவரே அதன் வேந்தர்.”

பகவான் : “ இது மத்திய பிரதேசத்தில் வரும். அப்படித்தானே ? “ 

சாது : “ஆமாம், மஹராஜ். இது உ.பி.எல்லையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது“ 

பகவான் : “ ஆமாம். சித்திரகூடம் மத்திய பிரதேசத்தில் வரும். “ 

சாது : “ மஹராஜ், யோகா துறையின் தலைவரான பேரா. ராம்குமார் எங்களது விஜயம் குறித்து உங்களுக்கு எழுதுவதாக கூறியிருந்தார்.” 

பகவான் : “ ம.பி அரசு இந்த பல்கலைகழகத்திற்கு பண உதவி செய்கிறதா ? “ 

சாது : “ அரசிடம் இருந்து அவர்கள் மானியங்கள் பெறக்கூடும்.” 

பகவான் : “திரு கணேசன் உன்னோடு சுற்றுப்பயணத்திற்கு வந்தாரே அவர் உனக்கு பயனுள்ள முறையில் இருந்தாரா?“ 

சாது : “ ஆமாம். மஹராஜ் . அவர் உதவிகரமாக இருந்தார். ஆனால் ஒரே ஒரு சிரமம், அவருக்கு மொழி பிரச்சனை. அவரால் ஹிந்தியில் சரளமாக தொடர்பு கொள்ள இயலவில்லை.“ மேலும் சாது, “சித்திரகூட பல்கலைகழகத்திலும், என்னிடம் இந்தியில் பேசுமாறு கோரினார்.” 

பகவான் : “உனக்கு ஹிந்தி பேசுவதில் எந்த சிரமமும் இல்லை அல்லவா ? “ 

சாது : “இல்லை குருவே. நான் உங்களை நினைத்து பேச்சினை துவக்குவேன். வார்த்தைகள் தானே கொட்டத் துவங்கும். “ 

பகவான் : “அப்படியா ? தந்தையின் கருணை ! “ 

சாது : “ பாந்தா D.A.V. கல்லூரியிலும், அத்ரா P.G. கல்லூரியிலும் நான் ஹிந்தியில் உங்களைப் பற்றியும், ராம்நாம் குறித்தும் பேசினேன். “ 

பகவான் : “அவர்கள் இந்த பிச்சைக்காரன் குறித்த பேச்சை பாராட்டிறார்களா? எப்படி அவர்கள் அதனை விரும்பினார்கள்? “ 

சாது : “மிகுந்த உற்சாகமாக இருந்தார்கள் மஹராஜ். உங்களைப் பற்றியும்,   ராம்நாம் இயக்கம் குறித்தும், அவர்கள் அறிய ஆவல் கொண்டார்கள். நாங்கள் உங்கள் படம் மற்றும் ராம்நாம் துண்டு பிரசுரங்களையும் வினியோகம் செய்தோம். நூற்றுக்கணக்கான பக்தர்கள் ராம்நாம் கூற முன்வந்துள்ளனர். “ 

பகவான் : “ஆனால், D.A.V. கல்லூரி ஆரிய சமாஜத்தை சேர்ந்தது. அப்படித்தானே?“ 

சாது : “ ஆமாம். மஹராஜ் ஆனாலும் அவர்களும் ராமநாம ஜபத்தை ஏற்றனர். அங்கே இருந்த யோகா மையத்திலும் நான் உரையாற்றினேன். “ 

பகவான்: “அவர்கள் யோகாசனம் மற்றும் பிறவற்றை செய்கிறாரகள். அப்படித்தானே ? “ 

சாது : “ ஆமாம். மஹராஜ் “ 

பகவான் : “ நீ எப்படி ராமநாமத்தை அத்துடன் இணைத்தாய் ? “ 

சாது : “மஹராஜ். நான் பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் துவங்கி எனது உரையை, எளிய மற்றும் திறன்மிகுந்த வழியாகிய ஜப யோகாவில் முடித்தேன். உங்களைப்பற்றியும், ராமநாமம் குறித்தும் பேசினேன். “ 

பகவான் : “ எனவே அவர்கள் அதனை நன்றாக உள்வாங்கிக் கொண்டார்களா ? “ 

சாது : “ ஆமாம். மஹராஜ்.” 

பகவான் : “தந்தையின் கருணை ! “ 

சாது : “ மஹராஜ், அடுத்தவருடம் எங்களுக்கு லக்னோ பல்கலைகழகத்தில் கூட நிகழ்ச்சிகள் இருக்கலாம். ஒரு தமிழ் பேராசிரியர் எங்களை வரவேற்றிருக்கிறார்.” 

பகவான் : “ அப்படியா ? “ 

சாதுஜி பகவானிடம் பூஞ்ஜாஜி மஹராஜ் பக்தர்களை சந்தித்ததையும், அவர்கள் சாதுவை தங்களது குருவை சந்திக்க அழைத்ததையும் கூறினார். “அவர்கள் எங்கள் குரு உங்கள் குருவை அறிவார், எனவே நீங்கள் வந்து அவரை சந்தியுங்கள் என்றனர், நான் அவர்களிடம், பின்னர் வந்து அவரை சந்திக்கிறேன் என்றேன்.“ என்று சாதுஜி மேலும் கூறினார். 

பகவான் ; “ பூஞ்ஜாஜி இங்கே ரமணமகரிஷி இருக்கும் போது இருந்தார். சிலர் இந்த பிச்சைக்காரனை பார்க்க வருகையில் அவர்கள் பூஞ்ஜாஜியை லக்னோவில் பார்த்ததாக கூறுவார்கள். அவருக்கு நிறைய வெளிநாட்டு பக்தர்கள் உள்ளனர், அவர் ஒரு குருவாக இருக்கலாம். இந்தப்பிச்சைக்காரனுக்கு அதெல்லாம் தெரியாது.  ஆனால் இந்தப்பிச்சைக்காரன் குரு அல்ல. அவன் வெறும் பிச்சைக்காரன்தான்.“ பகவான் சிரித்தவாறே மேலும் கூறினார், “ ஒருமுறை ரமண மகரிஷி தான் குருவல்ல என்றும், தனக்கு சீடர்கள் இல்லை என்றும் கூறினார். குருவும் இல்லை, சீடர்களும் இல்லை. அப்பொழுது அவரை சுற்றியிருந்த சீடர்கள், ‘அப்படி என்றால் நீங்கள் எங்கள் அனைவரையும் விலகி போக சொல்கிறீர்களா?’  என வினவினர். ரமணர், ‘இல்லை. இல்லை. நீங்கள் அனைவரும் இங்கே அமருங்கள்’ என பதிலளித்தார். 

பகவான் உரக்க சிரித்தார். சாது, “மஹராஜ், விவேகானந்தரும் இதேப்போல் நிவேதிதாவிடம் பேசியிருக்கிறார். “நான் உன்னை உருவாக்கி இருந்தால் நீ அழிந்து போய் விடுவாய்; அன்னை உன்னை உருவாக்கியிருந்தால் நீ அவளது பணிக்காக வாழ்வாய்” என்று கூறியிருக்கிறார்.

பகவான் சாதுவிடம் அதனை திரும்ப கூறுமாறு சொல்லி சாதுவை உற்று நோக்கினார். அவர் அந்த வார்த்தைகளை உரக்க சொல்லி சிரித்தார். 

சாது பகவானிடம் நரிக்குட்டி சுவாமிகள் தனது திருவல்லிக்கேணி இல்லத்திற்கு வந்தது குறித்தும் அவர் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பி செல்ல விரும்புவது குறித்தும் கூறினார். நான் பகவானிடம் அவர்மீது நடந்த சமூக விரோத கும்பலின் தாக்குதல் குறித்து கூறுகையில் அவர் ஆச்சரியத்துடன் அதன் விவரங்களை கேட்டார். சாதுஜி பகவானிடம் நரிக்குட்டி சுவாமிகளே தன்னிடம் கூறியவைகளை பகிர்ந்தார். பகவான் கூறினார், “சிலர் நரிக்குட்டி சுவாமிகள் நலமாக இல்லை என்றார்கள். ஆனால் எனக்கு அவரின் மேல் நடந்த தாக்குதல் தெரியாது” என்றார். தேவகி இந்த சம்பவம் பற்றி பகிர்ந்த தாகவும் ஆனால் சுவாமிகளின் பெயர் கூறவில்லை என்றும் கூறினார். பகவான் இது போன்ற நிகழ்ச்சிகள் கிரி பிரதட்சணம் வருகையில் நடக்கும் என்று கூறி, ஒரு நிகழ்வை விவரித்தார். சாது பகவானிடம் டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் கிரிபிரதட்சணம் இரவில் செய்வார்கள் என்றார். அவர்கள் ஒரு குழுவாக சென்றால் எதுவும் நடக்காது என்றார் பகவான். 

சாதுஜி பகவானிடம் சகோதரி நிவேதிதா ஜெயந்தி சென்னையில் ராஷ்ட்ர சேவிகா சமிதியில் நடந்ததாகவும், அதில் குமாரி நிவேதிதா குழுமியிருந்த பெண்களிடம் உரையாற்றினார் என்றும் கூறினார். நாங்களும் சகோதரி நிவேதிதா குறித்த வாழ்க்கை வரலாற்றை வெளிக்கொணர்ந்ததாக கூறி சாது அதனை தனது பையில் தேடினார். சாதுவினால் அதனை கண்டறிய இயலவில்லை. பகவான், ”பரவாயில்லை” என்றார். 

சாது பகவானிடம் தனது கிரி பிரதட்சணம் மற்றும் தண்டபாணி – சக்கரபாணி சகோதரர்களின் டீக்கடை டீக்கடையில் அவர்களின் விருந்தோம்பல் பற்றி குறிப்பிட்டார். மேலும் தானும் பகவானின் புகைப்படங்களை அவர்களுக்கு பரிசளித்ததைப் பற்றி கூறினார். பகவான், சிலசமயம் அவர்கள் வந்து புகைப்படத்தை எடுத்துச் செல்வார்கள் என்றார். அவர்களது கடைக்கு தான் சென்று கொண்டிருந்ததை நினைவு கூர்ந்ததோடு சாதுவை அவர்கள் வரவேற்றது குறித்து  தனது மகிழ்வையும் வெளிப்படுத்தினார். 

பகவான் ஓம் பிரகாஷ் யோகினியை சுட்டிக்காட்டி சாதுவிடம், “நீ குமாரகோவிலுக்கு சென்றிருக்கிறாயா ? “ என வினவினார். 

சாது : “ஆமாம், மஹராஜ். இரண்டுமுறை நான் குமாரகோவிலுக்கு சென்றிருக்கிறேன். இந்தமுறையும் அவர்  அழைத்திருக்கிறார். நாங்கள் அதனை திரு. D.S.சிவராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்ய முயற்சிக்கும் மதுரை நிகழ்ச்சியோடு சேர்க்க நினைத்திருந்தோம். இருப்பினும் அவர் நிகழ்ச்சி டிசம்பரில் நடைபெறும் என்றிருக்கிறார். டிசம்பரில் நாங்கள் சென்னை ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருப்போம். எனவே நாங்கள் ஓம் பிரகாஷ் யோகினி அவர்களை சென்னைக்கு அழைத்து ராமநாம லிகித ஜப நோட்டு புக்குகளின் பெட்டிகளை அவரது ஆசிரமத்திற்கு தர இருக்கிறோம்.” 

பகவான் : “இந்த ராமநாம லிகித ஜபத்தை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள்?“ 

ஓம் பிரகாஷ் யோகினி : “நாங்கள் எங்கள் ஆசிரமத்தின் கோயிலில் உள்ள ராம்நாம் புவுண்டேஷன் அறையில் இதனை பாதுகாத்து வைப்போம், பகவான்.” 

சாது : “எங்களது இடத்தில் ராமநாம லிகித ஜபத்தை பாதுகாப்பதில் எங்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கின்றன. எங்கள் இடம் மிக சிறியது. அதில் ஒரு அறை முழுவதும் ராம்நாம் பெட்டிகளே உள்ளன. நாங்கள் சுவாமி சச்சிதானந்தா அவர்களை கேட்டோம். அவர் லிகித நாமங்களை ஓம் பிரகாஷ் அல்லது ஜாம்ஷெட்பூருக்கு வழங்க அனுமதி அளித்துள்ளார். அவர் ஜெப எண்ணிக்கை கணக்கு மட்டும் அனுப்பினால் போதும் என்று கூறியிருக்கிறார். ஜாம்ஷெட்பூருக்கு அனுப்புவது கடினம். அதற்கு ஒரு லாரி முழுமையான அளவு பெட்டிகள் வரும்வரை காத்திருக்க வேண்டும். அதனால்தான் ஓம் பிரகாஷ் அவர்களை வந்து எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளோம்.”

பகவான் : “முருகேஷ் அதனை எடுத்துக் கொள்ளட்டும்.” 

பகவான் பின்னர் சாதுவிடம், “ உனது இடம் மிகவும் சிறியது. அப்படித்தானே ? “ 

பேராசிரியர் தேவகி இடைமறித்து, “அது எங்களது பழைய ‘சுதாமா’வை விட மிகச் சிறியது பகவான். அவரது அறை முழுவதும் புத்தகங்கள் நிறைந்திருக்கும்.” 

சாது, “ ஆமாம், மஹராஜ். எங்களிடம் மிகப்பெரிய நூலகமாக 5000 புத்தகங்கள் இருக்கின்றன. மிகவும் அரிய புத்தகங்கள், தொகுப்புகள், பல இதழ்கள் மற்றும் பத்திரிக்கை தகவல்கள் போன்றவைகள் ஆய்வுப்பணிக்கு தேவைப்படுகின்றன. நாங்கள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு சிறிய மேசை மற்றும் பாய் மட்டுமே அவர்கள் அமர்ந்து ஆய்வுப்பணியை செய்ய தருகிறோம்.” 

பகவான் : “ அப்படியா, உனது இடம் அவ்வளவு சிறியதா? “ 

சாது : “ஆமாம், மஹராஜ். உங்கள் கருணையால் எங்களுக்கு பெரிய இடம் கிடைக்கும் வரை நாங்கள் இதில் நிர்வகித்தாக வேண்டும்.” 

பகவான் : “ தந்தை உனக்கு பெரிய இடம் கிடைப்பதை பார்த்துக் கொள்வார்.” 

தேவகி : “ஒரு பெண்மணி அவருக்கு சில நிலத்தை தருவதாக இருந்தார், பகவான்” 

சாது : “ ஆமாம். டாக்டர். ராஜலட்சுமி தருவதாக இருந்தார். ஆனால் அந்த இடத்தை அவருக்கு தகவல் தராமலேயே ஒருவர் விற்று விட்டதாக அறிகிறேன் “ 

பகவான் : “ ஓ ! அவளது அறிவுக்கு எட்டாமலேயே அந்த நிலம் விற்கப்பட்டு விட்டதா ! எப்படி இது நிகழ்ந்தது ?.” 

சாது : “ மஹராஜ். அந்த நிலம் வேறொருவர் பெயரில் வாங்கப்பட்டிருக்கலாம், அவர் அந்த நிலத்தை விற்றிருக்கலாம், என நினைக்கிறேன். ஒரு பத்து பேர் கூட்டாக அதில் பணத்தை முதலீடு செய்து அந்த இடத்தை வாங்கியிருக்கிறார்கள். வெங்கடரமணி என்பரிடம் நிலப்பத்திரம் இருந்திருக்க வேண்டும். ராஜலட்சுமி அதனை விசாரித்து அந்த நிலம் விற்பனை செய்யப்பட்டு விட்டதா அல்லது இல்லையா என தெரிவிப்பதாக கூறியிருக்கிறார். அவரே அதன் விற்பனை குறித்து உறுதியாக அறிந்திருக்கவில்லை. அவர் தனக்கு கிடைத்த சேதியையே பரிமாறி உள்ளதாகவும் அது உண்மையா, பொய்யா என்பதை அவர் இனிமேல் தான் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.” 

பகவான் : “ அப்படியா? ஒரு நாட்டுக்கோட்டை  செட்டியார் பெண்மணியும் ஒரு இடத்தை தருவதாக கூறியிருந்தார். அப்படித்தானே ? “ 

சாது : “ ஆமாம், மஹராஜ். அவர் வள்ளியம்மை ஆச்சி. அவர் ஆசிரமம் கட்டுவதற்கு இடத்தை தருவதாக கூறியிருந்தார். அந்த இடமும் இப்பொழுது சிக்கலில் உள்ளது. மேலும் அவர் தேவக்கோட்டையில் இருக்கிறார். அவர் நமது அச்சுப்பணிக்காக ஒரு சிறிய இடத்தை தருவதாக இருந்தார். தற்சமயம் அந்த இயந்திரம் அவரது வளாகத்திலேயே உள்ளது. அவர் தொலைவில் உள்ளதால் சமீபத்தில் நாங்கள் அவரை சந்திக்கவில்லை.” 

பகவான் : “ விஷ்ணு மங்கலம் என்னவானது ? “ 

சாது : “ அந்த கனவான் திரு. பாலசுப்ரமணியம் மஸ்கட் சென்றிருக்கிறார். அவர் ஜனவரியில் வந்து அந்த இடத்தை ஒப்படைப்பதாக கூறியிருக்கிறார். “ 

பகவான் : “ மஸ்கட்டில் அவர் என்ன செய்கிறார். அவருக்கு அங்கு ஏதேனும் தொழில்கள் இருக்கிறதா ? “ 

சாது : “ இல்லை, அவரது பிள்ளைகள் அங்கே இருக்கின்றனர். அவர்களோடு தங்குவதற்கு அவர் சென்றிருக்கிறார். “ 

பகவான் பின்னர் ‘தத்துவ தர்சனா’ குறித்து உரையாடலை துவக்கினார். 

பகவான் : “தத்துவ தர்சனா எப்படி போய் கொண்டிருக்கிறது ? எத்தனை பிரதிகள் நீ அச்சிடுவாய் ? “ 

சாது : “ 1000 பிரதிகள்  மஹராஜ். 500 புத்தகங்கள் சந்தாதாரர்கள், புரவலர்கள் மற்றும் வாழ்நாள் உறுப்பினர்களுக்கு சென்றுவிடும். மற்றவை இலவசமாக வினியோகிக்கப்படும்.” 

பகவான் : “ நீ எப்படி இதனை நிர்வகிக்கிறாய் ? உனக்கு நஷ்டம் ஏற்படாதா ? “ 

சாது : “எப்படியோ, உங்கள் கருணையால் இதனை தொடர்ந்து நடத்த தேவையான நிதியை பெற்று வருகிறோம். நாங்கள் சில விளம்பரங்களையும், சில நன்கொடைகளையும் இந்த செலவினை ஈடு செய்ய பெறுகிறோம். சில சமயம் எங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். ஆனால் எங்களுக்கான உதவி எதிர்பாராத இடத்தில் இருந்து உங்கள் கருணையால் வரும், நாங்கள் அந்த தட்டுப்பாட்டை கடந்து வருவோம். “ 

பகவான் : “அனைத்தும் தந்தையின் கருணை. நீ தந்தையின் பணியை செய்கிறாய். தந்தை அதனை பார்த்துக் கொள்கிறார். “ 

சாது : “மஹராஜ். நான் ஒருபோதும் எனது இடத்தை விட்டு நன்கொடை கேட்கவோ, விளம்பரம் கேட்டோ சென்றதில்லை. ஆனால் பக்தர்கள் வந்து என்னிடத்தில் காணிக்கைகளை தந்துவிட்டு போகின்றனர். நான் ராம்நாமத்திற்காக மட்டுமே வெளியே செல்வேன்” 

பகவான் : “ எப்படி நீ அனைத்து செலவுகளையும் சந்திக்கிறாய் ? “ 

சாது : “ அனைத்தும் உங்கள் கருணை மஹராஜ். பல பக்தர்கள் நாடு முழுவதில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் நாங்கள் மகிழ்விக்கிறோம். சிலநேரங்களில் அனைவரும் அமர மிகச்சிறிய இடமே இருக்கும். நான் சிலரை அனுப்பி மற்றவர்களுக்கு இடத்தை தர வேண்டியிருக்கும். ஆனாலும் அனைவரையும் நன்றாக வரவேற்று மகிழ்விப்போம். “ 

பகவான் மீண்டும் கேட்டார், “ இவையனைத்தும் கடனோ, பற்றாக்குறை இன்றி எப்படி சாத்தியமாகிறது.” அவர் ஓம் பிரகாஷ் அவர்களை சுட்டிக்காட்டி, “ பார், அவர்கள் ஒரு விருந்தினை ஏற்பாடு செய்துவிட்டு கடனில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உனக்கு அத்தகைய பிரச்சனைகள் இல்லை.” 

சாது : “ மஹராஜ். உங்கள் கருணை அற்புதங்களை நிகழ்த்துகிறது. எங்கள் பணி நாங்கள் துவங்கியதில் இருந்து, கடந்த இருபது வருடங்களில், நிதிக்காக கஷ்டப்பட்டதே இல்லை. “ 

சாதுஜி, பகவானிடம் தனது இல்லத்தில், பகவானின் உருவப்படத்திற்கு முன்பு வைத்திருந்த பணப்பை காணாமல் போனதைப் பற்றி பகிர்ந்தார்: “ சமீபத்தில் நான் வீட்டில் இல்லாதபோது, ஏதோவொரு பக்தர், நீங்கள் எனக்கு கொடுத்து நான் சேர்த்து வைத்திருந்த ரூ.5200 ரூபாய் அடங்கிய பையை, எனது இல்லத்தின் கோயிலில் இருந்து எடுத்துச் சென்று  விட்டார்.” 

பகவான் : “ ஆமாம், பரிமேலழகன் இந்தப் பிச்சைக்காரனிடம் யாரோ பணத்தை எடுத்துச் சென்றதாக கூறியதோடு நீ அது குறித்து கவலை கொள்ளவில்லை என்றும் கூறினார். “ 

சாது : “ஆமாம், மஹராஜ். ராம்ஜி கொடுத்தார். ராம்ஜி அதனை எடுத்துக்கொண்டார்.” 

யோகி உரக்க சிரித்து, சாதுவின் கரங்களைப் பற்றி பலமாக முதுகில் தட்டி, “ நீ ஒரு முழுமையான சந்நியாசியாக இருக்கிறாய்.” என்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்ந்தார். “ஆனால் எப்படி நீ உனது காரியங்களை நிர்வகிக்கிறாய். கடந்த 20 வருடமாக நீ எந்த பணம் சம்பாதிக்கும் பணியிலும் இல்லை. நீ விவேக், நிவேதிதாவை படிக்க வைத்திருக்கிறாய். வீட்டை நிர்வகித்து வந்திருக்கிறாய். இது எப்படி உனக்கு சாத்தியமானது ? “ சாது மீண்டும், “ அனைத்தும் உங்கள் கருணை மஹராஜ். நான் உங்களை சந்தித்ததிலிருந்து, உங்கள் கருணை எங்களை அனைத்திலிருந்தும் பாதுகாத்து வருகிறது. “ 

பகவான் மீண்டும், “ தந்தையின் கருணை” என்று கூறிவிட்டு தொடர்ந்தார். “ நீ இந்தப்பிச்சைக்காரனை ‘தத்துவ தர்சனா’வை துவங்குவதற்கு முன் சந்தித்தாய். அப்படித்தானே ? “

சாது : “ஆமாம், மஹராஜ். இரண்டாவது ‘தத்துவ தர்சனா’ இதழிலேயே உங்களுடைய ஆசிகளை வெளியிட்டிருந்தோம்”.

பகவான் : “இந்தப் பிச்சைக்காரன், நீ விஸ்வ ஹிந்து பரிஷத் துவக்கப்பட்ட காலத்திலேயே அதில் இருந்ததாக கேள்விப்பட்டான்”.

சாது : “ ஆமாம், மஹராஜ். ஸ்ரீ குருஜி கோல்வால்கர் மற்றும் சுவாமி சின்மயானந்தா முன்னிலையில், 1966ல், மும்பை சாந்தீபனி சாதனாலயாவில், விஸ்வ ஹிந்து பரிஷத் துவக்கப்பட்டு, ஒரு மாநாட்டை பிரயாகையில் நடத்த முடிவெடுக்கப்பட்டு, சுவாமி சின்மயானந்தா அழைப்பு விடுத்த உடனேயே நான் எனது தமிழக அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகத்தில் வி.எச்.பி பணிக்கு வந்தேன்.” 

பகவான் : “ யார் வி.எச்.பி யை துவக்கியது ? சுவாமி சின்மயானந்தாவா ? “ 

சாது : “ சாந்தீபனி சாதனாலயாவில் நடந்த கூட்டத்தில், சுவாமி சின்மயானந்தா, ஸ்ரீ குருஜி கோல்வால்கர், ஹிந்து சமூகத்தின் பெரும் தலைவர்கள், மற்றும் மகாத்மாக்களும் பங்கேற்றனர். இது 1966-ல், கிருஷ்ணாஷ்டமி நாளில் துவங்கப்பட்டது. வி.எச்.பி யில் சில வருடங்கள் சேவை செய்தப்பின், நான் திரு. ஏக்நாத் ரானடே உடன் விவேகானந்தா் நினைவுப் பாறை பணியில் இணைந்தேன்.“ 

பகவான் : “ ஓ, ஏக்நாத் ரானடே  ஒரு அற்புத பணியை செய்திருக்கிறார். அவரது பணியில் பல தடைகளை அவர் சந்தித்திருந்தார். அப்படித்தானே ? “ 

சாது : “ ஆமாம் மஹராஜ். முதலில் அரசு அந்த பாறை மீது ஒரு நினைவு மண்டபத்தை அமைக்க அனுமதி மறுத்தது. பின்னர் சட்ட  வல்லுனர் சூரிய நாராயண சாஸ்திரிகள் போன்றோரின் தலையீட்டால் தடைகள் நீங்கின.” 

பகவான் : “சில கிறிஸ்தவர்கள் அந்த பாறையில் சிலுவையை நட்டு வைத்திருந்தனர். அப்படித்தானே ? “ 

சாது : “ ஆமாம். மஹராஜ். முதலில் அவ்விடத்தின் தனிச்சிறப்பை கூறும் பெயர்பொறிக்கல் (plaque) ஒன்று திரு.ம.பொ.சிவஞானம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டிருந்த்து. சில கிறுஸ்துவ மிஷனரிகளின் தூண்டுதலால் மீனவர்கள் அதனை உடைத்து கடலில் எறிந்தனர். பின்னர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, திரு. ஏக்நாத்ஜி இவ்விவகாரத்தில் நுழைந்தார். அவர் இந்த பணியை மேற்கொண்டப்பின் வேலை விரைவாக நடந்தது. இன்று அது தேசீய நினைவுச்சின்னமாக மாறியுள்ளது.”

பகவான் : “ ஆமாம் அவர் பெரும் பணியை செய்திருக்கிறார். “ 

சாது : “ மஹராஜ் மொத்தம் ஒரு கோடியே எண்பது லட்ச ரூபாய் திரட்டப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் ஒரு ரூபாய் பங்களிப்பு மூலம் கிடைத்தவை. இவை மிக பிரம்மாண்டமான தேசீய பிரச்சாரம் மூலம் பெறப்பட்டது.” 

பகவான் : “ அப்படியா ? “ 

சாது : “ ஆமாம். மஹராஜ். மீதமுள்ள எண்பது லட்சம் மட்டுமே பணக்காரர்கள் மற்றும் அரசின் மூலம் கிடைத்தது.” 

பகவான் : “ இப்பொழுது அவர்கள் விவேகானந்தா பரிக்ரமா செய்கிறார்கள். உனக்கு அந்த வழி தெரியுமா ? “ 

சாது : “ ஆமாம். மஹராஜ். அது தற்சமயம் விவேகானந்தா கேந்திரம் மூலம் நிகழ்த்தப்படுகிறது. அவர்கள் சென்னையை தொடாமல், மேற்கு கடற்கரை வழியாக ராமேஸ்வரம் மற்றும் கன்னியாக்குமரி செல்கின்றனர். 

ஓம் பிரகாஷ் யோகினி அவர்கள், விவேகானந்தா கேந்திராவின் தலைவராக இருக்கும் டாக்டர் லக்ஷ்மி குமாரி, சுவாமி சின்மயானந்தா அவர்களின் உறவினர் என்று குறிப்பிட்டார். சாது அவர் பெரும் மலையாள எழுத்தாளரான புத்தேழத்து  ராமன் மேனன் அவர்களின் மகள் என்றார்.

பகவான் சாதுவிடம், “ சுவாமி சின்மயானந்தாவை நீ எப்படி அறிந்தாய் ? “ என வினவினார். 

சாது : “ மஹராஜ், நான் அவரது சொந்த ஊரைச் சேர்ந்தவன். அவரது பூதாம்பிள்ளி வீடு எனது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. எனது மாணவ பருவத்திலிருந்தே நான் அங்கே செல்வேன். கல்லூரி காலத்திலிருந்தே சின்மயா மிஷனில் நான் மிகுந்த தீவிரமாக இயங்கி வந்தேன். எனது தந்தை ஒரு கப்பல் பொறியாளர். நான் பிறந்து வளர்ந்த ஊர் எர்ணாகுளம். 1960ல் எனது பட்டப்படிப்பு முடிந்தபிறகு நான் தமிழ்நாட்டிற்கு வந்தேன். “ 

பகவான் : “ நீ ஞானானந்த கிரியை பார்த்திருக்கிறாயா ? “ 

சாது : “ இல்லை குருவே, நான் அவரை பார்த்ததில்லை” 

சாதுஜி பின்னர் பகவானிடம், “மஹராஜ், நேற்று நான் திரு. D S. சிவராம கிருஷ்ணனை பார்க்க திருக்கோயிலூர்       சென்றேன். ஆனால் அவர் அங்கு இல்லை. அவர் விழுப்புரம் சென்றிருந்தார். அவர் எனது நிகழ்ச்சியை விழுப்புரம் மற்றும் பசுமலையில் நடத்துவதற்கு முயற்சித்து வருகிறார்.“ 

பகவான் : “ ஆமாம். அவர் இந்தப்பிச்சைக்காரனிடம் உனக்கு உதவ அனுமதி கேட்டார். இந்தப்பிச்சைக்காரன் ஒருகாலத்தில் அவரை தபோவனத்தை விட்டு வரக்கூடாது என்று கூறினான். ஏனெனில் ஞானானந்தகிரி மஹாசமாதி ஆனவுடன் பலர் அங்கிருந்து கிளம்பினர். எனவே இந்தப் பிச்சைக்காரன்  D.S. சிவராமகிருஷ்ணனை எங்கும் போகக்கூடாது என கூறினான். ஆனால் இப்பொழுது அவர்கள் எல்லாம் திரும்பி வருகிறார்கள். D.S. சிவராமகிருஷ்ணன் தனது வாழ்நாளின் இறுதியில் உனக்கு ராம்நாம் பணியில் உதவ விரும்புகிறார். எனவே இந்தப் பிச்சைக்காரன் அவரிடம் ‘சரி’ எனக் கூறினான். ஆனால் அவர் மிகவும் வயதானவர், ஆயினும் அவர் சும்மா அமர விரும்பவில்லை. அவர் சில நல்ல செயல்களை செய்ய விரும்புகிறார். “ 

சாது : “ ஆமாம், மஹராஜ். நாங்கள் அவர் நிறைய நிகழ்ச்சிகளை தொடராக ஏற்பாடு செய்வதை விரும்பவில்லை. அது அவரை மிகவும் சிரமப்படுத்தும், அதனால்தான் நாங்கள் மதுரை நிகழ்ச்சியை டிசம்பரில் வைத்துக்கொள்ளலாம் என்றோம்.” 

பகவான் : “ நீ மிகவும் கடினமான பணியை செய்து வருகிறாய். தந்தை உனது பணிக்கு உதவுவார்.” 

நாங்கள் இரண்டரை மணி நேரம் எனது குருவின் முன்னிலையில் செலவழித்தோம். இடையிடையே பல பக்தர்கள் வந்து அவருடைய ஆசிப்பெற்று வணங்கிச் சென்றனர். சிலர் அவரது நாமத்தை பாடினர். அதைத் தவிர மீதி  நேரம் முழுவதும் அவர் இந்த சாதுவிடம் பேசியவாறு இருந்தார். பின்னர் அவர், “ நான் ஏன் உன்னை நீ சந்தோஷமாக இருக்கிறாயா என்று கேட்டேன் தெரியுமா?“  என்று வினவினார்

சாது : “ இல்லை பகவான் “ 

பகவான் சிரித்தவாறே கூறினார். “ சிலசமயம், சிலர் இந்தப்பிச்சைக்காரனிடம் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா என்று கேட்கிறார்கள். இந்தப்பிச்சைக்காரன் அவர்களுக்கு, ‘ சந்தோஷமோ, சந்தோஷமின்மையோ, மகிழ்வோ, சோகமோ, இன்பமோ அல்லது வலியோ, இந்தப்பிச்சைக்காரன் தனது தந்தையின் பணியை செய்து வருகிறான். இந்தப்பிச்சைக்காரன் உடல் அல்ல. அவன் தந்தையின் கருவி. அவனுக்கு இந்த மகிழ்ச்சி, மகிழ்ச்சியின்மை குறித்தெல்லாம் கவலையில்லை’ என்று  பதிலளிப்பேன். அவன் தந்தையின் பணியை செய்வான் அவ்வளவே. “

இந்த, சாதுவின் பணி குறித்த, சாதாரணமாகத் தோன்றும் உரையாடல் மூலமாக, குரு எத்தகைய பெரும் பாடத்தை எங்களுக்கு நடத்தினார்!

பகவான் இந்த சாதுவை வழியனுப்பும் முன், “இப்பொழுது இந்தப்பிச்சைக்காரன் உன்னை அனுப்பி வைக்கிறான், எனது நண்பனே“ என்று கூறியதோடு, “உன்னிடம் ஒரு பை இருக்கிறதா?” என்று கேட்டார்.

சாதுஜி தனது பையை அவர் முன் வைத்தார். “இந்தப் பிச்சைக்காரன் உனக்கு நிறைய சுமைகளை தர விரும்பவில்லை. உனது பை ஏற்கனவே நிரம்பியிருக்கிறது. அதில் பல பொருட்கள் இருக்கின்றன. இருப்பினும் நீ சிலவற்றை வினியோகம் செய்ய எடுத்துச் செல்“ என்று கூறி அவர் சில ஆப்பிள்கள், ஆரஞ்சுகள், மற்றும் எலுமிச்சை போன்றவற்றை பையில் போட்டு சாதுவிடம் கொடுத்தார். அதில் ஏற்கனவே நெல்லிக்காய் பாட்டில் வேறு இருந்தது. அதன்பின் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்து தந்தார். தேவகி யோகிக்கு ரூ.150 ஐ காணிக்கையாக தந்தார். யோகி அதனைப் பெற்றுக் கொண்டு தேவகியை ஆசீர்வதித்து, அந்த பணத்தை சாதுவிடம் கொடுத்தார். சாதுஜி அவரிடம் இருந்து விடைப்பெற்று சென்னை திரும்பினார். 

நிவேதிதா சித்ராவுடன் திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை நவம்பர் – 14 அன்று சென்று அடுத்தநாள் அவரின் தரிசனத்தை பெற்று திரும்பினார். யோகிஜி அவர்களிடம் சாது சகோதரி நிவேதிதா பற்றி எழுதிய கட்டுரையை வாசிக்க சொன்னதாக கூறினாள். சாதுஜி பகவானுக்கு செவ்வாய்க்கிழமை நவம்பர் 17, 1992 ஒரு கடிதம் எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

நாளை புதன்கிழமை, 18 – 11 – 1992 அன்று, மாலையில்  விழுப்புரத்தில் நமது  ராம்நாம் பிரச்சாரம் ஒரு விழாமூலம் துவங்க இருப்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறோம். திரு. D.S. சிவராமகிருஷ்ணன் அனைத்து பிரச்சனைகளையும் கடந்து அங்கே முன்னதாகவே சென்று கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு எங்களுக்கு தந்தி மூலமும், கடிதம் மூலமும் தகவல் தெரிவித்தார். வானிலையும், சாலை போக்குவரத்து வசதிகளும், சரியாக இருக்குமெனில் அவர் இந்த சாதுவை பசுமலைக்கு, அங்கே 20-11-1992 அன்று நடக்க இருக்கும் பூஜ்ய சுவாமி லலிதானந்தா சரஸ்வதி அவர்களின் ஆராதனா விழாவிற்கு, அழைத்துச் செல்ல விரும்புகிறார். திரு. D.S.கணேசன் விழுப்புரத்திற்கு, மேட்டூரில் இருந்து, நாளை வந்து எங்களோடு இணைகிறார். நாங்கள், நிகழ்ச்சியின் வெற்றிக்கு, உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

சென்னையில் நடக்க இருக்கும் யோகி ராம்சுரத்குமார் 75 வது ஜெயந்தி விழாவிற்கு பூஜ்ய சுவாமி சச்சிதானந்தா தனது வாழ்த்துக்களையும், ஆசியையும் தெரிவித்து இருக்கிறார். இத்துடன் அவரது கடித நகல் இணைக்கப்பட்டுள்ளது. நமது உ.பி.யில் நடந்தேறிய தாழ்மையான பணிக்கு அவர் தனது மகிழ்வை தெரிவித்திருக்கிறார். எங்கள் அனைத்து வெற்றிகளும், உங்களின் குறைவற்ற கருணையாலும், ஆசியாலுமே நிகழ்கின்றன. 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி “

சாது விழுப்புரத்திற்கு நவம்பர் 18, வியாழக்கிழமை சென்றடைந்தார். திரு.D.S. சிவராமகிருஷ்ணன் மற்றும் திரு. சீத்தாராமன் இந்த சாதுவை வரவேற்றனர். திரு.D.S.கணேசன் எங்களோடு இணைந்தார். சாது திரு. D.S.கணேசன் மற்றும் திரு.சீத்தாராமன் போன்றோர், மகாகவி பாரதியின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்த ஆராய்ச்சி அறிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளரான திரு. R.A.பத்மநாபன் அவர்களை, சந்தித்தோம். பின்னர் நாங்கள் அனைவரும் ஸ்ரீ குருவார பஜனா மண்டலிக்கு சென்றோம். அங்கே சாதுவை மங்கள இசையுடன் திரு. செல்வராஜ் மற்றும் திரு. நடராஜன் போன்றோர் வரவேற்றனர். திரு. M.K. சங்கரன் ராம்நாம் பிரச்சார கூட்டத்தை தலைமை தாங்கினார். இந்த சாது யோகி ராம்சுரத்குமார் குறித்தும் ராம்நாம் குறித்தும் பேசினான். அடுத்தநாள் பண்ருட்டியை சேர்ந்த திருமதி. ஆண்டாள் மற்றும் திருமதி. சரோஜா எங்களோடு இணைந்தனர். நாங்கள் அனைவரும் பசுமலைக்கு சென்றோம். ஸ்ரீ ராமானந்தா சரஸ்வதி மற்றும் சுவாமி சதாசிவானந்தா போன்ற, ஞானானந்தா தபோவனத்தை சேர்ந்தவர்களும், எங்களோடு இணைந்தனர். நாங்கள் அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம பாராயணத்தில் கலந்து கொண்டோம். நாங்கள் திரு.D.S.சிவராமகிருஷ்ணன் அவர்களின் இல்லத்தில் சுவாமிமார்களோடும் தாய்மார்களோடும் தங்கினோம். 20-ஆம் தேதி காலையில் நாங்கள் பசுமலையில் கிரிபிரதட்சணம் மேற்கொண்டு, பின்னர் மலையேறி சுப்பிரமணியர் கோயிலுக்கு சென்றோம். பின்னர் நாங்கள் சுவாமி லலிதானந்தா அவர்களின் ஆராதனையிலும் கலந்து கொண்டோம். ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து பல பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். சாதுஜி அனைவரையும் சென்னை யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். இரவு திரு. D.S. கணேசனும், சாதுஜியும் சென்னை திரும்பினர். நவம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை அன்று, பகவான் கட்டளையிட்டபடி, இந்த சாதுவை சந்திக்க, திரு. கல்யாணராமன் மற்றும் அவரது மனைவி முகுந்தா, இந்த சாதுவின் இல்லத்திற்கு வருகை தந்தனர். அடுத்தநாள் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் செயல் கமிட்டியின் கூட்டம் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா திட்டங்களை இறுதி செய்ய கூடியது. விழா குறித்த விவரங்களை பகவானுக்கு தெரிவிக்க  விவேக் மற்றும் நிவேதிதா பகவானின் இல்லத்திற்கான தங்களின் பயணத்தை அடுத்தநாள் மேற்கொள்ள  திட்டமிட்டிருந்தனர். 

பகவான் மெட்டி அணிந்திருந்த படம் . மா தேவகி மெட்டியுடன் இருக்கும் பாதத்தை மகிழ்வோடு ரசி்க்கிறார். 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.29

Glimpses of A Great Yogi in Tamil – Part 2
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – II
சீடன் கண்ட தீக்ஷா குரு

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 2.29 

வடக்கில் பரவும் ராமநாம தீப்பிழம்புகள்

ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் – 16, 1992, அன்று சாதுஜி காலையில் சேலத்திற்கு கிளம்பினார். திரு.D.S. கணேசன் அவரை அங்கே வரவேற்றார். அவர்கள் இருவரும் தருமபுரிக்கு சென்றனர். வாசவி ஹாலில் ஒரு பெரிய ராம்நாம் சத்சங்கம் மாலையில் நடைப்பெற்றது. அதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அடுத்தநாள் அவர்கள் சேலத்திற்கு திரும்பி வந்தனர். சக்தி மண்டலியை சேர்ந்த அன்னையர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு பஜனை நிகழ்ச்சி மற்றும் ராம்நாம் சத்சங்கத்தில் சாது உரையாற்றினார். பகவானின் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை சாதுஜி அன்னை மாயம்மா சமாதிக்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர்கள் மேட்டூர் சென்றனர். அங்கே திரு. P.S. கிருஷ்ணன் மற்றும் ராமலஷ்மி, சக்தி மண்டலியின் கூட்டத்தை அவர்களின் இல்லத்தில் நடத்தினர். அதில் சாது பகவத் கீதை குறித்து உரையாற்றினார். மாலையில் கோயிலில் ராம்நாம் சத்சங்கம் நடைப்பெற்றது. புதன்கிழமை சாதுஜி சென்னைக்கு திரும்பினார். செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 25 அன்று சாதுஜி பகவானுக்கு சுற்றுப்பயணம் குறித்து கடிதம் ஒன்றை எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

உங்களின் அளவற்ற கருணையாலும் ஆசியாலும் நமது ராமநாம பிரச்சாரக்கூட்டம் தருமபுரி, சேலம் மற்றும் மேட்டூர் ஆகிய இடங்களில் பெரும் வெற்றி பெற்றது. திரு.D.S.கணேசன் எங்களோடு சுற்றுப்பயணத்தில் வந்தார். பலர் ராமநாம தாரக ஜபத்தை மேற்கொண்டுள்ளனர். 

இந்த சாது இத்துடன் எமது உ.பி.மாநில சுற்றுப்பயண விவரத்தை  இணைத்துள்ளோம். 1992 அக்டோபர்  5 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை பயணிக்க இருக்கிறோம். நாங்கள் சென்னையிலிருந்து அக்டோபர் 3, 1992 அன்று கிளம்புவோம். உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் திட்டமிடப்பட்ட  நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு உங்களின் ஆசியை வேண்டுகிறோம். 

திரு.D.S. சிவராமகிருஷ்ண ஐயர் பாண்டிச்சேரியில் இருந்து தொலைபேசியில் இன்று காலை அழைத்திருந்தார். அங்கே செப்டம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறும் ராம்நாம் பிரச்சார நிகழ்ச்சியை அவர் உறுதி செய்தார். திரு.D.S. கணேசனும் எங்களோடு அங்கே இணைவார்.

சென்னை சின்மயா மிஷன் இந்த சாதுவை அழைத்து சின்மயா இளைஞர் மாநாட்டை ஆகஸ்ட் – 30 1992 ஞாயிற்றுக்கிழமை அன்று துவக்கி வைக்க கோரியிருக்கின்றனர். சென்னை திருவல்லிக்கேணி சின்மயா மிஷனில் சுவாமி விமலானந்த சரஸ்வதி அம்மையார் நடத்தும் கீதா ஞான யக்ஞத்தில் குமாரி நிவேதிதா கீதா ஸ்லோகங்களை பாடுகிறாள். 

அடையாரின் ஸ்ரீ நாராயண குரு சேவா சங்கம் செப்டம்பர் – 6 அன்று ஸ்ரீ நாராயண ஜெயந்தியை ஏற்பாடு செய்திருக்கிறது. அவர்கள் இந்த சாதுவை கூட்டத்தில் உரையாற்ற அழைத்திருக்கின்றனர். தமிழக டி.ஜி.பியான திரு. S.ஸ்ரீபால் முக்கிய உரையாற்றுகிறார். 

அக்டோபர் 9, 1992 அன்று, காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நூற்றாண்டு விழா, சென்னையில் துவங்க இருக்கின்றனர்.. ஜகதகுரு சேவா சமிதி இந்த சாதுவை துவக்க விழாவில் கலந்து கொள்ள அழைத்துள்ள போதிலும், நமது உ.பி. பயணத்தை முன்னிட்டு, நாங்கள் சுற்றுப்பயணம் முடிந்தப்பின் கலந்துகொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறோம். இருப்பினும் செப்டம்பர் மாதம் காஞ்சி பரமாச்சார்யா அவர்களுக்காக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பேச்சுப்போட்டி, ஒப்புவித்தல் மற்றும் ஓவியப் போட்டிகளை, நாம் விவேகானந்த ஜெயந்தி போட்டிகள் நடத்துவது போல், ஏற்பாடு செய்ய ஒத்துக் கொண்டுள்ளோம். 

நாங்கள் தொடர்ந்து அனைத்து முயற்சிகளிலும் உங்கள் கருணையாலேயே வெற்றி பெற்று வருகிறோம். நாங்கள் இந்த அனைத்து நிகழ்வுகளிலும் வெற்றிபெற உங்கள் ஆசிகளை வேண்டி பிரார்த்திக்கின்றோம். 

உங்கள் ஆசியாலும், கருணையாலும் நமது விரதம் 12 ஆம் நாளை அடைந்துள்ளது. நாங்கள் எங்களது பணியை தடையற்று செய்வதற்கான உடல்தகுதியை பராமரித்து வருகிறோம். சென்ற சனிக்கிழமை முதல் நாங்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய ஒரு தொடர் விரிவுரையை, பாரதீய வித்யா பவனின் ராஜாஜி கல்லூரியில், தொடர்பு பரிமாற்றம் மற்றும் வணிக மேலாண்மை மாணவர்களுக்காக, நடத்தி வருகிறோம். சென்ற வருடம் போலவே, குறிப்பிட்ட இடைவெளியுடன் இந்த விரிவுரையை, அங்கே இந்த வருடம் முழுவதும், வழங்குவோம்.

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

புதன்கிழமை செப்டம்பர் 2, 1992 அன்று சாதுஜி இன்னொரு கடிதம் ஒன்றை பகவானுக்கு எழுதினார். 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

இத்துடன் பாண்டிச்சேரி மற்றும் கடலூரில் நடக்க இருக்கும் ராமநாம மஹாயக்ஞம் துவக்கவிழா அழைப்பிதழை தங்களுக்கு அனுப்புவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். இதன் வெற்றிக்கும் உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

நாங்கள் செப்டம்பர் 4 அன்று காலையில் கடலூருக்கு செல்ல இருக்கிறோம். திரு.D.S.சிவராமகிருஷ்ணன் மற்றும் திரு.D.S. கணேசன் போன்றோர் நேரடியாக தபோவனத்தில் இருந்து வருகிறார்கள். நாங்கள் சென்னைக்கு செப்டம்பர் 6 அன்று திரும்புவோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

செப்டம்பர் 3, 1992 வியாழக்கிழமை சென்னை பெரம்பூரை சேர்ந்த திரு. R.S.V.ரமணன் அவர்களின் இல்லத்தில் ஒரு சிறப்பு ராம்நாம் சத்சங்கம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இந்த சாது விவேகானந்தன் உடன் சோழன் எக்ஸ்பிரஸ் மூலம் கடலூருக்கு சென்றான். திருமதி. ஆண்டாள் இவர்களை பண்ருட்டியில் வரவேற்றனர், திரு. D.S. சிவராமகிருஷ்ணன், திரு. D.S. கணேசன், சீத்தாராமன் மற்றும் பிற பக்தர்கள் கடலூரில் வரவேற்றனர். மாலை சங்கரமடத்தில் ஒரு ராம்நாம் சத்சங்கம் நடைப்பெற்றது. கோவிந்தபுரத்தை சேர்ந்த திரு. ராஜூ பாகவதர் ராமநாம உச்சரிப்பை முன்னின்று நடத்தினார். சாது உரையாற்றிய கூட்டத்தில் பல விஐபிக்கள் கலந்து கொண்டனர். பின்னர் சாதுஜி சிவராமகிருஷ்ணன், கணேசன், சீத்தாராமன் மற்றும் விவேகானந்தன் உடன் பாண்டிச்சேரி சென்றனர். சனிக்கிழமை அன்று ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்ற சாதுவை திரு. N.K. கிருஷ்ணமூர்த்தி என்ற ஆசிரமத்தின் வரவேற்பாளர் வரவேற்றார். பகவானின் பக்தரான சௌ. சுஜாதா விஜயராகவன் சாதுவை அவரது இல்லத்தில் வரவேற்றார். ராம்நாம் சத்சங்கம் நடைபெற இருந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் சாது கோயிலின் கௌரவ மரியாதைகளோடு வரவேற்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை, சாதுஜி ஹயக்ரீவர் கோயிலுக்கு சென்றார். ஆடிட்டர் ஸ்ரீ கணேசன் அவர்களின் இல்லத்தில் சாது பூரண கும்பத்தோடு வரவேற்கப்பட்டார். பின்னர் சாதுஜியும், விவேக்கும் சென்னை திரும்பினர். ஸ்ரீ நாராயணகுரு ஜெயந்தி விழாவில் சாது கலந்து கொண்டார். தமிழக டி.ஜி.பியான திரு. S. ஸ்ரீபால், புகழ்பெற்ற பாடகரான திரு. பித்துக்குளி முருகதாஸ் அவர்களும் விழாவில் கலந்து கொண்டு சாதுவின் உரையை பாராட்டினா். 

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 13 அன்று, காஞ்சி காமகோடி பீட ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் பற்றி, நகரத்தின் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு இடையே போட்டியும், புகைப்பட கண்காட்சி ஒன்றும் திருவல்லிக்கேணி இந்து மேல்நிலை பள்ளியில் நடத்தப்பட்டது. சாது பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினார். மாலையில் சென்னை ஹ்யூமர் க்ளப் நடத்திய ஒரு கூட்டத்தில் இந்த சாது, “பகவான் யோகி ராம்சுரத்குமாரின் நகைச்சுவை“ குறித்து பேசினான். சனிக்கிழமை செப்டம்பர் 19 அன்று திரு. பாலகுமாரன் தனது மனைவி திருமதி. சாந்தாவுடன் சாதுவின் இல்லத்திற்கு வந்திருந்தார். சாதுஜி அவர்களுக்கு பகவான் யோகி ராம்சுரத்குமார் படத்தை பரிசளித்தார். அடுத்த நாள், திரு. மோகன்தாஸ் அவர்களின் இல்லத்தில் நடந்த காயத்ரி ஹோமம் மற்றும் ராம்நாம் சத்சங்கத்தில் பலர் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை சுவாமி அரூபானந்தா  தொலைபேசியில் அழைத்தார். திரு் குட்டி கிருஷ்ணன் வந்து, சாதுவை ஸ்ரீ நாராயண மந்திரத்திற்கு அழைத்துச் சென்றார். சாது, ஸ்ரீ நாராயண குரு மஹாசமாதி நாள் விழாவில் தீப பூஜை மற்றும் நாம பூஜை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து உரையாற்றினார். 

சாது, பகவானுக்கு 25 – 9 – 1992 அன்று ஒரு கடிதத்தை எழுதினார். தனது கடலூர் நிகழ்ச்சி மற்றும் “தத்துவ தர்சனா”வின் சிறப்பிதழை சுவாமி விவேகானந்தரின் சிகாகோ பிரசங்கத்தின் நூற்றாண்டினை நினைவு கூறும் விதமாக வெளியிட இருப்பது குறித்தும் கடிதத்தில் குறிப்பிட்டார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

கடலூரில் உள்ள ஸ்ரீ சங்கர பக்த ஜன சபாவில் நவராத்திரி விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த சாதுவை அழைத்து, ‘சக்தி வழிபாடு’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புரையை ஞாயிற்றுக்கிழமை 27-9-1992 அன்று இரவு 7.30 மணிக்கு நடத்துமாறு கோரியிருக்கிறார்கள். இந்த சாது கடலூருக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் கிளம்பிச் சென்று பிறகு திங்கள்கிழமை காலையில் திரும்பி வந்துவிடுவான். இந்த சாது உங்கள் ஆசியையும், கருணையையும் இந்த நிகழ்வின் வெற்றிக்கு கோருகின்றான்.

“தத்துவ தர்சனா”வின் சிறப்பிதழ் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ பிரசங்கத்தின் நூற்றாண்டு விழா ஆண்டினை நினைவு கூறும் வகையில் வெளிவருகிறது. அது தற்சமயம் அச்சில் உள்ளது, திங்கள்கிழமை அன்று அது தயாராகும். இந்த சாது, 29-9-1992 மாலை அல்லது புதன்கிழமை காலையில் அதன் முதல்பிரதியை தங்களின் பாதங்களில் சமர்ப்பிக்க அங்கு வருவதோடு, உ.பிக்கு சுற்றுப்பயணம் அக்டோபர் 3, 1992 அன்று கிளம்பும் முன் உங்கள். ஆசியையும், தரிசனத்தையும் பெற விரும்புகிறான். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், என்றும் உங்கள் பணியில்,

சாது ரங்கராஜன். “

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 அன்று சாது விவேக்குடன் கடலூருக்கு மீண்டும் கிளம்பினார். திருமதி. ஆண்டாள், வள்ளி மற்ற அன்னையர்கள் பண்ருட்டி ரயில் நிலையத்தில் சந்தித்தனர். ஸ்ரீ சங்கர பக்த ஜன சபாவின் அலுவலக பொறுப்பாளர்களான, திரு. ஸ்ரீனிவாசன் மற்றும் திரு. ராமகிருஷ்ணன் போன்றோர் சாதுவை திருப்பாதிரிப்புலியூரில் வரவேற்றனர். சாது சங்கர பக்த ஜன சபாவில் அங்கு குழுமியிருந்தவர்களிடையே உரையாற்றினார். விவேக்கை கடலூரில் விட்டுவிட்டு, சாது சென்னைக்கு இரவே திரும்பினார். 

வியாழக்கிழமை, அக்டோபர் – 1, 1992ல் சாது, திருமதி. ராஜலட்சுமி, திரு.N.S.மணி, திருமதி. பாரதி மற்றும் டாக்டர். ராதாகிருஷ்ணன் போன்றோர் திருவண்ணாமலைக்கு சென்று பகவானின் இல்லத்திற்கு காலை 10.30 மணிக்கு அடைந்தனர். விவேக் ஏற்கனவே அங்கு வந்திருந்தார். குரு எங்களை வரவேற்றார். பேரா. தேவகி மற்றும் அவரது குழுவினர், மற்றும் ரோஸோரா போன்றோர் அங்கே இருந்தனர். “தத்துவ தர்சனா”வின் ஆகஸ்ட் – அக்டோபர் 1992 தேதியிட்ட இதழ், சுவாமி விவேகானந்தர் அவர்களின் சிகாகோ பிரசங்கத்தின் நூற்றாண்டு விழாவை நினைவு கூறும் விதமாக வெளியிடப்பட்டது, பகவானின் பாதங்களில் வைக்கப்பட்டது. வழக்கம்போல் பல பக்தர்கள் வந்து ஆசிப!பெற்று சென்றவண்ணம் இருந்தனர். குரு உள்ளே சென்று லீ லோசோவிக் அவர்களின் பாடல்களை கொண்டுவந்து  சாதுவிடம்  அவைகளை படிக்குமாறு கூறினார். பின்னர் அவர் எங்களை “தத்துவ தர்சனா” இதழின் கட்டுக்களை பிரிக்கச் சொன்னார். அவர் சில பிரதிகளை எடுத்து, அதன் அட்டைப்படத்தினை வெகுவாகப் பாராட்டினார். யோகி ஆச்சரியத்தோடு, “சுவாமி விவேகானந்தா!  இது மிகவும் அழகாக இருக்கிறது. இந்தப்புகைப்படத்தை எங்கிருந்து பெற்றாய்? “ எனக்கேட்க சாது, “ ராமகிருஷ்ணமிஷனில் இருந்து மஹராஜ்“ என பதிலளித்தார். அவர் அங்கிருந்த அனைவருக்கும் அந்த பிரதியை வழங்கியதோடு தனக்கு பத்து பிரதிகள் வேண்டுமென்றார். சாதுஜி பகவானிடம், “மஹராஜ் இந்த இதழ் தலையங்கம் ஜூலை மாதத்தில் உங்களுடனான எனது சுவாமி விவேகானந்தர் குறித்த உரையாடலே” என்றார். யோகி, “அப்படியா ? தயவு செய்து படி“ என்றார். சாது தலையங்கத்தை படித்தார். தலையங்கத்தின் துவக்கத்தில் காஞ்சன்காட்டில் சகோதரி நிவேதிதா மையம் துவக்குவது குறித்த திட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை கேட்ட பகவான், “நீ காஞ்சன்காட்டிற்கு போனாயா ? அந்த திட்டம் என்னவானது ?“ என வினவினார். சாது பகவானிடம், “குருவே, திரு. பாலசுப்ரமணியன் மஸ்கட்டிற்கு விஜயதசமிக்கு பிறகு செல்ல இருக்கிறார். அவர் ஜனவரி மாதம் வருவார். அதன்பின் அவர் அந்த சொத்தினை ஒப்படைப்பதாக கூறினார். எனவே நான் காஞ்சன்காடு போகவில்லை. ஆனால் அவர் சென்றார்.“ பகவான், “ஓ! அப்படியா, சரி, “ என்றார். அவர் சாதுவை தலையங்கத்தை தொடர்ந்து வாசிக்கும்படி சொன்னார். அவர் அதனை மிகவும் கவனமாக கேட்டார். சாது படித்து முடித்தப்பின் இந்த இதழில் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி குறித்த ஒரு அறிவிப்பு இருப்பதாக சொன்னார். யோகி அதனையும் படிக்கச் சொன்னார். சாது அதனை படித்தார். சாது பகவானிடம் நமது திட்டமான சண்டி ஹோமத்தை ஜெயந்தியின் போது நடத்த இருப்பதைப் பற்றி கூறினார். பகவான், “நீ விரும்பினால் நடத்திக்கொள். வழக்கமாக ஆயுஷ் மற்றும் ஆவஹந்தி ஹோமம் மட்டுமே ஜெயந்திக்கு நடத்துவர். ஆவஹந்தி முக்கியமானது“ என்றார். சாதுஜி, “ஆமாம் குருவே. இவைகளோடு காயத்ரி ஹோமமும் உண்டு. சண்டி ஹோமம் வேறு ஏதேனும் நாளில் நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதுபோலவே செய்கிறோம்.“ என்றார். பகவான் எந்த பதிலும் அளிக்கவில்லை. சாதுஜி தொடர்ந்தார்: “எனினும், நாங்கள் அகண்ட ராம்நாம் பஜனை“ வைத்துள்ளோம்.” பகவான், “என் தந்தையின் ஆசீர்வாதங்கள்! விழா மிகப்பெரிய வெற்றி பெரும்! “ என வாழ்த்தினார். 

சாது தனது உ.பி. சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலை பகவானின் முன் வைத்தார். யோகி அதனை படிக்கச் சொன்னார். சாது அதனை படித்தார். யோகி சாதுவிடம் திரும்பத்திரும்ப கிளம்பும் நாள் மற்றும் திரும்பும் நாள் குறித்து கேட்டார். பின்னர் அவர், “எனது தந்தையின் வாழ்த்துக்கள். இந்த சுற்றுப்பயணம் பெரும் வெற்றியடையும். உனக்கு உ.பி.யில் மிகச்சிறந்த சுற்றுப்பயணமாக இந்த ராம்நாம் பிரச்சாரம் அமையும்“ என்றார். சாது, “குருவே, கணேசனும் என்னோடு வருகிறார்” என்றார். பகவான், “ஆமாம். என் தந்தையின் ஆசீர்வாதங்கள் கணேசனுக்கும்“ என்றார். சாது மேலும், “திரு.T.S.சின்ஹா மற்றும் R.K.லால் ஆகியோரும் எங்களோடு அலகாபாத்தில் இணைகின்றனர்” என்றார். பகவான்: “ என் தந்தை சின்ஹா மற்றும் லாலை ஆசீர்வதிக்கிறார்.“ யோகிஜி நினைவுப்படுத்திக்கொண்டு, “சென்றமுறை வடக்கில் இருந்து ஒரு சுவாமிஜி வந்தார் அல்லவா?“ என்று வினவினார்.

சாது: “ஆமாம், மஹராஜ், மதுரா மற்றும் ஹரித்துவாரில் இருந்து.“

யோகிஜி : “ அவர்கள் உன்னோடு சுற்றுப்பயணத்தில் இணைகிறார்களா?“

சாதுஜி: “ இல்லை குருவே. இவர்கள் இணையவில்லை “

பகவான்: “ ஓ! அவர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் இல்லையா?“

சாதுஜி தொடர்ந்தார்: “ மஹராஜ், ராம தீர்த்தா ஜெயந்தி லக்னோவில் அக்டோபர் 20, 21 மற்றும் 22ல் முடிந்தப்பின் நாங்கள் திரும்பிவிடுவோம்.“

பகவான் : “ எந்தெந்த நாட்கள் ? “

சாதுஜி மீண்டும் நாட்களை கூறினார். பகவான், “ஜெயந்தி மிக நன்றாக நடைபெறும், “ என்றார். 

சாதுஜி பகவானிடம் தான் உ.பி.யில் இருந்து திரும்பியவுடன் நீலகிரி மற்றும் மதுரையில் நிகழ்ச்சிகள் இருப்பதாக கூறினார். திரு. D.S. சிவராமகிருஷ்ண ஐயர் மதுரை நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார் என்றார். பகவான், “மதுரை நிகழ்வு எப்போது?“ என வினவினார். சாது, “நவம்பர் மத்தியில்“ என பதிலளித்தார். பகவான், “எனவே, நீ திரும்பி வந்தவுடன் நீ மதுரைக்கு போய் விடுவாய்“ என்றார். 

யோகிஜி “தத்துவ தர்சனா”வை காட்டி, “இதனை அச்சிட எவ்வளவு பணம் செலவாகிறது ?“ என்று கேட்டார். 

சாது : “ ஒரு வெளியீட்டிற்கு 3000 ரூபாய் ஆகிறது” 

பகவான்: “ உன்னால் இதனை நிர்வகிக்க முடிகிறதா ? “ 

சாது : “ மஹராஜ் நாங்கள் வெளியே சென்று பணத்திற்காக கேட்காத போதும், உங்கள் கருணையால், எங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகின்றன. நமது பணி பணத்திற்காக சிரமம் பட்டதில்லை” 

பகவான், “என் தந்தையின் கருணை” என்றார். யோகி கைகளை உயர்த்தி சாதுவை ஆசீர்வதித்தார். சாதுஜி ராஜலட்சுமி மற்றும் அவரது கணவர் மணியை அறிமுகப்படுத்தி அவர்களும் எங்களுக்கு உதவி வருகின்றனர் என்றார். 

பகவான், ராதாகிருஷ்ணன் இடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டார். தான் இப்போது நலமாக இருப்பதாக கூறினார். பகவான் விவேக்கிடம் திரும்பி அவனது உடல்நலம் குறித்து விசாரித்தார். அவனும் தான் நலமாக உள்ளதாக கூறினான். சாதுஜி பகவானிடம் விவேக் நேரடியாக சிதம்பரத்தில் இருந்து வந்ததாக கூறினார். பகவான் ஆர்வத்துடன், “ சிதம்பரமா ? “என்றார். சாது, “ ஆமாம் மஹராஜ், அவன் அங்கே எம். ஈ சேர, அக்டோபர் 11 அன்று, ஒரு நேர்காணலுக்காக சென்றான். நான் அவனிடம் பேராசியர் முத்துவீரப்பன் அவர்களை சந்தித்து எவ்வளவு பணம் தேவைப்படும் என அறியுமாறு கூறினேன். நுழைவு நன்கொடை மற்றும் பிறவற்றை நாம் கட்ட இயலாது என்று சாது கூற, யோகி விவேக்கிடம் திரும்பி அவனிடம், “ நீ எம்.ஈ. படிக்க விரும்புகிறாயா ? “என்று வினவினார். விவேக், “ ஆமாம் “ என பதிலளித்தார். குரு புன்னகைத்தவாறே, “ நீ படிக்கலாம். ஆனால் நீ உன் தந்தையை தொந்தரவு செய்யக்கூடாது. அவரிடம் பணம் இல்லை. நீயும், நிவேதிதாவும் உங்களது தந்தைக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் மேற்கொண்டு படிக்கலாம்.” என்றார். சாது பகவானிடம் நிவேதிதா 50 % ஆப்பிள் உதவித்தொகையை அவளது கல்விக்கட்டணத்தில் பெற்றிருக்கிறாள். இருப்பினும் இன்னமும் 15000 ரூபாய் தேவைப்படுகிறது அது எனக்கு ஒரு வெள்ளையானை என்று கூறினார். பகவான் தலையை அசைத்து விட்டு விவேக்கிடம் மீண்டும், “ஆமாம், விவேக்கும், நிவேதிதாவும் மேற்கொண்டு தங்களது தந்தைக்கு சிரமம் கொடுக்காமல் படிக்கலாம்“ என்றார். சாது திருஞானசம்பந்தம் அவர்களிடம் தகவல்களை கோரியிருப்பதாக கூறினார். பகவான், “என் தந்தையின் கருணையால்  அனைத்தும் சரியாகும்” என்றார். 

குரு, பாரதி மற்றும் அங்கிருந்த பெண்களுக்கு மலர்களை ஆசீர்வதித்து வழங்கினார். சாது பகவானிடம் தனது அண்டை வீட்டுக்காரர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது, பகவான் ஆசீர்வதித்து தந்த கல்கண்டை பகவானின் பெயரைச் சொல்லி தண்ணீரில் கரைத்து அவருக்கு கொடுத்ததாகவும் அவர் குணமாகிவிட்டதாகவும் கூறினார். யோகி, “தந்தையின் கருணை “ என்றார். சாது பகவானிடம் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பகவானின் படங்களை வினியோகம் செய்ய அச்சிட்டு தந்தார் என்றும், அவரது சகோதரர் உடல்நலம் குன்றியிருப்பதாகவும் கூற, பகவான் தானும் தந்தியை பெற்றதாக கூறி, அவரது சகோதரர் எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என கேட்டார். சாது, “ நேற்று மாலை “ என்றார். “ தந்தை அவரை கவனித்துக் கொள்வார், அவர் நலமடைவார் “ என்றார். 

சாது, ராம்நாம் நோட்டு புத்தகங்களை அச்சிட்டு தரும் மகேந்திரன் என்பவரைப்பற்றி பகவானிடம் கூறினார். பகவான் மகேந்திரனுக்கு தனது ஆசியை வழங்கினார். டாக்டர். ராதாகிருஷ்ணன் சுரேஷின் தாயார் உடல்நலம் குன்றி இருப்பதைப்பற்றி சொன்னார். யோகி, “எந்த சுரேஷ்?“ என கேட்டார். ராதாகிருஷ்ணன், “ நமது காயத்ரி யக்ஞங்களை நடத்தும் ராஜபுரோகித் சுரேஷ் “ என்றவுடன் யோகி உடனடியாக புரிந்து கொண்டு அவர் விரைவாக குணமடைய ஆசீர்வதித்தார். சாதுஜி பகவானிடம் நிவேதிதா தனது பேராசிரியர் உடன் பின்னர் வருவார் என்றார். பகவான், “ஆமாம். நிவேதிதாவிற்கு எனது தந்தையின் ஆசீர்வாதங்கள் “ என்றார். 

போஸ்ட்மேன் சில மணியார்டர்களை பகவானுக்காக கொண்டு வந்திருந்தார், பகவான் அந்த தொகைகளைப் பெற்றார், அது மொத்தம் ரூபாய். 230. அதனை சாதுவின் கைகளில் வைத்து சிறிதுநேரம் சாதுவிற்கு ஆன்மீக சக்தியை ஊட்டினார். அவர் சில ஆப்பிள்களையும் கொடுத்தார். விவேக்கிற்கு பேராசிரியர். தேவகி கொண்டுவந்த தேனில் ஊற வைக்கப்பட்ட நெல்லிக்காயை தந்த யோகி, “இதை நான் இங்கு வைத்திருந்தால் எறும்புகள் வரும்” என்றார். தேவகி அது ஒன்று தான் உள்ளது என்றார். யோகி சிரித்தவாறே விவேக்கிடம், “அந்த ஒன்றை மட்டும் நீ எடுத்துக்கொண்டால் நீ ஆரோக்கியமாக இருப்பாய்” என்றார். யோகி இரண்டு இளநீர்களையும் விவேக்கிற்கு கொடுத்தார். 

சாது பகவானிடம் வண்ண ஒளி ஊடுருவும் நேர் நிழற்பட தகடுகளை  (Transperancies) கொடுத்து, அதிலிருந்து அவரது புகைப்படங்களை எடுப்பது குறித்து கூறினார். பகவான் அவைகளை பார்வையிட்டு அதிலிருந்து எப்படி புகைப்படங்கள் எடுக்கப்படுகிறது என வினவினார். சாது விளக்கமாக கூறினார். பகவானுடைய படங்களை பெரிய வடிவில் தயார் செய்ய விரும்புவதாக கூறிய தேவகியிடம் பகவான் அவைகளை கொடுத்தார்.

சாது பகவானிடம் அவரது கருணையால் தனது விரதத்தில் தான் 50-வது தினத்தில் இருப்பதாகவும், தான் அனைத்து வேலைகளையும் செய்து வருவதாகவும் கூற, பகவான், “அனைத்தும் தந்தையின் கருணை” என்றார். 

பகவான் சாதுவிடம், ‘தி இந்து’ நாளிதழில் உள்ள காஞ்சி பரம்மாச்சார்யா அவர்களின் நூற்றாண்டு விழா குறித்த செய்தியை  படிக்குமாறு கூறினார். சாது பகவானிடம், பரமாச்சார்யாவின் நூறு புகைப்படங்கள் மடத்தின் பக்தர்களால் ஐந்து லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டவை, திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில், யோகிராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாணவர்களுக்கான போட்டிகளின் போது, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தாகவும், யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆய்வு மையத்தினரால் 62 ஸ்தலபுராண புத்தகங்கள் காஞ்சி மடத்திற்கு தரப்பட்டிருகிறது என்றும் கூறினார். பகவான் சாதுவிடம் அது கடனா அல்லது அன்பளிப்பா என வினவினார். சாது, “ பயன்பாடு முடிந்து விட்டால் அவர்கள் திருப்பித் தரலாம் “ என்றார். யோகி, “ அதுவே சரி “ என்றார். 

சில காவல்துறை அதிகாரிகள் வந்து, திருமதி திலகவதி ஐ.பி.எஸ். பகவானுடைய தரிசனத்திற்காக வந்து கொண்டிருப்பதாக தகவல் அளித்தனர். நாங்கள் யோகியோடு சிறிது நேரம் கூட செலவழித்தோம். அவர் அந்தப் பெண்மணி வருவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக எங்களை வழியனுப்பினார். இந்த சாதுவின் தண்டம் மற்றும் தேங்காய் சிரட்டையை ஆசீர்வதித்து தந்து “இது நீலகிரி மக்கள் வழங்கிய தண்டம் தானே?“ என்று யோகி கேட்க, சாது, “ஆமாம். மஹராஜ்“ என்றார். பகவான் மீண்டும், “நீ இதனை வேறு எதற்கும் பயன்படுத்தவில்லை தானே? “ என்று கேட்க, சாது, “இல்லை மஹராஜ். இது எனது யக்ஞ தண்டம் மட்டும்தான்” என்று கூற யோகி மீண்டும் சிரித்து ஆசீர்வதித்தார். யோகியிடம் இருந்து விடைபெறும் முன் சாது, “ நான் உ.பி. சுற்றுப்பயணத்திற்கு வருகிறேன்” என்றார். பகவான் தன் தலையை அசைத்து, “சரி “ என்றார்.

விவேக் பகவானிடம், “நான். அக்டோபர் 10 அன்று நேர்காணலுக்கு செல்லும் முன் உங்கள் ஆசியை பெற வருகிறேன்“ என்றான். குரு புன்னகைத்தவாறே, “ஆமாம் 10 – ஆம் தேதி வா“ என்றார். பகவான் அனைவரையும் ஆசீர்வதித்தார். யோகி ராஜியிடம் அவர் பெயரைக் கேட்டார். “ராஜலட்சுமி“ என்று அவள் பதிலளிக்க அவளையும் ஆசீர்வதித்தார். நாங்கள் அவர் இல்லத்தை விட்டு வெளியே வந்தவுடன் மற்றவர் மதிய உணவுக்கு சென்றார்கள். சாது பால் மற்றும் இளநீரை எடுத்துக் கொண்டான். பின்னர் நாங்கள் சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமணாச்ரமம் சென்று அதற்குப்பின் திருக்கோயிலூருக்கு சென்றோம். நாங்கள் தபோவனத்திற்கு சென்று திரு.D.S.சிவராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்தோம். உலகளந்த பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு நாங்கள் சென்னைக்கு இரவு வந்து சேர்ந்தோம். 

வெள்ளிக்கிழமை, .அக்டோபர் 2, 1992ல்  யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் செயற்குழு  சாதுவின் முன்னிலையில் கூடி, டிசம்பர் மாத பகவான் ஜெயந்திக்கான முடிவுகளை எடுத்தனர். சனிக்கிழமை சாது அனைவரிடமும் விடைப்பெற்று திரு. D.S.கணேசன் உடன் பிரயாகைக்கு சென்றார். நாங்கள் பிரயாகைக்கு திங்கள்கிழமை அக்டோபர் 5 அன்று சென்று சேர்ந்தோம், காலையில் இரயில் நிலையத்தில் உ.பி.யின் ராம்நாம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. T.S.சின்ஹா மற்றும் அவர் மகன், திரு. ராஜீவ் அவர்கள், எங்களை வரவேற்று அவர்களது இந்து சின்ஹா காட்டேஜ் என்ற பங்களாவிற்கு அழைத்துச் சென்றார்கள். காலையில் ரசூலா காட்டில் நாங்கள் கங்கா ஸ்நானம் செய்தோம். சித்திரகூடத்தின் கிராமோதய பல்கலைக்கழகத்தின் திரு. திவாரி இந்த சாதுவை சந்தித்து அவரது நிகழ்ச்சியையும், சித்திரகூடத்து விஜயத்தையும் உறுதி செய்து கொண்டார். மாலையில் நாங்கள் ஹனுமன் கோயிலுக்கு விஜயம் செய்தோம். செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 6, 1992, விஜயதசமி நாளில் கங்கையில் குளித்துவிட்டு சாது, துர்கா பூஜை மற்றும் ஹோமம்  திரு சின்ஹாவின் இல்லத்தில்  செய்துவிட்டு, தனது 54 நாள் விரதத்தை இரவில் முடித்துக் கொண்டார். புதன்கிழமை சாதுஜி திரு. சின்ஹா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உடன் பனாரஸ் சென்றார். அங்கே திரு. சின்ஹாவின் மகன் திரு. பங்கஜ் எங்களை வரவேற்றார். நாங்கள் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதமாதா கோயில், துர்க்கை கோயில் மற்றும் சங்கட் மோசன் கோயிலுக்கு முற்பகலில் சென்றோம். பிற்பகலில் கங்கையில் ஸ்நானம் செய்துவிட்டு காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் சென்றோம். அடுத்தநாள் நாங்கள் அயோத்திக்கு சென்றோம். நாங்கள் கன்டோன்மென்ட்டில் உள்ள டோக்ரா ரெஜிமெண்ட் கோயிலில் தரிசனம் செய்து ஹனுமான் காட் மற்றும் நாகேஸ்வரா கோயிலுக்கும் சென்றோம். சரயு நதியில் குளித்துவிட்டு, நாங்கள் ராம்ஜன்மஸ்தான் சென்று அங்கே ராம்லாலா தரிசனத்தை பெற்றோம். நாங்கள் சீதா கி ரஸோய் மற்றும் கனக் மந்திர் சென்றோம். ராமரின் அரண்மனையில் அமர்ந்து நாங்கள் ராமநாம ஜபம் செய்தோம். நாங்கள் அலகாபாத்திற்கு அடுத்தநாள் திரும்பினோம். 

அக்டோபர் 10, சனிக்கிழமை காலையில் சாதுஜி, சின்ஹா மற்றும் கணேசன் போன்றோர் ஜான்பூர் சென்றனர். திரு. J.P. அஸ்தானா எங்களை ஜான்பூரில் வரவேற்றார். திரு. ராம் சரித் லால் அவர்களின் இல்லத்தில் பிரம்மாண்டமான ராம்நாம் சத்சங்கம் நடைப்பெற்றது. சாதுஜி கூட்டத்தினரிடையே ஹிந்தியில் உரையாற்றினார், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம். பெற்றது. பிரசாதம் மற்றும் ஜப மாலைகள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பின்னர் நாங்கள் அஸ்தானாவுடன் அஜம்கர்க்கு ராம்நாம் பக்தர்களை சந்திக்க பயணித்தோம். அடுத்தநாள் காலை நாங்கள் அலகாபாத் திரும்பினோம். அங்கே ஒரு பெரும் சத்சங்கம் மாலையில் இந்து சின்ஹா காட்டேஜ்ல் நடைப்பெற்றது. அதில் ஏராளமான ராம்நாம் பக்தர்கள் கலந்து கொண்டனர். திரு. முனிஷ் அஸ்தானா என்பவர் ரே பேரலியில் நிகழ்ச்சியை உறுதி செய்வதற்காக வந்திருந்தார். திங்கள்கிழமை அக்டோபர் 12 அன்று நாங்கள் கர்விக்கு சென்று, வால்மீகி மலைக்கும் சென்றோம். பின்னர் நாங்கள் சித்திரகூடத்திற்கு வந்து ஜெய்புரியா தர்மசாலாவில் தங்கினோம். மாலையில் நாங்கள் சித்திரகூட தாம் மற்றும் ராம் காட் போன்ற, மத்திய பிரதேசத்தின் எல்லைக்கு உட்பட்ட, பகுதிகளுக்கு சென்று சித்திரகூட பரிக்ரமா செய்தோம். நாங்கள் லஷ்மண் மலை, காம்தா கோயில் மற்றும் பரதன் ராமனை வனவாசகாலத்தில் சந்தித்த பரத் மிலாப் மண்டபம் என்ற இடத்திற்கு சென்றோம். திரு. கணேசன் பரிக்ரமாவினால் மிகவும் களைப்புற்ற நேரத்தில் நான் யோகி ராம்சுரத்குமார் பிரசாதத்தை கொடுத்தேன் அது அவரை புத்துணர்வு பெற வைத்தது. நாங்கள் பயஸ்வினி ஆற்றங்கரையில் சிறிது நேரம் செலவழித்தோம். சித்திரகூடத்தின் கிராமோதய பல்கலைகழக மாணவர்கள் சாதுவை அழைத்து அடுத்தநாள் நிகழ்ச்சியை உறுதி செய்தனர். 

அக்டோபர் 13, 1992 செவ்வாய்க்கிழமை அன்று சாது சித்திரகூடத்தின் கிராமோதய  பல்கலைகழகத்திற்கு வந்து, அங்கே சீதா ராம் குடீரில் தங்கினார். அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்கள் இடையே, “தனி மனித வாழ்விலும், சமூக வாழ்விலும் யோகா மற்றும் அதன் பயன்பாடுகள்” குறித்து சாது உரையாற்றினார். முன்னதாக அவரை திரு. ராம்குமார் ராமகிருஷ்ணா என்ற யோகா துறையின் தலைவர் வரவேற்றார். சாது பெரும் ராமநாம ஜப யக்ஞத்தை நடத்தினார். அதில் மாணவர்களும், பணியாளர்களும், ஆர்வத்தோடு பங்கு கொண்டனர். சாதுஜி தனது பேச்சின் போது எங்கெல்லாம் ராம்நாம் உச்சரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஹனுமான் தோன்றுவார் என்றார். சில மாணவர்கள் ஹனுமான்ஜி இங்கே இருக்கிறாரா என வினவினர். சாதுஜி சிரித்தவாறே அவர் நிச்சயமாக இங்கிருப்பார் என்றார். அது நடந்தேறியது, சொற்பொழிவுக்கு பிறகு அனைத்து மாணவர்கள் மற்றும் பணியாளர்களும் ஹாஸ்டலின் உணவு கூடத்தில் மதிய உணவிற்கு அமர்ந்தபோது, மதிய உணவாக சப்பாத்தி மற்றும் கறி அவர்களின் முன் பரப்பப்பட்டது. சாது போஜன் மந்திரத்தை உணவை உட்கொள்வதற்கு முன் சொல்லிக்கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு பெரிய குரங்கு ஒன்று உணவுக் கூடத்தில் நடந்து வந்து சாதுவின் தட்டில் இருந்த சப்பாத்தியை பறித்துக் கொண்டு அந்த கூடத்தில் இருந்து மறைந்து போனது. மாணவர்களும், பணியாளர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். சாது, தனது குரு, ஹனுமானை அழைத்து சாது சொல்வதை சரி என்று நிரூபித்தார் என்றார். மாலையில் சாதுஜி மற்றும் அவரது குழுவினர் பிரமோத்வன் முதியோர்கள் இல்லம் மற்றும் ஜானகி குண்ட் சென்று, பிறகு மந்தாகினியில் ஸ்நானம் செய்தனர். சித்திரகூடத்தில் இருந்து கிளம்பும் முன் சாதுஜி, மானனீய  நானாஜி தேஷ்முக் என்ற கிராமோதய பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அவர் வெளியே சென்றிருந்தமையால் அக்கடிதத்தை சாதுஜி ராமகிருஷ்ணா அவர்களிடம் கொடுத்து, திரு. நானாஜி அவர்களிடம், ‘தத்துவ தர்சனா’ இதழின் சில பிரதிகள் மற்றும் நிவேதிதா அகாடமியின் சில வெளியீடுகள் உடன் சேர்ப்பிக்க சொன்னார். மேலும் சாதுஜி, பல்கலைக்கழக நூலகத்திற்கு சில நூல்களை அன்பளிப்பாக வழங்கினார். 

புதன்கிழமை, சாதுஜி மற்றும் குழுவினர் அத்ராவை அடைந்தனர். திரு. ஜக் பாத் சிங் மற்றும் திரு. J.P. த்விவேதி, அவர்களை வரவேற்றார். சாதுஜி அத்ராவின் பட்ட மேற்படிப்பு கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் முன்பு,  பாரதிய சம்ஸ்க்ரிதி மே ஜீவன் மூல்யோம் — ‘இந்திய கலாச்சாரத்தில் வாழ்க்கை மூல்யங்கள்’ — என்ற உரையை இந்தியில் ஆற்றினார். அந்தப் பேச்சு முதல்வர் மற்றும் சமஸ்கிருத துறையின் தலைவர், மாணவர்கள், பணியாளர்கள் போன்றவர்களால் பாராட்டப்பட்டது. ராம்நாம் சத்சங்கமும் நடத்தப்பட்டது. திரு. ஜக் பாத் சிங் அவர்கள்  அகில உலக ராம்நாம் இயக்க துண்டுபிரசுரங்களை ஹிந்தியில் அடித்து அனைவருக்கும் வழங்கவுள்ளதாக அறிவித்தார். அத்ராவில் இருந்து நாங்கள் பாந்தாவிற்கு வந்தோம். 

வியாழக்கிழமை காலையில்  பாந்தாவின் D.A.V. கல்லூரியில் வயதானவர்களிடையே ஒரு யோகா வகுப்பில் சாது யோகா மற்றும் ஜப சாதனா குறித்து உரையாற்றினார். பின்னர் அவர் பம்பேஸ்வர் பஹாட், சங்கட் மோசன் மந்திர் மற்றும் குன்ஞ் பிஹாரி லால் கோயிலுக்கு சென்றார். மதியம். அவர் D.A.V. உயர்நிலை பள்ளியில் மாணவர்களிடையே இந்திய நெறிமுறைகள் மற்றும் யோகா குறித்து பேசினார். மாலையில் பெரிய ராம்நாம் சத்சங்கம் நடந்தது அதில் சாது, ஜப யோகா மற்றும் பகவான் யோகி ராம்சுரத்குமார் பற்றி பேசினார். அடுத்தநாள் காலை நாங்கள் அலகாபாத் திரும்பினோம். மீரட்டை சேர்ந்த திரு. B.D. ஷர்மா ஒரு தகவலை அனுப்பி அங்கு நிகழ்ச்சிகளை உறுதி செய்தார். 

வெள்ளிக்கிழமை அக்டோபர் 17ல் சாதுஜி திரு. T.S.சின்ஹாவின் பேரனின் பெயர்சூட்டும் விழாவிற்கு தலைமை தாங்கினார். சாது அந்த குழந்தைக்கு பரத் என பெயர் சூட்டி அன்னபிரசனம் செய்து வைத்தார். பல உறவினர்களும், நண்பர்களும் அங்கு நடந்த ராமநாம ஜப யக்ஞத்தில் கலந்து கொண்டனர். அன்று மதியம் சாதுஜி, திரு. T.S.சின்ஹா மற்றும் கணேசனுடன் இணைந்து மீரட்டிற்கு பயணம் செய்து, காலையில் அங்கு சென்றடைந்தார். திரு. B.D. சர்மா என்ற துணை ஆட்சியர் மற்றும் ராம்நாம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எங்களை வரவேற்றார். சாதுஜி, சிவ பார்வதி கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்சங்கத்தில் உரையாற்றினார். பல பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சாதுஜி மற்றும் குழுவினர் காளி பால்டி கோயிலுக்கு சென்றனர். அங்கே 1857ல் மங்கள் பாண்டே தனது இந்திய விடுதலை போராட்டத்தை துவக்கினார். திங்கள்கிழமை, அக்டோபர் – 19 அன்று நாங்கள் ரே பரேலி வந்து சேர்ந்தோம். திரு. J.P. அஸ்தானா எங்களை வரவேற்றார். 

திரு. சபரிகிரி என்ற சென்னையை சேர்ந்த பக்தரும் எங்களோடு இணைந்தார். சாது திம்பிரிநாத் கோயிலுக்கு சென்றார். ஒரு பெரும் ராம்நாம் சத்சங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது அதில் சாது உரையாற்றினார் அதில் பல புகழ்பெற்ற குடிமக்கள் பலர் கலந்து கொண்டனர். யோகி ராம்சுரத்குமார் புகைப்படங்களும், ராம்நாம் துண்டு பிரசுரங்களும் பிரசாதமாக பங்குபெற்ற அனைவருக்கும் வினியோகம் செய்யப்பட்டது. 

அக்டோபர் 20, 1992 அன்று அதிகாலையில் சாது, திரு. சின்ஹா மற்றும் திரு. கணேசன் உடன் லக்னோவிற்கு சென்று அங்கே காலை 10 மணிக்கு சேர்ந்தார். திரு. R.K. லால், ராம்தீர்த்தா ப்ரதிஷ்டானின் தலைவர், மற்றும் பிற அலுவலக பணியாளர்கள் சாதுவை அன்போடு வரவேற்றனர். சுவாமி கல்யாணனந்தா மற்றும் சுவாமி லலிதானந்தா போன்றோரும் அங்கே இருந்தனர். மாலையில் கங்கா பிரசாத் ஹாலில் சுவாமி ராம் தீர்த்தா ஜெயந்தி விழா துவக்கப்பட்டது. சாதுஜி, ‘செயல்முறை வேதாந்தம் மற்றும் ராம்நாம்’ பற்றி பேசினார். பல சுவாமிஜிக்கள் மற்றும் பேச்சாளர்கள் அங்கே இருந்தனர். துவக்கவிழா முடிந்தப்பின் திரு. R.K. லால் அவர்களின் மகன் திரு. விரேந்திர ஸ்ரீவாஸ்தவ் சாதுவை அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். வழியில் நாங்கள் ஹனுமான் கோயிலுக்கும் சென்றோம். அடுத்தநாள் காலை ஒரு ராமநாம சத்சங்கம் விரேந்திர ஸ்ரீவாஸ்தவ் அவர்களுடைய இல்லத்தில் நடந்தது. பல பக்தர்கள் அதில் பங்கேற்றனர். சாது ராமநாம ஜப யக்ஞம் குறித்து பேசினார். சத்சங்கம் முடிந்தப்பின் சாது சுவாமி ராம்தீர்த்தா அவர்களின் ஜெயந்தி விழா இரண்டாம்நாள் காலை நிகழ்ச்சிக்கு சென்றார். பெங்காலில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். சாது மற்றும் திரு. T.S.சின்ஹா ராம்நாம் இயக்கம் குறித்து பேசினர். பின்னர் இன்னொரு சத்சங்கம் ஆர்யா நகரில் திரு. ப்ரமோத் குமார் அவர்கள் இல்லத்தில் நடந்தது. அங்கும் சாது ராம்நாம் குறித்து பேசினார். சாது மாலையில் கங்கா பிரசாத் ஹாலுக்கு இரண்டாம் நாள் விழாவின் பொதுக் கூட்டத்திற்கு வந்தார். ஸ்ரீ டாட் பாபா அவதூத் (சுவாமி ஆனந்த் தேவ்) என்பவர் பிருந்தாவனில் இருந்து வந்திருந்தார். அவருக்கும் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த மற்ற துறவிகளுக்கும் பரிசாக வழங்கப்பட்டிருந்த ‘ஒரு மகா யோகியின் தரிசனங்கள்’ மற்றும் ‘தத்துவ தர்சனா’ இதழ்களை அவர்  படித்திருந்தார். அவர் சாதுவிடம் யோகி ராம்சுரத்குமார் குறித்து கேட்டார். சாது, விழாவில், “வாழ்வின் இலக்கு மற்றும் சுவாமி ராமாவின் சேதிகள்” குறித்து பேசினார். வியாழக்கிழமை அக்டோபர் 22, சுவாமி ராம தீர்த்தா அவர்களின் ஜெயந்தி அன்று, காலையில் நடைபெற்ற ஆன்மிக கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சாது, “மனிதனே அவனது விதியின் எஜமானன்“ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அவர், ஜெர்மன் தத்துவவாதி லூட்விக் விட்கென்ஸ்டைன் அவர்களின் மொழி சார்ந்த கூறுபாடு (Linguistic Analysis) குறித்த மேற்கோள்களை சுட்டிக்காட்டி, தனது உரையை முடித்தார். 

மதியம் சாதுஜி மற்றும் திரு. D.S. கணேசன் அனைவரும் சுவாமி ராம்தீர்த்தா பிரதிஷ்டானை  சார்ந்த சகோதரர்களிடம் இருந்து விடைப்பெற்று லக்னோ சந்திப்பிற்கு வந்தனர். ப்ரதிஷ்டானின் உறுப்பினர்கள் சாதுவிற்கும், கணேசனுக்கும் சிறந்த விடைபெறுதலை தந்து சென்னைக்கு லக்னோ எக்ஸ்பிரஸில் அனுப்பி வைத்தனர். லக்னோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சின்னப்பன் மற்றும் பொறியாளர் நாகராஜன் போன்றோர் சாதுவுடன் பயணித்தனர் அவர்களும் பகவானை அறிந்திருந்தனர் நாங்கள் பகவானின் இலக்கு மற்றும் ராம்நாம் இயக்கம் குறித்து உரையாடியவாறே பயணித்து வந்தோம். நாங்கள் சென்னைக்கு சனிக்கிழமை அக்டோபர் 24 ஆம் தேதி வந்தடைந்தோம். சாது வீட்டை அடைந்தவுடன் அவருக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி தெரிவிக்கப்பட்டது. பகவானால் வழங்கப்பட்ட பண நோட்டுக்களை ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு சாது பகவானின் திருவுருவ படத்தின்கீழ்  வைத்திருந்தார். அது காணாமல் போயிருந்தது. திருமதி. பாரதி வீட்டிற்கு வந்த ஒரு விருந்தினரை பிரார்த்தனை அறையில் அமர வைத்து அவர்களுக்கு காபி போட சமையலறைக்கு சென்றபோது அந்த விருந்தினர் திடீரென்று, சொல்லாமல்சென்றுவிட்டார். அந்த பையும் காணாமல் போயிற்று, என்று தெரிவித்தார். சாது உடனே அதனை பகவானின் விருப்பம் அல்லது லீலா என்று முடிவு செய்ய அவகாசமே எடுத்துக்கொள்ளவில்லை. இந்த ப்ளாஸ்டிக் பை காணாமல் போன தகவல் பகவானுக்கு யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தை சேர்ந்த பரிமேலழகன் மூலம் தெரிவிக்கப்பட்டது. 

அக்டோபர் 26, திங்கள்கிழமை திருவண்ணாமலையை சேர்ந்த சுவாமி நரிக்குட்டி அவர்கள் சாதுவின் இல்லத்திற்கு வந்திருந்தார். சுவாமி ஜ்யோதிர்மயானந்தா, திரு.N.S.மணி மற்றும் திரு. பொன்காமராஜ் போன்றோர்கள் சாதுவை சந்தித்தனர். சாது தனது சுற்றுப்பயணத்தின் வெற்றி குறித்து பகவானுக்கு கடிதம் ஒன்றை எழுதினார:. 

” பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

உங்கள் கருணையாலும், ஆசியாலும் இந்த சாது மற்றும் திரு. D.S. கணேசனும் தங்களது உ.பி. சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தீபாவளிக்கு முன் பாதுகாப்பாக திரும்பினோம். 

இந்த சுற்றுப்பயணத்தில் உ.பி. ராம்நாம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திரு. T.S. சின்ஹா அவர்கள் எங்களோடு உடன் வந்ததோடு பயணத்திற்கான வசதிகளையும், அனைத்து இடங்களிலும் தங்குவதற்கு ஏற்பாடுகளையும் செய்தார். பயணம் மிகுந்த பலன் அளிக்கும் வகையில் அமைந்தது. பல ராம்நாம் சத்சங்க  கூட்டங்களுக்கு இடையே, இந்த சாதுவிற்கு ஒரு அரிய வாய்ப்பாக, சித்திரகூட கிராமோதய பல்கலைக்கழகத்தில் யோகா துறையால் பேச அழைக்கப்பட்டிருந்தேன். “தனி மனித வாழ்விலும், சமூக வாழ்விலும் யோகா மற்றும் அதன் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் பேசினேன். அத்ரா மேல் பட்டப்படிப்பு கல்லூரி மற்றும் பந்தாவில் D.A.V. கல்லூரி  ஆகிய இடங்களுக்கு இந்த சாது அழைக்கப்பட்டு, “இந்திய கலாச்சாரத்தில் வாழ்க்கையின் மதிப்பு” மற்றும் “இந்திய நெறிமுறைகள் மற்றும் யோகா“ போன்ற தலைப்புகளில் உரையாற்றினான். இந்த அனைத்து பேச்சுக்களிலும் இந்த சாது யோகி ராம்சுரத்குமார் மற்றும் ராம்நாம் இயக்கம் குறித்தும் பேசினான். இவைகள் அனைத்தும் பக்தர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. திரு.T.S.சின்ஹாவும் அனைத்து விழாக்களிலும் பேசினார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் ராம்நாமத்தை சொல்லி தங்களது கணக்குகளை தர தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி ராமநாம ஜப எண்ணிக்கை உ.பில் இருந்து கிடைக்கும் என நம்புகிறேன். பல பக்தர்கள் உங்களைப் பற்றி அறிந்தப்பின் உங்களை தரிசிக்க திருவண்ணாமலைக்கு புனிதப்பயணம் மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். 

சுவாமி ராம்தீர்த்தா ப்ரதிஷ்டானிலும் இந்த சாது ராம் தீர்த்தா ஜெயந்தி விழாவில் இரண்டு நாட்கள் தலைமை தாங்குவதற்கு அழைக்கப்பட்டான். பல முனிவர்கள், மகாத்மாக்கள் மற்றும் அறிஞர்கள் பல இடங்களில் இருந்து வந்து கலந்து கொண்ட ஒரு சம்மேளனத்தில் தலைமை தாங்க இந்த சாதுவை அழைத்தனர். யோகி ராம்சுரத்குமார் பற்றியும், ராம்நாம் இயக்கம் பற்றியும். பேசினேன். ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானின் தலைவரான திரு.R.K.லால் மற்றும் கூட்டங்களில் கலந்துகொண்ட மகாத்மாக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது நமஸ்காரங்களை உங்களுக்கு தெரிவிக்குமாறு கூறினர். திரு.லால் உங்களுக்காக சுவாமி ராம்தீர்த்தரின், “கடவுள் உணர்வின் கானகத்தில்“ (In the Woods of God-realization) என்ற நூலின் ஏழாவது தொகுதியை உங்களுக்காக பரிசளித்தார். இந்த சாது அங்கே வருகையில் அதனை கொண்டு வருவான். 

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் டிசம்பர் – 1 அன்று கீதா பவனில் நடக்க இருக்கும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்னொரு பக்தரான மகேந்திரன் ‘தத்துவ தர்சனா’வின் சிறப்பு இதழை ஜெயந்தி விழாவில் வெளியிட ஏற்பாடு செய்வதில் மும்முரமாக இருக்கிறார். வழக்கம்போல் ஹோமம், உரைகள் மட்டுமின்றி அகண்ட ராமநாம ஜெபத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

சென்னை சுவாமி ராம்தீர்த்தா கேந்திரா மூலம் அவரது பணிகளை தென்னகத்தில் பரப்பவும் அவரது நூல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சாது மீண்டும் மீண்டும் தனது சிரசை தங்களின் புனித  பாதங்களில் வைத்து உங்கள் ஆசியை வேண்டுகிறான். நீங்கள், நீங்கள் மட்டுமே, எங்கள் விதியை நிர்ணயிக்கிறீர்கள். அனைத்தும் உங்கள் தெய்வீக விருப்பத்தாலேயே நிகழ்கிறது. எங்களின் ஒரே பிரார்த்தனை, கடைசி மூச்சு இருக்கும் வரை இந்த உடல், உங்களின் தெய்வீக காரியங்களில் ஒரு தாழ்மையான கருவியாகவே இருக்கவேண்டும்  என்பதேயாகும்.

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். “

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.28

Glimpses of A Great Yogi in Tamil – Part 2
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – II
சீடன் கண்ட தீக்ஷா குரு

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 2.28 

சாதுவின் பணிகளுக்கு யோகிஜி பொழிந்த ஆசிகள்

சத்ய சாய் அமைப்பு மாணவர்களுக்காக ஒரு கோடைக்கால முகாம் ஒன்றை அதனது பிராந்திய தலைமையகமான ‘ சுந்தரம்’, சென்னையில், ஏற்பாடு செய்திருந்தது அதில் உரையாற்ற இந்த சாதுவை மே – 30, 1992, அன்று அழைத்திருந்தனர். சாது, ‘சேவா பரமோ தர்மா‘ என்ற தலைப்பில் மனிதகுலத்திற்கு செய்யும் சேவையே உயரிய வழிபாடு என்பதை வலியுறுத்தி பேசினார். ஞாயிற்றுக்கிழமை, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் ஒரு பிரம்மாண்ட காயத்ரி ஹோமம் மற்றும் ராம்நாம் சத்சங்கத்தை திரு. மகேந்திரன் அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் சாதுவை தவிர, திரு. சங்கர் சாஸ்திரி மற்றும் திரு. D.S. சிவராமகிருஷ்ணன் போன்றோரும் கூட்டத்தினரிடையே உரையாற்றினர். அடுத்த நாள், அசாமை சேர்ந்த பக்தர் ரத்தன்லால் சத்சங்கத்திற்காக சாதுவின் இல்லத்திற்கு வந்தார். ஹோமம் மற்றும் சத்சங்கம் பகவானின் பக்தரான திருமதி.பிரேமா அவர்களின் இல்லத்தில் புதன்கிழமை ஜூன் – 10 அன்று நடைப்பெற்றது. திரு.N.S. மணி சித்தூரில் ஒரு கார் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக பகவானின் அற்புத கருணையால் உயிர் தப்பியதை விவரித்தார். வெள்ளிக்கிழமை ஜூன் – 12 அன்று திருமதி. சித்ரா மற்றும் டாக்டர். ஏழுமலை ஒரு சிறப்பு ஹோமம் மற்றும் சத்சங்கத்தை தங்களது புதியதாக கட்டப்பட்ட வீட்டில் திரு. சுரேஷ் மூலம் நடத்தினர். சாதுஜி அந்த கூட்டத்தினரிடையே யோகி ராம்சுரத்குமார் குறித்தும், ராம்நாம் இயக்கம் குறித்தும் பேசினார். நிவேதிதா பகவானின் இல்லத்திற்கு திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை ஜூன் – 19 அன்று திருமதி.ப்ரசூன்னா மற்றும் திரு. ராமமூர்த்தி குடும்பத்தினர் உடன் சென்றாள். அடுத்தநாள் நாங்கள் கூடுவாஞ்சேரியில் ஒரு சத்சங்கத்தை  யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சத்சங்கத்தின் மூலம் நடத்தினோம். 

ஜூன் – 27ல் சாதுஜி,  பம்பாயை சேர்ந்த திரு. V.V. பாலசுப்ரமணியன் காஞ்சன்காட்டில் இருக்கும் ஒரு சொத்தை யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆய்வு மையத்திற்கு அளிக்க முன்வந்துள்ளது குறித்து பகவானுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

சிரஞ்சீவி. விவேகானந்தன் இன்ஜினியராக பணிபுரிந்து, தனது முதல் மாதத்தை, முடித்துள்ளான். முதல் மாத சம்பளத்தை அங்கே வந்து உங்கள் பாதங்களில் அர்ப்பணித்து உங்கள் ஆசியை பெற விரும்புகிறேன். 

திரு. V.V. பாலசுப்ரமணியம், நமது ஒருங்கிணைப்பாளரில் ஒருவரும், மும்பை ராம்நாம் இயக்கத்தை சேர்ந்தவரும், நமது அகாடமியின் புரவலரும், நலம் விரும்பியும் ஆவர். அவர், காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஷ்ணுமங்கலத்தில் உள்ள தனது மூதாதையரின் சொத்தை நமது அகாடமிக்கு, நமது இந்தோலாஜிக்கல் ஆய்வு மையத்திற்கு ஆக தந்து, அதனை முன்னேற்றம் பெறச் செய்ய நினைக்கிறார். அது ஆன்மீக சாதகர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமாக இருந்து நமது ஆன்மீக கலாச்சாரத்தை பரப்ப வேண்டும் என்பதே அவரது எண்ணம். இந்த சாது உங்களுடன் இது குறித்து கலந்துரையாடி உங்கள் ஆசியை பெற விரும்புகிறான். இத்துடன் அகாடமியின் நலம் விரும்பிகள் மற்றும் புரவலர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு வேண்டுகோளின் நகலை தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். 

சிரஞ்சீவி. விவேகானந்தன் மற்றும் இந்த சாது செவ்வாய்க்கிழமை 30-06-1992 அன்று அங்கே வர விரும்புகிறோம். நாங்கள் மாலை அங்கு வந்து சேர்வோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். “

ஜூன் – 28 ஞாயிற்றுக்கிழமை, திரு. R.M. ராமநாதன் அவர்கள் இல்லத்தில் சத்சங்கம் மற்றும் ஹோமம் நடைப்பெற்றது. செவ்வாய்க்கிழமை, ஜூன் – 30 அன்று 1992ல் சாதுஜி, பாரதி மற்றும் விவேக் உடன் திருவண்ணாமலைக்கு சென்று பகவானின் இல்லத்திற்கு மாலையில் சென்று சேர்ந்தனர். பகவான் எங்களை வரவேற்றார். ரமணாச்ரமத்தை சேர்ந்த திரு. கணேசன் மற்றும் சில பக்தர்கள் அங்கே இருந்தனர். அவர்களை வழியனுப்பி வைத்தப்பின், பகவான் இந்த சாதுவை தனது பக்கத்தில் அமர வைத்தார். பகவான் காஞ்சன்காடு  திட்டம் குறித்தும், விஷ்ணு மங்கலம் இருக்கும் இடம் குறித்தும் விசாரித்தார். சாது அந்த இடத்திற்கு நான்கு வருடங்களுக்கு முன்னதாக சென்றதாக கூறினான். யோகி அங்கே ஒரு மையம் அமைந்தால் யார் அதனை கவனித்துக் கொள்வார்கள் எனக் கேட்டார். சாது தானே காஞ்சன்காட்டில் சென்று தங்க வேண்டியதிருக்கும் என சொன்னான். பகவான் அப்படியெனில் சரி என்றார். சாது பகவானிடம் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் பணிகள் பற்றி குறிப்பிட்டார். அவர் பகவானிடம் ராஜலட்சுமி மற்றும் அவரது கணவர் குன்றத்தூர் சிவன் கோயில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக முடித்து விட்டதாகவும், தற்சமயம் விஷ்ணு கோவிலின் பணியை ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் வழிக்காட்டுதலில் எடுத்திருப்பதாகவும் கூறினார். 

குரு விவேக்கின் பணி குறித்து கேட்டார். விவேக் தனது பணி குறித்து விவரித்ததோடு தனது முதல் மாத சம்பளக்கவரை பகவானின் பாதங்களில் வைத்தான். பகவான் அதனை ஏற்று விவேக்கிடம் அவனது எதிர்கால திட்டம் குறித்து கேட்டார். விவேக் தான் எம்.ஈ படிக்க விரும்புவதாக கூறினார். சாது பகவானிடம் விவேக்கின் முதலாளி, பணியில் இருக்கும் போதே அவனது படிப்பை மேற்கொள்ள, அனுமதித்ததாக கூறினார். பகவான் விவேக்கின் சம்பளக்கவரை எடுத்து பாரதியிடம் தந்து, முதல் மாத சம்பளம் தாயாருக்கு செல்லட்டும்“ என்றார். அவர் அத்துடன் ரூபாய். 26 மற்றும் ஒரு மலர் ஒன்றையும் சேர்த்து அவளிடம் தந்தார். சுந்தரராமன் மற்றும் ப்ரபா எங்களோடு வந்து இணைந்தனர். சாது பகவானிடம் நிவேதிதாவின் எம்.எஸ்ஸி முயற்சிகள் குறித்து கூறினார். அவளுக்கு ஐ.ஐ.டி யில் இடம் கிடைக்கவில்லை என்று கூற, யோகி அவள் பட்டப்படிப்பு படித்த அதே கல்லூரியில்  இதனையும் தொடர்வாள் என்றார். 

சாதுஜி பகவானிடம் தனது சுற்றுப்பயணம் குறித்தும் திரு. D.S. சிவராமகிருஷ்ணன் அதற்கு ஏற்பாடு செய்ய உதவுவது குறித்தும் கூறினார். யோகி சாதுவிடம் விவரங்களை கேட்க அவரும் விளக்கினார். ஆகஸ்ட், செப்டம்பரில் தெற்கிலும், அக்டோபரில் வடக்கிலும் பயணம் செல்ல இருப்பதாகவும், மேலும் பீஹார் மற்றும் பெங்காலுக்கு செல்ல விரும்புவதாகவும் கூறினான். ராம்தீர்த்தா ப்ரதிஷ்டானின் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், லக்னோ சென்று ராம் தீர்த்தா ஜெயந்தியில் கலந்து கொள்ள போவதையும் இந்த சாது கூறினான். வடக்கில் இருந்து வந்தவுடன் சாது எங்கே செல்வார் என யோகி கேட்டார். சாது நவம்பரில் தான் சென்னையில் இருக்க விரும்புவதாகவும், யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருக்கும் என்றார். யோகி அவரது சுற்றுப்பயண திட்டத்தை ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் திரு.D.S.கணேசன் மாகாண ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே இனி இந்த சாது வடக்கு மாகாணங்களில் கவனம் செலுத்தலாம் என்றும் கூறினான். 

நாங்கள் அமர்ந்திருக்கும் போது யோகிக்கு ஒரு தந்தி ஒன்று வந்தது. யோகி அதனை ஆர்வத்தோடு சென்று பெற்றார். சிறிதுநேரம் கழித்து சென்னையிலிருந்து மனோகரன் என்பவர் பகவானின் தரிசனத்தை பெற வந்தார். குரு அவரிடம் இந்த தந்தியை கொடுத்து படிக்குமாறு கூறி அதில் குறிப்பிட்ட நபர்களை தெரியுமா எனக் கேட்டார். அந்த மனிதர் தனக்கு தெரியாது என்றார். குரு அவரிடம் ராஜேந்திரன் என்பவர் சென்னையிலிருந்து, ‘ஜெயராஜ் என்பவர் மோசமான உடல்நிலையோடு இருக்கிறார்’ என தெரிவித்துள்ளார் என்றார். அந்த நண்பர் உடனடியாக நினைவுப்படுத்திக் கொண்டு அவர்கள் தன்னுடைய உறவினர் என்றார். குரு அவரை ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார். 

நாங்கள் அவரின் முன்னிலையில் இரவு 7.30 மணி வரை இரண்டு மணி நேரம் செலவழித்தோம். நாங்கள் அவரிடம் இரவு ஹோட்டல் பிருந்தாவனில் தங்கிவிட்டு காலையில் நாங்கள் வருகிறோம் என்று கூறி அவரிடமிருந்து விடைப்பெற்றோம். 

ஜூலை – 1 புதன்கிழமை அன்று நாங்கள் ரமணாச்ரமம் சென்று ரோசோரா, சந்தியா மற்றும் பகவானின் பக்தர்களை சந்தித்துவிட்டு யோகியின் இல்லத்திற்கு காலை 10 மணிக்கு வந்தோம். அங்கே அவரது தரிசனத்திற்கு பெரும் கூட்டம் ஒன்று காத்திருந்தது. பகவான் அந்த கூட்டத்தினரை வழியனுப்பி விட்டு எங்களை வரவேற்று உள்ளே அமர வைத்தார். ருக்மணி ராமமூர்த்தி மற்றும் அவளது அன்னை எங்களோடு இணைந்தனர். ப்ரபாவும் அங்கே வந்தார். சாது, திரு.V.V.பாலசுப்ரமணியம் அவர்களின் காஞ்சன்காடு திட்டம் குறித்த கடிதத்தை எடுத்து யோகியின் முன் வைத்தார். அவர் அதனை எடுத்து சாதுவை படிக்குமாறு சொன்னார். பின் யோகி, “தந்தை முடிவு செய்வார்” என்றார். சாது, சகோதரி நிவேதிதா அகாடமி பற்றிய கட்டுரையின் பிரதி ஒன்றை  பகவானிடம் தந்தார். யோகி அதனை வாங்கி வைத்துக் கொண்டார். பின்னர் யோகி, “என் தந்தை மட்டுமே இருக்கிறார். வேறெதுவும் இல்லை. வேறெவரும் இல்லை. அனைத்தும் தந்தையே“என்றார். இதனையே மறுபடி மறுபடி கூறிக் கொண்டிருந்த யோகி, பிறகு சுவாமி விவேகானந்தர் குறித்து பேசினார்:

சுவாமி விவேகானந்தா நாம் ஆன்மா தான், உடல் அல்ல, என்று கூறுவார். நாம் உடல் அல்ல ஆன்மா என்பதை மேலும் மேலும் சிந்திக்க, நமக்கு நோய் அல்லது மன அழுத்தம் இருக்காது. நாம் அழிவற்றவர்கள் என்பதை உணருவோம். நாம் உடல் என்பதை எப்போது சிந்திக்கிறோமோ அப்போது பலவீனம் உள்ளே நுழையும். வலிமையே மதம் என்றும், எது நம்மை பலவீனப்படுத்துகிறதோ அது மதமல்ல என்றும் அவர் கூறுகிறார்

விவேக் இடைமறித்து விவேகானந்தரின் மேற்கோளான, “ கடவுளை நீங்கள் கீதையை விட காலபந்து விளையாட்டின் மூலம் எளிதில் அடையலாம்” என்பதை கூற, பகவான் உரக்க சிரித்து தொடர்ந்தார்: “ நாம் ஆன்மா என்பதை அதிகம் சிந்திக்க நாம் மிகுந்த வலிமை அடைவோம். அதன்பின் வலியோ மன அழுத்தமோ உணரப்படாது. சுவாமி விவேகானந்தா இந்த தேசம் முழுமையும் நாம் அனைவரும் ஆன்மாக்கள் என்ற இந்த வலிமையான எண்ணத்தால் நிரப்பப்படவேண்டும் என விரும்பினார். இதனை அவர் எல்லா இடத்திலும் பரப்ப நினைத்தார். ஒரு மனிதனை நீங்கள் பாவி என்று அழைப்பதன் மூலம் அவனை நீங்கள் பலவீனமாக்குகிறீர்கள். பாவிகள் என்று எவருமில்லை. அனைவரும் தெய்வீகமானவர்களே. இந்தியாவின் இலக்கு துறவிகளையும், முனிவர்களையும் உருவாக்குதலே என அவர் எண்ணினார். சுவாமி விவேகானந்தா அவரது பேருரையில் கூறுகிறார், ‘கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்தியா முனிவர்களையும், துறவுகளையும் உருவாக்குவதை தவிர வேறென்ன செய்தது….’ இதுவே இந்தியாவின் இலக்கு” 

விவேக் பகவான் இதே வார்த்தைகளை தான் பி.ஈ சேருவதற்கு முன் கூறியதை நினைவு கூர்ந்தான். விவேக் மற்றும் நிவேதிதாவை சுவாமி விவேகானந்தரின், “கொழும்பு முதல் அல்மோரா வரையிலான பேரூரைகள்” எனும் நூலை படிக்குமாறு செய்த பகவான் விவேக்கிடம் “நீ எந்த விதமான பொறியாளர் ஆக போகிறாய் ? மனிதர்களை உருவாக்கும் பொறியாளனா அல்லது இயந்திரங்களை உருவாக்கும் பொறியாளனா” என்று கேட்டதை நினைவு கூற, பகவான் சிரித்தவாறே தொடர்ந்தார், இந்தியாவின் மீதும், சனாதன தர்மத்தின் மீதும் என்னவிதமான அன்பை அவர் கொண்டிருந்தார். ஐரோப்பாவில் வெற்றிகரமான தொழிலதிபரை சூழ்ந்து மக்கள் கூடுவார்கள். ஆனால் இந்தியாவிலோ, மக்கள் கடவுளை அறிந்த துறவிகளை சூழ்ந்து இருப்பார்கள். அதுவே இந்தியாவின் மகிமை. நாம் பணக்காரங்களை வணங்குவதில்லை, ஆனால் நாம் துறவிகளையே வணங்குவோம்.” 

பகவான், சுவாமி விவேகானந்தாவின் சேதிகளே இந்திய சுதந்திர போராட்டத்தின் வேர்கள் என்றார். “அவர் பெங்கால் இயக்கத்தை துவக்கினார். அதன் பின்னரே பெங்கால் எழுச்சி வந்தது. அதன் பின்னரே அரவிந்தர் வந்தார். விவேகானந்தா இல்லையெனில் இந்திய சுதந்திர போராட்டமே துவங்கியிருக்காது. இந்தியா மீதும், சனாதன தர்மத்தின் மீதும் அவர் கொண்ட காதல் அலாதியானது.” 

சிறிது நேரம் நிறுத்திவிட்டு பகவான் தொடர்ந்தார், “ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுவாமி விவேகானந்தரால் மிகவும் ஈர்க்கப்பட்டார்  என இந்தப்பிச்சைக்காரன் எங்கோ படித்திருக்கிறான். விவேகானந்தரே நேதாஜி அரசியலுக்கு வரவேண்டிய தாக்கத்தை தந்தார். இல்லையெனில் நேதாஜி ஐ.சி.எஸ் ஆகவே விருப்பப்பட்டார். சாது, சகோதரி நிவேதிதாவிற்கு உணர்ச்சி ஊட்டியதும் சுவாமி விவேகானந்தர் என நினைவு கூர்ந்தார். பகவான், “ சுவாமி ராம்தீர்த்தாவும் சுவாமி விவேகானந்தரைப் போல் மிகுந்த வேகத்தோடு பேசக்கூடியவர்” என்றார். சாது, “ராம்தீர்த்தாவும் சுவாமி விவேகானந்தரால் தாக்கம் பெற்றவர்” என்றதற்கு யோகி, சாதுவின் மொழிகளை ஏற்பதைப்போல் தலையை அசைத்து, “ அவரும் இந்த தேசம் ஆன்மீக வலிமையோடு திகழ வேண்டும் என ஆசைப்பட்டார். அவர் கங்கை மீது பேரன்பு கொண்டவர், கங்கா தேரி பலிதான்” என்று பாடியதோடு பல பாடல்களை உருதுவிலும், ஹிந்தியிலும் பாடியிருக்கிறார். சாது, “இந்தப்பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கபட்டு லண்டனில் பதிக்கப்பட்டது“ என்றார். பகவான், “ அப்படியா? “ என வினவினார். மேலும் அவர் தொடர்ந்து, “ராம தீர்த்தா தன்னை அன்னை கங்கைக்கே அர்ப்பணித்தவர். உண்மையாகவே அவர் கங்கையில் ஜலசமாதி ஆனவர். “ 

சாது, பகவானிடம், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ராம் தீர்த்தாவின் நூல்களை அறிமுகப்படுத்தி தான் அனுப்பிய சுற்றறிக்கையை காட்டினார். அதனை யோகி பார்த்துவிட்டு ருக்மணியிடம் கொடுத்தார். குரு சாதுவிடம், ருக்மணி இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், அவர் தனது வாழ்க்கையை இதற்காக அர்ப்பணிக்க விரும்புகிறார் என்றார். மேலும் யோகி ருக்மணியிடம், “ரங்கராஜன் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து நிறைய படித்திருக்கிறார்.“ என்று கூறிவிட்டு, சாதுவிடம் திரும்பி, அவளது பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாகவும் அதற்கு உதவ இயலுமா என்றும் கேட்டார். சாது, அவர்களுக்கு தான்  உதவ முயற்சிப்பேன் என்றும், தனக்கு அவளது ஜாதகத்தின் பிரதி ஒன்று வேண்டும் என்றும் கேட்டார். யோகி ருக்மணியின் தாயாரிடம், “ ரங்கராஜன் உங்களுக்கு உதவுவுதாக கூறுகிறார்“ என்று கூறியதோடு சாதுவிடம் திரும்பி, “மிக்க நன்றி, தயவு கூர்ந்து செய்யுங்கள“ என்று கூறிவிட்டு பகவான் ருக்மணியிடம் சில பாடல்களை பாடும்படி கூறினார். 

யோகி விவேக்கின் உடல்நலம் குறித்து விசாரித்தார். விவேக் தான் நலமாக இருப்பதாக தெரிவித்தார். பகவான் தனது பாக்கெட்டில் இருந்து  ஒரு நெல்லிக்காய் எடுத்து விவேக்கிடம் தந்தார். யோகி நெல்லிக்காயின் சிறப்புகளை குறித்து கூறத்துவங்கினார். “ நமது ரிஷிகள் நெல்லிக்காய் மருந்து (medicine) என்று மட்டுமல்ல அதனை பலவிருத்தி (tonic) என்றும் கண்டுபிடித்தனர். அது இரண்டும் சேர்ந்தது தான் ––மருந்தோ அல்லது பலவிருத்தியோஅல்ல. இந்தப்பிச்சைக்காரன் பத்து நபர்களிடம் இதனை எடுத்துக்கொள்ளுமாறு கூறினான். அவர்கள் அதனை எடுத்துக் கொள்கின்றனர்.  யார் நோய்வாய் படுகிறார்களோ அவர்கள் இதனை எடுத்துக் கொள்கிறார்கள். 1962 அல்லது 1963ல் திரு.D.S. சிவராமகிருஷ்ணன ஐயர் நோய்வாய் பட்டார். சிலர் இந்தப்பிச்சைக்காரனிடம் வந்து கூறினர். இவன் பஸ்பிடித்து திருக்கோயிலூர் சென்று அவரை பார்த்தோம். நாங்கள் அவரை நெல்லிக்காய் எடுத்துக்கொள்ளச் சொன்னோம். அவர் எடுத்துக்கொள்ள துவங்கினார். இன்று அவரால் நெல்லிக்காய் இன்றி இருக்க முடியவில்லை.  இந்தப்பிச்சைக்காரன் அனைவரிடமும் சொல்லி வருகிறான் ஆனால் மிக குறைந்த நபர்களே அதனை எடுத்துக் கொள்கின்றனர். இந்தப்பிச்சைக்காரன் இதனை கண்டறியவில்லை. நமது பண்டைய ரிஷிகள் இதனை கண்டறிந்தனர். ஆயுர்வேதத்தில் இது ஒரு மிகப்பெரிய மருந்து.” சாதுஜி சியவனப்ராசம் நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படுவதாக குறிப்பிட்டார். பகவான் விவேக் மற்றும் ருக்மணியிடம் நெல்லிக்காயை தினமும் எடுத்துக்கொள்ள சொன்னார். யோகி விவேக்கிடம் மூன்று மாதங்கள் கழித்து இது குறித்து தெரிவிக்கச் சொன்னதோடு, “பின்னர் இதனை நீ  மற்றவர்களுக்கு பரிந்துரைப்பாய்“ என்றார். 

மதியம் 12.30 மணி அளவில் பகவான் எங்களை விடைகொடுத்து அனுப்ப தீர்மானித்தார். சாது பகவானிடம் தான் காஞ்சன்காடு சென்றுவிட்டு பின்னர் அவரை தரிசிக்க வருவதாக கூறினார். சாதுவை யோகி ஆசீர்வதித்தார். சாதுவின் தண்டம் மற்றும் பிக்ஷாபாத்திரத்தை எடுத்து ஆசீர்வதித்து திருப்பி அளித்தார். அவர் பலவிதமான பிரசாத பொட்டலங்களை பாரதியிடம் கொடுத்ததோடு ரூ.16 ஐ பாரதிக்கு தந்து அவளை ஆசீர்வதித்தார். சாது விடைப்பெற்று உடுப்பி பிருந்தாவன் லாட்ஜ்க்கு வந்தோம். ருக்மணி சாதுவிற்கு பிக்ஷை அளித்தார். ராமசந்திர உபாத்யாயா சகோதரி நிவேதிதா அகாடமிக்கு வாழ்நாள் சந்தாவை தந்தார். நாங்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்தை பிடித்து சென்னைக்கு மாலையில் வந்து சேர்ந்தோம். 

தென் ஆப்பிரிக்காவின் டிவைன் லைஃப் சொஸைட்டியின் திரு. ரமேஷ் வியாழக்கிழமை, ஜூலை 2, 1992ல் சுவாமி சகஜானந்தா அவர்களின் சேதியோடு வந்து, மோனோ ஃபோட்டோ ஃபிலிம் செட்டரின் கீ போர்டுகளையும், சில பாகங்களையும் எடுத்துச் செல்ல விரும்பினார். சுவாமிஜி தந்த அந்த இயந்திரத்தை சகோதரி நிவேதிதா அகாடமி பயன்படுத்தாமல் வைத்திருக்கும் வள்ளியம்மை ஆச்சி அவர்களின் இல்லத்திற்கு சாது அவரை அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான பாகங்களை எடுத்துக் கொள்ளச் சொன்னார். பிறகு அந்த பாகங்களை சென்னையில் உள்ள டிவைன் லைஃப் சொஸைட்டியின் அலுவலகத்திற்கு, தென் ஆப்பிரிக்கா அனுப்புவதற்காக, மாற்றினோம். ரமேஷ் சாதுவின் விருந்தினராக தங்கினார். ரமேஷ் சுவாமி சகஜானந்தாவிடம் தேவையான பாகங்களை இயந்திரத்தில் இருந்து எடுத்து விட்டோம் என்ற சேதியை தெரிவிக்கும் முன்னரே, சுவாமி சகஜானந்தா, ஆனந்தாஸ்ரமத்தின் சுவாமி சச்சிதானந்தருக்கு சாதுஜி பாகங்களை தருவதற்கு தயக்கம் காட்டுவதாக புகார் அளித்து கடிதம் ஒன்றை எழுதினார். சச்சிதானந்தா அந்த கடிதத்தை யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு அனுப்பியதோடு சாதுவிற்கும் தகவலை அனுப்பினார். சுவாமி சகஜானந்தா அவர்களின் அவசர மற்றும் சிந்தனையற்ற செயல் தனக்கும் தனது குருவிற்கும் தர்மசங்கடத்தை உண்டு பண்ணியதாக சாது மிக கடுமையான கடிதம் ஒன்றை சுவாமி சகஜானந்தா அவர்களுக்கு எழுதி, சுவாமி சச்சிதானந்தர் மற்றும் பகவானுக்கு அதன் நகல்களை அனுப்பினார். சாது கடிதம் ஒன்றை 20-7-1992ல் பகவானுக்கு எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

நாங்கள் இத்துடன் பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் நகல், மற்றும் பூஜ்ய சுவாமி சகஜானந்தா அவர்களுக்கு 4 ஆம் தேதி ஜூலை 1992 அனுப்பிய கடித நகலையும் இணைத்துள்ளேன். 

சுவாமி சகஜானந்தா சகோதரி நிவேதிதா அகாடமிக்கு அன்பளிப்பாக வழங்கிய ஃபோட்டோ ஃபிலிம் செட்டர் குறித்து அறிவீர்கள். அதனை அவர் புனேவில் உள்ள திரு. பட் அவர்களுக்கு அனுப்பினார். அதனை பட் ஐந்துவருட காலம் நம்மிடம் ஒப்படைக்க மறுத்தார். பின்னர் நாம் அதனை ஒரு மோசமான நிலையில் சென்ற வருடம் பெற்றோம். நாம் அதனைப் பெற்றப்பின் சுவாமிஜி அதில் சில பகுதிகளை திரும்பி அனுப்ப கோரினார். நாம் அதனை மகிழ்வோடு ஏற்று அந்த இயந்திரம் குறித்த மெக்கானிக் ஒருவரை கண்டறிந்து அதில் உள்ள பாகங்களை அடையாளம் கண்டு எடுத்து தருகிறோம் என்றோம். அதற்கு சிறிது அவகாசம் வேண்டுமென்றும் கேட்டிருந்தோம். நாங்கள் பலமுறை இது தொடர்பாக கடிதம் எழுதி இந்த இயந்திரத்திற்கு உரிய அறிவைக் கொண்ட தொழில்நுட்ப வல்லுனர் தென் இந்தியாவில் இல்லையென்றும் சிலரை வட இந்தியாவில் இருந்து பெற முயற்சிப்பதாகவும் கூறியதால், சுவாமிஜியே ஒருவரை பாகங்களை எடுக்க ஏற்பாடு செய்தார். ஜூலை 1 அன்று அந்த இயந்திரம் குறித்த அனுபவம் கொண்ட சுவாமிஜியின் உதவியாளர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தார். அவர் மகிழ்வோடு எங்களோடு தங்கியிருந்து பாகங்களை மிகுந்த சிரமத்திற்குப்பின் கண்டறிந்தார். நாங்கள் மகிழ்வோடு அந்த பாகங்களை அவர் எடுத்துச் செல்லவும் அனுமதித்தோம். இந்த பாகங்களை உடனடியாக சென்னையில் உள்ள டிவைன் லைஃப் சொஸைட்டியின் சிவானாந்தா ஃபவுண்டேஷனுக்கு அனுப்பி அங்கிருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்தோம்.. 

இதற்கிடையில் சுவாமி சகஜானந்தா ஒரு கடுமையான கடிதத்தை நமது காரணங்களை சந்தேகப்பட்டும், பாகங்களை அனுப்புவதில் நாம் நன்றியற்ற முறையில் காலத்தை வீணடிப்பதாகவும் குற்றம்சாட்டி எழுதினார். மிகவும் துரதிர்ஷ்டவசமான விஷயம் சுவாமி சகஜானந்தா கடிதத்தை பூஜ்ய சுவாமி சச்சிதானந்தா அவர்களுக்கு அனுப்பியதே ஆகும். அவரும் இது குறித்து வருத்தப்பட்டு எங்களுக்கு எழுதியதோடு உங்களின் பார்வைக்கும் அதை அனுப்பியுள்ளதாக எழுதியிருக்கிறார். எனவே சுவாமி சகஜானந்தா அவர்களுக்கு இந்த சாது அனுப்பியுள்ள பதில் கடிதம், மற்றும் சுவாமி சச்சிதானந்தா அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம், ஆகியவற்றின் நகல்களை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். 

சுவாமி சகஜானந்தா  அவசரப்பட்டு எடுத்த தவறான புரிதலுக்கு வருத்தப்பட்டு சுவாமி சச்சிதானந்தா அவர்களிடம் தனது  மன மாற்றத்தை தெரிவிப்பார் என்றே நம்புகிறேன். 

நமது தாழ்மையான பணி வெற்றிகரமாக செல்கிறது. திரு. D.S. கணேசன் இங்கே இருக்கிறார். நமது தென் மாவட்டங்களுக்கான சுற்றுப்பயணத்தை இந்த மாத இறுதியில் ஆகஸ்டில் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். திரு.T.S.சின்ஹா உ.பியில் இருந்து, அக்டோபர் 4 முதல் அக்டோபர் 22 வரையிலான ஒரு சுற்றுப்பயண திட்டத்தை அனுப்பியிருக்கிறார். நாங்கள் வட இந்தியாவிற்கு செல்லும் முன் உங்கள் ஆசியை பெற வருவோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

கேரளாவில், எர்ணாகுளத்தில் இருந்து  வெளிவரும் “ ஜன்மபூமி “ என்ற நாளிதழ் சகோதரி நிவேதிதா அகாடமி குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. சாது அதனை நகல் எடுத்து பகவானுக்கு வெள்ளிக்கிழமை ஜூலை – 10 அன்று அனுப்பி வைத்தார். நிவேதிதாவிற்கு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் எம்.எஸ்ஸிக்கு இடம் கிடைத்தது, அவள் திருவண்ணாமலைக்கு திங்கள்கிழமை ஜூலை 13 அன்று யோகியின் அனுமதியை பெற சென்றாள். பகவான் அவளை ஆசீர்வதித்து அனுப்பினார் அடுத்தநாள் அவள் கல்லூரியில் சேர்ந்தாள். 

இந்த பயணத்தை நிவேதிதா பதிவு செய்திருக்கிறார்:

 “ஜூலை 13, 1992 அன்று நான் திருவண்ணாமலைக்கு சென்று யோகியுடம் ஆசிப்பெற்று எனது பட்டப்படிப்பிற்கு பின் நான் மேற்கொள்ள வேண்டிய படிப்பு குறித்து சில வழிக்காட்டுதல்களை பெறவும் நான் பயணப்பட்டேன். அந்த நேரத்தில் திருமதி. பிரேமா எங்கள் இல்லத்திற்கு வந்திருந்தார். அவரும் என்னுடன் வர ஒப்புக்கொண்டார். நாங்கள் ஏற்கனவே தாமதமாக மதிய நேரத்தில் கிளம்புவதால் நாங்கள் அவசரத்தில் இருந்தோம். நாங்கள் திருவண்ணாமலையை அடையும் போது மாலை ஆகிவிட்டது. நாங்கள் யோகியை அன்று காண இயலுமா என்ற நிச்சயமற்ற தன்மையோடு இருந்தோம். நாங்கள் அவரின் தரிசனத்தை பெற்று அவரிடம் கல்லூரி அனுமதி குறித்து சிலவற்றை கேட்க விரும்பினோம். 

திருவண்ணாமலையை அடைந்தவுடன் நாங்கள் நேரடியாக அவரது இல்லத்திற்கு விரைந்து அவரது இல்லத்தின்  கதவை தட்டினோம். யோகிஜி வெளியே வந்து கதவை திறந்தார். யோகி ஒரு வேறுபட்ட அலங்காரத்தில் இருந்தார். அவர் பஞ்சகச்சம் மட்டும் உடுத்தியிருந்தார், அவர் ஜிப்பாவும், தலைப்பாகையும் அணிந்திருக்கவில்லை. அவரது கேசம் தளர்வராக விடப்பட்டு மிதந்தவாறே இருந்தது. அவர் ஒரு அங்கவஸ்திரத்தை கொண்டு தன்னை மறைத்துக் கொண்டிருந்தார். அவர் ஆனந்தமான நிலையில் இருந்தார். விக்ரஹத்தை போன்று அவர் ஜொலித்தார். பிரேமா அவரை ராமரை காண்பதைப்போல் உணர்ந்தார். யோகி எங்களிடம் பயணத்திற்கான காரணத்தை கேட்டார். அவர் என்னிடம் எம்.எஸ்.ஸி கணிதவியல் எடுக்கலாம் என்று கூறினார். பிரேமாவிடம் யோகி உனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா எனக்கேட்டார். பிரேமா குறிப்பிட்டு எதுவும் சொல்வதற்கில்லை எனக் கூறினார். அவரை இன்று தரிசிக்க கிடைத்ததே மிகப்பெரிய சந்தோஷம் என்றார். யோகி எங்கள் இருவரையும் ஆசீர்வதித்தார். யோகி தனது இல்லத்திற்குள் சில முக்கியமான பணிகளை செய்து வருவதாக கூறினார். மீண்டும் ஒருமுறை, எங்களிருவரிடமும் பகிர்வதற்கு ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அவர் எங்களை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். நாங்கள் உடனடியாக வந்த காரியம் முடிந்த மகிழ்வோடு சென்னைக்கு திரும்பினோம். யோகியை வழக்கத்திற்கு மாறான முறையில் தரிசித்த மகிழ்வு எங்களிடம். நிறைந்து இருந்தது. 

யோகியின் தரிசனம் 5 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காத போதும் அவரின் மகிழ்ச்சியான மனநிலையில் பெற்ற தரிசனம் ஒரு ‘ஏகாந்த தரிசனம்’ எங்களுக்கான சிறப்பு தரிசனம்.” 

ஜூலை 23 வியாழக்கிழமை ஆஸ்திரியன் பதிப்பாளரான யந்தரா சாதுஜி இடம் “ ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” என்ற நூலை ஜெர்மனியில் மொழிப்பெயர்த்து வெளியிட அனுமதி கேட்டிருந்தார். சாதுஜி மகிழ்வோடு அனுமதி அளித்தார். ஜூலை – 26 ஞாயிற்றுக்கிழமை ஒரு பெரிய ராம்நாம் சத்சங்கம் ஆழ்வார் திருநகரியில் நடந்தது. ஆகஸ்ட் – 3 1992ல் சாது பகவானுக்கு ஒரு கடிதம் எழுதி அவரது ஆற்காடு மாவட்டத்தின் சுற்றுப்பயணம் குறித்து தகவல் தெரிவித்தார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

காட்டுமன்னார்கோயில் திட்டக்குடி மற்றும் விருத்தாசலத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு ராமநாம பிரச்சாரத்தை திரு. D.S. சிவராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்துள்ளதை உங்களுக்கு மகிழ்ச்சியோடு இந்த சாது தெரிவித்துக் கொள்கிறான். இந்த சாது நாளை காலை விருத்தாசலத்திற்கு சென்று திரு. சிவராமகிருஷ்ண ஐயர், திரு. சீத்தாராமன் மற்றும் திரு. D.S. கணேசன் அவர்களுடன் சென்று இணைந்து கொள்வான். பின்னர் அங்கிருந்து திட்டக்குடிக்கு சென்று நாளை மாலை அங்கே நடக்க இருக்கும் ராமநாம பிரச்சாரம் மற்றும் கூட்டத்தில் கலந்து கொள்வான். 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் உடையார்குடி மற்றும் காட்டுமன்னார்கோயிலில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7 ஆம் தேதி விருத்தாசலத்தில் ஒரு நிகழ்ச்சி இருக்கும். இந்த சாது இத்துடன் விவரமான நிகழ்ச்சிநிரலை இணைத்துள்ளான். சென்னைக்கு 8 ஆம் தேதி திரும்புவேன் என நம்புகிறேன். ஏனெனில் கோபாலபுரத்தில் 9 ஆம் தேதி காயத்ரி ஹோமம் மற்றும் ராமநாம சத்சங்கம் ஒன்று உள்ளது. நாங்கள் உங்களிடம் அனைத்து நிகழ்ச்சிகளின் வெற்றிக்காக உங்கள் ஆசியை வேண்டி பிரார்த்திக்கிறான். 

அனைத்து வருடங்களைப் போல் இந்த வருடமும் இந்த சாது 54 நாள் விரதத்தை காயத்ரி நாளில், ஆகஸ்ட்  14ல்,  இருந்து அக்டோபர்   6,  விஜயதசமி வரை அனுஷ்டிக்க விரும்புகிறான். இந்த சாது உங்களை காயத்ரி நாளில் சந்தித்து, விரதத்தை துவங்கும் முன் உங்கள் ஆசியை பெறுவதற்கு வர விருப்பம் கொண்டுள்ளான். 

திரு.D.S.கணேசன் இந்த சாதுவிற்கான நிகழ்ச்சிகளை தர்மபுரி, சேலம் மற்றும் மேட்டூரில் முறையே ஆகஸ்ட்  16, 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பாடு செய்துள்ளார். அந்த  நிகழ்ச்சிகளின் வெற்றிக்கும் உங்கள் ஆசியை இந்த சாது வேண்டுகிறான். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்

இணைப்புகள் : மேலே குறிப்பிட்டபடி”

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4, 1992ல் இந்த சாது விருத்தாசலத்திற்கு சென்றார். அங்கே திரு. D.S. சிவராமகிருஷ்ணன் மற்றும் திரு. D.S. கணேசன் சாதுவிற்காக காத்திருந்தனர். சாதுவை திரு. T.S. சுப்பிரமணியம் பிள்ளை அவர்களின் இல்லத்தில் இவர்கள் வரவேற்றனர். பகவானின் பக்தரும், ஆற்காட்டின் தாசில்தாருமான திரு.ஜெயராமன் எங்களோடு இணைந்தார். அடுத்தநாள் காலை நாங்கள் காட்டுமன்னார்கோயில் சென்றோம். அங்கே பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று பர்வதராஜா குருகுல ஹாஸ்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரு. V.P.சிவஞானம் நாட்டார் எங்களை வரவேற்றார். மாலையில் நடந்த சத்சங்கத்தில் 357 பிள்ளைகள் பங்கேற்றனர். சாதுஜி அவர்களுக்கு உரையாற்றி, ராம்நாம் துண்டுபிரசுரங்களை அனைவருக்கும் விநியோகம் செய்தார். திரு. சிவராமகிருஷ்ணன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியரான திரு. துரைசாமி போன்றோரும் உரையாற்றினர். சாதுஜி ஹாஸ்டலில் இரவு தங்கினார். அடுத்தநாள் நடந்த ஒரு பெரிய பிரார்த்தனையில் 1200 பிள்ளைகள் கலந்து கொண்டனர். சாதுஜி அவர்களிடம் நசிகேதன் குறித்து உரையாற்றி, ப்ராத்தஸ்மரண மந்திரங்களையும் கற்று தந்தார். மாலையில் வீரநாராயண பெருமாள் கோயிலில் இன்னொரு பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்று நடைப்பெற்றது. சாது அந்த நிகழ்வில் பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்தும் ராம்நாம் பற்றியும் பேசினார். திரு. D.S.சிவராமகிருஷ்ணன் மற்றும் திரு. சின்னதம்பி நாட்டாரும் பேசினர். இரவு திருமதி. லீலா ஆச்சி அவர்களின் இல்லத்தில் சத்சங்கம் ஒன்று நடைப்பெற்றது. அடுத்தநாள் காலை தாசில்தாரான திரு.ஜெயராமன் வந்து எங்களை லாலாபேட்டிற்கு அழைத்துச் சென்றார் அங்கே திரு. சின்னதம்பி நாட்டார் அவர்களின் இல்லத்தில் ஒரு சத்சங்கம் நடைப்பெற்றது. திரு. சீத்தாராமன், திரு. சிவராமகிருஷ்ணன் மற்றும் திரு. கணேசன் போன்றோர் சாதுவுடன் இணைந்தனர். நாங்கள் திருநாரையூர் கோவில், ஸ்ரீ முஷ்ணம் மற்றும் ஈஸ்வரன் கோயில் சென்று அம்பாள் கோயிலின் லட்சார்ச்சனையில் கலந்து கொண்டோம். பின்னர் நாங்கள் விருத்தாசலம் சென்றோம். திருமதி. ஆண்டாள் மற்றும் திருமதி. சரோஜா அம்மாள் எங்களோடு இணைந்தனர். திரு. T.S. சுப்பிரமணிய பிள்ளை ஒரு நிகழ்ச்சியை விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஏற்பாடு செய்தார். சாதுஜி பேசிய ஒன்றரை மணி நேர உரையை பக்தர்கள் ஆர்வத்துடன், பெரும் அமைதியோடு, கேட்டனர். திரு. சிவராமகிருஷ்ணன் மற்றும் திரு. T.S. சுப்பிரமணிய பிள்ளை போன்றோரும் பேசினர். அடுத்தநாள் சாது சென்னைக்கு கிளம்பி பகலில் சென்னையை அடைந்தார். நீலகிரியை சேர்ந்த பக்தர்கள் அவருக்காக காத்திருந்தனர். 

ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 9, 1992 அன்று திரு.N.S. மணி ஒரு காயத்ரி ஹோமம் மற்றும் ராம்நாம் சத்சங்கத்தை தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார். சாதுஜி பாதபூஜை செய்யப்பட்டு  மரியாதையோடு வரவேற்கப்பட்டார். திரு. சுரேஷ், டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் பிற யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் அங்கே வந்து சேர்ந்தனர். சாதுஜி ஹோமத்திற்கு பிறகு, கூட்டத்தினரிடையே உரையாற்றினார். புதன்கிழமை ஆகஸ்ட் 12 திருவொற்றியூரைச் சேர்ந்த திருமதி. ராஜேஸ்வரி அவர்களின் இல்லத்தில் ராம்நாம் சத்சங்கம் மற்றும் ஹோமம் நடைப்பெற்றது. 

வியாழக்கிழமை, ஆகஸ்ட் 13, 1992 அன்று சாது, விவேகானந்தன் உடன் திருவண்ணாமலையில் பகவானின் இல்லத்திற்கு மாலை 6 மணிக்கு சென்று சேர்ந்தார். அவரது இல்லத்தின் உள்ளேயும் வெளியேயும் மக்கள் காத்திருந்தனர். சசி பகவானிடம் சாதுவின் வருகை பற்றி குறிப்பிட்டார். யோகி எங்களை உள்ளே அழைத்தார். ‘ மவுண்டன் பாத்’ ஆசிரியர் திரு.கணேசன், இரண்டு வெளிநாட்டவர்கள், சுந்தரராமன், திருமதி. ஜெயராமன் மற்றும் அவரது பிள்ளைகள் அங்கே இருந்தனர். நாங்கள் அமர்ந்த உடனேயே யோகி, “தந்தை மட்டுமே இருக்கிறார், வேறெவரும் இல்லை, வேறெதுவும் இல்லை, அவரே நம் உள்ளேயும், வெளியேயும் எங்கும் இருக்கிறார்“ என்றார். பக்தர்கள் சிறிதுநேரம் அவரது பெயரை சொல்லி பாடினர். யோகி இந்த சாதுவை நோக்கி, “ இன்று ஏதோ விழா அல்லவா ? “ எனக் கேட்டார். முதலில் சாது, யோகி அருணகிரிநாதர் விழா பற்றி வினவுகிறார் என்று நினைத்து, விழா 15 ஆம் தேதி என்றார். பின்னர் தன்னை திருத்திக் கொண்டு, “ இன்று ஆவணி அவிட்டம், நாளை காயத்ரி மற்றும் நாளை மறுநாள் அருணகிரிநாதர் விழா, மஹராஜ்“ என்றான்.

“ஆனால் இது ஆவணி அல்லவே. பின்னர் ஏன் ஆவணி அவிட்டம் என்று அழைக்கிறார்கள் ? “ என அவர் கேட்டார். 

“ குருவே, இது ச்ராவண பூர்ணிமா. சிலநேரங்களில் இது ஆவணி அவிட்டத்துடன் சேர்ந்து வரும் “ என  சாது பதிலளித்தார். 

வெளியே இருந்து ஒலிப்பெருக்கி மூலம், சாலையில் இருந்து, பாடல்கள் கேட்டது. பகவான், “அருணகிரிநாதர் விழா 15 ஆம் தேதி வருகிறது, ஆனால் இந்த வருடம் அவர்கள் இன்றே துவக்கி விட்டார்கள்” என்றார். சிறிது நேரம் கழித்து யோகி கணேசன் மற்றும் இரண்டு வெளிநாட்டவர்களையும் வழியனுப்பி விட்டு சாதுவையும் விவேக்கையும் முன்வரிசையில் வந்து அமருமாறு கூறி, அவர்களிடம், “ வேறேனும் சேதி இருக்கிறதா ? “ என வினவினார். 

சாது :  “மஹராஜ், உங்கள் கருணையால் காட்டுமன்னார்கோயில் மற்றும் விருத்தாசலத்தில் வெற்றிகரமாக விழா நடைப்பெற்றது. திரு.D.S. சிவராமகிருஷ்ணன், திரு. D.S. கணேசன் மற்றும் திரு. சீத்தாராமன் போன்றோர் என்னுடன் வந்திருந்தனர். “ 

பகவான் சாதுவிடம் இடத்தின் பெயர்களை திரும்ப கூறுமாறு சொன்னார். சாது திரும்பவும் சொன்னார். “ பர்வதராஜ குருகுலத்தில் நடந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி” என்றார். 

பகவான், “ அனைத்தும் தந்தையின் கருணை “ என்றார். 

சாதுஜி : “ மஹராஜ் நாளை காயத்ரி, நான் எனது விரதத்தை உங்கள் ஆசியோடு துவங்குவேன்” 

பகவான் : “ ஓ ! நாளைமுதல் துவங்குகிறாயா ? எத்தனை நாளுக்கு ? “ 

சாதுஜி: “ மஹராஜ், விஜயதசமி வரை 54 நாட்கள் “ 

பகவான் : “ விஜயதசமி எப்போது ? “ 

சாதுஜி : “ அக்டோபர் – 6 அன்று பகவான் “ 

பகவான் : “ விரதத்தின் போது என்ன எடுத்துக் கொள்வாய் ? “ 

சாதுஜி : “ திரவ ஆகாரமான கஞ்சி, பழச்சாறு இன்னும் பிறவற்றை எடுத்துக் கொள்வேன் “ 

பகவான் : “ என் தந்தையின் ஆசீர்வாதங்கள்! “ 

யோகிஜி சில பழங்களை எடுத்து சாதுவிடம் கொடுத்து, “நீ சில பழங்களையும் எடுத்துக்கொள்ளலீம்“ என்றார். சாது தனது தலையை அசைத்துவிட்டு தொடர்ந்தார்: “மஹராஜ், எங்களுக்கு தர்மபுரி, சேலம் மற்றும் மேட்டூரில் நிகழ்ச்சிகள் 16, 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடக்க இருக்கிறது. D.S.கணேசன் அதனை ஏற்பாடு செய்கிறார்” பகவான் சாதுவிடம் அந்த தேதிகளை திரும்ப கூறுமாறு சொன்னார். சாதுவும் திரும்பவும் சொன்னார். 

“ அந்த இடங்கள் தர்ம்புரி, சேலம் மற்றும் மேட்டூர் போன்றவை தானே ? “ என்று பகவான் கேட்க, சாது, “ ஆமாம் மஹராஜ் “ என்றார். பகவான் கூறினார்: “ என் தந்தையின் ஆசீர்வாதங்கள் ! நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக அமையும் “ 

சாதுஜி : “ செப்டம்பரின் இரண்டாம் பகுதியில் நான் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் செல்வேன். அக்டோபரில் 4 முதல் 22 வரை நான் உ.பி.யில் இருப்பேன்.” 

பகவான் : “ எனவே அக்டோபர் முமுமையும் நீ உ.பி.யில் இருப்பாய் அல்லவா ? “ 

சாதுஜி : “ ஆமாம். மஹராஜ். D.S. கணேசனும் என்னோடு உ.பி.க்கு வருவார். “ 

பகவான் : “ ஆனால் அவர் மேட்டூரில் அல்லவா பணி புரிகிறார். “ 

சாதுஜி :  “ ஆனால், தனது பெரும்பான்மையான நேரத்தை ராம்நாம் பணியில் செலவழிக்கிறார்.  அவர் என்னோடு வர சம்மதித்தார். “ 

சாது மேலும், “D.S. சிவராமகிருஷ்ணன் பாண்டிச்சேரியில் 27 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறார். அந்த நிகழ்வை அவர் முடிவு செய்வதற்கு  செப்டம்பர் முதல் வாரத்தில் அங்கே செல்கிறார் “ 

பகவான் : “ எனவே செப்டம்பரில் நீ தமிழ்நாட்டில் இருப்பாய், நீ உ.பி.க்கு போவதற்கு முன் ஒரு மாத இடைவெளி உள்ளது.” 

சாதுஜி : “ ராம் தீர்த்தா ஜெயந்தி விழா அக்டோபர் 20, 21 மற்றும் 22 அன்று நடைபெறுகிறது. அதன்பின்னர் நான் சென்னைக்கு திரும்புவேன். அங்கு ராம் தீர்த்தா பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தீபாவளியை ஒட்டி வருகிறது. “ 

பகவான்: “எப்போது தீபாவளி ? “ 

சாதுஜி: “அக்டோபர் 25 மஹராஜ் . அவர்கள் ராம்தீர்த்தா மையத்தை சென்னையில் நிறுவி அதற்கு என்னை இயக்குனராக இருக்க சொன்னார்கள். இப்பொழுது நாங்கள் சுவாமி ராம்தீர்த்தாவின் புத்தகங்களை பள்ளியிலும், கல்லூரியிலும் அறிமுகப்படுத்தி வருகிறோம்.” 

பகவான்: “ஓ ! நீ அவரது நூல்களை பள்ளிகளில், கல்லூரிகளில் அறிமுகப்படுத்தி வருகிறாயா. அவர்கள் இந்தப் பிச்சைக்காரனுக்கு ‘ராமவர்ஷா’ இரண்டு தொகுதிகள் மற்றும் ‘ அறிவொளியின் பாடல்கள்’ (Songs of Enlightenment) என்ற ஆங்கில நூல் போன்றவற்றை அனுப்பி, தங்களது கடிதத்தில் உனது பெயரை குறிப்பிட்டு எழுதியிருந்தனர்.” 

சாதுஜி: “ஆமாம். மஹராஜ். நான் உங்களுக்கு அந்த புத்தகங்களை அனுப்புமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன்.” 

பகவான்: ”ஆனால் அனைத்து பாடல்களும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்படவில்லை. மிகச்சிலவே அதில் உள்ளன “ 

சாதுஜி: “ஆமாம். மஹராஜ்” 

பகவான்: “அந்த புத்தகங்களை நீ இலவசமாக தருகிறாயா?“ 

சாதுஜி: “இல்லை. மஹராஜ். அவரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களின் மொத்த நூல், “கடவுள் உணர்வின் கானகத்தில்“ (In the Woods of God-realization) என்ற ஏழு தொகுதிகள் கொண்டது. அந்த 7 தொகுதிகளை ரூ.320 க்கு நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். 

பகவான்: “ஓ, ஏழு தொகுதிகள் உள்ளனவா. இந்தப் பிச்சைக்காரன் ஆறு தொகுதிகளையே பார்த்திருக்கிறான்.“ 

சாதுஜி: “ஏழாவது தொகுதி புதியது. இரண்டு வருடங்களுக்கு முன் அவர்கள் அதனை வெளிக்கொணர்ந்தனர். அதில் அவர் எழுதிய ஹிந்தி, உருது கவிதை மற்றும் கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. “ 

பகவான்: “ஓ, அவைகள் அவரின் ஹிந்தி மற்றும் உருதி எழுத்துக்களின் மொழியாக்கங்களா “ 

ஒலிப்பெருக்கி மூலம் சாலையில் இருந்து பாடல் கேட்டது. பகவான் வெளியிலிருந்து கேட்கும் இசை ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடலா என வினவினார். நாங்கள், “ஆம்“ என்றோம். சுந்தரராமன் “டிஸ்கோ ரதம்“ என்பதைப்பற்றி கூற, பகவான் அது குறித்து அறிய ஆர்வம் கொண்டார். நாங்கள் விளக்கினோம். ஜெயராமனின் மகள் தண்ணீர் கேட்டாள், பகவான் அதனை கொடுத்தார். மஹராஜ் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு தனது உரையாடலை தொடர்ந்தார். அவர் சுவாமி சச்சிதானந்தா அவர்களின் கடிதம் பற்றி குறிப்பிட்டார். 

பகவான் : “சச்சிதானந்தா உனக்கு அனுப்பிய ஒரு கடிதத்தின் நகலை  இந்தப்பிச்சைக்காரனுக்கு அனுப்பியிருந்தார்” 

சாது: “ஆமாம், மஹராஜ். நானும் எனது பதிலின் நகலை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். இப்பொழுது அவர் இந்த விவகாரத்தை முடித்தது குறித்த தனது மகிழ்வையும, எனது சுற்றுப்பயணத்திற்கான ஆசியையும் வழங்கியுள்ளார். “ 

பகவான்: “அவர் சுவாமி சகஜானந்தா அவர்களின் கடித நகலையும் அனுப்பியிருந்தார். அது மிகுந்த கடுமையாக எழுதப்பட்டிருக்கிறது.” 

சாது: “ஆமாம் மஹராஜ். நமது சிக்கலை விள்க்கி எழுதப்பட்ட பல கடிதங்களுக்கு பின்னரும் அவர் அவசரப்பட்டு இது போன்ற கடிதம் எழுதிவிட்டார். “ 

பகவான் சிரித்தவாறே, “சச்சிதானந்தாவின் கடிதமும் மிகுந்த கடுமையாகவே இருந்தது “ 

சாது: “ஆனாலும், நான் அவருக்கு மிகுந்த பணிவான பதில் அளித்திருந்தேன் மஹராஜ்“ 

பகவான்: “ஆமாம், ஆமாம். நன்றி, நன்றி!“ யோகிஜி தொடர்ந்து, “சச்சிதானந்தா இதனை ராஜகோபால் மூலம் அனுப்பியிருந்தார். அவர் நான் உன்னிடம் பேச வேண்டும் என விரும்பினார். அது ஒரு கடுமையான கடிதமாகவே அவர் எழுதியிருந்தார். ஆனால் நான் உனது சகஜானந்தாவிற்கான பதிலை பார்த்தேன். “ சிறிது நேரம் கழித்து அவர் வினவினார்: “ நீ சென்னையில் அதனை இயக்குவதற்கு ஆட்களை பெறவில்லை?” 

சாது : “ இல்லை குருவே. இதுவரை நாம் எவரையும் பெறவில்லை. ஒருவர் அந்த இயந்திரத்தை நிறுவக்கூடியவர் டெல்லியில் இருக்கிறார். ஆனால் அவர் விமான கட்டணம், நட்சத்திர ஓட்டலில் தங்குமிடம் மற்றும் ரூ. 1000 ஒரு நளைக்கு கேட்கிறார். எங்களால் அதனை தர இயலாது.” 

பகவான்: “ஆமாம். ஆமாம். எனக்கு புரிகிறது. அதனை நீ தர இயலாது. ஆனால் நீ அந்த இயத்திரத்தை என்ன செய்ய போகிறாய் “ 

சாது: “மஹராஜ், நாம் அதை ஒதுக்கிவிட்டு நவீன எந்திரத்தை பெற முயற்சிக்க வேண்டும். இந்த இயந்திரம் பழைய மாடல், மற்றும் பெரியது. இதனை எவரும் விரும்புவதில்லை. மற்றொரு வழி இதைப்போன்ற இயந்திரத்தை பயன்படுத்துபவரிடம் இதனை கொடுத்துவிட்டு சிறிய இயந்திரத்தை பெற வேண்டும்.“ 

பகவான்: “ஓ, அப்படியா, அது அத்தனை பெரியதெனில் நீ சிறிய ஒன்றையே பெறலாம்.“ 

பகவான் பின்னர் நிவேதிதா குறித்து கேட்டார். “ நிவேதிதா எப்படி இருக்கிறாள் ? ஏன் அவள் வரவில்லை ? “ 

சாது: “அவள் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சேர்ந்து விட்டாள். அவளது வகுப்புகள் துவங்கி விட்டன. “ 

பகவான்: “ஓ! அவள் படிப்பில் மும்முரமாக இருக்கிறாள்.” 

சாதுஜி பகவானிடம் விவேக் பற்றி, “விவேக் நல்ல உடல்நிலையில் இருப்பதில்லை, மஹராஜ். அவ்வப்போது அவனுக்கு உடல்நலம் குன்றிவிடுகிறது. சென்றவாரம் அவன் அலுவலகத்தில் விழுந்து விட்டான், சக பணியாளர்கள் அவனை வீட்டிற்கு கொண்டு வந்தனர்.” 

பகவான்: “யார் அவனை கொண்டு வந்தது?“ 

சாது: “அவனது அலுவலகத்தில் பணிபுரியும் சக பணியாளர். அவனுக்கு அதிகமான ஜூரம் இருந்தது. நாங்கள் அவனுக்கு மருத்துவ சோதனையை மேற்கொண்டோம். எக்ஸ்ரே மற்றும் பிற சோதனைகள் எடுக்கப்பட்டு மருத்துவர்கள் அவனை அறுவைசிகிச்சை நிபுணரை தொடர்பு கொள்ள சொன்னார்கள்.“ 

பகவான்: “அறுவைசிகிச்சை நிபுணரா, எதற்கு ? “ 

சாது: “ஒருவேளை அவர் அறுவைசிகிச்சைக்கு அறிவுறுத்தலாம்.” 

பகவான் விவேக்கை கூர்மையாக சில நிமிடங்களுக்கு கவனித்தார். பின்னர், “விவேகானந்தா சரியாகி விடுவான். என் தந்தையின் ஆசீர்வாதங்கள் ! விவேகானந்தா நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பான்.“ 

சாது பகவானிடம் டாக்டர். ராதாகிருஷ்ணன், ராஜலட்சுமி மற்றும் சுரேஷ் போன்றோர் நாளை உங்களை காண வருவார்கள் என்றார். “இன்றிரவே அவர்கள் இங்கு வந்துவிட்டாலும், நாளையே அவர்கள் என்னோடு வருவார்கள்“ என்றார். 

பகவான், “யாரெல்லாம் வருகிறார்கள்?“ 

சாதுஜி மீண்டும் பெயர்களைச் சொன்னார். பகவான், “யார் ராஜலட்சுமி, அவரது கணவர் கப்பல் பொறியாளர் தானே?“ என்று வினவினார். 

சாது, “ஆமாம் மஹராஜ். அந்த ராஜலட்சுமிதான்” என பதிலளித்தார். 

பகவான், “யார் சுரேஷ்?“ என வினவினார்.  சாதுஜி, “அவர் எங்களுடைய ஒரு உறுப்பினர், அவர் எல்லா ஹோமங்களையும் செய்வார். அவர் ஒரு ராஜ புரோகிதர் அவர் சென்ற முறை வந்திருந்தார் “ 

பகவான் : “ஓ, அவரும் வருகிறாரா, சரி். எங்கே இன்றிரவு தங்க இருக்கிறீர்கள் ? “ 

சாது : “நாங்கள் பிருந்தாவன் லாட் ஜில்  தங்குகிறோம். “ 

பகவான்  : “சரி, இந்தப் பிச்சைக்காரன் இப்பொழுது உங்களை அனுப்பி வைக்கிறான். நாளை காலை 10 மணிக்கு வாருங்கள் “ 

சாது : “சரி. மஹராஜ், நாங்கள் காயத்ரி ஜபத்திற்கு பின்னர் வருகிறோம். “

யோகிஜி எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். அவர் சாதுவின் தண்டம் மற்றும் பிக்ஷா பாத்திரத்தை எடுத்து ஆசீர்வதித்து தந்தார். நாங்கள் பிருந்தாவனுக்கு வந்தோம், சசியும் எங்களோடு இரவு உணவிற்கு இணைந்தார். சுரேஷ், டாக்டர்  C.V. ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி போன்றோர் வந்து சேர்ந்தனர். அவர்கள் ரங்கா லாட்ஜில் தங்கினா். 

வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 14, 1992 அன்று காலை காயத்ரி ஜபத்தை முடித்துவிட்டு, கோயிலுக்கு விவேக்குடன் சென்று, பின்னர் யோகியின் இல்லத்திற்கு நாங்கள் காலை 10 மணிக்கு சென்றோம். அங்கு பெரும் கூட்டம் இருந்தது. சசி பகவானிடம் எங்களது வருகைப்பற்றி கூறினான். பகவான் அவரைச் சுற்றி இருந்தவர்களை வழியனுப்பி விட்டு எங்களை உள்ளே வரச் சொன்னார். ரோஸோரா, ஒரு வெளிநாட்டவர், மற்றும் ஒரு அன்னை அங்கே அமர்ந்திருந்தனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினரும் அங்கே வந்தனர். சாதுஜி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவியை அறிமுகப்படுத்தினார். கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து சென்றவாறு இருந்தனர். யோகி கூறினார். “ இது மிக அதிகம். இந்தப்பிச்சைக்காரன் இதற்கு பழக்கப்பட்டவன் அல்ல. காலை முதல் மாலை வரை, நாள் முழுவதும், இருபத்து நான்கு மணி நேரமும் இந்த கூட்டம். இந்தப்பிச்சைக்காரன் விளம்பரத்தை விரும்பியதன் பலன் இதுதான். பாலகுமாரன் தான் பொதுமக்களுக்காக எழுதி வருவதாகவும் அதனால் கூட்டம் வரும் என்றார். இப்போது அதுதான் நடந்து வருகிறது. முன்பு கி.வா.ஜகன்னாதன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் மற்றும் பெரியசாமி தூரன் போன்றோர் பாடல்களை எழுதினர். மிகச் சிலரே படித்தனர். இப்போது சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் – பலர் படிக்கின்றனர். அவர்கள் வந்து இந்தப் பிச்சைக்காரனை பார்க்கின்றனர். இது மிக அதிகம். “ 

யாரோ ஒருவர் வந்து தனது குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட கையை காட்டி பகவானிடம் ஆசியை வேண்டினார். யோகி அவரை ஆசீர்வதித்தார். இன்னொரு பெண்மணி வந்து தனது மகன் சி.ஏ வில் ஐந்து முறை தோல்வியுற்றுவிட்டதாகவும், அவன் தொடரவேண்டுமா இல்லையா என யோகியிடம் கேட்டார்கள். பகவான், “ ஆறு, எட்டு, பத்து முறை கூட தோல்வியடைந்தாலும் அவனை மறுபடியும் தேர்வு எழுதச் சொல்லுங்கள் “ என்றார். வேறொரு மனிதர் வந்து தனது நிலம் அதிகமான விலைக்கு விற்கப்பட ஆசீர்வதிக்குமாறும், தனது அருகாமையில் இருப்பவர் குறைந்த விலைக்கு கேட்பதாகவும் கூறினார். பகவான் அவருக்கு, “உனது நிலம் விற்பனையாகும். நீ இப்போது போகலாம்” எனக்கூறி அவரை அனுப்பி வைத்தார். யாரோ ஒருவர் அவர் முன் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை வைத்து விட்டு அவருக்கு மாலை அணிவித்தார். இன்னொருவர் தனக்கு காணிக்கையாக தந்த நூறு ரூபாயை யோகி அவரிடமே திருப்பி கொடுத்தார். ஒருவர் பை நிறைய பழங்களை கொண்டு வந்தார், யோகி அதில் பாதியை அவரிடமே தந்து அனுப்பினார். குரு தொடர்ந்து இந்த கூட்டம். தனக்கு மிக அதிகம் என்று சொல்லியவாறே இருந்தார். 

குரு தனக்கு முன்னால் சுரேஷ் வைத்த ராக்கியை எடுத்து இது என்ன என்று வினவினார். சுரேஷ் இது ரேகாவால் அனுப்பட்டது என்றார். பகவான் யார் ரேகா என்று வினவினார். சுரேஷ் தனது சகோதரி என பதிலளித்தார். “ இங்கே பல ரேகாக்கள் வந்து போகின்றனர். இந்தப் பிச்சைக்காரன் எந்த ரேகா அவள் என்று என்னால் நினைப்படுத்திக் கொள்ள இயலவில்லை” என்றார். சாது பகவானிடம் ரேகா சென்ற மாதம் வந்தாள் என்றார். பகவான், “ உன்னோடு வந்தாளா ? “ என வினவினார். சாது “ஆம்“ என்றார். யோகி சாதுவிடம் அவளை நினைவு கூறும்படி ஏதேனும் கூறு என்றார். சாது, “ அவள் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். நீங்கள் அவளை பக்கத்தில் அழைத்து எதற்காக அழுகிறாய் என்று கேட்டீர்கள். அவள் ஒன்றுமில்லை என்றாள். நீங்கள் அவளை சிறிது நேரம் சிரிக்கச் சொன்னார்கள், அவள் சிரித்தாள்” என்று சாது நினைவு படுத்தியதோடு  நீங்கள், “கபி கபி ரொத்தி ஹை அவுர் கபி கபி ஹஸ்தி“ என்றீர்கள்.” சுரேஷ் யோகியிடம் நீங்கள் அவளை ராம்நாம் சொல்ல சொன்னீர்கள் என்றார். பகவான் அப்போதும் அவளை நினைவு படுத்திக் கொள்ள இயலவில்லை என்றார். ஆனாலும் அவளை ஆசீர்வதித்தார். சுரேஷ் பகவானிடம் தனது அன்னையின் உடல்நலக்குறைபாடு பற்றி கூறினார். பகவான் என்ன குறைபாடு என்ற விவரம் கேட்டார். சுரேஷ் அவளுக்கு நுரையீரல் தொற்று இருப்பதாக கூறினார். பகவான் அவளது பெயரைக் கேட்டார். சுரேஷ் “ சாரதா” என்றார். பகவான், “ சாரதாவிற்கு என் தந்தையின் ஆசீர்வாதங்கள்” என்று கூறிவிட்டு டாக்டர்  ராதாகிருஷ்ணன் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார். தற்சமயம் அவர் நன்றாக இருக்கிறார் என்று சுரேஷ் பதிலளித்தார். பகவான் பின்பு விவேக்கை நோக்கி திரும்பி, “ விவேக்கும் நல்ல உடல்நிலையில் இருப்பார். என் தந்தையின் ஆசீர்வாதங்கள்” என்றார். 

நாங்கள் அனைவரும் “ ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் “ என்பதை சிறது நேரம் பாடினோம். கூட்டம் அவரது ஆசிக்காக தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தனர். யோகி விவேக்கின் பெயரை அவ்வப்போது அழைத்த வண்ணம் இருந்தார். அவர், “விவேகானந்தா என் தந்தை மட்டுமே இருக்கிறார், வேறெவரும் இல்லை, வேறெதுவும் இல்லை, உள்ளும், புறமும் மற்று எங்கெங்கும்  என் தந்தை மட்டுமே இருக்கிறார். அவர் நம்முள் இருக்கிறார். நாம் எல்லோரும் அவருள் இருக்கிறோம். அவர் மட்டுமே இருக்கிறார் “ என்றார். 

டாக்டர். ராஜலட்சுமி அங்கே வந்தார். அவர் எங்களோடு வந்தார் என சாது கூறினார். யோகி விவேக்கிடம் அவளை உள்ளே வருமாறு அழைக்க சொன்னார். அவருக்கும் இடம் வழங்கப்பட்டது. யோகி, சாதுவிடம் அவளது கணவரின் பெயரைக் கேட்டார். சாது, “ ராமமூர்த்தி “ என்றார். பகவான் அவளிடம் எங்கே அவர் என்றார். அவள் கப்பலில் யு.எஸ் – க்கு சரக்கு எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அவர் சரக்கு இறக்கியவுடன்,  ஒரு மாதம் கழித்து, அதே கப்பலில் திரும்ப வருவார் என்றார். பகவான், “ ஓ! அவர்கள் எதையேனும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டு, திரும்ப வருகையில் காலியாக வருவார்களா?“ என்றார். அவள் திரும்ப வருகையில் “நிலைப்படுத்தும் பாரம்” கொண்டு வருவார்கள் என்றார். பகவான் அதன் பொருளைக் கேட்டார். கப்பலில் தண்ணீர் நிரப்பப்பட்டு வரும் என்றார். பகவான், “ ஏன் ? அங்கே தண்ணீர் நன்றாக இருக்குமா?“ என வினவினார். நாங்கள் அனைவரும் சிரித்தோம். அவள், “கப்பல் கடலில் கவிழாமல் இருப்பதற்காக அவர்கள் கப்பலில் தண்ணீரை எடைக்காக நிரப்பி அனுப்புவார்கள் “ என்றார். 

இன்னொரு கூட்டம் மக்கள் பகவானின் தரிசனத்திற்கு வந்தனர். பகவான் மீண்டும், “ இது எல்லா நாளிலும் நடக்கும். இந்தப் பிச்சைக்காரன் இதற்கானவன் அல்ல. சரி, அவர்களை உள்ளே வரச்சொல்”. மக்கள் உள்ளே வந்தனர். பகவான் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார். சிலர் அங்கேயே அமர முயற்சித்தனர். ஆனால் பகவான் அவர்களை கிளம்புமாறு சொன்னார். அதே நேரத்தில் பகவானின் இன்னொரு உதவியாளரான அர்ஜூனன் சசிக்கு மாற்றாக அங்கே வந்தார்.

யோகி சாதுவிடம் திரும்பி, “ உனது ‘ஒரு மகா யோகியின் தரிசனங்கள்’ க்கு என்ன ஆனது? என வினவினார். சாது இதுவரை மூன்று பதிப்புகள் ஆங்கிலத்தில் வந்திருப்பதாகவும், அது ஜெர்மனில் மொழிப்பெயர்க்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார். மேலும் சாது, “வியன்னாவின் அரவிந்தர் மையம் அதனை பதிப்பிக்கின்றனர். அவர்கள் நமது அனுமதியை கேட்டனர். நாம் அனுமதி வழங்கியுள்ளோம்”  என்றார், பகவான், “அப்படியா, அது மிகுந்த விலையாக இருக்குமே” என கூறினார். சாது, “அவர்கள் அதை செய்கிறார்கள். நாங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிபெயர்ப்புகளை வெளிக்கொண்டுவர இருக்கிறோம்” என்றார். பகவான் புத்தகம் அச்சில் இருக்கிறதா எனக் கேட்டார். சாது மொழிப்பெயர்ப்பு முடிந்து விட்டது என்றார். “ அப்படியெனில் ‘ஒரு மகா யோகியின் தரிசனங்கள்’ தெலுங்கு, தமிழ், மற்றும் ஜெர்மன் மொழிகளில் வெளிவர இருக்கிறது!“ எனக்கூறி பகவான் ஆச்சர்யத்தோடு உரக்க சிரித்தார். அவர் தொடர்ந்து, “மூன்று பதிப்புகள் வந்திருக்கிறது எனில் எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டது ?“ என வினவினார். சாதுஜி, “ ஒவ்வொரு பதிப்பிலும் இரண்டாயிரம் பிரதிகள்“ என்றார், பகவான், “அப்படியெனில் அனைத்து 6000 பிரதிகளும் விற்றுவிட்டதா? “ என கேட்க, சாது, “ இன்னமும் 500 பிரதிகள் மட்டுமே உள்ளன “ என்று கூறினார். “ அப்படியெனில் 5000 பிரதிகள் விற்றுவிட்டன ? “ என்று யோகி கேட்க, சாது, “ ஆமாம். மஹராஜ் “ என்றார். 

பகவான் ‘தி இந்து’ இதழில் வந்திருந்த அரவிந்தர் பற்றிய ஒரு கட்டுரையை கொண்டு வந்து காட்டினார். அவர் சாது அதனை படிக்க வேண்டுமென விரும்பினார். சாது படித்தார். அது மிகவும் நன்றாக எழுதப்பட்டிருப்பதாக சாது கூறினார். சாது, இக்கட்டுரையை எழுதிய பிரேமா நந்தகுமார் பேராசிரியர். K.R. சீனிவாச அய்யங்கார் அவர்களின் புதல்வி என்றார். மஹராஜ், “ அவர் ஸ்ரீ அரவிந்தர் குறித்து புத்தகங்கள் எழுதியுள்ளார்” என்று கூற, “ ஆமாம் மஹராஜ்” என்றார் சாது. தனது பேராசிரியர் உடனான தொடர்பு பற்றியும் சாது கூறினார். வந்தே மாதரம் நூற்றாண்டு கொண்டாட்ட கமிட்டியின் செயலாளர் ஆக தான் இருந்தபோது, “ 1976ல் வந்தே மாதரம் தபால்தலை வெளியீட்டு விழாவில் அவர் தலைமை தாங்கினார்” என்றார். யோகி சாதுவிடம் எந்த வருடம் என வினவினார். “1976“ என்று கூறி, “1977ல் எனது புத்தகமான “வந்தே மாதரம்” என்ற நூலுக்கு ஆச்சார்யா J.B. கிருபளானி முன்னுரை எழுதி, அது வெளியிடப்பட்டது” என்றும் கூறினார்.  பகவான் சாதுவிடம், இது சாது தன்னை சந்திப்பதற்கு முன்பா ?  என வினவினார். சாது, “ ஆம், இது சகோதரி நிவேதிதா அகாடமி துவங்கப்பட்ட உடன் வெளியிடப்பட்ட முதல் நூல், “ என்றார். பகவான் சாதுவிடம், “ நாம் எப்போது முதலில் சந்தித்தோம் ? “ என வினவினார். சாது பகவானிடம், “ நாம் 1984ல் சந்தித்தோம், மஹராஜ் “ என்றார். 

பகவான் சாதுவிடம் எப்போது அவர் சுற்றுப்பயணத்திற்கு செல்ல இருக்கிறார் என வினவினார். சாது அதற்கு பதிலளிக்கையில் தான் சேலத்திற்கு 16 ஆம் தேதி செல்ல இருப்பதாக கூறி, சேலம் நிகழ்ச்சி நிரல் குறித்த நோட்டீஸை காட்டினார். யோகி சாதுவிடம் அதனை படிக்குமாறு சொன்னார் அவரும் படித்தார். பகவான் நிகழ்ச்சியை ஆசீர்வதித்தார். சாது உ.பியில் தான் பயணிக்க விரும்பும் இடங்கள் குறித்து யோகியிடம் கூறினார். மீண்டும் அவர் சுற்றுப்பயண திட்டத்தை ஆசீர்வதித்தார். 

சுரேஷ், யோகியின் முன்னர், “ ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் “ என்று நூலை வைத்து அதனை தனக்காக ஆசீர்வதிக்குமாறு கேட்டார் . யோகி புத்தகத்தை திறந்து ஒரு பக்கத்தை எடுத்து ராதாகிருஷ்ணனை அதனை படிக்குமாறு கூறினார். அதில் ராமகிருஷ்ணர், சித்தர்களும் இந்த உலகில் சிக்கிக் கொள்ளும் நிலைகள் குறித்து கூறியிருந்ததை வாசித்தார். பகவான் அதனை  கேட்டு சிரித்தார். பகவான் அந்த புத்தகத்தை கையொப்பம் இட்டு சுரேஷிடம் திரும்ப கொடுத்தார். பகவான் சிலர் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்கின்றனர். “ இந்தப் பிச்சைக்காரன் கூறினான், இவன் சந்தோஷமாக இருக்கிறானோ  இல்லையோ, இவன் விரும்புகிறானோ இல்லையோ,  தந்தை இந்த வேலையை கொடுத்திருக்கிறார், இவன் தந்தையின் பணியை செய்து வருகிறான்.” பகவான் மீண்டும் அங்கே வரும் கூட்டத்தினர் பற்றி கூறுகையில், “ யாரோ ஒருவர் ஒன்பது பேரோடு வந்திருந்தார். இந்தப்பிச்சைக்காரன் இங்கே இடமில்லை என்று கூறினான். ஆனால் வந்தவரோ, ‘நாங்கள் ஒரு பெரிய இடத்தை தருகிறோம்’ என்றார்.” பகவான் சிரித்துவிட்டு தொடர்ந்தார், “ இந்த இடம் இந்தப் பிச்சைக்காரனுக்கு போதுமானது” . 

மக்கள் பெருமளவில் வந்த வண்ணம் இருந்தனர். யோகி கூறினார், “ எனது குரு ராம்தாஸ் இந்தப்பிச்சைக்காரனை ராமநாமத்தை உச்சரிக்கச் சொன்னார். இப்பொழுது இந்தப்பிச்சைக்காரன் அதனை செய்து வருகிறான். ஒவ்வொரு விநாடியும் யார் வந்தாலும் ராமநாமத்தையே சொல்கிறான். முன்பு இந்தப்பிச்சைக்காரன் சில நண்பர்களை சந்தித்து நேரத்தை செலவழிப்பான். இப்பொழுது பலர் வருகிறார்கள். இந்தப்பிச்சைக்காரன், “ ராம், ராம் “ என்று மட்டுமே சொல்கிறான். “ யோகி சிறிது இடைவெளி விட்டு, “ தந்தை மட்டிலுமே “ என்றார். யோகி சிலர் தன்னிடம் நீங்கள் ஏன் தந்தையைப் பற்றி மட்டுமே பேசுகிறீர்கள் அன்னையைப்பற்றி பேசுவதில்லை என்று கேட்டனர் என்று கூறிவிட்டு உரக்க சிரித்தார். சுரேஷ் யோகியிடம் தந்தை மற்றும் அன்னை இரண்டா என வினவ, யோகி மீண்டும் சிரித்தவாறே, “இந்தப் பிச்சைக்காரனுக்கு அவையெல்லாம் தெரியாது. அவனுக்கு தந்தையை மட்டுமே தெரியும்“ என்று கூறி மீண்டும் சிரித்தார். 

விவேகானந்தா கல்லூரியின் இரண்டு மாணவர்கள் வந்தனர். அதில் ஒருவன் ஒரு விபத்தில் சிக்கி 23 தையல்கள் போடப்பட்ட நிலையிலும் அவன் விரைவாக யோகியின் கருணையால் குணமானதாக கூறினான். யோகி, “ தந்தையின் கருணை “ என்றார். அவர்களை ஆசீர்வதித்து யோகி அனுப்பினார். ராதாகிருஷ்ணன் பகவானிடம் சுரேஷ் பி.எச்.டி செய்வதற்கு, ”கபீரின் அந்தி மொழி“ என்ற தலைப்பு எடுத்துக் கொண்டிருப்பதாக கூறினார். பகவான் அது என்ன என கேட்டுவிட்டு, “இந்தப்பிச்சைக்காரனுக்கு அது குறித்து எதுவும் தெரியாது“ என்றார். சுரேஷ் யோகியிடம் அந்த மொழி ஞானிகள் பயன்படுத்திய குறியீடுகளால் ஆன மொழி என்றார். குரு சிரித்தவாறே தனக்கு அது குறித்தெல்லாம் தெரியாது என்றார். 

பகவான் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி பெயரைக் கேட்டார். அவர் ‘இந்திரா’ என்று கூற, யோகி, ‘ இந்திரா காந்தி’ எனக் கூறி சிரித்தார். அவர் அவளிடம் அவள் முதன்முறையாக வருகிறாரா எனக்கேட்டார். அவர் “ ஆமாம் “ என்றார். அவர் அவளுக்கு மலர்களை கொடுத்ததோடு திருமதி.சுந்தரராமன், ராஜலட்சுமி அவர்களுக்கும் கொடுத்தார். பகவான் சாதுவிடம் ஞானப்பிரகாசம் வருகிறாரா எனக்கேட்டார். சாது அவர் ஒவ்வொரு மாதமும் வருகிறார் என்றும் கடந்த மூன்று வருடங்களாக வருகிறார் என்றும், நாங்கள் இதுவரை ரூ.6000 க்கும் மேல் பணமாகவும், ரூ.4000 மதிப்புள்ள புத்தகங்களையும் தந்திருப்பதாக கூறினார். யோகி அவரிடம் அவர் காவி உடை போட்டுவிட்டாரா என்று கேட்டார். சாது அவரது வேட்டி காவி நிறத்தில் உடுத்துகிறார் என்றார். “ எவ்வளவு காலம் நீங்கள் அவருக்கு உதவ முடியும். எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அவர் உங்களிடம் வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பகவான் கூறினார்.

யோகி ராஜலட்சுமி பரிசளித்த பையை பார்த்தார். அவர் யார் இவையெல்லாம் கொடுத்தது எனக் கேட்டார். சாது டாகடர். ராஜலட்சுமி கொடுத்தார் என பதிலளித்தார். பகவான், ராஜலட்சுமி இடம் எதற்காக இதனை வாங்கி வந்தீர்கள் என்று கேட்டார். அவர் அமைதியாக இருந்தார். பின்னர் பகவான், “ இந்தப்பிச்சைக்காரன் இதனை ஒருவருக்கு கொடுக்க இருக்கிறான்“ என்றார். பின்னர் அவர் அந்த பையை விவேக்கிற்கு கொடுத்தார். அவர் தனக்கு முன் சுரேஷ் வைத்த ஒரு பாக்கெட்டை எடுத்தார். சுரேஷ் இடம் என்ன இது என்று கேட்டார். சுரேஷ், “ நெல்லிக்காய் “ என்றார். யோகி அதையும் விவேக்கிடம் கொடுத்து, “இதனையும் நீ பயன்படுத்திக் கொள்ளலாம்“ என்றார். அவர் சாதுவிடம் திரும்பி அவரிடம் பை இருக்கிறதா என வினவினார். சாது தனது பையை பகவானின் முன் வைத்தார். அவர் அனைத்து கல்கண்டு பொட்டலங்களையும் அதில் திணித்தார். பின்னர் அவர் தன் முன்னர் இருந்த கரன்சி நோட்டுக்களை அனைத்தும் தொகுத்து எடுத்தார். அதனை எடுத்து சாதுவின் கைகளைப் பற்றி அதில் வைத்து சிறிது நேரம் கரங்களை பற்றியவாறு இருந்து ஆசீர்வதித்தார். சாது அவரிடம் தனது விரதத்தினை அவருடைய ஆசியுடன் துவங்குவதாக கூறினார்.  பகவான் இரண்டு ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு ஒன்றை சாதுவின் கைகளில் திணித்து, “ நீ பழங்களை எடுத்துக் கொள்ளலாம் “ என்றார். 

பகவான் ஒரு பாக்கெட் பேரீச்சம்பழத்தை டாக்டர். ராதாகிருஷ்ணனிடம், மற்றும் மற்ற பழங்களை மற்றவர்களுக்கும், கொடுத்தார். அவர் அனைவரையும் ஆசீர்வதித்தார். அவர் சாதுவை மீண்டும் மீண்டும் ஆசீர்வதித்தார். அவர் சாதுவின் தண்டம் மற்றும் பிக்ஷா பாத்திரத்தை எடுத்து அதனை சக்தியேற்றி அவரிடம் திரும்ப கொடுத்தார். பின்னர் அவர் அனைவரையும் வழியனுப்பி வைத்தார். நாங்கள் ஓட்டலுக்கு திரும்பி வந்தோம். டாக்டர். ராஜலட்சுமி “குருதட்சிணை” கொடுத்து சாதுவிடம் ஆசியை பெற்றார். பின்னர் நாங்கள் அனைவரும் சென்னைக்கு திரும்பி இரவு வந்து சேர்ந்தோம். 

யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார்,

யோகி ராம்சுரத்குமார், ஜெய குருராயா !

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.27

Glimpses of A Great Yogi in Tamil – Part 2
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – II
சீடன் கண்ட தீக்ஷா குரு

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 2.27 

ராம்நாம் இயக்கத்தின் விரைவான முன்னேற்றங்கள்

இந்தியா பிஸ்டனின் திரு. M. சந்தர் மற்றும் திருவான்மியூரைச் சேர்ந்த திரு.S.V. ராமசந்திரன் என்ற பகவானின் பக்தர்கள் பகவானின் பாதங்களில் ராம்நாம் நோட்டுக்களை வைக்க, யோகி அவர்களை சாதுவிடம் அனுப்பி வைத்தார். அவர்களும் தங்கள் குடும்பத்துடன் சாதுவின் இல்லத்திற்கு வியாழக்கிழமை மார்ச் 26, 1992 அன்று வந்தனர். வேலூரின் ஒருங்கிணைப்பாளரான திரு. ரவி அங்கு நடக்க இருக்கும் நிகழ்ச்சியை உறுதி செய்தார். ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29 அதிகாலையில் சாது டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிவேதிதாவுடன் காட்பாடிக்கு புறப்பட்டனர். பகவானின் பக்தர்கள் சாதுவை பாதபூஜை செய்து மரியாதையோடு வரவேற்றனர். சாதுஜி ரத்னகிரி முருகன் கோயிலுக்கு சென்றார். அங்கே பாலமுருகனடிமை சுவாமிகள் சாதுவை வரவேற்றார். சாதுஜி சுவாமியுடன் சிறிது நேரம் செலவழித்தார். மாலையில் நடந்த ராம்நாம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பண்ருட்டியை சேர்ந்த திருமதி. ஆண்டாள் மற்றும் D.S. கணேசன் போன்றவர்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்தப்பின் சாது சென்னைக்கு நள்ளிரவில் வந்து சேர்ந்தார். அமெரிக்காவிற்கு கிளம்பிய திரு. R.பாலு சாதுவை சந்தித்து அங்கிருக்கும் பக்தர்களுக்கான சேதியை பதிவு செய்து தருமாறு கேட்க, சாது யோகி ராம்சுரத்குமார் மற்றும் ராம்நாம் இயக்கம் பற்றி பேசி பதிவு செய்து, ஏப்ரல் 1, 1992, அன்று தந்தார். 5-ஆம் தேதி இன்னொரு மிகப்பெரிய சத்சங்கம் திருமதி. ப்ரசூன்னாவின் இல்லத்தில் நடந்தது அதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 

புதன்கிழமை ஏப்ரல் 8, 1992ல் சாது பண்ருட்டிக்கு பயணம் செய்தார். அங்கே ஒரு பிரம்மாண்டமான ராம்நாம் சத்சங்கம் நடைப்பெற்றது அதில் பல அன்னையர்களும், பிள்ளைகளும் கலந்து கொண்டு பாதபூஜை செய்து சாதுவை வரவேற்றதோடு சத்சங்கத்திலும் கலந்து கொண்டனர். சாதுஜி பங்குபெற்ற அனைவருக்கும் யோகி ராம்சுரத்குமார் படம் மற்றும் ராம்நாம் நோட்டுக்கள் தந்தார். அடுத்தநாள் காலையில் சாதுஜி பல பக்தர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு பகவானின் படத்தை பிரசாதமாக தந்தார். மாலையில் திருமதி  ஆண்டாள் மற்றும் சில அன்னையர்களுடன் பூங்குளம் என்ற கிராமத்திற்கு சென்றார். அங்கே கிராம மக்கள் கூடி சாதுவிற்கு பூரணகும்பம் மற்றும் பாதபூஜை செய்து வரவேற்று அவரை குடைபிடித்து ஊர்வலமாக அழைத்து கோயிலுக்கு சென்றனர். கடலூர் பஜன் குழுவினர் பஜனை நிகழ்ச்சியை நடத்தினர். அங்கே சாது பகவான் குறித்தும் ராம்நாம் குறித்தும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். பிரசாதங்களை அனைத்து பக்தர்களுக்கும் வழங்கினார். பூங்குளம் பஞ்சாயத்தின் தலைவரான திரு. சுந்தரமூர்த்தி இந்த சாதுவிற்கு மரியாதை செய்தார். ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை அன்று பல பக்தர்கள் சாதுவின் ஆசியை பெற வந்தனர். மாலையில் சாதுஜி திருமதி. ஆண்டாள் மற்றும் பிற அன்னையருடன் ஹேமம்புஜ உடனுறை சரநாராயண மற்றும் கமலவல்லி உடனுறை நரசிம்மர் கோயில்களுக்கு சென்றார். கோயிலின் பட்டாச்சார்யர்கள் சாதுவை வரவேற்று மரியாதை செய்தனர். சாது அங்கே இருந்த பக்தர்களிடம் உரையாற்றினார். 

சாதுஜி சென்னைக்கு சனிக்கிழமை ஏப்ரல் 11 அன்று திரும்பினார். மாலையில் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அலுவலக பணியாளர்கள் உடன் ஆவடியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் ராமநவமி விழாவில் சாது உரையாற்றினார். அடுத்தநாள் காலை குமாரி. பரிமளா அவர்களின் இல்லத்தில் இன்னொரு சிறப்பு சத்சங்கம் நடைப்பெற்றது. சாதுவின் அன்னையான ஜானகி அம்மாளின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 15 அன்று சிறப்பு சத்சங்கம் நடைப்பெற்றது. பப்பா ராம்தாஸ் அவர்களின் 108 வது ஜெயந்தியை முன்னிட்டு அகண்ட ராம்நாம் சத்சங்கம் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17, 1992, அன்று நடைப்பெற்றது. பகவானின் உதவியாளர் யோகராஜ் அவர்களுடன் சேவை இல்லம் சகோதரிகள் சாதுவின் இல்லத்திற்கு வந்து பகவானுடைய அழகிய புகைப்படங்களை அளித்தனர். ஏப்ரல் 19 அன்று பிரம்மாண்ட காயத்ரி ஹோமம் மற்றும் ராம்நாம் சத்சங்கம் நடைப்பெற்றது. சுவாமி ராக்கால் சந்திர பரமஹம்சா சத்சங்கத்தில் கலந்து கொண்டார். இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து சாதுஜி, பூஜ்ய சுவாமி சச்சிதானந்தா அவர்களுக்கு கடிதம் ஒன்றை செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 21 அன்று எழுதினார்.

ஏப்ரல் 22, புதன்கிழமை 1992 காலையில் “ரீலீஜியஸ் டைஜஸ்ட்” என்ற இதழின் ஆசிரியரான திரு. கணேசன் தனது மனைவியுடன் வந்து சாதுவுடன் உரையாடி பகவானின் இலக்கு பற்றி அறிந்து கொண்டனர். மதியம், சாதுஜி, டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் விவேகானந்தன், திருவண்ணாமலைக்கு சென்று பகவானின் இல்லத்திற்கு இரவு 7.15 மணிக்கு அடைந்தனர். பகவானின் உதவியாளர் சசி பகவானிடம் சாதுவின் வருகை பற்றி தெரிவித்தார். பகவான் வெளியே வந்து சாதுவை வரவேற்றார். தேவகி, திருமதி சுந்தரராமன் போன்றோர் அங்கே இருந்தனர். சாது பகவானிடம் வேலூர், பண்ருட்டி மற்றும் ஆவடி நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்ததை அறிவித்தார். பகவான் மீண்டும் நிகழ்ச்சிகள் நடந்த இடங்களின் பெயர்களை கேட்டார். சாது மறுபடியும் கூறினார். பகவான் அனைத்தும் தனது தந்தையின் கருணை என்றார். 

சாது பகவானிடம் விவேக்கின் திட்டப்பணி அறிக்கை பற்றி கூறினார். யோகி அந்த திட்டப்பணி பற்றிய விவரங்கள், அதனை ஆய்வு செய்பவர் மற்றும் வழிநடத்துபவர்கள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அவர் திட்டப்பணி அறிக்கையை எடுத்து அதன் ஒவ்வொரு பக்கங்களையும் பார்த்தார். விவேக்கிடம் தனக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட பகுதியையும், முன்னுரையில் தம்மைப்பற்றி விவேக் குறிப்பிட்ட பகுதிகளையும் படிக்குமாறு சொன்னார். சாது, பகவானிடம் திட்டப்பணி அறிக்கையினை கம்யூட்டரில் பிரிண்ட் எடுத்தது நிவேதிதா என்றார். பகவான் விவேக்கை ஆசீர்வதித்து தேர்வில் சிறப்பாக செய்வான்  என்றார்.  பின்னர், யோகி அவரது கையொப்பத்தை ॐ (ஓம்) என்று, திட்டப்பணி அறிக்கையின் முதல் பக்கத்தில் போட்டார். சாது, கடந்த நான்கு வருடமாக பிள்ளைகளுக்காக தான் எதையும் செய்யவில்லை என்றும் ஆனால் யோகியின் கருணையாலேயே பிள்ளைகள் சிறப்பாக படித்ததாக கூறினார். யோகி இவையனைத்தும் தந்தையின் கருணை என்றார். யோகி M.S. ஐயர் குறித்தும், விவேக்கிற்கான அவரது உதவி பற்றியும் கேட்டார். சாது யோகியிடம். திரு. ஐயர் ராம்நாம் சத்சங்கத்தில் தொடர்ந்து பங்கேற்பதாக கூறினார். பகவான் அவரை ஆசீர்வதித்தார். விவேக் பகவானிடம் எனது படிப்பை முடித்தவுடன் திரு.ஐயர் தனது நிறுவனத்தில் என்னை இணையுமாறு கூறியிருக்கிறார் என்று கூறினான். பகவான் நிவேதிதா குறித்து கேட்க, சாது அவள் தனது தேர்விற்கு தயாராகி வருவதாக கூறினார். பகவான் சாதுவிடம் அவளது காலில் ஏற்பட்ட சுளுக்கு குறித்து கேட்டார். ஒரு வாரம் கழித்து அவள் குணமாகி விட்டதாக சாது சொன்னார். விவேக் தன்னுடைய தாயார் நலமாக இல்லை என்று கூறினார். யோகிஜி அவர் நலமடைவாள் என்றார். 

சாதுஜி பகவானிடம் ‘ரீலிஜியஸ் டைஜஸ்ட்’ இதழின் ஆசிரியர் திரு. கணேசன் பற்றி குறிப்பிட்டார். பகவான் அவர் பற்றியும், அவரது இதழ் குறித்தும் தகவல்களை கேட்டார். அவர் எவ்விதம் சாதுவின் தொடர்பில் வந்தார் என கேட்டார். சாது பகவானிடம் அவர் கடந்த மூன்று வருடமாக ‘தத்துவ தர்சனா’ இதழை தொடர்ந்து படித்து வருவதாகவும் அவர் நமது ராம் நாம் இயக்கத்திற்காக கட்டுரை ஒன்றை அவரது இதழில் வெளியிட்டதாகவும் கூறினார். யோகி சாதுவிடம் அவர் எப்போது திருவண்ணாமலைக்கு வருகிறார் என வினவினார். சாதுஜி பகவானிடம் தாங்கள் வரும் முன் தகவல் தெரிவிப்பதாக கூறினார். சாது பகவானிடம் டாக்டர். ராஜலட்சுமியின் கணவன் திரு. ராமமூர்த்தி பகவானின் தரிசனத்திற்கு வர விரும்புவதாகவும், அவர் தனது நிலத்தை வள்ளியம்மை ஆச்சிக்கு தந்து சகோதரி நிவேதிதா அகாடமிக்கான ஒரு இடத்தை அமைக்க அவர் விரும்புவதாகவும் கூறினார். பகவான் அனைத்தும் தந்தையின் விருப்பப்படி நடக்கும் என்றார். சாது பகவானை காலையில் பார்க்க வருவதாக கூறினார். யோகி சாதுவின் தண்டம் மற்றும் பிக்ஷை பாத்திரத்தை எடுத்து வழக்கம்போல் ஆசீர்வதித்து அனுப்பினார். 

அடுத்தநாள் காலை சாது குருவின் இல்லத்திற்கு காலை 10 மணிக்கு வந்தார். சில பக்தர்கள் வந்து அவரது ஆசியை பெற்று சென்றவண்ணம் இருந்தனர். யோகி சாதுவையும் அவரோடு இருந்தவர்களையும் உள்ளே வரச் சொன்னார். தேவகியும் அவரோடு இணைந்தார். சிறிது நேரம் கழித்து அவர் விவேக், மற்றும் டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆகிய வரை தவிர்த்து மற்றவர்களை அனுப்பி வைத்தார். யோகி பற்றிய, பாலகுமாரனின் புத்தகத்தை படித்த ஒரு பெண் யோகியை காண வந்திருந்தார். அவள் தனது மகளின் திருமணத்திற்காக பகவானிடம் வேண்டினாள். பகவான் அவளை ஆசீர்வதித்து அனுப்பினார். யோகி, “தந்தை மட்டுமே அனைத்தையும் அறிவார். அவர் இந்தப்பிச்சைக்காரன் பணிகளுக்கு அறிய வேண்டியதை மட்டுமே அறிய வைப்பார். இந்தப் பிச்சைக்காரனுக்கு அனைத்தும் தெரியாது. இந்தப் பிச்சைக்காரன் தந்தையின் கருவி மட்டிலுமே. தந்தை இந்தப் பிச்சைக்காரனின் பணிக்கு தேவையானவைகளை மட்டிலுமே அறிய வைப்பார்.” 

பகவான் விவேக்கிடம் பட்டப்படிப்புக்குப்பின் என்ன செய்வாய் எனக் கேட்டார். விவேக் யோகியிடம் தான் M.S. ஐயரின் நிறுவனத்தில் இணைந்தாலும் இணையலாம் என்றான். பகவான் சாதுவிடம் நிவேதிதா பற்றி கேட்டார். சாது அவள் ஏற்கனவே எம்.எஸ்ஸி படிப்பதற்கு உங்கள் ஆசியை பெற்றுவிட்டாள் என்றார். யோகி அவளது பாடப்பிரிவு பற்றி கேட்டார். சாது, “கணிதவியல்” என்றார். 

பகவான் சாதுவையும், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களையும் பார்த்து, “நீங்கள் தத்துவம் பற்றி அறிந்திருப்பீர்கள். கடவுளைப்பற்றி தத்துவஞானிகள் என்ன சொல்கின்றனர்? “ராதாகிருஷ்ணன் யோகியிடம் உண்மையை தேடுபவர்களே தத்துவவாதிகள்” என்றார். பகவான், “அவர்கள் உண்மையை அடைந்து விட்டார்களா?“ என வினவ,  ராதாகிருஷ்ணன் அதற்கு, “பகுத்தறிவு மற்றும் தர்க்கரீதியிலான அணுகுமுறை காரணமாக அவர்கள் உயர்ந்த சத்தியத்தை அடைய முடியவில்லை. அது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. மிகச்சிலரே அதனை அடைந்துள்ளனர்” என்றார். யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பெயர்களை கூறுமாறு கோரினார்.  ராதாகிருஷ்ணன், “சாக்ரடீஸ், பிளேட்டோ மற்றும் சிலர்” என்றார். யோகிஜி சங்கரர் தர்க்கவாதி இல்லையா என வினவினார். ராதாகிருஷ்ணன் சங்கரர் தர்க்கவாதிதான் என்றார். பகவான் ராதாகிருஷ்ணன் இடம் சங்கரர் கடவுளின் இருப்பை நிரூபித்து இருக்கிறாரா என கேட்டார். ராதாகிருஷ்ணன் யோகியிடம் சங்கரரின் கூற்றுப்படி, அனுபவநிலை கடவுள் நடைமுறை காரணங்களுக்கானவர். ஆனால் ஆழ்நிலையில் கடவுள் இல்லை, என்றார். சாது இடைமறித்து சங்கரரின் மேற்கோளான, ‘ ப்ரஹ்ம ஸத்யம் ஜகந்மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபர‘ — ப்ரம்மமே சத்யம், உலகம் ஒரு நிலையில் சத்யம் போலிருந்தாலும் உண்மை நிலையில் பொய்யாகி விடுவதான ‘மித்யை’ ; ஜீவன் ப்ரம்மமேயன்றி வேறல்ல, என்று சாது விளக்கியதோடு பகவானிடம் ஸ்ரீ அரவிந்தர் கூறிய ‘யதார்த்த அத்வைதம்’ என்பதை “சாவித்திரி” என்ற அவர் எழுதிய ஆங்கில மகா காவியத்தில் இருந்து மேற்கோள் காட்டினார்:

            “The world was not built by the random bricks of chance,

   A blind God is not destiny’s architect,

   A Conscious Force has drawn the plane of life.”

–“ உலகம் வாய்பெனும் சீரற்ற செங்கற்களால் கட்டப்பட்டதல்ல,

ஒரு குருட்டு கடவுள் விதியை கட்டிய கலைஞன் அல்ல,

ஒரு விழிப்புணர்வு சக்தியே வாழ்க்கையின் தளங்களை வரைந்துள்ளது. “ 

சாதுஜி மேலும், ஸ்ரீ அரவிந்தரின் கூற்றுபடி மாயா என்பது படைப்பு சக்தி, அது  இல்லாத ஒன்றல்ல. 

யோகிஜி எங்களை விஷயத்திற்கு கொண்டு வந்தார். நாங்கள் யோகியிடம், யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ரிசர்ச் சென்டர் இதுபோன்ற இந்தோலாஜிக்கல் (பாரதிய அறிவியல்) கேள்விகளையெல்லாம் ஆய்வு செய்ய இருக்கிறது, ஆனால் அதனோடு சேர்த்து ஆன்மீக சாதனைகளையும் வலியிறுத்துவோம் என்றோம். டாக்டர் ராதாகிருஷ்ணன் பல்கலைக்கழகத்தின் பிஎச்.டி என்பது வெறும் பட்டத்திற்காக மட்டுமே, ஆனால் நமது பணிகள் சில காரணங்களுக்காக நடைபெறுபவை என்றார். சாதுஜி பகவானிடம்  தனது ஆறு ஆண்டுகால, அழைப்பு பேராசிரியராக திருவான்மியூரில் தூய இருதய கல்லூரியில் பணியாற்றிய, அனுபவங்களை பகிர்ந்தார். கிறிஸ்தவ தத்துவங்களை அடிப்படையாக கொண்ட அந்த கல்லூரியில் ஹிந்து தத்துவங்களையும், கலாச்சாரத்தையும் கற்றுத்தரும் ஒரே ஹிந்து இந்த சாது மட்டுமே. இந்த கல்லூரி அனுபவங்களே இந்தோலாஜிக்கல் ரிசர்ச் சென்டர் ஆரம்பிக்க உந்துதலாக இருந்தது என்றார். சுவாமிஜிக்களான சுவாமி தேவானந்தா மற்றும் நரிக்குட்டி சுவாமி மற்றும் பேராசிரியர். G.C. அஸ்நானி போன்றோர்கள் எனது பணியில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்றார். பகவான் சாதுவிடம், “தந்தை உனது முயற்சிகள் வெற்றி பெறுவதை பார்த்துக்கொள்வார்“ என்றார். சாது, “எங்களிடம் ஆயிரக்கணக்கான புத்தகங்கள், மதம் மற்றும் தத்துவம் சார்ந்த இதழ்கள் இருக்கின்றன. ஆனால் எங்களுக்கு ஒரு இடம்தான் தேவை“ என்றார். பகவான் போதிய நிதி கிடைக்கிறதா என வினவினார். சாது நாங்கள் பணம் பெற எங்கும் செல்வதில்லை, விருப்பப்பட்டு வரும் நன்கொடைகளை கொண்டே நாங்கள் நிர்வகித்து வருகிறோம் என்றார். இதுவரை நமது கவனம் முழுவதும் ராம்நாம் பணிகளில் இருந்த போதும் உதவிகள் தானே வந்து யோகியின் கருணையாலும், ஆசியாலும் சேருகிறது என்றார். பகவான், “தந்தையின் ஆசி, கருணை “ என்றார். சாதுஜி அவரிடம் சகோதரி நிவேதிதா அகாடமி 15 வருடங்களை முடித்துவிட்டதாக கூற, யோகி அகாடமியின் வெற்றிக்கு ஆசீர்வதித்தார். 

பகவான், இந்தியாவிற்கு வெளியே நமது பணியை பற்றி கேட்டார். சாதுஜி, கிருஷ்ணா கார்செல் பிரான்ஸிலும், ஹோஹம் கம்யூனிட்டி அமெரிக்காவிலும் எங்களுக்கு ஆதரவளிக்கின்றனர் என்றார். சாதுஜி இத்தாலியில் இருந்து ஆல்பர்ட்டோ D. ஃபார்மை எழுதிய கடிதம் பற்றி குறிப்பிட்டார். யோகி, ட்ரினிடாடைச் சார்ந்த  ரவி மகராஜ் பற்றியும், சாது அந்த நாட்டிற்கு செல்வதற்கான திட்டம் பற்றியும் கேட்டார். சாது ஜி அந்த பயணத்திற்கான மேற்கொண்டு நடவடிக்கைகள் எதும் எடுக்கப்படவில்லை என்றார். யோகி கொண்டாவலேகர் மஹராஜ் ஆசிரமத்தின் ராமநாம ஜப எண்ணிக்கை குறித்து கேட்டார். 

சிலர் பகவானின் தரிசனத்திற்கு வந்திருந்தனர். அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் யோகியை வணங்குவதற்கு தயக்கம் காட்டினார். ஆனால் யோகி அவரை வணங்கினார். ஒரு முஸ்லீம் பெண்மணி யோகிக்கு சலாம் செய்தார். யோகியும் அவரை வணங்கினார். நாங்கள் பக்தர்களின் நடவடிக்கைகள், அதற்கு சிரிப்புடன் பகவானின் எதிர்வினைகள் போன்றவற்றை பார்த்தவாறே அமர்ந்திருந்தோம். பிற்பகல் 12.30 மணிக்கு, பாலசுப்ரமணியன் யோகிக்கு உணவு கொண்டுவந்தார். யோகி எங்களுக்கு விடை கொடுக்க முடிவு செய்தார். யோகி சாதுவின் தண்டம் மற்றும் பிக்ஷை பாத்திரத்தை எடுத்து ஆசீர்வதித்ததோடு எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து அனுப்பினார். சாது பகவானிடம் அவர் தனக்கு தீக்ஷை அளித்து நான்கு வருடங்கள் ஆனது குறிப்பிட்டார். யோகி ஆச்சரியத்தோடு, “ஓ ! நான்கு வருடங்கள் முடிந்து விட்டதா!“ என்றார். மீண்டும் அவர் சாதுவை கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார். நாங்கள் விடைப்பெற்று சென்னைக்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். திரு. கரேக்கர் மற்றும் தவே போன்ற பல பக்தர்கள் மும்பையில் இருந்து வந்து சாதுவிற்காக காத்திருந்தனர். 

சனிக்கிழமை ஏப்ரல் 25, 1992, நைரோபியை சேர்ந்த திரு. கிருஷ்ணன், திரு.D.S. சிவராமகிருஷ்ணன், மற்றும் ஞானானந்தா தபோவனத்தை சேர்ந்த சீத்தாராமன், கோவையை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் பிற பக்தர்கள் சத்சங்கத்திற்கு வந்திருந்தனர். புதன்கிழமை டாக்டர் ராஜலட்சுமி தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது திருவண்ணாமலை பயணத்தை, தனது கணவரோடு மேற்கொண்டது குறித்தும் சகோதரி நிவேதிதா அகாடமி பணிகள் குறித்து பகவானோடு கலந்துரையாடியது குறித்தும் தெரிவித்தார். 

மே – 2, 1992, அன்று சாது பகவானுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் புத்துணர்வு நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நடக்க இருப்பதைக் குறித்து எழுதினார்:

”பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

நமது ராம்நாம் சத்சங்கங்களில் தொடர்ச்சியாக காயத்ரி ஹோமம் செய்து வரும் திரு. S. சுரேஷ், வரும் 5-5-1992 அன்று,  சௌ. ஊர்மிளாவை, ராஜஸ்தானில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவர் தனது திருமண அழைப்பிதழை, தனது தாழ்மையான பிரார்த்தனைகளுடன் உங்களின் ஆசியையும், கருணையையும் கோரி, என்னிடம் உங்களுக்கு, அனுப்பச்சொன்னார். இத்துடன் திருமண அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. நாங்கள் உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

தபோவனத்தை சேர்ந்த திரு. D.S. சிவராமகிருஷ்ணன் இங்கே இருக்கிறார். அவர் அங்கே வந்து உங்களை சந்திக்க விரும்புகிறார். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவர் தனது பயணத்தை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்திருக்கிறார். திரு. சீத்தாராமன் தனது மகள் சௌ. விமலா, மற்றும் மருமகன் சிரஞ்சீவி. வீரமணி போன்றோர் நேற்று வந்திருந்தனர். 

மே – 16 முதல் இந்த சாது ஒரு வாரத்தை, , சென்னைக்கு வெளியே, கூடுவாஞ்சேரி திருவள்ளுவர் நகரில் உள்ள, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் ராம்நாம் மையத்தில்,  ஒரு புத்துணர்வு முகாமில், செலவழிக்க விரும்புகிறான். பக்தர்கள் தினமும் சத்சங்கம், பூஜை, மற்றும் ஆன்மீக உரைகள் நடத்த விரும்புகின்றனர். நமது அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் நெருக்கமான பக்தர்களான டாக்டர். C.V.ராதாகிருஷ்ணன், திரு. சிவராமகிருஷ்ணன், குமாரி பரிமளா மற்றும் சிரஞ்சீவி. ராஜேஷ் போன்றோரும் எங்களுடன் முகாமில் இருக்க விரும்புகின்றனர். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன் “மாண்டூக்ய உபநிஷத்” குறித்து நாளை ஆழ்வார்பேட்டை ஸ்ரீனிவாசா காந்தி நிலையத்தில் பேச இருக்கிறார். அவர் உங்கள் ஆசியை வேண்டுகிறார். குமாரி நிவேதிதா அவரது பி.எஸ்ஸி இறுதி வருட தேர்வுகளை உங்களின் கருணையாலும், ஆசியாலும், எழுதிவிட்டாள். அவள் அனைத்து பாடத்தாள்களையும் சிறப்பாகவே எழுதியுள்ளார். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறாள். விவேக் தனது தேர்வுககளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறான். உங்கள் ஆசியால் சௌ. பாரதியின் சகோதரி சௌ. லட்சுமிக்கு நேற்று சுகப்பிரசவம் ஆனது. அவளுக்கு ஒரு பெண்குழந்தை அதிகாலையில் பிறந்தது. தாயும், சேயும் நலம். 

நாங்கள் அனைவருமே மீண்டும் ஒருமுறை உங்கள் ஆசிகளையும், கருணையையும் வேண்டுகிறோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,  உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

சாதுஜி மீண்டும் ஒரு கடிதம் ஒன்றை மே – 14 அன்று புத்துணர்வு முகாம் குறித்த தகவலோடு விரிவாக எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

உங்கள் கருணை மற்றும் ஆசியாலும் நமது ஆன்மீக புத்துணர்வு (அந்தர்யோகா) முகாம் கூடுவாஞ்சேரியில் ஞாயிற்றுக்கிழமை 17-5-1992ல் தொடங்குகிறது. நாங்கள் அங்கே சனிக்கிழமை 23-5-1992 வரை இருப்போம். திரு. D.S. கணேசன் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர்கள் போன்றோர் இந்த சாதுவுடன் முகாமில் தங்குவார்கள். உள்ளூரில் வசிப்பவர்களும் காலையில் இருந்து மாலைவரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆன்மீகத்தில் பலனடைவார்கள். இந்த முகாம் நமது ராம்நாம் இயக்கத்தின் பிரச்சாரத்திற்கு உத்வேகம் தரும் என நம்புகிறேன். நாங்கள் இதில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் உங்களது ஆசியையும், கருணையையும் வேண்டுகிறோம். 

சிரஞ்சீவி விவேகானந்தனின் பி.ஈ. இறுதி தேர்வுகள் நாளை முதல் துவங்கி, 25-5-1992 அன்று முடிவடைகிறது. அவனுக்கு திடீரென உடல் நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல் திங்கள்கிழமை 11-5-1992 அன்று ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவனுக்கு ஒரு நாள் முழுவதும் டிரிப்ஸ் போடப்பட்டது . மாலையில் அவன் ஓரளவு தேறினான். ஒரு டாக்டர் அவனுக்கு டைபாய்ட் என்றார். மற்றொருவர் அவனுக்கு மலேரியா காய்ச்சல் என்றார். எப்படியாயினும் உங்கள் கருணையால் அவன் தேர்வு எழுதும் அளவிற்கு தேறிவிட்டான். நாங்கள் அவனது தேர்வு மையமான, தாம்பரத்தில் உள்ள பாரத் பொறியியல் கல்லூரிக்கு, அருகில் உள்ள ஒரு வீட்டில் அவன் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். திருமதி. பாரதியும் அவனை கவனித்துக் கொள்வதற்காக உடன் தங்கியிருக்கிறாள். நாங்கள் உங்கள் கருணையையும், ஆசியையும் அவனது உடல்நலத்திற்காகவும், அவன் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி முடிக்கவும் வேண்டுகிறோம். 

குமாரி நிவேதிதா அவளது பி.எஸ்ஸி இறுதி தேர்வுகளை முடித்துவிட்டாள். எம்.எஸ்ஸி படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகளின் தயாரிப்புகளில் இருக்கிறாள். இருப்பினும் அவள் நமது ஒரு வார ஆன்மீக முகாமில் கலந்து கொள்கிறாள். அவள் உங்கள் ஆசியை வேண்டுகிறாள். 

மே – ஜூலை 1992 ‘தத்துவ தர்சனா’ இதழ் அச்சில் உள்ளது. நாங்கள் முகாம் முடிந்தப்பின் இதழோடு அங்கே உடனடியாக வருவோம். நாங்கள் அங்கேவரும் தேதியை முன்கூட்டியே எழுதி தெரிவிக்கிறோம். மும்பையை சேர்ந்த, சுவாமி விவேகானந்தா மெடிக்கல் மிஷனின் முன்னாள் பொது செயலாளர், திரு. சங்கர் சாஸ்திரி, மே 27 அன்று இங்கே வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவர் உங்களைக் காண விருப்பத்தோடு இருக்கிறார். அவர் சில ஆண்டுகளுக்கு முன் உங்களை சந்தித்திருக்கிறார். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். “

ஸ்ரீ ஜெய்கோபால் கரோடியா அகர்வால், ஒரு பரோபகாரி, சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலர், மற்றும் சென்னை, அண்ணாநகர் விவேகானந்தா வித்யாலயாவின் நிறுவனர், “ஜெய் ஸ்ரீ ராம்“ என்ற ஸ்டிக்கர்களை ராம்நாம் இயக்கத்தில் பங்குபெறும் அனைவருக்கும் தருவதற்காக அளித்தார். மே – 16 சனிக்கிழமை புத்தபூர்ணிமா நாளில் சாது யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் கூடுவாஞ்சேரி மையத்திற்கு வந்து, அடுத்தநாள் காலையில், அந்தர்யோக முகாமை துவங்கி, ஒரு வாரகாலம் நடத்தினான். ஐம்பது பிள்ளைகள் மற்றும் அன்னையர்கள் அந்த முகாமில் தினமும் கலந்து கொண்டனர். பகவானின் பக்தரான தெ.பொ.மீ. ஞானப்பிரகாசம் மற்றும் அவரது மனைவி மோகனா அந்த முகாமில் முதல்நாள் கலந்து கொண்டனர் . காலையில், பகவத் கீதை, ஆதி சங்கரர் எழுதிய பஜகோவிந்தம், மற்றும் தினசார்ய மந்திர வகுப்புகள், மாலையில் பொது சத்சங்கம், போன்றவையே முகாமில் தொடர் நிகழ்வுகள். விவேகானந்தா கல்லூரியின் தத்துவவியல் பேராசிரியரான டாக்டர் சம்பத் புதன்கிழமை மே 20 அன்று வந்தார் . விவேக் மற்றும் பாரதி அந்த முகாமில் அடுத்தநாள் கலந்து கொண்டனர். முகாம் வெற்றிகரமாக திங்கள்கிழமை மே – 22 அன்று முடிவுற்றது. 

ஒரு பிரம்மாண்ட காயத்ரி ஹோமம் திரு. பாஸ்கர்தாஸ் அவர்களின் இல்லத்தில் வளசரவாக்கத்தில் மே 24, 1992, ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஹோமம் ஆரிய சமாஜத்தின் திரு. நாராயண்ராவ் கட்டாவுகர் மூலம் சாதுவின் முன்னிலையில் நடத்தப்பட்டது. யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அனைத்து அலுவலக பொறுப்பாளர்களும் ஹோமத்தில் கலந்து கொண்டனர். மே – 26 அன்று ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு அகண்ட ராமநாம ஜபம் நடத்தப்பட்டது விவேக் அதனை முன்னிறுந்து நடத்தினான். பகவானுக்கு ஜப யக்ஞம் குறித்து கடிதம் ஒன்றை எழுதினேன்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

தங்கள் ஆசியால் ஒரு வார புத்துணர்வு முகாம் வெற்றிகரமாக கூடுவாஞ்சேரியில் நடந்தது. 51 குழந்தைகளும், அன்னையர்களும் திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்தின் பணியாளர்களும் தொடர்ச்சியாக ஆன்மீக வகுப்புகளில் காலையிலும், மாலையிலும் பங்கு பெற்றனர். ராமநாம ஜபம், யோகி ராம்சுரத்குமார் குறித்த பெரியசாமி தூரன் அவர்களின் பாடல், ஹனுமன் சாலீஸா, பஜகோவிந்தம் மற்றும் பிறவற்றோடு, பிராதஸ்மரண், சூரிய நமஸ்கார் மற்றும் ஸ்நானத்திற்கு முன், உணவு உண்கையில், படிக்கையில், உற்ங்கும்போது, மற்றும் பிற நேரங்களில் ஜெபிக்க வேண்டிய மந்திரங்களை உழைக்கும் வர்க்கத்தின் பிள்ளைகள் வேகமாக கற்றுக் கொண்டது இதயத்தை தொடுவதாக இருந்தது. 

சென்றவாரம் ஞாயிற்றுக்கிழமை காயத்ரி ஹோமம், ராம்நாம் சத்சங்கம் நடந்தது. மே 31 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மற்றொரு நிகழ்ச்சி நடைபெறும். ஸ்ரீ சத்ய சாய் நிறுவனம் இந்த சாதுவை மாணவர்களின் கோடைக்கால பயிற்சி முகாமில் மே 30 சனிக்கிழமை அன்று உரையாற்ற அவர்களின்  சென்னை தலைமையிடமான சுந்தரத்திற்கு அழைத்திருக்கின்றனர். அதற்கு முன் இந்த சாது உங்களை நேரடியாக பார்த்து உங்கள் ஆசியைப் பெற வருவான். 

உங்கள் கருணையால், ஆசியால் சிரஞ்சீவி. விவேகானந்தன் தேர்வுகள் அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறான். மே – 27 அன்று அவன் வாய்மொழி தேர்வுக்கு செல்கிறான். 

மே 28 வியாழனன்று நாங்கள் உங்களை தரிசிக்க அங்கு வர இருக்கிறோம் நாங்கள் மாலையில் அங்கு வந்து சேருவோம்.

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்திற்காக காயத்ரி ஹோமங்களை செய்பவரான திரு. சுரேஷ் அவர்களுக்கு சமீபத்தில் ராஜஸ்தானில் திருமணம் நடந்தது. அவர் தனது மனைவி மற்றும் சகோதரி உடன் உங்கள் ஆசியைப் பெற வருகிறார். குமாரி. நிவேதிதா, திருமதி பாரதியும் எங்களோடு வருகிறார்கள். நாங்கள் உங்களின் தரிசனம் மற்றும் ஆசிக்காக பிரார்த்திக்குறோம்.

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்.” 

மே – 28, வியாழக்கிழமை, இந்த சாதுஜி, திரு. சங்கர் சாஸ்திரிஜி, திரு. சுரேஷின் குடும்பத்தினர், திருமதி. பாரதி, விவேக், நிவேதிதா, பாரதியின் அன்னை மற்றும் சில பக்தர்கள் உடன் திருவண்ணாமலை பகவானின் இல்லத்தை அடைந்தோம். பகவான் ஜஸ்டிஸ் வெங்கடசாமி என்பவருடன் மும்முரமாக இருந்தார். நாங்கள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தோம். சிவகாசி மற்றும் அருப்புக்கோட்டை பக்தர்களும் இங்கே இருந்தனர். கோயில் விஜயத்திற்குப்பின் மீண்டும் நாங்கள் பகவானின் இல்லத்திற்கு வந்தோம். பகவான் எங்கள் அனைவரையும் வரவேற்று அனைவரையும் அமர செய்தார். அனைவரும் அமர்ந்தப்பின் இந்த சாது திரு. சங்கர் சாஸ்திரி அவர்களை பகவானிடம் அறிமுகப்படுத்தினார். பகவான் அவரிடம் “மும்பையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்க, அவர்  ஒரு டிரஸ்டின் மேற்பார்வை பணிபுரிவதாகவும், முன்பு ஒருமுறை யோகியை சந்தித்து இருப்பதாகவும் கூறினார். பகவான் விவேக்கிடம் அவனது தேர்வு குறித்து கேட்க, விவேக் பகவானிடம் தான் ஒரே ஒரு பேப்பரில் மிகச்சாதாரண தவறை இழைத்து விட்டதாக கூற, யோகி  சிரித்தவாறே, “தந்தை அங்கே இருக்கிறார். அவர் அதனைப் பாத்துக்கொள்வார்” என்றார். யோகி விவேக் மற்றும் நிவேதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். விவேக் தனக்கு முற்றிலும் வேறுபட்ட உடல்நிலை இருந்ததாகவும், தற்சமயம் நன்றாக உள்ளதாகவும் கூறினான். யோகி நிவேதிதாவின் கால் சுளுக்கு பற்றி கேட்டார். நிவேதிதா தற்சமயம் நலமாக இருப்பதாக கூறினாள். பகவான் சுரேஷ் மற்றும் ஊர்மிளாவிடம் திரும்பி, ராஜஸ்தானில் அவர்கள் பிறந்த ஊர் மற்றும் அவர்கள் தாய் தந்தையர்களை பற்றி கேட்டார். சாது பகவானிடம் சித்ரா மற்றும் அவரது கணவர் பாஸ்கர்தாஸ் அவர்களை அறிமுகப்படுத்தினார். “விவேக் என்ஜினியர் ஆகிவிட்டாரா?” என யோகி கேட்க, சாது, விவேக் திரு. M.S. ஐயர் அவர்களின் நிறுவனத்தில் சேர இருப்பதாக கூற, யோகி நகைச்சுவையாக, “இப்பொழுது விவேக் திருமணம் செய்து கொள்ள வேண்டும் “ என்று கூற, நாங்கள் அனைவரும் சிரித்தோம். சாது பகவானிடம், “ நிவேதிதா இருக்கிறாள் “ என்று கூற, பகவான் விவேக் இருக்கும் பக்கம் திரும்பி,  “ நிவேதிதாவை நீ பார்த்துக் கொள்ள மாட்டாயா ? “ என்றார். விவேக் “நிச்சயமாக” என யோகிக்கு பதிலளித்தார். பகவான், “தந்தையும், அன்னையும் அவர்கள் கடமையை நிவேதிதா மற்றும்  விவேக்கிற்கு செய்துவிட்டார்கள் “ என குறிப்பிட்டார். 

சங்கர் சாஸ்திரி யோகிஜியிடம் தனது சகோதரர் கேசவ் அவர்களின் பிரச்சனை குறித்து கூறியதோடு அவரை அழைத்து வரலாமா என கேட்டார். யோகி அவரிடம், “தந்தை அவரை கவனித்துக் கொள்வார், தந்தை விரும்பினால் அவர் இங்கு வருவார்“ என்றார். சாஸ்திரி மேலும் தான் சிறியவனாக இருக்கும் பொழுது தன்னைப்பற்றி ஒரு சோதிடர், “அவன் தனது பெற்றோர்களை பார்த்துக் கொள்ளமாட்டான்”  என்று கூறியதாகவும், அவ்விதமே தான் வீட்டை விட்டுச்சென்று ராஷ்ட்ரிய சுயம்சேவக்  சங்கத்தில் பிரச்சாரக்காக இருந்ததாகவும் கூறினார். யோகி ராம்சுரத்குமார் சிரித்தவாறே விவேக்கிடம் திரும்பி, “நீ உனது பெற்றோர்களுக்கு உதவியாக இருப்பாயா ?” என கேட்க, “ஆம்”  என்று விவேக் பதிலளித்தான். பகவான் சாஸ்திரியிடம் மீண்டும் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என கேட்டார் .  தான் வயதான மற்றும் ஓய்வு பெற்ற ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களை கவனித்துக் கொள்ளும் கேசவ் முதியோர் இல்லத்தை கவனித்துக் கொள்வதாக சாஸ்திரி தெரிவித்தார். 

யோகிஜி சாதுவிடம் ஞானப்பிரகாசம் குறித்து கேட்டார். சாது, ஞானப்பிரகாசம் தனக்கு எழுதிய கடிதம் பற்றி குறிப்பிட்டு அதில் அவர் சன்னியாசம் பெற விரும்புவதாக எழுதியிருந்தார் என்றார். யோகிஜி தானும் அத்தகைய கடிதம் ஒன்றை பெற்றதாகவும், இதுபோன்ற விவகாரங்களில் எதுவும் நாம் செய்ய இயலாது என்றார். மேலும் யோகி, காவி உடையை ஞானப்பிரகாசம் அணிந்து கொள்வதன் மூலம் அவரது வாழ்க்கைக்கான தேவைகள் பூர்த்தியாகும். ஏனெனில் காவி உடைக்கான மரியாதை நிச்சயம் கிடைக்கும். “ இந்தப்பிச்சைக்காரன் காவி உடை உடுத்தாத காரணத்தால், பிச்சைக்காரனாக அலைந்து திரிந்த காலங்களில் கடும் நெருக்கடிகளை நான் சந்தித்தேன்” என்றார் பகவான். சாது காவியை உடுத்தி சன்னியாசி ஆகுவதை தான் விரும்பவில்லை என்றாலும், சாதுவை அவர் காவி உடையில் கண்டார் என்று யோகி கூறினார். சாது, பகவானுக்கு பாரதி காவி உடையை நிவேதிதாவிடம் கொடுத்தனுப்பியதாகவும், ஆனால் யோகி தான் காவி உடையை அணிய அஞ்சுவதாகவும், அதனால் அதை அணியக்கூடிய தைரியம் இருக்கும்  ஒருவருக்கு தான் அதை அளிக்கப்போவதாக கூறி அதை சாதுவின் கைகளில் திணித்ததையும் சாது பகவானுக்கு நினைவுபடுத்தினார்.

சாதுஜி பகவானின் முன் சமீபத்திய ‘தத்துவ தர்சனா’ இதழ் (தொகுதி 9, எண் 2) மற்றும் சேவை நிறுவனங்கள் பற்றிய “விவேகானந்த கேந்திர பத்திரிகா” இதழ் ஆகியவற்றை வைத்தார். சாதுஜி பகவானிடம் விவேகானந்த கேந்திர பத்திரிகையில், சகோதரி நிவேதிதா அகாடமி பற்றி திருமதி. நித்யா அவர்கள்  எழுதிய ஒரு சிறப்பு கட்டுரை, யோகியின் படத்தோடு  வெளிவந்து இருப்பதை காட்டினார். யோகி அதனைப் பார்த்து அதன் விலை என்ன என்று கேட்டார். சாது அதன் விலை ரூ. 50 எனக்கூற, யோகி ஏன் இத்தனை விலை உயர்ந்த பத்திரிக்கையை அன்பளிப்பாக தரவேண்டும் என வினவினார் . சாதுஜி இந்த விவேகானந்தா கேந்திர பத்தரிக்கா பகவானுக்கு கேந்திரா விலிருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது  என கூறினார். சாஸ்திரிஜியும் அவ்வாறு கூறிய பின்னரே யோகி அதனை ஏற்றுக் கொண்டார். யோகி 10 தத்துவ தர்சனா இதழ்களை எடுத்துக் கொண்டார். எங்களுக்காக ஆறு புத்தகத்தில் கையொப்பம் இடும் போது அட்டைப்படத்தைப் பார்த்த யோகி அது தன் படமா எனக் கேட்டார். ஆம் என்று சொன்ன சாது, ‘தத்துவ தர்சனா’வின்  பல இதழ்களிலும் பகவானின் படமே அட்டைப்படத்தில் போடப்பட்டுவருவதாக யோகியிடம் கூறினார்.  யோகி லீ லோசோவிக் அவர்களின் கவிதை அந்த இதழில் பிரசுரமானதைப் பார்த்தார். 

பகவான் ரேகா கண்ணீரோடு இருப்பதை கவனித்தார். அவளை தனதருகே அழைத்து அழுகைக்கான காரணத்தை கேட்டார். அவள் காரணங்கள் ஏதுமில்லை என்று பதிலளித்தார். அவர் சுரேஷ் இடம் திரும்பி புன்னகையோடு ஏன் அவள் அழுகிறாள் என கேட்டார். சுரேஷ் தனக்கு தெரியாது என்றார். யோகிஜி ரேகாவிடம் திரும்பி  அவளிடம் “சில சமயம் நீ சிரிப்பது உண்டா” என கேட்டார். அவள் கண்களை துடைத்துவிட்டு சிரித்தாள், அனைவரும் மகிழ்வோடு சிரித்தனர். அவ்வப்போது யோகி அவளிடம்  திரும்பி நகைச்சுவையாக நீ அழுகிறாயா? சிரிக்கிறாயா? என கேட்டவண்ணம் இருந்தார். பின்னர். அவளை அவர் “ ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் “என்று பாடுமாறு சொன்னார். அவள் விரும்பிய பொழுதெல்லாம் இந்த மந்திரத்தை ஜபிக்கச்சொன்னார். 

சாது பகவானிடம் டாக்டர் ராஜலட்சுமி மற்றும் திரு. ராமமூர்த்தி அவர்களின் நிலத்தை சகோதரி நிவேதிதா அகாடமிக்கு தர அவர்கள் விரும்புவது குறித்தும், அவர்களின் கோயில் கும்பாபிஷேகம் குன்றத்தூரில் நடக்க இருப்பது குறித்தும் தெரிவித்தார். யோகி தனக்கு அவர்களிடம் இருந்து கடிதம் மூலம் தகவல் கிடைத்ததாகவும், “தந்தையின்  விருப்பத்தின் படி செயல்கள் நடைபெறும், அவர் அவைகளை முடிவு செய்வார்“  என்றார். 

யோகிஜி பாரதியின் அன்னை குறித்து கேட்க, நிவேதிதா அவளையும், பாரதியின் சகோதரியின் மகன் சீனுவையும், யோகியிடம் அறிமுகம் செய்து வைத்தாள். பாரதியின் தாயார் தனது கண்பார்வை குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு குறித்து கூறி யோகியின் ஆசியை கேட்டார். யோகி தனது ஆசிகளை வழங்கினார். நாங்கள் எங்களோடு வந்த மற்றவர்களையும் யோகியிடம் அறிமுகப்படுத்தினோம். பின்னர் கூடுவாஞ்சேரியில் நடந்த அந்தர் யோகாவின் வெற்றி பற்றி அவரிடம் பகிர்ந்தோம். யோகி, “தந்தையின் கருணை“ என்றார். சாஸ்திரிஜி யோகியிடம் தான் என்ன செய்ய வேண்டும், எங்கே போக வேண்டும் என்பது குறித்து சில வழிகாட்டுதல்கள் கேட்க, யோகி, “ரங்கராஜன் உங்களுக்கு செல்வார்“ என்று பதிலளித்தார். ரங்கராஜனும் சில வழிகளை தேடிக் கொண்டிருக்கிறார் என்று சாஸ்திரிஜி சொல்ல, பகவான், “இல்லை, இல்லை. ரங்கராஜன் தனது பாதையை தேர்ந்தெடுத்து விட்டார், அந்த பாதையில் அவர் பயணித்து வருகிறார்“ என்று கூறிவிட்டு உள்ளே சென்று, லீ லோசோவிக் அவர்கள் எழுதி அனுப்பிய சில கடிதங்களை கொண்டு வந்து சாதுவிடம் கொடுத்தார். யோகி எங்களை  வழியனுப்பும் நேரத்தில் சாது எங்கள் குழுவில் சிலர் சென்னைக்கு திரும்புகின்றனர், மற்றவர்கள் இங்கு தங்கி கிரிபிரதட்சணம் முடிந்தப்பின் நாளைக் காலை கிளம்புவார்கள் என்றார். யோகி யாரெல்லாம் கிளம்ப இருக்கிறார்கள், யாரெல்லாம் தங்க இருக்கிறாரகள் மற்றும் எங்கே தங்குவார்கள் என்ற விவரங்களை கேட்டறிந்தார். சாது பகவானிடம் நாங்கள் உடுப்பி பிருந்தாவனம் ஓட்டலில் தங்க இருக்கிறோம். காலையில் வருவோம் எனக்கூறினார். வழக்கம்போல் பகவான் சாதுவின் தண்டம் மற்றும் பிக்ஷா பாத்திரத்தை எடுத்து ஆசீர்வதித்து எங்களை வழியனுப்பினார். 

வெள்ளிக்கிழமை, மே 29 அன்று கிரி பிரதட்சணத்திற்கு பிறகு நாங்கள் அனைவரும் பகவானின் இல்லத்திற்கு வந்தோம். திரு. D.S. சிவராமகிருஷ்ணன் அவர்களும் அங்கே வந்திருந்தார். பகவான் சிவராமகிருஷ்ணன் இடம் அவரது நிகழ்ச்சி குறித்து கேட்டார். அவர் சென்னைக்கு செல்ல இருப்பதாக சொன்னார். நாங்கள். அனைவரும் பகவானின் பெயரை சிறிது நேரம் ஜபித்தோம். பகவான் யாரெல்லாம் கிரிபிரதட்சணம் செய்தார்கள் என்றார். சாது,  விவேக்கை தவிர்த்து நாங்கள் அனைவரும் கிரிபிரதட்சணம் சென்றோம், விவேக்கிற்கு ஹெர்னியா சிக்கல் இருப்பதன் காரணமாக அவன் கிரிபிரதட்சணம் மேற்கொள்ளவில்லை, என்றார். பகவான், “ ஆமாம், ஆமாம். அவன் தற்பொழுது நடக்கக் கூடாது“ என்றார். மேலும் யோகி விவேக் விரைவில் நலமடைய ஆசீர்வதித்தார். 

நாங்கள் பகவானுடன் அமர்ந்திருந்த நேரத்தில், ஞானப்பிரகாசத்திடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில் அவர் தனது பிரச்சனைகள் குறித்து எழுதியிருந்தார். நாங்கள் அவரது சகோதரன் டாக்டர். காமேஸ்வரன் இந்த சாதுவின் இல்லத்திற்கு வந்தபோது அவரது குடும்பம் மற்றும் டிரஸ்ட் குறித்து பேசியதை குறிப்பிட்டோம். மிக நீண்ட கலந்துரையாடலுக்குப்பின் பகவான், நாம் எப்போதும் ஞானப்பிரகாசம் குறித்தே விவாதித்துக் கொண்டிருப்பதால் தன்னால் மற்றவர்களை கவனிக்க இயலவில்லை என்றார். எங்களை அனுப்பி வைப்பதற்கான நேரம் வந்தமையால் அவர், விவேக்கை அவனது வேலைக்கான வெற்றிக்கும், நிவேதிதாவிற்கு எம்.எஸ்ஸி யில் இடம் கிடைக்கவும், ரேகாவிற்கு டிசம்பரில் நடக்க இருக்கும்  திருமணத்திற்காகவும், சுரேஷ் மற்றும் ஊர்மிளாவின் இனிய திருமண வாழ்க்கைக்காகவும், ஆசீர்வதித்தார். இந்த சாது யோகியிடம் திரு. சிவராமகிருஷ்ணன் அடுத்த ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு ஹோமத்திற்காக வருகிறார் என்று கூறினார். யோகி அனைவரையும் ஆசீர்வதித்து, இந்த சாதுவின் தண்டம் மற்றும் பிக்ஷா பாத்திரத்தை சக்தியேற்றி சாதுவிடம் திரும்ப தந்தார். நாங்கள் அவரிடம் விடைப்பெற்று சென்னை திரும்பினோம். 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.26

Glimpses of A Great Yogi in Tamil – Part 2
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – II
சீடன் கண்ட தீக்ஷா குரு

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 2.26 

தேசீய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாக்கள் 1992

ஜஸ்டிஸ் ராஜூ இந்த சாதுவை ஜனவரி 2, 1992 அன்று தொலைபேசியில் அழைத்து, பகவான் ‘தத்துவ தர்சனா’வில் கிருஷ்ணா கார்ஸெலின் கட்டுரையை வெளியிட விரும்புவதாக கூறினார். விவேக் ஜஸ்டிஸ் அருணாச்சலத்திடம் விவேகானந்தா் ஜெயந்தி மற்றும் தேசீய இளைஞர் தின விழாக்கள் குறித்து பேசினான். இந்த சாதுஜியும் ஹிந்து கல்வி அமைப்பின் தலைவரான திரு. N.C.ராகவாச்சாரி மற்றும் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியின் முதல்வர் திருமதி. ப்ரேம் துலாரி ஆகியோரிடமும் பேச்சுப் போட்டியை அவர்களது வளாகத்திற்குள் வைப்பது குறித்து பேசினார். ஜனவரி 3 ஆம் தேதி காலையில் பகவானின் பக்தரான பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் முன்னாள்  துணை வேந்தரான டாக்டர். K. வெங்கடசுப்பிரமணியம் இந்த சாதுவை தொலைபேசியில் அழைத்து, தான் பகவானை ஜனவரி 1 அன்று சந்தித்ததாகவும், குருதேவர் சமீபத்திய ‘தத்துவ தர்சனா’ இதழை பரிசளித்ததாகவும், யோகி அவரிடம், “ரங்கராஜன் எனது முதன்மை சீடன். அவர் இந்தப்பிச்சைக்காரனின் பணியை செய்கிறார்“ என்று கூறியதாகவும் பகிர்ந்தார் . 

ஜனவரி 4 அன்று டாக்டர் ராஜலட்சுமி வந்து, விவேக் மற்றும் நிவேதிதாவுடன் ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களின் இல்லத்திற்கு சென்று, அவரை தேசீய இளைஞர் தின விழாவிற்கு அழைத்தனர். பிரான்ஸில் இருந்து திருமதி பவுண்டோ, டார்ஜி லிங் என்பவருடன் வந்திருந்தார். அவர் சகோதரி நிவேதிதா அகாடமியின், வாழ்நாள் உறுப்பினர் ஆக இணைந்தார். அவர் அடுத்த நாளும் வந்து பகவானின் சில புகைப்படங்களையும், நூல்கள் மற்றும் ‘தத்துவ தர்சனா’ இதழ்களையும் பெற்றுச்  சென்றார். தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த திரு.N.C. நாயுடு எங்களோடு மாலை பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜனவரி 6 ஆம் தேதி இந்த சாது,  குருதேவருக்கு  விவேகானந்தர் ஜெயந்திக்கான முன்னேற்பாடுகள் மற்றும் விவேக்கின் திருவண்ணாமலை பயணம் குறித்தும் எழுதினான்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் பள்ளிகளுக்கு இடையேயான விவேகானந்தர் பேச்சு போட்டியை நடத்துவதில் மும்முரமான ஏற்பாடுகளில் இருக்கிறது என்பதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம். விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் தேசிய இளைஞர் தினம், ஜனவரி 12 அன்று வருகிறது. வழக்கம் போல் நகரத்தின் பள்ளி மாணவர்கள் யோகி ராம்சுரத்குமார் கோப்பைகள் மற்றும் சிறந்த பள்ளிக்கான யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயத்திற்கும் போட்டியிட தயாராகி வருகிறார்கள். இந்த போட்டி திருவல்லிக்கேணி இந்து சீனியர் இரண்டாம்நிலை பள்ளியில் சனிக்கிழமை 11 – 1 – 1992ல்  பத்து மணி முதல் 5 மணி வரை நடைபெறும். பரிசுகளை வழங்குதல் அதே வளாகத்தில் ஜனவரி 12, 1992ல் 5.30 மணிக்கு நடைபெறும் 

மாண்புமிகு நீதிபதி T.S.அருணாச்சலம் விழாவிற்கு தலைமை ஏற்கிறார். டாக்டர். K. வெங்கடசுப்பிரமணியம் சுவாமி விவேகானந்தரின் படத்தை திறக்க உள்ளார். தென்னாப்பிரிக்கா தமிழர்கள் அமைப்பின் தலைவர் திரு.N.C  நாயுடு பரிசுகளை வழங்குவார். திரு. N.C. ராகவாச்சாரி, மூத்த வழக்கறிஞர் மற்றும் இந்து கல்வி நிறுவனத்தின் தலைவர்,  நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

திரு. R. விவேகானந்தன் யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் கோப்பைகளை உங்கள் பாதங்களில் வைத்து ஆசிபெற வருவார். டாக்டர் K. ராஜலட்சுமி, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் துணைத்தலைவர், உடன் வருவார். இவர்கள் 8-1-1992 புதன்கிழமை அன்று மதியம் உங்கள் தரிசனத்திற்கு வருவார்கள். நாங்கள் நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைவருக்கும் உங்கள் ஆசியை வேண்டி பிரார்த்திக்கிறோம். 

மாண்புமிகு நீதிபதி D. ராஜூ மற்றும் டாக்டர். K. வெங்கடசுப்பிரமணியன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்கள் உங்களை சந்தித்தது குறித்து பேசினார்கள். அடியேனின் தாழ்மையான பணிகளுக்கு நீங்கள் பாராட்டு தெரிவித்துள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களின் கருணை மற்றும் ஆசியால் மட்டுமே இந்த சாது சிறிய சேவையினை உங்களுக்கு செய்ய முடிகிறது. 

திருமதி. வள்ளியம்மை ஆச்சி இன்று காலை எங்களை சந்தித்தார். உங்களின் கருணையால் நாங்கள் நமது அகாடமிக்கான இடத்தை தேர்வுசெய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்.”

டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் ராஜலட்சுமி, விவேகானந்தன் மற்றும் நிவேதிதா யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் கோப்பைகளை எடுத்துக்கொண்டு பகவானின் ஆசியைப்பெற 8 ஆம் தேதி காலை கிளம்பினார்கள். அவர்கள் மாலையில் திரும்பிவந்து பகவான் தனது ஆசியை பொழிந்ததை தெரிவித்தனர். மேலும் யோகி, விவேகானந்தர் ஜெயந்தி விழா, பேச்சுப்போட்டி, இளைஞர் தின கொண்டாட்டம், அனைத்திற்கும் தனது ஆசியை தெரிவித்தார். திரு. பாலகுமாரன் அவர்களும் தங்களோடு பகவான் இல்லத்திற்கு வந்ததாக அவர்கள் கூறினர். 9 ஆம் தேதி திரு. சுந்தரேசன் அவர்களின் இல்லத்தில் இந்த சாது ஒரு சிறப்பு சத்சங்கத்தை நடத்தினான். பகவானின் பக்தர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் சாது ஜப சாதனா குறித்து பேசினான். 11 ஆம் தேதி பள்ளி பிள்ளைகளுக்கான சுவாமி விவேகானந்தர் குறித்த பேச்சுப்போட்டி சீனியர், ஜூனியர், சப் ஜூனியர் நிலைகளில், இந்து சீனியர் செகண்டரி பள்ளியில், நடைப்பெற்றது. திருமதி வள்ளியம்மை அனைவருக்கும் பிரசாதங்களை ஏற்பாடு செய்தார். 

சாதுஜி உரையாற்றிய சுவாமி விவேகானந்த ஜெயந்தி மற்றும் தேசீய இளைஞர் தின விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 1992 அன்று இரண்டு இடங்களில் நடைப்பெற்றது. விவேகானந்தா கேந்திரா ஒரு கூட்டத்தை கேந்திரத்தின் வளாகத்தில், மதியம், நடத்தியது. அதில் சாதுஜி தலைமை தாங்கினார். ஜஸ்டிஸ் அருணாச்சலமும் அதில் இணைந்தார். திரு. K.P.சிவக்குமார், “விவேகானந்த கேந்திர பத்திரிகா”  மற்றும் “யுவபாரதி” துணை எடிட்டர், விருந்தினர்களை வரவேற்றார். திரு. குல்கர்னி நன்றியறிவித்தார். பின்னர் சாதுஜி மற்றும் ஜஸ்டிஸ் அருணாச்சலம் இருவரும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் விழா நடத்தும் ஹிந்து சீனியர் செகண்டரி பள்ளிக்கு வந்தனர். டாக்டர்.K. வெங்கடசுப்பிரமணியன், திரு. N.C. ராகவாச்சாரி, திரு. AR.PN. ராஜமாணிக்கம், திரு.N.C. நாயுடு மற்றும் பிற விருந்தினர்கள் கலந்து கொண்டனர். குருவின் கருணையால் விழா சிறப்பாக நடைப்பெற்றது. டாக்டர் ராதாகிருஷ்ணன், திரு. K.N.வெங்கடராமன், டாக்டர் ராஜலட்சுமி போன்ற சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்கள். சாதுஜி, விழா குறித்து,  பகவானுக்கு ஜனவரி 16 அன்று கடிதம் ஒன்றை எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

உங்கள் குறைவற்ற கருணையாலும் ஆசியாலும் விவேகானந்தா ஜெயந்தி விழா யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மூன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, வெவ்வேறு வகுப்புக்களைச் சேர்ந்த, நூற்றி ஐம்பது பிள்ளைகள் பேச்சுப்போட்டியில், மூன்று நிலைகளில் – சீனியர், ஜூனியர், மற்றும் சப் ஜூனியர் — பங்கு பெற்றனர். மூன்று நிலைகளிலும் வென்ற முதல் மூன்று பேருக்கு பரிசுக்கோப்பைகள், மற்றும் சிறந்த பள்ளிக்கு சுழல் கேடயம், வழங்கப்பட்டன. இது தவிர்த்து போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. ஜனவரி – 12 அன்று விழாவிற்கு மாண்புமிகு நீதிபதி T.S. அருணாச்சலம் தலைமையேற்றார். இவரோடு டாக்டர். K. வெங்கடசுப்பிரமணியன், திரு.N.C. ராகவாச்சாரி, தென் ஆப்பிரிக்காவின் திரு.N.C.நாயுடு மற்றும் திரு.AR.PN. ராஜமாணிக்கம் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான அன்னையர்களும், பிள்ளைகளும் இந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

காலையில் இந்த சாது, விவேகானந்தா கேந்திராவில் நடைப்பெற்ற விவேகானந்தா ஜெயந்தி விழாவில் தலைமையேற்றிருந்தான்.  மாண்புமிகு ஜஸ்டிஸ் அருணாச்சலம் விழாவில் பங்கு கொண்டதோடு சுவாமி விவேகானந்தர் குறித்த ஒரு நூலையும் வெளியிட்டார். “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” -ல் வெளியாகி இருக்கும் நமது  விழாபற்றிய செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன். 

விழா முடிந்த உடனேயே குமாரி  நிவேதிதா தடுக்கி கீழே விழுந்துவிட்டாள். அவளது இடது காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது. அவள் மெல்ல முன்னேறி வருகிறாள். டாக்டர் அவளை ஒரு வாரத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ள கூறியிருக்கிறார். 

சிரஞ்சீவி விவேகானந்தனுக்கு  திடீரென ஹெர்னியா பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆரம்ப நிலை என்பதால் அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தினார்கள். அவன் எந்த முடிவும் எடுப்பதற்கு முன் உங்கள் அறிவுரையை பெற விரும்புகிறான். அவன் 18-1-1992  சனிக்கிழமை அன்று உங்கள் தரிசனத்தை பெற அங்கே வர விரும்புகிறான். அவன் திருமதி. பாரதி உடன் மதியவாக்கில் அங்கே வருவார்கள். உங்கள் தரிசனத்திற்காக அவர்கள. பிரார்த்திக்கிறார்கள். 

இந்தியன் எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் செயல்பட்டு வரும் யோகா சகோதரத்துவ அமைப்பு, இந்த சாதுவை, “ஒருங்கிணைந்த வாழ்வு“ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை 19-1-1992 காலை 7.30 மணிக்கு பேச அழைத்துள்ளனர். கீதா பவன் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் இந்த சாதுவை, “ஸ்ரீ அரவிந்தர் மற்றும் மறுமலர்ச்சியாளர்களின் எண்ணங்களில் ஆன்மீக தேசியத்நின் இலட்சியங்கள்“ என்ற தலைப்பில் திங்கள்கிழமை 20 -1 – 1992 அன்று பேச அழைத்திருக்கிறார்கள். இந்த சாது உங்கள் ஆசியை பிரார்த்திக்கிறான். 

அன்புடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி.”

விவேக் மற்றும் பாரதி குருவின் தரிசனத்தை சனிக்கிழமை ஜனவரி 18 அன்று பெற்றனர். ஞாயிறன்று, இந்தியன் எக்ஸ்பிரஸ் எஸ்டேட் மற்றும் திங்கள்கிழமை அன்று கீதா பவன் நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறின. சாதுஜி சுவாமி சச்சிதானந்தஜி அவர்களுக்கு ராம்நாம் பணியின் முன்றேங்கள் குறித்து கடிதம் ஒன்றை எழுதினான். செவ்வாய்க்கிழமை அன்று சாதுஜி, திருமதி. வள்ளியம்மை மற்றும் அவரின் மகன் திரு. ராமநாதன் உடன் ஆசிரமத்திற்கான இடங்களைப் பார்க்க துரைப்பாக்கம் மற்றும் கீழாம்பாக்கம் போன்ற இடங்களுக்கு பயணித்தான். ஆனால் அவைகள் எந்த முடிவும் எடுக்கும் வகையில் அமையவில்லை. யோகியின் பக்தரான திரு. V.T.துரைராஜ், ஐ.ஏ.எஸ்., இந்த சாதுவை திங்கள்கிழமை 27-1-1992 அன்று சந்தித்தார். இன்னொரு பக்தரான, அருப்புக்கோட்டை சந்திரா டிரான்ஸ்போர்ட்டை சேர்ந்த, திரு.சந்திரசேகர்,  30-1-1992 அன்று வந்திருந்து சகோதரி நிவேதிதா அகாடமியின் வாழ்நாள் உறுப்பினர் ஆனார். மறைந்த சினிமா நடிகர் திரு. ரஞ்சன் அவர்களின் சகோதரரான திரு. R.பாலு ஒரு சிறப்பு ராம்நாம் சத்சங்கத்தை நுங்கம்பாக்கம் கீதாஞ்சலி டவர்ஸ்-ல் வெள்ளிக்கிழமை ஜனவரி – 31 அன்று ஏற்பாடு செய்திருந்தார். அண்ணாநகரை சேர்ந்த அன்னையர்கள். சிறப்பான பஜனை நிகழ்த்தினர். பிப்ரவரி 8 சனிக்கிழமை அன்று நிவேதிதா, திரு. பொன்ராஜ் என்பவரின் குடும்பத்துடன் யோகியின் இல்லத்திற்கு செல்ல, திருவண்ணாமலை பயணித்தார். குரு அவர்களுடன் மூன்று மணிநேரம் செலவழித்து, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் பணிகள் குறித்து உரையாடினார். லீ லோசோவிக், சிவராமகிருஷ்ணன், விவேக் மற்றும் திரு. ரங்கராஜன் ஐயங்கார் போன்றோர்  சாதுவை சந்தித்தனர். திங்கள்கிழமை அன்று யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினர், திரு பொன்ராஜ் அவர்கள் இல்லத்தில், ஒரு காயத்ரி ஹோமம் மற்றும் ராம்நாம் சத்சங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். பகவானின் பக்தரான ரொஸாரா இந்த சாதுவை சந்தித்தார். அடுத்தநாள் ஒரு அகண்ட ராம்நாம் நிகழ்ச்சி, பூஜ்ய  மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் மகாசமாதி நாளை முன்னிட்டு, நடைப்பெற்றது. யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள், நவசக்தி பஜன் குழுவை சேர்ந்த அன்னையர்கள், மற்றும் ராம்நாம் வங்கியின் பக்தர்களும் கலந்து கொண்டனர். 

பிப்ரவரி 13, வியாழக்கிழமை அன்று, சாதுவிற்கு, சேலத்தில் அன்னை மாயம்மா பிப்ரவரி 9 ஆம் தேதி அன்று மஹாசமாதி  அடைந்த சேதி கிடைத்தது. சாதுவின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னையின் பாதுகைகளுக்கு ஒரு சிறப்பு பூஜையும், சிறப்பு ராம்நாம் சத்சங்கமும் நடைப்பெற்றது. பிப்ரவரி 14 ஆம் தேதி இந்த சாது விவேக் உடன் திருவண்ணாமலைக்கு சென்று யோகியின் இல்லத்தை அடைந்தபோது யோகி சாதுவை 4 மணிக்கு வரச்சொன்னார். சாது திரு. சுந்தரராமனின் இல்லத்திற்கு மதிய நேரம் ஓய்வெடுக்க சென்றார். சாதுவும், விவேக்கும் மாலையில் யோகியை சந்தித்தனர். குருவிற்காக நீலலோசனி  அன்பளிப்பாக கொடுத்தனுப்பிய பாட்டில் தேனை அவர்கள் யோகியிடம் தந்தனர். யோகி அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். சாதுஜி குருவிடம் ஸ்ரீ சுகுணேந்திர தீர்த்தா எழுதிய கடிதம் பற்றி கூறினார். சுவாமி எவ்விதம் சாதுவின் தொடர்புக்கு வந்தார் என யோகி வினவினார். சாதுஜி விஸ்வ ஹிந்து பரிஷத் மூலம் தனக்கு உடுப்பி பேஜாவர் மடத்துடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறினார். சாதுஜி பகவானிடம் காஞ்சி காமகோடி பீட ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தென்னிந்தியாவில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் பயணம் செய்வதாகவும், அனைத்து கோயில்களின் தல புராணங்களை பெற விரும்புவதாகவும் கூறினான். போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்த திரு. ஜெயராமன் வழங்கிய ஸ்தலபுராணங்களின் தொகுப்பை, யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ரிசர்ச் சென்டரிடம் வைத்திருந்தாகவும் அதனை காமகோடி மடத்திற்கு தந்துவிட்டதாகவும் கூறினார். சாது பகவானிடம், லீ லொசோவிக்கிடம் இருந்து கடிதம் வந்துள்ளது பற்றி குறிப்பிட்டார். யோகி, கிருஷ்ணா கார்சலே கடிதம் பற்றி கேட்டார். சாதுஜி பகவானிடம், கிருஷ்ணா தனது தொடர்பில் வந்தது குறித்தும், கடந்த ஆண்டிற்கு முந்தின ஆண்டு நடைபெற்ற யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கு பிறகு யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சர்வதேச அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றது குறித்தும், பின்னர் தொலைபேசி மூலம் பிரான்ஸிலிருந்து அடிக்கடி தொடர்பு கொண்டு வருவதாகவும் கூறினார். பகவான், பிரெஞ்சு மொழியில் கிருஷ்ணா எழுதிய ஒரு கட்டுரை பற்றி குறிப்பிட்டார். அவர் உள்ளே சென்று “லே மண்டே இன்கொன்னூ” என்ற பிரெஞ்சு மொழி இதழையும், அதில் வெளியாகி இருந்த கிருஷ்ணாவின் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு “மவுண்டென் பாத்” ஆசிரியர் திரு கணேசன் தட்டச்சு செய்து இருந்ததையும் கொண்டு வந்தார். நாங்கள் அதை வாசித்த பிறகு அவர் அதை விவேக்கிடம் தந்து கிருஷ்ணாவின் கட்டுரையை நகல் எடுத்து வருமாறு கூறினார். விவேக், சசியுடன், குருவின் உத்தரவுபடி நகலெடுக்க சென்றான். 

சாது பகவானிடம் ராம்நாம் பிரச்சார வேலை இப்பொழுது முன்னேறி வருவதாகவும் தான் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்ய விரும்புவதாகவும் கூறினான். குரு அதற்கு எந்த உடனடி பதிலும் அளிக்காமல் சிரித்தார். நாங்கள் யோகியிடம் 2400 கோடி நாம ஜப எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக கூறினோம். யோகி நாம் இன்னும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம் என்றார். சாதுஜி பகவானிடம் தான் காஞ்சன்காடு செல்ல விரும்புவதாகவும், ‘தத்துவ தர்சனா’வின் எட்டாம் ஆண்டுமலரை தயாரிக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறினார். நாங்கள் அன்னை மாயம்மாவின் மகாசமாதி குறித்து யோகியிடம் கூறினோம். யோகி தானும் அந்த செய்தியை ஒரு பக்தர் எழுதிய கடிதம் மூலம் அன்று தான் அறிந்ததாக கூறினார். நாங்கள் மாயம்மாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தலாமா என்று கேட்டமைக்கு யோகி நீங்களே உங்கள் சொந்த முடிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். 

குரு விவேக்கின் உடல்நலம் மற்றும் படிப்பு குறித்து விசாரித்தார். அவர் விவேக்கை ஆசீர்வதித்து, “விவேக் மார்ச் மாதம் நடைபெற உள்ள அனைத்து இறுதி தேர்வுகளிலும் வெற்றிபெற்று பொறியாளர் ஆவதற்கு என் தந்தை ஆசி வழங்குகிறார்” என்றார். பகவான் உள்ளே சென்று ரூ.115 எடுத்து வந்து சாதுவிடம் கொடுத்தார். விவேக் இடம் 20 பைசா கொடுத்ததோடு நகைச்சுவையாக, விவேக் தனக்கு குரு எதுவும் தரவில்லை என்று நினைக்கக்கூடாது அல்லவா என்று கூறினார். பின்னர், அவர் எங்கள் அனைவரையும், ‘யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா’ என்று பாடச் சொன்னார்.  மூன்றரை மணி நேரம் எங்களோடு செலவழித்த அவர் எங்களுக்கு விடைதரும் மூன் நாங்கள் மறுநாள் அவரை மீண்டும் சந்திக்க அனுமதி கேட்டோம். அவர், “பத்துமணிக்கு வாருங்கள்” என்றார். 

பிப்ரவரி 15 சனிக்கிழமை அன்று சாதுஜி நரிக்குட்டி சுவாமி அவர்களுடன் சிறிது நேரம் முலைப்பால் தீர்த்தத்தில் செலவழித்தார். நாங்கள் யோகியின் இல்லத்திற்கு பத்து மணிக்கு வந்தோம். மதுரையைச் சேர்ந்த திரு. G. சங்கர்ராஜூலு அங்கே இருந்தார். அவர் எங்களை வரவேற்றார். பலர் வந்து ஆசியை பெற்று சென்றவாறு இருந்தனர். குரு, சங்கர்ராஜூலுவிடம் அவரது பள்ளியின் அங்கீகாரம் குறித்து கேட்டார். சங்கர்ராஜூலு அங்கீகாரம் கிடைத்து விட்டதாகவும் முதல் தொகுப்பு மாணவர்கள் தங்களது தேர்வுகளை எழுத இருப்பதாகவும் கூறினார். குரு விவேக்கை சுட்டிக்காட்டி அவரும் தேர்வு எழுத இருப்பதாகவும், விரைவில் அவர் பொறியாளர் ஆகப்போவதாகவும் கூறினார். தேவகியும், விஜயலட்சுமி அவர்களும் உள்ளே வந்தார்கள். நாங்கள் அனைவரும் பகவானின் பெயரைப் பாடினோம். திரைப்பட பாடலாசிரியர் திரு. கங்கை அமரன், நடிகர் ராமராஜன் மற்றும் ஒரு குழுவினரை, பகவானின் தரிசனத்திற்கு அனுப்பினார். பகவான் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். தேவகி பகவானிடம் தான் தற்போது வசிக்கும் வீட்டில் திருடர்கள் பயம் இருப்பதன் காரணமாக வேறு வீட்டிற்கு மாற இருப்பதாக கூறினார். வீட்டின் உரிமையாளர் தனிப்பட்ட வழியை அடைத்து விட்டதாகவும் நாய்கள் எப்போதும் குரைத்தவாறே இருக்கின்றன என்றும் கூறிய தேவகியிடம் பகவான், “நாய்கள் எப்போதும் குரைக்கும்” என்று கூற, சாதுஜி நகைச்சுவையாக நாய்கள் சாதுக்கள், மகாத்மாக்களையும்  கூட கண்டு குரைக்கும் என்று சொல்ல பகவான் மனம்விட்டு தனது வெடிச்சிரிப்பை துவக்கினார். 

பகவான் திடீரென ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார். பின்னர் சாதுவிடம் திரும்பி, “அறிவியலாளர்கள் சூரியனில் கரும்புள்ளிகள் இருப்பதைப் பற்றி கூறுகிறார்களே அதுபற்றி தெரியுமா“ என கேட்டார். சாது, “அவர்கள் ஆகாயத்திலும் கருந்துளை இருப்பதாக கூறுகிறார்கள்“ என்று பதிலளித்தார். பகவான், “சூரியன் மிகவும் பிரகாசம் உடையது, இருப்பினும் அவர்கள் கரும்புள்ளிகளை கண்டறிய முயற்சிக்கிறார்கள்” என்றார். தேவகி தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற இருக்கும் தனது விருப்பத்தை கூறினார். பகவான் சிரித்தவாறே, “அப்படியா?“ என வினவினார். 

மதியம் 12.15 க்கு பகவான் எங்களை அனுப்ப முடிவு செய்தார். அவர் இந்த சாதுவிடம் நாங்கள் இன்று திரும்பப் போகிறோமா எனக்கேட்டார். சாது யோகியிடம் தானும், விவேக்கும் சேலத்திற்கு சென்று தெய்வீக அன்னை மாயி அவர்களின் சமாதியில் தங்களது அஞ்சலியை செலுத்திவிட்டு பின்னர் சென்னை திரும்ப இருப்பதாக கூறினார். யோகி, “நன்று அப்படியே செய்யுங்கள்” என்று கூறி ஆசீர்வதித்தார். சாது யோகியிடம் ‘தத்துவ தர்சனா’வின் எட்டாவது ஆண்டுமலர் சிவராத்திரி அன்று வெளிவரும் என்றார். யோகி எப்போது சிவராத்திரி என்று கேட்க, சாது, “இரண்டாம் தேதி” என்றார். யோகி, “நன்று, அப்பொழுது வாருங்கள்” என்றார். யோகி சாதுவின் தண்டம் மற்றும் பிக்ஷை பாத்திரத்தை எடுத்து ஆசீர்வதித்து அவரிடம் தந்தார். நாங்கள் அவரிடம் விடைப்பெற்று சேலத்திற்கு திரும்பினோம். திரு. ராஜேந்திரன் மற்றும் திருமதி ராஜேந்திரன் அவர்கள் எங்களை மாயம்மா ஆசிரமத்தில் வரவேற்றனர். நாங்கள் அன்னையின் சமாதியில் எங்களது அஞ்சலியை செலுத்தினோம். அங்கே பிரார்த்தனை செய்துவிட்டு பிரசாதங்களைப் பெற்று சென்னை திரும்பினோம். சாதுஜி பகவானுக்கு பிப்ரவரி 18, 1992 அன்று ஒரு கடிதம் எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

சிரஞ்சீவி. விவேக் மற்றும் இந்த சாது ஞாயிற்றுக்கிழமை தெய்வீக அன்னை மாயம்மாவிற்கு அவர்களது சமாதியில் சேலத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு சென்னை திரும்பினோம். மார்ச் 7 அன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை அகண்டநாமம் நடத்த விருப்பம் கொண்டிருக்கிறோம். நாங்கள் உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

இந்தமாதம் ராமநாமம் எண்ணிக்கை நான்கு கோடியை அடைந்துள்ளது. உங்கள் ஆசியாலும், கருணையாலும் விரைவாக நமது வளர்ச்சி நடைபெறுகிறது ராமநாம மையங்கள் மெல்ல அதிகரித்து வருகின்றன. 

‘தத்துவ தர்சனா’வின் எட்டாம் ஆண்டுமலர் தயாராகி வருகிறது. நாங்கள் முதல் பிரதியுடன் சிவராத்திரி நாளான 2-3-92ல் அங்கு வருவோம்.

நமது ராமநாம பிரச்சாரத்தை ஆசீர்வதித்து  ஜகத்குரு மாத்வாச்சார்யா அவர்களின்  உடுப்பி, புதிகே, கிருஷ்ணா மடத்தை சேர்ந்த ஸ்ரீ சுகுணேந்திர தீர்த்தா அவர்கள் எழுதிய கடிதத்தின் பிரதி ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன் 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

பிப்ரவரி 20, வியாழக்கிழமை  அன்று பகவானின் பக்தரும் காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தின் தலைவருமான திரு. V.T. துரைராஜ் ஐ.ஏ.எஸ்  வந்திருந்து அவரது மதிய நேரத்தை இந்த சாதுவோடு செலவழித்தார். பிப்ரவரி 23, 1992, அன்று பேராசிரியர் தேவகி இந்த சாதுவை தொலைபேசி மூலம் அழைத்து, பகவானிடமிருந்து வந்த ஒரு முக்கிய சேதியை தெரிவித்தார். பிறகு அவர் எழுத்தாளர் பாலகுமாரன் மற்றும் திருமதி் சாந்தா அவர்களோடு வந்திருந்தார். அவர்கள் சாதுவுடன் ஜஸ்டிஸ் ராஜூ மற்றும் ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களை சந்திக்கச் சென்றனர். ஜஸ்டிஸ் அருணாச்சலம் மற்றும் குடும்பத்தினர் சாதுவை அனைத்து மரியாதைகளுடன் வரவேற்றனர். பகவானின் செய்தி பற்றி சாது ஜஸ்டிஸ் அவர்களிடம் கலந்தாலோசனை செய்தார். பின்னர் திரு.பாலகுமாரன் இந்த சாதுவை அவரது இல்லத்திற்கு திரும்ப அழைத்து வந்தார். டாக்டர். வெங்கடசுப்பிரமணியம் இந்த சாதுவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, திரு.சங்கர்ராஜூலு அவர்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள, ஆரம்பிக்கப்பட இருக்கும் டிரஸ்ட் உடனான எந்த வித தொடர்பையும் மறுத்து பேசினார். ஜஸ்டிஸ் அருணாச்சலம் இந்த சாதுவை தொடர்பு கொண்டு பகிர்ந்த சேதியை சாது திரு. பாலகுமாரன் மற்றும் பேரா. தேவகி ஆகியோரிடமும் தெரிவித்தார். பிப்ரவரி 24 அன்று இந்த சாது திரு. G. சேகர் மூலம் தமிழக கோயில்களின் ஸ்தலபுராணங்கள் அடங்கிய நூல்களின் தொகுப்பு ஒன்றை காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்த  ஸ்ரீ சங்கர விஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஒப்படைத்தார். பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த திரு. N.C. நாயுடு வந்திருந்தார்.

சனிக்கிழமை, பிப்ரவரி 29 1992, அன்று சென்னை மகாராஷ்டிரா மண்டல் சாதுவை அழைத்து, பக்த பஜன் சம்மேளனத்தை கொடியேற்றி வைத்து துவங்க ஏற்பாடு செய்தது. சாதுஜி பகவான் குறித்தும் ராம்நாம் இயக்கம் குறித்தும் பேசினான். கௌடியா மடத்தை சேர்ந்த சுவாமிஜிக்களும் கலந்து கொண்டனர். அடுத்தநாள் சிறப்பு காயத்ரி ஹோமம் மற்றும் ராம்நாம் சத்சங்கம் பகவானின் பக்தரான சரண்யா என்பவரின் இல்லத்தில் நடைபெற்றது. யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்க உறுப்பினர்கள் மற்றும் சாதுஜி அதில் பங்கேற்றனர். சனிக்கிழமை, மார்ச் 7 அன்று, இன்னொரு பக்தரான திரு. பொன்ராஜ் இல்லத்தில் இன்னொரு சிறப்பு சத்சங்கம் நடைப்பெற்றது. 

மார்ச் 8, 1992ல் ஓரு அகண்ட நாம சத்சங்கம் அன்னை மாயம்மா அவர்களுக்கு மரியாதையும், அஞ்சலியும் செலுத்தும் வகையில் நடைப்பெற்றது. பல பக்தர்கள் அதில் கலந்து கொண்டனர். மார்ச். 12 அன்று சாது பகவானுக்கு ஒரு கடிதம் எழுதினார். 

”பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

‘தத்துவ தர்சனா’வின் எட்டாவது ஆண்டு மலர் 1992, “இந்தியாவின் முனிவர்கள் -XV“ என்ற தலைப்பில், அச்சில் இருக்கிறது. 18-3-1992 அன்று பிரதிகள் தயாராகும் என்று நம்புகிறோம். அச்சுப்பணி முடிந்தவுடன் நாங்கள் முதல் பிரதியை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்க வருவோம்.

இந்த இதழில் நாங்கள், பிரென்ச் கட்டுரைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பான, திரு.J.B.கார்செல்  அவர்களின் “இந்தியா என் அன்னை, யோகி என் தந்தை” மற்றும் திரு. சிவசங்கரின் “யோகி ராம்சுரத்குமார் உடனான சந்திப்பு” மற்றும் லீ லோசோவிக்கி ன் “உடைந்த உள்ளத்தின் கவிதைகள் – II” போன்றவைகள் வெளியிட்டிருக்கிறோம். அத்துடன் S.சுரேஷ் எழுதிய “சுவாமி தயானந்தா”, இந்த சாது எழுதிய “பகவான் நித்யானந்தா” அவர்களின் முழு சரிதம், தலையங்கத்தில் “கன்னியாக்குமரியின் தெய்வீக அன்னை மாயம்மாவிற்கு ஒரு அஞ்சலி” ஆகியவையும் வெளியிட்டு இருக்கிறோம். அட்டை படத்தில் அன்னை மாயம்மா அவர்களின் உருவத்தை வெளியிட்டு, எங்கள் மரியாதையுடன் கூடிய அஞ்சலியை செலுத்தியிருக்கிறோம். 

நாங்கள் புதன் அல்லது வியாழக்கிழமை அங்கு வந்து உங்கள் ஆசியையும், தரிசனத்தையும் பெறுவோம் என நம்புகிறோம். 

இத்துடன் பிரான்ஸை சேர்ந்த திரு.கிருஷ்ணா கார்ஸல்லே எழுதிய கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர் யோகி ராம்சுரத்குமார் சர்வதேச இளைஞர் சங்கத்திற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிந்து ராம்நாம். இயக்கத்தை பரப்பி வருகிறார் . அவர் உங்கள் ஆசியை வேண்டுகிறார். 

சிரஞ்சீவி. விவேக் மற்றும் குமாரி. நிவேதிதா தங்கள் இறுதி தேர்வுகளுக்காக மும்முரமாக இருக்கிறார்கள். திருமதி. பாரதி தனது நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன் 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

மார்ச் 13, வெள்ளிக்கிழமை, விவேக், திரு. A.V.ராமமூர்த்தி மற்றும் திரு. கிருஷ்ணமூர்த்தி உடன், திருவண்ணாமலைக்கு சென்று பகவானை பார்த்துவிட்டு நள்ளிரவில் பகவானின் பிரசாதங்களுடன் திரும்பினர். திரு. N.C.நாயுடு சாதுவை காண வந்தார். 

‘தத்துவ தர்சனா’ எட்டாவது ஆண்டு மலரை அச்சிடுவதில் சில தாமதங்கள் ஏற்பட்டன. அதன் பிரதிகள் தயாரானவுடன் சாதுஜி திரு. கண்ணபிரான் உடன் திருவண்ணாமலைக்கு கிளம்பி வெள்ளிக்கிழமை மார்ச் 20, 1992, அன்று காலையில் 11.15 மணிக்கு பகவானின் இல்லத்தை அடைந்தனர். பகவான் இவர்களை வரவேற்றார். சாது, இதழின் பிரதிகளை பகவானின் முன் வைத்து, நீலலோசனி தந்தனுப்பிய தேன் பாட்டிலையும், ருக்மணி கொடுத்தனுப்பிய கவர் ஒன்றையும் யோகியிடம் வைத்தார். பகவானின் பக்தர்களான சிவப்ரியா, அனுராதா மற்றும் சிலர் அங்கே இருந்தனர். நாங்கள் அனைவரும் பகவானின் பெயரை சிறிது நேரம் ஜபித்தோம். பின்னர் பகவான் சாதுவிடம் திரும்பி தனது உரையாடலை சர்வதேச அரசியலோடு துவக்கினார் : 

பகவான் சாதுவிடம், “சோவியத் யூனியனின் சிதைவு பற்றி நீ என்ன நினைக்கிறாய் ? இந்தியாவில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் ? அது குறித்து நீ ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா ?“ 

சாதுஜி பதிலாக, “மஹராஜ் சோவியத் யூனியனின் சிதைவு அமெரிக்காவை எதிர்ப்புகள் அற்ற சக்தியாக ஆக்கியிருக்கிறது.“ 

பகவான்: “பிரிட்டிஷ் நம்மை ஆண்டது போல் அமெரிக்கா நம்மை ஆட்சி செய்யும் என்று நீ நினைக்கிறாயா?“ 

சாதுஜி: “அமெரிக்காவில் இருந்து நமது பொருளாதாரத்தின் மீது நிச்சயமாக சில அழுத்தங்கள் இருக்கும். அறிவுசார் காப்புரிமை மற்றும் பிறவற்றில் இது நீடிக்கும் ஆனால் நமது நாடு அதனை எதிர்க்கும்“. 

பகவான்: “மற்ற நாடுகளை விட அமெரிக்காவிற்கு ஆயுத பலம் அதிகம் என்றும் அதனால் அவர்கள் உலகத்தை ஆள விரும்புவதாகவும் கூறப்படுகிறதே“. 

சாதுஜி: “மஹராஜ், ‘நாஸ்ட்டரடாமஸ் அவர்களின் வருவது உரைத்தல்’ களில் ஒன்று, இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தியா உலகத்தில் சக்தி மிகுந்த நாடாக வெளிவரும் என்பதாகும். ஒருவேளை அனைத்து ஆசிய நாடுகளும் இந்தியாவின் தலைமையில் அமெரிக்காவை எதிர்க்கும் எனில் இந்தியா மேல் எழக்கூடும்.” 

பகவான்: “முன்பு அமெரிக்கா நம்மை பாக்கிஸ்தான் மூலம் மிரட்டியது. இப்போது நேரடியாகவே நம்மை மிரட்டி வருகிறது” 

சாதுஜி: “மஹராஜ், முஸ்லிம் பெரும்பான்மை உள்ள சோவியத் மாநிலங்கள் அரபு நாடுகள் உடன் இணைந்து ஒரு இஸ்லாமிய கூட்டமைப்பு ஏற்படுத்தினால் இந்தியாவிற்கு எதிர்காலத்தில் அது அச்சுறுத்தலாக அமையும் என சில அமெரிக்கா நிபுணர்கள் கூறுகிறார்கள்.“ 

பகவான்: “ஸ்ரீ அரவிந்தர் காட்டுத்தனமான சக்திகளே உலகை ஆளும், சக்தியே ஆள்பவர்களை உருவாக்கும் என்று கூறுகிறார்.“ 

சாதுஜி: “ஆமாம் மஹராஜ் எனது நித்யானந்தா கட்டுரையிலும் காந்தி மற்றும் நித்தியானந்தா அவர்களிடையே நடக்கும் உரையாடலில் நித்யானந்தா காந்தியிடம், சுதந்திரத்தை அடைய ‘ராம பாணம்’ தேவைப்படுகிறது; ராம்நாம் ஆன்மீக அறிதலுக்கே பயனுள்ளது, என்று கூறியிருக்கிறார்.“ 

பகவான்: “நேரு உருவாக்கிய அணி சேரா இயக்கத்தை இந்தியாவே தலைமையேற்று நடத்தியது. அமெரிக்கா இந்தியாவை தண்டிக்க விரும்புகிறது. அமெரிக்கா இந்தியா வலிமையடைவதை விரும்பவில்லை. யூகோஸ்லாவியாவில் என்ன நடக்கிறது எனப்பார். மொத்த குழப்பம். இதே போன்ற நிலையை இந்தியாவிலும் உருவாக்க விரும்புகிறார்கள். நீ அது வெற்றிபெறும் என நினைக்கிறாயா?“ 

சாதுஜி: “மஹராஜ் நம்மிடம் ஆன்மீக பலம் உண்டு” 

பகவான்: “எனவே நீ இந்தியா ஆன்மீக பலம் மிக்கது, மற்றும் ஆன்மீக பலத்தின் வலிமை இந்தியாவை பாதுகாக்கும் என்கிறாய். இந்தியா ஆன்மீக அலையை மொத்த உலகிலும் பரப்ப வேண்டும். அரவிந்தர் மனிதகுலத்தை ஆன்மீக வலிமையால் இணைக்க விரும்பினார். அவர் மனிகுல ஒற்றுமை ஆன்மீக சகோதரத்துவத்தால் மட்டுமே வரும் என்று பேசியிருக்கிறார். “ 

சாதுஜி ஸ்ரீ அரவிந்தரின் “ஆன்மீக கம்யூனிசம்” என்ற நூல் பற்றி குறிப்பிட்டார். பகவான் அந்த நூல் பதிப்பிக்கப்பட்ட காலம் குறித்து கேட்டார். சாதுஜி, 1930 வாக்கில் என்றார். ஆனால், பகவான், அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு 1910ல் வந்துவிட்டார், எனவே இது அவருடையதாக இருக்க முடியாது என்றார். சாதுஜி, அது  ப்ரபர்த்தக் சங்கத்தை சேர்ந்த மோதிலால் ராய் உடையதாக இருக்கலாம் என்றார். சாதுஜி, அரவிந்தர் பெங்காலை விட்டு சென்றபின்னரும், சகோதரி நிவேதிதா “பந்தே மாதரம்” இதழில் அரவிந்தர் பெயரில் தலையங்கம் எழுதியதாக கூறினார். சகோதரி நிவேதிதாவின் “தேசிய பிரார்த்தனை“ மற்றும் அவரது இளைஞர்களுக்கான அழைப்பு போன்றவை சென்ற ‘தத்துவ தர்சனா’வில் மீண்டும் பதிப்பிக்கப்பட்டதாக சாதுஜி கூறி அவ்விதழை பகவானிடம் காட்டினார். யோகி மற்றவர்களை அதனை படிக்குமாறு கூறினார். யோகி ‘தத்துவ தர்சனா’வின் எட்டாவது ஆண்டு மலரை ஆசீர்வதித்தார். அங்கிருந்தவர்களிடம் பிரதிகளை வழங்கினார். 

கிறிஸ்டி (சிவப்ரியா) பகவானிடம் தான் அந்த இதழின் சந்தாதாரர் என்றார். பகவான் அவளிடம் நகைச்சுவையாக உன்னிடம் ஒரு பிரதியை தந்து வீணாக்கிவிட்டேனே என்று கூறினார். பகவான் ஜெயராமன், அனுராதா மற்ற அனைவருக்கும் ஆளுக்கொரு பிரதி கொடுத்தார். சகோதரி நிவேதிதா அகாடமியின் துண்டுப்பிரசுரங்களையும் அனைவருக்கும் ஒவ்வொரு பிரதியை கொடுத்தார். பின்னர் அவர் ஜெயராமனிடம், “ஜெயராமன், இந்தப்பிச்சைக்காரன் மறந்து விடுவான். எனவே நீ ஒரு பிரதியை விஜயலட்சுமிக்கு, ஒன்றை தேவகிக்கு, ஒன்று ராஜலட்சுமிக்கு கொடு” எனக் கூறி ஒவ்வொரு பிரதியாக கொடுத்தார். 

சாது பகவானிடம் சகோதரி நிவேதிதா அகாடமி 13 வருடங்களை ஏப்ரல் 13, 1992 அன்று முடிப்பதாகவும், ‘தத்துவ தர்சனா’ ஒன்பதாம் ஆண்டில் நுழைவதாகவும் கூறினார். யோகி அகாடமி மற்றும் இதழை ஆசீர்வதித்தார். சாது,  அகாடமிஅதன் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிகல் ஆராய்ச்சி மையத்தின் பதிப்பக பணிகளை விரிவாக்கம் செய்யப்போவதாக கூறினார். பகவான் அந்த முயற்சிகளையும் ஆசீர்வதித்தார். சாதுஜி, வள்ளியம்மை மோனோ ஃபோட்டோ ஃபிலிம் செட்டர் வைப்பதற்கான இடத்தினை தந்த தகவலை கூறினார். அதற்கு யோகி வள்ளியம்மை தன்னை சந்தித்து இந்த தகவலை முன்பே கூறியதாக சொன்னார். யோகி சாதுவிடம் நீ அதனை இயக்க தயார் செய்துவிட்டாயா என வினவினார். சாது அது பழைய மாடல், அதற்கு ஏர் கம்ப்ரசர் மற்றும் பிற உதிரி பாகங்களும் வேண்டும் என்றார். அரவிந்தர் ஆசிரமம் மற்றும் சிவானந்தா ஆசிரமம் கூட இது ஒரு வெள்ளையானை என்று கூறி, வசதியான கணிணி இயந்திரங்களுக்கு மாறிவிட்டன என்றும் அதனை இயக்க முடியாவிட்டால் அதனை அப்புறப்படுத்தியாக வேண்டும் என்றும் கூறினார். பகவான், “ரங்கராஜன் கடுமையான பணிகளை செய்கிறார். என் தந்தை ரங்கராஜனை ஆசீர்வதிப்பார்“ என்றார். 

சாது யோகியிடம் கிருஷ்ணா கார்செல் அவர்களின் கடிதம் குறித்து குறிப்பிட்டார். யோகி, அதனை பெற்றுக்கொண்டதாகவும் கிருஷ்ணா சிவசங்கர் உடைய கட்டுரையைப் பற்றி அதில் குறிப்பிட்டுள்ளதை பார்த்தாகவும் கூறினார். சாது, அந்த எழுத்தாளரின் கட்டுரை வெளியிடப்பட்டிருந்த பத்திரிகையின் ஆசிரியர் மூலமாக அவருக்கு தான் ‘தத்துவ தர்சனா’ பிரதியை அனுப்ப இருப்பதாக கூறினார். சாதுஜி பகவானிடம் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் பணி சர்வதேச அளவில் பரவி வருவதாகவும் இவையனைத்தும் உங்கள் ஆசியும், கருணையும் என்றார். பகவான், “இவையனைத்தும் என் தந்தையின் கருணையால்“ என்றார். சாது யோகியிடம் பூஜ்ய சுவாமி சச்சிதானந்தா நமது ராம்நாம் இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்ததாக கூறினார். 

சாது பகவானிடம் விவேகானந்தனின் பி.ஈ. பட்டப்படிப்பிற்கான திட்டப்பணி குறித்து கூறினார். அதனை அவன் பகவானுக்காக அர்ப்பணித்து இருப்பதாக கூற, யோகி அதன் தலைப்பு குறித்து கேட்டார். சாது “நீர் மின் நிலையங்கள்“ என்றார். விவேக் அதனை சமர்ப்பிக்கும் முன், பகவானிடம் அவர் ஆசியைப் பெற அந்த அறிக்கையோடு வருவான் என்று சாது கூற, யோகி விவேக்கை ஆசீர்வதித்தார். 

பகவான் சாதுவிடம் கடிதம் ஒன்றை கொடுத்து அதனை திறக்கச் சொன்னார். அது ஸ்ரீ லங்காவில் இருந்து திரு. தர்மகீர்த்தி எழுதிய கடிதம். அதனை இரண்டு முறை படிக்கச் சொன்னார். அவர் இரண்டு முறை தனக்கு ஏற்பட்ட உடல் பாதிப்புக்கள் பற்றி எழுதியிருந்தார். யோகி சாதுவிடம் இவருக்கு என்னை எப்படி தெரியும் என வினவினார். சாதுஜி தனது இல்லத்திற்கு வந்திருந்த கொரியன் மாணவன், நாம், மூலம் அறிந்திருக்கலாம் என்றார். கிறிஸ்டி இடைமறித்து சுவாமி பிரேமானந்தாவும் அவரைப்பற்றி பேசியிருப்பதாகவும், பகவானை அவர் பிரேமானந்தா மூலம் அறிந்திருக்கலாம் என்றார். யோகி அந்த கடிதத்தில் இருக்கும் கையொப்பம் ஆங்கிலத்தில் இருக்கிறதா என வினவினார். சாது கையொப்பம் சிங்கள மொழியில் இருப்பதாக கூறினார். பகவான் சிங்கள மொழிக்கு தனியாக எழுத்துக்கள் இருக்கின்றனவா என வினவினார் சாது அந்த கடிதத்தின் விலாசம் எழுதும் இடத்தில “எயரோக்ராம்” என்று எழுதப்பட்டுள்ளது சிங்கள மொழியில் என்றான். அனுராதா ஒரு ரஷ்ய மொழி கடிதம் கணேசனுக்கு வந்ததை, நடியா சூத்தாரா மொழிபெயர்ப்பு செய்ததாக கூறினார். 

சாதுஜி பகவானிடம் ரஷ்யர்களின் இந்திய தத்துவத்தின் மீதான ஆர்வம் குறித்து கூறினார். குறிப்பாக சுவாமி விவேகானந்தர் அவர்களின் தத்துவத்தில் அவர்களுக்கு உள்ள ஆர்வம் பற்றி சொன்னார். பகவான் ரஷ்யர்கள் ரவீந்திரநாத் தாகூர் மீதும் ஆர்வம் கொண்டவர்கள் என குறிப்பிட்டார். சாது பகவானிடம் ரஷ்யாவின் ஒரு ஆராய்ச்சியாளர்,  ரோஸ்டிஸ்லோவ் ரபாக்கோவ் பற்றி கூறியதோடு, அவர் சாதுவை சந்திக்க விரும்பி சென்னையில் உள்ள சோவியத் தூதரகத்திற்கு அழைத்ததையும், ஸ்ரீசக்ரம் பாரத தேசத்தை குறிப்பிடுவதைப் பற்றி அறிய  விரும்பியதையும், கூறினார்.. சாதுஜி பகவானிடம், “நமது இலக்கு, தேசப்பற்றை ஊக்குவித்தல் மற்றும் ஆன்மீக தூண்டுதல் ஆகிய இரட்டை இலட்சியங்கள்” என்று கூற பகவான் அந்த இரட்டை இலட்சியங்களை திரும்ப கூறுமாறு சொன்னார். சாது அதனை திரும்ப கூற, “ நீ எனது தந்தையின் பணியை செய்கிறாய் . தந்தை உன்னை ஆசீர்வதிப்பார்” என்றார். 

கண்ணபிரான் தனது வியாபார பிரச்சனைகளை கூறினார். பகவான் அதற்கு பதிலளித்தார். தன்னால் எந்த அறிவுரையும் அந்த விவகாரங்களில் வழங்குவதற்கு இல்லை, ஆனால் தனது தந்தையிடம் உதவி செய்யுமாறு பிரார்த்திக்கிறேன் என்றார். அனுராதா தனது ஆஸ்துமா வலியில் இருந்து விடுதலை பெற பகவானின் ஆசியை வேண்ட, பகவான் அவரை ஆசீர்வதித்தார். யோகி அனுராதாவிடம் திரைப்பட தயாரிப்பாளரான திரு. G. வெங்கடேஸ்வரனின்  வருகைக்கான திட்டம் குறித்து விசாரித்தார். சாதுஜி பகவானிடம். ராம்நாம் சத்சங்கம் மற்றும் காயத்ரி ஹோமம் சுரேஷ் அவர்களால் திரு. R.V. ஸ்ரீனிவாசன் அவர்களின் இல்லத்தில் நடைபெற இருப்பது பற்றி கூறினார். பகவான் டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் தன்னை முந்திய நாள் சந்தித்து பேசியதாக கூறினார். சாது தனது வேலூர் நிகழ்ச்சி குறித்தும் கூறினார். யோகி நமது நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு ஆசீர்வதித்ததோடு, பாரதி, நிவேதிதாவையும் ஆசீர்வதித்தார். பிற்பகல் 1.15 மணிக்கு யோகி எங்களை வழியனுப்ப முடிவு செய்தார். யோகி சாதுவின் தண்டம் மற்றும் பிக்ஷை பாத்திரத்தை எடுத்து சக்தியேற்றி சாதுவிடம் திருப்பித் தந்து ஆசீர்வதித்தார். நாங்கள் சென்னைக்கு திரும்பினோம். 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.25

Glimpses of A Great Yogi in Tamil – Part 2
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – II
சீடன் கண்ட தீக்ஷா குரு

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 2.25 

சென்னையில் 1991ல் நடந்த பிரம்மாண்ட யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி

மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்தைச் சேர்ந்த பிரம்மச்சாரி நாராயணன் மற்றும் பிலிம் சென்டரின் திரு. நாராயணன் இந்த சாதுவை சனிக்கிழமை நவம்பர் 16, 1991 அன்று சந்தித்தனர். மும்பை ராம்நாம் இயக்கத்தின் பணியாளரான திரு. M.W. கரேகர் அவர்களும். வந்திருந்தார். அகில இந்திய வானொலியின் சக்தி ஸ்ரீனிவாசன் தொலைபேசி மூலம் சாதுவை தொடர்புகொண்டு, “சான்றோர் சிந்தனை“ என்ற தலைப்பில், சுவாமி விவேகானந்தர், சகோதரி நிவேதிதா, மகாகவி சுப்ரமண்ய பாரதி போன்றோர்களின் சேதிகளை தொடர் சொற்பொழிவு ஆக நிகழ்த்த அழைத்தார். அந்த அழைப்பினை ஏற்ற சாது பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

உங்கள் தரிசனத்தை இந்த சாது பெற்றுவிட்டு திருவண்ணாமலையில் இருந்து சென்னை திரும்பியவுடன் எங்களுக்கு அகில இந்திய வானொலி நிலையத்தில் இருந்து ஒரு தொடர் உரையாற்ற அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றது. டிசம்பர் 11, 1991 ஆம் ஆண்டு மகாகவி பாரதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும். இந்த தொடர் உரையானது, சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகளில் வெளித் தோன்றிய ஆன்மீக தேசியம், சகோதரி நிவேதிதாவின் செயல்பாடுகளில் சிறப்பாக வெளிப்பட்டு, அவரது புகழ்மிக்க சீடரான மகாகவி பாரதியார் அவர்களின் உணர்ச்சிமிக்க எழுத்துக்களில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்தது பற்றியாகும். முதல்நாள் சுவாமி விவேகானந்தர், இரண்டாம் நாள் சகோதரி நிவேதிதா, மற்றும் மூன்றாவது நாள் மகாகவி பாரதி என உரைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி “சான்றோர் சிந்தனை” என்ற பெயரில் தினமும் நான்கு நிமிடங்கள் காலை 5.55 மணிக்கு ஒலிபரப்பாகும். இதன் ஒலிப்பதிவு புதன்கிழமை 20-11-1991 அன்று சென்னை வானொலி  நிலையத்தில் நடக்கும். வழக்கம்போல் உங்கள் குறைவற்ற கருணை என்னை பேச வைக்கிறது. இந்த சாது உங்கள் ஆசிக்காக பிரார்த்திக்கிறான். டிசம்பர் 9, 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் இதன் ஒலிபரப்பு நடக்கும் முன்னர் உங்களுக்கு மீண்டும்  தெரிவிக்கிறோம். 

மும்பையை சேர்ந்த திரு. M.W. கரேக்கர் நமது ராம்நாம் பணியில் தீவிரமாக பங்குபெற்று வருகிறார். அவர் இன்று காலை மனைவி மற்றும் பேரனோடு வந்திருந்தார். ஆனால் புயலின் காரணமாக அவர் அங்கு வராமல் மும்பைக்கு நாளை திரும்புகிறார். அவர் தனது நமஸ்காரத்தையும்  உங்கள் ஆசிக்கான அவரது  பிரார்த்தனையும் உங்களுக்கு தெரிவிக்க சொன்னார். அவர் உங்களின் தரிசனத்திற்காக மீண்டும் வர இயலும் என நம்புகிறார். 

உங்கள் கருணை மற்றும் ஆசியால் விவேக் மற்றும் நிவேதிதா தங்கள் தேர்வுகளை சிறப்பாக செய்துள்ளனர். திருமதி. பாரதி, டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். திருமதி. வள்ளியம்மை ஆச்சி எங்களின் மோனோ ஃபோட்டோ ஃபிலிம் செட்டர் வைப்பதற்கான ஒரு இடத்தை தந்துள்ளார்கள். நாங்கள் அந்த இடத்திற்கு சென்று, அது எங்களின் இடத்திற்கு அருகே வசதியாக இருப்பதை பார்த்தோம். அவரும் தனது நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். ”

நவம்பர் 19, 1991 செவ்வாய்க்கிழமை சென்னை டிவைன் லைஃப்  சொஸைட்டியின்  சுவாமி விமலானந்தா இந்த சாதுவை சந்தித்தார்.. இந்த சாது சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதியான ஜஸ்டிஸ் ராஜூ அவர்களை யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் சிறப்புமிக்க விருந்தினராக அழைத்தார். புதன்கிழமை, சாதுவின் வானொலி சொற்பொழிவை, திரு. சக்தி ஸ்ரீனிவாசன் மற்றும் கலா ரவி ஒலிப்பதிவு செய்தனர். திரு. பாலகுமாரன் மாலையில் தொலைபேசி மூலம் அழைத்து, தனது யோகி இல்லத்திற்கான பயணம் பற்றி குறிப்பிட்டார். வியாழக்கிழமை அன்று அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஸ்மித் மற்றும் விவேகானந்தா கல்லூரியின் மாணவரான, கொரியாவை சேர்ந்த திரு  நாம், இந்த சாதுவை காண வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை நவம்பர் 22 அன்று திரு.பாலகுமாரன் அவரது புத்தகத்தின் பிரதி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். அந்த புத்தகம் யோகியால் கையொப்பமிடப்பட்டு இந்த சாதுவிற்கு கொடுப்பதற்காக வழங்கப்பட்டிருந்தது. அடுத்தநாள் காலை, லீ லோசோவிக் மற்றும் அவரது குழுவின் ஒன்பது நபர்களும் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தனர். திரு.பாலகுமாரன் எங்களோடு காலை உணவிற்கு இணைந்தார். லீயின் குழுவினர் மாலையில் சாதுவின் இல்லத்தில் நடந்த சத்சங்கத்தில் கலந்து கொண்டனர். பிறகு அவர்கள் சாது  உடன் திருவல்லிக்கேணியில் உள்ள சிவானந்த சத்சங்க பவனத்திற்கு வந்து, அங்கு நடைபெற்ற ராமநாம சத்சங்கத்தில் கலந்துகொண்டனர். சாதுஜி, லீ, மற்றும் சுவாமி விமலானந்தா பக்தர்களிடம் உரையாற்றினர். நவம்பர் 24 அன்று சாது சஞ்சய் மன்சந்தா என்பவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பை திருவண்ணாமலையில் இருந்து பெற்றார். பகவான் லீ யின் நிகழ்ச்சி குறித்த தகவலை சாதுவிடம் கேட்டு அறியுமாறு சொன்னதை பகிர்ந்தார். லீ யின் குழுவினர் சாதுவின் இல்லத்தில் நடந்த மாலை சத்சங்கத்தில் கலந்து கொண்டதோடு சாதுவுடன் இரவு உணவையும் உட்கொண்டனர். 

நவம்பர் 25 திங்கள்கிழமை அன்று சுவாமி விமலானந்தா, ஜஸ்டிஸ் சடையப்பன், ராக்கால் சந்திர பரமஹம்சா மற்றும் லீயின் குழுவினர் சாதுவின் இல்லத்திற்கு காலையில் விஜயம் செய்தனர். பின்னர் சாது லீயின் குழுவினரை திருமுல்லைவாயில் வைஷ்ணவி கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கே பகவானின் பக்தர்களான அன்னை வசந்தி மற்றும் சுவாமி தேவானந்தா ஆகியோரை சந்தித்தனர். திரு.D.S. கணேசன் எங்களோடு இணைந்தார் . நாங்கள் கிருஷ்ணாஸ்ரமம் பயணித்து பிறகு திருவல்லிக்கேணி திரும்பினோம். நீலகிரியின் பக்தர்கள் மாலை சத்சங்கத்தில் இணைந்தனர். அடுத்தநாள் காலை சஞ்சய் மன்சந்தா திருவண்ணாமலையில் இருந்து தொலைபேசி மூலம் மீண்டும் சாதுவை தொடர்பு கொண்டு லீயின் பயணம் குறித்து கேட்க, சாது லீயின் குழுவினர் நாகர்கோவிலுக்கு கிளம்புவதாக கூறினார். புதன்கிழமை, நவம்பர் 27, 1991 அன்று சாது ஒரு விரிவான கடிதத்தை பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

திரு. பாலகுமாரன் மூலம், நீங்கள் இந்த சாதுவின் பெயரை எழுதி ஆசீர்வதித்து தந்த, பாலகுமாரன் எழுதிய, “விசிறி சாமியார் – கதைகளும் கவிதைகளும்” என்ற நூல் கிடைத்தது.  இந்த தாழ்மையான சீடன் தனது மகிழ்வை தெரிவிக்க வார்த்தைகள் இன்றி இருக்கின்றான். திரு. பாலகுமாரன் இந்த சாதுவை வெள்ளிக்கிழமை இரவு சந்தித்து இந்த விலைமதிப்பற்ற பரிசை வழங்கினார். 

திரு. லீ லோசோவிக் மற்றும் எட்டு பேர் சனிக்கிழமை காலை வந்திருந்தனர். அந்த குழுவைச் சேர்ந்த ஒருவர் இரண்டுநாள் முன்னதாகவே வந்திருந்தார். அனைவரும் இந்த சாதுவுடன் நேற்று மதியம் வரை இருந்தனர். திரு.பாலகுமாரன் இவர்களை எனது இல்லத்தில் சனிக்கிழமை காலை சந்தித்தார். இந்த சாது, மற்றும் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு, இவர்கள் தங்கியிருந்த போது இவர்களுக்கு விருந்தோம்பலை மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைத்தன. சனிக்கிழமை மாலை, இவர்களை வரவேற்க, திருவல்லிக்கேணி சிவானந்தா பவனத்தில், நாங்கள் ஓர் சிறப்பு ராம்நாம் சத்சங்கத்தை நடத்தினோம். சிவானந்தா ஆசிரமத்தின் தலைவர் சுவாமி விமலானந்தா தலைமையேற்றிருந்தார். சுவாமி விமலானந்தா, லீ மற்றும் இந்த சாது போன்றோர் ராமநாம் மகிமை மற்றும் தங்களைக்குறித்தும் பேசினோம். ஞாயிற்றுக்கிழமை லீ மற்றும் உடன் வந்தவர்கள் காஞ்சிபுரம் பயணித்தனர். திங்கள்கிழமை இந்த சாது அவர்களை திருமுல்லைவாயில் ஸ்ரீ வைஷ்ணவி கோயிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே மாதாஜி வசந்தி மற்றும் சுவாமி தேவானந்தா எங்களை வரவேற்றனர். அந்த நாளை நாங்கள் அவர்களுடன் செலவழித்தோம். நேற்று மதியம், லீ குழுவினர் அனைவரும் நாகர்கோயில் சென்றனர். திரு. சஞ்சய் மன்சந்தா, தங்களின் உத்தரவுபடி எங்களை தொலைபேசியில் அழைத்தவர், உங்களிடம் அவர்களின் நிகழ்ச்சிநிரல்களை பகிர்ந்திருப்பார் என நம்புகிறேன். டிசம்பர் 6 வரை அவர்கள் கன்னியாக்குமரி மாவட்டத்திலும், டிசம்பர் 7, 8 மற்றும் 9-ல் அவர்கள் காஞ்சங்காடு ஆனந்தாஸ்ரமத்திலும், திருவண்ணாமலையில் டிசம்பர் 10, 11 மற்றும் 12-லும் இருப்பார்கள். அவர்கள் டிசம்பர் 13 அன்று இங்கே திரும்பி தங்கள் அமெரிக்க விமானத்தை டிசம்பர் 14 அன்று பிடிப்பார்கள். 

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மூலம் நடைப்பெற்று வருகிறது. இத்துடன் விழாவின் தமிழ் நோட்டீஸ் இணைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30, முதல்நாள்  கொண்டாட்டங்கள் கணபதி ஹோமத்துடன் தொடங்கும். அதனை தொடர்ந்து ராமநாம ஜபம், திரு. M.R. நாகசுப்பிரமணியன் அவர்களின் ஹரிகதா கலாட்சேபம், மற்றும் திருக்கோயிலூர் திரு. K.S. வெங்கடரமணி மற்றும் ஸ்தலபதி திரு. A. சௌந்திர்ராஜன் அவர்களின் பஜனை ஆகியவை நடைபெறும். மாலையில் நடைபெறும் ராம நாம மாநாட்டில், தபோவனம் D.S.சிவராமகிருஷ்ணன், சென்னை  வானொலி நிலைய திரு. சக்தி சீனிவாசன், கோவிந்தபுரம் திரு. M. கிருஷ்ணசாமி, மற்றும் எழுத்தாளர் திரு. “நாடோடி”  போன்றோர் பேசுவார்கள். முசாபர்நகர் கல்யாண் ஆசிரமத்தின் சுவாமி கல்யாணந்தாஜி தலைமையேற்பார். ஜெயந்தி நாளன்று விழாவானது ஆயுஷ் ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ராம பூஜா மற்றும் ராமநாம் ஜபம், அதனை தொடர்ந்து வேத பாராயணம் நடைபெறும், ஹரிகதா கலாட்சேப நிபுணர்கள் திரு. ஜவன்திநாதன் மற்றும் திரு. K. கல்யாணராமன் போன்றோர் உரை நிகழ்த்துகின்றனர்.  மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தின் மாண்புமிகு ஜஸ்டிஸ் D. ராஜூ, ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி  மாண்புமிகு ஜஸ்டிஸ் N. கிருஷ்ணசாமி ரெட்டி, லக்னோ சுவாமி ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானின் தலைவரான  திரு. ராமகிருஷ்ண லால், உயர்நீதி மன்ற வழக்கறிஞர் மற்றும் தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவரான திரு. S.சம்பத்குமார், “அமுதசுரபி” இதழின் எடிட்டர் திரு. விக்ரமன், மற்றும் திரு. S.V. பாலகுமாரன் உங்களுக்கு பணிவான போற்றுதல் உரைகளை வழங்கியிருக்கின்றனர். இரண்டு நாட்களிலும் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை அகண்ட ராமநாம ஜெபமும் நடக்க இருக்கிறது. இந்த நாம ஜெபம், திருச்சியை சேர்ந்த திரு. P.ராமகிருஷ்ணன் அவர்களின் மேற்பார்வையில் நடக்க இருக்கிறது. 

ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானின் தலைவர் திரு. R.K.லால், திரு.S.K. குப்தா பொது செயலாளர் போன்றோர் லக்னோவில் இருந்து நாளை இங்கே வர இருக்கின்றனர். 70 பக்தர்கள் நீலகிரி, திருச்சி, வேலூர், சிதம்பரம், திருநெல்வேலி மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் நாளை மற்றும் நாளைமறுநாள் வருவார்கள். முஸஃபர்நகர் சுவாமி கல்யாணானந்த ஜி இன்னொரு துறவியோடு நவம்பர் 30 அன்று வருகிறார். 

ஜெயந்திக்கு பின்னர் நமது விருந்தினரான திரு. R.K.லால், திரு. குப்தா மற்றும் இருவர் என்னோடு திருவண்ணாமலைக்கு உங்கள் தரிசனத்தை பெற வருவார்கள். இத்தருணத்திற்காக அவர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். 

எனது தந்தையின் ஸ்ரார்த்தம் நாளை வருகிறது. ஒவ்வொரு வருடமும் இப்புனித நாளில், நான் எனது அங்கு வந்து என் பிரார்த்தனையோடு உங்கள் பாதங்களில் வணங்குவேன் அல்லது விவேக்கை அனுப்புவேன். இந்தமுறை பலதரப்பட்ட விருந்தினர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள்  வருவதால் இந்த சாதுவால் சென்னையை விட்டு நீங்க முடியவில்லை. நீங்கள் எனக்கு ஒரு ஆன்மீக தந்தையாக இருந்து, நான் அங்கே நேரிடையாக வராத போதிலும் நீங்கள் என்னை ஆசீர்வதிப்பீர்கள் என்று இந்த சாது, உறுதியாக இருக்கிறேன். சிரஞ்சீவி. விவேக் தனது தேர்வுகளை சிறப்பாக எழுதியுள்ளான். ஆனால் தேர்வுக்குப்பின் அவன் மலேரியாவால் பாதிக்கப்பட்டு, இன்று அவன் நலமாக இருக்கிறான். ஆயினும் அவன் பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு தகுதியுடையவனாக ஆகவில்லை. எனவே இந்த சாது ஜெயந்தி முடிந்தப்பின் நேரில் வந்து தங்கள் ஆசியை பெறுவான். நாங்கள் அங்கே வரும் முன் எழுதுகிறோம். 

உங்கள் ஆசியையும், கருணையையும் ஜெயந்தி விழாவின் வெற்றிக்கு கோருகிறோம். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் குமாரி நிவேதிதா, பாரதி போன்றோர் ஜெயந்தி ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் தங்களது நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

திரு. R.K. லால் மற்றும் திரு. குப்தா லக்னோவில் இருந்து நவம்பர் 28 அன்று வந்தனர். நீலகிரி மற்றும் பிற இடங்களில் இருந்து பக்தர்களும், ராம்நாம் இயக்கத்தின் கார்யகர்த்தாக்களும் வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் தங்குவதற்கான வசதி அலமேலு மங்கா சேஷ மஹாலில் ஏற்பாடு ஆகியது. யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கான தயாரிப்புக்கள் அயோத்யா அஸ்வமேதா மண்டபத்தில் நடைப்பெற்றன. 

நவம்பர் 30, 1991 சனிக்கிழமை யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா துவங்கியது. சாதுஜியை பூரண கும்பம் அளித்து அயோத்யா அஸ்வமேதா மண்டபத்தில் வரவேற்றனர். கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. நீலகிரியை சேர்ந்த பக்தர்கள் ராம்நாம் ஜபத்தை உச்சரித்தனர். திரு. வெங்கடரமணி அவர்களின் பஜனை, மற்றும் திரு. நாகசுப்பிரமணியம் அவர்களின் ஹரிகதை நடைபெற்றன. முஸஃபர்நகர் கல்யாண் ஆசிரமத்தை சேர்ந்த சுவாமி கல்யாணானந்தா மற்றும் சுவாமி லலிதானந்தா மதியம் வந்தனர். 

நீலகிரி பக்தர்கள் மாலையில் பஜனையை படுகர் பாரம்பரியத்தில் நடத்தினர். அதனை தொடர்ந்து ராம்நாம் மாநாட்டில் சுவாமி கல்யாணனந்தா, சுவாமி லலிதானந்தா, திரு. சக்தி ஸ்ரீனிவாசன் மற்றும் திரு. கிருஷ்ணசாமி உரையாற்றினர். சில எதிர்பாராத அரசியல் நிகழ்வின் காரணமாக நகரத்தில் விளைந்த குழப்பத்தின் காரணமாக, அஸ்வமேதா மண்டபத்தின் வெளியே சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக, மாநாடு வேகமாக முடிக்கப்பட்டு அனைத்து பக்தர்களும் பாதுகாப்பாக அவர்கள் இல்ல்ங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். 

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி டிசம்பர் 1 1991 அஸ்வமேதா மண்டபத்தில். மங்களகரமான முறையில் துவக்கப்பட்டது. பக்தர்கள் குவிந்தனர். வேத விற்பனர்கள் ஆயுஷ் ஹோமம், ஆவஹந்தி ஹோமம் போன்றவற்றை நடத்தினர். நீலகிரியில் இருந்து வந்தவர்கள் ராமநாமஜபம் நடத்தினர் அதனைத் தொடர்ந்து வேதபாராயணம் இஷ்டசித்தி விநாயகா வேத பாராயண சபாவின் வித்யார்த்திகளால் நடத்தப்பட்டது. திரு. ஜம்புநாதன் தியாகராஜ சுவாமிகள் குறித்து கதாகலாட்சேபம் நிகழ்த்தினார். திருமதி. வள்ளியம்மை, சுவாமிகளுக்கான பிக்ஷையை ஏற்பாடு செய்திருந்தார். டாக்டர் ராஜலட்சுமி அவர்கள் பக்தர்களுக்கான விருந்தினை கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் கூட்டம் ஒன்றில் புதிய அலுவலக பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் பணி, ராம்நாமத்தை பரப்ப திட்டம், போன்றவை குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. 

மாலையில், ஜெயந்தி விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், மிக அதிகளவு கூட்டம் மற்றும் பகவானின் விஐபி பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நீலகிரி பக்தர்களின் பாரம்பரியம் மிக்க படுகர்களின் நாட்டுப்புற நடனத்துடன் துவங்கியது. உயர்நீதி மன்றத்தின் மாண்புமிகு நீதிபதி திரு. ராஜூ விழாவிற்கு தலைமை தாங்கினார். சாதுஜி விருந்தினர்களை வரவேற்றார். ஜஸ்டிஸ் ராஜூ பகவானுக்கு தனது பெரும் மரியாதையை செலுத்தினார். திரு.பாலகுமாரன், திரு. சம்பத்குமார், திரு.R.K.லால், சுவாமி கல்யாணானந்தா போன்றோரும் கூட்டத்தினரிடையே உரையாற்றினர். டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன் நன்றியறிவித்தார். விஐபிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. திருமதி வள.ளியம்மை, டாக்டர் ராஜலட்சுமி, திரு K.N.வெங்கடராமன் மற்றும் நீலகிரியை சேர்ந்த பக்தர்கள், திரு.தங்காடு மோகன் போன்றவர்களுக்கும் விழா கொண்டாட்டங்களை வெற்றிகரமாக நடத்திய மைக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

டிசம்பர் 2, திங்கள்கிழமை சுவாமிஜி மற்றும் வட இந்திய விருந்தினர்கள்,  சாதுவின் இல்லத்தில் நடைபெறும் நித்திய மாலை சத்சங்கத்தில் கலந்து கொண்டு, அடுத்தநாள் காலை திருவண்ணாமலையில் உள்ள பகவானின் இல்லத்திற்கு செல்ல தயாரானார்கள். ஒரு வேன் திருவண்ணாமலைக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. டிசம்பர் 3 மதியம், சாது உடன் திரு.லால், திரு. குப்தா, சுவாமி கல்யாணானந்தா, சுவாமி லலிதானந்தா, டாக்டர். ராஜலட்சுமி, திருமதி. பாரதி, சிரஞ்சீவி விவேக் மற்றும் குமாரி நிவேதிதா திருவண்ணாமலைக்கு சென்றனர். செல்லும் வழியில் மதுராந்த்த்தில் நாங்கள்  ஸ்ரீ ராமர் கோவிலுக்கு சென்றோம். நாங்கள் யோகி ராம்சுரத்குமார் இல்லத்திற்கு இரவு 8 மணிக்கு அடைந்தோம். யோகி எங்கள் அனைவரையும் வரவேற்றார். சாதுஜி அனைவரையும் அறிமுகப்படுத்தி ஜெயந்தி குறித்த ஒரு விரிவான அறிக்கையை யோகியிடம் சமர்ப்பித்து, விழா வெற்றிகரமாக குருவின் அருளால் நடந்தது என்று கூற யோகி, “அனைத்தும் தந்தையின் கருணையே“ என்றார். யோகி சுவாமி கல்யாணானந்தா, சுவாமி லலிதானந்தா, திரு. R.K.லால், மற்றும் திரு. குப்தாஜி போன்றோரின் இடம், அவர்கள் பணி குறித்து யோகி ஆர்வத்தோடு விசாரித்தார். 

சாதுஜி பகவானிடம் “விவேகானந்தா கேந்திர பத்திரிகா” என்ற இதழின் சிறப்பிதழான, “யக்ஞம் – வாழ்வின் அடிப்படை” என்ற இதழை வழங்கினார். அந்த இதழில் சாதுவின் கட்டுரையான, “ஆத்மாஹுதி -– சுயத்தின் தியாகம்“ வெளியிடப்பட்டிருந்தது. குரு அந்த தலைப்பை பார்த்து திரும்பத் திரும்ப உச்சரித்தார். பின்னர் அவர் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தியில் பங்கு பெற்றவர்கள் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். திரு. பாலகுமாரன் சாதுவை சந்தித்தாரா என வினவினார். சாது திரு. பாலகுமாரன் தன்னை சந்தித்து குரு கையொப்பம் இட்டு தந்த புத்தகத்தை தன்னிடம் ஒப்படைத்ததாக சாது கூறினார். ஜெயந்தி விழாவில் அவர் கலந்து கொண்டதும் குறிப்பிட்டார். பகவான் சாதுவிடம் நீலகிரி பக்தர்கள் அவர்கள் ஊருக்கு திரும்பும் முன் இங்கு வந்து தரிசனம் பெற்று சென்றதாக கூறினார். சாதுஜி டாக்டர் ராஜலட்சுமி அவர்களை யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் துணைத்தலைவர் என அறிமுகப்படுத்தினார். யோகி அவரின் முதுகில் தட்டி ஆசீர்வதித்தார். நாங்கள் சுவாமி சச்சிதானந்தா அவர்களிடம் இருந்து வந்த இனிப்பை தந்துவிட்டு அவரிடம் இருந்து வந்த கடிதம் ஒன்றை படிக்கத் துவங்கினோம். பகவான் இனிப்பை பாரதியிடம் தந்து அதனை அனைவருக்கும் தருமாறு கூறினார். பகவான் நிவேதிதா யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவிற்காக துடிப்புடன் செயல்பட்டமை குறித்து தனது மகிழ்வை வெளிப்படுத்தினார். விவேக்கின் உடல்நிலை முன்னேற்றம் குறித்தும் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். சாது, வள்ளியம்மை மோனோ ஃபோட்டோ ஃபிலிம் செட்டருக்கு தந்த இடம் குறித்தும், லீ லோசோவிக் அவர்களின் நிகழ்ச்சி நிரல் குறித்தும் விளக்கினான், ‘தத்துவ தர்சனா’வின் யோகி ஜெயந்தி சிறப்பிதழ் அச்சில் இருப்பதாகவும் அது டிசம்பர் 13 ஆம் தேதி வெளிவரும் என்றும் தகவல் பகவானிடம் பரிமாறப்பட்டது. பகவான் சாதுவிடம் லீ யின் ஒரு கவிதை கடிதத்தை தந்து, அதனை படிக்குமாறு கூறினார். யோகி, “பாலஜோதிடம்”  பத்திரிகை கி.வா.ஜ வின் யோகி ராம்சுரத்குமார் பாடல்களை வரிசைப்படுத்தி வருவதாக சாதுவிடம் கூறினார். எங்களோடு இரண்டு மணி நேரங்களை செலவழித்தப்பின் யோகி எங்களுக்கு விடை கொடுத்து அடுத்தநாள் காலை 10 மணிக்கு வருமாறு கூறினார். நாங்கள் உடுப்பி பிருந்தாவன் லாட்ஜில் தங்கினோம்.

அடுத்தநாள் காலை சாதுஜி, பாரதி, விவேக், நிவேதிதா மற்றும் டாக்டர். ராஜலட்சுமி இவர்களுடன் கிரிபிரதட்சணம் செய்தார். அமிர்தசரை சேர்ந்த திரு. ராஜேந்திர கன்னா எங்களோடு இணைந்தார். அடி அண்ணாமலைக்கு சென்று பகவானின் பக்தரின் டீக்கடையில் டீ சாப்பிட்டோம். நாங்கள் அருணாச்சலேஸ்வரர் கோயில் வந்தடைந்தபோது சுவாமி கல்யாணானந்தா, சுவாமி லலிதானந்தா, திரு. RK.லால் மற்றும் திரு. குப்தா எங்களோடு இணைந்தனர். குருக்கள் ரமேஷ் எங்களை வரவேற்றார். கோயிலின் தரிசனத்திற்கு பின் நாங்கள். பகவானின் இல்லத்தை 10 மணிக்கு அடைந்தோம். அங்கே பெரும் கூட்டம் இருந்தபோதிலும் பகவான் எங்களை வரவேற்று அவரின் முன் அமர வைத்தார். யோகி சாதுவிடம் சுவாமிஜிக்கள் எப்படி தொடர்பில் வந்தனர் என வினவினார். திரு. R.K.லால் சாதுஜி பங்கேற்ற சுவாமி ராம்தீர்த்தா ஜெயந்தி விழாவில் சுவாமிஜிக்களும் கலந்து கொண்டதாக கூறினார். பகவான் சாதுவிடம் ‘விவேகானந்தா கேந்திர பத்திரிக்கா’வில் வந்த சாதுவின் கட்டுரையை படிக்குமாறு சொன்னார். சாது நாமஜபம் குறித்து எழுதிய பத்திக்கு வருகையில், அவர் மீண்டும் அதனை படிக்க சொன்னார். சாது அதனை படித்தார் “ஜப யோகமே ஒருவர் வாழ்க்கையின், எந்த நிலையிலும், எந்த இடத்திலும் ஒருவரது ஆன்மீக முன்னேற்றத்திற்கு பின்பற்றக்கூடிய எளிய வழியாகும். ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அமைதி, மகிழ்ச்சியை தர நாம ஜபமே நிச்சயமாக உறுதியான  மார்க்கமாக பரிந்துரைக்கப்படுகிறது. கேரளாவின் காஞ்சன்காட்டின், ஆனந்தாஸ்ரமத்தை சேர்ந்த மாதாஜி கிருஷ்ணாபாய் சமீபகாலத்தில் மிகப்பெரிய ஜப யக்ஞமாக 15, 500 கோடி முறை ராமநாம தாரக மந்திரமான ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் என்பதை சொல்வதை துவக்கினார். தெய்வீக அன்னையின் மஹா சமாதிக்கு பிறகு ராம்நாம் தாரக மந்திரத்தை ஜபிக்க பெரிய உலகளாவிய இயக்கம் ஒன்று திருவண்ணாமலையின் கடவுளின் குழந்தை யோகி ராம்சுரத்குமார்  அவர்களால் துவக்கப்பட்டது. சுவாமி ராம்தாஸ் அவர்களின் சீடரான இவர், ராம நாமத்தை ஜபிப்பது ஒரு பெரும் வேள்வி. இந்த மகா யக்ஞத்தில் பங்கு கொள்வது எனது குரு சுவாமி ராம்தாஸ் அவர்களிடம் இருந்து தீக்ஷை பெறுவதற்கு இணையானது” என்கிறார். 

பகவான் சாதுவிடம் சுவாமி சச்சிதானந்தா எழுதிய கடிதத்தை படிக்கச் சொன்னார். நிவேதிதா பகவானின் பெயரை பாடத்துவங்கினாள். நாங்கள் அதில் இணைந்தோம். பகவான் எப்போதும் புகைத்தவாறே இருந்தார். பின்னர் அவர் லால் இடம் திரும்பி சுவாமி ராம்தீர்த்தா ப்ரதிஷ்டானில் அவரது பணி குறித்து கேட்டார். பின்னர் அவர் சுவாமிஜிகளை நோக்கி அவர்களின் ஆசிரமம் மற்றும் குரு பற்றி கேட்டார். சுவாமி லலிதானந்தா தனது குரு இன்னமும் உயிரோடு இருப்பதாக கூறினார். சுவாமி கல்யாணானந்தா தனது குரு ப்ரம்மலீன் ஸ்வரூபானந்தா என்றார். சுவாமிஜி பகவானிடம், ‘ப்ராஹ்மி ஸ்திதி‘ என்பது குறித்து கேட்டார். பகவான் புன்னகைத்து பதிலளித்தார்: “ஹம்  இஸ்கே பாரே மே குச் நஹி ஜான்தே . இஸ் பிகாரி கே குருஜி னே ஹம் கோ ஏக் ஹீ பாத் சிகாயா. வோ யஹி மந்த்ர ஹைஓம் ஸ்ரீ ராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம் ! இஸ் பிகாரி கே குருஜி நே இத்னா ஹீ கஹா : “இஸ் மந்த்ர கோ ஜாப்த்தே ரஹனா. ஹம்  உன் கே ஆதேஷ் கோ மான்தே ஹை  அவுர் ஹம் ஆச்சரண்  கர்தே ரஹ்த்தே ஹை. அவுர் குச் ஹம் நஹி ஜான்தே.” — “எங்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாது. இந்தப் பிச்சைக்காரனின் குருஜி ஒரே ஒரு விஷயத்தை எமக்கு கற்பித்தார். அது இந்த மந்திரம் – ‘ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!’ இந்த பிச்சைக்காரனின் குருஜி இவ்வளவுதான் சொன்னார். “இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்து கொண்டிரு”  என்றார். நாங்கள் அவரது உத்தரவை பின்பற்றி செயலாற்றி வருகிறோம். வேறெதுவும் எங்களுக்கு தெரியாது.” பகவான் சிறிது நேரம் நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார். “இந்தப்பிச்சைக்காரன் அவனது குருவின் கட்டளையை ஏற்றதே போதுமானது. அவன் மோட்சம் அல்லது ப்ராஹ்மி ஸ்திதி‘  போன்ற எது குறித்தும் கவலை கொள்ளவில்லை. தந்தையின் கட்டளையை ஏற்றால் போதும், மற்றவற்றை பப்பா ராம்தாஸ் பார்த்துக்கொள்வார். இந்தப்பிச்சைக்காரன் மோட்சத்திற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டாம்.” பின்னர் யோகி இந்த சாதுவை பார்த்து சிரித்தவாறே, “குருவின் கட்டளையை பின்பற்று. நீ எந்த முயற்சியையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. குரு அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என்றார். குரு தந்த எந்த பெயரானாலும் அது நாம ஜபத்திற்கு போதுமானது. ராமா, கிருஷ்ணா, அல்லது சிவா – அதனை நாம் தொடர்ச்சியாக சொல்லும் போது அதுவே போதுமான சாதனா ஆகும் என்றார். யோகி லலிதானந்தாவிடம் அவர் கூறும் நாம ஜெபம் என்ன என்று வினவினார். லலிதானந்தா தான் எந்த நாமஜெபமும் சொல்வதில்லை என்றும் ஆனால் தான் ‘சொரூப தியானம்’ செய்வதாகவும் கூறினார். பகவான் புன்னகைத்து அவரிடம், , யஹ் பிகாரி வோ சப் நஹி ஜான்தே யா சமஜ் சக்தே. வோ தோ பஹுத் படே பாத் ஹை” – “ஓ, இந்தப்பிச்சைக்காரனுக்கு இவையெல்லாம் தெரியாது அல்லது அவைகளை புரிந்து கொள்ள தெரியாது. அது ஏதோ மிகப் பெரிய சமாச்சாரம்.“ பகவான் பின்னர் அவரிடம், “உங்களது குரு உங்களை அதனை செய்யுமாறு கூறியிருந்தால் அதனை செய்யுங்கள். குரு என்ன செய்யச் சொன்னாரோ அதனை செய்ய வேண்டும்“ என்றார். மேலும் அவர், “இந்தப்பிச்சைக்காரனின் குரு இவனை நாம ஜெபம் மட்டுமே செய்ய சொன்னார்.“ பின்னர் அவர்  கபீர், துளசிதாஸ் மற்றும் சூர்தாஸ் ஆகியோர் நாம ஜபத்தின் சிறப்பை பற்றி கூறியுள்ளவைகளை எடுத்துரைத்தார். இந்தக்காலத்திற்கு இதுவே எளிய வழி என்றார். கன்னா லலிதானந்தரிடம் சொரூப தியானம் என்றால் என்ன என வினவினார். பகவான் இடைமறித்து கன்னாவிடம் அவரது குரு யாரென கேட்டார். அவர் பதிலளித்த போது, பகவான், “நீ உனது குருவின் அறிவுரையை பின்பற்று. ஒவ்வொருவரும் அவரவர் குருவை பின்பற்ற வேண்டும்” என்றார். 

12 மணி ஆனவுடன் பகவான் கூட்டத்தை முடிக்க நினைத்தார். அனைவரையும் ஆசீர்வதித்த யோகி, வழக்கம்போல் சாதுவின் தண்டம் மற்றும் பிக்ஷா பாத்திரம் ஆகியவைகளை ஆசீர்வதித்து கொடுத்தார்.. இந்த சாது நூறு ரூபாய் ராஜலட்சுமி இடம் இருந்து பெற்று, பகவானிடம் காணிக்கையாக தந்து, “என் தந்தையின் சிரார்த்தம் கடந்த 28 ஆம் தேதி நடந்தது.  ஜெயந்தி வேலைகளில் மும்முரமாக இருந்தமையால் என்னால் வழக்கம்போல் இங்கே வர இயலவில்லை” என்றான். யோகி தந்தையின் பெயரைக் கேட்டார். சாது, “S.R. வேணுகோபாலன்“ என பதிலளித்தார். பகவான், “உன் தந்தை இதனை ஏற்றுக் கொண்டார்“ என்று கூறி சாதுவை மீண்டும் ஆசீர்வதித்தார். கன்னா யோகியை அமிர்தசர்க்கு அழைத்தார். யோகிஜி சிரித்தவாறே, “பல நிகழ்வுகள் பஞ்சாப்பில் நடக்கின்றன, இந்தப்பிச்சைக்காரன் அங்கே வர அச்சப்படுகிறான்” என்றார். கன்னா யோகியிடம், “இல்லை மஹராஜ், நான் உங்களை பத்திரமாக அழைத்துச் செல்கிறேன்” என்று கூற பகவான் சிரித்து ஆசீர்வதித்தார். ராஜேஷ் யோகியை புகைப்படம் எடுக்க விருப்பம் தெரிவித்தார். யோகி, “இல்லை என்னை மன்னிக்கவும்” என்றார். பின்னர் எங்களை வாசல்வரை வந்து வழியனுப்பினார். நாங்கள் அவர் பார்வையில் இருந்து மறையும்வரை அவர் வாசற்படியில் நின்று கொண்டிருந்தார். எங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு நாங்கள் சென்னைக்கு இரவு 8.30 மணிக்கு திரும்பினோம். 

டிசம்பர் – 5, வியாழக்கிழமை பிரான்ஸில் இருந்து கிருஷ்ணா கார்செல் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மாலையில் சத்சங்கத்திற்குப்பின் உ.பி.யில் இருந்து வந்த சுவாமிஜிக்கள் விடைப்பெற்றனர். சாது, அவர்களுக்கு டாக்டர். ராஜலட்சுமி அளித்த அன்பளிப்புகளை வழங்கி அவர்களை வழியனுப்பி வைத்தான். டிசம்பர்  7, சனிக்கிழமை அன்று சாது திரு. R.K.லால் மற்றும் திரு. குப்தா அவர்களை வைஷ்ணவி கோயில் திருமுல்லைவாயிலுக்கு அழைத்துச் சென்று மாதாஜி வசந்தி அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அடுத்தநாள் அவர்கள் பாரதியுடன் பார்த்தசாரதி மற்றும் ராகவேந்திரா கோயிலுக்கும் மற்றும் சிவானந்தா ஆசிரமத்திற்கும் சென்றனர். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினர் மாலையில் சந்தித்து சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி குறித்து கலந்துரையாடினர். டிசம்பர் 9 திங்கள்கிழமை அன்று அகில இந்திய வானொலி நிலையம், “சான்றோர் சிந்தனை“ என்ற நிகழ்ச்சியில் திட்டமிட்டது போல் சாதுவின் சொற்பொழிவுகளை ஒலிப்பரப்ப துவங்கியது. லீ மற்றும் அவரது குழுவினர் கன்னியாக்குமரியில் இருந்து வெள்ளிக்கிழமை டிசம்பர் 13 அன்று திரும்பினர். டேவிட் ஸ்மித் தவிர்த்து மற்ற அனைவரும் அமெரிக்காவிற்கு இரவு கிளம்பினர். சாது சுவாமி சச்சிதானந்தா அவர்களுக்கு, டிசம்பர் 14 அன்று, யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி வெற்றிகரமாக நிகழ்ந்தது குறித்து கடிதம் எழுதினார். ஞாயிற்றுக்கிழமை ஸ்மித் லண்டனுக்கு சென்றார். சாது பகவானுக்கு கடிதம் ஒன்றை டிசம்பர் 16 அன்று எழுதினார்:

பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

திரு. லீ லோசோவிக் மற்றும் அவரது குழுவினர் 13 ஆம் தேதி காலையில் இங்கு வந்து சேர்ந்தனர். திரு. டேவிட் தவிர்த்து மற்ற அனைவரும் அமெரிக்காவிற்கு விமானத்தை 14 ஆம் தேதி பிடித்தனர். திரு. டேவிட் யுனெட்டெட் கிங்டமிற்கு நேற்று இரவு பயணித்தார். 

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் பள்ளிகளுக்கிடையேயான சுவாமி விவேகானந்தர் பற்றிய பேச்சுப் போட்டியை, யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயம்  மற்றும் கோப்பைகளை ஜூனியர் மற்றும் சீனியர் நிலைகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நடத்த இருக்கிறது. இது குறித்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு உங்கள் ஆசியை வேண்டி பிரார்த்திக்கிறோம். 

திரு.பழனி என்ற சென்னை பக்தர் உடன் இணைக்கப்பட்ட இன்லேண்ட் கடிதத்தை உங்களுக்கு அனுப்புமாறு கூறினார், இக்கடிதம் அவரது மனைவியால் உங்களுக்கு அனுப்பப்பட்டு சரியான முகவரி இல்லை என்று திரும்பி வந்துவிட்டது. 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன் 

இணைப்பு  : மேலே குறிப்பிட்டபடி” 

டிசம்பர் 17, சாதுஜி, டாக்டர்..ராதாகிருஷ்ணன் உடன் குரோம்பேட்டையில் உள்ள திரு. சுந்தரராமன் மற்றும் திரு. குருமூர்த்தி போன்ற பகவானின் பக்தர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களது குடும்ப உறுப்பினர்களை ஆசீர்வதித்தான். டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறப்பு சத்சங்கம் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சத்சங்கத்தால் கூடுவாஞ்சேரியில் நடைப்பெற்றது. பல குழந்தைகளும், பெண்களும் கலந்து கொண்டனர். பகவானின் பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. திரு. V.T. துரைராஜ் ஐ.ஏ.எஸ். பகவானின் பக்தர் அடுத்தநாள் போன் செய்தார். ‘தத்துவ தர்சனா’ யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி மலர் 1991, வெளியாக தயாரானப்பின், சாது ஒரு கடிதம் ஒன்றை குருதேவருக்கு செவ்வாய்க்கிழமை டிசம்பர் 24, 1991ல் எழுதினான்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

இந்த சாது இந்த தகவலை தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறான், ‘தத்துவ தர்சனா’வின் அடுத்த இதழான, “யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி இதழ் 1991“ அச்சிடப்பட்டுவிட்டது. இந்த இதழ் உங்களுக்கு சமர்ப்பிக்க பட இருக்கிறது. லீ லோசோவிக் அவர்களின் கவிதைகள் இந்த இதழில் இருந்து தொடர்ந்து வெளியிடப்படும்.

நாங்கள் இதன் முதல் பிரதியை தங்களின் பாதங்களில் வைத்து ஆசிபெற விரும்புகிறோம். சனிக்கிழமை, 28 ஆம் தேதி டிசம்பர் 1991, அன்று, தென்னக ரயில்வேயின் துணை தலைமை பொறியாளர் (எலக்ட்ரிகல் பிரிவு) மற்றும் டாக்டர் திரு. C.V. ராதாகிருஷ்ணன் அவர்களின் மைத்துனன், திரு. ராமமூர்த்தி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் என்னோடு உங்கள் தரிசனத்தை பெற வருகின்றனர். இவர்கள் ராம்நாம் பணியில் எங்களோடு இணைந்தவர்கள். நாங்கள் ஒரு கார் மூலம் அங்கே மதியம் வந்தடைவோம் என நம்புகிறோம். நாங்கள் உங்கள் தரிசனத்திற்கும் ஆசிகளுக்கும் பிரார்த்திக்கிறோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்

சாது ரங்கராஜன். “

தென் ஆப்பிரிக்காவின் தமிழர் கூட்டமைப்பின் தலைவரான திரு.N.C. நாயுடு தொலைபேசியில்  சாது உடன் தொடர்பு கொண்டார். வைஷ்ணவி கோயிலின் சுவாமி தேவானந்தா வெள்ளிக்கிழமை  வந்தார். டிசம்பர் 28, சனிக்கிழமை அன்று காலையில், விவேக், திரு. ராமமூர்த்தி, பிரசூன்னா ராமமூர்த்தி, மற்றும் வினோத் ஆகியோருடன் திருவண்ணாமலைக்கு சென்று, குருதேவரின் இடத்திற்கு பிற்பகல் 12.15 மணிக்கு சென்றடைந்தோம். பகவான் ஜஸ்டிஸ் ராஜூவுடன் ஒரு வேலையாக இருந்தார். குமாரி.விஜயலட்சுமி, பேரா. தேவகி, பேரா. ராஜலட்சுமி மற்றும் அவளது சகோதரி போன்றோர் வெளியே அமர்ந்து பாடல்களை பாடிக் கொண்டிருந்தனர். நாங்கள் பகவானுக்காக காத்திருந்தோம். அரைமணி நேரம் கழித்து அவர் ராஜூவுடன் வெளியே வந்தார். திரு. ராஜூ சாதுவை வணங்கி விட்டு கிளம்பினார். சாது ‘தத்துவ தர்சனா’ இதழை பகவானின். பாதங்களில் வைத்தார். சாதுஜி ராமமூர்த்தி மற்றும் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினார். சாது குருதேவரிடம் அவரது ஆணைப்படி அலஹாபாத் கங்கா நிகழ்வை ‘தத்துவ தர்சனா’வில் வெளியிட்டிருப்பதாக கூற அவர் சிரித்தவாறே பக்கங்களை புரட்டினார். யோகி லீ யின் பாடல்களை படிக்குமாறு கூறினார். அவர் சிரித்தவாறே இருந்தார். யோகி சாதுவிடம் எத்தனை கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளது என்று கேட்க, சாது “பத்து“ என்று பதிலளித்தார். மற்றவை இனிவரும் இதழ்களிலும் வரிசைக்கிரமம் ஆக்கப்படும் என்றார். யோகி விவேக் இடம் நாங்கள் கொண்டு சென்றிருந்த கட்டிலிருந்து பத்து பிரதிகள் வேண்டுமென கேட்டார். அவைகளைப் பெற்றுக் கொண்டு மேலும் அங்கிருந்த அனைத்து பக்தர்களுக்கும் ஒவ்வொரு பிரதி கொடுக்கச் சொன்னார். 

ராமமூர்த்தி, டாக்டர்.C.V.R க்கு என்ன உறவு என்று பகவான் கேட்டார். சாது பகவானிடம் இருவரின் மனைவிகளும் சகோதரிகள் என்றார். நாங்கள் எங்களின் நித்திய பூஜை பிரசாதம் எவ்விதம் அவரது உடல் நலக்குறைவை குணமாக்கியது என்றும், அதனாலேயே அவர் யோகியின் தரிசனம் பெற விரும்பியதாகவும் பகவானிடம் கூற, யோகி, “அனைத்தும் தந்தையின் ஆசிகள்“ என்றார். பிரசூன்னா பகவானிடம் ராமமூர்த்தியின் கண் குறைப்பாட்டை பற்றி கூறி அவரது ஆசியை தனக்கும் தனது குடும்பத்தினர்க்கும்  வேண்டினர். பகவான் அவர்களை ஆசீர்வதித்தார். வள்ளியம்மை ஆச்சி தனது மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகளோடு வந்திருந்தார். பகவான் விஜயலட்சுமி மற்றும் குழுவினர்க்கு ஆசீர்வாதங்களை தந்து அனுப்பினார். சாது பகவானிடம் வள்ளியம்மை ஆச்சி மகாபலிபுரம் அருகே ஒரு இடத்தை ஆசிரமம் கட்டுவதற்கு காணிக்கையாக தர விரும்புவதாக கூறினான். பகவான் அனைத்தும் தந்தையின் விருப்பப்படி நடக்கும் என்றார். யோகி சாதுவிடம் மோனோ ஃபோட்டோ ஃபிலிம் செட்டர் இயந்திரத்தை இயக்க ஆட்கள் கிடைத்துவிட்டனரா என கேடக, சாது இல்லையென்றும் தான் சிலரை டெல்லியில் இருந்து பெற முயற்சிப்பதாகவும் கூறினான். ஒன்றரை மணி நேரங்கள் எங்களோடு செலவழித்த பகவான் எங்களை அனுப்ப முடிவு செய்தார். யோகி சாதுவின் தண்டம் மற்றும் பிக்ஷை    பாத்திரத்தை வழக்கம்போல் ஆசீர்வதித்து சாதுவிடம் கொடுத்தார். 

நாங்கள் தேவகியின் வீட்டிற்கு சென்று அங்கே பகவானின் பிரசாதங்களை எடுத்துக் கொண்டோம். நாங்கள் ரமணாச்ரமம் சென்றோம். பின்னர் காரில் கிரிவலம் வந்தோம். வழக்கம்போல் பகவானின் பக்தர்கள், முனுசாமி மற்றும் தண்டபாணி, நடத்தும் டீக்கடையில் டீ சாப்பிட்டோம். பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் முடித்துவிட்டு, நாங்கள் திருக்கோயிலூர் சென்றோம். அங்கே திரு. D S. சிவராமகிருஷ்ணன் எங்களை வரவேற்றார். சாது அவரிடம் அவர் திருவண்ணாமலை வந்திருந்தது குறித்தும், இந்த சாதுவின் திருக்கோயிலூர் வருகையை எதிர்பார்ப்பது குறித்தும், பகவான் சாதுவிடம் கூறியதாக பகர்ந்தார். ஞானானந்தா ஆசிரமத்தின் திரு. முத்துவீரப்பன் மற்றும் பிற பக்தர்கள் எங்களை வரவேற்று எங்களோடு நேரத்தை இரவு 7.30 வரை செலவழித்தப்பின் நாங்கள் கிளம்பி சென்னைக்கு நள்ளிரவில் வந்து சேர்ந்தோம். 

Photoயோகி ராம்சுரத்குமார், சாது ரங்கராஜன் மற்றும் R. விவேகானந்தன் ஏப்ரல் – 26 1988ல்  சாதுவின் தீக்ஷை நாளில். 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.24

Glimpses of A Great Yogi in Tamil – Part 2
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – II
சீடன் கண்ட தீக்ஷா குரு

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 2.24 

உ.பி. யில் ராம்நாம் தீயும், கங்கா மாதா மடியில் பகவானின் அற்புதமும்

பகவானின் சொந்த மாநிலம் சாதுவை அழைத்தது. அக்டோபர் 16, 1991 ன் அதிகாலையில், அலஹாபாத்திற்கு சாதுஜி வந்தடைந்தார். திரு. T.S.சின்ஹா மற்றும் அவரது மகன் சாதுவை ரயில் நிலைய சந்திப்பிற்கு வந்து வரவேற்று, தங்கள் ‘இந்து சின்ஹா காட்டேஜ்’ இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். சின்ஹாவின் நண்பர்களும், உறவினர்களும் சாதுவை வரவேற்றனர். சாது, சின்ஹா உடன் கங்கா ஸ்நானத்திற்கு சென்றுவிட்டு, பிறகு சின்ஹாவின் வீட்டுக்கு திரும்பி, பூஜை மற்றும் சத்சங்கத்தை நடத்தினான். அதில் சின்ஹாவின் உறவினர்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர். இரவில், விருந்தளிப்பவர்களுடன் சாதுஜி ராம்லீலா மேளாவை காண கடாரி மொஹல்லாவிற்கு சென்றார். 

டி.எஸ். சின்ஹா பகவானின் குரல் பதிவு செய்யப்பட்ட கேசட்டுகளை, ராம்நாம் சத்சங்கத்தில் ஒலிக்க விடுவதற்காக, பதிவு செய்தார். அக்டோபர் 18, வெள்ளிக்கிழமை அன்று  சாது தனது விரதத்தை முடித்தார். பெரும் சத்சங்கம் திரு. சின்ஹா அவர்களின் பங்களாவில் நடைப்பெற்றது, சாது ஜப மாலைகளை அனைத்து பக்தர்களுக்கும் வினியோகம் செய்தார். 

அக்டோபர் 19, 1991 அன்று சனிக்கிழமை அன்று பகவான் யோகி ராம்சுரத்குமார் நாமத்தின் வலிமையையும், பகவானால் தனக்கு தீக்ஷயாக வழங்கப்பட்ட ராம்நாம் தாரக மந்திரத்தின் ஆற்றலையும், சாது உணர்வதற்கான ஒரு லீலையை பகவான் புரிந்தார். சுக்ல ஏகாதசி நாளின் காலையில் சாது புனித கங்கையில் நீராட விரும்பினார். திரிவேணி, இல்லத்தில் இருந்து தொலைவாகவும், மிகவும் நெரிசல் மிகுந்ததாகவும் இருந்தது. T.S.சின்ஹாவின் மகன் சஞ்சய் சின்ஹா சாதுவை காரில் வீட்டிற்கு அருகில் இருக்கும் ரசூல் காட்டிற்கு அழைத்து சென்றார். முந்தின நாளும் அதே இடத்திற்கு நாங்கள் வந்திருந்தோம். முந்தினநாள் இந்த சாது அந்த இடத்தில் விட்டுவிட்டு சென்ற  செருப்பு அந்த ஆற்றங்கரையில் அவ்விடத்தில் சென்ற இருந்தது. சாது ஆற்றை நோக்கி தனது கையில் தண்டம் மற்றும் தேங்காய் சிரட்டையோடு குளிப்பதற்காக சென்றார். அவர் ஆற்றில் முங்கி குளிக்கும் போது திடீரென ஆற்றின் நடுவே இழுக்கப்பட்டார். சாதுவிற்கு நீச்சல் தெரியாத காரணத்தால் அவர் கரையேற முடியாமல் தத்தளித்தார். சஞ்சய் மற்றும் கரையில் இருந்த சிலர் அதிர்ச்சி அடைந்து, சாதுவை தண்ணீரில் இருந்து காப்பாற்ற அங்கிருந்த சிலரிடம் வேண்டினார்கள். சாது தண்ணீரில் மூழ்கி கொண்டிருக்கையில், “யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், ஜெயகுருராயா!“ என்றும் “ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்“ என்றும் கூறினார். ஓர் அற்புதம் நிகழ்ந்து பகவான் விரைந்து தன் உதவியை செய்தார். திடீரென இரண்டு படகோட்டிகள், இரண்டு நாட்டு படகுகளில் அங்கே வந்தனர். ஒருவர் சாதுவின் தலைமுடியை பிடித்துக் கொண்டார், மற்றொருவர் சாதுவை அவரது கால்களைப் பிடித்து படகுக்குள் இழுத்தார். சஞ்சய் மற்றும் பிறரும் என்ன நடக்கிறது என்று அறிவதற்கு முன், அந்த படகோட்டிகள் சாதுவை கரையில் விட்டுவிட்டு மறைந்தனர். சாது, ஜலசமாதி மூலமாக மரண அனுபவத்தை பெற்று, குருவினால் அவரது காரியங்களை தொடர்ந்து செய்வதற்காக திரும்பக் கொண்டு வரப்பட்டான். வீட்டிற்கு திரும்பிய உடன் இந்த சாது ஜபம் மற்றும் பூஜையை முடித்துவிட்டு தனது நன்றியறிவித்தலை ஒரு கடிதம் மூலம் பகவானுக்கு தெரிவித்து, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்திற்கும் ஒரு நகலெடுத்து அனுப்பினான். அவன் அந்த கடிதத்தை சின்ஹா குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்ற பக்தர்களுக்கும் காட்டினான். பின்னர் பகவானின் ஆணைப்படி அது ‘தத்துவ தர்சனா, ‘ யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி மலர் 1991, நவம்பர் 91 – ஜனவரி 92, இதழிலும் சாதுவின் குறிப்போடு வெளிவந்தது:

அற்புத படகோட்டி

சாது ரங்கராஜன்                                                                                C/o திரு. T.S. சின்ஹா 

ஓய்வு பெற்ற துணை ஆட்சியர்

இந்து சின்ஹா காட்டேஜ் 

D- 73, ஆச்சார்யா நரேந்திரதேவ் மார்க்

                       பிரயாக் – 211002

19-10-1991                                                        

யோகி ராம்சுரத்குமார் 

கடவுளின் குழந்தை 

திருவண்ணாமலை – 606601 

பூஜ்ய ஸ்ரீ குருதேவ், வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

இந்த சாது உங்களின் புனிதமான பாதங்களில் சரணடைந்தது முதல் இந்த தாழ்மையான சீடனின் விதியை விளங்கிக்கொள்ள இயலாத வழிகளில் நீங்கள் வார்த்து வருகிறீர்கள். ரமணர் மரண அனுபவத்தை தனது துறவுக்கு முன் உணர்ந்தார். சுவாமி ராம தீர்த்தா தனது ஜலசமாதி அனுபவத்தை அவரது சன்னியாச வாழ்க்கையின் உச்சத்தில் பெற்றார். இந்த சாது எப்போதும் இந்த அனுபவங்கள் என்னவாக இருக்கும் என வியந்ததுண்டு. நீங்களும், உங்களின் அளவற்ற கருணையால் இன்று இந்த அனுபவங்களை சுவைக்க செய்தீர்கள். ஆனால் நீங்கள் அங்கே என் வாழ்க்கை முடிந்துவிட அனுமதிக்கவில்லை. உங்கள். பணியை செய்வதற்கு எனது வாழ்க்கையை தொடர வைத்தீர்கள். 

இன்று காலை இந்த சாது காலையில் தனது கடமைகளை செய்ய கங்கைக்கு சென்றபோது மரணம் தன்னை பின்தொடர்ந்து வருவதை அறியவில்லை. நேற்று நான் அங்கே காலையில் குளிக்க சென்றபோது நான் எனது செருப்பை சந்தனம், குங்குமம், மற்றும் மலர்கள் வைத்திருக்கும் பண்டிட்கள் அமரும் ப்ளாட்பார்மிற்கு  கீழே வைத்திருந்தேன். எனது வரவேற்பாளர், யாரேனும் அதனை எடுத்து சென்றிருப்பார்கள், எனக்கு செருப்பு கிடைக்காது என கூறினர், நான் எனது குரு மிகவும் கருணை மிக்கவர் அவர் நான் எதையும் இழக்க விடமாட்டார் என்றேன். கங்கையை அடைந்தபோது எனது செருப்பு அங்கேயே இருந்தன. மகிழ்வோடு நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, எனது உடைகளை கழற்றி விட்டு கங்கையில் குளிக்க ஓடினேன். நான் கங்கை அன்னைக்கான பிரார்த்தனையை நடத்தி, உங்களையும் நினைவில் கொண்டு மூன்றுமுறை முங்கி எழுந்தேன். பின்னர் விளையாட்டுத்தனமான எண்ணத்தில் நான் நீந்த முயற்சித்தேன். ஆனால் எனது கால்களுக்கு கீழே இருந்த மண் நகர்ந்து என்னை ஆற்றின் நடுபகுதிக்கு ஆற்றின் வேகம்  இழுத்துச் சென்றது. ஆற்றின் படித்துறையில் மிக குறைவானவர்களே காணப்பட்டனர். எனவே அவர்கள் நான் நீச்சல் அடிக்கவில்லை, ஆற்றினால் இழுத்துச் செல்லப்படுகிறேன் என்பதை உணர சிறிது நேரம் தேவைப்பட்டது. அவர்கள் அதனை உணர்ந்நபோதும் அவர்கள் நீந்தி அடையமுடியாத தொலைவில் நான் இருந்தேன். நான் எனது தலையை தண்ணீருக்கு மேலே வைத்திருக்க கடுமையாக போராடினேன் எனது கைகளை உயர்த்தி நான் எங்கே இருக்கிறேன் என்பதை காட்ட முயன்றேன். மரணம். எனது முகத்திற்கு எதிரே வரத்துவங்கியது, ஆனால் மின்னலென உங்களைப்பற்றிய எண்ணம் மனதில் உதிக்கத்துவங்கியது. நீங்கள் எனது உதவிக்கு ஓடி வருவீர்கள் என நினைத்தேன். ஒரு குழந்தை அன்னை மீது கொண்ட நம்பிக்கையைப்போல், உங்கள் கருணையிடம் என்னை ஒப்படைத்துவிட்டு நான் துணிவோடு மிதக்க துவங்கினேன். எனது உள்ளங்கை மட்டும் தண்ணீருக்கு மேலே இருந்தது. திடீரென நான் உங்கள் இருப்பை எனக்கு வெகு அருகே உணரத்துவங்கினேன். நான் தண்ணீருக்கடியில் இருந்தபோதும் யாரோ எனது தலைமுடியை பிடித்து இழுப்பதையும், எனது உள்ளங்கையை பிடித்திருப்பதையும் உணர்ந்தேன். நான் எனது தலையை தண்ணீர் மட்டத்திற்கு மேலே கொண்டு வந்து கண்களை திறந்தபோது, இரண்டு படகோட்டிகள் என்னைச்சுற்றி இருந்து, என்னை மேலே தூக்க முயற்சித்ததை கண்டேன். அதில் ஒருவர் எனது கால்களை பிடித்து தூக்கி என்னை படகில் உருட்டினர். அவர்கள் ஆச்சரியத்தோடு, “கடவுளுக்கு நன்றி கூறுங்கள். நாங்கள் ஓரிரு நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தாலும் நீங்கள் சென்று விட்டிருப்பீர்கள்“ என்றனர். கரைக்கு வந்தப்பின் எனது வரவேற்பாளரான சஞ்சய் பெரும் அமைதியை அடைந்தார். இரண்டு படகோட்டிகளும் பயணிகளுடன் அப்போதுதான் கரைக்கு வந்ததாகவும், கரையில் மக்களின் வெறித்தனமான கூச்சலான “ஓ பாபாஜி டூப்  ரஹே  ஹை“ – “அந்த சாது மூழ்கிக் கொண்டிருக்கிறார்” – என்ற குரலைக் கேட்டு என்னை நோக்கி உரிய நேரத்தில் விரைந்து காப்பாற்றியதாகவும் கூறினர். நான் எனது உடலை காய்ந்த துண்டு மூலம் துடைத்துவிட்டு அவர்களை பார்க்க முயற்சித்தபோது அவர்கள் வேறு சில பயணிகளின் கூட்டத்தோடு விரைந்து சென்று விட்டிருந்தனர். எனது உட்குரல் நீங்கள் அற்புதமான படகோட்டி, நீங்களே என்னை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தீர்கள், என்று கூறியது. திரு. சின்ஹா அவர்களின் இடத்தில் நடந்த நேற்றைய சத்சங்கத்தில் நான் மனித இருப்பு குறித்தும் அதனை உயரிய நோக்கங்களுக்காக வாழ்க்கையில் பயன்படுத்துதல் பற்றியும் பேசினேன். மரணம் சகலவற்றையும் கணப்பொழுதில் பறித்துவிட்டு செல்லும்  என்று நான் குறிப்பிடும்பொழுது, நீங்களே ஒரு மிக உயர்ந்த இலட்சியத்தை என்முன் வைத்து எனக்கு ஒரு உயர்ந்த வாழ்க்கையை அளித்துள்ளீர்கள் என்று நினைத்துப் பார்த்தேன். ஒருவேளை, நான் அந்த லட்சியத்தை பூர்த்தி செய்வதற்காகத் தான் நீங்களே என்னை மரணத்தின் பிடியில் இருந்து மீட்டீர்கள். இந்த புதிய வாழ்க்கை நீங்கள் எனக்கு தந்தது, அதனை மறுபடியும் உங்களின் புனித பாதங்களிலேயே அர்ப்பணிக்கிறேன்! தங்கள் சித்தப்படி எல்லாம் நடக்கும்! கங்கா உங்களது அன்னை;  அவள் என்னை உங்களிடம் தங்களின் பணிக்கு திரும்ப தந்திருக்கிறாள். 

உ.பி.யில் ராம்நாம் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. திரு. T.S.சின்ஹா மிக சிறப்பான, அர்ப்பணிப்பான பணியை செய்து வருகிறார். நாளை அவரது பேரனான சந்தன் அவர்களின் மொட்டை அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது அதையும் அவர் ராம நாம பிரச்சாரத்திற்கான ஒரு சத்சங்கம் ஆகவே நடத்த இருக்கிறார்.. நான் இங்கே வந்து சேர்ந்தவுடன் அவர் உங்களின் விலாசத்தைப் பெற்று ஒரு அழைப்பிதழ் உங்களுக்கு அனுப்பினார். நீங்கள் இந்த விழாவின் வெற்றிக்கு ஆசீர்வதித்துள்ளது உங்கள் மிகப்பெரிய கருணையே. திரு. சின்ஹா அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் உங்கள் கருணைக்கும், ஆசிக்கும் பிரார்த்திக்கின்றனர். 

இந்த சாது 20 முதல் 22 அக்டோபர் வரை லக்னோவில் நடைபெற உள்ள ராம்தீர்த்தா ஜெயந்தியில் பங்குபெற நாளை கிளம்புகிறான். அயோத்திக்கு 23 ஆம் தேதி செல்லக்கூடும். 24 ஆம் தேதி இங்கு திரும்பி வந்து, பிறகு சித்திரகூடம் மற்றும் பனாரஸ் ஆகிய இடங்களில் ராம்நாம் பிரச்சாரம் செய்ய செல்வேன். நாங்கள் இங்கே பிரம்மாண்டமான ராமநாம ஜப யக்ஞம் நிகழ்ச்சியை 27 ஆம் தேதி நடத்த உள்ளோம். பின்னர் இந்த சாது ஜாம்ஷெட்பூர் மற்றும் பிற இடங்களுக்கான பயணம் குறித்து திட்டமிடுவான். 

இந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் ராம்நாம் இயக்கத்தில் பங்கு பெறுகின்றனர். மீரட், காசியாபாத், பாண்டா மற்றும் பிற இடங்களுக்கான பயணத்திற்கான அழைப்பிதழ் வந்துள்ளது. எங்கும் மக்கள் யோகி ராம்சுரத்குமார் குறித்து அறிய தவிப்போடு இருக்கின்றனர். அவர்கள் தங்களை சந்திப்பதற்கான வாய்ப்புக்காக பிரார்த்திக்கின்றனர். 

அன்புடனும் வணக்கத்துடனும்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்.

[இந்த மேற்கண்ட கடிதம் அலகாபாத்தில் இருந்து தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் உள்ள அடியேனது குருநாதரின் விலாசத்திற்கு அனுப்பப்பட்ட அதே நாள் காலையில் இந்த சாதுவின் பிள்ளைகளான சிரஞ்சீவி. விவேகானந்தன் மற்றும் குமாரி நிவேதிதா திருவண்ணாமலைக்கு யோகியின் தரிசனம் பெற சென்றிருக்கின்றனர். அனைத்தும் அறிந்த மகாத்மா கைநிறைய பூக்களை எடுத்து, அவைகளை ஒரு காகிதத்தில் சுற்றி பிள்ளைகளிடம் தந்து, அதனை கவனத்துடன் எடுத்துச் சென்று அவர்களின் அன்னையான திருமதி. பாரதி அவர்களிடம் ஒப்படைக்கச் சொன்னார். அவர்கள் குருவின் செயல்களின் முக்கியத்துவத்தை நான்கு நாட்களுக்கு பிறகே, இந்த சாது யோகி ராம்சுரத்குமாருக்கு எழுதிய கடிதத்தின் நகல் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்திற்கும் சென்றடைந்தபோதே, உணர்ந்தனர். 

உ.பியில் இருந்து திரும்பிய இந்த சாது நவம்பர் 11, 1991-ல் திருவண்ணாமலைக்கு சென்று குருவை சந்தித்தான். தனது வட இந்திய பயணம், உலக ராமநாம இயக்கம், மற்றும் சென்னையில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 அன்று நடக்க இருக்கும் 74-வது யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா குறித்தும் விளக்க சென்றிருந்தான். ஒரு போலீஸ்காரனைப் போல் யோகி, கங்கையின் மடியில் நடந்த நிகழ்வு பற்றி நுணுக்கமாக விசாரித்தார். இந்த சாது இவையனைத்தும் குருவின் கருணை என்றும் அக்கருணையாலேயே தான் தனது வேலையை தொடர மீண்டு வந்துள்ளதாகவும் கூற, யோகி சிறிய புன்னகையோடு, “இவையனைத்தும் தந்தையின் கருணை என்றும், இந்தப்பிச்சைக்காரனுக்கு உன்னை காக்கும் சக்தி இருந்திருந்தால் அவன் உன்னை கங்கையின் தண்ணீர் கொண்டு செல்லவே அனுமதித்திருக்க மாட்டான். தந்தையே உன்னை காப்பாற்றினார். அனைத்தும் தந்தையின் கருணை!“ என்றார். இந்த சாது யோகியிடம் நீங்கள் மட்டுமே இந்த சாதுவின் தந்தை, தாய் மற்ற அனைத்தும், ஒருவேளை அவர் எனது நம்பிக்கையை சோதித்து பார்க்க இத்தகைய நிகழ்வை நிகழ்த்தியிருப்பார் என்று கூற அவர் எளிமையோடு சிரித்தவாறே, “இதனை நீ ‘தத்துவ தர்சனா’வில் பிரசுரிப்பாயா?“ எனக் கேட்டார் . இந்த சாது அதனை பிரசுரிப்பதாக கூறியதோடு, தான் எழுதிய மொத்த கடிதத்தையும் அதில் வெளியிடுவதாக கூறினான். யோகி தனது கரங்களை உயர்த்தி எங்களை ஆசீர்வதித்தார். பின்னர் அவர் உ.பி.யின் சுற்றுப்பயணம் குறித்து விரிவாக விசாரித்தார், சென்னையில் நடைபெற இருக்கும் ஜெயந்தி விழாவில் பங்குபெற பல இடங்களிலிருந்து வர இருக்கும் பிரமுகர்களின் பெயர்கள், அவர்கள் பற்றிய தகவல்கள், போன்றவற்றை கேட்டறிந்தார். 

குரு மஹிமா, குரு மஹிமா, அபார மஹிமா குரு மஹிமா

– சாது ரங்கராஜன் ] “

அக்டோபர் – 20, 1991 ஞாயிற்றுக்கிழமை, திரு. சின்ஹா அவர்களின் குடும்பம் ரயில்நிலையம் வரை வந்து விடைதர, இந்த சாது பிரயாகையிலிருந்து லக்னோவிற்கு கிளம்பினார். லக்னோவில், சுவாமி ராம்தீர்த்தா ப்ரதிஷ்டானின் தலைவரான திரு. R.K.லால் மற்றும் பிற அலுவலக பொறுப்பாளர்கள் சாதுவிற்கு ஆரவாரமான வரவேற்பை வழங்கினர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் இந்த சாதுவின் சுற்றுப்பயணம் குறித்து பேசி அறிந்தனர். சுவாமி கல்யாணனந்தா, சுவாமி ஞானானந்தா, சுவாமி சச்சிதானந்தா மற்றும் பல்வேறு ஆன்மீக நிறுவனங்களின் சுவாமிஜிகளும் அங்கே வந்திருந்தனர். மாலையில் சுவாமி ராம தீர்த்தா ஜெயந்தியின் துவக்கவிழா கொண்டாட்டங்கள் நடைப்பெற்றன. சாதுஜி ப்ரதிஷ்டானின் முன்னாள் தலைவரான திரு. அயோத்யாநாத் சின்ஹா அவர்களின் நினைவாக ஒரு சிறப்பு மலரை வெளியிட்டு கூட்டத்தில் உரையாற்றினார். சுவாமி வாசுதேவானந்தா, சுவாமி விவேகானந்தா மற்றும் ஆச்சார்யா மகேஷ் பிரசாத் போன்றோரும் பேசினர். அடுத்தநாள் காலை, சாதுஜி ஒரு கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். அதன் தலைப்பு “தர்மம் – அதன் இயல்பு மற்றும் நவீன உலகில் அதன் பயன்பாடு”. சுவாமி கல்யாணனந்தா, சுவாமி சச்சிதானந்தா திரு. கரே மற்றும் பலர் இதில் பங்குபெற்றனர். மதியம் சாது பிற சுவாமிகளுடன் ஒன்று சேர்ந்த ஒரு நிகழ்வில் ராம்நாம் இயக்கம் குறித்து பேசினார். சாதுஜி பிற சுவாமிகளுடன் இணைந்து இரண்டாம் நாள் விழாவில் பேசினார். செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22 நாள் இந்த சாதுவின் 51 வது பிறந்தநாளாகவும் அமைந்தது. அன்று காலை நிகழ்வில் சாதுஜி யோகி ராம்சுரத்குமார் பற்றியும் ராம்நாம் இயக்கம் குறித்தும் பேசினார். பின்னர் சாதனா குறித்து நடந்த கலந்துரையாடலில் கன்னியாக்குமரி அன்னை மாயம்மா மற்றும யோகி ராம்சுரத்குமார் குறித்தும் சாதுஜி பேசினார். மாலையில் சாதுஜி  சுவாமி ராம்தீர்த்தரின், “தேசப்பற்று மற்றும் சேவையின் செயல்முறை வேதாந்தம்” என்ற தலைப்பில் பேசினான். அதற்குப்பின் பேசிய பிற சுவாமிஜிகளால்  சாதுவின் உரை பாராட்டப்பட்டது. மாலை நிகழ்வுகளுக்குப் பிறகு சாதுஜி பிரசாதமாக, “சுவாமி ராமாவின் விரிவுரைகள்” என்ற சிறிய புத்தகத்தின் பகுதிகளை வழங்கினான். டெல்லியை   சேர்ந்த திரு. A.S. தியாகி சாதுவுடன், டெல்லியில் ராம்நாம் பணி மற்றும் சாதுவின் பயணம் குறித்து பேசினார். 

அக்டோபர் 23 அன்று சுவாமி ராம தீர்த்தா ப்ரதிஷ்டானின் பணியாளர்களின் ஒரு கூட்டம் நடைப்பெற்றது. பின்னர் கான்பூரின் பக்தர்கள் இந்த சாதுவுடன் அமர்ந்து ராம்நாம் பிரச்சாரம் குறித்து பேசினர். திரு. ரமாபதி ராம் ஸ்ரீவாஸ்தவா சாதுவின் பனாரஸ் நிகழ்ச்சிகளை உறுதி செய்தார். திரு. R.K.லால் மற்றும் திரு. குப்தாஜி மற்றும் ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானின் அலுவலக பொறுப்பாளர்கள் போன்றோர் சாதுஜி உடன் இணைந்து அக்டோபர் 24 ஆம் தேதி காலை பனாரஸை அடைந்து, திரு. ரமாபதியின் இல்லத்தை அடைந்தனர். பக்தர்களுடன் சாது கங்கா ஸ்நானம் செய்துவிட்டு சங்கட மோசன், மனஸ் மந்திர், துர்கா குண்ட், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் மற்றும் காசி விஸ்வநாத் ஆலயம் ஆகிய இடங்களுக்குச் சென்றான். பின்னர் அவன் ராம்தீர்த்தா ப்ரதிஷ்டானின் அலுவலக பொறுப்பாளர்கள் உடன் காந்தி ஆசிரமத்திற்கு சென்று, ஆசிரம டிரஸ்டிக்களுடன், ப்ரதிஷ்டானிற்கு சொந்தமாக சாரநாத்தில் உள்ள சொத்துக்களை காந்தி ஆசிரமத்திற்கு மாற்றுவது பற்றி கலந்துரையாடினர். சனிக்கிழமை அக்டோபர் 26 ஆம் தேதி, சாதுஜி காந்தி ஆசிரமத்தின் துணிகள் தயாரிக்கும் மையத்திற்கு சென்றார். அங்கே அவர் திரு. வாசிஷ்ட நாராயண் சின்ஹா என்பவரால் வரவேற்கப்பட்டார். பின்னர் சாதுஜி சீன, ஜப்பானிய பௌத்த மடங்களையும், அசோகர் நிறுவிய ஸ்தூபியையும், சாரநாத்தில் உள்ள தொல்பொருள் ஆய்வு பகுதிகளையும் பார்த்து விட்டு அலகாபாத் திரும்பினார். 

அக்டோபர் 27, ஞாயிற்றுக்கிழமை, அன்றைய நாள் முழுவதும் ராம்நாம் சத்சங்கம், இந்து சின்ஹா காட்டேஜில் சிறப்பாக அமைக்கப்பட்ட ஷாமியானாவில், திரு. சின்ஹா அவர்களால் நடத்தப்பட்டது. பல பக்தர்களும், சின்ஹா குடும்பத்தினரும் அதில் கலந்து கொண்டனர். சாதுவும், திரு.லால் அவர்களும் பக்தர்களுக்கு முன் உரையாற்றினர். அடுத்தநாள் சாதுஜி திரு. லால் அவர்களுடன் லக்னோவிற்கு திரும்பினர். வியாழக்கிழமை அக்டோபர் 31, சாதுஜி ராம்தீர்த்தா ப்ரதிஷ்டானின் அனைத்து பக்தர்கள் மற்றும் திரு. R.K.லால், பகவத் ஸ்வரூப், மற்றும் திரு. குப்தா போன்றவர்களிடமும் விடைப்பெற்று, லக்னோ எக்ஸ்பிரஸ் மூலம் சனிக்கிழமை நவம்பர் 2, 1991 அன்று சென்னை திரும்பினார். நவம்பர் 7, பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் திரு. கிருஷ்ணமூர்த்தி சாதுவை சந்தித்தார். சாது பகவானுக்கு தனது திருவண்ணாமலை பயணம் குறித்து கடிதம் ஒன்றை எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

உங்கள் அளவற்ற கருணையாலும் ஆசியாலும் இந்த சாது வெற்றிகரமாக தனது உ.பி. சுற்றுப்பயணத்தை முடித்து நவம்பர் 2, 1991ல் சென்னைக்கு திரும்பினான். நாங்கள் திட்டமிட்டதை விட அதிக நேரம் உ.பி.யில் செலவழித்த காரணத்தால் எங்களால் பிற மாநிலங்களுக்கு செல்ல இயலவில்லை. யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா சென்னையில் முடிந்தப்பின் நாங்கள் அங்கே செல்ல விருப்பம் கொண்டுள்ளோம். 

நாங்கள் ராம்நாம் இயக்கத்திற்காக சென்ற இடத்தில் எல்லாம் பெரும் வரவேற்பு எங்கள் அழைப்பிற்கு கிடைத்தது. உ.பி மற்றும் பல இடங்களில் இருப்போர் உங்கள் தரிசனத்தை பெற ஆவலாக இருக்கின்றனர். அவர்கள் சென்னையில் நடக்க இருக்கும் உங்கள் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஒரு ஆன்மீக சுற்றுலாவைப் போல் வந்து திருவண்ணாமலையில் உங்கள் தரிசனத்தை பெற காத்திருக்கின்றனர். 

மகாராஷ்டிராவில் உள்ள சத்ராவை சேர்ந்த ஸ்ரீ கொண்டாவலேகர் மஹராஜ் ஆசிரமம் 1931 ஆண்டு முதல் பக்தர்கள் மேற்கொண்ட ராமநாம தாரக ஜப எண்ணிக்கையை  நமது இயக்கத்திற்கு தந்தனர். இது குறித்து சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு கடிதம் எழுதி கேட்டபோது, அவர் எங்களிடம், மாதாஜி கிருஷ்ணாபாய் தனது உலக அமைதிக்கான ஜப யக்ஞத்தை துவக்கிய ஜனவரி 1978 முதல் உள்ள ராம்நாமத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று எங்களுக்கு விளக்கியிருந்தார். இந்த மாதம் வரை வந்த ராம்நாம் தாரக ஜப எண்ணிக்கை 179.8 கோடியை நாம் நமது கணக்கில் சேர்த்துக்கொண்டோம். இத்துடன் சுவாமி சச்சிதானந்தர் அவர்களின் கடித நகலை இணைத்துள்ளோம். 

நவம்பர் 1 ஒலிப்பரப்பான எனது வானொலி உரையை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன். 

திருமதி. பாரதி நீங்கள் தந்த மலர்களுக்கான தனது நன்றியறிவித்தலை தெரிவித்தார்.  பிரயாகையில் நடந்த நிகழ்வில் உங்கள் தெய்வீக கருணையால்  இந்த சாதுவை நீங்கள் காப்பாற்றியதை அவர் அறியும் முன்னரே நீங்கள் அவரை ஆசீர்வதித்தீர்கள். விவேக் தனது தேர்வுகளில் மும்முரமாக இருக்கிறான். நிவேதிதா யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி ஏற்பாடுகளை செய்து வருகிறார். 

நவம்பர் 23 அன்று திருச்சியில் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தால் நடத்தப்படும் ராம்நாம் சத்சங்கத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளோம். 24 ஆம் தேதி நாங்கள் மதுரைக்கும், பின்னர் குமாரக்கோவிலுக்கும் சென்று, அங்கே நவம்பர் 25 அன்று  ராம்ஜி ஆசிரமத்தில் நடக்க இருக்கும் கோடி அர்ச்சனை துவக்கவிழாவிலும் கலந்து கொள்ள இருக்கிறோம். அதற்குமுன்  நாங்கள் திருவண்ணாமலைக்கு வந்து உங்கள் ஆசியையும், தரிசனத்தையும் பெற விரும்புகிறோம். 

நாங்கள் நவம்பர் 11, 1991 திங்கள்கிழமை அன்று  திருவண்ணாமலைக்கு காரில்  7 மணி வாக்கில் வந்தடைவோம்.. எங்களோடு யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மகளிர் பிரிவின் செயலாளர் குமாரி பரிமளா மற்றும் அவளது பெற்றோர்களும் வருவார்கள்.  அவள் தந்தை, திரு. கண்ணபிரான். ஒரு போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளர். அவர் உங்கள் தரிசனத்தை நீண்ட காலமாக பெற விரும்பினார். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்.”

நவம்பர் 11 1991  திங்கள்கிழமை அன்று, ராஷ்ட்ர  சேவிகா  சமிதியின், பிரமிளா தாய் மேதே  மற்றும் கமலா மோதிலால்  இந்த சாதுவை சந்தித்து, சகோதரி நிவேதிதை பற்றிய செய்திகளை சேகரித்தனர். வள்ளியம்மை ஆச்சி தனது மகள் உமையாள் உடன் வந்திருந்தார். பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தை சேர்ந்த திரு. கிருஷ்ணமூர்த்தியும் வந்திருந்தார். சாது, குமாரி பரிமளா, அவளது பெற்றோர்கள், மற்றும் சகோதரருடன் திருவண்ணாமலைக்கு செல்வதற்காக தயாராக இருந்தான். சாது, தங்களுக்கு முன் திருவண்ணாமலைக்கு கிளம்பிய, திருமதி பிரேமா என்ற இன்னொரு பக்தையுடன் தொலைபேசியில் பேசினான். சாது பயணித்த கார் திண்டிவனம் அருகே கோளாறு ஆனதால் அதனை சரிசெய்து காலை 8.45 மணிக்கு திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம். நாங்கள் குருவின் இல்லத்தை அடைந்தவுடன், குருவின் உதவியாளரான சசி குருவின் இல்லத்தின்  கதவைத்தட்ட, யோகி வெளியே வந்து எங்களை வரவேற்றார். இந்த சாது குருவிடம் காரின் கோளாறு குறித்தும் அதனால் வர தாமதம் ஆனதாகவும்  குறிப்பிட்டார். பகவான் எங்களிடம் பிரேமா காலை 7.30 மணிக்கு வந்ததாகவும் எங்களுக்காக 8 மணி வரை காந்திருந்ததாகவும் பின்னர் தான் அனுப்பி வைத்ததாகவும் சொன்னார். (பிரேமா இந்த சாதுவிடம், யோகி தனது பிள்ளைக்காக காத்திருக்கும் ஒரு தாயைப்போல், அவ்வப்போது நேரம் என்ன என்று கேட்டுக் கொண்டிருந்ததாகவும், சசி இடம் ஏதேனும் கார் வருகிறதா என பார்க்கச் சொல்லி 8 மணி வரை அவர் காத்திருந்ததாகவும், பின்னர் அவர் அவளிடம் காரில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதனால் அவளை அவர் கிளம்புமாறு கூறியதாகவும் பகிர்ந்தாள்.) 

சாதுஜி தனது உ.பி.பயணம் குறித்து விரிவான தகவல்களை யோகியிடம் பகிர்ந்தார். சாது பகவானிடம் பிரயாக்கில் இருந்து தான் எழுதிய கடிதம் கிடைத்ததா என்று வினவினார். யோகி, “ஆம்“ என்றதோடு அந்த நிகழ்வின் விவரங்களை கேட்டார். யோகி சாதுவிடம் சங்கம் படித்துறைக்கு செல்லாமல் ரசூலா காட்டிற்கு சென்றாயா  என வினவினார். சாது, தான் கூட்டத்தை தவிர்க்க விரும்பியதாக பதிலளித்தார். யோகி சாதுவிடம் எவ்வளவு தண்ணீர் அங்கே இருந்ததாக கேட்டார். மேலும் அவர் வழக்கமாக வெள்ளம் ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் இருக்கும் என்றும், அக்டோபர் மாதத்தில் தண்ணீர் அளவு அதிகமாக இருக்காது என்றும் கூறினார். சாது அவரிடம் தனக்கு நீச்சல் தெரியாது என்றும் அதனாலேயே தான் நீரின் ஓட்டத்தில் மாட்டிக் கொண்டதாகவும்  கூறினார். சாது அவரிடம் அவரது பெயர் மற்றும் ராம்நாம் தாரக மந்திரத்தை சொன்ன மாத்திரத்திலேயே தான் காப்பாற்றப்பட்டதாக கூறினார். யோகி பெருங்களிப்புடன் சிரித்தவாறே தனக்கு காப்பாற்றும் சக்தி இருப்பின் அவர் சாதுவை நீரின் ஓட்டம் அடித்துச் செல்லும் முன்னரே தான் காப்பாற்றியிருக்க வேண்டும் என்றும், மேலும், “இந்தப் பிச்சைக்காரன் 1952-ல் பப்பா ராம்தாஸ் அவர்களின் பாதங்களில் மரித்துவிட்டான். யோகி ராம்சுரத்குமார் எனது தந்தையின் பெயர். நீ அவரது பெயரை அழைத்தாய், அவருக்கு நெருக்கமான மந்திரத்தை நீ ஜபித்தாய். எனது தந்தையாலேயே நீ காப்பாற்றப்பட்டாய்“ என்றார். இந்த சாது பகவானிடம் ஒருவேளை பகவான் எனது நம்பிக்கையை சோதிக்க இத்தகைய இக்கட்டினை தந்திருப்பார் என்று கூற, பகவான் மீண்டும் சிரித்தவாறே சாதுவிடம் இந்த நிகழ்வை நீ ‘தத்துவ தர்சனா’வில் பிரசுரிப்பாயா எனக்கேட்டார். சாது வரவிருக்கும் இதழில் இந்நிகழ்வை பிரசுரிப்பதாக கூறினார். பகவான் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார். 

சாது பகவானிடம் ராம்தீர்த்தா ப்ரதிஷ்டானின் சொத்து விற்பனைக்காக தான் சாரநாத் சென்றது குறித்து விவரித்தார். பகவான் தகவல்களை கோர இந்த சாது விளக்கினார். ப்ரதிஷ்டான் லக்னோவில் ஒரு கட்டிடத்தை வாங்குவதற்கான திட்டத்தில் இருப்பதாக கூறினார். யோகி சாதுவிடம் இத்தனை காலம் ப்ரதிஷ்டான் தனது வாடகை இடத்திலா இருக்கிறது என்று கேட்க, “ஆமாம்” என்றார் சாது. பின்னர் சாது வட இந்தியாவில் இருந்து சென்னை யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவிற்கு வருகை தர இருக்கும் பக்தர்கள் குறித்து பகிர்ந்தார். யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பெயர்களை, அவர்களின் இடத்தை, மாநிலத்தை கேட்டு, ஜெயந்தி விழாவை ஆசீர்வதித்தார். சாதுஜி லீ லோசோவிக் அவர்களின் சென்னை விஜயம் குறித்தும் அவர் வரும் நாட்கள் தனது குமாரகோவில், மதுரை, திருச்சி பயண நாட்களோடு மோதுவதாக கூற, பகவான் சாது சென்னையில் இருப்பதே சரியாக இருக்குமென்றும், லீ யின் நண்பர்கள் சாதுவுடன் தங்கள் நேரத்தை செலவழிக்க விரும்புவார்கள் என்றும் கூறினார். எனவே குமாரக்கோவில் மற்றும் பிற இடங்களுக்கு தகவல்களை முன்கூட்டியே கூறிவிடுமாறு யோகி கூற, சாது அதனை ஏற்றார். 

பகவான் சாதுவிடம் தான் அவனது உரையை வானொலியில் கேட்டதாகவும், திரு. ராமசந்திர உபாத்யாயா தனது டிரான்ஸிஸ்டரை கொண்டு வந்து உரையை கேட்க உதவியதாகவும் கூறினார். இந்த சாது ராமசந்திர உபாத்யாயாவை அவரது இல்லத்திற்கு வரும் முன் சந்தித்ததாகவும், அவரது ஓட்டலில் தாங்கள் தங்கியிருப்பதாகவும் கூறினான். பகவான் பல்வேறு இதழ்களில் வெளிவந்த பல்வேறு கட்டுரைகளைப் பற்றி குறிப்பிட்டார். மிக முக்கியமாக பாலகுமாரன் பற்றி பேசினார். சாது பகவானிடம் தான் புகழ்பெற்ற எழுத்தாளரான விக்ரமனை யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தியில் உரையாற்ற அழைத்திருப்பதாக கூறினார். சாது மற்ற முக்கிய வி.ஐ.பி.யான ஜஸ்டிஸ் ஆனந்த் ஜெயந்தியில் பங்கு கொள்வார் என எதிர்ப்பார்ப்போடு இருப்பதாகவும் . திரு. D.S.சிவராமகிருஷ்ணன் வருவார் என எதிர்ப்பார்ப்போடு இருப்பதாகவும் கூறினார். பகவான் அவர் தன்னிடம் விழாவில் கலந்துக் கொள்ள அனுமதி கேட்டதாக கூறினார். சாது, திருவண்ணாமலையை சேர்ந்த சுகவனம் விழாவில் கலந்து கொண்டு யோகி மீதான பாடல்களை வழங்க விரும்புவதாகவும் கூறினார். 

சாதுஜி பகவானிடம் வள்ளியம்மை ஆச்சி அவர்களின் விஜயம் குறித்தும் அவர் புனேவில் இருந்து வந்து மோனோ ஃபோட்டோ ஃபிலிம் செட்டர் வைப்பதற்கான இடத்தை வழங்கியது குறித்தும் பகிர்ந்தார். பகவான் அந்த இடத்தை நீ சென்று பார்த்தாயா என வினவினார் . சாது ஒரிரு தினங்களில் தான் சென்று பார்க்க இருப்பதாக கூறினார். பகவான் ‘தத்துவ தர்சனா’வின் பொருளாதார நிலைமை குறித்து கேட்டார். “அது நஷ்டத்தில் இயங்குகிறதா?“ எனக்கேட்டார். சாது அவருக்கு பதிலளிக்கும் விதமாக, “அது எந்த லாபத்தையும் தரவில்லை, ஆனால் உங்கள் கருணையால் வேலை முன்னேறுகிறது. நான் வெளியே எங்கும் நன்கொடைகள் வசூலிக்கவோ, விளம்பரம் சேகரிக்கவோ போவதில்லை என்பதே காரணம், நான் வீட்டை விட்டு வெளியே வருவது ராம்நாம் பணிக்காக மட்டுமே. எனவே  நாங்கள் விருப்பத்துடன் மக்கள் அளிக்கும் நன்கொடைகளையும், சுயமாக  வரும் விளம்பரங்களையும் ஏற்கிறோம். உங்கள் பெயரே எங்களை நிலைத்திருக்க வைத்திருக்கிறது.“ யோகி உடனடியாக, “இது எனது தந்தையின் பெயர். அனைத்தும் தந்தையின் கருணை” என்று குறிப்பிட்டார். 

சாது லீ யின் கவிதைகள் பற்றி குறிப்பிட்டார். யோகி லீ யின் கவிதைகளை ‘தத்துவ தர்சனா’வில் தொடர்ச்சியாக வெளியிடும் படி கூறினார். “நீ ‘தத்துவ தர்சனா’வில் பிரசுரம் செய்தால் பல வாசகர்கள் பயன் அடைவார்கள்“ என்றார். பகவான் ‘தத்துவ தர்சனா’ இதழின் வாங்குவோர் எண்ணிக்கை குறித்து கேட்டார். சாதுஜி தான் 1000 பிரதிகளை மட்டுமே ஒவ்வொரு இதழிற்கும் அச்சடிப்பதாகவும், ஆனால் அவைகள் பல நூலகங்கள், நிறுவனங்களுக்கு செல்வதால் பலர் அதனை படிக்க வாய்ப்புண்டு என்றார். 

சாது கண்ணபிரானை அறிமுகப்படுத்தினார். யோகிஜி அவரிடம் அவரது கம்யூட்டெக் முதலீடு குறித்து கேட்டார். அவர் ஐந்து லட்சம் என்றும் அதனை விற்பது கடினமான செயலாக இருப்பதாகவும் கூறினார். சாது மோனோ ஃபோட்டோ ஃபிலிம் செட்டரும்  ஒரு வெள்ளையானை என்று குறிப்பிட்டார். பகவான் கண்ணபிரானிடம் அவரது வாகன போக்குவரத்து தொழில் குறித்து கேட்டார். கண்ணபிரான் அதனை விளக்கினார். பகவான் சாதுவிடம் இவர் எப்படி தொடர்பில் வந்தார் என வினவினார். சாது பகவானிடம், பரிமளா நிவேதிதாவின் உடன்பயில்பவர் என்றும் இளைஞர் சங்கத்தில் துடிப்புடன் செயலாற்றுபவர் என்றும் பதிலளித்தார். யோகி பரிமளாவிடம் அவளது பாடம் எதுவென கேட்க, “கணிணி அறிவியல்” என்றார். பகவான் சாதுவிடம் நிவேதிதாவின் பாடம் எதுவென கேட்க, “கணிதவியல்” என்றார். சாது பகவானிடம் விவேக் தனது தேர்வுகளை எழுத இருப்பதாக கூற அவர், “அவன் எல்லா பாடங்களிலும் வெற்றி பெறுவான். தேர்வையும் சிறப்பாக எழுதுவான்” என்றார். சாது, நிவேதிதாவும் அவளது தேர்வுக்கு தயாராகி வருகிறாள் என்று பகவானிடம் கூற, பகவான் புன்னகைத்தவாறே, “நீ அவள் யோகி ஜெயந்தியில் மும்முரமாக இருப்பதாக கடிதம் எழுதியிருந்தாயே?“ என வினவினார். சாது, “ஆமாம், நேற்றுவரை அவள் அதில் மும்முரமாக இருந்தாள். ஆனால் தேர்வுகள் 15 ஆம் தேதியே துவங்குகின்றன, எனவே அவள் தனது படிப்பை இன்று துவங்கிவிட்டாள். அதனாலேயே அவளால் எங்களோடு வர இயலவில்லை“ என்று பதில் கூறினார். பகவான் நிவேதிதாவை ஆசீர்வதித்தார். யோகி கண்ணபிரான் ‘தத்துவ தர்சனா’ பணிகளுக்கு உதவுகிறாரா எனக் கேட்டார்.  இந்த சாது பகவானிடம் பரிமளா அவளது தனிப்பட்ட வழியில் விளம்பரங்களைப் பெற்றும், நிதி திரட்ட உதவியும் வருகிறார் என்றார். பகவான் புன்னகைத்தவாறே, “அவள் நிவேதிதாவின் தோழி, அதனால் அவள் சேவை செய்கிறாள்“ என்றார். பகவான் தெ.பொ.மீ. ஞானப்பிரகாசம் குறித்து விசாரித்தார. இந்த சாது அவர் அவ்வப்போது வந்து செல்வதாக கூறினார். யோகி ஞானப்பிரகாசத்திற்கு  என்ன உதவி செய்ய இயலுமோ அதனை செய்யுமாறும், இளையராஜாவும் உதவி வருவதாக கூறினார். பகவான் இந்த சாதுவிடம்! ராஜம் ஜெயராமன் (ஓம் பவதாரிணி அம்மா) அவர்களை தெரியுமா என்று கேட்க, சாது சகோகதரி நிவேதிதா அகாடமிக்கு அவர் ஆற்றியுள்ள சேவைகளை கூறினார். 

பகவான் சாதுவின் தலையங்கமான ‘பிச்சை பெறும் உரிமை’ யை பாலகுமாரன் ஒரு கதையாக மாற்றியிருப்பதாகவும், அவர் சாதுவின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பதாகவும் சொன்னார். சாது பகவானிடம் பாலகுமாரனிடம் தான் ‘தத்துவ தர்சனா’ மற்றும்  அகாடமி வெளியிட்டுள்ள நூல்களின் தொகுப்பை கொடுத்ததாக சொன்னார். 

சாது பகவானிடம், “நான் ராம்நாம் பிரச்சாரத்திற்காக அகில இந்தியா சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இப்பொழுது விவேக், நிவேதிதா தங்களது கல்வியை முடித்துவிட்டனர். நான் எனது பொறுப்புகளில் இருந்தும் விடுதலை பெற்றுள்ளேன். எனவே நான் கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை பயணம் செய்து ராம்நாம் பணியை செய்ய விரும்புகிறேன்” என்றான். 

“ஆனால் அதற்கு நிறைய பணியாளர்கள் தேவையாயிற்றே” என பகவான் குறிப்பிட்டார். 

சாது, ”நம்மால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த யாத்திரையை நடத்தினால், பத்திலிருந்து பதினைந்து வருடங்களுக்குள்ளாக நாம் இலக்கினை அடைய முடியும்“ என்று பதிலளித்தார். 

“ஓ! பதினைந்து வருடங்களில் இதனை முடிக்க இயலுமா?“ என்று பகவான் கேட்டதோடு, மேலும், “இந்தப்பிச்சைக்காரன் இதனை முடிக்க 50 அல்லது 60 வருடங்கள் ஆகும் என நினைக்கிறேன். உன் பிற வேலைகளையும் நீ பார்க்க வேண்டுமல்லவா? யார் அதனை செய்வார்கள்?“ என்றார்.

சாது, “நான் சிலரை மற்ற பணிகளை செய்ய நியமிக்க வேண்டுமென யோசிக்கிறேன்” என்றான்.

“நன்று. தந்தை உன்னை வழி நடத்துவார். உன்னால் எதை செய்ய இயலுமோ அதை செய்” என பகவான் கூறினார்.

சாது பகவானிடம் ராம் நாம் இயக்கத்தின் மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆன, திரு. T.S. சின்ஹா, திரு. ஸ்ரீராம் நாயக், திரு. ஈஸ்வர ஐயர், திரு. D.S. கணேசன் போன்றவர்களின் தொண்டுகள் பற்றி கூறினார். வட மாநிலங்களில் இருந்து யோகி ஜெயந்திக்கு வருகின்ற பக்தர்கள் அனைவரையும் ஆனந்தாஸ்ரமத்திற்கு அழைத்துச் செல்ல இருக்கிறேன் என்றார். யோகி சாதுவிடம் அதனை செய்யுமாறு கூறினார். சாது யோகியிடம் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் யோகியின் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர திட்டமிட்டிருப்பதை கூறினார். பகவான் சாதுவிடம் அவர்களின் வருகை குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்குமாறு கூறினார். சாதுஜி யோகியிடம் கொண்டாவலேகர் மஹராஜ் ஆசிரமத்தின் ராமநாம பங்களிப்பு பற்றி கூறினார். 

நாங்கள் ஏறக்குறைய இரண்டு மணிநேரம் பகவானுடன் செலவழித்தோம் அவர் எங்கள் அனைவரையும் வழியனுப்பும் முன் ஒவ்வொருவரிடமும் ஒரு பழம் ஒன்றை தந்தார். அவர் சாதுவின் தண்டம் மற்றும் தேங்காய் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்து கொடுத்தார். சாது அவரிடம் அடுத்தநாள் கிரி பிரதட்சணம் முடித்துவிட்டு அவரிடம் வருவதற்கான அனுமதியை கேட்டார். பகவான் கோயிலில் அதிகாலையில் துவஜாரோகணம் இருப்பதால் தான் அங்கு சென்றுவிட்டு உடனடியாக இல்லத்திற்கு திரும்ப மாட்டேன் என்று கூறிவிட்டு, “நாம் நன்றாக நேரத்தை செலவழித்தோம். நீ காலையில் கிரிபிரதட்சணம் செய்துவிட்டு, திருக்கோயிலூருக்கு போ“ என்றார். 

சாது மற்றும் பக்தர்கள் அடுத்தநாள் காலையில் கிரிபிரதட்சணம் செய்யும்பொழுது  பகவானின் பக்தர்களான தண்டபாணி, சக்கரபாணி  டீக்கடைக்கு சென்றனர். அவர்கள் அடி அண்ணாமலை மற்றும் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கும் சென்றனர். பிரேமாவும் அவர்களோடு இணைந்து அனைவரும் திருக்கோயிலூர் சென்றனர். திரு.D.S.சிவராமகிருஷ்ணன் மற்றும் சீத்தாராமன் ஞானானந்தா தபோவனத்தில் வரவேற்றனர். சிவராமகிருஷ்ணன் அனைவருக்கும் மதிய உணவை ஏற்பாடு செய்தார். வள்ளியம்மை, சுகவனம் மற்றும் பிற பகவானின் பக்தர்களும் சாதுவை காண வந்திருந்தனர். சாது அனைவருக்கும் ஸ்டிக்கர் மற்றும் காந்தத்துடன் கூடிய பகவானின் படத்தை தந்தார். பின்னர் சாது மற்றும் அவரது குழுவினர் உலகளந்த பெருமாள் கோயிலுக்கு சென்றனர். அங்கே பட்டர் அவர்களை வரவேற்று பல்வேறு சன்னதிகளுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அனைவரும் இரவில் சென்னை வந்தடைந்தனர். 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.23

Glimpses of A Great Yogi in Tamil – Part 2
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – II
சீடன் கண்ட தீக்ஷா குரு

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 2.23 

மகாராஷ்டிராவில் பரவிய ராம்நாம் பிரச்சாரம்

புதன்கிழமை, ஜூன் – 12, 1991ல் சாதுஜி தனது மும்பை பயணத்தை மும்பை மெயில் மூலம் துவங்கினார். திரு. நரசிம்மன் என்னோடு பயணித்து தாதரில் இறங்கி திரு. ஸ்ரீராம் நாயக் அவர்களின் இல்லத்திற்கு சென்றோம். ஸ்ரீராம் நாயக் வழக்கறிஞர் மற்றும் ராம்நாம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். அவரின் குடும்பம் எங்களை அன்போடு வரவேற்றது. திரு. மவ்லங்கர் மற்றும் அவர் குடும்பத்தினர் மற்றும் திரு. E.S.சிவராம ஐயர் என்ற கேரளாவின் ஒருங்கிணைப்பாளர் போன்றோர் எங்களோடு இணைந்தனர். சனிக்கிழமை காலை, திரு.நாயக் மற்றும் திரு. மவ்லங்கர் இந்த சாதுவுடன் சாந்தி ஆசிரமம் பயணப்பட்டு ராம்நாம் சத்சங்கத்தை ஏற்பாடு செய்தனர். 

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் – 16 அன்று சாது புனேவிற்கு திரு. நரசிம்மன் உடன் சென்று, சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலர், பேரா. G.C.அஸ்நானி அவர்களின், அவுந்தில் உள்ள இல்லத்தை அடைந்தான். அவர் புனே பல்கலைக்கழகம் மற்றும் சிந்து காலனி போன்ற இடங்களுக்கு சாதுவை அழைத்துச் சென்று பக்தர்களை சந்திக்க வைத்தார். அடுத்தநாள் காலை நாங்கள் ஹடஸ்பர் தொழில் பூங்காவிற்கு சென்று திரு. வாக்கன்கர் அவர்களை சந்தித்துவிட்டு ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் காரியாலயம் சென்று திரு. அபயங்கர் அவர்களை சந்தித்தோம். சாது திரு.ஷ்யாம் மெஹண்டலே  அவர்களிடம் பேசி, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த டிவைன் லைஃப் சொஸைட்டியின் சுவாமி சஹஜானந்தா அவர்கள் அனுப்பிய மோனோஃபோட்டோ ஃபிலிம் செட்டர் மிஷினை சென்னைக்கு அனுப்புவதற்கான வாகன ஏற்பாடுகளை செய்தார். மாலையில் சாது பேரா. G.C.அஸ்நானி உடன் சைதன்ய கோயிலுக்கு சென்று அங்கே பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டார். செவ்வாய்க்கிழமை, திரு.N. சீனிவாசன் சாதுவிற்கு இரவு விருந்தை ஏற்பாடு செய்திருந்தார் அதில் பேரா. அஸ்நானி, திருமதி ஹரி அஸ்நானி, திரு. சுக்தேவ் அஸ்நானி மற்றும் அவர் மனைவி, மற்றும் திரு. மோஹித் ஆகியோர் இணைந்திருந்தனர். நாங்கள் ஆர்வத்துடன் ஆன்மீக கலந்துரையாடல்களில் கலந்து கொண்டோம். திருமதி. சீனிவாசன் அவர்களும் எங்களோடு இணைந்தார். 

அஸ்நானி குடும்பத்தினர் புதன்கிழமை காலையில் சாதுவை வழியனுப்பி வைத்தனர். நரசிம்மன் சென்னைக்கு சென்றார் இந்த சாது மும்பைக்கு திரும்பி திரு. நாயக் அவர்களின் இல்லத்தை அடைந்தார். சென்னையை சேர்ந்த திரு. P.P.கிருஷ்ணன், அவரது சகோதரி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல பக்தர்கள் இந்த சாதுவை சந்தித்தனர். வெள்ளிக்கிழமை, ஜூன் -21 அன்று திரு. பரமேஸ்வர ஐயர் ஒரு சத்சங்கத்தை விக்ரோலியில் ஏற்பாடு செய்திருந்தார். பல பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். சனிக்கிழமை, பகவானின். பக்தர்களான ரஜினி பாக்வே, டயானா நாக்வேகர் மற்றும் திரு. மவ்லங்கர் போன்றோர் சாதுவை சாந்தி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர்.. அங்கே சாது ஒரு பெரும் கூட்டத்தினரிடையே யோகி ராம்சுரத்குமார் மற்றும் ராம்நாம் இயக்கம் குறித்து பேசினான். திரு. E.S.சிவராம ஐயர் எங்களோடு இணைந்தார். சாது பின்னர் ஆஸ்திக சங்கத்திற்கு சென்றார் . அங்கு இன்னொரு ராம்நாம் சத்சங்கத்தில் உரையாற்றினார். அங்கே பகவானின் படத்தை அனைவருக்கும் கொடுத்தார். சாது திரு. ஹரி ஜோத்சிங்கானி என்பவர் இல்லத்திற்கு விஜயம் செய்தார். ஞாயிற்றுக்கிழமை ஜூன் – 23 அன்று ராமநாம பக்தர்களிடமிருந்து விடைபெற்று, அங்கிருந்து தாதர் எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னைக்கு திங்கள்கிழமை மாலையில் வந்து சேர்ந்தான். 

ஞாயிற்றுக்கிழமை ஜூன் 30, 1991 அன்று யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் உலக ராம்நாம் இயக்கத்தின் ஊழியர்கள் கூட்டம் பகவானின் மூத்த பக்தர் மற்றும் ராமநாம இயக்கத்தின் தீவிர தொண்டர் திரு. D.S. சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்றது. அனைத்து அலுவலக உறுப்பினர்களும் சிதம்பரம், கோயம்புத்தூர் மற்றும் பிற இடங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டு, இயக்கத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்டங்களை விவாதித்தனர். சாது, பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு, பணியின் முன்னேற்றங்கள் குறித்து கடிதம் எழுதினார். வேலூரைச் சேர்ந்த பக்தர்கள் சாதுவிடம் வந்து சில துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பகவான் படத்தை வினியோகம் செய்ய பெற்றுச் சென்றனர். சென்னை தியாகராயநகரின் ராமநாம வங்கியின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஏகாம்பரம், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் துணைத் தலைவர் திரு. K.N.வெங்கடராமன் உடன் ஜூலை – 8 திங்கள்கிழமை வந்திருந்தார். கோவுந்தபுரம் ஸ்ரீ பகவன் நாம போதேந்திராள் ஆசிரமத்தை சேர்ந்த திரு. சிவகணேசன் அவர்களும் வதிந்ருந்தார். காவல்துறை துணை கமிஷனரான திரு.ஜெயராஜ் மற்றும் அவரது மனைவி திருமதி. மதுரம் எங்களோடு எங்கள் இல்லத்தின் மாலை சத்சங்கத்தில் இணைந்தனர். பகவானின் பக்தரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான திரு. பாலகுமாரன் இந்த சாதுவின் இல்லத்திற்கு ஜூலை – 9 அன்று வந்திருந்தார். அவருக்கு இந்த சாது,  சகோதரி நிவேதிதா அகாடமியின், பகவான் யோகி ராம்சுரத்குமார் பற்றிய நூல்களை பரிசளித்தார். 

ஜூலை – 10, 1991, புதன்கிழமை அன்று மோனோ ஃபோட்டோ ஃபிலிம் செட்டர் புனேவிலிருந்து வந்து சேர்ந்தது. திருவண்ணாமலையை சேர்ந்த திரு. சுந்தரராமன் மதியம் வந்திருந்தார். அவர் அதனை டெலிவரி எடுக்கவும், திரு. ராமன் என்பவரின் வீட்டிற்கு, க்ரேன் மூலம் கொண்டு வந்து இறக்கவும் உதவினார். விவேக் திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை ஜூலை 13, 1991 அன்று சென்றான். அவனிடம் இந்த சாது பகவானுக்கு ஒரு கடிதம் தந்து அனுப்பினான் : 

” பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

தங்களின் அளவற்ற கருணையாலும், ஆசியாலும், மோனோ ஃபோட்டோ ஃபிலிம் செட்டர் கருவி புனேவில் இருந்து சென்னை வந்து சேர்ந்தது. இப்பொழுது நாங்கள் அதற்குரிய சரியான இடத்தை ஏற்பாடு செய்து அதை இயக்கும் நிலைக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் இருக்கிறோம். எங்கள் முயற்சிகளின் வெற்றிக்கு உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

பூஜ்ய சுவாமி சச்சிதானந்தா தனது பாராட்டுதலையும், ஆசியையும் நமது தாழ்மையான பணிக்கும், ராம்நாம் பிரச்சாரத்திற்கும் பொழிந்திருக்கிறார். அவரது கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன். உங்கள். கருணையால் ராம்நாம் இயக்கத்தை மிக குறைந்த காலத்தில் உலகம் எங்கும் பரவ வைக்க இயலும் என்று நம்புகிறோம். 

விவேகானந்தா கேந்திர பத்ரிக்கா இந்த சாதுவின் “சுயத்தை சுத்தமாக்குங்கள்” என்ற கட்டுரையை வெளியிட்டிருக்கிறது..  அதில் இந்த சாது, உங்களையும் சேர்த்து, சில அற்புத மகான்களின் வாழ்க்கையை சிறிது வெளிச்சம் இட்டு காட்டியிருக்கிறான். இத்துடன் அந்த பத்திரிக்கையில் பிரதி மற்றும் அக்கட்டுரையின் அச்சுப்பிரதி தங்களுக்காக இணைத்திருக்கிறேன். தயை கூர்ந்து ஆசீர்வதியுங்கள். 

அகில இந்திய வானொலி தமிழில் ஒரு விவாதம் ஒன்றை, ‘அன்பின் வழியே கடவுளின் வழி’ என்ற தலைப்பில், சென்னை – A வானொலி நிலையம் மூலம் வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் – 2 ஆம் தேதி 1991 அன்று இரவு 9.30 மணிக்கு ஒலிபரப்ப இருக்கிறது. இந்த சாது வழக்கம் போல் உங்கள் புனிதவாழ்வு மற்றும் சேதியை பகிர இருக்கிறான். இதன் ஒலிப்பதிவு 26 – 07 – 1991, குரு பூர்ணிமா அன்று நடைபெற இருக்கிறது. இந்த சாதுவை ஆசீர்வதியுங்கள். 

‘தத்துவ தர்சனா’வின் ஏழாவது ஆண்டு மலர் 1991, குரு பூர்ணிமா நாளில் வெளிவருகிறது. அது தயார் ஆனவுடன் இந்த சாது அங்கே வந்து முதல் பிரதியை  உங்களிடம் சமர்ப்பிப்பான். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது. ரங்கராஜன். 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

பகவானின் தரிசனத்தை பெற்றவுடன் விவேக் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை ஜூலை – 14, 1991 அன்று பகவானின் ஆசி மற்றும் பிரசாதங்களை பெற்று திரும்பினான். சாதுவின் இல்லத்தில் இரவும், பகலும் பல யோகியின் பக்தர்கள் பயணித்ததோடு யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சாதுவின் இல்லத்தில் நடக்கும் சத்சங்கத்தில் தொடர்ந்து பங்கு கொண்டு அவ்விடத்தை ஒரு வழிப்பாட்டுத்தலமாக மாற்றினர். ராம்நாம் இயக்கத்தின் பல்வேறு ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்ந்து சாதுவோடு தொடர்பில் இருந்து முன்னேற்றங்களை அவ்வப்போது தெரிவித்தனர். ஜூலை – 22ல் பேராசியர் . தேவகி சாதுவின் இல்லத்திற்கு வந்தார். அடுத்த நாள் பிரான்ஸின் ஸ்ரீ கிருஷ்ண கார்செல் மற்றும் ஈஸ்வரி சாதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.

ஜூலை – 24 ஆம் தேதி சாதுஜிக்கு பெங்களூரைச் சேர்ந்த டாக்டர். சரஸ்வதி, பகவானின் சேதியாக, சாதுவிடம் சென்னை வேங்கீஸ்வரர் நகரைச் சேர்ந்த டாக்டர்  ராஜலட்சுமி அவர்களை சந்திக்கச் சொன்னார். சாதுஜி உடனடியாக டாக்டர் ராஜலட்சுமி அவர்களின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். அவரை டாக்டர். ராஜலட்சுமி மற்றும் அவரது சகோதரரான நவநீதம் மரியாதையோடும், பக்தியோடும்  வரவேற்றனர். அவள் தனது திருவண்ணாமலை பகவானின் இல்லத்திற்கான பயணம் குறித்தும், பகவான் அவருக்கு கருணை மற்றும் ஆசியை பொழிந்தது குறித்தும் கூறினார். தனது இல்லத்திற்கு சாதுவை வருகைதர செய்ததும் யோகியின் ஆசியாகவும் குறிப்பிட்டார். ஜூலை – 25 அன்று  சாதுவிற்கு லக்னோவில் இருந்து சுவாமி ராம்தீர்த்தா ப்ரதிஷ்டானின் ஒரு கடிதம் வந்தது. அதில் அவர்களின் இயக்குனர்களால், சாது ஒருமனதாக, தங்களின் மரியாதைக்குரிய புரவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் இருந்தது. சாது ஒரு கடிதம் ஒன்றை எழுதி விவேக் மூலமாக பகவானுக்கு திருவண்ணாமலைக்கு அனுப்பினார். 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! 

இந்த சாது குருபூர்ணிமாவை முன்னிட்டு உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் சமர்ப்பிக்கிறேன். உங்களின் தெய்வீக கருணையும், ஆசியும் எங்கள் அனைவரின் நல்ல செயல்களின் முயற்சிகள் வெற்றியடைய பிரார்த்திக்கிறோம். 

இந்த சாதுவை  பெங்களூரில் இருந்து தொலைபேசி மூலம் அன்னை சரஸ்வதி தொடர்புகொண்டு சென்னையில் இருக்கும் டாக்டர் ராஜலட்சுமி அவர்களை சந்திக்குமாறு தாங்கள் கட்டளையிட்டதாக தெரிவித்தார். அதன்படி இந்த சாது நேற்று அவரை சந்தித்தான். அவரும் எங்கள் இல்லத்திற்கு பிற்பகலில் வந்தார். நாங்கள் அவருக்கு எங்கள் பதிப்பகத்தின் அனைத்து புத்தகங்களையும், உங்கள் புகைப்படத்தையும் பரிசளித்தோம்.

சுவாமி ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானின் இயக்குனர்களால் ஒரு மனதாக இந்த சாது ப்ரதிஷ்டானின் மதிப்புக்குரிய புரவலராக தேர்ந்தெடுக்கப்பட்டதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறான். தேசப்பறறையும், செயல்முறை வேதாந்த்தையும் பயிற்றுவித்த அந்த பாரதத்தின் பெருமகனாரின் சேதியை பரப்ப, தேவையான வலிமையை இந்த சாதுவிற்கு தருமாறு தாழ்மையுடன் உங்களிடம் பிரார்த்திக்கிறேன். இத்துடன் ப்ரதிஷ்டானின் பொதுச்செயலாளர் அனுப்பிய கடிதத்தையும் இணைத்துள்ளேன். 

‘தத்துவ தர்சனா’ வின் ஏழாவது ஆண்டு மலர் 1991, சிந்தின்  தேசப்பற்று மிக்க துறவியான சாது. T.L. வாஸ்வானி  அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. அது தற்சமயம் அச்சில் இருக்கிறது, விரைவில் அச்சுப்பணி முடிந்தவுடன் தங்களின் புனித பாதங்களில் அது சமர்ப்பிக்கப்படும். இந்த சாது முதல் பிரதியை எடுத்துக் கொண்டு இந்த மாத இறுதிக்குள் உங்களிடம் வருவான். 

ஆகஸ்ட் 2, 1991 வெள்ளிக்கிழமை அகில இந்திய வானொலி, சென்னை, எனது உரையை இரவு 8.30 மணிக்கு ஒலிபரப்ப இருக்கிறது. அதற்கு முன் நான் உங்களிடம் நேரடியாக வந்து ஆசி பெற நினைக்கிறேன். அகில இந்திய வானொலியின் தமிழ் நிகழ்ச்சிகளின் பொறுப்பாளர் திரு. சக்தி ஸ்ரீனிவாசன் மற்றும் ஆங்கில நிகழ்ச்சியின் பொறுப்பாளர் திரு. விஜயகுமார் என்னுடன் உங்கள் தரிசனத்திற்கு வந்து ஆசிபெற விரும்புகிறார்கள். இந்த சாது உங்களின் அனுமதியை வேண்டி பிரார்த்திக்கிறான். 

திரு. விவேகானந்தன் இந்த கடிதத்துடன் குலசேகர ஆழ்வாரின் “முகுந்தமாலை”யை – சமஸ்கிருதத்தில் இருந்து தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூலின் பிரதியை -கொண்டுவருகிறான். இந்த நூல் எனது தந்தைவழி பாட்டனாரன காலஞ்சென்ற திரு. S.S.ராஜகோபால ஐயங்கார் அவர்களால் 70 வருடங்களுக்கு முன் மொழிப்பெயர்க்கப்பட்டது. இந்நூல் தற்சமயம் மறுபதிப்பு செய்யப் பட்டிருக்கிறது. திரு. சக்தி சீனிவாசன், “உலகம் உன் கையில்“ என்ற புத்தகத்தை உங்கள் ஆசிக்காக அனுப்பியிருக்கிறார். இந்த நூல் முழுமையும் நேர்மறை எண்ணங்கள் குறித்த கட்டுரைகளைக் கொண்டது. 

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் விரிவாக்கம் செய்யப்பட்டு அதன் சமீபத்திய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இந்தியாவிற்குள்ளும், வெளிநாடுகளிலும் தொண்டாற்றும் புதிய ஒருங்கிணைப்பாளர்களின் பெயர் பட்டியலும் உங்கள் ஆசியை வேண்டி இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. 

சௌ. பாரதி, குமாரி நிவேதிதா தங்களின் நமஸ்காரத்தை உங்களுக்கு குரு பூஜையை முன்னிட்டு தெரிவிக்குமாறு கூறியுள்ளார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். “

வெள்ளிக்கிழமை ஜூலை 26, 1991 அன்று குருபூஜை கொண்டாடப்பட்டது. ஒரு சிறப்பு சத்சங்கம் நடத்தப்பட்டு அதில் சாது மற்றும் திரு. கிருஷ்ணசாமி உரையாற்றினா். இன்னொரு சிறப்பு சத்சங்கம் செவ்வாய்க்கிழமை ஜூலை 30 அன்று நடைப்பெற்றது. ஜாம்ஷெட்பூரிலுள்ள  ஸ்ரீ ராமர் கோயிலில்  இருந்து ஸ்ரீ ராமர் பாதுகையை  திரு. T. முத்துகிருஷ்ணன் மற்றும் திரு. R.N.வெங்கடராமன் ஆகியோர் கொண்டு வந்தனர். விவேக் திருவண்ணாமலையில் இருந்து ஜூலை – 31 அன்று திரும்பி வந்தார். 

ஆகஸ்ட் – 1, வியாழக்கிழமை, 1991 அன்று அகில இந்திய வானொலி சென்னையில் ஒரு விவாத நிகழ்ச்சி தமிழில், “அன்பின் வழியே கடவுளின் வழி“ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்தது. ஆர்ச் பிஷப், ரெவ். தந்தை. அஸாரியா, மௌலானா அப்துல் வஹாப் மற்றும் இந்த சாது கலந்து கொண்டோம். ஒலிப்பதிவில் இந்த சாது யோகி ராம்சுரத்குமார் குறித்த சேதிகளை பகிர்ந்தான். திரு. சக்தி ஸ்ரீனிவாசன் மற்றும் கலா ரவி ஆகியோர் ஒலிப்பதிவுக்குப்பின் சிறிது நேரம் இந்த சாதுவுடன் பேசினர். ஆர்ச் பிஷப் இந்த சாதுவை எனது இல்லத்திற்கு திரும்ப அழைத்து வந்தார். இந்த சாது பகவானின். பக்தரான திரு. ராமசந்திர உபாத்யாயா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டான். அவரே யோகியின் முன் இந்த சாதுவின் உரைகளை யோகி கேட்பதற்கு தனது டிரான்சிஸ்டரை ஒலிக்க விடுவார். 

ஆகஸ்ட் – 3, 1991, சனிக்கிழமை அன்று இந்த சாதுஜி திரு. முத்துகிருஷ்ணன், மற்றும் திரு.K.N.வெங்கடராமன் போன்றோர் ஒரு வேனை திருவண்ணாமலை பகவானின் இல்லத்திற்கு செல்ல ஏற்பாடு செய்தனர். பாரதி, விவேக், நிவேதிதா மற்றும் சீனிவாசன் எங்களோடு இணைந்தனர். நாங்கள் திரு. சுந்தரராமன் இல்லத்திற்கு முதலில் சென்று பின்னர் குருவின் இல்லத்திற்கு சென்றோம். பேரா. தேவகி, திருமதி. முருகேசன் மற்றும் பலர் அங்கே இருந்தனர். குரு வெளியே வந்து சில பக்தர்களை ஆசீர்வதித்து விட்டு நாங்கள் வேனில் இருந்து இறங்குவதை பார்த்தார். யோகி எத்தனைபேர் என்னோடு வந்திருக்கிறார்கள் எனக் கேட்டார். சாது, “பதினொன்று” என பதிலளித்தார். யோகி பதினோறு பேர்களையும் உள்ளே வரச்சொல்லிவிட்டு சாதுவையும் வரச்சொன்னார். அவர் தேவகியையும் மற்ற சிலரையும் அனுப்பி எங்களுக்காக இடத்தை ஏற்படுத்தச் சொன்னார். சாது வாசலின் அருகே அமர்ந்து கொண்டார். அனைவரும் யோகியின் பெயரை உச்சரித்தோம். குரு, திருமதி முருகேசன் மற்றும் குடும்பத்தினரை அனுப்பி விட்டு, சாதுவை முன்னே வந்து தன் அருகே அமரச்சொன்னார். நாங்கள் பாடிக் கொண்டிருக்கும் போதே பல பக்தர்கள் வந்து, அவரது ஆசியை பெற்று சென்றனர். யோகி அவருக்கு விசிறி விடுகின்ற பணி மற்றும் அவரது சிகரெட்டை பற்ற வைக்கும் பணியை நிவேதிதாவிற்கு தந்தார். அவள் பல சிகரெட்டுகளை பற்ற வைத்தாள். யோகி இந்த சாதுவை நீ ‘கல்கி’ இதழை படித்தாயா எனக்கேட்டார். இந்த சாது “இல்லை” என்று கூறிய போது, அவர் உள்ளே சென்று ‘கல்கி’ வெள்ளி விழா இதழை கொண்டு வந்து அதில் இருக்கும் “ஒன்றுமில்லாதவர்கள்” என்ற பாலகுமாரன் எழுதிய கதையை படிக்குமாறு கூறினார். “போ, போ, பத்து மணிக்கு வா“ என்ற உத்தரவை படிக்கும் போதெல்லாம் யோகி ஒவ்வொரு முறையும் விழுந்து விழுந்து சிரித்தார். இந்த சாது பகவானிடம் பாலகுமாரன் நேற்று இரவு தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், ஆனால் அவர் இந்த கதையை பற்றி கூறவில்லை என்றும் கூறினான். பகவான் தனது தந்தையின் ஆசியை பாலகுமாரன் அவர்களிடம் தெரிவிக்குமாறு கூறினார். பகவான் எழுத்தாளர் பாலகுமாரனை  எப்பொழுது சந்தித்தோம் என நினைவில் இல்லை என்றும், ஆனால் அவர் இத்தகைய தகவல்களை எழுத தன்னை மிக நெருக்கமாக கவனித்திருக்கிறார் என்றும் கூறினார். 

இந்த சாது யோகியின் முன், சாது வாஸ்வானி அவர்களுக்கு  அர்ப்பணிக்கப்பட்ட ‘தத்துவ தரிசனம்’ ஏழாவது ஆண்டு மலரை, பகவான் முன் சமர்ப்பித்தான். அதனை வெளியிட்ட பகவான் தனக்கு இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டார். சில புத்தகங்களில் கையொப்பம் இட்டு அவைகளை சாதுவிடம் கொடுத்தார். யோகி, தான் சாது வாஸ்வானியை புனேவில் சந்தித்ததாக கூறினார். இந்த சாது திரு. முத்துகிருஷ்ணன், திரு.K.N.வெங்கடராமன், ஸ்ரீனிவாசன் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்தார். பகவான் ஜாம்ஷெட்பூரில் இருக்கும் சஹஸ்ரகோடி ராமநாம பாதுகா கோயில் குறித்து விசாரித்தார். இந்த சாது அந்த திட்டம் குறித்து விளக்கினான். திரு முத்துக்கிருஷ்ணன் அவர்களும் கோயில் பணியின் முன்னேற்றம் பற்றி பகவானிடம் கூறினார். யோகி பாதுகைகளைப் பெற்று ஆசீர்வதித்து அந்த கோயிலின் திட்டத்தை ஆசீர்வதித்து. “என் தந்தை கோயில் எழுவதை பார்த்துக் கொள்வார்” என்றார். இந்த சாது யோகியிடம் அக்டோபர் 20 முதல் 22 வரை லக்னோ மற்றும் உ.பி. செல்ல பயணத்திட்டமிட்டிருப்பதை கூறி, முடிநதால் தான் ஜாம்ஷெட்பூருக்கும் செல்ல முயல்வதாக கூறினான். அதற்கு யோகி ராம்சுரத்குமார் தனது இரு கரங்களை உயர்த்தி ஆசீர்வதித்தார். சாது ராம்நாம் பிரச்சாரம் குறித்து யோகியிடம் கூறியபோது யோகி, “நீ மாதாஜியின் பணியை செய்கிறாய், அது பெரும் பணி, சமர்த்த ராம்தாஸ் ராமநாமத்தை பரப்பினார், தியாகராஜ சுவாமிகள் செய்தார். பப்பா ராம்தாஸூம், மாதாஜி கிருஷ்ணாபாயும் செய்தார்கள். இப்போது ரங்கராஜன் ராமநாமத்தை பரப்பி வருகிறார். இது தற்சமயம் அகில உலகத்திற்குமான பணி“ என்றார். பின்னர் யோகி நகைச்சுவையாக, “ராம்தாஸ் இந்தப்பிச்சைக்காரனை ராமநாமத்தை பரப்பச் சொன்னார். ஆனால் அவன் சும்மா தனது பெயரையே பாடிக்கொண்டிருக்கிறான்“ என்றார்.  இந்த சாது, “எங்களுக்கு யோகி ராம்சுரத்குமார் ராமனேயன்றி வேறில்லை” என்றான். பகவான் கரங்களை உயர்த்தி எங்களை ஆசீர்வதித்தார். சிறிது இடைவெளிவிட்டு, இந்த சாதுவிடம் யோகி, “எப்படி நீ இந்தப் பிச்சைக்காரனில் ராமனைப் பார்க்கிறாய்?“ என வினவ, இந்த சாது, “கடவுளான ராமரே கூறியிருக்கிறார், “தேவா மானுஷ ரூபேண சரந்த்யேதே மஹீதலே” –- ”கடவுள்  பூமியில் மனித வடிவத்தில் நடமாடுவார்”. — எனவே நீங்கள் மனித வடிவில் ராமன்“ என்று கூற, யோகி அதற்கு, “இந்தப்பிச்சைக்காரன் ராம்தாஸின் பாதங்களில் மரித்துவிட்டான். யோகி ராம்சுரத்குமார் என்ற பெயர் அவனது வடிவத்தைவிட மிகுந்த சக்தி வாய்ந்தது. இந்த உடல் அழுகிப்போகும். ஆனால் பெயர் அற்புதங்களை நிகழ்த்தும் . யாரெல்லாம் இந்த பெயரை உச்சரிக்கிறார்களோ, அவர்கள் தந்தையின் ஆசியை பெறுவார்கள்“ என்றார், மேலும் அவர் தொடர்ந்தார், “நீ இந்தப்பிச்சைக்காரனின் பெயரை உனது அனைத்து சொற்பொழிவுகளிலும் அழைத்து, நீ இவனை அழிவில்லாதவனாக ஆக்குகிறாய். நேற்றிரவு இந்தப்பிச்சைக்காரன் உனது வானொலி உரையை ராமசந்திர உபாத்யாயா கொண்டு வந்த டிரான்ஸிஸ்டர் மூலம் கேட்டான். ஆனால் அதன் இடையில் சில இடையூறுகள் இருந்தன“ என்றார். அதற்கு சாது பதிலளிக்கையில் எதிர்பாராத மின்வெட்டு காரணமாக இத்தகைய இடையூறுகள் ஏற்பட்டதாகவும், அகில இந்திய வானொலி இந்த உரையை மீண்டும் ஒலிபரப்பும் என்றும் அதன் நேரத்தை நாளை நாங்கள் தெரிவிக்கிறோம் என்றும் கூறினான். 

இந்த சாது பகவானிடம் சரஸ்வதியுடம் இருந்து கிடைத்த தொலைபேசி சேதி குறித்தும், பகவானின் கட்டளைப்படி தான் டாக்டர். ராஜலட்சுமி அவர்களை சந்தித்ததாகவும் கூறினார். பகவானால் சரஸ்வதி மற்றும் ராஜலட்சுமி இருவரையும் நினைவில் கொண்டுவர இயலவில்லை. அவரிடம் அவருக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களை அனுப்பியவரே ராஜலட்சுமி எனக் கூறிய பொழுது அவரும் ராஜலட்சுமியை நினைவு கூர்ந்தார். யோகி சாதுவிடம் தனது ஆசியை ராஜலட்சுமியிடம் தெரிவித்து விடுமாறு கூறினார். சாது அவர் சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலர் ஆக ஆனதையும் கூறியதோடு, அவர் இந்த சாதுவின் வீட்டிற்கு வந்தபோது தனது பிரார்த்தனைகளை பகவானிடம் கூறிவிடுமாறு சொன்னதையும் யோகியிடம் பகிர்ந்தார். 

இந்த சாது பகவானிடம் மோனோஃபோட்டோ ஃபிலிம் செட்டர் புனேவில் இருந்து வந்ததையும், அதனை நிறுவவதற்கான இடத்தை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் கூற, “என் தந்தை உனக்கு உதவுவார்“ என்றார். பின்னர் நாங்கள் அவரிடம் எங்களின் திட்டமான, “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்“ நூலை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்வது குறித்து கூறினோம். அவர் எங்கள் முயற்சிகளை ஆசீர்வதித்தார். நாங்கள் திரு. கிருஷ்ணா கார்செல் அவர்கள் பாரிஸில் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தை அமைத்து வருவதைக்குறித்து சென்ற வாரம் வந்த தொலைபேசி செய்தி பற்றி யோகியிடம் கூறினோம். நாங்கள் அவரிடம் பிரென்ச் மொழி துண்டுப்பிரசுரங்களின் சில பிரதிகளையும் அவரிடம் கொடுத்தோம். அவர் அதனை பிரென்ச் தெரிந்தவர்கள் மூலம் படித்து தெரிந்து கொள்வதாக கூறினார். 

இந்த சாது திரு.K.N. வெங்கட்ராமன் “மேக் ஹிஸ்டரி” என்ற பத்திரிகையின்  பதிப்பாளர் என்றும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் ஹோமங்களை ஏற்பாடு செய்பவர்  என்றும் கூறினான். பகவான் அவரை தன் அருகே அழைத்து தனது ஆசியை பொழிந்தார். அவரது கரங்களைப் பற்றி, முதுகையும் தலையையும் தடவி, “நீ வரலாற்றை உருவாக்குகிறாய்” என்றார். யோகி வெங்கடராமனின் மனைவி நீலாவை அழைத்து, தான் அவரது பாதங்களை தொடலாமா எனக். கேட்டார். நீலா அதிர்ச்சியுற்றதோடு, முதலில் யோகி தனது பாதங்களை தொடுவது குறித்து தயங்கினார். ஆனால் பின்னர் அனுமதித்து, அவரது பாதங்களில் வீழ்ந்து  கண்களில் கண்ணீரோடு வணங்கினார். பிரசாதங்களை வினியோகிக்கும் போது யோகி நீலாவின் வாயில் வாழைப்பழத்தை  திணித்தார். பகவான் மலர்களையும், ஒரு பத்து ரூபாய் நோட்டையும், ஒரு காலி சிகரெட் பாக்கெட்டையும், நிவேதிதாவிற்கு தந்து ஆசீர்வதித்தார். திரு. சுரேஷ் தஞ்சாவூரில் இருந்து ஒரு பை நிறைய இனிப்புகளை கொண்டு வந்து பகவானுக்கு தந்தார். பகவான் அதனை நிவேதிதாவிற்கு தந்தார். யோகி நிவேதிதாவின் கல்வி குறித்து கேட்டார். இந்த சாது பகவானிடம் தேர்வுகளை எழுதும் போது நிவேதிதா ‘யோகி ராம்சுரத்குமார்’ என்பதை சிரிய  எழுத்துக்களில் விடைத்தாளில் மேலே எழுதுவாள் என்றும் அவள் நூற்றுக்கு நூறு பெறுவாள் என்றும் கூறினான். பகவான் நகைச்சுவையாக தான் பல்கலைகழகத்திடம் தனது பெயரை பயன்படுத்தி நூற்றுக்கு நூறு பெறுகிறாள் என்று கூறப்போவதாக பெரும் சிரிப்புடன் கூறினார். பின்னர் யோகி ஒவ்வொருவரின் பெயரைக் கேட்டு அவர்களை ஆசீர்வதித்தார். யோகி விவேக்கையும் அவனது தேர்வுகளில் எந்த நிலுவையும் இன்றி வெற்றிபெற ஆசீர்வதித்தார். இந்த சாது பகவானிடம் தாங்கள் திருக்கோயிலூர் சென்று திரு. D.S.சிவராமகிருஷ்ணன் அவர்களை சந்திக்க விரும்புவதாக கூறினார். பகவான் திரு.D.S.S தன்னை சந்தித்ததாகவும் அவர் நலமாக இருப்பதாகவும் சொன்னார். இந்த சாது யோகியை மீண்டும் நாளை சந்திக்க அனுமதி கேட்டார் . யோகி அனுமதி தந்தார். யோகி சாதுவின் தண்டம் மற்றும் தேங்காய் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்து அனுப்பினார். அவர் வாசல்வரை வந்து எங்களை வழியனுப்பி அந்த சந்தில் இருந்து நாங்கள் மறையும் வரை எங்களை பார்த்தார். நாங்கள் அனைவரும் அவருடனான மெய்சிலிர்க்கும் மூன்று மணி நேர அனுபவங்களோடு திரும்பினோம். நாங்கள் சுந்தரராமன் குடும்பத்துடன் சேஷாத்திரி ஆசிரமம், ரமணாச்ரமம் என பயணித்து விட்டு அவரோடு திருக்கோயிலூர் சென்றோம். நாங்கள் அங்கே திரு. D.S.S உடன் சிறிது நேரம் செலவழித்து விட்டு யோகி சுவாமியை சந்தித்தோம். நாங்கள் ராம பாதுகையை ஞானானந்தா தபோவனத்திற்கு கொண்டு சென்று பக்தர்களின் தரிசனத்திற்கு ஆஞ்சநேயர்  மற்றும் ஞானானந்தா சன்னிதிகளில் வைத்து பிரார்த்தனை மற்றும் ஹனுமன் சாலிசா  பாடினோம்.. திருமதி. திலகா வீட்டில் கைலாச குருக்கள் பாதுகைக்கு பூஜையை ஏற்பாடு செய்தார். பின்னர் நாங்கள் அனைவரும் திருவண்ணாமலைக்கு வந்து இரவு சுந்தரராமன் இல்லத்தில் ஓய்வு எடுத்தோம். 

ஆகஸ்ட் 4, ஞாயிற்றுக்கிழமை நாங்கள் கிரி பிரதட்சணம் மேற்கொண்டு பகவான் தனது கிரிவல காலங்களில் செல்லும் டீ கடைக்கு சென்றோம். பின்னர் பகவானின் இல்லத்திற்கு பத்து மணிக்கு வந்தடைந்தோம். தேவகி மற்றும் நண்பர்கள் வெளியே காத்திருந்தனர். பகவான் எங்களை உள்ளே வரச்சொன்னார். உள்ளே இருந்த பலரை யோகி விடை கொடுத்து அனுப்பினார். பகவான் எங்களோடு இரண்டரை மணி நேரம் செலவழித்தார். திருமதி. முருகேசன் வந்து யோகிக்கு மாலை அணிவித்துவிட்டு சிறிது நேரம் கழித்து வருவதாக கூறி விடைப்பெற்றார். பகவான் அந்த மாலையை நிவேதிதா மற்றும் நீலாவையும் தலையில் சூடிக் கொள்ள சொன்னார்.  நாங்கள் பகவானின் பெயரைப் பாடினோம். 

இந்த சாது, பகவானிடம், டாக்டர். K. வெங்கடசுப்பிரமணியம் சென்னையில் செப்டம்பர் மாதம் நடத்த விரும்பும் பகவான் பற்றிய கருத்தரங்கு திட்டம் குறித்து  கூறினான். பகவான், “டாக்டர். வெங்கடசுப்பிரமணியம் கருத்தரங்கினை டெல்லியில் நடத்த விரும்பினார், ஆனால் அதனை இந்த பிச்சைக்காரன் மறுத்தான். ஆனால் நீ இப்போது அது செப்டம்பரில் சென்னையில் நடத்தப்படும்  என்கிறாய்.“ இந்த சாது யோகியிடம் இது தொடர்பாக திரு. AR.PN.ராஜமாணிக்கம் தன்னை சந்தித்ததாக கூறினார். யோகி சாதுவை ராம்நாம் பிரச்சாரத்தில் மட்டும் கவனம் செலுத்துமாறு கூறினார். “நீ பெரும் பணியை செய்து வருகிறாய். இப்பொழுது அது அகில உலக இயக்கமாக இருக்கிறது. நீ அதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தப்பிச்சைக்காரனுக்கு கோயில் கட்டுவது, கருத்தரங்கு, புத்தக வெளியீடு மற்றும் வேறு எதிலும் ஆர்வம் இல்லை” என்றார். 

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை சேர்ந்த மனுபாய் மற்றும் சில பக்தர்கள் வந்து யோகியின் ஆசியை பெற்று சென்றனர். இந்த சாது பகவானிடம் திரு. தெ.பொ.மீ. ஞானப்பிரகாசம் அவர்கள் குறித்து பேசினான். யோகி இந்த சாதுவிடம் நீயே சுயமுடிவு எடுத்துக்கொண்டு எப்படி உதவ முடியுமோ அப்படி உதவி செய் என்று கூறினார். இந்த சாது பகவானிடம் லீ லோசோவிக். அவர்களின் நிகழ்ச்சி குறித்து பேசினான். பகவான், லீ அவர்கள் கடும் வெயிலில் தான் அழைக்க காத்திருந்ததை நினைவு கூர்ந்தார். 

ராம பாதுகை வழிப்பாட்டுக்கான சிறப்பு சத்சங்கத்தை சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது குறித்து இந்த சாது யோகியிடம் கூறினான். யோகி அனைவருக்கும் பிரசாதங்களை கொடுத்தார். பின்னர் சாதுவின் தண்டம் மற்றும் தேங்காய் சிரட்டையை வாங்கி ஆசீர்வதித்து கொடுத்தார். வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பினார். அவர் வேனின் ஓட்டுனர் வந்து வாகனத்தை எடுத்து அந்த தெருவை கடக்கும் வரை காத்திருந்தார். நாங்கள் மாலை நேர விழாவிற்கு சென்னைக்கு உரிய நேரத்தில் வந்தடைந்தோம். பாதுகா பூஜை சாதுவின் இல்லத்தில் நடந்தது. திரு. பாலகுமாரன் மற்றும் பல பகவானின் பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர். அருகில் இருந்த இல்லத்தில் சாயி பூஜா நடைப்பெற்றது. அந்த பக்தர்களும் சாதுவை அழைத்து அவரது ஆசியை பெற்றனர். விவேக் திருவண்ணாமலைக்கு மீண்டும் ஆகஸ்ட் 9 அன்று சென்று ஆகஸ்ட் 11 அன்று திரும்பி வந்தான். திரு. ராஜமாணிக்கம் மற்றும் நாடார் பிரஸ்ஸின் திரு. சண்முகம்  ஆகியோர் ஆகஸ்ட் 12 அன்று வந்தனர். பகவான் சாதுவுக்கு தீக்ஷய்  அளிக்கும் பொழுது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆலமரத்து குகையை சேர்ந்த திரு. சுந்தரம் சுவாமி வந்திருந்தார்.  காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தை சேர்ந்த சுவாமி ஜோதிர்மயானந்தா இந்த சாதுவை சந்தித்தார். ஆகஸ்ட் 2  அன்று, திருவேடகத்தை சேர்ந்த விவேகானந்தா கல்லூரியின் துணை முதல்வர் திரு. வி.எஸ். நரசிம்மன், வந்திருந்தார். மாலையில் ஒரு சிறப்பு ராம்நாம் சத்சங்கம் விஜயா ஸ்ரீனிவாசன் இல்லத்தில் நடைப்பெற்றது அதில் டாக்டர் ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கு பெற்றனர். 

ஆகஸ்ட் 21, 1991 அன்று புதன்கிழமை இந்த சாது பகவானுக்கு எழுதிய கடிதத்தில் காயத்ரி ஜெப தினத்தன்று தாம் உண்ணாவிரதம் துவங்க இருப்பது குறித்தும் அதற்கு முன் அவரது ஆசி பெற திருவண்ணாமலைக்கு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

இந்த சாதுவும், விவேக்கும் ஆகஸ்ட் 25, 1991 ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கே வருவதற்கான விருப்பத்தை சமர்ப்பிக்கின்றார். வழக்கம்போல் எங்களின் காயத்ரி ஜபம் திங்கள்கிழமை ஆகஸ்ட் 26, 1991 அன்று நடைபெற இருக்கிறது. அன்றிலிருந்து இந்த சாது தனது 54 நாள் விரதத்தை விஜயதசமி வரை (18 ஆம் தேதி அக்டோபர் 1991) இருப்பதற்கு தங்களின் ஆசியும், கருணையும் தேவை. 

உங்கள் குறைவற்ற கருணையால் ராம்நாம் பிரச்சாரம் வேகமாக பரவி வருகிறது. பூஜ்ய சுவாமி சச்சிதானந்தா, மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் இலக்கினை அடைவதில் நமது வளர்ச்சி குறித்த தனது மகிழ்ச்சியை தெரிவித்த கடிதத்தை இத்துடன் தங்களின் பார்வைக்கு இணைத்துள்ளோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது. ரங்கராஜன். 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

ஜெட்டாவில் இருந்து ஒரு பக்தை, திருமதி. சித்ரா ஏழுமலை, தனது காணிக்கையை அனுப்பியிருந்தார். சாதுஜி பிரசாதமாக பகவானின் படங்களை அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் அனுப்பினார். ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் – 25 அன்று சாது, டாக்டர். ராஜலட்சுமி, பாரதி, விவேக், நிவேதிதா, டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் திருவண்ணாமலைக்கு சென்று பகவானின் இல்லத்தை அடைந்தனர். யோகி கோயிலில் இருந்து வந்து அவரது இல்லத்திற்கு அருகே இருக்கும் பாத்திரக்கடை முன்னர் அமர்ந்தார். கூட்டம் அங்கே கூடியது. நிவேதிதா அவரிடம் சென்று வணங்கியபோது, அவர் எங்கள் அனைவரையும் அழைத்து தன் அருகே அமர வைத்தார். அவர் மற்ற பக்தர்களை ஆசீர்வதித்து அவர்களை கிளம்புமாறு கூறினார். ஆனால் பலர் அங்கிருந்து நகரவில்லை. பகவான் அவர்களை நோக்கி நகைச்சுவையாக, “இத்தகைய சிக்கல்களையே இந்தப் பிச்சைக்காரன் எதிர்கொள்கிறான். அவன் விளம்பரத்தை விரும்புகிறான். ரங்கராஜனைப் போன்ற நண்பர்கள் அவனுக்கு பெரும் விளம்பரங்களை செய்கின்றனர். இப்போது இதுதான் நிலைமை“ என்றார். 

யோகி ராம்சுரத்குமார் பெருங்களிப்புடன் சிரித்தவாறே சாதுவின் முதுகில் தட்டியும், விவேக்கின் தோளில் தட்டியும் திரும்ப திரும்ப தான் கூறியதையே கூறினார். எஸ்.பி.ஜெனார்த்தனன் தனது நண்பர்களுடன் வந்திருந்தார். யோகி அவரிடம் எத்தனைபேர் வந்திருக்கிறார்கள் என கேட்டார். அவர் “ஏழு“ என்றார். பகவான் சாதுவிடம் திரும்பி அவரோடு எத்தனை பேர்கள் வந்திருந்தார்கள் எனக் கேட்டார். சாது, “ஏழு” என்றார். பின்னர் யோகி, “சரி நாம் நமது இடத்திற்கு போவோம்” என்றார். அவர் எங்கள் அனைவரையும் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் . தனது இல்லத்தின் வாசலுக்கு வந்தப்பின் யோகி இந்த சாதுவிடம் அவனோடு வந்த நண்பர்களை உள்ளே அனுப்பிவிட்டு அவர்களை பின்தொடருமாறு சொன்னார். அவர் பின்னர் ஜனார்த்தனன் மற்றும் அவரது நண்பர்களையும் உள்ளே வரச்சொல்லிவிட்டு எங்களிடம் வாசல் கதவை மூடச்சொன்னார். அப்போதும் கூட்டம் எங்களைச்சுற்றி நிற்க அவர் எழுந்து, வாசலருகே வந்து அங்கிருந்தவர்களை கலைந்து போகுமாறு வேண்டினார். பின்னர் அவர் திரும்பி வந்து வாசல் கதவருகே அமர்ந்து கொண்டு, சாதுவை தன் அருகே அமருமாறு சொன்னார். பின்னர் யோகி என்னிடம் ‘பாலசோதிடம்’ இதழை பார்த்தாயா எனக் கேட்டார். இந்த சாது, “சமீபத்திய இதழை பார்க்கவில்லை“ என்றான். பின்னர் யோகி, “சில வேலைகள் நடந்திருக்கின்றன. அவர்கள் சென்று பார்த்து சிலவற்றை இணைத்திருக்கின்றனர். பரவாயில்லை” என்றார். பின்னர் யோகி ஜனார்த்தன் இடம் நீ அந்த இதழை பார்த்தாயா என வினவினார். அவர் “இல்லை“ என பதிலளித்தார். பின்னர் பகவான் உள்ளே சென்று அந்த இதழின் பிரதி ஒன்றை கொண்டு வந்து ஜனார்த்தன் இடம் தந்து அதனை படிக்கச் சொன்னார். அவர் இன்னொரு பிரதியை சாதுவிடம் கொடுத்துவிட்டு அவரை டார்ச் விளக்கு வெளிச்சத்தில் படிக்கச் சொன்னார். அதனைப் படித்து முடித்தப்பின் சாது “மேக் ஹிஸ்டரி” யில் வந்த கட்டுரைப் பற்றி குறிப்பிட்டார். யோகி தான் அதனை பெற்றோமோ என நினைவுப்படுத்தி பார்த்த வண்ணம் இருந்தார். சாது அவரிடம் அந்த கட்டுரையை காட்டியப்பின், யோகி தான் அதனை படித்ததாக கூறினார். பின்னர் இந்த சாது டாக்டர் வெங்கடசுப்பிரமணியம் அவர்களின் கட்டுரை குறித்து கூறினார். பகவான் சாதுவிடம் அதை படிக்கச் சொன்னார். யாரோ ஒருவர் வந்து யோகியிடம் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு குழந்தை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், மருத்துவர்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் கூற, யோகி மிக எளிமையாக, “நாம் பார்ப்போம். நீ இப்பொழுது கிளம்பலாம்“ என்றார். 

இந்த சாது  பகவானிடம், ராமநாம மகிமை” என்ற புத்தகத்தின் அட்டைப்பட வடிவமைப்பு மற்றும் கையெழுத்துப் பிரதியை காட்டினார். யோகி நிவேதிதாவிடம் அதை படிக்கச் சொன்னார் அவள் ட்யூப்லைட்டின் கீழே அமர்ந்து படித்தாள். அவர் கையெழுத்து பிரதியை ஆசீர்வதித்தார். அவர் சிறிது ஓய்வை எடுத்துக்கொண்டு மீண்டும் விளம்பரம் குறித்து பேசினார். “ஜனார்த்தனன் இந்தப் பிச்சைக்காரனின் படத்தை ஒளிவட்டத்துடன் ஆப்செட் பிரிண்டிங்கில் உருவாக்கினான். இப்போது ரங்கராஜன் மிகப்பெரிய விளம்பரத்தை எங்கும் செய்து வருகிறான்.“ என்றார். ஜனார்த்தனன் பகவானிடம் அகிலத்திரட்டு நூலில் பகவானுக்கு ஆப்செட் பிரிண்டர்களுடன் இருக்கும் தொடர்பும் அந்த அச்சகத்தின் பெயர் ஷோபனா என்பதும் இருப்பதாக கூறினார். மேலும் ஜனார்த்தனன், “சுவாமிஜியின் பெயரும், வடிவமும் போதும். ஆனால் சிலசமயம் அவரது ஸ்தூல உடலின் தரிசனம் தேவை என்பதாலும், நாங்களும் அத்தகையோரில் ஒருவர் என்பதாலும், அவரை தரிசிக்க இத்தகைய பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்க முடியவில்லை” என்றார். பகவான் பெருங்களிப்புடன் சிரித்தார். சாதுஜி டாக்டர்.ராஜலட்சுமி அவர்களை பகவானிடம் அறிமுகப்படுத்தி அவரே ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நூல்களை அனுப்பியவர் என்றார். யோகி ராஜலட்சுமியிடம் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்க, அவர், ‘ஒன்றுமில்லை’ என பதிலளித்தார். இந்த சாது யோகியிடம் ராஜலட்சுமி சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலர் என்றார். யோகி தனது கரங்களை உயர்த்தி ஆசீர்வதித்தார். இந்த சாது யோகியிடம் நாளை முதல் தான் துவங்க இருக்கும் விரதம் குறித்து கூறினார். யோகி எங்களை அடுத்த நாள் காலை 10 மணிக்கு வரச்சொன்னார். எங்களோடு இரவு 7.30 முதல் 9.30 வரை செலவழித்தப்பின் நாங்கள் யோகியிடம் இருந்து விடைப்பெற்று, பெண்களை இரவு தங்குவதற்காக திரு. சுந்தரராமன் அவர்களின் இல்லத்தில் விட்டுவிட்டு, நாங்கள் உடுப்பி பிருந்தாவன் ஓட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டோம். தரும்புரியை சேர்ந்த திரு. G.S.ராதாகிருஷ்ணன் எங்களோடு இணைந்து ஓட்டலில் தங்கினார். 

திங்கள்கிழமை ஆகஸ்ட் 26 காலையில் நாங்கள் சுந்தரராமன் இல்லத்திற்கு சென்றோம். இந்த சாது மற்றும் விவேக் சங்கல்பம் செய.து காயத்ரி ஜபம் துவக்கினோம். பின்னர் நாங்கள் கிரிபிரதட்சணம் துவக்கினோம். பாரதி, ராஜலட்சுமி மற்றும் ராதாகிருஷ்ணன் இந்த சாதுவுடன் இணைந்து கொண்டார்கள். சாது எல்லா நேரமும் காயத்ரியை உச்சரித்துக் கொண்டிருந்தான். 10, 800 காயத்ரி முடிந்தவுடன் நாங்கள் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று ராமநாம தாரக மந்திரத்தை உச்சரித்தோம். பின்னர் நாங்கள் கிரிவலம் சென்று அங்கே அடி அண்ணாமலை கோயிலில் தரிசித்துவிட்டு, யோகி கிரிவலம் வருகையில் டீ சாப்பிடும் டீ கடைக்கு சென்று, அந்த கடையை நடத்திவரும் தண்டபாணி மற்றும் சக்கரபாணி என்ற பகவானின் பக்தர்களுக்கு யோகியின் படங்களை பரிசளித்தோம். கிரிபிரதட்சணம் முடித்துவிட்டு நாங்கள் யோகியின் இல்லத்தை காலை பத்துமணிக்கு அடைந்தோம். அங்கே பெரிய கூட்டம் காத்திருந்தது. பகவான் வெளியே வந்து இந்த சாதுவையும் அவரின் உடன் வந்த குழுவினரையும் உள்ளே வரச்சொன்னார். பின்னர் வெளியே இருந்தவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களை கிளம்புமாறு சொன்னார். 

பகவான் தனது சம்பாஷணையை இந்த சாதுவுடன் துவக்கினார். யோகி சாதுவிடம் இன்றைய காலை செய்திதாளை படித்தாயா என்று கேட்டார். சாது இல்லை என்று தலையை அசைத்தார். யோகி சாதுவிடம் நீ ரஷ்யாவின் வளர்ச்சியை கவனித்து வருகிறாயா என்று கேட்டார். இந்த சாது “ஆம்“ என்றான். யோகி, “சோசியலிசம்” என்று கூறிவிட்டு சிரிக்கத்துவங்கினார். இந்த சாது, “கம்யூனிசம் ரஷ்யாவில் நொறுங்கி விட்டது“ என்று கூற, யோகி, “சைனாவிற்கு என்ன ஆகும்?“ என வினவினார். சாது அதற்கு, “மொத்த உலகமும் கம்யூனிசத்தை கைவிடுகையில் சைனாவும் அதை பின்பற்றும்” என பதிலளித்தார். மேலும், “நாஸ்ட்ரடாமஸ் இந்த நூற்றாண்டின் இறுதியில் ஹிந்துயிசம் இந்த உலகத்தை ஆட்சி செய்யும் என கணித்திருக்கிறார். அகண்ட பாரதம் என்ற ஸ்ரீ அரவிந்தரின் கனவு நிஜமாகும்” சிறிது இடைவெளி விட்டு சாது தொடர்ந்தார, “உங்கள் கருணை மற்றும் ஆசியால் நமது ராம்நாம் மையம் மாஸ்கோவிலும் அமையலாம்” என்றான். பகவான் சிரித்தார். மக்கள் அவரது தரிசனத்திற்கு வர அவர் எழுந்து வாசலுக்கு சென்று அவர்களை ஆசீர்வதித்தார். கிறிஸ்டி மற்றும் ரொஸோரா வந்தனர்..கிறிஸ்டி மாயம்மா மற்றும் அவரது புகைப்படங்களை சட்டமிட்டு கொண்டுவந்தார் யோகி அவற்றை ஆசீர்வதித்தார். ராஜலட்சுமி அவருக்கு அர்ப்பணித்த மலரை அவர் எங்கள் அனைவருக்கும் ஒவ்வொன்றாக வழங்கினார். சாது திரு. G.S.ராதாகிருஷ்ணன் அவர்களை யோகியிடம் அறிமுகப்படுத்தி ராமநாம பிரச்சாரத்திற்காக அவர் தயாரித்த ஸ்டிக்கர் மற்றும் ராமநாம லிகித ஜப நோட்டுக்களையும் காட்டினார். யோகி அதனை பார்த்து ஆசீர்வதித்தார். நேற்று இரவு குழந்தையின் உடல்நலம் கவலைக்கிடமாக இருந்தது என்று கூறியவர் குழந்தையின் உடலநலம் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறி வேலூரில் இருந்து தகவல் வந்ததாக கூறிவிட்டு சென்றார். பகவான் அவரிடம் டாக்டர்கள் குழந்தையை மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்களா எனக் கேட்டார். வந்தவர் “ஆம்“ என்று கூறியதோடு, “அந்த குழந்தையின் மனநிலை குறைப்பாட்டிற்கும் நாம் மருத்துவத்தை துவக்கலாமா?“ என்று அவர் கேட்க, பகவான் செய்யலாம் ஆனால் அது அதிக செலவினைத் தருமா என்று கேட்க, வந்திருந்த நபர் தான் அவ்விதமாகவே நினைப்பதாக கூற, பகவான், “பார்ப்போம்” என்றார். யோகி அவரை ஆசீர்வதித்து பிரசாதங்களோடு அனுப்பி வைத்தார். 

நிவேதிதா அவரது பெயரை ஜபிக்கத்தொடங்கினார். அவர் எங்களை நாம ஜபத்தை அரைமணி நேரம் தொடருமாறு சொன்னார். பின்னர் அவர் எங்களை ராம்நாம் ஜபிக்கச் சொன்னார். விவேக் ஆனந்தாஸ்ரமத்தின் ட்யூனில் பாடத்துவங்கினான். நாங்கள் அவனோடு இணைந்தோம். பகவான் நன்றாக சிரித்து தனது இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்து கைகளை மேலும், கீழுமாக ஒரு இசையமைப்பாளர் போல் அசைத்தார். நாங்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்தோம், ஆனால் பகவான் ஒரு தலையணையை எடுத்து அதில் சாய்ந்து ஓய்வெடுக்கத் துவங்கினார். அவர் எழுந்தவுடன் எங்கள் அனைவருக்கும் விடைதருவதாக கூறினார். யோகி எனது விரத துவக்கத்தை அன்று ஆசீர்வதித்தார். சில பக்தர்கள் அவருக்கு தந்திருந்த ஸ்டிக்கர்களை பக்தர்கள் அனைவருக்கும் ஒவ்வொன்றாக கொடுத்துவிட்டு மீதமிருந்த. அனைத்தையும் சாதுவிடம் ஆசீர்வதித்து கொடுத்து அதனை ராம்நாம் கூறும் பக்தர்களுக்கு வினியோகம் செய்யும் படி கூறினார். G.S. ராதாகிருஷ்ணன் தனது மகளின் உடல்நலக்குறைவு குணமாக யோகியிடம் ஆசியை வேண்டினார். டாக்டர். ராதாகிருஷ்ணன் பகவானிடம் தனது சகபணியாளரான திரு.சுந்தரேசன் அவர்களின் உடல்நலக்குறைவு பற்றி பேசினார். பகவான் அவர்களை ஆசீர்வதித்து, “தந்தை அவர்களை கவனித்துக் கொள்வார்“ என்றார். பகவான் ராஜலட்சுமியிடம் என்ன செய்கிறாய் என்று கேட்க அவர், “ஒன்றுமில்லை” என்றார். பகவான் சிரித்துக்கொண்டே, “நீ ஒன்றும் செய்வதில்லை“ என்று கூறினார். யோகி இந்த சாதுவின் தண்டம் மற்றும் பிச்சைப்பாத்திரத்தை எடுத்து ஆசீர்வதித்து கொடுத்தார். நாங்கள் அனைவரும் அவரிடமிருந்து விடைப்பெற்றோம். மற்றவர்கள் பிருந்தாவனில் உணவு எடுத்துக்கொண்டனர். சாது மற்றும் விவேக் திரு. சுந்தரராமன் அவர்களின் இல்லத்திற்கு வந்தோம். விவேக் உணவை உட்கொண்டான். இந்த சாது விரதம் காரணமாக திரவ ஆகாரம் எடுத்துக்கொண்டான். நாங்கள் அனைவரும் திரு. G.S. ராதாகிருஷ்ணனை தருமபுரிக்கு வழியனுப்பிவிட்டு சென்னைக்கு திரும்பினோம்.

செப்டம்பர் – 2 ஆம் தேதி சாது பகவானுக்கு, டாக்டர்.ராதாகிருஷ்ணன் உடன் பணிபுரியும்  பேரா. சுந்தரேசன் அவர்கள் அமெரிக்காவிற்கு சிகிச்சை பெற செல்லும் முன் யோகியின் தரிசனம் பெற திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொள்வது குறித்து, கடிதம் எழுதினார். திரு. சுந்தரேசன் யோகியின் தரிசனத்தை செப்டம்பர் – 5 அன்று பெற்றார். நீலகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கன்னியாக்குமரி மற்றும் சில பக்தர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தும் சாதுஜி இல்லத்தில் மாலையில் நடைபெறும் ராம்நாம் சத்சங்கத்தில் பங்குபெற வந்தனர். செப்டம்பர் 15 அன்று திரு. D.S.கணேசன், திரு.பரிமேலழகன், நாகர்கோயில் திரு.T. பாலகிருஷ்ணன், திரு. ஆனந்தராஜ்,  அருப்புக்கோட்டையை சேர்ந்த திரு. சந்திரசேகரன் மற்றும் திருமதி. சந்திரசேகரன் போன்றோர் இந்த சாதுவின் இல்லத்திற்கு வந்து உரையாடினர். திரு. ஆழ்வார் அடுத்தநாள்  வந்தார். திரு.K.N.வெங்கடராமன் ஒரு சிறிய புத்தகமான, “ராமநாம மகிமையும், அதனை ஜபிக்கும் முறையும்“ என்ற நூலை ராம்நாம் பிரச்சாரத்தில் தமிழகம் எங்கும்  வினியோகிப்பது பற்றி சாதுவிடம் சர்ச்சை செய்தார்.         திருச்சியிலிருந்து திரு. P. ராமகிருஷ்ணன் ராம நாம லிகித ஜபம் நோட் புக்குகள் அடங்கிய பெட்டிகளை  அனுப்பிவைத்தார். ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர். 22 அன்று சர்வஜனிக் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை கொண்டு சென்று கடலில் கரைக்கும் விழா விநாயக சதுர்த்தியை முன்னிட்டு நடைப்பெற்றது அதில் விவேக், நிவேதிதா மற்றும் பாரதி போன்றோர் கலந்து கொண்டனர் . பெரிய விநாயகர் சிலை  சாதுவின் இல்லத்திற்கு முன்னால் ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்டபோது அதற்கு வழிபாடுகள் மற்றும் ஆரத்தி யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மூலம் நடத்தப்பட்டது. செப்டம்பர் 28 அன்று யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர்கள் கூடுவாஞ்சேரியில் ஒரு வீட்டை ராம்நாம் பணிக்காக வாடகைக்கு எடுத்தனர். மாலையில் ராம்நாம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சாதுவின் இல்லத்தில் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவின் திட்டமிடுதலுக்காக சந்தித்தனர். டாக்டர். ராஜலட்சுமி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வேங்கீஸ்வரர் ஆலயத்தை பகவானின்  ஜெயந்திக்கான இடமாக முடிவு செய்தார். அக்டோபர் 7 அன்று ஒரு சிறப்பு சத்சங்கம் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்றது. சாதுஜி பகவானுக்கு புதன்கிழமை, அக்டோபர் 9, 1991 அன்று ஒரு கடிதம் ஒன்றை எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

உங்கள் அளவற்ற கருணையினாலும், ஆசியாலும் இந்த சாது விஜயதசமி அன்று நிறைவு பெறும் தனது 54-நாள் விரதத்தில் 45-வது நாள் விரதத்தை முடித்துவிட்டான். உங்கள் ஆசியால் இந்த சாது சித்திரகூடத்திற்கு சென்றுவிட்டு பிரயாகைக்கு ஞாயிற்றுக்கிழமை 14 – 10 -1991 செல்ல இருக்கிறான். பின்னர் லக்னோவிற்கு 20 – 10 – 1991 அன்று சென்று, சுவாமி ராம் தீர்த்தா ஜெயந்தி விழாவில் அக்டோபர் 20 முதல் 22 வரை இருப்பான். பின்னர் ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானின் திரு.R.K. லால், மற்றும் T.S.சினஹா உடன், நாங்கள் உத்தர பிரதேசத்தில் ராம்நாம் பிரச்சாரம் செய்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். இந்த சாது சென்னைக்கு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4, 1991, அன்று திரும்பும் முன், நாங்கள் ஜாம்ஷெட்பூர், துர்க்காபூர் மற்றும் கல்கத்தாவிற்கும், பயணிக்க விரும்புகிறோம். 

நாங்கள் திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை 11 – 10 – 1991 அன்று, ராம்நாம் சுற்றுப்பயணத்தின் பணிக்காக உங்கள் ஆசியைப் பெற, திருவண்ணாமலைக்கு வருகிறோம். தமிழில் சிறிய புத்தகமான “ராம்நாம் மகிமை” மற்றும் “தத்துவ தர்சனா” அடுத்த இதழ் அச்சில் உள்ளது. அதனையும் நாங்கள் கொண்டு வருவோம் என நம்புகிறோம். நாங்கள் அன்று மாலையே அங்கே வந்தடைவோம். 

லா வி பெக்கன்கோர்டோயிஸ் (வாழ்க்கை) என்ற பிரான்ஸ் நாட்டு இதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. ‘இந்தியா என் தாய், யோகி என் தந்தை’ என்ற கட்டுரையை, பாரிஸின் யோகி ராம்சுரத்குமார் அகில உலக இளைஞர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், திரு. J.B. கார்செல் எழுதியுள்ளார். அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

நாங்கள் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் ராம்நாம் ஜபயோக மையத்தை நடத்த, செங்கல்பட்டு மாவட்டம், ஆதனூரில்,  திருவள்ளுவர் போக்குவரத்து பணியாளர்களின் வீட்டுவசதி காலனியில், ஒரு 400 குடும்பங்களின் நலனை முன்னிட்டு, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளோம். இதன் துவக்கவிழா ஞாயிற்றுக்கிழமை 13 – 10 – 1991 அன்று நடைபெறும் நாங்கள் உங்கள் ஆசியை இந்த ராம்நாம் பரப்பும் முயற்சியில் இருக்கும் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். 

அன்பளிப்பாக வந்த மோனோ ஃபோட்டோ ஃபிலிம் செட்டர் 400-ஐ நிறுவுவதற்கான சரியான இடத்தை சென்னையில் இன்னமும் நாங்கள் கண்டறியவில்லை அதற்காகவும் நாங்கள். உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன் 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

‘தத்துவ தர்சனா’ பிரதிகள் அச்சகத்தில் இருந்து 11 – 10 – 1991 அன்று மாலையில் வந்ததன் காரணமாக நாங்கள் திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை அக்டோபர் 12 அன்று காலையில் கிளம்பி குருவின் இல்லத்திற்கு 11 மணிக்கு சென்று சேர்ந்தோம். விவேக் இந்த சாதுவோடு வந்திருந்தான். குரு எங்களை வரவேற்றார். சசி, சுவாமிநாதன், பேரா. தேவகி மற்றும் அவரின் குழுவினர் அங்கே இருந்தனர். வழக்கம்போல் பிற பக்தர்கள் வந்து அவர் ஆசியைப் பெற்றுவிட்டு சென்றவாறு இருந்தனர். நாங்கள் பகவானின் முன்பு நீலலோச்சனி அனுப்பிய ஒரு பாட்டில் தேன், பாரதி அனுப்பிய கல்கண்டு பாக்கெட் மற்றும் ‘தத்துவ தர்சனா’ இதழ்களையும் வைத்தோம். யோகி தேன் மற்றும் கல்கண்டை எடுத்துக் கொண்டு நீலலோச்சனி மற்றும் பாரதியை ஆசீர்வதித்துவிட்டு, ‘தத்துவ தர்சனா’வை புரட்டத்துவங்கினார். பின்னர் அவர் அங்கிருந்த பக்தர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதியை தந்தார். அவர் இந்த சாதுவிடம் ‘வளை ஒசை’ பிரதி ஒன்று தந்து, அதில் “இடையினங்கள்” என்ற பாலகுமாரனின் கதையை படிக்கச் சொன்னார். தேவகி லீ லோசோவிக் எழுதியுள்ள கவிதைகள் பற்றி குறிப்பிட்டார். யோகி, லீ லோசோவிக் கவிதைகள் அடங்கிய மூன்று கவர்களை கொண்டுவந்தார். அதில், திரு. கணேசன் அவர்கள் அமெரிக்கா சென்றபோது, லீ லோசோவிக் பகவானுக்கு கொடுத்தனுப்பிய கவிதைகள் இருந்தன. யோகி சுந்தரேசன் குறித்து சாதுவிடம் கேட்டார். சாது அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை நடந்து கொண்டிருப்பதாக கூறினார். பகவான், “தந்தை அவரை கவனித்துக் கொள்வார்” என்றார். 

பகவான் நகைச்சுவையாக தேவகியிடம் அனைவரும் தன்னைப்பற்றி எழுதி முகஸ்துதி செய்வதாகவும், மேலும், “ரங்கராஜனும் அதனை செய்கிறார்“ என்றும்  கூறிவிட்டு, அவர் ரங்கராஜனை பார்த்து புன்னகைத்தார். அவர் விவேக் இடம், “நிவேதிதா எப்படி இருக்கிறாள்?“ என வினவினார். விவேக் அவரிடம் அவள் நன்றாக இருக்கிறாள் என பதில் அளித்தார். “தந்தை அனைத்தையும் செய்கிறார். இந்த பிச்சைக்காரன் எதையும் செய்வதில்லை” என்றார். நாங்கள் அனைவரும் அவரது பெயரை பாடத்துவங்கினோம். அவர் ஒரு இசைக்கலைஞர் போல் கைகளை அசைத்தார். யோகி சாதுவிடம் திரும்பி ‘தத்துவ தர்சனா’ ஒரு இதழ் விலை என்ன என்று வினவினார். சாது “ஐந்து ரூபாய்” என்றார். அவர் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து தனது கைகளில் சிறிது நேரம் வைத்திருந்து விட்டு, பின்னர் சாதுவின் கரங்களில் போட்டார். அவர் உற்று சாதுவை பார்த்து ஆசி வழங்கினார். பின்னர் அவர் சில கற்கண்டுகளை எடுத்து சாதுவிற்கு கொடுத்தார். சாது ஒரு துண்டை மட்டும் எடுத்துக். கொண்டு மற்றவற்றை பாரதி மற்றும் பிள்ளைகளுக்காக எடுத்து வைத்தார். பொதுநல விழைவின் முதல் படியே தனது உற்றார் உறவினர் மீது செலுத்தும் அன்புதான் என்பதே யோகி நடத்திய பாடம். சாது அவரிடம் ராம்நாம் தமிழ் புத்தகம் இன்னமும் அச்சில் இருப்பதாகவும் அது தயாரானவுடன் யாரேனும் அதனை ஒரிரு நாட்களில் கொண்டு வருவார்கள் என்றான். பகவான் சாதுவிடம் ஜாம்ஷெட்பூர், துர்காபூர் மற்றும் கல்கத்தா செல்ல இருக்கிறாயா என கேட்டார். சாது நிகழ்ச்சிகள் உறுதியானால் போவேன் என்று பதிலளித்தார். சாது கூடுவாஞ்சேரியில் ராம்நாம் பணிக்காக வீடு வாடகை எடுப்பதைப் பற்றி குறிப்பிட்டார். மேலும், மோனோ ஃபோட்டோ ஃபிலிம் செட்டர் வைப்பதற்கான இடத்திற்கு அலைந்து கொண்டிருப்பதாக கூறினார். பகவான், “தேடு, உனக்கு இடம் கிடைக்கும்“ என்றார். அவர் சாத்துக்குடி பழத்தை ஆசீர்வதித்து நீலலோச்சனிக்கும் பிஸ்கெட் பாக்கெட்டை ஆசீர்வதித்து பாரதிக்கும் தந்தார். விவேக், நிவேதிதாவை அவர்களின் தேர்வுகளின் வெற்றிக்கு ஆசீர்வதித்தார். நாங்கள் அவரிடமிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு இரவில் திரும்பினோம். 

அக்டோபர் 13,  ஞாயிற்றுக்கிழமை பாரதி மற்றும்  யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின்  அலுவலக பொறுப்பாளர்கள், சாது போன்றோர் வாடகைக்கு எடுக்கப்பட்ட கூடுவாஞ்சேரி ராம்நாம் மையத்திற்கு சென்று அங்கே சத்சங்கத்தை நடத்தினர். பரிமளா மற்றும் அவளது உறவினர்கள், இந்த மையத்தை துவக்க உதவியவர்கள், மற்றும் அந்த காலனியில் வசிப்பவர்கள், சத்சங்கத்தில் கலந்து கொண்டனர். சாது பகவானைப் பற்றி பேசினார். டாக்டர். ராதாகிருஷ்ணன் ராம்நாம் இயக்கம் குறித்து பேசினார். 

அக்டோபர் 14, திங்கள்கிழமை வள்ளியம்மை ஆச்சி காலையில் வந்து பாரதி உடன் சாரதாமணி சின்னசாமி இல்லத்திற்கு சென்றனர். பின்னர் பாலகுமாரன் போனில் அழைத்துவிட்டு, தனது மகள் கௌரி உடன் வந்தார், கௌரி தியாகராஜ கீர்த்தனைகளை பாடினாள். வள்ளியம்மையின் உறவினர்கள் ஓசூர் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து வந்தனர். அனைவருக்கும் பகவானின் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ‘தத்துவ தர்சனா’வின் பிரதிகள், மற்றும் தமிழில் “ராம்நாம்” புத்தகம் அச்சகத்தில் இருந்து வந்தது. அவைகளை பகவானுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. திரு. D.S. கணேசன் மற்றும் திரு. K.N. வெங்கடராமன் போன்றோரும் சாது பிரயாகைக்கு செல்லும் முன் வழியனுப்ப வந்தனர். பாரதி மற்றும் பரிமேலழகன் போன்றோர் சென்னை சென்டரல் வரை வந்து வழியனுப்பினா். சாது வாரணாசி எக்ஸ்பிரஸில் புறப்பட்டார். 

யோகி ராம்சுரத்குமார் என்ற நாமத்திற்கு ஓர் சக்தி உண்டு. இதனை யாரேனும் கூறினால் என் தந்தை விரைந்து வந்து அவன் அல்லது அவளுக்கு உதவுவார்!“ -– யோகி ராம்சுரத்குமார். 

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.22

Glimpses of A Great Yogi in Tamil – Part 2
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – II
சீடன் கண்ட தீக்ஷா குரு

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 2.22 

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி 1990 மற்றும் தமிழகத்தில் தீவிரமான ராம்நாம் பிரச்சாரம்

யோகி ராம்சுரத்குமார் கருணையால் அவரது சீடனான இந்த சாது ரங்கராஜனுக்கு, 18 முதல் 25 நவம்பர் வரை தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் நடந்த பயணத்தில்,  அனைத்து இடங்களிலும் சிறப்பான வரவேற்பை பெற்று பயணம் வெற்றிகரமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. பகவான் வெளியிட்ட “திருவண்ணாமலையில் ஒரு குழந்தை” என்ற நூலின் ஆசிரியர், திரு. T.P.M. ஞானப்பிரகாசம் என்ற பக்தரும், சாது உடன் இணைந்திருந்தார். பகவானின் நெருக்கமான பக்தர்களான  டாக்டர். சங்கர்ராஜூலு, மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர், மற்றும் டாக்டர். சக்திவேல், இந்த சாதுவை மதுரை சந்திப்பில் 18 ஆம் தேதி காலையில் வரவேற்று ஆனந்தா மெட்ரிகுலேசன் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவருக்கு தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பகவானின் பக்தர்கள் இந்த சாதுவை சந்திக்க குழுமத் தொடங்கினார்கள். திரு. ஆனந்தராஜ், திரு. AR.PN. ராஜமாணிக்க நாடார், அவரின் சகோதரர் கணேச நாடார் மற்றும் பலர் அவர்களின் குடும்பத்தோடு வந்திருந்தனர். சாதுஜி அந்த கூட்டத்தினரிடையே, பள்ளியின் ஹாலில், உரையாற்றினார். டாக்டர்.சங்கர்ராஜூலு அறிமுக உரையும், திரு. ராஜமாணிக்க நாடார் சாதுவின் ராம்நாம் பிரச்சாரம் குறித்த உரையும் நிகழ்த்தினர்.. யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் கிளை ஒன்று துவக்கப்பட்டது. அந்த கூட்டத்திற்கு பின் திரு. C.M. சௌந்திரராஜன் மற்றும் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. 

சாதுஜி சுவாமி சிவானந்தா ஆசிரமத்திற்கு சென்றான். அங்கே சுவாமி விமலானந்தா மற்றும் பிற பக்தர்கள் சாதுவை வரவேற்றனர். அவர் சிவானந்தா சத்சங்கத்தில் உரையாற்றினார். அதன்பின் அவர் VAP ஹாலுக்கு சென்றார். அங்கே பகவானின் பக்தர்கள் சாதுவிற்கு சிறப்பான வரவேற்பை தந்தார்கள். சுவாமி விமலானந்தாவும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். சாதுஜி, யோகி ராம்சுரத்குமார் ஆசியாலும், வழிக்காட்டுதலாலும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் துவங்கிய உலக ராம்நாம் இயக்கம் பற்றி பகிர்ந்தார். 

ஒரு வார சுற்றுப்பயணத்தை திறன்பட ஏற்பாடு செய்த திரு AR.PN. ராஜமாணிக்க நாடார் சாதுவுடன் பயணித்ததோடு, சாதுவை வரவேற்க அவரது குருவின் படத்தோடு போஸ்டர் ஒட்டியிருந்தார். சௌந்திரராஜனின் இசைக்குழுவும் சாதுவுடன் பயணித்தது. நவம்பர் 19 ஆம் தேதி, சாதுஜியை, அருப்புக்கோட்டையில், பகவானின் பக்தர்களான திரு.M. சந்திரசேகரன் மற்றும் திரு. தியாகராஜன் வரவேற்றனர். சாதுவிற்கு தங்க திரு. சந்திரசேகரன் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. சாது சந்திரா டிரான்ஸ்போர்ட் வளாகத்திற்கும், பிற பக்தர்களின் இல்லங்களுக்கும் விஜயம் செய்தார். அமிர்தலிங்கேஸ்வரர் கோயிலில் பெருமளவு கூட்டத்தினர் குத்துவிளக்கு பூஜையை நடத்தினர். சாதுஜி பகவானின் திருவுருவப்படத்திற்கு ஆரத்தியை எடுத்தார். பின்னர் சாது அங்கு திரண்டிருந்த மக்களிடம் பகவானின் இலக்கு மற்றும் சேதி குறித்து பேசினார். அந்த விழா நள்ளிரவு வரை நடைப்பெற்ற போதும் பக்தர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். 

அடுத்தநாள் காலையில் சாது தங்கியிருக்கும் இடத்தில் பல பக்தர்கள் குழுமினர். அங்கே சாது ஒரு சத்சங்கத்தை, கேள்வி பதில் நிகழ்வாக நடத்தினார். பின்னர் சாது ஒரு ஊர்வலத்தோடு திரு. கனகவேல்ராஜன் இல்லத்திற்கு சென்றார். அங்கும் ஒரு சத்சங்கம் நடைப்பெற்றது. சாது மாலையில் விருதுநகர் பயணித்து, கந்தசாமி கோவிலை அடைந்தார், அங்கே பெருமளவு பக்தர்கள் வரவேற்றனர். சாது இந்தியாவின் பிச்சைக்கார முனிவர்கள் குறித்து பேசினான். அந்த விழா நள்ளிரவு வரை நடைப்பெற்றது, திரு.A.V. ராமமூர்த்தி இந்த சாதுவிற்கான பிக்ஷையை தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார். 

21 ஆம் தேதி காலையில் பகவானின் நெருக்கமான பக்தர், திரு. ஞானகிரி கணேசன், வந்து சாதுவை தனது அன்னையின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கும் சத்சங்கம் நடைப்பெற்றது, சாதுஜி அங்கு குழுமியிருந்த அனைத்து அன்னையர்களுக்கும் பிரசாதங்களை வழங்கினார். பின்னர் அவர் நாடார் பிரஸ்ஸிற்கு சென்றார். அங்கே திரு. S.D. ஷண்முகம் என்ற மேலாளர் அவரை வரவேற்று அச்சகத்தை சுற்றி காட்டினார். மாலையில் மாரியம்மன் கோவிலில் ஒரு பெரும் நிகழ்ச்சி நடந்தது, அதில் சாதுஜி தான் எவ்விதம் பகவானிடம் மங்களகரமான சுவாமி ராம்தாஸ் அவர்களின் பிறந்தநாளில் தீக்ஷை  பெற்றான் என்ற விவரத்தை பகிர்ந்தான். மற்றும் ஆன்மீக பேரொளிகளான ஜடபரதர், தொத்தகாச்சார்யார் பற்றியும் பேசினார். அங்கும் நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடந்தது. 

நவம்பர் 22 ஆம் தேதி காலையில் சாதுவை  திரு. முருகேசன் அவர்கள் வரவேற்றார். அவரும் யோகியின் நெருக்கமான பக்தர் ஆவார். அங்கே மகப்பேறு எதிர்நோக்கியிருக்கும் முருகேசனின் மகளுக்காக இந்த சாது ஒரு சிறப்பு பிரார்த்தனையை நிறைவேற்றிவிட்டு, சௌ. ஜெயமல்லிகா அவர்களின் இல்லத்திற்கு சென்றார். அங்கே சாது, ஸ்ரீ  ராமகிருஷ்ண சாரதா மகளிர் சங்கத்தின் உறுப்பினர்களிடம், ஸ்ரீ ராமகிருஷ்ணர் குறித்தும், அன்னை சாரதா குறித்தும் பேசினார். மாலையில் சாதுஜி ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்றார். அங்கே திரு. பெருமாளப்பன் என்ற இன்னொரு யோகியின் நெருங்கிய பக்தர் சாதுவை வரவேற்றார். அங்கே சாது புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலில், கோதை (ஆண்டாள்), ராமாயணம், தத்தாத்திரேயர், யோகி ராம்சுரத்குமார் மற்றும் ராம்நாம் குறித்து பேசினார். சாதுஜி திரு. பெருமாளப்பன் இல்லத்தில் இரவு தங்கினார். 

சாதுவுடன் இணைந்து பயணம் செய்த திரு. சங்கர்ராஜூலு மற்றும் திரு. T.P.M. ஞானப்பிரகாசம், 23 ஆம் தேதி காலையில் சாதுவிடம் விடைபெற்றனர். சாது சிறப்பு கணேச பூஜையை பெருமாளப்பன் குடும்பத்தினரின் புதிய நிறுவனத்தின் துவக்கத்திற்காக நடத்தினார். மதியம் சாது சிவகாசிக்கு கிளம்பினார். திரு. பெருமாளப்பன் அவரோடு இணைந்தார். நாடார் பிரஸ்ஸில் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் உடன் சாது கோவில்பட்டி சென்றார். வழியில் சாது திரு. ராஜமாணிக்கம் நாடார் அவர்களின் சாத்தூர் அலுவலகத்திற்கு சென்று அங்கே இருந்த பணியாளர்களை ஆசீர்வதித்தார். கோவில்பட்டியை அடைந்து அங்கே இருந்த கூட்டத்தினரிடம் ‘சக்தி’ பற்றி உரையாற்றினார். திரு. C.M. சௌந்திர்ராஜன் சாதுஜி மற்றும் பகவான் மீது பாடல்கள் பாடினார். நாடார் சத்திரத்தில் இரவு உணவுக்கு பிறகு, சாதுஜி மற்றும் குழுவினர் கன்னியாக்குமரிக்கு கிளம்பினர். 

24 ஆம் தேதி காலையில் கன்னியாக்குமரி அடைந்தபோது, மாயம்மா கோயிலின் பூசாரி திரு. புஷ்பராஜ் அவரை வரவேற்று தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். சாதுஜி விவேகானந்தர் நினைவு மண்டப பாறைக்கு சென்றார் . திரு. லட்சுமணன் என்ற படகோட்டி கடலினை கடக்க உதவினார். திரு. தேஷ்பாண்டே என்ற நினைவு மண்டபத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் இந்த சாதுவை வரவேற்றார். கரைக்கு திரும்பிய சாது விவேகானந்தபுரம்  கேம்பஸ் சென்றார் அங்கே அவரை, விவேகானந்தா கேந்திராவின் தலைவரான டாக்டர். லட்சுமி குமாரி மற்றும் பொது செயலாளர், திரு. பாலகிருஷ்ணன்ஜி வரவேற்றனர். சாது அங்கே சிறிது மணிநேரம் செலவழித்து அங்கே விவேகானந்தா கேந்திராவின் பழைய சக ஊழியர்களை சந்தித்தார். பகவானிடம் தீக்ஷை பெறுவதற்கு முன் கேந்திராவில் சாது சேவை புரிந்து வந்தார். சாதுஜி ராஜமாணிக்கத்துடன் பொற்றையடி மகானின் சமாதிக்கு சென்றனர். பின்னர் நாகர்கோவில் அடைந்த போது சாதுவிற்கு பகவானின் பக்தர் பாலகிருஷ்ணன் ஒரு பெரும் வரவேற்பை அளித்தார். அங்கே நடைப்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பின் சாதுஜி, கன்னியாக்குமரி மாயம்மா சமாஜிற்கு திரும்பி வந்தார். திரு. பெருமாளப்பன் குடும்பத்தினர் எங்களோடு இணைந்தனர். 

25 ஆம் தேதி காலையில் சந்தியாவந்தனம் மற்றும் பிற சடங்குகளை முடித்தவுடன் இந்த சாது கன்னியாக்குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சில பக்தர்களுடன் சென்றார். அங்கே அன்னையின் தரிசனத்தைப் பெற்றவுடன் அனைவரும் குமாரக்கோவில் ராம்ஜி ஆசிரமத்திற்கு சென்றோம். வழியில் இந்த சாதுவிற்கு சிலிர்ப்பூட்டும் தெய்வீக அனுபவம் லட்சுமிபுரத்தை சேர்ந்த ஞானானந்தா யோகியிடம் ஏற்பட்டது. நாங்கள் அங்கே ஒரு ஓலைக்கூரையில் அமர்ந்திருந்த மகானை காணச் சென்றோம். இந்த சாது அவரிடம் “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்“ மற்றும் ‘தத்துவ தர்சனா’ இதழ் அவரிடம் தர நினைத்தார். ஆனால் அவரோ சாதுவின் கைகளில் இருந்த பையினை பறித்து, தனது கரங்களில் அதனை திறந்து இரண்டு புத்தகங்களையும் தேடி அதனை எடுத்தார். அவர் தனது கைகளில் அந்த புத்தகங்களை சிறிது நேரம் வைத்திருந்து அதில் இருந்த யோகியின் படங்களை உற்று நோக்கினார். பின்னர் சில பக்கங்களை புரடடிவிட்டு அவைகளை ஆசீர்வதித்து, திரும்ப பையிலேயே போட்டு, சாதுவிடம் கொடுத்தார். சுவாமியின் பாதங்களை தொட்டபோது பலத்த ஆன்மீக அதிர்வை சாது உணர்ந்தார். 

ஸ்ரீ ஒம் பிரகாஷ் யோகினி மற்றும் பிற பக்தர்கள் குமாரக்கோவில் ராம்ஜி ஆசிரமத்தில் வரவேற்றனர். பகவானுக்கு கோடி அர்ச்சனை முடிந்தப்பின் சாது மற்றும் சிலபக்தர்கள் சாரதா ஆசிரமத்திற்கு சென்றனர். அங்கே சுவாமி அம்பிகானந்தா சாதுவை வரவேற்றார். இந்த சாது அந்தக் கூட்டத்தினரிடையே அன்னை சாரதா தேவி குறித்து பேசினான். ராம்ஜி ஆசிரமம் திரும்பி திரு.ராஜமாணிக்கம் நாடார் தலைமையில் நடைபெற்ற ஒரு சமய மாநாட்டில் சாது உரை நிகழ்த்தினார், குமாரி. விஜயலட்சுமி IRS, கோயம்புத்தூரைச் சேர்ந்த  பேரா. V.கமலம், டாக்டர்.சங்கர்ராஜூலு மற்றும் சுவாமி அம்பிகானந்தா போன்றோரும் உரையாற்றினா். முடிவாக திரு. ராஜமாணிக்கம் அன்னை மாயியின் பாதுகைகளை இந்த சாதுவிற்கு வழங்கினார். அந்த பாதுகைகள் இப்போதும் பெங்களூர் ஸ்ரீ பாரதமாதா மந்திரில் பாதுகாக்கப்படுகின்றன. 

26 ஆம் தேதிகாலையில் ஓம் பிரகாஷ் யோகினியின் கோரிக்கையை ஏற்று ஒரு சத்சங்கத்தை இந்த சாது நடத்தினான். அதில் யோகி ராம்சுரத்குமார் மற்றும் ராம்நாம் ஜபிக்கப்பட்டது. திரு. கணேசநாடார் இந்த சாதுவை வந்து அழைத்துக்கொண்டு மதுரைக்கு கிளம்பினார். இந்த சாதுவிற்கு சென்னைக்குச் செல்ல ரயிலில் இடம் கிடைக்காதமையால், சாதுஜி படுக்கும் வசதியோடு  கூடிய ஒரு சூப்பர் டீலக்ஸ் வீடியோ கோச் பஸ் பிடித்து, பக்தர்களிடம் விடைப்பெற்று, சென்னைக்கு கிளம்பினான். 

யோகி ராம்சுரத்குமாரின் சேதிகளையும், இலக்குகளையும் தென் தமிழக மாவட்டங்களில் பரப்பிய சாதுஜி சென்னை திரும்பியவுடன் டிசம்பர் 1 முதல் 3 வரை திருவல்லிக்கேணி சாஸ்வத பண்ட் கல்யாண மண்டபத்தில் நடக்க இருக்கும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டார். சாதுஜி அனைத்து முக்கியமான பக்தர்களையும் அழைத்தார். திரு. இளையராஜா, முன்னாள் டி.ஜி.பி. திரு. K. ரவீந்திரன், ஜஸ்டிஸ் ராஜூ, சௌ. விஜயலட்சுமி IRS, மற்றும் புகழ்பெற்ற நரம்பியல் நிபுணரான டாக்டர். B. ராமமூர்த்தி ஆகியோர்க்கு விழாவின் நிகழ்ச்சிநிரல் பகிரப்பட்டது. பக்தர்கள் சென்னைக்கு வெளியே இருந்தும் விழாவிற்கு வரத்தொடங்கினர். பிரான்ஸில் இருந்து திரு. கிருஷ்ணா கார்ஸல்லே  மற்றும் அவரது மனைவி ஈஸ்வரி வந்து சேர்ந்தனர். கல்யாண மண்டபம் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் செய்திகளின் எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேயால்  அலங்கரிக்கப்பட்டது. 

டிசம்பர் 1, 1990 முதல் டிசம்பர் 3 வரையிலான யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா கொண்டாட்டங்கள், சனிக்கிழமை காலையில் துவங்கியது. வேதபண்டிதர்களைக் கொண்டு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஆவஹந்தி ஹோமம் போன்றவைகள் நடத்தப்பட்டது.. வேதபாராயணமும் நடைபெற்றது. சாதுஜி வேதங்களை பாதுகாப்பதில் பகவானின் ஆர்வம் குறித்து பேசினார்.

என்ற யோகி ராம்சுரத்குமார் திருக்கோயிலூர் ஞானானந்த தபோவனத்திற்கு சென்று கொண்டிருந்த காலம் தொட்டு அவருடைய நெருங்கிய பக்தராக இருந்த திரு.D.S.சிவராமகிருஷ்ணன், பகவான் குறித்து பேசினார். ஞானானந்தா பஜன் மண்டலி ஒரு பஜனை நிகழ்ச்சியை நடத்தினர். திருமதி. சாராதமணி சின்னசாமி மற்றும் குழுவினர் பகவானின் பக்தர், புகழ்.பெற்ற தமிழறிஞர் மற்றும் கவிஞருமான, திரு. பெரியசாமி தூரன் அவர்களின் பாடல்களை பாடினர். புகழ்பெற்ற தொழிற்சங்க தலைவரும் பகவானின் பக்தருமான திரு. T.V. ஆனந்தன் கூட்டத்தினரிடையே பகவான் குறித்து அன்று மதியம் உரையாற்றினார். அவர் பகவானின் படம் மற்றும் பேட்ஜ்களை வினியோகம் செய்ய கொண்டுவந்தார். திரு. சிவராமகிருஷ்ணன் தனது பகவான் குறித்த பாடலை பாடினார். திரு.K. ரவீந்திரன், சௌ.விஜயலட்சுமி மற்றும் இந்த சாது பகவான் குறித்து பேசினர். குமாரி். பாரதி அவர்களின் பரதநாட்டியம் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. 


டிசம்பர் 2, இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக வேதம் மற்றும் வேத அறிவியல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வேத முழக்கத்துடன் துவக்கப்பட்டது. அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் தத்துவ பேராசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர். விவேகானந்தா கல்லூரியின் டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார். புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர், மற்றும் சென்னை நரம்பியல் நிறுவனத்தின் தலைவருமான, டாக்டர். B. ராமமூர்த்தி தனது ஆய்வான, “யோகா மூலம் மூளையின் ஆற்றல் முன்னேற்றம்“ என்பதை பகிர்ந்தார். தெ.பொ.மீ அவர்களின் மகனும்,  கோயம்புத்தூர் பொறியியல் கல்லூரியின் பேராசிரியருமான  திரு.T.P.M காமேஸ்வரன் தனது தியானம் குறித்த ஆய்வை பகிர்ந்தார். பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் இடையே நேரடியான, பரஸ்பர பகிர்தல் நடைப்பெற்றது. மதிய வேளையில் சென்னை விவேகானந்தா கல்லூரியின் பேராசிரியர் மற்றும் சமஸ்கிருத பண்டிதரான டாக்டர். விஸ்வநாத சர்மா, வெங்கடேஸ்வரா ஆயுர்வேத கல்லூரி முதல்வர் பேராசிரியர் கே.என் . ஸ்ரீனிவாச ஐயங்கார், சுவாமி ராக்கால் சந்திர பரமஹம்சா மற்றும் திரு. சிவராமகிருஷ்ண அய்யர் போன்றோர் உரையாற்றினர். இந்த சாது அறிவியலாளர்கள் மற்றும் பண்டிதர்கள் நமது பண்டைய வேத ஞானத்தை பாதுகாத்து வரும் தலைமுறைகளுக்கு வழங்கவேண்டும் என்று கூறி கருத்தரங்கினை நிறைவு செய்தார். நீலகிரியின் உலக ராமநாம இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தங்காடு மோகன் தலைமையில், நீலகிரியை சேர்ந்த பக்தர்கள் இனிய பஜனையும், ராமநாம சங்கீர்த்தனமும் வழங்கினர். 

டிசம்பர் – 3, மூன்றாம் நாள் விழா நிகழ்ச்சிகள் வேத பாராயணத்துடன் தொடங்கின. நீலகிரியை சேர்ந்த பக்தர்கள் ஆடிப்பாடி ராமநாமத்தை உச்சரித்தனர். பகவானின் பக்தர்களான திரு. கிருஷ்ணசுவாமி, திரு. சிவராமகிருஷ்ணன் மற்றும் சுவாமி ராக்கால் சந்திர பரமஹம்சா ராம்நாமத்தின் முக்கியத்துவத்தை குறித்து பேசினர். திருமதி ப்ரீதா பொன்ராஜ் மற்றும் யோகி ராம்சுரத்குமார் பஜனை குழுவை சேர்ந்த அன்னையர்கள் பஜனைப்  பாடல்களை வழங்கினர். மதியம் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அலுவலக கூட்டம் நடைப்பெற்றது அதில் ராம்நாமத்தை பரப்புவதில் இளைஞர்களின் பங்கு மற்றும் அவர்களின் ராம்நாம் பிரச்சாரத்திற்கான எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை இந்த சாது விளக்கினான். 

நிறைவு விழா மாலையில் சென்னை உயர் நீதி மன்றத்தின் நீதிபதியான திரு. ராஜூ அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. பகவானின் பக்தரான வழக்கறிஞர் திரு. சின்னசாமி தனது மாமனாரான திரு. பெரியசாமி தூரன் அவர்களுக்கும், பகவானுக்கும் இடையே இருந்த நெருக்கம் குறித்தும், எப்படி திரு. தூரன் அவர்கள் பகவான்மீது ஆன்மாவை கிளரும் பாடல்களை பொழிந்தார்  என்றும் விவரித்தார். இந்த சாது முடிவு ஆசியுரையில் இளைஞர் சங்கத்தின் செயல்திறன்மிக்க தொண்டர்கள் தங்களின் இதயம் மற்றும் ஆன்மாவை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பகவானின் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றார். டாக்டர். ராதாகிருஷ்ணன் கூட்டத்தினரை வரவேற்றார். திரு. விவேகானந்தன், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் பொது செயலாளர், நன்றியறிவித்தார். திரு. P. ஸ்ரீனிவாசன் அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. 

டிசம்பர் 5 அன்று ஒரு சிறப்பு கணேச ஹோமத்தை கிருஷ்ணா கார்ஸல்லே  மற்றும் ஈஸ்வரிக்காக நடத்தினார். டிசம்பர் – 7 ஆம் தேதி அருப்புக்கோட்டையை சேர்ந்த  திரு.M.M. சந்திரசேகரன் சாதுவின் இல்லத்திற்கு வருகை தந்தார். சாது திருவண்ணாமலைக்கு சென்று யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தியின் வெற்றி மற்றும் வேத கருத்தரங்கம் குறித்து பகவானிடம் பகிர திட்டமிட்டு இருந்தார். 8 ஆம் தேதி மாலையில் சாதுஜி திருவண்ணாமலைக்கு விவேக், நிவேதிதா,  மற்றும் திரு A.V.ராமமூர்த்தி ஆகியோருடன் கிளம்பி நள்ளிரவில் அங்கே போய் சேர்ந்தோம். நாங்கள் பகவானின் இல்லத்திற்கு 9 ஆம் தேதி அதிகாலை சென்றோம். அவர் எங்களை வரவேற்று ஐந்து நிமிடங்கள் செலவழித்து விட்டு பின்னர் எங்களை ரமணாச்ரமத்திற்கு சென்றுவிட்டு காலை 10 மணிக்கு வருமாறு கூறினார். இந்த சாது தியான ஹாலில் ஜபத்தில் அமர்ந்துவிட்டு பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று, அங்கிருக்கும் குளத்தில் ஜல தர்ப்பணம் செய்தார். பின்னர் அவர் குருவை காண சென்றார். யோகி சாதுவின் வட இந்திய பயணம், தென்தமிழ்நாட்டின் பயணம் போன்றவற்றை விவரமாகவும் பொறுமையாகவும் கேட்டறிந்தார். யோகி ஜெயந்தி மற்றும் வேதங்கள் குறித்த கருத்தரங்கும் அவரது கருணையால் பெரும் வெற்றி பெற்றதாக கூற பகவான், “அனைத்தும் தந்தையின் கருணையால் வெற்றியடைந்தது“ என்று கூறினார். யோகி இந்த சாதுவிடம் டிரினிடாட்  செல்லும் திட்டம் குறித்து விசாரித்தார். சாது தான் இன்னமும் தனது பக்தர்களிடம் இருந்து எந்த தகவலையும் பெறவில்லை என்று பதிலளித்தார். யோகி, தென் ஆப்பிரிக்காவின் டிவைன் லைஃப்  சொஸைட்டி அன்பளிப்பாக கொடுத்த மோனோ ஃபோட்டோ ஃபிலிம் செட்டர் மெஷின் குறித்து கேட்டார். அது ஒரு ஏஜெண்ட் மூலம் விரைவில் வரும் என்றும் அதை இயக்குவதில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும் பதிலளித்தார் . அதற்கு ஒரு ஏ.சி. அறை மற்றும் கம்பரசர் தேவை என்றும் சாது கூறினார். நிவேதிதா டைப் செட்டிங் செய்ய  முடியும் என்று சாது கூற, அவள் தனது கணித பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என யோகி கூறினார். யோகி விவேக் மற்றும் நிவேதிதா படிப்பு பற்றி கேட்டார். பகவான் அவர்கள் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுவார்கள் என உறுதியளித்தார். சாது தனது புனே பயணத்திட்டம் குறித்து யோகியிடம் விவரித்தார். 

சாது ராம்நாம் இயக்கம் மற்றும் அவரது பயணத்திட்டம் குறித்து யோகியிடம் விளக்கினார். மகாராஷ்டிராவின் சௌ. ரஜினி பாக்வே, உ.பியின் திரு. T.S.சின்ஹா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் திரு. நாராயண் சிங் போன்றோர் பகவானை தரிசிக்க மாத இறுதியில் வருவதாக சாது தெரிவித்தார். புனிதப் பணியில் ஈடுபட்டுள்ள பக்தர்கள் அனைவரையும் பகவான் ஆசீர்வதித்தார். தன்னை காணவரும் பக்தர்கள் குறித்து அவ்வப்போது தகவல்களை கூறுமாறு யோகி கூறினார். யோகி ஜெயந்தியின் போது நடத்தப்பட்ட ஹோமங்கள் குறித்து யோகி விசாரித்தார். ஜனவரியில் நடக்க இருக்கும் விவேகானந்தா ஜெயந்தி விழாவின் வெற்றிக்கும் யோகி ஆசீர்வதித்தார். பெரியசாமி தூரன் அவர்களின் பாடலை சாதுவிற்கு யோகி பரிசளித்தார். வழக்கம்போல் புதிய வெளியீடான ‘தத்துவ தர்சனா’ இதழ்களில் யோகி தனது கையொப்பத்தை இட்டார். யோகி அட்டைப்பட படத்தினை எங்கிருந்து பெற்றாய் என வினவினார். சாது, பேரா. தேவகி இடம் இருந்து பெற்றதாக கூறினார். பக்தர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த அவரது படங்களையும் யோகி ஆசீர்வதித்தார். சாது, மலேசியா, மும்பை போன்ற இடங்களில் இருந்து பக்தர்கள் எழுதிய கடிதங்கள்  மற்றும் அவற்றிற்கு யோகியின் சார்பில் சாது அளித்த பதில் கடிதங்களையும் யோகியின் முன் வைத்தார். சாது கிளம்பும் முன் பகவான் அவனது தண்டம் மற்றும் பிச்சைப்பாத்திரத்தையும் வழக்கம்போல் ஆசீர்வதித்து கொடுத்தார். பகவானுடன் ஆனந்தமயமான நேரத்தை செலவழித்தப்பின் நாங்கள் சென்னை திரும்பினோம். சென்னை திரும்பியப்பின் இந்த சாது, காஞ்சன்காட்டில் உள்ள பூஜ்ய ஸ்ரீ சச்சிதானந்தர் அவர்களுக்கு ராம்நாம் இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து கடிதம் எழுதினான். காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்த ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க ஹாங்காங்கில் இருந்து வந்த பக்தர்களின் கூட்டத்தை காஞ்சி மஹா பெரியவர் திருவண்ணாமலைக்கு செல்லுமாறும் யோகி ராம்சுரத்குமார் அவர்களை தரிசிக்குமாறும் கூறிய தகவல் சாதுவிற்கு கிடைத்தது. சுவாமி ராக்கால் சந்திர பரமஹம்சா அவர்களும் திருவண்ணாமலைக்கு சென்று யோகிராம்சுரத்குமார் அவர்களை சந்தித்தது பற்றி தெரிவித்தார். 23 ஆம் தேதி டிசம்பரில் சாது  கிருஷ்ணா கார்சேல் மற்றும் ஈஸ்வரிக்காக சிறப்பு கணேச பூஜையை நடத்தியதோடு, அவர்களுக்கு மந்திர தீக்ஷை அளித்து, மாதாஜி கிருஷ்ணாபாய் தந்த ஜப மாலைகளையும் வழங்கி, பிறகு அவர்களை லண்டன் வழியாக பாரிசுக்கு வழியனுப்பினார்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த திரு.S. நாராயண் சிங் பங்களூருக்கு வந்து தனது திருவண்ணாமலை பயணம் குறித்து தொலைபேசியில் கூறினார். திரு.T.S. சின்ஹா சென்னைக்கு வந்தார். சௌ. ரஜினி பாக்வே, மற்றும் சௌ. டயானா மும்பையில் இருந்து சென்னை வந்தனர். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ண மையத்தின் சுவாமி சாரதானந்தா சென்னைக்கு வந்தவுடன் சாது அவரிடம் தொடர்பு கொண்டார். 

29 ஆம் தேதி டிசம்பர் 1990 சனிக்கிழமை காலையில் இந்த சாது தனது பயணத்தை திருவண்ணாமலைக்கு மேற்கொண்டார். ரஜினி பாக்வே, டயானா மற்றும் சின்ஹா என்னோடு இணைந்து பயணித்தனர். நாங்கள் இரவு திருவண்ணாமலையை அடைந்தோம். திரு. நாராயண் சிங் எங்களுக்காக உடுப்பி பிருந்தாவனில் காத்திருந்தார். அவரும் எங்களோடு இணைந்தார். நாங்கள் அனைவரும் யோகியின் இல்லத்திற்கு இரவு 8 மணிக்கு சென்றோம். பகவான் எங்களை வரவேற்று எங்களை கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வரச்சொன்னார். திரு. ஸ்ரீதர குருக்கள் எங்களை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வரவேற்று எங்களை கோயிலை சுற்றி காட்டினார். கோயில் தரிசனத்திற்கு பிறகு நாங்கள் பகவானின் இல்லத்திற்கு 9 மணிக்கு சென்றோம். அங்கே பகவானுடன் 10.30 மணி வரை இருந்தோம். இந்த சாது நாராயண் சிங், ரஜினி மற்றும் டயானாவை பகவானிடம் அறிமுகப்படுத்தினான். யோகி சின்ஹாவின் பிறந்த ஊர் குறித்து விசாரித்ததோடு, புகழ்பெற்ற ஹிந்தி கவிஞர் மைதிலி சரண் குப்தா அவர்களின் பிறப்பிடத்தையும் பற்றி கேட்டறிந்தார்.. யோகி ரஜினி மற்றும் டயானா அவர்களின் வேலை குறித்து விசாரித்தார். இந்த சாது மலேசியாவில் இருந்து அவருக்கு எழுதப்பட்ட கடிதம் குறித்தும் அதற்கு தான் எழுதிய பதில் குறித்தும் நினைவூட்டினார். பகவான் லீ லோசோவிக் எழுதிய கவிதைகள் அடங்கிய கடிதங்களை கொண்டு வந்து தந்து அதனை ‘தத்துவ தர்சனா’வில் வெளியிட தந்தார். யோகி புனேவில் இருந்து வர இருக்கும் மோனோ ஃபோட்டோ ஃபிலிம் செட்டர் குறித்து விசாரித்தார், இந்த சாது தான் புனே சென்று அதனை கொண்டுவர இருப்பதாக கூறினார். “நீ இதுவரை புனே போகவில்லை“ எனக்கூறி அந்த பேச்சை முடித்து வைத்தார். இந்த சாது இதுவரை இம்மாதத்தில் 3.5 கோடி ராமநாமத்தை பெற்றிருப்பதாகவும், நமது முயற்சி குறித்து பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் அவர்கள் ஆசீர்வதித்ததாகவும் கூறினார். “அனைத்தும் தந்தையின் கருணை“ என யோகி குறிப்பிட்டார். நாங்கள் அனைவரும் பகவானின் நாமத்தை சிறிது நேரம் கூறினோம். அவர் எங்கள் அனைவருக்கும் பிரசாதங்களை தந்தார். இந்த சாது மீண்டும் காலையில் 10 மணிக்கு வருவதாக கூறினார். எங்களை அவர் வாசல் வரை வந்து வழியனுப்பினார். 

ஞாயிற்றுக்கிழமை 30 ஆம் தேதி டிசம்பர் அன்று ரஜினி, டயானா மற்றும் விவேக் ஆகியோருடன் அருணாச்சல மலையை கிரிபிரதட்சணம் வந்தோம். நாங்கள் யோகி ராம்சுரத்குமார் ஆரம்பகாலத்தில் வழக்கமாக டீ அருந்தும் டீ கடையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். அந்தக்கடையின் வயதான அம்மாவும், அவரது மகனும் எங்களை வரவேற்றனர். நாங்கள் பிஸ்கெட்களை அங்கிருந்த குழந்தைகளுக்கும் அந்த குடிசையின் உரிமையாளருக்கும் வழங்கினோம்.. 

நாங்கள் அனைவரும் யோகியின் இல்லத்திற்கு காலை 10 மணிக்கு வந்தடைந்தோம். சிவகாசி நாடார் அச்சகத்தை சேர்ந்த திரு S.D. சண்முகம் மற்றும் பிற பக்தர்கள் அங்கே இருந்தனர். நாங்கள் உள்ளே வருவதைப் பார்த்த பகவான் திரு. சண்முகம் தவிர்த்து மற்றவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் யோகி எங்களை அமரவைத்து பேசத்தொடங்கினார் அவர் ரஜினி மற்றும் டயானாவிடம்  அவர்கள் “ஞானேஸ்வரி” அதன் மூலத்தில் படித்திருக்கிறீர்களா என கேட்டார். அவர்கள் இல்லை என பதிலளித்தனர். பின்னர் அவர்களை கணேஷ்புரிக்கு பயணித்திருக்கிறீர்களா என வினவினார். அவர்கள் சென்றமுறை நாங்கள் வந்தபோது நீங்கள் கூறியதால் பயணித்தோம் என்றனர். பின்னர் அவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவரைப்பற்றி கேட்டார். இந்த சாது பகவானிடம் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக அவர் ஓட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக கூறினார். யோகி சண்முகத்திடம் நீ ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா எனக் கேட்டார். சண்முகம் யோகியிடம் திரு. K.M.பாலசுப்ரமணியம் அவர்கள் 16 பாகங்கள் “மகாபாரதம்” அச்சடிக்க விரும்புகிறார் என்றார். யோகிஜி இந்த பெரிய வேலையை அச்சகத்தின் உரிமையாளர்களிடம் பேசிவிட்டு  எடுக்கும்படியும் இதனை முடிக்க நான்கு வருடங்கள் கூட ஆகும் என்றும் கூறினார். சண்முகம் திருக்கோயிலூர் செல்வதற்கு யோகியிடம் இருந்து விடைப்பெற்றார். குமாரி. விஜயலட்சுமி சென்னையிலிருந்து வந்திருந்தார். அவர் “ஓம் சக்தி“ என்ற இதழை யோகியிடம் தந்து அதன் ஆசிரியர் யோகியின் தரிசனத்திற்கு வர இருப்பதாக கூறினார். யோகி அவர் பெயரை கேட்டார், இந்த சாது அவர் பெயர் பகீரதன் என்றார். பகவான் விவேக்கிடம் அந்த இதழின் கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள பெயர் விவர பொறுப்பு பற்றிய வரிகளை (Imprint line) படிக்கச் சொன்னார். விஜயலட்சுமி பகவானிடம் அந்த ஆசிரியர் பகவான் குறித்து எழுத விரும்புவதாக கூறினார். பகவான் நகைச்சுவையாக, “அவர் சில கேள்விகளை கேட்பார். ஆனால் இந்தப்பிச்சைக்காரனிடம் எந்த கேள்விக்கும் பதில் இருக்காது. அவர் என்ன எழுதுவார்? இந்தப்பிச்சைக்காரன் நேர்காணலில் பதில் அளிக்கும் அளவிற்கு வல்லுனர் இல்லை“ என்றார்.

அனைவரும் விடைபெறும் முன் யோகி தனது கழுத்தில் இருந்த மாலையை ரஜினிக்கு பிரசாதமாக பரிசளித்தார். அவர் எங்களை அனைவரையும் ஆசீர்வதித்தார். இந்த சாது யோகியிடம் விவேக் மீண்டும் வருடாந்திர சுவாமி விவேகானந்தர் ஜெயந்திக்கு முன் வருவான் என்றும், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மூலம் பேச்சுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் வெற்றி பெறும், மற்றும் பங்குபெறும் மாணவர்களுக்கான கோப்பை மற்றும் பரிசு பொருட்களை பகவானின் முன்வைத்து ஆசிபெற வருவான் என்றும் கூற, யோகி “சரி“ என்றார். யோகி சாதுவின் தண்டம் மற்றும் பிச்சை பாத்திரத்தை எடுத்து ஆசீர்வதித்து அவனிடமே தந்தார். விஜயலட்சுமி அங்கே தங்கியிருக்க நாங்கள் விடைப்பெற்றோம். நாங்கள் ஓட்டலுக்கு திரும்புகையில் பேராசிரியர்  தேவகி மற்றும் விஷ்ணுவர்த்தன் ஆகியோரை வழியில் சந்தித்தோம். நாங்கள் சிறிது நேரம் நாராயண் சிங் உடன் ஓட்டலில் செலவழித்து விட்டு சென்னை திரும்பினோம். நாங்கள் சென்னையில் எங்கள் இல்லத்திற்கு திரும்பிய போது, இன்னொரு பக்தரான திரு. N.C.நாயுடு என்ற, தென் ஆப்பிரிக்கா தமிழ் வேதிக் சொஸைட்டியின் தலைவர் வீட்டில் காத்திருந்தார். அந்தர் ராஷ்ட்ரிய சஹயோக் பரிஷத் தலைவர், திரு. பாலேஸ்வர் அகர்வால், அவர்களும் டெல்லியில் இருந்து வந்திருந்தார். அவர்களை தென் ஆப்பிரிக்காவின் சுவாமி சாரதானந்தா உடன் ஹிந்து மத ஒருங்கிணைப்பு பணிகள் குறித்து விவாதிக்க அறிமுகப்படுத்தினோம். பகவானின். கருணையும், ஆசியும் அகில உலக அளவில் இந்துக்களின் ஒருங்கிணைப்பு பணிக்கு விரைவாக உதவின. இதன் மூலம் உலகெங்கும் ராமநாமம் மற்றும் பகவானின் சேதியும் இலக்கும் பலரை சென்றடைய உதவின..

புத்தாண்டு தினமான ஜனவரி, 1, 1991ல் செவ்வாய்க்கிழமை அன்று பகவானின் பக்தர்கள் சாதுவிற்கு வாழ்த்துக்களை அனுப்பினர். பக்தர்களான திரு.V.R. ஸ்ரீனிவாசன், பொன். காமராஜ் மற்றும் அவரது கன்னியாக்குமரி குழுவினர் சாதுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பகவானின் பக்தர்களான T.S.சின்ஹா, திருமதி ரஜினி பாக்வே  மற்றும் திருமதி டயானா போன்றோர் வருட கடைசியில் பகவானின் தரிசனத்திற்கு வந்தவர்கள், சாதுவுடன் தங்கி பிறகு தங்களின் மாநிலத்திற்கான பயணத்திற்கு தயாரானார்கள். சாது அவர்களுக்கு பகவானின் பிரசாதங்களை, புகைப்படங்கள், அன்னை மாயியின் புகைப்படங்கள், ஆனந்தாஸ்ரமத்தின் ஜபமாலை மற்றும் ராம்நாம் இயக்கத்தின் நூல்கள் போன்றவற்றை, கொடுத்தனுப்பினான். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினர் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியின் பேச்சுப்போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசுப்பொருட்களை தயார் செய்தனர். “விவேகானந்தா கேந்திர பத்திரிகா” துணை ஆசிரியர் திரு K.P. சிவகுமார் அவர்கள் அந்தப் பத்திரிகையின் “புனித அன்னை” என்ற தலைப்பிலான விசேஷ இதழின் பிரதிகளைக் கொண்டு வந்தார் அதில் சாது அவர்கள் சக்தி வழிபாடு மற்றும் காவிய கண்ட வாசிஷ்ட கணபதி முனி பற்றிய கட்டுரைகளை எழுதியிருந்தார் அந்தப் பத்திரிகை இதழில் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் செய்தி “நாம் அனைவரின் தாய் பாரதமாதா” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த இதழை பகவானுக்கு  அளிப்பதற்கு அதன் ஆசிரியர் வழங்கினார். ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 6 அன்று நிவேதிதாவும், விவேக்கும் திருவண்ணாமலைக்கு சென்று யோகியின் ஆசிகள் மற்றும் பிரசாதங்களை பெற்று இரவில் திரும்பினர். 

தேசிய இளைஞர் தினம் ஜனவரி 12 ஆம் தேதி 1991ல் திருவல்லிக்கேணி ஹிந்து சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்தது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனியர், ஜூனியர், சப்- ஜூனியர் நிலைகளில் பங்கு கொண்டனர். சுவாமி ராக்கால் சந்திர பரமஹம்சா இந்த நிகழ்வின் மதிப்பீட்டாளராக செயல்பட்டார். தென் ஆப்பிரிக்கா தமிழ் வேதிக் சொஸைட்டியின் தலைவர் திரு.N.C.நாயுடு சிறப்பு விருந்தினராக இருந்து தனது இசை, பாடல், பேச்சு மூலம் சகலரையும் ஆச்சரியப்படுத்தியதோடு வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். திரு. பெரியசாமி தூரன் அவர்களின் மகளான, திருமதி. சாரதாமணி சின்னசாமி, கூட்டத்தில் உரையாற்றினார். 

மலேசியாவில் பகவானின் பக்தரான திரு. சங்கரன் நம்பியார், சௌ. விஜயலட்சுமி, பேரா. தேவகி, திரு. S. ரங்கமணி IAS, மற்றும் பொன்.காமராஜ் போன்றோர் சாதுவின் அடுத்த நிகழ்ச்சிகளை குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தனர். திருக்கோயிலூர் ஞானானந்த தபோவனத்தில் இருந்து திரு. D.S. சிவராமகிருஷ்ணன் இந்த சாதுவை ஞானானந்த கிரி ஜெயந்தி விழாவில் பேச அழைத்திருந்தார். இந்த சாது பகவானுக்கு நிகழ்ச்சி குறித்து ஒரு கடிதம் எழுதினான்:

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

இந்த சாது திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை 24-01-1991அன்று வந்து உங்கள் தரிசனத்தை பெற்றுவிட்டு திருக்கோயிலூர் தபோவனத்தில் ஞானானந்தகிரி ஜெயந்தி விழாவில் வெள்ளிக்கிழமை 25 – 1 – 1991 அன்று கலந்து கொள்ள இருக்கிறான். திரு. D.S.சிவராமகிருஷ்ணன் இந்த சாதுவிற்கான நிகழ்ச்சிகளை வட ஆற்காடு மாவட்டத்தில் ராம்நாம் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். நாங்களும் ராம்நாம் பிரச்சாரத்தை திருச்சி மற்றும் பிற இடங்களில் பிப்ரவரியில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இந்த சாது உங்கள் தரிசனத்திற்கும், ஆசிக்கும் பிரார்த்திக்கிறான். 

அகில இந்திய வானொலி நிலையம், சென்னை, இந்த சாதுவுடன் ஒரு நேர்காணலை “மதம்சார்ந்த வாழ்வும், மனிதகுல சேவையும்” என்ற தலைப்பில் தமிழில் 15 – 02 – 1991 அன்று பதிவு செய்யும். இந்நிகழ்வு 20-03-1991 காலை 8.20 மணிக்கு ஒலிபரப்பாகும். இந்த சாது உங்கள் ஆசியை இந்த ஒலிபரப்பிற்கு கேட்கிறான். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். “

சகோதரி நிவேதிதா அகாடமியுடன் இணைந்து சேவை செய்துவரும் திருமதி. நித்யா அவர்களுடன் இந்த சாது திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை அன்று காலையில் வந்து சேர்ந்தான். சாது பகவானிடம் நித்யாவை அறிமுகப்படுத்தினான்.  நாங்கள் விவேகானந்தா ஜெயந்தியின் வெற்றி மற்றும் திருக்கோயிலூர் பயணத்திட்டத்தையும் விளக்கினோம். பகவான் நித்யாவிடம் நீ ஏதாவது கேட்க விரும்புகிறாயா எனக் கேட்டார் அவள் இல்லை என பதிலளித்தார். பின்னர் அவள் ஏதோ பகவானை கேட்க முயலும் போது பகவான் அவளிடம் நகைச்சுவையாக, “இந்தப்பிச்சைக்காரன் நீ ஏதேனும் கேட்க விரும்புகிறாயா என கேட்டபோது இல்லை என கூறினாய்.“ அதற்கு அவள் அப்போது தான் தெளிவாக இல்லையென்றும் இப்போது தான் தெளிவாக இருப்பதாகவும் கூறினார். பகவான் சிரித்தவாறே, “ நீ தெளிவாக இருந்தால், கேட்க எதுவுமே இல்லை“ என்றார். நாங்கள் அவரிடம், அடுத்த நாள் கோயில் விஜயம், கிரிபிரதட்சணம் ஆகியவை முடித்தப்பின் அவரை  சந்திக்க அனுமதி கேட்டோம். அதற்கு அவர் அனுமதி அளித்தார்.

அடுத்த நாள் கிரி பிரதட்சணத்தின் போது கிரிவலம் சாலையில் இருந்த பகவானின் விருப்பமான டீக்கடைக்கு சென்று, பிறகு அடி அண்ணாமலை, சேஷாத்ரி ஆசிரமம், ரமணாச்ரமம் என அனைத்து இடங்களுக்கும் சென்றுவிட்டு இறுதியாக பகவானின் இல்லத்தை வந்தடைந்தோம். சில உள்ளூர் பக்தர்களும், அயல்நாட்டு பக்தர்களும் யோகியிடம் ஆசி பெற அவரது இல்லத்தில். இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் பிரசாதங்களை தந்து அனுப்பினார். பங்கஜம் தாஸ் என்ற பக்தர் அங்கே வந்தார். அவளை யோகி மாலையில் வருமாறு கூறினார். யோகி நித்யாவையும், சாதுவையும் முன்னே அமர வைத்துவிட்டு பேசத் துவங்கினார். யோகி நித்யாவிடம் நீ என்ன சொல்ல விரும்பினாய் எனக் கேட்டார். நித்யா அவரிடம், “நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன் – நான் உங்களை என் இதயத்தில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். உங்கள் கருணை எப்போதும் எனக்கு கிடைக்க வேண்டும்.“ என்றாள். அவர் அதற்கு ஆசீர்வதித்து, “அது நடக்கும்“ என்று கூறினார். அவர் தன் கழுத்தில் இருந்த மாலையை கழற்றி அவளுக்கு பரிசளித்தார். இந்த சாது பகவானிடம் நித்யாவின் குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றார். பகவான் ஆசீர்வதித்து அவளது இல்லத்தில் அமைதி நிலவும் என்றார். யோகி இந்த சாதுவிடம் நீ ஏதாவது கூற விரும்புகிறாயா எனக் கேட்டார். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மூலம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று அங்கிருக்கும் நோயாளிகளுக்காக பிரார்த்தனை செய்து அவர்களுக்கு பிரசாதமாக வழங்க விபூதி மற்றும் குங்கும பாக்கெட்டுகளை சாது யோகியிடம் தந்து ஆசீர்வதித்து தருமாறு கேட்க, யோகி அதனை தனது கைகளில் சிறிது நேரம் வைத்திருந்து ஆசீர்வதித்து சாதுவிடம் தந்தார். விவேகானந்தா ஜெயந்தியின் புகைப்படங்களை யோகியிடம் நாங்கள் காட்டினோம். அவரும் அதனை ஆர்வத்தோடு பார்த்தார். மலேசியாவில் இருந்து திரு. சங்கரன் நம்பியார் யோகியின் தரிசனத்திற்காக 28 ஆம் தேதி வருவதாக தெரிவித்தோம். யோகி தனக்கு முன்னதாகவே தகவல் தருமாறு கூறினார். பின்னர் நாங்கள் அவரிடம், ”மேக் ஹிஸ்டரி“ என்ற இதழை யோகியிடம் தந்தோம் அதில் பப்பா ராம்தாஸ் அவர்களின் சேதிகளும், உலக ராம்நாம் இயக்கத்தின் விளம்பரமும் இருந்தது. இந்த சாது யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்திற்கான ஆசியை வேண்டினார். யோகி சாதுவின் தண்டம் மற்றும் தேங்காய் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்து அவரிடம் திருப்பி தந்து அவர்கள் திருக்கோயிலூர் செல்ல அனுமதி அளித்தார். 

நாங்கள் திருக்கோயிலூர் அடைந்தபோது திரு. D.S.சிவராமகிருஷ்ணன், திரு. D.S. கணேசன் மற்றும் திரு. சீத்தாராமன் எங்களை வரவேற்றனர். திரு ARPN. ராஜமாணிக்க நாடார் எங்களை சந்தித்தார். நாங்கள் அவர்களோடு எங்கள் பிப்ரவரி நிகழ்ச்சி திட்டங்கள் குறித்து பேசினோம். நாங்கள் திரு. சிவ வடிவேல் உடையார் அவர்களின் இல்லம் சென்று எங்களின் மயிலாடுதுறை திட்டம் குறித்து பேசினோம். நாங்கள் டாக்டர். ராமகிருஷ்ணன் அவர்களின் காட்டேஜ்ல் தங்கினோம். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு புத்துணர்வு அடைந்து ஞானானந்த கிரி ஆலயத்திற்கு சென்று சுவாமி நித்யானந்தா மற்றும் பிற பக்தர்களை சந்தித்தோம். சுவாமிகளின் முன்னிலையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இந்த சாது உலக ராம்நாம் இயக்கம் குறித்து பேசினான். சுவாமிஜியும் அதில் பேசினார். திரு. D.S. சிவராமகிருஷ்ணன் அங்கு கூடியிருந்தவர்களிடம் இந்த சாதுவை அறிமுகப்படுத்தினார். அங்கிருந்த நல் உள்ளம் கொண்ட கூட்டத்தினர் முழு மனதோடு உலக ராமநாம இயக்கத்தில் பங்கு பெறுவதாக உறுதியளித்தனர். இந்த சாதுவும், நித்யாவும் சென்னைக்கு அடுத்தநாள் காலையில் திரும்பினோம். 

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 27ல் சென்னை விவேகானந்தா நகர் சக்தி மற்றும் கணேஷ் கோயிலின் கும்பாபிஷேகத்தில் உரையாற்றினான். கும்பாபிஷேகத்தை திரு. சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். திரு.பால்ராஜ் ஐஏ௭ஸ் எங்களோடு இணைந்தார். சாது பகவானைப் பற்றியும் ராமநாம இயக்கத்தைப் பற்றியும்  பேசினான். பக்தர்கள் பகவானின் பிரசாதங்களை பெற்றனர். ஜனவரி 30 அன்று கவிஞர் கண்ணதாசன் நகரில் ராம்நாம் பிரச்சார கூட்டம் நடைப்பெற்றது. சர்வோதய நாள் கூட்டம் மகாத்மா காந்தி சிலை அருகே மெரினா கடற்கரையில் நடைப்பெற்றது அதிலும் இந்த சாது மகாத்மா காந்தி மற்றும் ராம்நாம் குறித்து பேசினான். பிப்ரவரி 9 ஆம் தேதி திருமதி. சாரதாமணி சின்னசாமி அவர்களின் இல்லத்தில் ராம்நாம் சத்சங்கம் நடைப்பெற்றது அதில் கணிசமான அளவில் பகவானின் பக்தர்கள் கலந்து கொண்டனர். 

புகழ்பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளரான திரு. தென்கச்சி சுவாமிநாதன், சென்னை வானொலியில் பிப்ரவரி 15 அன்று, “மதம் சார்ந்த வாழ்வும் மனிதகுல சேவையும்” என்ற தலைப்பில் இந்த சாதுவிடம் நேர்காணல் நடத்தினார். அதில் பகவானைப் பற்றியும் அவரது செய்திகளையும் பதிவு செய்தேன். 

பிப்ரவரி 23, சனிக்கிழமை திரு.  AR.PN. ராஜமாணிக்கம் சாதுவின் இல்லத்திற்கு வந்திருந்தார் அவருடன் சிவகாசி நாடார் பிரஸ்ஸின் திரு.S.S.D. சண்முகம் அவர்களும் வந்தார். பேராசிரியர். தேவகி இந்த சாதுவிடம் தொலைபேசி மூலம் பேசினார். இந்த சாது, பகவானின் பக்தரான, பாண்டிச்சேரியின் முன்னாள் துணை வேந்தரான, டாக்டர். K. வெங்கடசுப்பிரமணியம் அவர்களிடம் பேசினான்.  கல்பாக்கம் சித்தர் திரு. சுந்தர்ராஜா சுவாமியும் சாதுவை சந்தித்தார். அடுத்தநாள் இந்த சாது மாயவரத்துக்கு செல்ல தயார் ஆனான். கடிதம் ஒன்றை பகவானுக்கு எழுதினான்:

“பூஜ்ய குரு மஹராஜ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

தங்கள் ஆசியாலும், கருணையாலும் ராம்நாம் பிரச்சாரம் நடத்த மாயவரத்தில் ஒரு சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாது பிப்ரவரி 25-ம்  தேதி விழாவில் கலந்து கொள்ள நாளை மாயவரத்திற்கு கிளம்புகின்றான். இந்த விழாவின் அறிவிப்பை இத்துடன் இணைத்துள்ளோம். உங்கள் ஆசியை நாங்கள் வேண்டுகிறோம். 

அகில இந்திய வானொலி நிலையம் சென்னை – ஏ இந்த சாதுவின் நேர்காணலை வானொலியின் புகழ்பெற்ற நேர்காணல் நிபுணர் திரு தென்கச்சி சுவாமிநாதன் மூலம்,  “மதம் சார்ந்த வாழ்வும், ஆன்மீக சேவையும்‘ என்ற தலைப்பில் நிகழ்த்தியது, இது மார்ச் 20, 1991 புதன்கிழமை காலை 8.20 மணிக்கு ஒலிப்பரப்பாகும். வழக்கம்போல் இதனை நீங்கள் கேட்டு எங்களை ஆசீர்வதிக்க நாங்கள் பிரார்த்திக்கிறோம். 

இந்த சாது மாயவரத்திலிருந்து நீலகிரிக்கு ராம்நாம் இயக்கம் துவங்கப்பட்ட இடமான தங்காடு கிராமத்தில் நடக்க இருக்கும். மாசி மகம் திருவிழாவில் கலந்துகொள்ள  செல்ல இருக்கிறேன். இந்த விழா பிப்ரவரி 28 அன்று நடைபெறுகிறது. நாங்கள் உங்கள் ஆசியை வேண்டுகிறோம். இந்த சாதுவின் சகோதரியின் மகன். சிரஞ்சீவி. தேசிகனுக்கு சென்னையில் உபநயன விழா மார்ச் 3, 1991ல் நடைபெற இருக்கிறது அவனுக்கு உங்கள் ஆசியை வேண்டுகிறோம் . 

ராம்நாம் பரப்ப நாங்கள் ஒரு வேன் ஏற்பாடு செய்து  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் நடத்த இருக்கிறோம். நமது பிரச்சாரம் உங்கள் ஆசியாலும், கருணையாலும் வேகமாக வளர்ந்து வருகிறது. 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

குரு பகவான் யோகி ராம்சுரத்குமார் அருளால் இந்த சாது தனது தமிழகம் முழுவதிலுமான ராம்நாம் பிரச்சாரத்தை ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 24, 1991 அன்று துவக்கினான். திரு. AR.PN. ராஜமாணிக்கம் இந்த சாதுவுடன் ரயில் பயணத்திற்கு சென்னை எக்மோரில் இணைந்தார். இரயில் பண்ருட்டியை அடைந்த போது அங்கே பெருமளவில் பக்தர்கள் ராம்நாம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஆண்டாள்  மற்றும் திரு. சிவராமன் M.L.C. போன்றோர் தலைமையில் திரண்டனர். சாதுவை பார்த்து ஆசியையும், பகவானின் பிரசாதங்களை பெறவும் பலர் திரண்டிருந்தனர். அவர்களுக்காக ரயிலின் கார்ட் பத்து நிமிடம் தாமதமாக கொடியசைக்க ஒப்புக்கொண்டார். இரயில் சிதம்பரம் அடைந்தபோது திரு. ராம்கிஷோர் என்ற ராம்நாம் ஒருங்கிணைப்பாளர், பகவானின் மற்ற பக்தர்களான திரு. ஆழ்வார், திரு. திருஞானசம்பந்தம், திரு. நடராஜன் மற்றும் திரு. முத்து பாக்கியம் போன்றோருடன் சாதுவை ப்ளாட்பார்மில் வரவேற்று பிரசாதங்களை பெற்றுக் கொண்டனர். திரு. D.S. சிவராமகிருஷ்ணன் மற்றும் திரு. சீதாராமன் சாதுவுடன் இந்த பயணத்தில் இணைந்தனர். மீதமிருந்த பிரசாதங்களை சக பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. சாது மற்றும் அவருடைய குழுவினர் அவர்களுடன் பயணித்தது குறித்து அந்த பயணிகள் மகிழ்ச்சிதெரிவித்தனர். ரயில் மாலையில் மாயவரத்தை அடைந்தபோது திரு. சங்கர், சாதுவையும் அவர் குழுவினர்களையும் வரவேற்றார். நாங்கள் உடையாரின் எஸ்டேட்டிற்கு பயணித்தோம். அங்கே ஸ்ரீ ஞானானந்தா தபோவனத்தை சேர்ந்த அன்னையர்கள் பிரம்மாண்ட சத்சங்கம் மற்றும் பஜனையை மேற்கொண்டனர். 

அடுத்தநாள் காலையில் சிதம்பரத்தை சேர்ந்த பக்தர்கள் சாதுவை காணவந்து ராம்நாம் பிரச்சாரம் குறித்து பேசினார்கள். ஓர் கூட்டம். KSO உயர்நிலை பள்ளியில் மாலையில் நடைப்பெற்றது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேரா. முத்துவீரப்பன் மற்றும் பல பக்தர்கள் இந்த சாதுவுடன் இணைந்தனர். இந்த சாது குழந்தைகளுக்கு நசிகேதன், சுவாமி விவேகானந்தர், சகோதரி நிவேதிதா ஆகியோரின் கதைகளை கூறினான். பிள்ளைகள் ராம்நாம் ஜபத்தை கூற ஆர்வம் காட்டினார்கள். இரவில் சிதம்பரத்தை சேர்ந்த பக்தர்கள் தங்களின் சத்குரு ஞானானந்தா அவர்களுடனான அனுபவங்களை பகிர்ந்தார்கள். 

பிப்ரவரி 26 செவ்வாய்க்கிழமை அன்று திரு. வீரராகவன் அவர்களின் இல்லத்தில், சிறப்பான ஒரு சத்சங்கத்தில், அவரும், அவரது மனைவியும், இந்த சாதுவை  பூரணகும்பம் அளித்து பாதபூஜை செய்து வரவேற்றனர். திரு. ராஜமாணிக்கம் மற்றும் திரு. உடையார் இந்த சாதுவுடன் இணைந்தனர். மாலையில் ஒரு கூட்டம் கல்யாண மண்டபத்தில் நடந்தது. குற்றாலத்தை சேர்ந்த ஆனந்தா ஆயில் மில்லை சேர்ந்த  திரு.சொக்கலிங்கம் இந்த சாதுவை கௌரவித்தார். திரு.ரங்கபாஷ்யம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். திரு. கல்யாணராமன் உரையாற்றினார், அன்னையர்கள் பஜனை பாடல்களைப் பாடினர். சாது ராம்நாமத்தின் பெருமையை பற்றியும், பகவானின் ஆசியோடு துவக்கப்பட்ட இந்த இயக்கம் குறித்தும் பேசியதோடு, பகவான் ஆசீர்வதித்து தந்த பகவானின் புகைப்படங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

பிப்ரவரி 27 புதன்கிழமை, திரு சிவராமகிருஷ்ணன் மற்றும் திரு. சீத்தாராமன் சாதுவிடம் இருந்து விடைப்பெற்று சிதம்பரம் திரும்பினர். சாதுஜி, திரு.ARPN.ராஜமாணிக்கம் அவர்களுடன் திருச்சிக்கு புறப்பட்டார். திருச்சியின் ராம்நாம் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்களை வரவேற்றார். அவர் பக்தர்களை அழைத்து தங்கள் மாவட்டத்தில் ராம்நாம் பரப்ப கூட்டங்கள் நடத்துவது பற்றி சாது உடன் கலந்தாலோசனை செய்தார். அதன்பின் ராஜமாணிக்கம் சாதுவிடம் இருந்து விடைப்பெற்று மதுரைக்கு சென்றார். சாது கோயம்புத்தூர் பயணித்தார். 

பிப்ரவரி 28 வியாழக்கிழமை சாது நீலகிரியில் இருக்கும் தங்காடு கிராமத்திற்கு சென்றார். அந்த கிராமத்தின் மூத்தவர் திரு.கணபதி தலைமையில் கிராமத்தின் பெரியோர்கள், மற்றும் ராமநாம இயக்க ஒருங்கிணைப்பாளர், திரு. மோகன், அன்பான வரவேற்ப்பை தந்தனர். சாது கோயிலில் நடந்த மாசிமகம் பூஜையில் கலந்து கொண்டு அங்கே கூட்டத்தினரிடையே உரையாற்றினார். சாதுவும் அங்கு நடந்த ரத யாத்திரையில் கலந்து கொண்டார். அடுத்தநாள் காலை சாது திரு.  மோகனுடன் பக்தர்களின் இல்லங்களுக்கு சென்று பிறகு, ராமபிரானின் பரிவேட்டை நிகழ்ச்சியை கண்ணுற்றார்.. பின்னர் சாது பக்தர்களிடம் விடைப்பெற்று கோயம்புத்தூர் திரும்பினார். பகவானின் பக்தர் மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்களுடைய மகன், டாக்டர் தெ.பொ.மீ. காமேஸ்வரன், சேவா பாரதியின் சௌ.சுலோச்சனா மற்றும் பிற பக்தர்கள் சாதுவை சந்தித்து தங்கள் மாவட்டத்தில் ராம்நாம் பரப்புவதை குறித்த திட்டங்கள் பற்றி பேசினர். 

வெற்றிகரமான தஞ்சை, திருச்சி, நீலகிரி, மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் ராம்நாம் பிரச்சார யாத்திரைக்கு பின் சாதுஜி சென்னைக்கு சனிக்கிழமை மார்ச் 2 அன்று திரும்பினார். அவருக்கு பேரா. தேவகியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. திரு.AR.PN.ராஜமாணிக்கம், டாக்டர்.வெங்கடசுப்பிரமணியம் போன்ற பக்தர்களிடமும் தொலைபேசியில் பேசினார். மார்ச் – 4 அன்று பகவானுக்கு வெற்றிகரமான பயணம் குறித்தும், எதிர்கால நிகழ்ச்சிகள் குறித்தும் ஒரு கடிதம் எழுதப்பட்டது:

“பூஜ்ய குருமஹராஜ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

இந்த சாது வெற்றிகரமாக மயிலாடுதுறை நிகழ்ச்சிகள் மற்றும் நீலகிரியில் ராம்நாம் இயக்கத்தின் பிரச்சாரம் முடித்துவிட்டு சென்னைக்கு சனிக்கிழமை அன்று திரும்பினான். மயிலாடுதுறை போகும் வழியில் பண்ருட்டியில் பகவானின் பக்தர்கள் ரயில் நிலையத்தில் ஆரவாரமான வரவேற்பை வழங்கினர். இவையனைத்தும் உங்கள் தெய்வீக அருளும் லீலையும் ஆகும். அவர்கள் ஒர் பிரம்மாண்டமான விழாவை ராமநாமத்தை பரப்ப ஞாயிற்றுக்கிழமை 10-3-1991 அன்று ஏற்பாடு செய்துள்ளனர். அதற்குமுன் சனிக்கிழமை 09-03-1991 அன்று சிதம்பரத்தின் பக்தர்களும் ஓர் விழவை ஏற்பாடு செய்துள்ளனர். ஓர் நோட்டீஸ் இது சம்மந்தமாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் இருந்து திரும்பும் வழியில் இந்த சாது கோயம்புத்தூர் பயணித்தான். டாக்டர் தெ.பொ.மீ. காமேஸ்வரன், கோவையின் ஒருங்கிணைப்பாளர், சாதுவை சந்தித்தார், ஒரு கூட்டத்தை 16-03-1991 சனிக்கிழமை அன்று நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த சாது மறுபடியும் நீலகிரிக்கு 17-03-1991 ஞாயிற்றுக்கிழமை அன்று ராம்நாம் கூட்டத்திற்கு செல்வான். அடுத்தநாள் தங்காட்டில் நடைபெற உள்ள தீமிதி திருவிழாவில்  தலைமை தாங்க அந்த ஊர் பெரியவர்கள் அழைப்பு  விடுத்துள்ளனர். 

திரு.D.S.சிவராமகிருஷ்ணன் மற்றும் திரு. சீத்தாராமன் மயிலாடுதுறை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அவர்கள் சிதம்பரத்திற்கும் வருவார்கள். திரு. D.S.கணேசன் இன்று இங்கே இருக்கிறார். அவர் மேட்டூரில் இந்த மாத இறுதியில் ஓர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளார். திரு. தெ.பொ.மீ. ஞானப்பிரகாசம் அவர்களும் இன்று இங்கே வந்துள்ளார். இருவரும் என்னுடன் இருக்கின்றனர். 

நாங்கள் உங்கள் ஆசியை அனைத்து நிகழ்ச்சிகளின் வெற்றிக்கும் வேண்டுகிறோம். நமது வானொலி நிகழ்ச்சி 20-03-1991 அன்று புதன்கிழமை காலை 8.20 மணிக்கு சென்னை வானொலி – A வில் ஒலிபரப்பாகும். 

அன்புடனும், நமஸ்காரங்களுடன்,

சாது ரங்கராஜன். 

இணைப்பு: மேல் குறிப்பிட்டபடி”.

பண்ருட்டியை சேர்ந்த திருமதி. ஆண்டாள், சிதம்பரத்தை சேர்ந்த பேரா. முத்துவீரப்பன் ஆகியோரிடம் இருந்தும் வடலூரிலிருந்தும் அழைப்பிதழ்கள்  வந்தன.  இந்த சாது மறுபடியும் 07-03-1991 அன்று  பகவானுக்கு ஓர் கடிதம் எழுதினான். 

” பூஜ்ய குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

4-3-1991 அன்று எழுதிய கடிதம் தங்களுக்கு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். சிதம்பரத்தில் ராமநாம இயக்கத்தின் துவக்க விழா அழைப