ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.26

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.26 

விவேக்கின் திருமணத்தை ஆசீர்வதித்த பகவான்

திரு. பெருமாள் நாயுடு என்கிற ஒரு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மற்றும் சாதுவின் பக்தர் தென்னாப்பிரிக்காவிலிருந்து பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு சனிக்கிழமை, ஏப்ரல் 29 அன்று வந்தார். திரு. அனில் ஸுட்ஷி, திருமதி ரீட்டா ஸுட்ஷி மற்றும் அவரது பெண்களான சஹானா மற்றும் அனன்யா ஆசிரமத்திற்கு ஹைதராபாத்தில் இருந்து மே – 1 திங்கள்கிழமை வந்தனர். சாது பகவானுக்கு தனது அடுத்தநாள் திருவண்ணாமலை பயணம் குறித்த சேதியை ஃபேக்ஸ் செய்தார்:

பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் ! 

உங்கள் அளவற்ற கருணை மற்றும் ஆசியால் நமது ஆசிரமம் , யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம் வேகமாக முன்னேறிவருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வருகை தந்தது  மட்டுமல்லாது, பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின். சுவாமி முக்யானந்த்ஜி, பெங்களூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா சேவா கேந்திரா சுவாமி சந்திரேசானந்தா, அனுசோனி ஹம்ஸாஸ்ரமத்தின் ஸ்ரீ விரஜேஸ்வர் போன்றோர் எங்கள் இல்லத்திற்கு வந்து ஆசீர்வதித்தனர். திரு. பெருமாள். நாயுடு, தென் ஆப்பிரிக்காவின் பக்தர், வந்து எங்களோடு தங்கியுள்ளார்.

பகவானின் கருணை மற்றும. ஆசியினால், நாங்கள் சிரஞ்சீவி விவேகானந்தனுக்கு ஒரு மணப்பெண்ணை பார்த்துள்ளோம். சௌ. மாலதி என்ற, எம்.காம் படித்துள்ள, மற்றும் ICWA இறுதி வருட தேர்வு எழுத இருக்கின்ற, அந்த பெண், பெங்களூர் ப்ராவிடன்ட் ஃபண்ட் அலுவலகத்தில் பணிபுரிகிறாள். அவளின் தந்தை வரதன், பாரத் போர்ஜ் லிமிடெட் -ல் ஒரு சேல்ஸ் மேனேஜர். அவரும் அவரது மனைவியும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா டிசம்பர் – 1 ல் கலந்து கொண்டனர். அவர்கள் மிகுந்த பக்தி கொண்டவர்கள். மணப்பெண்ணும் அவரது பெற்றோர்களும் பகவானின் தரிசனத்தை திருமணத்திற்கு முன் பெற விரும்புகின்றனர். திருமணம் ஜூன் – 22 என தற்சமயம் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் மே – 7 என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிறவற்றை துவங்கும் முன், இந்த சாது உங்கள் தரிசனத்தை பெற விரும்புகிறான். 

திரு. அனில் ஸுட்ஷி அவர்கள் பகவானின் கருணையால் அமெரிக்காவின் கனெக்டிகட்டில், மேக்னா இன்போடெக்கில், துணை – தலைவர் ( மார்கெட்டிங் ) பணியை பெற்றுள்ளார். அவர் தனது மனைவி திருமதி. ரீட்டா மற்றும் இரண்டு பிள்ளைகளோடு இங்கு வந்துள்ளார். அவர்களும், அமெரிக்க தூதரகம் சென்று விசாவினை புதன்கிழமை விண்ணப்பிக்கும் முன், பகவானின் ஆசியை பெற   விரும்புகிறார்கள். எனவே நாங்கள் திருவண்ணாமலைக்கு நாளை செவ்வாய்க்கிழமை மே – 2 அன்று காரில் அங்கே முற்பகலில் வருவோம். நாங்கள் உங்கள் ஆசியை மற்றும் தரிசனத்தை வேண்டி பிரார்த்திக்கிறோம். 

தாழ்மையான வணக்கங்களுடன், 

சாது ரங்கராஜன்.” 

சாது பக்தர்களோடு திருவண்ணாமலைக்கு அடுத்தநாள் காலை காரில் கிளம்பி பகவானின் இல்லத்தை காலை 9 மணிக்கு சென்றடைந்தனர். நாங்கள் அங்கே சென்றவுடன் பகவான் எங்களை அழைத்தார். அவர் ஆசிரம கட்டிடத்தின் பின்பகுதியில் உள்ள குடிலில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நாங்கள் அவர் முன்னர் அமர்ந்தோம். அவர் சாதுவிடம், “என்ன சங்கதி?“ என்று கேட்க, மா தேவகி, திரு. அனில் ஸுட்ஷி மற்றும் குடும்பத்தினர் சாதுவோடு வந்துள்ளார்கள் என்றார். சாது அவர்களையும் திரு. பெருமாள் நாயுடுவையும் பகவானிடம் அறிமுகப்படுத்தினார். சாது பகவானிடம் சிரஞ்சீவி விவேக்கிர்கு சௌ. மாலதியுடன் திருமண நிச்சயதார்த்தம் மே – 7 , 2000 ல் நடக்க இருப்பதாக கூறி, மணமகளின் புகைப்படத்தை காட்டினார். தேவகி, பகவான் ஏற்கனவே சாதுவின் பேக்ஸை விவரமாக படித்துவிட்டதாக கூறினார். பகவான் அந்த புகைப்படத்தை ஆசீர்வதித்து திரும்ப தந்து, “எனது தந்தையின் ஆசியால் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்“ என்றார். சாது பகவானிடம் மணப்பெண்ணின் பின்னணி மற்றும் அவளது பெற்றோர்கள் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டதைப்பற்றி தெரிவித்தார். அவர்கள் மிகுந்த பக்தி கொண்டவர்கள் என்றும் கூறினார். பகவான், “ தந்தையின் கருணை!” என்றார். 

பகவானிடம் திரு. அனில் ஸுட்ஷி அவர்களின் அமெரிக்க வேலைவாய்ப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. பகவான் அனில் மற்றும் அவரது குடும்பத்தை சகல வெற்றிகளையும் பெற ஆசீர்வதித்தார். மா தேவகி அனில் தனது குடும்பத்தோடு அமெரிக்கா செல்ல இருக்கிறாரா என்று கேட்க, அவர் ஆம் என்று பதிலளித்தார். பகவான் அவர்கள் காஷ்மீருக்கு அவர்களின் மகளின் திருமணத்திற்காக செல்லக்கூடும், ஏனெனில் அவர்கள் காஷ்மீர் பண்டிட் என்றார். 

சாது, பகவானிடம், “விக்ஞான பாரதி — வேத காலம் தொட்டு நவீன காலம் வரை ஹிந்து தர்மம்“ என்ற சாதுவின் நூலுக்கான, சுவாமி முக்யானந்த்ஜி அவர்களின. முன்னுரையை கொடுத்தார். அத்தோடு பாரதமாதா குருகுல ஆசிரமத்தை தலைமையிடமாகக் கொண்ட, “வாழ்க்கை மூல்யங்களை அடிப்படையாகக்கொண்ட உலகளாவிய கல்வி இயக்கம்” (Global Organization for Value Oriented Education) குறித்த வேண்டுகோள் ஒன்றையும் வழங்கினார். மேலும் டாக்டர் சம்பூரண் சிங் மற்றும் சுவாமி முக்யானந்தா ஆகியோரும் இந்த இயக்கத்தில் இணைந்திருப்பதைப்பற்றி கூறினார். பகவான் தந்தையின் ஆசியால்  பாரதமாதா குருகுல ஆசிரமம் வளரும் என்றார். மா தேவகி சுவாமி விரஜேஸ்வர் குறித்து கேட்டார். மாலதி மற்றும் அவர்களது பெற்றோர்களை பகவானிடம் அழைத்து வருகையில், ஒருவேளை சுவாமி விரஜேஸ்வர் எங்களோடு இணையலாம் என்றார். பகவான் அவர்களை அழைத்துவர ஒப்புதலை தந்தார். சாது பகவானிடம் விவேக்கின் திருமணம் முடிந்தப்பின் தான் முழுமையாக குடும்ப பொறுப்புகளில் இருந்து விடுதலையாகி பகவானின் பணிகளுக்கு முழுமையாக அர்ப்பணித்து கொள்ள இருப்பதாக கூறினார். பகவான் தேவகியிடம் திரும்பி, “ரங்கராஜன் அவரது பொறுப்புக்கள் விவேக்கின் திருமணத்தோடு முடிந்துவிடுவதாக நினைக்கிறார்“ என்றார். பின்னர் அவர், “நிவேதிதா?“ என்று கேட்க, தேவகி, நிவேதிதாவிற்கு திருமணமாகி குழந்தை இருப்பதை எண்ணி குழம்பி, பகவானிடம், “நிவேதிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி அவள் ஒரு குழந்தை பெற்றிருக்கிறாள்.” என்று கூற, பகவான் புன்னகைத்தார். சாது பகவானிடம் நிவேதிதா அவளது இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறாள், இப்போது அவள் ஆறு மாத கருவோடு இருக்கிறாள் என்றார். பகவான் நிவேதிதாவின் பாதுகாப்பான பிரசவத்திற்கு ஆசீர்வதித்தார். 

பகவான் தான் பலஹீனமாக இருப்பதாகவும் தன்னால் எதையும் செய்ய இயலவில்லை என்றும், “அனைத்து நேரமும் தூங்குகிறேன்“ என்றும் கூறினார். மா தேவகி, பகவான் ஆசிரமத்தில் அவருக்கென பிரத்யேகமாக கட்டப்பட்ட அறையில் தங்குவதற்கு மறுத்து, கூரை வேயப்பட்ட கொட்டகையிலேயே நாள் முழுவதும் இருந்து, மாலையில் சுதாமாவிற்கு திரும்புகிறார் என்றார். பகவான் எங்களுக்கு விடை அளிக்க முடிவெடுத்து, வழக்கம்போல் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்தார். பின்னர் அவர் பக்தர்களை ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் தான் மாலதி மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உடன் வருவதாக கூறினார். “அது சரி“ என்று கூறிய பகவான், அனில் ஸுட்ஷி அவர்களின் ஆவணங்களை எடுத்து அவர் விசா பெறவும், பாதுகாப்பான அமெரிக்க பயணத்திற்கும் ஆசீர்வதித்தார். அவர் அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கினார். சாது பகவானிடமிருந்தும், மா தேவகி மற்றும் விஜயலட்சுமி ஆகியோரிடம் இருந்தும் விடைப்பெற்று, ரமணாச்ரமம், சேஷாத்ரி ஆசிரமம், அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களுக்கு குழுவினரோடு சென்று, சென்னைக்கு  இரவில் வந்தடைந்தனர். அனில் மற்றும் அவரது குடும்பத்தினர் சாதுவிடம் விடைப்பெற்றனர். சென்னையில் இரவில் தங்கிவிட்டு சாது மற்றும. திரு. பெருமாள் நாயுடு பெங்களூர் நோக்கி பயணித்தனர். சாதுவின் சகோதரர் திரு. லக்ஷ்மிகாந்தன் மற்றும் சகோதரி திருமதி. அலமேலு மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மைசூர் செல்வதற்காக சாது உடன் பெங்களூருக்கு வந்தனர். 

பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் கருணை மற்றும் ஆசியால் சிரஞ்சீவி. விவேக் மற்றும் சௌ. மாலதி அவர்களின் நிச்சயதார்த்தம் பெங்களூர் இன்ஃபென்றி சாலை, இன்ஃபென்றி கோர்ட் ஓட்டல் ஹாலில், மே – 7 ஞாயிற்றுக்கிழமையன்று நடைப்பெற்றது. சாது, திரு. பெருமாள் நாயுடு, திருமதி பாரதி மற்றும் ஹரிப்ரியா ஆகியோருடன் சத்யசாய் பாபா ஆசிரமமான வைட்ஃபீல்டுக்கு, பாபாவின் தரிசனத்தை பெற, புதன்கிழமை சென்றனர். மே – 13 சனிக்கிழமை அன்று, சாது, தான் திருவண்ணாமலைக்கு அடுத்தநாள் மாலதி மற்றும் அவரது பெற்றோர்கள் உடன் விஜயம் செய்வது குறித்து பகவானுக்கு தகவல் தெரிவித்தார். 

சாது, திருமதி பாரதி, சௌ. மாலதி மற்றும் அவளின் தந்தை திரு. வரதன், திருவண்ணாமலைக்கு ஞாயிற்றுக்கிழமை மே – 14 , 2000 அன்று வந்து சேர்ந்தனர். சிரஞ்சீவி விவேக்கும் அவர்களுடன் இணைந்தார். ராஜேஸ்வரி அம்மா பகவானின் ஆணைப்படி அவர்கள் தங்க குடிலை ஏற்பாடு செய்தார். பகவான் காலையில் முழுமையாக ஓய்வு எடுத்து, சாது மற்றும் பிறரை 4.00 மணி மாலையில் அழைத்தார். சாது மாலதி மற்றும் அவளது தந்தையை பகவானிடம் அறிமுகம் செய்தார். பகவான் நிச்சயதார்த்தம் முடிந்து திருமண வேலைகள் துவங்கிவிட்டனவா ? என்று கேட்டார். சாது ஆம் என்று பதிலளித்தார். திருமணம் எந்த தேதியில் என்று பகவான் வினவ,  சாது, திருமணம் ஜூன் – 22 என்று கூறினார். பகவான் விவேக்கை தனதருகே அழைத்து, “உனக்கு முடிவான பெண் குறித்து நீ திருப்திதானே ?“ என்று கேட்டார். விவேக், “ ஆம் “ என்று கூறினார். பின்னர் அவர் மாலதியை தனதருகே அழைத்து அவளிடம், “ நீ ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா ?” என்று கேட்க, அவள் அமைதியாக இருந்தாள். தேவகி அவளிடம், “நீ பகவானிடம் ஏதேனும் கேட்க நினைத்தால் கேட்கலாம்.” என்றார். மாலதி பகவானிடம் திரும்பி, “உங்கள் ஆசி மட்டுமே எனக்கு தேவை“ என்று கூற, பகவான் தனது கைகளை உயர்த்தி “என் தந்தையின் ஆசீர்வாதங்கள்“ என்றார். தேவகி பகவானிடம், திருமணத்திற்கான இடம் D.S.கல்யாண மண்டபம், கொரட்டூர்,  சென்னை என்று கூற, பகவான் விவேக் மற்றும் மாலதியை இனிய திருமண வாழ்க்கைக்காக ஆசி வழங்கினார். விஜயலட்சுமி நிவேதிதா குறித்து விசாரித்தார். நிவேதிதா வர விரும்பினாள், ஆனால் கருவுற்று ஆறு மாதம் ஆவதால் நீண்ட பயணம் வேண்டாமென்று நாங்கள் அழைத்து வரவில்லை என்று சாது கூற, பகவான் நிவேதிதாவை ஆசீர்வதித்தார். தேவகி , விவேக் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருப்பதாகவும், விவேக்கும், நிவேதிதாவும் சிறியவர்களாக இருக்கையில் திருவண்ணாமலைக்கு அடிக்கடி வருவார்கள் என்றும் குறிப்பிட்டார். 

பகவான் படுத்துக்கொள்ள விரும்பினார். படுக்கை அவருக்காக விரிக்கப்பட்டது. அவர் படுத்துக் கொண்டார். பகவான் சாதுவை தன் அருகே அமருமாறு கூறினார். அவர் சாதுவின் கரங்களை தனது இதயத்திற்கு அருகே பிடித்துக்கொண்டு கண்களை மூடிக் கொண்டார். அவ்வப்போது தனது தோளையும், தலையையும் உயர்த்தி சாதுவை பார்த்தார். இவ்விதமாகவே கால்மணி நேரம் கழிந்தது. அரைமணி நேரம் கழித்து அவர் எங்களை விடைபெறுமாறு கூறினார். மாலதி மற்றும் விவேக் மாதேவகியை வணங்கினர். பகவான் எழுந்து தனது படுக்கையில் அமர்ந்துகொண்டார். சாது மற்றும் பிறர் பகவானை வணங்கினர். பகவான் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆப்பிள் பிரசாதமாக வழங்கினார். வழக்கம்போல் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் ஸ்ரீதரின் மகள் சௌ. கௌசல்யாவுக்கு, திரு ராஜேஷ் உடன் திருமணம் குறித்துக் கூறினார். பகவான் அவர்களை ஆசீர்வதித்தார். சாது அடுத்த ‘தத்துவ தர்சனா’ இதழ் வெளியீட்டின் போது சுவாமி விரஜேஸ்வர் அவர்களை அழைத்து வருவதாக கூறினார். மேலும் சாது பகவானிடம் சுவாமி விரஜேஸ்வர் அவர்களின் குரு மஹாசமாதி அடைந்துவிட்டார் என்ற சேதியை கூறினார். பகவான் அவரது பெயர் என்ன என்று கேட்டார். “ரிஷிகேஷின் சுவாமி வித்யானந்தா. இவர் சுவாமி சிவானந்தரின் சீடர் ஆவார்” என்று சாது பதிலளித்தார். பகவான் சாதுவிடம் சுவாமி விரும்பினால் அழைத்து வரும்படி கூறினார். சாது மாலதியும், விவேக்கும் திருமணம் ஆனபிறகு மீண்டும் ஆசியை பெற வருவார்கள் என்றார். சாது பகவானிடம் நிவேதிதாவின் சுகபிரசவத்திற்கு ஆசியை வேண்டினார். பகவான் ஆசீர்வதித்தார். மா தேவகி சாதுவும் அவரது குழுவினரும் பெங்களூருக்கு திரும்புகிறார்களா என்று வினவினார். சாது பதிலளிக்கையில், விவேக்கும், பாரதியும் சென்னைக்கு செல்வதாகவும், தான் மாலதி மற்றும் அவள் தந்தையுடன் பெங்களூருக்கு செல்வதாகவும் கூறினார். சாது பகவானிடம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்துள்ள திரு பெருமாள் நாயுடு  பெங்களூரில் ஆசிரமத்தில் தங்கியிருப்பதாக கூறினார். மா தேவகி திருவண்ணாமலை மிகுந்த வெப்பநிலையோடு இருப்பதாக கூற, சாது பெங்களூர் ஆசிரமம் மிகுந்த குளிர்ச்சியாக இருக்கும் என்றார். பகவானிடம் விடைபெறும் பொழுது அவர் ஆசிரமத்தின் விரைவான வளர்ச்சிக்கு ஆசீர்வதித்தார். சாதுஜி மாதேவகி மற்றும் விஜயலட்சுமியிடம் விடைப்பெற்றார். ஆசிரமத்தை விட்டு கிளம்பும் முன் சாதுஜி ஜஸ்டிஸ் அருணாச்சலம் , சக்திவேல் , திரு. சங்கர்ராஜூலு மற்றும் சுவாமிநாதன் அவர்களிடம் விடைப்பெற்றார். பின்னர் சாது மற்றும் அவரது குழுவினர் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜையை விவேக் மற்றும் மாலதியின் பெயரில் செய்தார். திரு. ராமச்சந்திர உபாத்யாயா சாதுவை உடுப்பி பிருந்தாவன் ஓட்டலில் வரவேற்று மகிழ்வித்தார். அவர் திரு. வரதனிடம் பகவானோடு தனக்கு இருக்கும் 35 வருட பழக்கம் குறித்தும், விவேக் மற்றும் நிவேதிதாவை அவர்களின் குழந்தை பருவத்திலிருந்தே தெரியும் என்றும், அவர்கள் இருவரும் தனியே பகவானை காண வருகையில், அவர்களை பகவான் எப்படி அவரது இல்லத்தில் பார்த்துக் கொண்டார் என்றும். கூறினார். சாது அவரிடமிருந்து விடைப்பெற்று, விவேக் மற்றும் பாரதியை சென்னைக்கு வழியனுப்பி, பின்னர் வரதன் மற்றும் மாலதியோடு பெங்களூருக்கு கிளம்பினார். 

திங்கள்கிழமை , மே 22 அன்று சாது, திரு. பெருமாள் நாயுடு உடன் சென்னைக்கு, வியாழக்கிழமை மே – 25 அன்று நடைபெற இருக்கும் திரு. பாஸ்கரதாஸ் அவர்களின் மகளான சௌ. ப்ரீத்தி மற்றும் திரு. பகத் சிங் அவர்களின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள, சென்றனர். வெள்ளிக்கிழமை சாது, விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களுக்கான முகாமில் கலந்து கொண்டார். சனிக்கிழமை VHP அலுவலகத்தில் நடைபெற்ற ஊழியர்களின் கூட்டத்தில், சங்கரர் மற்றும் ஷண்மதம் குறித்து பேசினார். சாது, ஞாயிறன்று, கீதா பவன், லாயிட்ஸ் சாலை, சென்னையில், பசு பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். அடுத்தநாள் அவர் பெங்களூர் திரும்பினார். 

வெள்ளிக்கிழமை, ஜூன் – 9, 2000 அன்று, சாது, பகவான் ஆசிரமத்திற்கு தொலைபேசியில் அழைத்து, ஜஸ்டிஸ் அருணாச்சலம் அவர்களிடம் பேசினார். அவர் சாதுவிடம், பகவான் உடல்நலம் குன்றி இருப்பதாகவும், அவர் எவரிடமும் பேசுவதில்லை, எவரையும் காண்பதில்லை என்றும் கூறினார். திருமதி. பாரதி மாதேவகிக்கு ஜூன் – 13 அன்று கடிதம் ஒன்றை எழுதினார்:

“பூஜ்ய மாதாஜி, 

எனது தாழ்மையான வணக்கங்கள் தங்களுக்கும் , யோகி ராம்சுரத்குமார் அவர்களின் புனித பாதங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற ஞாயிற்றுக்கிழமை நாங்கள் சிரஞ்சீவி. விவேகானந்தனின் திருமண பத்திரிக்கையை பகவானின் முன் வைக்க நினைத்தோம். சுவாமிஜி பக்தர்களுக்கு தரிசனம் தருவதில்லை என்பதை அறிந்தோம். எனவே நாங்கள் அங்கே வரவில்லை. இத்துடன் திருமண பத்திரிக்கையை இணைத்துள்ளோம். நாங்கள் அவரது அளவற்ற ஆசியை சிரஞ்சீவி. விவேக் மற்றும் சௌ. மாலதி அவர்களின் இனிய திருமண வாழ்க்கைக்கு வேண்டுகிறோம்.

திருமதி. நிவேதிதாவின் கணவன், சிரஞ்சீவி ரமேஷ் வயிற்றுவலி மற்றும் வாந்தி காரணமாக 7 ஆம் தேதி இரவு முதல் மருத்தவமனையில் இருந்தார். அவர் 9 ஆம் தேதி வெளியே அனுப்பப்பட்டு, மீண்டும் பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் அதே இரவில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்படலாம். டாக்டர்கள் அவரது சிறுநீரகம் அல்லது கல்லீரலில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்கலாம் என்று தேவையான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். நாங்கள் சிரஞ்சீவி. ரமேஷ் விரைவாக குணமடைய சுவாமிஜியின் ஆசியை வேண்டுகிறோம். 

எங்களின் தாழ்மையான வணக்கங்கள் தங்களுக்கும் , சௌ. விஜயலட்சுமிக்கும்.

பெருமதிப்புடன், தங்களின் அன்பிற்குரிய, 

பாரதி.”

யோகியின் ஆசி மற்றும் கருணையால் சிரஞ்சீவி. விவேக் முற்றும் மாலதி  திருமணம் இனிதே ஜூன் – 22 , 2000 அன்று நிறைவுற்றது. பகவானின் பக்தர்கள் மட்டுமில்லாமல், தென் ஆப்பிரிக்காவின் திரு. டெட்டி கொமல் , திரு. தயாராம் அஹீர், திருமதி. ராதிகா அஹீர், மற்றும் திரு. பெருமாள் நாயுடு போன்றோர் வெளிநாட்டு பக்தர்களின் சார்பாக வந்திருந்தனர். முந்தைய நாள் ஹனுமான் கோவிலில் நடைபெற்ற நிச்சயதார்த்தம் மற்றும் மாப்பிள்ளை அழைப்பு சடங்குகள் மற்றும் கொரட்டூர் D.S. கல்யாணமண்டபத்தில் நடந்த திருமண விழாவும் சிறப்பாக நடைப்பெற்றன. வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பகவானின் பக்தர்கள் சென்னையில் உள்ள பக்தர்களின் விருந்தினர்களாக தங்கினர். சாது, மணமக்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்களுடன் பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை ஜூன் – 23 அன்று வந்தனர். விஷய் அஹீர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து இணைந்து கொண்டார். 

சாது, பாரதி, திரு. தயாராம் அஹீர், திருமதி. ராதிகா மற்றும் திரு. விஷய் அனைவரும் ஆனந்தாஸ்ரமத்திற்கு சனிக்கிழமை , ஜூலை – 1 அன்று, காரில் சென்றனர். அவர்கள் ஆனந்தாஸ்ரமத்தை இரவில் அடைந்தனர். அங்கு அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. அவர்கள் பப்பா ராம்தாஸ் மற்றும் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் சமாதிகளில், தங்கள் பிரார்த்தனைகளை அடுத்தநாள் காலையில் செலுத்தினர். அவர்களை சுவாமி சச்சிதானந்தர் மற்றும் சுவாமி முக்தானந்தா ஆகியோர் வரவேற்றனர். அவர்கள் தங்கள் பிரார்த்தனைகளை கோயிலில் சமர்ப்பித்தனர். மௌன விரதம் கடை பிடித்துக் கொண்டிருந்த சுவாமி சுத்தானந்தாவும் இவர்களை வரவேற்றார். பின்னர் அவர்கள் சுவாமிகளிடம் விடைப்பெற்று, கோழிக்கோடு சென்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின். தலைவர் சுவாமி கோகுலானந்தா சாதுவை வரவேற்று இரவு உணவை வழங்கினார். சுவாமியிடம் விடைபெற்று அவர்கள் குருவாயூர் சென்றனர். கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று ஸ்ரீவேலி மற்றும் இதர பூஜை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.. அவர்கள். குருவாயூரில் இரவு தங்கி, காலையில் எர்ணாகுளம் சென்றனர். சாதுவின் இளமைக்கால நண்பர்கள் திரு சந்தானம், திரு அப்துல் கரீம், மற்றும் டாக்டர் பி.என். பாபு வாசுதேவன் ஆகியோர் நீண்ட காலத்திற்கு பின்  சாதுவை வரவேற்றனர். சாதுவும் தென்னாப்பிரிக்க பக்தர்களும் அவர்களுடைய இல்லங்களுக்கு சென்றனர். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து அவர்கள் கன்னியாகுமரியை அடைந்தனர். திரு. தங்கஸ்வாமி, விவேகானந்த கேந்திராவின் மேலாளர், அவர்கள் தங்குவதற்கு விவேகானந்தபுரம் வளாகத்தில் ஏற்பாடு செய்தார். 

ஜூலை – 4 செவ்வாய்க்கிழமை சாது மற்றும் அவரது குழுவினர் விவேகானந்த புரத்தில் உள்ள திரு. ஏக்நாத் ரானடேயின். சமாதிக்கு சென்றனர். திரு. லட்சுமணன், படகு சேவை பொறுப்பாளர், விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னத்திற்கு செல்ல படகு ஏற்பாடு செய்தார். விவேகானந்தர் பாறையில் விவேகானந்தர், சாரதா தேவி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணர் விக்கிரகங்களை தரிசித்துவிட்டு, தியான மந்திரில் சிறிது நேரம் அமர்ந்து தியானித்த பிறகு, கரைக்கு திரும்பினர். பின்னர் கன்னியாகுமரி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசித்துவிட்டு, அன்னை மாயம்மா வசித்த குடிலுக்கு சென்றனர். பிறகு அவர்கள் மாயம்மா சமாஜத்திர்கு வந்தனர். அங்கு சமாஜத்தின் பூஜாரி திரு புஷ்பராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் சாதுவையும் பிற பக்தர்களையும் வரவேற்றனர். சாது அங்கு ஒரு சிறப்பான ஹோமத்தை நடத்தி, மாயம்மா, யோகி ராம்சுரத்குமார், மற்றும் பிற மஹான்களின் சன்னிதிகளில் பூஜை மேற்கொண்டார். ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்துகொண்ட பக்தர்களுடன் உணவு அருந்திய பின்பு சாது மற்றும் அவரது குழுவினர், காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயத்திற்கு சென்றனர். திரு பொன். காமராஜ், அவர்களை வரவேற்றார். அவர்கள் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு, திரும்ப அஞ்சுகிராமம் வந்து பொன் காமராஜை அங்கே விட்டபின் மதுரைக்கு சென்றனர். இரவில் அங்கே YMCA விருந்தினர் இல்லத்தில் தங்கினா். காலையில் மதுரை மீனாக்ஷி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, அவர்கள் திருச்சிராப்பள்ளி சென்றனர். அங்கே பாரதியின் சகோதரி, ராஜி, மற்றும் ராமநாம இயக்கத்தைச் சார்ந்த திரு வைத்தியநாதன் மற்றும் திரு ஜெயராமன் போன்றவர்கள், சாதுவை வரவேற்றார்கள். பின்னர் அவர்கள் சென்னைக்கு இரவில் வந்தடைந்தனர். 

ஜூலை – 6 , 2000, வியாழக்கிழமை அன்று, மித்தனஹல்லியில், சிறப்பான ராம்நாம் சத்சங்கம் ஒன்றை, ஆவடியை சேர்ந்த திரு. விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார். சாதுவை திருவல்லிக்கேணியில் இருந்து பிரம்மச்சாரி ஜெகதீச சைதன்யா அழைத்துச் சென்றார். ஆவடி செல்லும் வழியில் அவர்கள் திருமுல்லைவாயில் வைஷ்ணவிதேவி கோயிலுக்கு சென்றார்கள். அங்கே மாதாஜி வசந்தியை சாது சந்தித்தார். சாதுவிற்கு ஒரு ஆரவாரமான வரவேற்பு பாதபூஜையுடன் திரு. விஸ்வநாதன் அவர்களின் இல்லத்தில் வழங்கப்பட்டது. மித்தனஹல்லியின் பாலாஜி கோயிலை சேர்ந்த பக்தர்கள் கோயில் அருகில் சாதுவை வரவேற்று, ஒரு ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். சாது, அந்த கூட்டத்தினரிடையே ராமநாம தாரக மந்திரத்தை பற்றியும், பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றுவரும் உலக ராம்நாம் இயக்கம் குறித்தும், பேசினார். சாது விடைபெறுகையில் “ ஜெய் ஸ்ரீராம் “ என்ற முழக்கத்தால் அந்த இடமே அதிர்வினைப்பெற்றது. 

சாது பெங்களூருக்கு, ஜூலை – 8 சனிக்கிழமையன்று பயணித்தார். காஞ்சங்காடு ஆனந்தாஸ்ரமத்தின் சுவாமி ஜ்யோதிர்மயானந்தா, சாதுவை, ஸ்ரீ யோகேஷ் பட் என்ற பகவானின் பக்தர் மற்றும் கர்நாடக எம்.எல்.ஏ. அவர்களை, சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் சந்திக்க அழைத்தார். சுவாமி சாதுவை முக்கிய தலைவர்களான திரு. V.R. ஷெனாய் , திரு. M.G.N ஷெனாய் மற்றும் திரு.M.M. மல்லைய்யா போன்றோரிடமும் அறிமுகப்படுத்தினார். சாது அவர்களை பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்தார். 

ஜூலை – 14 , 2000 அன்று, சாது பகவானுக்கு தனது அடுத்த நிகழ்ச்சிகள் குறித்த தகவல் ஒன்றை அனுப்பினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் ! 

உங்களின் குறைவற்ற கருணையால் , சிரஞ்சீவி. விவேகானந்தன் திருமணத்தில் கலந்து கொண்ட தென் ஆப்பிரிக்கா பக்தர்களுடன், இந்த சாது மற்றும் திருமதி. பாரதியால்  மேற்கொள்ளப்பட்ட புனிதப்பயணம் வெற்றிகரமாக முடிந்து, நாங்கள் பெங்களூர் வந்தடைந்தோம். தென் ஆப்பிரிக்காவின் பக்தர்கள் இந்தமுறை தங்கள் தரிசனத்தை பெறமுடியாத காரணத்தால் கனத்த இதயத்துடன் திரும்பினர். அவர்கள் மீண்டும் நீங்கள் தரிசனம் தருகையில் வருவதற்கு விரும்புகின்றனர். 

நாங்கள் பூஜ்ய சுவாமி சச்சிதானந்தா, சுவாமி முக்தானந்தா மற்றும் சுவாமி சுத்தானந்தா  போன்றோரை ஆனந்தாஸ்ரமத்தில் சந்தித்தோம். சுவாமி சுத்தானந்தாஜி தங்களிடம், அவரும் டாக்டர் ராஜகோபால், மற்றும் சுவாமி முக்தானந்தா, திருவண்ணாமலைக்கு, ஜூலை – 28 அன்று வரும் தகவலை தெரிவிக்குமாறு சொன்னார்கள். அவர்கள் பகவானின் தரிசனத்தை பெறும் நம்பிக்கையில் இருக்கிறார்கள். 

ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில், ட்ரினிடாடில் நடக்க இருக்கும் ‘உலக ஹிந்து மாநாடு 2000’ த்தில் கலந்து கொள்ள அழைப்பிதழை இந்த சாது பெற்றுள்ளான். பகவானை சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்த திரு.ரவி மஹராஜ் எங்களது ஏர் டிக்கெட்டை ஏற்பாடு செய்வதாக கூறியிருக்கிறார். அது உரிய நேரத்தில் வந்து, விசாவும் கிடைத்தால் நாங்கள் அந்த மாநாட்டில் பகவானின் ஆசியினால் கலந்து கொள்வோம் என நம்புகிறோம். போட்ஸ்வானாவின் பக்தர்களும் பெங்களூர் வந்துள்ளனர். அவர்களும் இந்த சாதுவிடம் அவர்கள் நாட்டிற்கு அடுத்த பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றனர். நாங்கள் பகவானின் ஆசிக்காக பிரார்த்திக்கிறோம். 

சுவாமி சச்சிதானந்தா திருவண்ணாமலை வந்தபோது அவருடன் சாது அங்கு வந்தது போல், சுவாமி சுத்தானந்தஜி மற்றும. சுவாமி முக்தானந்தஜி ஆகியோரின் வருகையின் போது இந்த சாதுவும் கலந்து கொள்ள பகவான் விரும்பினால், இந்த சாது அவர்களோடு பகவானின் ஆசியை பெற விரும்புகிறான். 

திருமதி. நிவேதிதா அவளது இரண்டாவது குழந்தையை இன்னமும் பதினைந்து நாட்களில் பெற்றெடுப்பாள். அவள் உங்கள் ஆசியை வேண்டுகிறாள். திருமதி. பாரதி, சிரஞ்சீவி விவேக், சௌ. மாலதி மற்றும் திரு. ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் தங்கள் வணக்கங்களை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு கூறினார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், தங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். “

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s