ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.25

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.25 

பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு தர்மச்சார்யார்களின் வருகை

புத்தாயிரம் ஆண்டு 2000 த்தின் துவக்கம், சாது ரங்கராஜனின் தலைமையில் பல இந்து அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணி மற்றும் ஹிந்து மதம் மற்றும் கலாச்சாரத்தை பரப்பும் பணியில் ஈடுபட ‘ஹிந்து தர்மோதயா சங்கம்’ நிறுவப்பட்டதை கண்டது. சென்னை தியாகராயநகரில் நடந்த கூட்டத்தில் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். ‘தத்துவ தர்சனா’வின் சிறப்பு மலரானது, “புத்தாயிரமாண்டில் இந்துமதம்” என்ற தலைப்பில், பகவான் வெளியிட தயாரானது.  சாது கடிதம் ஒன்றை பகவானுக்கு ஜனவரி – 3 , 2000 அன்று எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் அளவற்ற கருணை மற்றும் ஆசியால் இந்த சாது பெங்களூர் ஆனந்தாஸ்ரம சத்சங்க சமிதியில் டிசம்பர் 27, 1999 அன்று பப்பா ராம்தாஸ் அவர்களின் சன்னியாச நாளில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தான். 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதில் கலந்து கொண்டனர். மேலும் இந்த சாது யோகி ராம்சுரத்குமார் குறித்தும் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தான். இந்த சாது சென்னைக்கு டிசம்பர் – 31 , 1999 அன்று திரும்பினான். 

“சில்ப ஸ்ரீ” நிறுவனர், திரு. T. பாஸ்கரதாஸ், இந்த சாதுவோடு முப்பது ஆண்டுகளாக அகாடமியின் பணிகளில் ஈடுபட்டிருப்பவர். தனது ஃபியட் ப்ரீமியர் பத்மினி காரை நமது பெங்களூர். ஆசிரம பணிக்காக நன்கொடை அளித்துள்ளார். நாங்கள் அந்த வாகனத்தை பெங்களூரில் வெளிநாட்டில் இருந்து வரும் வெளிநாட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்காக விட்டுவைத்திருக்கிறோம். நாங்கள் பகவானின் ஆசியை யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் சிறப்பாக இயங்க வேண்டுகிறோம். இத்துடன் நாங்கள் நமது மையத்தின் துவக்கவிழா குறித்த பத்திரிகை செய்திகளை இணைத்துள்ளோம். 

யோகிராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சார்பில் 12 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தின விழா, மற்றும் யோகி ராம்சுரத்குமார் சூழல் கேடயங்கள் மற்றும் பரிசுகளை நகர மாணவர்களுக்கு வழங்க, விவேகானந்தர் குறித்த பேச்சுப் போட்டி, KTCT பெண்கள். உயர்நிலை பள்ளியில் ஜனவரி 9, 2000 ல் நடக்க இருக்கிறது. இத்துடன் அதன் அழைப்பிதழை இணைத்துள்ளோம். 

சமீபத்திய ‘தத்துவ தர்சனா’ இதழ் ஜனவரி 2000, “புத்தாயிரமாண்டில் இந்துமதம்“ என்ற தலைப்பில் அச்சிடப்பட்டுள்ளது. நாங்கள் அதன் முதல் பிரதியுடன் அங்கே வந்து தங்களின் புனித பாதங்களில் சமர்ப்பித்து ஆசிபெற விரும்புகிறோம். இந்த சாது, மூன்று பக்தர்களுடன் திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை , ஜனவரி 6 , 2000 அன்று காலையில், காரில் வர இருக்கிறேன். நாங்கள் உங்கள் தரிசனம் மற்றும் ஆசிக்காக பிரார்த்திக்கிறோம். 

சௌ. நிவேதிதா மற்றும் குடும்பத்தினர், சிரஞ்சீவி விவேக் மற்றும் திருமதி பாரதி தங்கள் நமஸ்காரங்களை உங்களுக்கும், சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவிக்கின்றனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன் 

சாது ரங்கராஜன். 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி.” 

வியாழக்கிழமை , ஜனவரி 6 , 2000 அன்று சாது , விவேக் , ஸ்ரீதர், பார்த்தசாரதி மற்றும் மோகன் போன்றோர் காரில் பயணித்து திருவண்ணாமலைக்கு காலை 10.30 மணிக்கு சென்றடைந்தனர். பகவான் ஆசிரமத்தின் பெரிய ஹாலில் தரிசனத்தை தந்து கொண்டிருந்தார். மா தேவகி பகவானிடம் சாதுவின் வருகையை பற்றி கூறினார். அவர் எங்கள் அனைவரையும் உள்ளே அழைத்தார். சாது மற்றும் பக்தர்கள் தங்கள் நமஸ்காரங்களை அவருக்கு தெரிவித்து ‘தத்துவ தர்சனா’ ஜனவரி 2000 இதழ் பண்டிலை அவரது முன் வைத்தனர். பகவான் அந்த இதழை தனது கைகளில் எடுத்து அதன் உள்ளடக்கம் குறித்து கேட்டார். சாது அதனை விளக்கினார். அவர் சாதுவிடம் பேராசிரியர். கமலம் எழுதிய முதல் கட்டுரையான, “யோகி ராம்சுரத்குமார் – கடவுள்“ என்ற கட்டுரையை படிக்கச் சொன்னார். பின்னர், சாதுவின் தலையங்கமான, “மதங்களின் பாராளுமன்றம், போப்பின் வருகை, மதங்களுக்கு இடையிலான உரையாடல்கள்” என்ற கட்டுரையை படிக்கச் சொன்னார். சாது அந்த தலையங்கத்தை படித்தார். மேலும் தென் ஆப்பரிக்காவின் மதங்களின் பாராளுமன்றத்தில் டிசம்பர் 2 அன்று கலந்து கொள்ள, அதிகாரப்பூர்வமான அழைப்பு, பயண டிக்கெட், மற்றும் விசா பெறுவதற்கான பத்திரங்கள் உரிய நேரத்தில் வராததால்  தன்னால் அதில் கலந்து கொள்ள இயலவில்லை என்ற அறிவிப்பை அந்த இதழில் வெளியிட்டு இருந்ததையும் பகவான் வாசிக்கச் சொன்னார். பகவான் அட்டைப்படத்தில் இருக்கும், சுப திருஷ்டி கணபதி ஓவியம், திரு. பாஸ்கரதாஸ் ஒரு தெய்வீக தூண்டுதல் காரணமாக வரைந்ததை கவனித்தார். சாது, பகவானிடம், அந்தப்படத்தை பாராட்டியும் அதன் குறிப்பீடு குறித்தும் தான் எழுதியுள்ள கட்டுரையை,  இதழில் வெளியிட்டுள்ளது குறித்து கூறினார். பெங்களூர் குருகுல ஆசிரம பணிகளுக்காக திரு. பாஸ்கரதாஸ், ஒரு ஃபியட் காரை கொடுத்ததைப் பற்றியும் சாது பகவானிடம் பகிர்ந்தார். 

சாது பகவானிடம் ஆசியாவின் பெரும் மதங்களின் சர்வதேச மாநாடு, நேபாளின் லும்பினியில், நடைப்பெற்றது குறித்து பகவானிடம் தெரிவித்தார். பகவான் அதனை ஆழ்ந்து ஆர்வத்தோடு கேட்டார். பின்னர் சாது பகவானிடம் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி மற்றும் பாரதமாதா குருகுல ஆசிரம துவக்கவிழா, மற்றும் பெங்களூர் ஆனந்தாஸ்ரம சமிதியில் நடந்த பப்பா ராம்தாஸ் சன்னியாச தின நிகழ்வுகள் குறித்து விவரித்தார். பகவான், ஆனந்தாசிரம பக்தர்கள் பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் “அவர்கள் உனது ஆசிரமத்திற்கு வருவது நன்று“ என்றார். பகவான் சாதுவிடம், அவரோடு வந்த பக்தர்களை அறிமுகப்படுத்துமாறு கூறினார். சாது அதனை செய்தார். பகவான் விவேக் கண்ணாடி அணிந்திருந்தமையால் உடனடியாக அவனை அடையாளம் காணவில்லை. பகவான் விவேக்கை கண்ணாடியை கழட்டுமாறு கூற விவேக் அதனை கழற்றினார்.. பின்னர் யோகி விவேக்கிடம் எவ்வளவு காலமாக நீ கண்ணாடி அணிந்துள்ளாய் என்று கேட்டார். விவேக் கடந்த இரண்டரை வருடங்களாக என்று பதிலளித்தார். பகவான் விவேக்கிடம் அவரது பணி குறித்து கேட்டார். விவேக் தான் ஃபிஷ்னர் என்ற நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறினார். பகவான் விவேக்கிடம் அவனது பணிக்காலம் குறித்து கேட்டார். விவேக் அதனை விளக்கினார். சாது பகவானிடம் விவேக்கிற்கு திருமணம் செய்துவைக்கும் திட்டம் குறித்து கூறினார். பகவான் ஆசீர்வதித்து, “அனைத்தும் நன்றாக நடக்கும்“ என்றார். பகவான் விவேக்கிடம் நீ வெளிநாடு போக விரும்புகிறாயா ? என்று வினவினார். விவேக் வாய்ப்பு ஏற்பட்டால் செல்வேன் என்றார். பகவான் புன்னகைத்தவாறே கூறுகையில், “ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு போகாதே. இந்தியாவில் வேலை செய். அன்னை நாட்டிற்கு சேவை செய். அதுவே போதுமானது. நீ விரும்பினால், உன் தந்தையுடன் நீ தென் ஆப்பிரிக்கா போகலாம்“ என்றார். பின்னர் அவர் சிரித்தவாறே தொடர்ந்தார், “இந்தப்பிச்சைக்காரன் சொல்வதை கேட்காதே. அவன் சிலசமயம் அர்த்தமற்ற எதையேனும் பேசிக்கொண்டிருப்பான்.” என்றார். பின்னர் நகைச்சுவையாக, “ஆனால், உன் தந்தையை பின்பற்று“ என்றார். யோகி விவேக்கிடம் நீ எப்போது என்னை சந்தித்தாய் ? என வினவினார். 1986 ல் என்று விவேக் பதில் அளித்தார். யோகி விவேக்கிடம் வயது என்னவென்று கேட்க, விவேக் “ இருபத்தெட்டு” என்றான். சாது, விவேக்கிற்கு பதினான்கு வயது இருக்கும்போதே முதல்முறையாக அவன் பகவானின் தரிசனம் பெற்றதாக கூறினார். 

சாது பகவானிடம்  நிவேதிதா கர்ப்பமாக இருப்பதைப்பற்றி தெரிவித்தார். சாது அவளது பாதுகாப்பான பிரசவத்திற்கு ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் ஸ்ரீதரின் மகள் திருமணம் பற்றி கூறினார். பகவான் மணமக்களின் பெயர்களை கேட்டு அவர்களை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காக ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வர இருக்கும் பக்தர்கள் பற்றி குறிப்பிட்டார். பகவான் அவர்களின் திருவண்ணாமலை வருகையை முன் கூட்டியே தெரிவிக்குமாறு கூறினார். சாது பகவானை ‘தத்துவ தர்சனா’வில் கையொப்பம் இட்டு தருமாறு கூறினார். பகவான் அவரிடம், “ இப்போது இல்லை நீ இங்கேயே இரு” என்றார். யோகி ஆசிரமத்தின் அலுவலர்களிடம் சாதுவின் உணவிற்கும் அவர் தங்குவதற்கான இடத்திற்கும் ஏற்பாடு செய்யுமாறு சொன்னார். சுதாமா செல்லும் முன் பகவான், ”இந்தப்பிச்சைக்காரன் உடல்நிலை நன்றாக இல்லை. அவன் மருந்துகளால் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்“ என்றார் சாது பகவானிடம் நாங்கள் உங்களின் உடல்நலனுக்காக பிரார்த்திக்கிறோம் என்றார். பகவான், “என் தந்தை இந்தப்பிச்சைக்காரனை இந்த உடலில் அவன் விரும்பும் வரை வைத்திருப்பான். இந்தப்பிச்சைக்காரனின் வேலை முடிந்துவிட்டது என்று அவன் நினைத்தால் அவர் அவனை அழைத்துக்கொள்வார்“ என்றார்.

சுதாமாவிற்கு பகவான் மதியம் ஓய்வெடுக்க சென்றார். சாது மற்றும் அவரது குழுவினர் உணவு கூடத்தில் மதிய உணவை எடுத்துக்கொண்டனர். பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு சாதுவிற்கு வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் விஷ்வேஷ் குடிலில் ஓய்வெடுத்தனர். பகவான் மீண்டும் ஆசிரமத்திற்கு மாலை 4 மணிக்கு வந்தார். அவர் சாதுவையும், விவேக்கையும் அழைத்து, சாதுவிடம் ‘தத்துவ தர்சனா’ பிரதிகளை எடுக்குமாறு கூறி அவைகளில் தனது கையொப்பத்தை இட்டார். மேலும் அவர் இரண்டு பிரதிகளில் கையொப்பம் இட்டு மா தேவகி மற்றும் விஜயலட்சுமி ஆகியோரிடம் தந்தார். பின்னர் அவர் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து வழக்கம்போல் ஆசீர்வதித்தார். பகவான் சாதுவிடம் வேறு ஏதேனும் கேட்பதற்கு இருக்கிறதா என வினவினார். சாது பகவானிடம் தனது ஒரே பிரார்த்தனை பெங்களூரில் துவக்கப்பட்ட பணிகள் வளரவேண்டும் என்றார். பகவான், “நீ எனது தந்தையின் பணியை செய்கிறாய், அந்தப்பணி வேகமாய் வளரும்“ என்றார். சாது தான் அவரது எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ப வளர வேண்டும் என்றார். பகவான், “நிச்சயமாக. என் தந்தையின் ஆசி உண்டு“ என்றதோடு பகவான் சாதுவின் பெங்களூர் நோக்கம் நிறைவேற ஆசி வழங்கினார். சாது மற்றும் குழுவினர் பகவானிடம் ஆசியைப் பெற்று சென்னைக்கு திரும்பினார். 

யோகிராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சார்பில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு, தேசிய இளைஞர் தின விழா, மற்றும் யோகி ராம்சுரத்குமார் சூழல் கேடயங்கள் மற்றும் பரிசுகளை நகர மாணவர்களுக்கு வழங்க விவேகானந்தர் குறித்த பேச்சுப் போட்டி, கன்னிகாபரமேஸ்வரி கலைக்கல்லூரியில் ஜனவரி 9 ல் 2000 ல் நடைப்பெற்றது. நகர பள்ளிகளிலிருந்து 100 மாணவர்கள் அதில் பங்கு பெற்றனர். பகவானின் பக்தர்கள், டாக்டர் பவானி, டாக்டர் E.R. நாராயணன், திரு. சங்கர், திருமதி லஷ்மி, திரு பிரசாந்த் மற்றும் திரு. சிவசுப்பிரமணியம் நடுவர்களாக இருந்தனர். திரு. மாதவன் மற்றும் திரு. பிரசாத் நிகழ்ச்சியை நடத்தினர். தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இயக்குனர், திரு. அஸ்வினிகுமார், சிறப்பு விருந்தினராக இருந்து, பரிசுகளை வழங்கினார். டாக்டர் பாலாம்பாள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்தினார். சாது, யோகி ராம்சுரத்குமார் குறித்தும் இளைஞர்களின் மீது அவர் உருவாக்கிய தாக்கம் குறித்தும் பேசினார். 

தென் ஆப்பிரிக்காவில் இருந்து, திரு. சோம பிள்ளை, அவரது தாய், கிருஷ்ணவேணி, மற்றும் சௌ. ப்ரேமா, புதன்கிழமை ஜனவரி – 12 அன்று வருகை தந்தனர். திருமதி பாரதி அவர்களோடு இணைந்து திருவண்ணாமலைக்கு சென்றனர். சாது ஆசிரமத்திற்கு தொலைபேசி மூலம் அழைத்து பகவானிடம் தகவலை தெரிவிக்குமாறு கூறினார். அவர்கள் பகவானுடன் இரண்டு மணி நேரம் செலவழித்து ஆசிரமத்தில் தங்கி அடுத்தநாள் திரும்பினார். வெள்ளிக்கிழமையன்று சாது மற்றும் பாரதி பெங்களூருக்கு ரயிலில் சென்றனர். திரு. சோமா மற்றும் அவரது அன்னை அங்கே பஸ்ஸில் வந்து சேர்ந்தனர். அவர்களை பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் வரவேற்றனர். 

யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் மையத்தின் நூலகம் பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் நிறுவப்பட்டது. அதில் சென்னையிலிருந்து அனைத்து புத்தகங்களும், இதழ்களும் வந்து சேர்ந்தன. ஹௌரா விலிருந்து வந்த சுவாமி முக்யானந்தா, பேலூர் ராமகிருஷ்ண மடத்தின் பண்பாட்டு கல்வி நிறுவனத்தின் (Ramakrishna Mission Institute of Culture) தலைவரை, வரவேற்க, சாது சென்னைக்கு வியாழக்கிழமை பிப்ரவரி 3 ஆம் தேதி, வந்திருந்தார். சாது மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று சுவாமியை சந்தித்தார். சுவாமி சாதுவின் நூல்களின் முழுமையான தொகுப்பான, ”விக்ஞான பாரதி– பகுதி – I – இந்துமதம் வேதகாலம் முதல் நவீன காலம் வரை“ என்ற நூலுக்கு முன்னுரை வழங்க ஒப்புக்கொண்டார். திங்கள்கிழமை , பிப்ரவரி – 7 ஆம் தேதி அன்று சாது மற்றும் பாரதி சென்னை , மைலாப்பூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் சர்வ மத கோயில் திறப்பு விழா மற்றும் மத நல்லிக்கணத்திற்கான மாநாட்டின்  துவக்கவிழாவில் கலந்து கொண்டனர். அங்கே சுவாமி ரங்கநாதனந்தா உரையாற்றினார். மாநாட்டிற்கு பிறகு சாது மத நல்லிணக்க மாநாட்டில் ஆற்காட்டின் இளவரசரான திரு. மொஹமத் அலியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அலி ஹிந்துக்கள் பாபர் மசூதியை இடித்துவிட்டதாக கூற, சாது பாபர்தான் இன்றைக்கும் வழிபாட்டில் இருக்கும் ராமர் கோயிலின் ஒரு பகுதியை அழித்துவிட்டு அதில் இந்துக்கள் வராமல் இருக்க இஸ்லாமிய கட்டிடத்தை கட்டியதாகவும், அதனை மீண்டும் இந்துக்கள் கைப்பற்றியதாகவும், கூறினார். அது தவறான முறையில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் அதனை இந்துக்கள் இடித்தார்கள், அங்கே மசூதி ஒருபோதும் இருந்ததில்லை, என்றார். 

சாது மற்றும் பாரதி பெங்களூருக்கு வியாழக்கிழமை, பிப்ரவரி 10  அன்று திரும்பினர். ஒரு வாரம் தங்கியப்பின்னர் , சாது சென்னைக்கு பிப்ரவரி 18 அன்று திரும்பினார். திருமதி ரீட்டா மற்றும் தென்னாப்பிரிக்கா சத்யசாய் அமைப்பின் இரண்டு பக்தர்கள் சாதுவை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று  சந்தித்தனர். சாது பெங்களூருக்கு திங்கள்கிழமை பிப்ரவரி 22 அன்று பயணித்தார். சாது இன்னொரு பயணத்தை மார்ச் 4 முதல் 8 வரை சென்னைக்கு மேற்கொண்டார். இந்த கால இடைவெளியில் பகவானின் பக்தர்கள் சாதுவை சந்தித்து ராமநாம நோட்டுக்களையும், ஜப எண்ணிக்கைகளையும் தந்தனர். ஓசூரில் இருக்கும். பகவானின் கோயிலுக்கு வருகை தர, பகவானின் பக்தர்களின் அழைப்பும் சாதுவிற்கு வந்தது.

திரு. அனில் ஸுட்ஷி, பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பக்தர், சாதுவிற்கு ஹைதராபாத் பயணத்தை ஏற்பாடு செய்தார். திரு. அனில் மற்றும்  திரு. விவேக் ஏற்கனவே அங்கே இருந்தனர். சாதுவை அவர்கள் சனிக்கிழமை மார்ச் – 18 அன்று ஹைதராபாத் புகைவண்டி நிலையத்தில் வரவேற்றனர். திருமதி ரீட்டா ஸுட்ஷி மற்றும் குடும்பத்தினர் அவர்களது இல்லத்தில் வரவேற்றனர். திருமதி பாரதியும் அங்கே விவேக்குடன் வந்து சேர்ந்திருந்தாள். ஒரு பிரம்மாண்ட காயத்ரி ஹோமம் மற்றும் சத்சங்கம் ஸுட்ஷி அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது. அதில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமதி ரத்தின குமாரி மற்றும் ஹைதராபாதில் உள்ள  அவரது கணவர், பாரதியின் மருமகளான ஸுசித்ரா மற்றும். ரீட்டா ஸுட்ஷியின் சக பணியாளர்களும் கலந்து கொண்டனர். சாது பகவான் குறித்தும் உலக ராம்நாம் இயக்கம் குறித்தும் உரையாற்றினார். சாது பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமை மார்ச் 21 அன்று திரும்பினார். 

சாது, மார்ச் 23, 2000 அன்று, பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி முக்யானந்தா மற்றும் பெங்களூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ஹர்ஷானந்தா ஆகியோரை பெங்களூரில்  சந்தித்தார். சுவாமி ஷர்ஷானந்தா மற்றும் சுவாமி ஜோதிர்மயானந்தா போன்றோர், சென்னையில், திரு. மொஹமத் அலியின் குற்றசாட்டுக்கு எதிரான சாதுவின் விமர்சனத்தை பிரதி எடுத்து பலருக்கு வினியோகம் செய்தனர் என்ற சேதியை சாது அறிந்தார். சுவாமி முக்யானந்தா, பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தாலஜிகல் ஆராய்ச்சி மையத்திற்கு ஏப்ரல் – 2 ஞாயிற்றுக்கிழமையன்று வருவதற்கு ஒப்புக்கொண்டார். வெள்ளிக்கிழமை  மார்ச் – 24 அன்று சாதுஜி திரு. அசோக் மட்டூ அவர்களோடு ஓசூருக்கு அருகே உள்ள அனுசோனிக்கு சென்று, சுவாமி விரஜேஸ்வர் அவர்களை ஹம்ஸாஸ்ரமத்தில் சந்தித்தனர். சாது தனது பகவான் யோகி ராம்சுரத்குமார் மற்றும் அன்னை மாயம்மா குறித்த அனுபவங்களை சுவாமியோடு பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் ஓசூர் யோகி ராம்சுரத்குமார் பஜன் மந்திருக்கு வந்தார். அங்கிருந்த பகவானின் பக்தர்கள் அவரை வரவேற்றனர். 29 ஆம் தேதி மார்ச் 2000 அன்று சாது, பகவானுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்:

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் அளவற்ற ஆசி மற்றும் கருணையால் எங்களது குருகுல ஆசிரமத்தின் தாழ்மையான பணி வேகமாக முன்னேறிவருகிறது. இந்த சாது வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரு வாரம் படுத்த படுக்கையாக இருந்தான். தங்கள் கருணையால் அவன் இப்போது நன்றாக உள்ளான். 

பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தலைவரான பூஜ்யபாத சுவாமி முக்யானந்த்ஜி மஹராஜ் நமது குருகுல ஆசிரமத்திற்கு ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 2 , 2000 அன்று வந்து பகவானின் பக்தர்களை சந்தித்து, சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார். இதுகுறித்த அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம். நாங்கள் பகவானின் ஆசி வேண்டுகிறோம். சுவாமிகள் கல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன்  இன்ஸ்டிட்யூட் ஆஃப் கல்ச்சரின் தலைவர், மற்றும் மிஷனின் துறவிகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளவர்.

யோகி ராம்சுரத்குமார் இந்தாலஜிகல் ஆராய்ச்சி மையத்தின் பெருமைமிக்க முதல் வெளியீடான, ”விக்ஞான பாரதி – பகுதி – I – இந்துமதம் வேதகாலம் முதல் நவீன காலம் வரை“ என்ற, இந்த சாதுவின் நூலுக்கு, முன்னுரை எழுதியுள்ளார். இத்துடன் அவர் வழங்கிய முன்னுரையின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ‘விவேகானந்தா கேந்திரா பத்தரிக்கா’வில் வெளியான, “புத்தாயிரமாண்டில் நித்திய மற்றும் உலகளாவிய மனித மதம்” (Eternal and Universal Religion of Man in the New Millennium) என்ற, இந்த சாதுவின் கட்டுரையும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கட்டுரை, டாக்டர். சம்பூரண் சிங் என்பவர் ஐ.நா. சபையில் சமர்ப்பிக்க இருக்கும் ஒரு விசேஷ தொகுப்பிலும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சாது மார்ச் – 16 ஆம் தேதி, ஓசூர் யோகி ராம்சுரத்குமார் பஜன் மந்திர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது.  எங்களின் கார் இறுதி நேரத்தில் பழுதாகிய காரணத்தால் எங்களால் அங்கு சென்று சேர இயலவில்லை. இருப்பினும் நாங்கள் ஓசூருக்கு 25-3-2000 அன்று, காஷ்மீரத்து பக்தரான திரு. மட்டூ அவர்களுடன், பஜன் மந்திருக்கு சென்று தரிசனம் செய்தோம். திரு. ஸ்வர்ணநாதன் மற்றும் குடும்பத்தினர் எங்களை வரவேற்றனர். 

நாங்கள் ஓசூருக்கு அருகே உள்ள அனுசோனி ஹம்ஸாஸ்ரமம் சென்றோம். அங்கே சுவாமி விரஜேஸ்வர் எங்களை வரவேற்றார். அவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பி.எச்.டி பெற்றவர். மேலும் அவர் IBM ல் மூன்றாம் தலைமுறை கணிணிகளான IBM – 360  தயாரிப்பதின் பொறுப்பாளராக இருந்தவர்.. அவர் தனது  பணியை அமெரிக்காவில் விட்டுவிட்டு,  ரிஷிகேஷ்  சிவானந்தா ஆசிரமத்தின் சுவாமி வித்யானந்தா அவர்களிடம் சன்னியாசம் பெற்று, அனுசோனியில் தங்கியுள்ளார். 72 வயதான அவர் பகவானை தரிசிக்க வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தினார். நாங்கள் பகவானின் தரிசனத்தை அவர் பெற பிரார்த்திக்கிறோம். 

நாங்கள் திரு. அனில் ஸுட்ஷி உடன் ஹைதராபாத்தில் 18 முதல் 20 மார்ச் வரை இருந்தோம். அவருக்கு இரண்டு வாய்ப்புகள் டெல்லி மற்றும் அமெரிக்காவில் இருந்து கிடைத்துள்ளன. இருப்பினும் அவர் முடிவு எதையும் எடுக்கவில்லை. அவர் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு வந்து தங்கள் ஆசியைப்பெற்று பின்னர் ஹைதராபாத்தை விட்டு செல்ல முடிவு எடுத்திருக்கிறார். 

சௌ. நிவேதிதா இப்பொழுது ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறாள். அவள் மற்றும் அவளது குடும்பத்தினர் பகவானின் ஆசியை வேண்டுகின்றனர். விவேக்கிற்கு தகுந்த மணப்பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறோம் பாரதி திருமதி தங்களது ஆசியை வேண்டுகிறாள்.

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், தங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். 

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

பூஜ்ய சுவாமி முக்யானந்த்ஜி மஹராஜ், ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி மற்றும் ஹவுரா விலுள்ள பேலூர் மடத்தில் பிரம்மச்சாரிகளுக்கு பயிற்சி அளிப்பவர், மற்றும் சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலரும் ஆனவர், பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தாலஜிகல் ஆராய்ச்சி மையத்திற்கு ஏப்ரல் 2 அன்று வந்து அங்கே கூடியிருந்தவர்களிடம் உரையாற்றினார். சுவாமி, வேத காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து வந்துள்ள பாரதத்தின் பெருமை வாய்ந்த பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை  பாரதத்திற்கு உள்ளும்  வெளிநாடுகளிலும் பரப்புவதற்கு, சகோதரி நிவேதிதா அகாடமி தனது கேந்திரங்கள் மூலம் மேற்கொண்டுள்ள பணிகளை வெகுவாக பாராட்டினார். அகாடமி கடந்த இருபது வருடங்களாக நடத்தி வந்துள்ள, “விக்ஞான பாரதி — ஹிந்து சிந்தனை மற்றும் கலாச்சார பாடத்திட்ட”த்தில் சாது பேரா. ரங்கராஜன் வழங்கியுள்ள பாடங்கள், நூற்றாண்டுகளாக வந்துள்ள பாரதப் பண்பாடு மற்றும் தத்துவ சிந்தனையை தெளிவாகவும் சுருக்கமாகவும் படம் பிடித்துக் காட்டுகின்றன என்றும் விஞ்ஞான பாரதி என்ற தலைப்பில் மூன்று பாகங்களாக நூல்வடிவில் வெளிவர இருக்கின்றது என்றும் அவர் கூறினார். முதல் பகுதி வெளிவர தயாராக உள்ளது என்றும் தானே அதற்கு முன்னுரை எழுதி உள்ளதாகவும் சுவாமிகள் கூறினார். பாரதத்தின் பெருமை வாய்ந்த பண்பாடு மற்றும் கலாசாரம் மற்றும் தத்துவ சிந்தனையின் அடிப்படைக் கருத்துக்கள் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறி, நமது புராதன ரிஷி முனிவர்கள் வழங்கியுள்ள வாழ்க்கை மூல்யங்கள் நூற்றாண்டு காலமாக எப்படி பாரதத்தில் மட்டுமல்லாது உலகெங்கும் மனித இனத்திற்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்பது பற்றி அவர் பேசினார்.

சாது. பேராசிரியர். V. ரங்கராஜன் சுவாமிஜியின் ஆசிரம வருகைக்கும், அவரது உத்வேகம் தரும் விக்ஞான பாரதி முன்னுரைக்கும் நன்றி தெரிவித்தார். கடந்த டிசம்பரில் ஆசிரமம் திறக்கப்பட்ட பிறகு, சுவாமிஜி தனது ஆசிரமத்திற்கு வருகை தந்த முதல் துறவி ஆவர் என்றார். மேலும். சாது, பாரதமாதா குருகுல ஆசிரமம், யோகி ராம்சுரத்குமார் இந்தாலஜிகல் ஆராய்ச்சி மையம் மற்றும் நூல் நிலையத்தை ஏற்படுத்தி, பாரதத்திற்கு உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் வருகின்ற இளைஞர்களுக்கு பாரதப் பண்பாடு பற்றிய பயிற்சி அளித்து, அவர்களை பாரத அன்னையின் ஆன்மீக தொண்டர்களாக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது பற்றி குறிப்பிட்டார். “வாழ்க்கை மூல்யங்களை அடிப்படையாகக்கொண்ட உலகளாவிய கல்வி இயக்கத்திற்கு” (Global Organization for Value Oriented Education) ஆசிரமம் கேந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய சாது, பெரும் துறவியர், சமயத்தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலின் கீழ், சன்மார்க மற்றும் ஆன்மீக மூல்யங்கள் உலகெங்குமுள்ள இளைஞர்களுக்கு போதிக்க திட்ட்மிடப்பட்டுள்ளது குறித்தும் கூறினார். பெங்களூரு ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்தா சாதனா கேந்திரத்தின் நிறுவனர் சுவாமி  சந்திரேசானந்தர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஒரு பிரம்மாண்ட ராமநவமி விழா அனுசோனி ஹம்ஸாஸ்ரமத்தில் ஏப்ரல் 12 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சாது ஆசிரமத்திற்கு மீண்டும் சென்று விழாவை சிறப்பித்தார். சுவாமி விரஜேஸ்வர் சாதுவை வரவேற்று அறிமுகப்படுத்தினார். சாது ராமநாம ஜெபத்தை முன் நடத்தினார். அகில உலக ராமநாம இயக்கம் குறித்து பேசினார். சாது பெங்களூர் திரும்பும் முன் ஓசூர் யோகி ராம்சுரத்குமார் பஜன் மண்டலிக்கும் சென்றார். திரு ஸ்வர்ண நாதன், அவரது குடும்பத்தினர், மற்றும்  பகவானின் பக்தர்கள் சாதுவை வரவேற்றனர். அங்கே சாது கோயிலில் பகவானுக்கு ஆரத்தி எடுத்து பிரசாதங்களை வழங்கினார். ராமநவமி விழா தமிழ் புத்தாண்டு நாளில், ஏப்ரல் 13 , 2000 அன்று பாரதமாதா குருகுல ஆசிரமத்தில் கொண்டாடப்பட்டது. 1977 ஆம் ஆண்டு சகோதரி நிவேதிதா அகாடமி தமிழ் புத்தாண்டு நாளில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, அகண்ட ராமநாம ஜபம் நடைப்பெற்றது. மாலை, நிறைவு விழாவில், ராம நாமம் தாரக மந்திரம். “ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம், என்பது பற்றி சாது உரை நிகழ்த்தினார். ஏப்ரல் 23 ஞாயிறு அன்று, பெங்களூரில் ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்தா சாதனா கேந்திரா நடத்திய ஆன்மீக புத்துணர்வு முகாமில் சாது கலந்து கொண்டார். சுவாமி சந்திரேசானந்தா, அந்த கேந்திரத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், சாதுவை வரவேற்றதோடு சாதுவிடம் பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் குறித்து பேசுமாறு கூறினார். சாது சுவாமி விவேகானந்தர் மற்றும் சகோதரி நிவேதிதை பாரத அன்னையை மீண்டும் உலக குருவாக அரவணையில் அமர்த்த கனவு கண்டது குறித்து பேசினார்.

சுவாமி விரஜேஸ்வர், அனுசோனி ஹம்ஸாஸ்ரமத்தின் தலைவர், ஏப்ரல். 24 , 2000 அன்று, பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு விஜயம் செய்து தனது கருணையை பொழிந்தார். கர்நாடகத்தின் உடுப்பியில் பிறந்த அந்த சுவாமிகள், அமெரிக்காவின் நியூ ஜெர்சி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எச்.டி பெற்று, புகழ்பெற்ற IBM  நிறுவனத்தில் மின்னணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவில் விஞ்ஞானியாக பணியாற்றி, IBM ல் மூன்றாம் தலைமுறை கணிணிகளான IBM – 360  தயாரிப்பதின் பொறுப்பாளராக இருந்தவர். அவர் தனது  பணியை அமெரிக்காவில் விட்டுவிட்டு,  ரிஷிகேஷ்  சிவானந்தா ஆசிரமத்தின் சுவாமி வித்யானந்தா அவர்களிடம் சன்னியாசம் பெற்று, 1992 முதல் இவர் பெங்களூர் பன்னேர்கட்டா சாலையில் உள்ள ஒரு குகை கோயிலில் தங்கியிருந்தார். ஜூன் 1999 முதல் ஹம்ஸாஸ்ரமத்திற்கு மாறினார். சுவாமிஜி, சமீபத்தில் மஹாசமாதி ஆன தனது குருவிற்காக, ரிஷிகேஷ் சென்று விமானம் மூலம் பெங்களூர் திரும்பியவுடன், பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு வந்து சில மணி நேரங்கள் சாது ரங்கராஜன் உடன் செலவழித்து விட்டு அனுசோனிக்கு கிளம்பினார். 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s