ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.28

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.28 

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் மஹாசமாதி

ஜனவரி 30, 2001 , செவ்வாய்க்கிழமை சாதுவிற்கு யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் இருந்து பகவானின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வந்தது. சாது பகவானின் பக்தர், ஆட்டோ கேரவன் உரிமையாளர், திரு. குமார் அவர்களிடம் பேசி, திருவண்ணாமலைக்கு செல்ல கார் ஒன்றை ஏற்பாடு செய்தார். பாரதி மற்றும் மூன்று பக்தர்களுடன் சாது திருவண்ணாமலைக்கு விரைந்தார். ஜஸ்டிஸ் அருணாச்சலம் சாதுவை வரவேற்று பகவானின் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தார். சாது பகவானின் அருகாமையில் அரைமணி நேரம் செலவழித்தார். ஜஸ்டிஸ் அருணாச்சலம் சாதுவிற்கும் , பாரதிக்கும் அறை ஒன்றை ஏற்பாடு செய்தார். பகவானின் பக்தர்களான திரு. பாலகுமாரன், திருமதி. பவதாரிணி போன்றோர் அங்கே பகவானின் உடல்நிலை குறித்து கேள்விபட்டு வந்திருந்தனர். புதன்கிழமையும் சாது சிறிது நேரத்தை பகவானின் அருகில் செலவழித்தார். பாரதியை சென்னைக்கு அனுப்பிவிட்டு , சாது பெங்களூருக்கு, தென் ஆப்பிரிக்க பக்தர்களை வரவேற்க சென்றார். சேட்ஸ்வர்த்  சர்வ தர்ம ஆசிரமத்தின் திரு. பேசில் ( துளசிதாஸ் ) மற்றும் திருமதி. பிரமிளா போன்றவர்களை பிப்ரவரி – 2 அன்று வந்து சேர்ந்தனர். பாரதியும் பிப்ரவரி 3 அன்று சென்னையில் இருந்து திரும்பினார். சாது ஒரு காரை ஏற்பாடு செய்து, பாரதி, விவேக், நிவேதிதா மற்றும் குழந்தைகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் உடன் திருவண்ணாமலைக்கு சென்றார். சாது பகவானின் தரிசனத்தை பெற்று டாக்டர். ராஜலட்சுமி மற்றும. டாக்டர் ராமனாதன் உடன் சிறிது நேரம் செலவழித்தார். அவர் ஜஸ்டிஸ் அருணாச்சலத்துடன் பேசி பெங்களூருக்கு இரவில் திரும்பினார். 

சாது பிப்ரவரி – 4 , ஞாயிற்றுக்கிழமையன்று பெங்களூர் குந்தலஹள்ளியில் திருமதி சூர்யா ரமேஷ் அவர்களின் இல்லத்தில், சின்மயா மிஷனின் பாலவிஹார் வகுப்புகளில் கலந்து கொண்டார். சாதுஜி குழந்தைகளிடம் உபநிஷத் கதைகளையும், தனது சிக்ஷா குரு சுவாமி சின்மயானந்தா அவர்களுடனான தனிப்பட்ட அனுபவங்களையும், பகிர்ந்தார். அவர் குழந்தைபருவத்திலிருந்தே ஆன்மீக மற்றும் ஒழுக்க நெறிகளை விதைப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தி பேசினார். மாலையில் சாதுஜி ஒரு சத்சங்கத்தில் பெரியவர்களிடையே சின்மயா மிஷனின் சார்பாக குந்தலஹள்ளி விநாயகர் கோயிலில் உரையாற்றினார். வேதகாலம் தொடங்கி நவீன காலம்வரை, ஹிந்து தத்துவ சிந்தனை மற்றும் கலாச்சாரங்களில் உள்ள பகுத்தறிவு மற்றும் அறிவியல் அடிப்படைகள் குறித்து  அவர் பேசினார். 

பிப்ரவரி 16 ஆம் தேதி சாதுவோடு, திரு.பேசில், திருமதி. பிரமிளா, பாரதி ஆகியோர் சென்னை வந்தனர். சாது ஜஸ்டிஸ் அருணாசலம் அவர்களை சந்தித்தார். பகவானின் உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்று அவர் மூலம் அறிந்து கொண்டார். பிப்ரவரி 18, 2001 அன்று சென்னை பெரம்பூரில் சாது ரங்கராஜன் ஒரு இலவச மருத்துவ மையத்தை பாரதமாதா சித்தார்த்தா பள்ளியில் துவக்கி வைத்து, அங்கே சுவாமி விவேகானந்தரின் சேதியான, “மனிதர்களுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவை“ என்பதை குறிப்பிட்டு, உச்ச ஆன்மீக நிலை என்பது ஏழைகளிலும், கீழ்தட்டு மக்களிலும் இறைவனை கண்டு, பக்தியோடும், அர்ப்பணிப்போடும் அவர்களுக்கு சேவை செய்வதுதான் என்றார். சாது தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஏற்பாடு செய்த காயத்ரி ஜப யக்ஞத்தில், கொளத்தூர் வினாயகர் கோயிலில், கலந்து கொண்டு ஜெப சாதனையின் அறிவியல்பூர்வமான அடிப்படை குறித்து பேசினார். “பொன்மலர்” என்ற ஆன்மீக இதழின் ஆசிரியர் திரு. T.M. ராமகிருஷ்ணன் கூட்டத்தினிரிடையே உரையாற்றினார். 

பிப்ரவரி 20, 2001 அன்று அதிகாலையில் பகவானின் பக்தரான சசீந்திரம் ராஜலட்சுமி அவர்கள் பகவான் அவர்கள் மஹாசமாதி அடைந்து விட்டார் என்ற சேதியை தெரிவித்தார். நிவேதிதாவும் ஜஸ்டிஸ் அருணாச்சலம் மூலமாக தனக்கு கிடைத்த மஹா சமாதி தகவலை சாதுவிற்கு தெரிவித்தார். சாது தென்ஆப்பரிக்கா பக்தர்களுடன் ஆனந்தாஸ்ரமம் செல்ல வேண்டிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக திருவண்ணாமலைக்கு விரைந்தார். ஜஸ்டிஸ் அருணாச்சலம் சாதுவிற்கு ஒரு அறையை ஏற்பாடு செய்திருந்தார். சாது ஆசிரமத்தின் பிரார்த்தனை கூடத்தில் நாள் முழுவதும் பகவானின் பாதமருகில் அமர்ந்திருந்தார். சுவாமி முருகானந்தம், சுவாமி தேவானந்தா , திரு. பாலகுமாரன் மற்றும் பல முக்கிய பக்தர்கள் அங்கே குழுமினர். சாது இரவு முழுவதும் பக்தர்களோடு செலவழித்து, காலையில் மீண்டும் பகவானின் காலடியில் அமர்ந்து ராமநாம தாரக மந்திரத்தை ஜபித்தார். அவர் ஜஸ்டிஸ் அருணாச்சலம் மற்றும் பிறர் உடன் இறுதி சடங்குகள் குறித்து விவாதித்தார். ஆனந்தாஸ்ரமத்தின் சுவாமி சுத்தானந்தா அவர்களும் வந்திருந்தார். அவர் பகவான் அமர்ந்த நிலையில் இருந்த மேடைக்கு வர சிரமப்பட்டார். சாது,  மா தேவகி மற்றும் விஜயலட்சுமி மட்டுமே அவரது அருகில் இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆசிரம பணியாளர்கள் கூட்டத்தினரை தள்ளிய வண்ணம் இருந்தனர். சாது, சுவாமி சுத்தானந்தா அவர்கள் மேடைக்கு வந்து பகவானருகில் அமர உதவினார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் மரியாதையை பகவானுக்கு தெரிவிக்க குழுமியிருந்தனர். கூட்டத்தினர்  அமைதியற்ற நிலையில் இருந்தனர். பகவானின் உடலானது ஆசிரமக் கூடத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போதும்  பக்தர்கள் மிகவும் அமைதியற்று காணப்பட்டனர். அவரது உடல் சமாதி குழியினுள் இறக்கப்படும் முன், ஒரு பையில் அமர  வைக்கப்பட்டது. அங்கு குழுமியிருந்த தாய்மார்கள் பலரும் அவர்களின் நகைகள் மற்றும் நாணயங்களை அக்குழியினுள் போட்டனர். சாது, வியப்புடன் அதைப் பார்த்து, பகவானின் பயணத்திற்கு இவைகளெல்லாம் தேவையா என நினைத்தவுடன், திடீரென உள்ளிருந்து ஒலித்த ஒரு குரலில், சாதுவின் பகுத்தறிவு சிந்தனை காணாமல் போனது. சாதுவின் கைகளில் இருந்த தங்க மோதிரம் அதிசயமாக கழன்று குழியில் விழுந்து பகவான் அமரும் ஆசனமாக அமைந்தது. பகவானின்  உடல் மூடப்படும்போது சாது மற்றவர்களோடு சேர்ந்து இறுதிசடங்கை மேற்கொண்டார். சாது, குழியில் இருந்து விபூதியை எடுத்து, பகவானின் பாரதமாதா குருகுல ஆசிரம கோயிலில் பாதுகாக்க முடிந்து வைத்தார். மஹாசமாதி சடங்குகள் முடிந்தப்பின், சாது, ஜஸ்டிஸ் அருணாச்சலம், மா தேவகி, ஆகியோரிடம் விடைப்பெற்று, சென்னைக்கு சசீந்திரம் ராஜலட்சுமி, அனுராதா மற்றும் திரு விஸ்வநாதன் ஆகியோருடன் திரும்பினார். வியாழக்கிழமை காலை, சாது, சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு மஹாசமாதி நிகழ்வுகள் குறித்த தகவல்களை அனுப்பிவிட்டு, பெங்களூர் திரும்பினார். 

பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் திதி பூஜை, உரிய சடங்குகள் மற்றும் அகண்ட ராமநாமத்தோடு, சாது ரங்கராஜனால், பெங்களூர் பாரதமாதா குருகுல ஆசிரமத்தில், மார்ச் 22, 2001 அன்று, நடத்தப்பட்டது. கிருஷ்ணராஜபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்தா சாதனா கேந்திரத்தின் தலைவர், சுவாமி சந்திரேசானந்தா, அந்த சிறப்பு சத்சங்கத்தில் பங்குபெற்று உரையாற்றினார். 

ஏப்ரல் 2001 “தத்துவ தர்சனா” இதழானது பகவானின் அட்டைப்படத்தை தாங்கி சாதுவின், பகவானுக்கான அஞ்சலி தலையங்கத்தோடு வெளியானது. 

“தலையங்கம் 

எனது தீக்ஷா குருவிற்கு சிரத்தாஞ்சலி

“தந்திரக்காரனும், பைத்தியக்காரனும் மட்டுமே வாழும் போது கடவுளாக அறியப்பட விரும்புவார்கள். விவேகமும், சத்தியமுடன் இந்த பூமியில் இருப்பவர்களுக்கு கடவுள்தன்மை என்பது அவர்களது வாழ்வில் தாங்க இயலாத பாரமாகவே இருக்கும்.” 

– யசோதரா தனது மாணவர்களுக்கு கி.மு. 5054 ல் சொன்னது. 

மேற்சொன்ன மேற்கோள் புகழ்பெற்ற எழுத்தாளரான பகவான் S. கித்வானி எழுதியுள்ள ஆர்யர்களின் திரும்பல்என்ற, எண்ணத்தை தூண்டும், புராதன ஆரியர்களின் வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றாகும்.

தேவா மானுஷ ரூபேண சரந்த்யேதே மஹீதலே”  — “கடவுள் மனித வடிவில் பூமியில் நடக்கிறார்” என்று நமது வேதங்கள் கூறுகின்றன.  ராமாயணத்தில், பகவான் ராமசந்திரன், ஆத்மானம் மானுஷம் மன்யே தசரதாத்மஜம் – “நான் மனிதன், தசரதனின் மகன்” என்று உணருங்கள் என்று வேண்டுகிறார்.

கடவுள் மனிதராக பூமிக்கு வந்து அவரே இலட்சிய புருஷனாக இருந்து மனிதர்கள் அவரை ஒரு எடுத்துக்காட்டாக கொண்டு தங்களை கடவுள் தன்மைக்கு உயர்த்திக் கொள்ள வழிவகுக்கிறார்கள். அத்தகைய தெய்வீக ஆன்மாக்கள் இறைவன் வகுத்த பாதையில் சென்று கடவுள் தன்மையை அடைவார்கள். ஆனால் அவர்கள், அவர்களை, ஆன்மீக உணர்வு பெறுவதற்கான தாகம் மிகுந்த  பக்தர்கள் தாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று அடையாளம் கண்டு கொள்ளும் வரை, சாதாரண மனிதர்கள் போல் மக்களிடையே மறைந்து வாழ்வார்கள்.

பகவான் யோகி ராம்சுரத்குமார், எனது தீக்ஷா குரு, தன்னை “பைத்திய பிச்சைக்காரன்“ என்று கூறிக் கொள்வார். அவர் தனது சாதனா காலத்தின் ஆரம்ப வாழ்க்கையை சாலை ஓரங்களில் இருக்கும் மரத்தடியிலும், இரயில்வே பிளாட்பாரங்களிலும், மிகவும் சந்தடியான மார்கெட், மற்றும் கோயிலின் முன்பும் கழித்த அவர், தனது பக்தர்கள் கட்டிய பெரிய ஆசிரமத்தில் திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை , பிப்ரவரி 21, 2001 அதிகாலை 3.20 மணிக்கு அவரது 84 வது வயதில் மஹாசமாதி அடைந்தார். 

அவர் டிசம்பர் – 1, 1918 ல் ஒரு மிகச்சிறிய குக்கிராமத்தில் , உ.பி. -யின் பலியா மாவட்டத்தில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது சிறுவயது முதலே மதநம்பிக்கை கொண்டிருந்தார். கிணற்றடியில், வாளியில் நீர் நிரப்பிக் கொண்டிருக்கும் பொழுது, அவர் வீசிய காற்றின் நுணி  ஒரு பறவையின் மீது பட்டு,  அது அந்த இடத்திலேயே இறந்த நிகழ்வு. அவருக்குள் உலக வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை குறித்த பார்வையை தந்தது. அவர் பல சாதுக்கள் மற்றும் மகான்களின் தொடர்பை தேடி அவர்களிடம் வாழ்க்கையின் இலட்சியத்தை அறிய முயன்றார். அவர் அலகாபாத் பல்கலை கழகத்தில் ஆசிரியருக்கான கல்வி மற்றும் பட்டத்தை பெற்று தன்னை ஒரு ஆசிரியராக நிறுவியவர், ராம்ரஞ்சனி என்பவரை மணந்து மூன்று மகள்களான, யசோதா, மாயா மற்றும் பீனா, மற்றும் ஒரு மகனான அமிதாப், என்பவர்களையும் பெற்றிருந்தார். ஆனால் அவரின் ஆன்ம தாகம் அவரை மீண்டும் மீண்டும் கங்கை கரையில் உள்ள சன்னியாசிகளை அடிக்கடி தேடி செல்ல வைத்தது. அத்தகைய ஒரு நிகழ்வில் ஒரு மகாத்மா அவரிடம் அவரது குருவை கண்டறிய,  பாண்டிச்சேரிக்கு, மஹாயோகி ஸ்ரீ அரவிந்தர் அவர்களை தரிசிக்க செல்லுமாறு கூறினார். அவர் பாண்டிச்சேரிக்கு 1947 ல் வந்தார். அங்கே அவர் பகவான் ரமணர் குறித்து கேள்விபட்டு திருவண்ணாமலைக்கு பயணப்பட்டார். அங்கே அவர் பப்பா ராம்தாஸ் அவர்களைப்பற்றி கேள்விபட்டு கேரளாவின் காஞ்சன்காட்டில் உள்ள ஆனந்தாஸ்ரமத்திற்கு சென்றார். அந்த தேடித்திரியும் ஆன்மாவானது தனது இலக்கை இறுதியாக அடைவதற்கான நேரம் இன்னமும் சேர்ந்து வராததால், தனது இல்லத்திற்கு திரும்ப வந்தது. அடுத்த வருடமும் இந்த மூன்று இடங்களுக்கும் பயணித்தும் நிறைவினை அடையாத அவர் வடக்கு நோக்கி பயணித்தார். 1950 களில் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ ரமணர் இருவரும் மஹாசமாதி அடைந்தார்கள் என்ற சேதியை அறிந்த அவர் இருக்கும் ஒரு வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது என நினைத்து பப்பா ராம்தாஸ் அவர்களிடம் வந்து அவரில் தனது குருவை கண்டார். மீண்டும் ஒருமுறை அவர் 1952-ல் பப்பாவிடம் வந்தார். இந்தமுறை அவருக்கு ராமநாம தாரக மந்திரமான, ” ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்“என்ற ராம நாமதாரக மந்திரம் தீக்ஷையாக வழங்கப்பட்டது. அவர் பப்பாவின் அருகே இருக்க விருப்பம் கொண்டார். ஆனால் பப்பா அவருக்கு வேறொன்றை விதித்திருந்தார். பப்பா அவரை ஆசிரமத்தைவிட்டு வெளியே சென்று ஜப சாதனையை மேற்கொள்ளுமாறு கூறினார். ஆனாலும் அவர் பப்பா வடநாட்டில் எங்கெல்லாம் பயணம் மேற்கொண்டாரோ அங்கேயெல்லாம் சென்றார். பப்பா அவரிடம் தன்னை பின் தொடரும் இந்த பைத்தியக்காரத்தனத்தை விட்டுவிட்டு கிர்னாரில் தங்கி சாதனாவை மேற்கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் ராம்சுரத்குமார் தனது இறுதி ஓய்வெடுக்கும் இடமாக புனிதமான அருணாச்சலத்தில் 1959 -ல் வந்தடைந்து அவரது நிரந்தர இல்லமாக ஆக்கினார். 

ஆரம்பகாலத்தில் திருவண்ணாமலையின் அருணாச்சல மலையை சுற்றி வாழ்கிறவர்கள் அவரை, ஒரு வட இந்திய, பைத்தியம் பிடித்த, அழுக்கு பிச்சைக்காரனாக, கிழிந்த உடைகளை அணிந்து, ரயில்வே நிலையத்திற்கு அருகே ஒரு மரத்தடியிலோ, கோயிலின் முன்போ அல்லது தெருக்களில் உள்ள கடைகளின்  திண்ணைகளிலோ அமர்ந்து புகைபிடித்தவாறோ, அல்லது இலக்கின்றி திரிவதையோ பார்ப்பார்கள். சிலர் அவரை ஆனந்தாசிரமத்திற்கு வந்திருந்தவர் என்று தெரிந்து கொண்ட போதிலும் “பைத்தியக்கார பீஹாரி“ யாக நினைத்தார்கள். ஆசிரமத்தில் பரவச நிலையில் காட்சியளிக்கும் அவர் பிற பக்தர்களுக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் பப்பா அவரை விலக்கியே வைத்திருந்தார் என்று அவர்கள் நினைத்தனர். மயானத்தை இருப்பிடமாகக் கொண்டு, பித்தனாக அலைந்த சிவபிரானையே  அவரது மாமனார் தக்ஷன் அவமரியாதையாகவும் வெறுப்புடனும் நடத்தவில்லையா?

சில ஆசிர்வதிக்கப்பட்ட ஆன்மாக்கள் அவரை பிச்சைக்காரர்களின் இடையே இருக்கும் துறவியாக அடையாளம் கண்டு அவரை தொடர்ந்து வணங்கி வந்ததோடு, அவரை யோகி மற்றும் கடவுளின் குழந்தை என்றழைத்தனர், ராம்சுரத்குமார் அவர்களோ தன்னை, “அழுக்கு, பைத்திய பிச்சைக்காரன்” என்றே கூறிக் கொண்டார். துணை வேந்தர்கள், நீதிபதிகள், அரசியல்வாதிகள் போன்ற உயர் பதவிகளில் உள்ள, ஆண்கள் மற்றும் பெண்கள், அவரது ஆசியை பெறுவதற்காக வந்தனர். ஆனால் அவர் அனைவரையும் சற்று தொலைவிலேயே வைத்திருந்தார். அவர் தன்னை பலர் பின்பற்றும் ஆன்மீக தலைவராக பிரகடனப்படுத்தி கொள்ளவேயில்லை. அவர் ஆசிரமத்தையோ, ஆன்மீக அமைப்பையோ உருவாக்கவேயில்லை. அவர் தங்குவதற்கு இல்லம் ஒன்று பரிசாக  வழங்கப்பட்டபோதும் அவர் அதனை தனது கைகளில் திணிக்கப்படும் அனைத்தையும் வைக்கும் இடமாக வைத்துவிட்டு பெரும்பாலும் வராண்டாவிலேயே தனது பெரும்பான்மையான நேரத்தை, வரும் பார்வையாளர்களை வரவேற்கும் இடமாக வைத்திருந்தார். உயர்பதவியிலிருப்பவர்களோ, சாமானிய கிராம மக்களோ, அனைவரையும் சமமாகவே கருதினார். சில சமயம் சில மக்கள் அவரை வழிபட்டனர். ஆனால், சிலரின் சுயநலமிக்க உலகாயதமான ஆசைகள் நிறைவேறாதபோது அவர்கள் இவரை தேவையில்லை என ஒதுக்கினர். இருப்பினும் பாராட்டோ, கண்டனமோ இரண்டும் அவர் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் பக்தர்கள் நெருங்க முடியாத உயர்ந்த இறைநிலையி்லிருந்தார். அவர் எவரிடமும் எதையும் எதிர்பார்த்ததில்லை, பிறருக்குக் கொடுக்க எதையும் வைத்திருக்கவும் இல்லை. அவர் பகவத்கீதையின் கூற்றுபடி ஒருவர் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே அவர் பக்தர்கள் அவரவர்களுக்கேற்ற தங்களது சொந்த பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதித்தார். பெரிய அளவிளான ஆசிரமம் அமைக்கப்பட்ட பின்னரும் அவர் எந்த ஒரு ஆன்மீக அமைப்பையும் உருவாக்கும் எண்ணம் கொள்ளாமல், தினமும் இரண்டுமுறை அங்கு வந்து நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். அவரது உடல்நிலை மெல்ல சரியத்துவங்கியபோது ஆசிரமத்திற்கு பலமுறை பயணிப்பது கஷ்டமாக போனதால், அவரது வாழ்வின் இறுதியில் பக்தர்களின் வசதிக்காக அவர் ஆசிரமத்திலேயே தங்கினார். 

ஆதி சங்கரர் மூன்று விஷயங்கள. கிடைப்பதற்கு அரிதானவை, அவைகள் கடவுளின் கருணையாலேயே கிடைக்கும் என்கிறார். அவைகள் மனிதப்பிறவி, பெரு விடுதலைக்கான தேடல் மற்றும் உத்தம குரு ஒருவரின் பாதுகாப்பு கிடைத்தல். இந்த சாது முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தின் காரணமாகவே, இந்த சாதுவை வழிநடத்த, பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் புனித பாதங்களை அடைவதற்கும் அவர் ஆசியை பெறுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பகவான் யோகி ராம்சுரத்குமார் அவரது குருவிடமிருந்து பெற்ற ராமநாம தாரக மந்திர தீக்ஷை, யோகியிடமிருந்து இந்த சாது பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. பப்பா ராம்தாஸ் அவர்களின் 104 வது ஜெயந்திவிழா, ஏப்ரல் 26 , 1988 அன்று, அருணாச்சல மலைமீதுள்ள ஆலமரத்து குகையில் பப்பா ராம்தாஸ் அமர்ந்து தியானித்த இடத்தில் நடைபெற்ற பொழுது அந்த விழாவில் தலைமை தாங்க இந்த சாது அழைக்கப்பட்டிருந்தான்.  அங்கே மிகவும் எதிர்பாராத விதமாக யோகி இந்த சாதுவை சந்தித்து அவரை குகைக்குள் இழுத்துச்சென்று திடீரென்று தீக்ஷை வழங்கினார். யோகி ராம்சுரத்குமார் மிக முக்கிய பாடங்களான தியாகம் மற்றும் துறவு குறித்து  தீக்ஷை அளிக்கும்பொழுது சாதுவிற்கு விளக்கினார்: துறவு என்பது எதையோ கொடுப்பதோ அல்லது பெறுவதோ அல்ல ஆனால் அது உனது மனப்பான்மையில் ஏற்படும் மாற்றம்“. மேலும் அவர், நேற்றுவரை நீ செய்த செய்கைகளை செய்தவனாக நீ இருந்தாய். ஆனால் இன்றுமுதல் எனது தந்தை உன் மூலமாக பணி செய்ய இருக்கிறார்என்றார் அவர் சாதுவிடம்! தனது குருவான பப்பாவின் பணியான ராமநாமத்தை பரப்புவதையும், மாதாஜி கிருஷ்ணாபாய் உலக அமைதிக்காக துவங்கிய 15,500 கோடி நாமஜப யக்ஞத்தை முடிப்பதற்கான பணியையும், அர்ப்பணிப்போடு செய்யுமாறு கூறினார். இந்த சாது தனது சகோதரி நிவேதிதா அகாடமியை பகவானின் பாதங்களில் ஒப்படைத்து இந்த பணியை மேற்கொள்ளவதாக கூறினார். பகவானும் இந்த ஸ்தாபனத்தின் பணிகளை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்திச் சென்றார். இந்த சாது யோகி ராம்சுரத்குமார் ஆசிரம பணிகளுக்காக சில முக்கியமான நேரங்களில் அழைக்கப்பட்டாலும், சில சிறப்பு பணிகள் தவிர்த்து, மற்ற நேரத்தில் சாதுவை பப்பா ராம்தாஸ் பணியான ராமநாம ஜப யக்ஞத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பரப்பும் பணியை மேற்கொள்ளுமாறு பகவான் கூறினார். 

ஆன்மீக குருமார்கள் காலகாலமாக இந்த பாரத தேசத்தில் வந்து கடவுள் அறிதல் என்ற பாதையை வேட்கை கொண்ட பக்தர்களுக்கு அமைத்து தந்தாலும், சில சமயம் பக்தர்களின் குருட்டுத்தனமான போக்கும், மூடநம்பிக்கைகளும், சடங்குகளோடான வழிபாடும் இத்தகைய மகாத்மாக்களின் வருகையின் இலக்கை சிதைக்கின்றன. எனது குரு ஒருபோதும் தான் ஒரு சிலையாக வழிபடப்படுவதை விரும்பவில்லை. ஆனால் தான் ஒரு இலட்சியமாக இருக்க விரும்பினார். மகாத்மாக்களை சிலைகளாக்கி அவர்களின் இலட்சியங்களை தியாகம் செய்து விடுகிறோம். நாம் நமது குருவிற்கு தரக்கூடிய மிகப்பெரிய மரியாதை என்பது உண்மையாகவும், அர்ப்பணிப்போடும் அவரது காலடித்தடங்களை எவ்வளவு சிறப்பாக இயலுமோ அவ்வளவு சிறப்பாக பின்பற்றுதலே ஆகும். எனது குரு பணிவின் உருவகம். அவர் தன்னை மதிக்க தவறியவர்களையும் மதிக்க தவறியதில்லை. குருவிடம் வைக்கப்படும் இந்த சாதுவின் ஒரே ப்ரார்த்தனை இதுவே :– அவர், இந்த சாதுவிற்கு, தனது குருவிடம் கண்ட அனைத்து நல்ல தன்மைகளையும் பின்பற்ற தேவையான வலிமையை அளித்து, தனது குரு தன்னிடம் தந்த பணியை சிறப்பாக முடித்திட அருள வேண்டும். இந்த சாதுவிற்கு அங்கீகாரம் கிடைக்கிறதோ அல்லது புறக்கணிக்கப் படுகிறானோ, பாராட்டப்படுகிறானோ அல்லது இகழப்படுகிறானோ, ஒவ்வொரு படியிலும் வெற்றியை காண்கிறானோ அல்லது தோல்வியும் ஏமாற்றவும் ஏற்படுகிறதோ, எந்த நிலையிலும் குருநாதர் தனக்கு வழங்கியுள்ள பணியை லட்சியம் அடையும்வரை முன் கொண்டுசெல்ல குருநாதர் அருள்புரிய வேண்டும். 

எனது குரு வெறும் யோகி மட்டுமல்ல, அவர் ஒரு பெரும் தேசபக்தர். அவர் உறுதியாக தனது குரு மஹாயோகி ஸ்ரீ அரவிந்தர் கூறிய வார்த்தைகளை நம்புபவர், அதாவது, இந்த பாரத தேசம் லோக குருவாக இருந்து,                   பாரத்தேசத்தின் ஆன்மீக பாரம்பரியம் இந்த உலகத்தை முழுமையாக தழுவி, மொத்த மனிதகுலத்தையும் தெய்வீக இலக்கிற்கு கொண்டு செல்லும் என்பதாகும். நமது தாழ்மையான அமைப்பான ‘பாரதமாதா குருகுல ஆசிரமம் & யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம்’ எனது குருவின் ஆசி மற்றும் கருணையால் நிறுவப்பட்டது. பெரும் மகான்களின் கனவுகளை நனவாக்க இந்த அமைப்பு தனது எளிய பங்கை நிறைவேற்றும். சகோதரி நிவேதிதா அகாடமி எனது குருநாதரின் அருளாசியால் புனிதமான பாரத நாட்டிற்கும் வெளிநாடுகளில் வாழும் ஹிந்து மக்களுக்கும் ஆற்றிவரும் தொண்டுப்  பணியில்,  அதன் இருபத்திஐந்தாவது ஆண்டிற்கு, அடுத்த ஆண்டு  ஏப்ரில் மாதத்தில், அடியெடுத்துவைக்கிறது. அந்த பணிகளுக்காக தன்னை மீண்டும் அற்பணித்துக்கொள்கிறது  

“மகத்தான மனிதர்களின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது

        நாமும் நம் வாழ்க்கையை உயர்ந்ததாக்க இயலும் 

மேலும், விடைபெறும் பொழுது நமக்குப்  பின்னால்  விட்டுச்செல்வோம் 

        காலமெனும் மணலில் கால்தடங்களை.”

வாழ்க்கையின் ஒரு சத்சங்கீதம் , லாங்ஃபெலோ 

நமது குருவான பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் கால்தடங்களை பின்பற்றி நாமும் நமது வாழ்க்கையை உயர்ந்ததாக்கி நமது கால்தடங்களை காலமெனும் மணலில் விட்டுச் செல்வோம். 

வந்தே மாதரம் ! “

பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் முதலாமாண்டு திதி பூஜையான மார்ச் – 9 , 2002 அன்று சாது, ‘தத்துவ தர்சனா’வில் ஒரு அறைகூவலை பகவானின் இந்தியா மற்றும் வெளிநாட்டு பக்தர்களுக்கு விடுத்திருந்தார்: 

”தலையங்கம் 

சிவோ பூத்வா சிவம் யஜேத் — 

சிவனாக மாறி சிவனை வழிபடுங்கள்

“சந்தன குழம்பு, மற்றும் மலர்களால் வழிபடுவது மதிப்பற்ற வழிபாட்டு முறை. எதை வழிபடுகிறாயோ அதுவாக மாறுவதுதான் உண்மையான வழிபாடு. ‘சிவோ பூத்வா சிவம் யஜேத்‘ – ‘சிவனாக மாறி சிவனை வழிபடுங்கள்’ என்பதே தர்மத்தின் தனிச்சிறப்பாகும்.” இந்த சேதியை ஸ்ரீ குருஜி கோல்வால்கர், ஆர்.எஸ்.எஸ் – ன் இரண்டாவது சர்சங்சாலக்,  தனக்கு முன் பதவி வகித்த, ஹிந்து ராஷ்டிர த்ருஷ்டா, டாக்டர். கேசவ் பலிராம் ஹெட்கேவார், நிறுவனர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் – ன் முதல் சர்சங்கசாலக், 1940-ல் காலமான பொழுது, பதிமூன்றாவது நாள் சடங்குகளின் நேரத்தில், தனது அஞ்சலியை, அவருக்கு செலுத்தும் பொழுது, வழங்கினார். 

பரம்பூஜ்னீய ஸ்ரீ குருஜி அவர்களின் இந்த வார்த்தைகளை நாங்கள் எங்களின் குருவின் முதலாமாண்டு திதி பூஜையான மார்ச் – 9 , 2002 அன்று நினைவில் கொண்டோம். ஹிந்துக்கள் என்பவர்கள் வெறும் சிலை வழிப்பாட்டாளர்கள் அல்ல அவர்கள் இலட்சிய வழிப்பாட்டாளர்கள். என் குரு , யோகி ராம்சுரத்குமார் ஒரு தாழ்மையான மற்றும் எளிமையான மனிதராகவே அவரது வாழ்நாள் முழுவதும் இருந்தார். 1940 களில் அவரது ஆன்மீக தேடலுக்காக அவர் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ரமணா மகரிஷி அவர்களை சந்தித்து பின்னர் பப்பா ராம்தாஸ் மூலம் ஆனந்தாஸ்ரமத்தில் தீக்ஷை  பெற்றார். அவர், ஒரு துறவியின் வாழ்க்கை முறை பற்றிய மேற்கோள், கரதல பிக்ஷா, தரு தல வாச“, அதாவது தனது கைகளில் பிக்ஷை பெற்று மரத்தடியில் வசிப்பது, என்பதை கடைப்பிடித்து இந்தியா முழுவதும் பயணித்து, இறுதியாக திருவண்ணாமலை ரயில்வே நிலையத்திற்கு அருகே உள்ள புன்னை மரத்தடியில் தஞ்சமடைந்தார். சாதாரண மனிதர்களின் கண்களுக்கு அவர் பைத்திய பிச்சைக்காரனாக காட்சி அளித்த போதும், அவரது தெய்வீக பெருமையை, உண்மையை தேடுபவர்களிடமும் இருந்து  அவரால் மறைத்து வைக்க முடியவில்லை. அவரை பல அறிஞர்களும், இலக்கியவாதிகளும், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்களும் அடையாளம் கண்டு கொண்டு அவரை நெருங்கத் துவங்கினர், அவரது தேவைகளை நிறைவேற்ற அவர்கள் தயாராக இருந்தபோதும், குரு தனது எளிமையான வாழ்க்கையையே தொடர்ந்தார். சில நல்ல உள்ளங்கள் ஒரு பழைய வீட்டை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அருகே அவர் தங்குவதற்காக தேரடி வீதியில் அமைத்துக் கொடுத்தனர். இருப்பினும் குரு தனது பெரும்பாலான நேரத்தை தேரடி மண்டபத்திலும், கோயில் வளாகத்திலும், கோயிலுக்கு அருகே உள்ள கடைகளின் வராண்டாவிலும் செலவழித்தார். 

எனது குரு தன்னை ஒருபோதும் ஒரு ஆன்மீக தலைவராகவோ, மத தலைவராகவோ கருதியதில்லை. எனவே அவர் ஒருபொழுதும் தன்னைச்சுற்றி புகழ் புகழ்பாடும் பக்தர்  கூட்டத்தை வைத்துக்கொள்ளவில்லை. ஒருவர் பெரும் பணக்காரரோ செல்வாக்கு மிகுந்தவரோ  ஆயினும், பகவானிடம் நெருங்குவது பகவான் விரும்பினால் மட்டும் தான் இயலும். பெரும் வியாபாரி அல்லது அரசாங்க  அதிகாரி ஆயினும் சரி, கிராமத்தில் வசிக்கும் எளிய விவசாயி அல்லது தெருவில் அலையும் பிச்சைக்காரனாக இருந்தாலும் சரி, அவர் விரும்பினால் அவரை நெருங்க விடுவார். அவர் விரும்பாவிட்டால் “என் தந்தை உங்களை ஆசீர்வதிக்கிறார், நீங்கள் போகலாம்” என்று கூறி உடனே அனுப்பி விடுவார். 

பல பிறவிகளில் சேர்த்த புண்ணியம் மட்டுமே இந்த சாதுவை அவரது இதயத்தில் இடம்பெற செய்து, அவரிடம் இருந்து மந்திர தீக்ஷையையும் பெற வைத்தது. 1988-ல், திருவண்ணாமலை உச்சியில், அவரது குருநாதர் பப்பா ராமதாஸ் அமர்ந்து தவம் செய்த ஆலமர குகையில், பப்பாவின் ஜெயந்தி நடைபெறுகின்ற புனிதமான வேளையில், இந்த சாதுவிற்கு அவர் தீக்ஷை வழங்கினார். அவர் இந்த சாதுவைக்காண மலையேறிவந்து, சற்றும் எதிர்பார்க்காதவிதமாக மந்திரதீக்ஷை வழங்கியது, இந்த சாதுவிற்கு, வானத்திலிருந்து திடீரென்று இறை அருள் இறங்கிவந்து தன்னை ஆட்கொண்டதுபோல் இருந்தது. மந்திர தீக்ஷை வழங்கிய குருவாக இருந்த பொழுதிலும் அவர் சாதுவை, சாதாரணமாக குருமார்கள் தங்களது சீடர்களை நடத்துவது போல, நடத்தவில்லை. ஒரு ஸுஹ்ரித் சகா – ‘நல்ல நண்பனாக’ நடத்தினார். சாதுவின் கரங்களைப்பற்றி பகவான் கோயில் வளாகங்களில் அல்லது நகர பாதைகளில் நடந்தார். பலமணி நேரம் சாது உடன்  உரையாடுவதில் அல்லது ராமநாம ஜபம் செய்வதில் கழிப்பார். சில சமயம் சாதுவை வெளியே அழைத்துச்செல்வதற்காக சாது தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு வரவும் அவர் தயங்கியதில்லை. சாதுவுடன் ஒரே இலையிலிருந்து உணவை பகிர்ந்துகொள்வார். சில சமயம் அவரது கரங்களைப்பற்றியவாறே இந்த சாதுவை அவரது அருகில் தூங்கவும் அனுமதித்தார். அவரிடம் ஒருபோதும் அகங்காரத்தின் சாயல்கள் தெரிந்தது இல்லை. இது அவரது பக்தர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் பின்பற்றவேண்டிய ஓர் பெரும் குணாதிசயமாகும்.

தீக்ஷைக்குப்பின் இந்த சாது ராமநாமத்தை பாரதத்திற்கு உள்ளேயும் வெளி நாடுகளிலும் பரப்புவதில் முழுமையாக ஈடுபட வேண்டுமென்று பகவான் விரும்பினார். ஆகையினால் சாது பகவானிடம் அடிக்கடி செல்ல இயலவில்லை. எப்போது திருவண்ணாமலைக்கு பயணிக்க நேர்ந்தாலும் அவர் முன்கூட்டியே தகவலை பகவானுக்கு தெரிவித்ததோடு அவரோடு நீண்ட நேரத்தை செலவழித்தார்.  பல தீவிரமான தேடல் உள்ள பகவானின் பக்தர்கள், சாது பகவானுக்கு நெருக்கமான சீடர் என்பதை உணர்ந்து, அவருக்கு உரிய மரியாதையும் கொடுத்தார்கள். பல வி.ஐ.பிக்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், உயர்மட்ட அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், மற்றும் பல வெளிநாட்டு பக்தர்கள் என அனைவரும், சென்னை மாநகரின் நெருக்கமான ஒரு பகுதியில், ஒரு பழைய கட்டிடத்தில் அமைந்த, சாதுவின் தாழ்மையான இரண்டு அறைகள் கொண்ட வாடகை வீட்டிற்கு விஜயம் செய்தனர். அவர்களில் சிலர், பகவானை  நெருக்கமாக சந்திப்பதற்கு, சாது உடன் திருவண்ணாமலைக்கும் பயணித்தனர். பகவானை தரிசித்தால் அவர் அவரது தெய்வீக ஆற்றல் மூலம் தங்களது பொருளாதார மேம்பாடு மற்றும் சுயநல பிரச்சனைகளுக்கு தீர்வு ஆகியவை வழங்குவார் என்று கனவுகண்டு அவரை நெருங்கியவர்கள் ஏமாற்றம் அடையும் பொழுது அவரை விட்டு விலகவும் செய்தனர். சாதுவுடன் பகவானை தரிசித்து பகவானுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட சிலர், பின்னர் சாதுவின் உதவி தேவையில்லை என்று அவரை புறக்கணிக்கவும் செய்தனர். ஆனால் பகவான் எப்பொழுதும் ஒரு எளிய மற்றும் பணிவான ஆத்மாவாகவே திகழ்ந்தார்.

ஒருமுறை சாது பகவானுடன் அமர்ந்திருந்தார். திருவண்ணாமலைக்கு புனிதப் பயணம் வந்த ஒரு சில கிராமத்தினர் பகவானை தரிசிக்க அவரது இல்லத்திற்கு வந்தனர். பகவான் ஒரு பிச்சைக்கார தோற்றத்தில், கையிலே ஒரு சிகரெட் வைத்து புகை பிடித்துக் கொண்டு, வராந்தாவில் அமர்ந்திருந்தார். சாது, தனது வழக்கமான காவி உடையுடன் அப்போது பகவான் அருகே அமர்ந்திருந்தார். அங்கே வந்த அப்பாவி விவசாயிகள் அறியாமையினாலோ அல்லது யாரோ ஒருவர் தவறாக சுட்டிக்காட்டியதாலோ, பகவானை அடையாளம் கண்டுகொள்ளாமல், சாதுவின் காவி உடையைப்பார்த்து அவரை குரு என்று கருதி ஒருவர்பின் ஒருவராக வந்து வணங்கி மாலையணிவித்தனர். அதிர்ச்சியுற்ற சாது இவர்களை தான் பகவானல்ல எனறு கூறி தடுக்க முற்பட்டபோது பகவான் ஆங்கிலத்தில் அழுத்தமான குரலில் ஆணையிட்டார்: “ரங்கராஜா,  சற்று பேசாமல் இருப்பாயா?” (Rangaraja, will you please keep quiet?). சாது அமைதியாகி விட்டான். கிராமத்தில் இருந்து வந்தவர்கள் சாதுவையே பகவான் என நினைத்து மரியாதை செய்தனர். அவர்கள் அனைவரும் சென்றபிறகு பகவான் சாதுவிடம், “ரெங்க  ராஜா நீ எதற்காக அவர்களை தடுக்க முயன்றாய். அவர்கள் சரியாகத்தான் செய்து கொண்டிருந்தனர். நீ இந்த உடையில் இருந்தமையால் அவர்கள் உனக்கு வணக்கத்தை செலுத்தினர். காவி உடுத்தியவர்களுக்கு மரியாதை செய்யவேண்டும் என்ற பாரம்பரியத்தை அவர்கள் பின்பற்றினார்கள். அதிலென்ன தவறு ? “ என்று பகவான் சாதுவை வினவினார். சாது பதிலளிக்கையில் “அவர்கள் உங்களை தரிசிக்க வந்தவர்கள்” என்றார். சாதுவிடம் பகவான், “அவர்கள் உன்னை வணங்கினாலோ  அல்லது என்னை வணங்கினாலோ அதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? அவையனைத்தும் என் தந்தையையே போய் சேரும். இந்தப்பிச்சைக்காரனும் நீயும் வேறல்ல” என்றார். 

பகவான் எதை உபதேசித்தாரோ அதன்படியே வாழ்ந்தார். பகவானோடு சாது ஒருமுறை திருவண்ணாமலையில் ஒரு அகண்ட ராம நாம ஜெபம் ஏற்பாடு செய்யப்பட்டு, சாது வேண்டிக் கொண்டதின் பேரில், பகவான் ஒரு பகலும் இரவும் அவர்களோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பகவான் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப சாது  ராம நாமம் பற்றியும் அகில உலக ராமநாம இயக்கம் பற்றியும் உரை நிகழ்த்த துவங்கியபோது, பகவான் திடீரென்று எழுந்து சாதுவின் கால்களை தொட்டு வணங்கினார். அதிர்ச்சியுற்ற சாது  பகவான் கைகளை பிடித்து தூக்கி “என்ன இது பகவான்?” என்று வேதனையுடன் வினவியபோது, பகவான், “நீ எனது தந்தையின் பணியை செய்கிறாய். மேலே செல்”, என்று கூறி அமர்ந்தார். நூற்றுக்கணக்கான பகவானின் பக்தர்கள் இந்த காட்சியை கண்டு வியப்புற்றனர்.

இது பகவான் தனது பக்தர்களுக்கு ஒரு பாடம் புகட்ட நிகழ்த்திய திருவிளையாடல் ஆகவே சாது கருதினார். தனக்கும், இறைத் தொண்டில் ஈடுபட்டுள்ள மற்றவர்கள்  எவ்வளவு எளியவர்கள் ஆயினும் சரி, அவர்களுக்கும் இடையே எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது என்பது பகவான் போதிக்க விரும்பிய பாடமாகும். இந்த நிகழ்ச்சி சாதுவிற்கு பகவான் சிவானந்தாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை நினைவு படுத்தியது. அவரது பக்தர்களின் சிலர், ரிஷிகேஷில் வாழ்ந்துவந்த மற்ற சில துறவியர்களை பயனற்றவர்களாக கருதி வந்தனர். இதை அறிந்த பகவான் சிவானந்தா, அந்த பக்தர்களுக்கு பாடம் புகட்ட விரும்பி அவர்கள் அனைவரையும் கங்கைக்கு புனித நீராட அழைத்துச் சென்றார். நீராடிய பிறகு, அவர்கள் அனைவரும் தங்கள் குருதேவருடன் திரும்பி வருகையில், ஒரு சலவைத்தொழிலாளி எதிர்திசையில் தனது கழுதையின் முதுகில் சலவை செய்ய வேண்டிய துணி மூட்டையுடன் வருவதைக்கண்ட பகவான் சிவானந்தா அந்த கழுதையின் முன்னே விழுந்து வணங்கினார். அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து வினவியபோது பகவான் அமைதியாக, அந்த கழுதை, ரிஷிகேஷை சேர்ந்த பல மகாத்மாக்களின் காவி உடைகளை, அந்த சலவைத்தொழிலாளி சலவை செய்த பிறகு, தனது முதுகில் சுமந்து வருவதாக கூறினார். 

மதம் இன்று ஒரு விற்பனைப்பொருளாகவும், மத அமைப்புகள் வியாபார இல்லங்களாகவும் ஆகியுள்ளன. ஆன்மீகத் தலைவர்களின் அற்புத ஆற்றல்கள் தங்களது உலகாயத பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் என்று கருதி பலர் அத்தகைய தலைவர்களை தேடும் பணியில் முனைந்துள்ளனர். இந்த சூழலை பயன்படுத்தி சிலர் காவி உடுத்து மகாத்மாக்கள் போல் நடித்து செல்வம் ஈட்டுவதில் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞானம் மற்றும் பகுத்தறிவின் இந்த காலத்திலும், பல கல்வி கற்றவர்கள் மற்றும் பெரும் பதவிகளில் உள்ளவர்கள் போலும், தங்களது உலகாயத பிரச்சினைகளுக்கு தீர்வு காண குறி சொல்பவர்கள் அல்லது கடவுள் மனிதர்கள் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் இருக்கும் இடத்தை தேடி, அவர்கள் மூலம் இறைவனின்  உதவி பெறலாமென்று நினைக்கின்றனர். தொலை தூரங்களில் உள்ள சிறிய கிராமக் கோயில்களில் அமர்ந்து குறி சொல்லியும் மந்திரம் தந்திரம் போன்றவற்றை செய்தும் கிராம மக்களை கவருகின்றவர்கள் முதல், பெருநகரங்களில் ஆசிரமம் அமைத்து கோடீஸ்வரர்களான  வியாபாரிகளையும் பெரும் பதவிகளில் உள்ளவர்களையும் கவர்ந்து, விமானத்தில் பறந்து ஆடம்பர வாழ்க்கை வாழும் போலி சாமியார்களும், தங்களை கடவுளின் அதிகாரம் பெற்ற  ஏஜெண்டுகளாக கூறிக்கொள்கின்றனர். இவர்களை தவிர ‘மன ஆற்றல்’, ‘குண்டலினி யோகம்’, ‘தொழில் மற்றும் ‘வியாபார வெற்றி மற்றும் மனச்சோர்வு நிர்வாகம்’ என்று பணத்திற்காக ஆன்மீகத்தை வியாபாரச்சரக்குகளாக்கியுள்ளவரும் இன்று பலர் உள்ளனர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் மந்திரம் தந்திரம் என்று போலி ஆன்மீக ஆற்றலை வெளிக்காட்டுபவர்களுக்கு விளம்பரம் அளிக்கப்படுகிறது. 

பாரதத்தின் மிகப்புராதனமான ரிஷி முனிவர்கள் வகுத்து வழங்கியுள்ள சமய மற்றும் ஆன்மீக வாழ்க்கை மூல்யங்களை விஞ்ஞான பூர்வமாகவும் பகுத்தறிவு பூர்வமாகவும் கற்றறிந்து ஒரு புத்தெழுச்சி ஏற்படுத்தவேண்டிய காலமாகும் இது. சுவாமி விவேகானந்தர், சுவாமி தயானந்தா, சுவாமி ராம்தீர்த்தா , மஹாயோகி ஸ்ரீ அரவிந்தர், மற்றும் பகவான. ரமணர் போன்ற சான்றோர்கள் நவீனகாலத்தில் நமது தேசத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகப்பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாகவும் பகுத்தறிவுபூர்வமாகவும் விளக்கிக்கூறியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக இன்று, பல படித்த உயர்நிலையில் உள்ள ஹிந்துக்கள்  இந்த மஹான்கள் நமக்கு போதித்துள்ள பாதையில் சென்று ஆன்மீக உணர்வு பெற  முயற்சிக்காமல் உலகாயத நலன்களுக்காக போலியான குருமார்களையும் கடவுள்மனிதர்களையும் நாடிச்செல்கின்றனர். உண்மையான கடவுள் நம்பிக்கை இன்றி கோயிலுக்கு செல்லுதல், கண்மூடித்தனமான மூடநம்பிக்கையுடன் கடவுள் மற்றும் கடவுள் மனிதர்களை வழிபடுதல் போன்றவை வாழ்க்கை முன்னேற்றத்தையோ, ஆன்மீக முன்னேற்றத்தையோ ஒரு போதும் தருவதில்லை. மனித பிறவி என்பது அரிதான ஒன்று. கட்டுப்பாடுடனும்  சமர்ப்பண மனப்பான்மையோடும்  உயர்ந்த வாழ்க்கை மூல்யங்களை கடைபிடித்து, மனித வாழ்க்கையை, மிருகங்களைப்போல் உயிர் வாழும்  நிலையிலிருந்து, தெய்வ நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். யோகி ராம்சுரத்குமார் போன்ற மகாத்மாக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதையுமே உயர்ந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியுள்ளனர். அவர்களை கண்மூடித்தனமாக வழிபடுவதைவிட, உண்மையான பக்தர்களாக, அவர்கள் வாழ்ந்துள்ளது போன்ற வாழ்க்கையை, அவர்கள் காட்டிய பாதையில் சென்று, வாழ்ந்து காட்டவேண்டும். அதுவே நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதை ஆகும். எனது குருநாதர் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ஆன்மா இந்த பாதையில் பயணிக்க, அனைத்து பக்தர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கட்டும்!. 

– சாது. ரங்கராஜன். 

மஹாசமாதியில் பகவான்

Leave a comment