ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.27

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.27 

பகவானின் மோசமான உடல்நிலையும், சாதுவின் துன்பமும்

செவ்வாய்க்கிழமை , ஜூலை – 18 , 2000 அன்று போட்ஸ்வானாவின் திரு. P. ஸ்ரீனிவாசன் மற்றும் சுரபி சாதுவை சந்தித்தனர். வெள்ளிக்கிழமை சௌ. உமா மகேஸ்வரி, திரு. தேவன் ஷர்மாவின் மகள், தங்களின் திருவண்ணாமலை பயணம் குறித்தும் பகவானின் உடல்நிலை பற்றியும் தெரிவித்தார். ஜூலை – 23 காலையில் சாது, நிவேதிதாவிற்கு பகவானின் கருணையால் ஆண்குழந்தை பிறந்தது என்ற சேதியை அறிந்தார். சாது பகவானுக்கு இந்த சேதியை தெரிவிக்க ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களை ஆசிரமத்தில் தொடர்பு கொண்டார். அப்போது ஜஸ்டிஸ் அருணாச்சலம் அதிர்ச்சியளிக்கும் தகவலாக பகவானின். உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு கேன்சர் இருப்பதாகவும் கூறினார். ஆகஸ்ட் – 2 அன்று நிவேதிதாவின் குழந்தைக்கு ஸ்ரீராம் என்று பெயர் சூட்டப்பட்டது.  ஆனந்தாஸ்ரமத்தின் சுவாமி முக்தானந்தா பெங்களூரை அடைந்தார். சாது அவரை வியாழக்கிழமை சந்தித்தார். ஆகஸ்ட் – 5, சனிக்கிழமையன்று, ஒரு சத்சங்கம் பாரதமாதா குருகுல ஆசிரமத்தில்  நடைப்பெற்றது. சுவாமி முக்தானந்தா, திருமதி மற்றும் திரு. P.R. ராவ் , திருமதி  மற்றும் திரு. ராம்தாஸ் மற்றும் ஆனந்தாஸ்ரமத்தின் பல பக்தர்கள், பகவான் யோகி ராம்சுரத்குமாரின் பக்தர்கள், சாதுவின் குடும்பத்தினரான விவேக் மற்றும் நிவேதிதா, சத்சங்கத்தில் பங்கேற்றனர். சாது மீண்டும் ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களுடன் ஆகஸ்ட் – 8 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 11 அன்று சாது திருவண்ணாமலைக்கு மாலையில் சென்று அடைந்தார். பகவான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அடுத்தநாள் காலையில், ஜஸ்டிஸ் அருணாச்சலம் சாதுவை பகவானிடம். அழைத்துச் சென்றார். பகவான் ஆசிரமத்தில் உள்ள சிறப்பு அறையில் படுத்தபடுக்கையாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். மா தேவகி மற்றும் மா விஜயலட்சுமி சாதுவை வரவேற்றனர். சாது பகவானின் அருகில் நின்றிருந்தார். பகவான் படுக்கையில் தனது கண்களை மூடி படுத்து இருந்தார். மாதேவகி அவரிடம், “சாது ரங்கராஜன் வந்திருக்கிறார்“ என்றார். பகவான் கண்களை திறந்து, “எப்போது?“ என வினவினார். தேவகி பதிலளிக்கையில், “சாது ரங்கராஜன் இங்கே உங்கள் அருகே“ என்றார். பகவான் திரும்பி சாதுவை பார்த்தார். சாது தனது வணக்கங்களை தெரிவித்தார். படுக்கையில் இருந்தபோதும், பகவானும் கைகளை கூப்பி சாதுவிற்கு வணக்கம் தெரிவித்தார். அவரது கண்கள் அவரது உடல் அனுபவிக்கும் வலியை உணர்த்தின. அவர் பேச முற்பட்டு, “யாரோ வருகிறார்கள்…” என்று அங்கேயே நிறுத்தினார். மேலும் அவரால் பேச இயலவில்லை. தேவகி அவரது வார்த்தையை திரும்ப உச்சரித்து அவரை பேச வைக்க முயற்சித்தார். ஆனால் அவர் அமைதியாக இருந்தார். ஆயினும் அவர் சாதுவை கூர்ந்து கவனிக்கலானார். அவர் தனது கண்களை மூடி மீண்டும் தூங்க துவங்கினார். சாது அவரது அருகில் ஐந்து நிமிடங்கள் அமர்ந்துவிட்டு பின்னர் அவர் முழுமையாக ஓய்வெடுக்க விட்டுவிட நினைத்தார். மா தேவகி மற்றும் விஜயலட்சுமி,  பாரதி, நிவேதிதா மற்றும் விவேக் குறித்து விசாரித்தனர். சாது அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது பகவான் கண்ணைத் திறந்து வலியில் உறுமினார்.. அனைவரும் அவரின் அருகே சென்றனர். பகவான் மீண்டும் கண்களை திறந்து சாதுவை பார்த்து பின்னர்                    கண்களை மூடிக்கொண்டு உறங்கத் தொடங்கினார். சாது, மாதேவகி மற்றும் விஜயலட்சுமி ஆகியோரிடம் விடைப்பெற்று, ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு, திரு சங்கரராஜுலு மற்றும் திரு சக்திவேல் போன்ற ஆசிரம வாசிகளிடம் விடைப்பெற்று, சென்னைக்கு பேருந்தை பிடித்து வீட்டை வந்தடைந்தார். 

சாது பகவான் அறுவைசிகிச்சை செய்து கொள்ள மறுத்துவிட்டதை எண்ணி மிகுந்த துன்பம் கொண்டார். சில பக்தர்கள், அவர் தனது ஆன்மீக சக்தியை பயன்படுத்தி தன்னை தானே குணப்படுத்திக் கொள்வார் என நம்பினர். சாது, மாதேவகிக்கு, திங்கள்கிழமை ஆகஸ்ட் 13 அன்று, பகவானை மருத்துவ சிகிச்சைக்கு இணங்க வைப்பது குறித்து, ஒரு சேதியை ஃபேக்ஸ் செய்தார்: 

“பூஜ்ய மாதாஜி ! 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! எனது குருநாதர், யோகி ராம்சுரத்குமார் அவர்களின், புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!  உங்களுக்கும், அன்னை விஜயலட்சுமி மற்றும் ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களுக்கும்  எனது வணக்கம் ! 

இந்த சாது, பகவான் அவர்களை நேற்று காலை  தரிசிக்க அனுமதித்தமைக்கு தங்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்கிறான். வலியில் துடித்துக் கொண்டிருந்த பொழுதும் பகவான், இந்த சதுவின் வண்க்கத்திற்கு, கைகளை கூப்பி, இந்த எளிய சீடனுக்கு திருப்பி வணக்கத்தை செலுத்திய பகவானது பணிவு இந்த சீடனின் உள்ளத்தில் பெரும் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்திவிட்டது.  ஆசிரமத்திற்கு வெளியே இந்த சாதுவின் ஒவ்வொரு செயலிலும் பகவான் உடன் இருந்து வழிகாட்டி வந்துள்ள போதிலும், அவரோடு இருந்து அவருக்கு சேவை செய்ய இயலவில்லையே என்ற குறை இவனது நெஞ்சில் வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த சாது திரு. அருணாச்சலம் அவர்களிடம் எந்த நேரத்திலும் எனது உதவி தேவையெனில் என்னை அழைக்கலாம் என்று கூறியிருக்கிறான். 

நாங்கள் பூஜ்ய தபஸ்வி பாபா அவதூத் அவர்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பை  பெற்றோம். அவர், பகவான் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மறுத்த போதிலும், ஒரு டாக்டர்கள் குழு அவரது கேன்சரை ஆய்வு செய்து, அவருக்கு வலி மற்றும் கஷ்டமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். நாம் அனைவரும் பகவானின் முன் குழந்தைகளாக இருக்கின்ற போதிலும், நமது தந்தை அவரது உடல்நிலை குறைப்பாட்டில் இருந்து முழுவதும் குணமாவதற்கான பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், அதை செய்ய உரிமைகளும் நமக்கு உண்டு. அவரது உடல்நிலை குறைபாட்டை நாம் அவரது தெய்வீக விளையாட்டு என்று எடுத்துக்கொண்டாலும் சரி, அல்லது இயற்கையின் விதி என்று பகுத்தறிவோடு உணர்ந்தாலும் சரி, நமது கடமையை நாம் ஆற்ற வேண்டும் .

மாதாஜி, இந்த சாது, உங்களுடைய மற்றும் நமது ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களுடைய கவனத்திற்கு, ஒரு முக்கிய தகவலை கொண்டுவர விரும்பிகிறான். நாம் நமது குருவின் கட்டளைகளை மிகவும் உறுதியாக பின்பற்றிவந்தாலும், பொதுமக்களிடையேயும், பகவானின் நெருக்கமான பக்தர்களிடையேயும், ஆசிரம நிர்வாகிகள், பகவானின் அற்புத சக்திகளின் மீது நம்பிக்கை கொண்டு, பகவானை குணப்படுத்த போதிய மருத்துவ ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் இருப்பதாக பேசிக் கொள்ளகிறார்கள். பத்திரிகைச் செய்திகள் குறிப்பிடுவதுபோல் பகவானின் உடல்நிலை காரணமாக வாரத்தில் ஒரு நாள் மட்டும் அவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு பதிலாக, மருத்துவ நிபுணர்களின் ஒரு குழு ஏற்படுத்தி பகவானின் உடல்நிலை குறித்து அவ்வப்பொழுது பொதுமக்களுக்கும் பத்திரிகைகளுக்கும் தகவல் வழங்க நாம் ஏற்பாடு செய்வது அவசியமாகும். நீங்கள், அன்னை விஜயலட்சுமி மற்றும் ஜஸ்டிஸ் அருணாச்சலம் போன்றோர் இந்த கருத்தை எடுத்துக்கொண்டு சில முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். பகவான் இப்போதிருக்கும் சூழலில் நாம் அவரது உத்தரவிற்காக காத்திருக்க கூடாது. இந்த சாது நிச்சயம் பகவான் உள்ளிருந்து வழிகாட்டுவார் என்று நம்புகிறான். 

ஆசிரமத்தில், இன்றைய மருத்துவ முகாம் நன்றாக முடிந்திருக்கும் என்றே நம்புகிறோம். நாம் ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களிடமிருந்து முகாமிற்கான பொதுவான மருந்துகளின் தேவை குறித்து அறிய காத்திருக்கிறோம். அதன்படி நாம் நமது ராமநாம பணியாளர்கள் மற்றும் எங்கள் மருத்துவர் தொடர்புகளின் மூலம், தேவைப்படும் மருந்துகளை ஆசிரமத்திற்கு தொடர்ந்து பெற இயலும். இதுகுறித்து சாது ஜஸ்டிஸ் இடமும் விவாதித்துள்ளான். 

இந்த சாது இந்தவாரம் முழுவதும் சென்னையில் இருந்துவிட்டு பின்னர் பெங்களூர் திரும்புவான். 

வணக்கத்தோடு, பகவானின் சேவையில், 

சாது ரங்கராஜன். “

ஆகஸ்ட் – 15 , 2000 செவ்வாய்க்கிழமையன்று சாதுஜி பின்வரும் கடிதத்தை மா தேவகியின் பதிலாக, ஆசிரமத்தில் இருந்து, ஈ-மெயிலில் பெற்றார். 

யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா !

அன்பிற்குரிய சாதுஜி, 

நமஸ்கார் ! பகவான் தங்களின் ஆகஸ்ட் – 14 , 2000 தேதியிட்ட ஈ-மெயிலை பெற்றார். சேதியானது பகவானிடம் தேவகி மூலம் வாசிக்கப்பட்டது. பகவான் அதற்கு பதிலளிக்கவில்லை. மா தேவகி உங்களின், டாக்டர்களின் குழு ஏற்படுத்துவது குறித்த, கருத்தை பகவானின் முன் வைத்தபோது, பகவான் மா தேவகியிடம், “இந்த விஷயத்தை விட்டுவிடுங்கள்“ (Leave the case) என்றிருக்கிறார். மா தேவகி இதன் பொருள் என்ன என்று வினவி “இதனை புறக்கணியுங்கள்“ என்று பொருள் கொள்ளலாமா என்று வினவ பகவான் “ஆம்“ என்றிருக்கிறார். 

எங்கள் அன்பு மற்றும் விசாரிப்பை திருமதி. பாரதி , விவேக் அவரது மனைவி, மற்றும் நிவேதிதா, ரமேஷ் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு தெரிவிக்கவும். 

அன்புடனும், வணக்கத்துடனும், 

ராஜ்மோகன்.” 

பகவானின் பக்தரும், சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலருமான மும்பையை சேர்ந்த திரு. ஆஷிஷ் பகோர்டியா சென்னைக்கு ஆகஸ்ட் – 15 அன்று வந்தார், சாது அவரையும் திரு. கைலாஷ் நட்டானியையும் சென்னை கே.கே.நகரில் சந்தித்தார். அவர்கள் பகவானின் உடல்நிலை குறித்து விவாதித்தனர். புதன்கிழமை ஆகஸ்ட் – 16 அன்று, பகவானின் பக்தரும் , சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலரும், பகவானின் மருத்துவ உதவிகளை கவனித்துக் கொள்பவரும் ஆன, டாக்டர். ராஜலட்சுமி, பகவான் சென்னைக்கு வியாழக்கிழமை அன்று மருத்துவ சிகிச்சைக்காக தி.நகர் ரமணா கிளினிக்கிற்கு அழைத்து வரப்பட்டதாக சாதுவிடம் கூறினார். சாது, டாக்டர். ராஜலட்சுமியின் கணவரான திரு. S.ராமமூர்த்தி உடன் ரமணா கிளினிக் சென்றார். அங்கே பகவான் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தமையால், சாது பகவானின் தரிசனத்தை பெறாமல் திரும்பினார். சாது, வெள்ளிக்கிழமை, திரு. ராமமூர்த்தியிடம், டாக்டர். ராஜலட்சுமி பகவானின் அருகிலேயே சேவையில் இருக்க வேண்டும் என்றார். சனிக்கிழமையன்று டாக்டர். குமரேசன் சாதுவிடம் பகவானின் உடல்நிலை குறித்து விவாதித்தார். ஆகஸ்ட் – 22 செவ்வாய்க்கிழமை, திரு. ராம்மூர்த்தி, பகவான் அப்பலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக கூறினார். வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் – 25 அன்று, சாது “குங்குமம்” என்ற தமிழ் இதழை பெற்றார். அதில் பகவான் குறித்த கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. திங்கள்கிழமையன்று, சாது, டாக்டர் குமரேசன் மற்றும் திரு.ராம்மூர்த்தி அவர்களிடம் பகவானின் உடல்நிலை குறித்து விவாதித்தார். அன்றிரவு சாது பெங்களூருக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் மூலம் பயணித்து அடுத்தநாள் ஆகஸ்ட் – 29 அன்று அங்கே சென்று சேர்ந்தார். செப்டம்பர் – 1 விநாயகர் சதுர்த்தி நாளன்று, சாது, பகவானின் உடல்நலத்திற்காக, ஒரு சிறப்பு பூஜையை செய்தார். 

1995-ல் டர்பனில் நடைபெற்ற உலக ஹிந்து மகாநாட்டில் வெகு சிறப்பாக தொண்டாற்றிய, சௌ. காஷ்மீரா பிஹாரி மற்றும் சிரஞ்சீவி ரன்ஜிவ் நிர்கின் என்ற, பீட்டர்மாரிட்ஸ்பர்க்கின் இரு துடிப்பான இளம் பருவத்தினர், அவர்கள் குடும்பத்தினர் சம்மதம் பெற்று, திருமணம். செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். அவர்களுக்கு சாது, பாரதமாதா குருகுல மந்திரில் வேதமுறைப்படி திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். மணமக்கள், மணமகளின் தாயார் மற்றும் மணமகனின் பெற்றோர்கள் உட்பட, இருதரப்பிலிருந்தும் 15 பேர்,  திருமணத்திற்கு, செப்டம்பர் – 9 , 2000, சனிக்கிழமை அன்று, ஜெட் எயர்வேய்ஸ் மூலம், டர்பனில் இருந்து வந்தனர். ஆசிரமத்தில் யோகிராம்சுரத்குமார் சன்னிதியில் காயத்ரி மற்றும் கணபதி ஹோமங்கள் பூஜைகள் ஆகியவை ஞாயிறன்று நடைபெற்றன ரஞ்சீவின் மஞ்சள் விழா, காஷ்மீராவின் மருதாணி விழா ஆகியவைகளும் நடைபெற்றது. திங்கட்கிழமையன்று, ஆசிரமத்தின் பல பக்தர்கள் மற்றும் சாதுவின் குடும்பத்தினர் முன்னிலையில் அவர்களது திருமணம் வேத முறைப்படி திரு ஸ்ரீதர் வாத்தியார் அவர்களால் நடத்தி வைக்கப்பட்டது. சிறப்பான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் இரண்டுநாள் சாதுவுடன் தங்கி வியாழக்கிழமை, செப்டம்பர் 14 ஆம் தேதி, விடைபெற்றனர். பகவானின் அருள் ஆசிகள், அந்த தம்பதியினரை தென்னாபிரிக்காவில் பகவானின் பணிக்கு, சிறந்த சேவகர்களாக மாற்றியது.

சாது சென்னைக்கு செப்டம்பர் – 16  சனிக்கிழமை திரும்பினார்.  தன்னிடம் தீக்ஷை பெற்ற சீடன், திரு ஹேமாத்ரி ராவ் அவர்களின் மனைவி, டாக்டர் ஆண்டாள் அவர்களுடைய மருத்துவமனை திறப்பு விழாவிற்காக, சாது ஞாயிறு அன்று, ஒரு ஹோமம் நடத்தினார். செவ்வாய்க்கிழமை சாது ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களிடம் தொடர்பு கொண்டு பகவானின் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டார். அவர் டாக்டர் குமரேசனிடம் புதன்கிழமை பேசினார். செப்டம்பர் – 21 வியாழக்கிழமை அன்று சாது பகவான் சிகிச்சை பெறும் ரமணா க்ளினிக்கை அடைந்தார். திரு. ஆஷிஷ் பக்ரோடியாவின் மனைவி, திருமதி சாந்தி பிரியா மற்றும் ஜஸ்டிஸ் அருணாச்சலம் சாதுவை வரவேற்றனர். மா தேவகி மற்றும் மா விஜயலட்சுமி பகவானின் அறைக்கு கூட்டி சென்றனர். சாது, மிகுந்த ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பகவானின் அருகே சிறிது நேரம் நின்றார். பின்னர் சாது மா தேவகி இடமும் மற்றவர்களிடமும் விடைப்பெற்று தனது இல்லத்திற்கு திரும்பினார். டாக்டர். குமரேசன் சாதுவை தொலைபேசியில் அழைத்து, பகவானின் உடல்நிலை குறித்து விவரித்தார். சாது, கடிதம் ஒன்றின் மூலம், பகவானின் பக்தர்களின் சார்பாக ஒரு வேண்டுகோளை, ரமணா கிளினிக்கின் நிறுவனர், டாக்டர் ரங்கபாஷ்யம் அவர்களுக்கு எழுதி அனுப்பி, பகவானுக்கு சிறந்த மருத்துவம் மற்றும் கவனத்தை தருமாறு கோரியிருந்தார். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ ரமணர் போன்று, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஒரு அவதாரமாக இருந்தபோதும், அவர் தனது ஆன்மீக சக்தியை தன்னை குணப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்ள மாட்டார், எனவே அவருக்கு சிறந்த மருத்துவ கவனிப்பை ஏற்பாடு செய்யும் பொறுப்பு அவரது பக்தர்களை சாரும், என்று சாது குறிப்பிட்டிருந்தார். சாது தனது பதிப்பகத்தின் பகவான் குறித்த நூல்களை டாக்டருக்கு பரிசாக அனுப்பி வைத்தார். 

சனிக்கிழமை செப்டம்பர் 23 அன்று சாது கீதா பவனில் நடைபெற்ற மானிட கடமைகள் மன்றத்தின் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். விவேகானந்தா கல்விக்கழகத்தின் திரு B. கோவிந்தராஜ் மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் திரு உத்தமராஜ் போன்றவர்கள் தாதுவை வரவேற்றனர். மாநகரைச் சேர்ந்த பல பிரமுகர்கள், திருமதி சவுன்தரா கைலாசம் மற்றும் டாக்டர் லலிதா காமேஸ்வரன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கெடுத்தனர். திரு கோவிந்தராஜ் அவரது உரையில் சாதுவின் “வந்தே மாதரம்” நூல் குறித்து குறிப்பிட்டார். சாது ‘தத்துவ தரிசனம்’ மற்றும் சகோதரி நிவேதிதா அகாடமியின் வெளியீடுகளை  விருந்தினர்களுக்கு வழங்கினார். செப்டம்பர் 24 ஞாயிறன்று, தென்னாப்பிரிக்காவிலிருந்து, திரு டெட்டி  கொமல், திருமதி ஷெரிதா, அவர் தாயார் மற்றும் சகோதரி வந்து சேர்ந்தனர். திங்கட்கிழமை அன்று, சாது, திரு ராமமூர்த்தி,  திரு கெ எஸ். வைத்தியநாதன் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த விருந்தினர்களுடன் பனப்பாக்கம் பிச்சாலீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று பிரதோஷ பூஜைகளில் பங்கு பெற்றார். அங்கு, சாது, பக்தர்களிடையே, பகவான் யோகி ராம்சுரத்குமார் பற்றி உரை நிகழ்த்தி, ஒரு ராமநாம சத்சங்கத்தையும் நடத்தினார். பெருமாள் கரியமாணிக்கர் ஆலயத்திற்கும் அவர் சென்றார். செவ்வாயன்று,  சாது, தென்னாப்பிரிக்க பக்தர்களுடன் பெங்களூருக்கு பயணித்தார்

அக்டோபர் 14 ஞாயிற்றுக்கிழமையன்று, சாது, திரு. சக்திவேல் மற்றும் ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களின் மகளிடம் பேசினார். திங்கள்கிழமை அவர் ரமணா கிளினிக்கிற்கு மீண்டும் சென்று, பகவானின் தரிசனத்தை பெற்றார். பகவான் சாதுவோடு 20 நிமிடங்கள் செலவழித்தார். சாது பகவானின் முன் சமீபத்திய ‘தத்துவ தர்சனா’ இதழை வைத்தார். சாது பகவானிடம் ‘விக்ஞான பாரதி’ வகுப்புக்களை, பெங்களூரில், யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தில், அக்டோபர் 22 அன்று துவங்குவதாக கூறினார். பகவான், “என் தந்தை உனது அனைத்து திட்டங்களையும் ஆசீர்வதிப்பார்” என்றார். பகவான் சாதுவின் வெளிநாட்டு பயணத்தையும் ஆசீர்வதித்தார். 

அக்டோபர் – 18 புதன்கிழமை, சாது பெங்களூருக்கு திரும்பினார். பூஜ்ய தபஸ்வி பாபா அவதூத் புனேவில் இருந்து தொலைபேசியில் அழைத்தார். அவர் தனது விருப்ப ஆவணத்தில் தனது குருகுலத்தை சகோதரி நிவேதிதா அகாடமிக்கு வழங்கியுள்ளதாக கூறினார். விக்ஞான பாரதி ஹிந்து பண்பாடு வகுப்புகள் பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் – 22 அன்று துவங்கியது. அந்த வகுப்பில் பல மாணவர்கள் கலந்து கொண்டனர். சாது, பகவான் யோகிராம்சுரத்குமார் குறித்தும்,  அகாடமியின்  பணிகளுக்கு அவர் வழங்கியுள்ள ஆசி குறித்தும், பேசினார்.

சாதுவின் பிள்ளைகள் விவேக் மற்றும் நிவேதிதா சாதுவிற்கு சஷ்டியப்தபூர்த்தியை “ ஸ்ரீ பாரதி மந்திர்” பெங்களூரில், நவம்பர் – 15 , 2000 அன்று செய்யவிரும்பினர். குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் அதற்கான முழு ஏற்பாடுகளை செய்தனர். “விக்ஞான பாரதி — சாது பேராசிரியர் வே ரங்கராஜன் நூல்கள் முழு தொகுப்பு–தொகுப்பு I“ இந்த புனித நாளில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. இந்த முதல் தொகுப்பு, “வேத காலம் தொட்டு நவீன காலம் வரை ஹிந்துப் பண்பாடு– பகுதி 1”, சாது ரங்கராஜன், சகோதரி நிவேதிதா அகாடமியின் விக்ஞான பாரதி ஹிந்து பண்பாடு வகுப்புகளில், பாரதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆற்றியுள்ள உரைகளின் மற்றும் பாடங்களின்  தொகுப்பு ஆகும். சகோதரி நிவேதிதா அகாடமியின் பெங்களூரில் உள்ள யோகி ராம்சுரத்குமார் இண்டொலொஜிகல் ஆராய்ச்சி மையம் வெளியிடுகின்ற இந்த நூலிற்க்கு ஹவுரா, பேலூரில் உள்ள, ராமகிருஷ்ணா மிஷன் மடத்தின், சுவாமி முக்யானந்தர், முன்னுரை வழங்கியுள்ளார்

சாதுவின் நூல்கள் மொத்த தொகுப்பு, பத்து தொகுதிகளை தாண்டும். கடந்த 40 ஆண்டுகளில் சாது ரங்கராஜன் எழுதியுள்ள நூல்கள், பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள கட்டுரைகள், பாரதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்த்தியுள்ள உரைகள் மற்றும் பேட்டிகள் இவற்றில் அடங்கும், பகவானின் பக்தரும் ஷோபனா ஆப்செட்டின் உரிமையாளருமான திரு. S.P. ஜனார்த்தனன், சாதுவின் விக்ஞான பாரதியின் முதல் தொகுதியின் முதல் பகுதியை சிறப்பாக அச்சிட்டார். திரு. அசோக் மட்டூ என்ற மற்றொரு பக்தர் அந்த நூலை அச்சிடுவதற்கான காகித செலவை ஏற்றுக்கொண்டார். தென் ஆப்பிரிக்காவின் டிவைன் லைஃப் சொஸைட்டியின் சுவாமி சகஜானந்தா சாதுவின் சஷ்டியப்தபூர்த்திக்கு அவரது அன்பு காணிக்கையை தந்தார். நிகழ்ச்சிக்கு முன்பாக சாது, கொரியர் மூலம் பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு கடிதம் ஒன்றையும், “விக்ஞான பாரதி” பிரதி பிரதிகளையும் அனுப்பினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் அளவற்ற கருணையினால் இந்த சாதுவின் சஷ்டியப்தபூர்த்தி இங்கே நாளை எளிய குடும்பவிழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. இருப்பினும் அந்த விழாவில் நாங்கள், இந்த சாதுவின் , விக்ஞான பாரதி சாது பேராசிரியர் வே ரங்கராஜன் நூல்கள் முழு தொகுப்புதொகுப்பு I — வேத காலம் தொட்டு நவீன காலம் வரை ஹிந்துப் பண்பாடுபகுதி 1″, வெளியிடப்படுகிறது. அதன் முதல் பிரதியை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்க அனுப்பியிருக்கிறோம். இந்த சாது , பாரதி, விவேக் , மாலதி, நிவேதிதா, ரமேஷ் , ஹரிப்ரியா, ஸ்ரீராம் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்கள் வணக்கங்களை உங்களுக்கு தெரிவித்து, உங்கள் ஆசியைப்பெற வேண்டுகிறோம். 

பிரேம் மற்றும்  ஓம் உடன், பகவானின் சேவையில், 

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

குடும்ப உறுப்பினர்கள், சாதுவின் மூத்த சகோதரர் திரு. V. லஷ்மிகாந்தன் போன்றோர், சஷ்டியப்தபூர்த்தி விழாவில் நவம்பர் – 15 அன்று கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ்., மற்றும் வி.எச்.பி. உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பெங்களூருக்கு வெளியே இருந்து வந்த உறவினர்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

சாதுஜி, பகவான் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு திரும்பிவிட்டார் என்ற சேதியை பெற்றார். டிசம்பர் – 1 யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கான ஏற்பாடுகள் பெங்களூரில் நடைப்பெற்றன. டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் அகமதாபாதில் வி.எச்.பி.யின் சர்வதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை சாது பெற்றார். நவம்பர் 27 அன்று சாது இது குறித்த கடிதம் ஒன்றை பகவானுக்கு எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

சென்னையிலிருந்து தாங்கள் திருவண்ணாமலைக்கு திரும்பியது குறித்து எங்கள் மனமகிழ்வை தெரிவித்துக்கொள்குறோம். உங்களின் உடல் நலத்திற்கும் பூரண ஆயுளுக்கும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். 

நாங்கள் டிசம்பர் – 1 , 2000 அன்று இங்கே யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தியை வழக்கம்போல் சிறப்பு பூஜை அருகில் உள்ள ஸ்ரீனிவாசா கோயிலிலும், ஹோமம் மற்றும் அகண்ட ராமநாம ஜபம் மற்றும் பொது விழாவை எங்கள் ஆசிரமத்திலும்  நடத்த இருக்கிறோம். இத்துடன் அழைப்பிதழையும் இணைத்துள்ளோம். நாங்கள் உங்கள் கருணை மற்றும் ஆசியை வேண்டுகிறோம். 

“விக்ஞான பாரதி — சாது பேராசிரியர் வே ரங்கராஜன் நூல்கள் முழு தொகுப்பு — தொகுப்பு I — வேத காலம் தொட்டு நவீன காலம் வரை ஹிந்துப் பண்பாடு — பகுதி 1″, முதல் பிரதியை தாங்கள் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறோம். அதற்கு பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தை சேர்ந்த சுவாமி முக்யானந்த்ஜி முன்னுரை எழுதியுள்ளார். இந்த சாது டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் அகமதாபாதில் வி.எச்.பி. யின் சர்வதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளார். நாங்கள் புனேவிற்கும் சென்று பூஜ்ய தபஸ்வி பாபா  அவதூத் அவர்களை சந்தித்து அவரிடம் ஹிந்து தர்மோதயா சங்கம் அமைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆன்மீக பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்க விரும்பிகிறோம். அதற்கு முன் தங்களை சந்தித்து ஆசிப்பெற்று செல்ல வேண்டும் என விரும்பிகிறோம். 

சௌ. பாரதி, சௌ. நிவேதிதா மற்றும் சிரஞ்சீவி. ரமேஷ், அவர்களின் பிள்ளைகள் ஹரிப்ரியா மற்றும் ஸ்ரீராம், சிரஞ்சீவி. விவேக் மற்றும் சௌ.மாலதி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் தங்களின் வணக்கங்களை உங்கள் புனித பாதங்களில் சமர்ப்பித்து உங்கள் ஆசியை வேண்டுகிறார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

83 வது யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி சிறப்பு ஹோமம், பூஜைகள், அகண்ட ராமநாம ஜபம் என பெங்களூர் பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை டிசம்பர் – 1, 2000 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆசிரமத்தின் அருகாமையில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது. பெங்களூர், கிருஷ்ணராஜபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா சாதனா கேந்திராவின் நிறுவனரான பூஜ்ய சுவாமி சந்திரேஸ்னாந்த்ஜி பூஜை மற்றும் அகண்ட ராம நாமத்தில் கலந்து கொண்டதோடு, ஆன்மாவைக்கிளறும் ஒரு பஜனையை மேற்கொண்டார். சாது அந்த நிகழ்வில் சகோதரி நிவேதிதா அகாடமி, பாரதமாதா குருகுல ஆசிரமத்தை துவங்கியது, பாரதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பல்வேறு ஹிந்து அமைப்புகள் மற்றும் சமயத் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பாரதத்தின் கலாச்சாரம் மற்றும் ரிஷி முனிவர்கள் வகுத்துள்ள உலகளாவிய வாழ்க்கை மூல்யங்கள் ஆகியவற்றை உலகெங்கும் பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள முயற்சி ஆகும் என்றார். 

சனிக்கிழமை டிசம்பர் – 9 அன்று டாக்டர் ராஜலட்சுமி, பகவானின் உடல்நிலை குறித்து சாதுவிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். திங்கள்கிழமை டிசம்பர் – 18 அன்று சகோதரர் வேதானந்தா, சகோதரர் ஹரிதாஸ் மற்றும் தென்ஆப்பரிக்காவை சேர்ந்த ஆறுபேர், பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு வருகை தந்தனர். அடுத்தநாள் , சாது சென்னையை அடைந்தார். சாது பகவானுக்கு கடிதம் ஒன்றை செவ்வாய்க்கிழமை டிசம்பர் 19 , 2000 அன்று எழுதி ஈ-மெயில் மூலம் ஆசிரமத்திற்கு அனுப்பினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியினால் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா பெங்களூர் பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. நாங்கள் ஹோமம் , சிறப்பு பூஜை , அகண்ட ராமநாமம் மற்றும் பஜனை நிகழ்ச்சிகளை ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த கேந்திரத்தின் பூஜ்ய சுவாமி சந்திரேசானந்தா அவர்கள் முன்னிலையில் நடத்தினோம். இந்துமதம் குறித்த வகுப்புகள் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தில் சிறப்பாக நடைபெறுகின்றன. தென் ஆப்பிரிக்காவில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். நேற்று அவர்களை விட்டுவிட்டு, இந்த சாது, சென்னைக்கு இன்று காலை வந்தடைந்தான். இந்த சாது நாளை சபரிமலை செல்ல இருக்கும் யோகி ராம்சுரத்குமார் பக்தர்களின் ஐயப்ப லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் உரையாற்றுவான்.  இந்த சாதுவும் நாளை மறுநாள் 21 ஆம் தேதி காலையில் அகமதாபாத்திற்கு நவஜீவன் எக்ஸ்பிரஸ் மூலம் செல்வான். எனவே இந்த சாதுவால் திருவண்ணாமலைக்கு வந்து பகவானின் தரிசனத்தை, வட இந்தியா பயணப்படும் முன், பெற இயலவில்லை. நாங்கள் பகவானின் ஆசியை இங்கிருந்தே வேண்டுகிறோம்.

இந்த சாது டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் அகமதாபாதில் வி.எச்.பி.-யின் சர்வதேச ஒருங்கிணைவு கூட்டத்தில் கலந்து கொண்டு “வெளிநாட்டில் வாழும் பாரதியர்களிடையே ஹிந்து வாழ்க்கை மூல்யங்களின் எழுச்சி“ என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறான். 200-க்கும் மேற்பட்ட முக்கிய பணியாளர்கள் உலகம் முழுவதில் இருந்தும் அகமதாபாதில் கூடி, வி.எச்.பி. யின் உலகளாவிய திட்டங்களை வடிவமைக்க இருக்கிறார்கள். இந்த கூட்டத்திற்குப்பின் இந்த சாது வல்சத், பம்பாய் மற்றும் புனேவிற்கு சென்று எங்கள் பக்தர்களையும் பூஜ்ய தபஸ்வி பாபா அவதூத் அவர்களையும் சந்திக்க இருக்கிறான். நாங்கள் பெங்களூருக்கு 31 ஆம் தேதி டிசம்பர் அன்று, திரும்பியபின், ஜனவரி ‘தத்துவ தர்சனா’ இதழை அச்சிற்கு அனுப்புவோம். அது தயாரானவுடன் நாங்கள் திருவண்ணாமலைக்கு வந்து முதல் பிரதியை தங்களிடம் சமர்ப்பிப்போம். 

தென் ஆப்பிரிக்காவில் இருந்தும், போட்ஸ்வானாவில் இருந்தும் பக்தர்கள் இங்கே வந்து இம்மாத இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் இந்த சாதுவை சந்தித்து, இந்த சாதுவின் அடுத்த வெளிநாட்டு பயணத்தை திட்டமிடுவர். 

இந்த சாது பகவானின் ஆசிகளை எங்களின் நிகழ்ச்சிகளுக்கு வேண்டி பிரார்த்திக்கிறான். திருமதி. பாரதி இன்று சென்னைக்கு பெங்களூரில் இருந்து ராமநாம பணிக்காக வந்துள்ளார். சிரஞ்சீவி விவேக், சௌ. மாலதி, சௌ. நிவேதிதா, சிரஞ்சீவி ரமேஷ் மற்றும் பிள்ளைகள் ஹரிப்ரியா மற்றும் ஸ்ரீராம் தங்கள் வணக்கங்களை உங்களுக்கு தெரிவிக்கின்றனர். எங்களின் பெங்களூர் ஆசிரமத்தை கவனித்துக்கொள்ளும் திரு. அனந்தன் மற்றும் அவரது அன்னை திருவண்ணாமலையில் கடந்த ஒருமாத காலமாக இருந்து, தினந்தோறும் பகவானின் தரிசனத்தை பெற்று வந்துள்ளனர். அவர்கள் பகவானை தனிப்பட்ட முறையில் சந்திக்க வாய்ப்பினை பெறாதபோதும், அவர்களும் பகவானின் ஆசியை வேண்டுகின்றனர். 

பிரார்த்தனை மற்றும் வணக்கங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். 

சாதுஜி அய்யப்ப சமாஜ் பக்தர்களின் லட்சார்ச்சனை நிகழ்வில்  புதன்கிழமை மாலை, “ பக்தியும், ஹிந்து வாழ்க்கையின் மூல்யங்களும்“ என்ற தலைப்பில் பேசினார். வியாழக்கிழமை டிசம்பர் 21 அன்று அவர் நவஜீவன் எக்ஸ்பிரஸில் அகமதாபாத் சென்றார். வி.ஹெச்.பி. தொண்டர்கள் அவரை புகைவண்டி நிலையத்தில் வரவேற்று சர்வதேச  ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு  அழைத்துச் சென்றனர்.

டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதி நடந்த விசுவ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில், “உலக ஹிந்துக்களே ஒன்று படுங்கள்“ என்பதே முழக்கமாக இருந்தது. 45 நாடுகளில் இருந்து 100 வி.எச்.பி பிரதிநிதிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ராமஜன்மபூமியின் ராமர் கோயிலை மீண்டும் எழுப்புதல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. குஜராத்தின் முதல்வரான திரு. கேஷூபாய் பட்டேல் விழாவை துவக்கி வைத்தார். டாக்டர்.B.K. மோடி வி.எச்.பியின் வெளிநாட்டு பிரிவின் செயல் தலைவர், பல்வேறு நாட்டின் பிரதிநிதிகளை வரவேற்றார். ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி ஆத்மானந்தா, உலக பௌத்த கவுன்சில்  தலைவர் பண்டே  ஞானஜகத், வி ஹெச் பி  சர்வ தேச தலைவர் திரு விஷ்ணு ஹரி டால்மியா, வி ஹெச் பி  செயல் தலைவர் திரு அசோக் சிங்கால், உபதலைவர் கிரிராஜ் கிஷோர், பொதுச் செயலாளர் டாக்டர் பிரவீன் தொகாடியா, கயானாவை சார்ந்த  சுவாமி அக்ஷரானந்த  மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த சுவாமி முருகானந்தம் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள், அமெரிக்காவைச் சார்ந்த திரு மகேஷ் மேத்தா மற்றும் ஸௌ.  அஞ்சலி பாண்டே,  தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த டாக்டர் தில்லைவேல் நாயுடு, திரு  ரமேஷ் மேத்தா,  திரு அநித்  மஹராஜ்  மற்றும் திருமதி நீதா மஹராஜ், ட்ரினிடாடின் சுவாமி அக்ஷரானந்தா மற்றும் இங்கிலாந்தின் டாக்டர் தத்துவவாதி ஆகியோர் சாதுவுடன் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக ஹிந்து மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் ஆவர்.

அவர்களைத் தவிர சாதுவின் பழைய நண்பர்கள், விஹெச்பியின் பிரமுக காரியகர்த்தர்கள்,  திரு பாலகிருஷ்ண நாயக், திரு பாபுபாய் காந்தி மற்றும் சுவாமி விக்ஞானாநந்தா ஆகியோரும் பங்குபெற்றனர்.

சாது பேராசிரியர்  வே. ரங்கராஜன் பேசுகையில், ஹிந்து என்ற சொல்லுக்கு பராமபூஜனீய குருஜி கோல்வால்கர் மற்றும் சுவாமி சின்னமயானந்தர் வழங்கியுள்ள விளக்கம, “பாரதத்தில் தோன்றியுள்ள அமரமான வாழ்க்கை மூல்யங்களை மதித்து  பின்பற்றுபவர்கள்” என்பதாகும் என்றார். பாரத மாதாவை வழிபடுவது, மற்றும் இந்த நாட்டின் ரிஷி முனிவர்கள் காட்டியுள்ள பாதையை பின்பற்றுவது தான் ஹிந்து வின் அடையாளம் என்றார். பாரதநாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வாழ்கின்ற ஹிந்துக்கள் பாரத அன்னையை தங்களது மிக உயர்ந்த கடவுளாக வழிபட வேண்டும் என்றும் தங்களது குழந்தைகளுக்கு அன்றாடம் ப்ராத ஸ்மரணம் எனும் பாரத பக்தி ஸ்தோத்ரம் ஒவ்வொரு இல்லத்திலும் பயிற்றுவிக்க வேண்டும் என்றும் சாது  கூறினார். பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ளது பற்றி குறிப்பிட்ட அவர், அந்த மையத்தின் நோக்கம் பாரதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாழ்கின்ற ஹிந்து இளம் தலைமுறையினருக்கு, பாரத பண்பாடு மற்றும் ஆன்மீக நெறிகள் குறித்து பயிற்சியளித்து, அவர்களை மனித இனம் முழுமையும் உய்விக்க, உலகெங்கும் ஹிந்து தர்மத்தின் பிரச்சாரகர்களாக அனுப்புவதாகும் என்றார்.

சாது டிசம்பர் 25 அன்று வல்சத் வந்து அடைந்தார். அங்கே திருமதி நீலம் மற்றும் திரு. சஞ்சய் கர்க் சாதுவை வரவேற்றனர். சாது செவ்வாயன்று விவேகானந்த சேவா கேந்திராவில் உரையாற்றினார். ஸ்வேதா மற்றும் ஆசிஷ்  எனும் இரு பக்தர்களில் திருமணத்திலும் பங்கு பெற்றார். சாது கடற்கரையிலுள்ள சாய்பாபா மந்திர் மற்றும் சுவாமி நாராயண் மந்திர் போன்ற இடங்களுக்கும் சென்றார். வெள்ளியன்று சாது டிதால்  பீச்சிற்கு சென்றார். பின்னர், சஞ்சய் கர்க் அவர்களின் தாயார் வீட்டில் ஒரு ராமநாம சத்சங்கம் நடத்தினார். டிசம்பர் 30 அன்று சாது பாம்பே செல்வதை தவிர்த்து, நேரடியாக புனேவிற்கு  அஹிம்சா எக்ஸ்பிரஸில் பயணித்து அங்கு சென்று சேர்ந்தார். பூஜ்ய ஸ்ரீ தபஸ்வி பாபா அவதூத் அவர்களின் பக்தர்களான திரு. திலீப் ஜோஷி மற்றும் திரு.N.S. ஐயர் சாதுவை வரவேற்றனர். சாது தனது நேரத்தை பூஜ்ய பாபாவுடன் செலவழித்தார். அவர் பகவானின் உடல்நிலை குறித்த தனது கவலையை வெளிப்படுத்தினார். திரு அரோரா என்ற பக்தர் சகோதரி நிவேதிதா அகாடமியில் புரவலராக இணைந்தார். அவர் சாதுவை  மற்றொரு புரவலர் ஆன, பேராசிரியர். G.C. அஸ்நானி அவர்களது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர், பூஜ்ய  தபசி பாபா அவர்களின் மகள் திருமதி அனுசுயா மற்றும் மருமகன் திரு தபலியால், மற்றும் திருமதி ஊர்மிளா மற்றும் எஸ். சி. பாண்டே  எனும் தம்பதியினர், சாதுவிற்கு அவர்களின் இல்லங்களில் சிறந்த வரவேற்பு அளித்தனர். ஜனவரி – 1 , 2001 புத்தாண்டு நாளில் சாது சோமேஸ்வரர் கோயில்,. ஸ்ரீ ஜங்கலி மஹராஜ் சமாதி மற்றும் ஸ்ரீ பாடலேஸ்வர் கோயிலுக்கு சென்று, தபஸ்வி பாபா  உடன் சிறிது நேரத்தை செலவழித்தார். மாலையில் சாது, பாபா அவர்களிடம் விடைபெற்று, புகைவண்டி மூலமாக பெங்களூருக்கு பயணித்து, செவ்வாயன்று அங்கு வந்து சேர்ந்தார். சாது ஜனவரி – 4 அன்று யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு தனது வெற்றிகரமான குஜராத் மற்றும் மகாராஷ்டிரா சுற்றுப்பயணத்தை குறித்து எழுதினார். 

சாது பேராசிரியர்  வே. ரங்கராஜன், அறிவியல், கலை மற்றும. கைவினை கண்காட்சி , பிளாசம்ஸ் – 2001- ஐ, பெங்களூர், கிருஷ்ணராஜபுரத்தில், அமர் ஜோதி பப்ளிக் பள்ளியில், ஜனவரி 6, 2001 அன்று பாரம்பரிய முறையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அந்த இரண்டு நாள் கண்காட்சி, மாணவர்களின் விஞ்ஞான ஆர்வம் மற்றும் கலை மற்றும் கை பொருள்களில் அவர்களுக்கு உள்ள ஆர்வம், ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கு ஒரு சிறந்த நிகழ்ச்சியாக அமைந்தது. பாரதத்தின் புராதன பண்பாடு குறித்து உரையாற்றிய அவர்கள் பாரதம் என்ற சொல் ஒளியிலே திளைக்கின்ற நாடு என்று பொருள்படும் என்றார். தொன்று தொட்டு ஞான ஒளியில் கிடைக்கின்ற நாடு பாரதம். பாரதத்தின் ரிஷி முனிவர்கள் ஞானத்தை இரண்டாக பிரித்தனர். உலகாயத ஞானம், மருத்துவம், கலைகள், விஞ்ஞானம், ஆகியவை ‘அபர வித்யா’  என்று அறியப்பட்டது. ஆன்மீக உணர்வு பெற உயர்ந்த மெய்ஞானம் ‘பர வித்யா’ என்று அறியப்பட்டது. மானிட உடல் தன்னுண்மை  உணர்வை பெறுவதற்கான கருவி ஆதலால், சரீரம்,  மனம், புத்தி, ஆகியவற்றின் எல்லா நிலைகளிலும் அதை சிறந்ததாக மாற்றுவதற்கு நமது ரிஷி முனிவர்கள் விஞ்ஞானம், மற்றும் மெய்ஞானம் இரண்டையும் சிறப்பாக அமைத்தனர்

சரகர் மற்றும் சுஷ்ருதர் மருத்துவத்திலும், ஆர்யப்ட்டா மற்றும் பாஸ்கரா வானவியிலிலும், பரத்வாஜா விமானவியலிலும் கணிதத்திலும், பரத்வாஜர் வைமானிக சாஸ்திரத்திலும் சாதனைகளை ஏற்படுத்தியது பற்றியும், கட்டிடக்கலையில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் பாரதத்திற்கு வெளியே, அங்கோவாரட், போரோபுடூர் போன்ற கோயில்கள், ஜாவா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் பணிது, பாரதத்தின் சிற்பக்கலை நிபுணர்கள் சாதித்துள்ளதையும் அவர் எடுத்துக்காட்டினார்.

சாது சென்னைக்கு புதன்கிழமை ஜனவரி 11 அன்று வந்தார், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சார்பில் நகர பள்ளி மாணவர்களுக்கு,  யோகி ராம்சுரத்குமார் சூழல் கேடயம் மற்றும் பரிசுகள் வழங்குவதற்காக, சுவாமி விவேகானந்தர் பற்றிய பேச்சு போட்டியை,  இளைஞர் தினமாகிய விவேகானந்த ஜெயந்தி அன்று நடத்த, ஏற்பாடாகியது. சாதுவின் இளைய தகப்பனார், சென்னை வைணவக் கல்லூரியில் முன்னாள் முதல்வர், பேராசிரியர் எஸ். ஆர்.  கோவிந்த ராஜன், உலக ராமநாம  இயக்கத்தில் பங்கு கொள்ளும் பக்தர்களுக்கு விநியோகிப்பதற்காக, “ஸ்ரீராம தாரகம்” என்ற நூலின் பிரதிகளை சாதுவிடம் வழங்கினார். சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி ஜனவரி 12 , 2001 வியாழனன்று, கன்னிகா பரமேஸ்வரி கலைக்கல்லூரியில் நடைப்பெற்றது. டாக்டர் V. பாலாம்பாள் என்ற அந்த கல்லூரியின் முதல்வர் தலைமை தாங்கினார். அகில இந்திய வானொலி இயக்குனர், திரு. அஸ்வினிகுமார் மற்றும் திரு. சக்தி சீனிவாசன் உரைகளை நிகழ்த்தி, பரிசுகளை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினார்கள். சாது நிறைவுரையை வழங்கினார். இளைஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரு. R. விவேகானந்தன், வரவேற்புரையை வழங்கினார். சாது பெங்களூருக்கு, சனிக்கிழமை அன்று சென்றடைந்தார்.

ஸ்பெயினை சேர்ந்த திரு. ஜோஸ் ரிவரோலா சாதுவை ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14 ஆம் தேதி சந்தித்து, பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்து ஒரு ஸ்பானிஷ் இதழுக்காக சாதுவை நேர்காணல் மேற்கொண்டார். சாது   R.S.S. சுயம்சேவகர்களின் மகரசங்கராந்தி விழாவில் உரையாற்றினார். பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் குறித்து பேசினார். ஜனவரி 15 அன்று சாது யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, திரு. ஆனந்தன் அவர்களிடம் பேசி, பகவானின் உடல்நிலை குறித்து விசாரித்தார். புதன்கிழமை டாக்டர் லலிதா மற்றும் டாக்டர் P.M. நாயுடு தென் ஆப்பிரிக்காவில் இருந்து சாதுவின் ஆசிரமத்திற்கு வந்தனர். சாது சென்னைக்கு ஜனவரி – 23 ஆம் தேதி திரும்பி வந்தார். அவர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், வ.உ.சி. மெட்ரிக்குலேஷன் பள்ளியின் விளையாட்டு தினத்தை, ஜனவரி – 25 வியாழனன்று,  தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ரியூனியன் தீவிலிருந்து  வந்த சுவாமி அத்வயானந்தா மற்றும் திரு மானுவல் அடுத்தநாள் சாதுவை சந்தித்தனர். சாது சென்னை பெரம்பூரில் உள்ளபாரதமாதா பள்ளியில், ஜெய்கோபால் கரோடியா இலவச மருத்துவ மையத்தின்  நான்காவது ஆண்டுவிழாவில், ஞாயிற்றுக்கிழமை ஜனவரி – 28 அன்று கலந்து கொண்டு சிறப்பித்தார். புனித கங்கையம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா நல்லூர் கிராமத்தில் ஜனவரி 29 , 2001 திங்கள்கிழமை நடைபெற்றது. கொண்டார். அங்கே பெரிய அளவில் வேத ஹோமங்கள் மற்றும் பூஜைகள் போன்றவற்றை முருகாஸ்ரமத்தின் சுவாமி சங்கரானந்தா நடத்தி வைத்தார். சாது கலந்துகொண்டு, கோயில் வழிபாட்டின் அறிவியல் முக்கியத்துவம் குறித்தும் புராதன ரிஷி முனிவர்கள் உருவாக்கிய ஆலய வழிபாடு முறைகள் குறித்தும் விளக்கினார். அந்த கிராமத்தின் ஆன்மீக சாதகர்களுக்கு ராமநாம தாரக மந்திர தீக்ஷையை வழங்கினார். 

Leave a comment