Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/
ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்
ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்
அத்தியாயம் 3.24
நேபாள் பயணம், யோகி ஜெயந்தி மற்றும் பாரதமாதா குருகுல ஆசிரமத்தின் துவக்கம்
சென்னையை அடைந்தவுடன் சாது, பாரதமாதா ஆசிரமத்தின் கட்டுமான பணிகளை கவனிக்க, உடனடியாக பெங்களூருக்கு சென்றார். சாதுவும், பாரதியும் பெங்களூருக்கு ஆகஸ்ட் – 27, 1999, வெள்ளியன்று சென்றடைந்தனர். தென் ஆப்பரிக்காவில் இருந்து வந்திருந்த திரு. ஓரி மற்றும் திரு. நாயக்கார் சாதுவோடு இணைந்தனர். அவர்கள் அனைவரும் கட்டுமானத்தின் வளர்ச்சியை காண்பதற்கு பணி நடக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். சாது சென்னைக்கு ஆகஸ்ட் -31 அன்று திரும்பினார். செப்டம்பர் -5 ஞாயிறன்று. கோயம்பேட்டில் திருமதி. லலிதா என்பவரின் இல்லத்தில் சாது ஒரு சத்சங்கத்தில் உரையாற்றினார். சாது, பகவானுக்கு, தான் பாதுகாப்பாக திரும்பி வந்ததையும், தனது திருவண்ணாமலை வரவேண்டும் என்ற ஆவலையும், ஃபேக்ஸ் மூலம், தெரிவித்தார். செவ்வாய்க்கிழமையன்று சாதுவை திரு. அஸ்வினிகுமார், ரேடியோ எஃப்.எம்.-ற்காக பேட்டி எடுத்தார். சாது அதில் “குடும்ப மதிப்புகள்“ குறித்து பேசினார்.
சாதுஜி மற்றும் திருமதி பாரதி, வியாழக்கிழமை செப்டம்பர் -9 , 1999 அன்று, திரு. ஸ்ரீதர், சௌ. கௌசல்யா, திரு. மோகன் மற்றும் திரு. சந்திரசேகர் ஆகிய பக்தர்களுடன், திருவண்ணாமலைக்கு சென்று, பகவானின் இல்லத்தை அடைந்தனர். பகவான் சாதுவை வரவேற்று தனது கருணை மற்றும் ஆசியை பொழிந்தார். சாது ஜஸ்டிஸ் திரு. T.S. அருணாச்சலம் அவர்களை சந்தித்து ஆசிரமத்தின் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தார். பின்னர் டிரஸ்ட் உறுப்பினர்களின் கூட்டம் ஒன்று பகவான் முன்னிலையில் நடந்தது. அதில் சௌ. விஜயலட்சுமி மற்றும் மா தேவகி கலந்து கொண்டனர். பகவான் அருணாச்சலத்திடம் சாதுவிடம் அனைத்து ஆசிரமத்தின் விவகாரங்களை விவாதிக்குமாறு கூறினார். அருணாச்சலம் ஏற்கனவே அது நடந்துவிட்டது என்றார். பின்னர் பகவான் சாதுவிடம் அவரது தென் ஆப்பரிக்க பயணத்தின் விவரங்களை பரிமாறும்படி கூறினார். சாது தனது வெற்றிகரமான தென் ஆப்பிரிக்கா பயணம் குறித்து விளக்கி, பின்னர், இந்த ஆண்டு இறுதியில், அங்கு நடைபெற இருக்கும் சர்வ சமய பாராளுமன்றத்தில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறித்தும், மகாகவி பாரதியார் பற்றிய ஒரு நூலை வெளியிடுவதற்கு தான் அழைக்கப்பட்டுள்ளது குறித்தும் கூறினார். தென்னாப்பிரிக்கா பயணம் குறித்து வெளியிடப்பட்ட “ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனல்” செய்தி அறிக்கை சாது பகவானிடம் சமர்ப்பித்தார். பகவான் சாதுவிடம் அந்த செய்தி அறிக்கை, மற்றும், சாது மற்றும் பாரதமாதா ஆசிரமம் குறித்த ஒரு துண்டுப்பிரசுரம், ஆகியவற்றை படிக்குமாறு கூறினார். சாது அதனை வாசிக்க, பகவான் அதனை ஆசீர்வதித்தார். பகவான் கூறுகையில், “ ரங்கராஜா நீ எனது தந்தைக்கு மிகப்பெரிய காரியங்களை செய்திருக்கிறாய். நீ எங்கிருந்தாலும் எனது தந்தையின் ஆசி அங்கிருக்கும்” என்றார். யோகி சகோதரி நிவேதிதா அகாடமி தென் ஆப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானாவில் துவக்கப்பட்டதை ஆர்வத்தோடு கேட்டார். யோகி தென் ஆப்பிரிக்காவில் உள்ள மாநிலங்களைப்பற்றி கேட்டார். சாது பகவானிடம் அவைகளை பட்டியலிட்டார். தென்னாப்பிரிக்காவின் வடமேற்கு மாநிலத்தின் பிரதமராக, மாண்புமிகு திரு போபோ மொளேஃபே பதவியேற்றபோது, அந்த விழாவில், ஹிந்து சமுதாயத்தின் சார்பில், அவரை ஆசீர்வதித்து பேசுவதற்கு, சாது அழைக்கப் பட்டது குறித்து, பகவானிடம் தெரிவித்தார் பகவான் சாதுவிடம் திரு.நெல்சன் மண்டேலா அவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்த ராபின் தீவு குறித்து கேட்டார். சாது உலக இந்து மாநாட்டின் போது திரு. மண்டேலா அவர்களை சந்தித்ததையும், அவர் தான் சிறையில் அமைதியாக இருக்க முடிந்தது தான் விடாது பகவத் கீதை பாராயணம் செய்து கொண்டிருந்ததால்தான் என்று குறிப்பிட்டதையும் கூறினார். பகவான், அதற்குக் காரணம், அவர் மீது மகாத்மா காந்தியின் தாக்கம் இருந்ததுதான் என்று கூறினார்
சாது பகவானிடம் பாரதமாதா ஆசிரமத்தின் கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது குறித்து கூறினார். பாரத அன்னையின் பிரசாரகர்களை உருவாக்கும் திட்டத்தைப் பற்றியும் விளக்கினார். மேலும் பகவானிடம், திருமதி. பாரதி, விவேக்கின் திருமணத்திற்குப்பின், பெங்களூருக்கு சென்று ஆசிரம பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார். பகவான் சாதுவிடம் பாரதி மற்றும் பிற சென்னை பக்தர்களை தன் அருகே அழைக்குமாறு கூறி, பின்னர் அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். பகவான் விவேக்கின் திருமணத்திற்கும் ஆசி வழங்கினார். சாது பகவானிடம் தென் ஆப்பிரிக்கா பக்தர்களின் பிரார்த்தனைகள் பற்றியும் கூறினார். திருமதி. பிரமிளா மற்றும் திருமதி. சரோஜினி அவர்களது ஆரோக்கியத்திற்காக ஆசியை வேண்டியதை கூறினார். பகவான் அவர்களது படங்களை ஆல்பத்தில் பார்த்து ஆசி வழங்கினார். அனைவரிடமும் விடைப்பெற்று பகவான் சுதாமாவிற்கு சென்றார். நாங்கள் உணவு கூடத்திற்கு சென்றோம். அங்கே பிரார்த்தனைகள் தொடர்ந்தன. பகவானுக்காக வைக்கப்பட்டிருந்த உணவு சாதுவிற்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அங்கே சாது, திரு. அருணாச்சலம், திரு. சங்கர்ராஜூலு, திரு. ரங்கமணி ஐ.ஏ.எஸ். மற்றும் பிறரிடம் தென் ஆப்பிரிக்கா ஆல்பத்தை காட்டி பேசிவிட்டு பின்னர் சென்னைக்கு திரும்பினார்.
சாதுவும், பாரதியும் மீண்டும் பெங்களூருக்கு செப்டம்பர் 11 அன்று சென்றனர். அங்கே, அடுத்த நாள், அவர்கள் ஆசிரமத்தின் இறுதி வடிவத்தினை கண்டனர். செப்டம்பர் -16 , 1999 வியாழன் அன்று, பாரதமாதா குருகுல ஆசிரமத்தின் கிரகப்பிரவேசம், வாஸ்து பூஜை, நவக்ரஹ ஹோமம் இன்னும் பிறவற்றுடன் நடைப்பெற்றது. அவைகளை, ஸ்ரீனிவாசா நகரின். ஸ்ரீனிவாசா கோயிலினை சேர்ந்த திரு. A.S. சம்பத் பட்டர். நடத்திக் கொடுத்தார். பல பக்தர்களும், சாதுவின் உறவினர்களும் அதில் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை சாது சென்னைக்கு பாரதியோடு திரும்பினார்.
செப்டம்பர் – 24 , வெள்ளிக்கிழமையன்று திரு. பாஸ்கர்தாஸ் மற்றும் திருமதி. சித்ரா, மற்றும் பகவானின் பக்தர்கள், சாது மற்றும் பாரதியை, சென்னை வளசரவாக்கத்தில், அவர்களது இல்லம் மற்றும் அலுவலகமான “சில்ப ஸ்ரீ”யில் வரவேற்றனர். திரு பாஸ்கரதாஸ் அவர்கள் ஒரு தெய்வீக அனுபவத்தில் கண்ட உருவத்தை “சுப திருஷ்டி விநாயகர்” என்ற ஒரு சிற்பமாக வடித்திருந்தார். அதற்கு சாது ஒரு சிறப்பு பூஜையை நடத்தினார். அக்டோபர் 11 திங்கள்கிழமையன்று சாதுவை, தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த, திருமதி. சரோஜினி முனுசாமி அவர்கள் சந்தித்தார். அந்த சந்திப்பில் தென் ஆப்பிரிக்காவின் மதங்களின் பார்லிமெண்ட்டில் சாது கலந்து கொள்ள அங்கு செல்வது பற்றி விவாதிக்கப்பட்டது. அக்டோபர் – 13 புதன் அன்று, சாது, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச தலைவர், திரு. அசோக் சிங்கல் அவர்களை, ஹோட்டல் காஞ்சியில், ஒரு வி.ஹெச்.பி. நிகழ்ச்சியில் சந்தித்தார். அவர் சாதுவிடம் அவரது தென் ஆப்பிரிக்கா பயணம் குறித்து விசாரித்தார். மேலும் நேபாளின் லும்பினியில் அடுத்தமாதம் நடக்க இருக்கும் ஆசியாவின் பெரு மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அவர் சாதுவை அழைத்தார். அடுத்தநாள் அன்று சாதுவை சுவாமி வன்னிய அடிகள் சந்தித்தார். அக்டோபர் 22 , 1999 வெள்ளிக்கிழமை அன்று சாதுவிற்கு, தென்ஆப்பரிக்கா மற்றும் பிற இடங்களிலிருந்து பக்தர்கள், பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அக்டோபர் 29 வெள்ளி அன்று, சாது, விஸ்வ ஹிந்து பரிஷத்தில் இருந்து ஒரு அழைப்பிதழை, லும்பினிக்கு செல்ல பெற்றார். சாது பகவானுக்கு ஃபேக்ஸ் கடிதம் மூலம், அடுத்தநாள் திருவண்ணாமலைக்கு வருவதாகவும், தனது நேபாள் பயணம் குறித்தும், தெரிவித்தார்
சாது, ஸ்ரீதர், மோகன், பார்த்தசாரதி மற்றும் கண்ணன் ஆகிய பக்தர்களுடன், திருவண்ணாமலைக்கு அக்டோபர் 30, 1999 சனிக்கிழமையன்று சென்றார். கிருஷ்ணமூர்த்தி, லலிதா மற்றும் குடும்பத்தினர் இன்னொரு காரில் சாதுவை பின்தொடர்ந்தனர். நாங்கள் பகவானின் இல்லத்தை முற்பகலில் அடைந்தோம். ஜஸ்டிஸ் அருணாச்சலம் மற்றும் சங்கர்ராஜூலு சாதுவை வரவேற்றனர். பகவான் சாதுவை காலை 11.15 மணிக்கு அழைத்து தனதருகே பிரதான கட்டிட வாயிலுக்கு முன் அமரவைத்தார். சாதுவிடம் “உன்னோடு வந்துள்ள பக்தர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்துள்ளவர்களா?” என்று வினவினார். சாது தன்னோடு வந்துள்ளவர்கள் ராம்நாம் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடும் தொண்டர்கள் என்றும், லூகாஸ் – டி.வி.எஸ் -ன் பணியாளர்கள் என்றும் குறிப்பிட்டார். யோகி அவர்களின் பெயர்களை கேட்டார். அவர் திரு. R.K. மூர்த்தி அவர்களின் பெயரை நினைவு கொள்ள முயன்றார். பின்னர் அனைவரையும் பகவான் ஆசீர்வதித்தார். சாது, பகவானிடம், நோபாளின் லும்பினியில் நடைபெற இருக்கும், ஆசியாவின் பெரும் மதங்களின் முதல் சர்வதேச மாநாட்டின் அழைப்பிதழை காட்டினார். பகவான் அதனை வாங்கி புரட்டிப்பார்த்தார். அதில் அவர் காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி படத்தினையும், தம்பதிகளின் படத்தையும் பார்த்தார். பகவான் காஞ்சி மடம் பல தலைமுறைகளாக நேபாளத்துடனும் நேபாள அரச பரம்பரையுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது குறித்து பேசினார். பகவான் சாதுவிடம், விஸ்வ இந்து பரிஷத்த்தைச் சேர்ந்த, திரு பாலகிருஷ்ண நாயக் மற்றும் திரு மாதவ் அவர்கள் சாதுவை மாநாட்டிற்கு அழைத்துள்ள கடிதத்தை படித்து காட்டுமாறு கூறினார். சாதுவும் அதனை படித்து காட்டினார். பகவான் சாதுவிடம் எங்ஙனம் நீங்கள் கோரக்பூர் சென்று அங்கிருந்து லும்பினிக்கு செல்வீர்கள் என்றும், எந்தெந்த தேதிகளில் பயணம் செய்வீர்கள் என்றும் வினவினார். சாது பகவானிடம் தனது பயணத்திட்டத்தை விளக்கினார். பகவான் சாதுவை அவரது பயண வெற்றிக்கான ஆசிர்வாதங்களையும் வழங்கி, *எங்கெங்கு நீ சென்றாலும், என்ன நீ செய்தாலும், எங்கே நீ சென்று பேசினாலும் அவையனைத்தும் எனது தந்தையின் பணியே! அவரது ஆசிர்வாதம் எப்போதும் உன்னுடன் இருக்கும்!.” என்றார்.
சாது பகவானிடம் நேபாளத்தில் இருந்து திரும்பியவுடன் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி மற்றும் பாரதமாதா குருகுல ஆசிரமத்தின் துவக்கவிழா மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் மையத்தின். துவக்கவிழா போன்றவை பெங்களூரில் நடத்தப்படும் என்றார். பகவான் அனைத்து திட்டங்களையும் ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் தனக்கு இன்னமும், தென் ஆப்பிரிக்காவில் உலக மதங்களின் பார்லிமெண்டில் கலந்துகொள்ள அங்கு செல்வதற்கான விமான டிக்கெட், வந்தடையவில்லை என்றார். பகவான் கூட்டத்தின் காலத்தை சாதுவிடம் கேட்டார், சாது, 1999 டிசம்பர் 1 முதல் 8 ஆம் தேதி வரை என்றார். சாது பகவானிடம், அங்கு செல்வதாக இருந்தாலும், யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கு பின்னரே அந்த மாநாட்டிற்கு செல்வேன் என்றார். சாது, பகவானிடம், பெங்களூரில் நிவேதிதா புதிய இடத்தின் சாவியை பெற்று, பின்னர் பொருட்களை சென்னையிலிருந்து பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்படும் என்றார். யோகி தனது தந்தையின் ஆசியினால் காரியங்கள் அனைத்தும் விரைவாக நடைப்பெற்று வருவது குறித்து தனது மகிழ்வை தெரிவித்தார். சாது, பகவானிடம், திட்டமிட்டபடி அனைத்தையும் மேற்கொள்ள வழிகாட்டுதலை கோரினார். பகவான், “ என் தந்தை உனக்கு வழிகாட்டுவார். நீ அவரது பணியை செய்கிறாய்” என்றார்.
சாது அவரின் முன் ‘தத்துவ தர்சனா’ ஆகஸ்ட் – அக்டோபர் 1999 பிரதிகளை வைத்தார். அந்த இதழ் சுவாமி நிச்ரேயாஸானந்தா அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. பகவான் அந்த சுவாமிகள் குறித்த விவரங்களைக் கேட்டார். சாது விவரித்தார். மேலும் அவரது நூற்றாண்டு விழா, செப்டம்பர் 14 , 1999 ல் நடைபெற்றது என்றார். அவரே ஆப்பரிக்க கண்டத்தில் ராமகிருஷ்ண இயக்கம் உருவாக முன்னோடியாக இருந்தவர் என்றார். ஆப்பிரிக்கா கண்டத்தில் தெற்கு நாடுகளில் ராமகிருஷ்ணா வேதாந்தா சொசைட்டி கிளைகள் நிறுவி அவைகளை திறம்பட நிர்வகித்த பெருமை அவரைச் சாரும் என்றார். பகவான் அவர் யாருடைய சீடன் என வினவினார். சாது அவர் சுவாமி சாரதானந்தா அவர்களுடமிருந்து தீட்சை பெற்றிருக்கலாம் என்றார். பகவான், சுவாமி திருச்சூரை சேர்ந்தவரா என வினவினார். சாது அவர் திருச்சூரில் பிறந்த போதிலும், சுவாமி விவேகானந்தரின் அடியொற்றி, வெளிநாடுகளுக்கு சென்றார் என்றார். பகவான் சாதுவிடம் ‘தத்துவ தர்சனா’வில் அந்த சுவாமிக்கு அஞ்சலி செலுத்தும் சாதுவின் கட்டுரையை வாசிக்குமாறு கூறினார். சாது எழுதி இருந்த “குருவும், குருகுலமும்” என்ற கட்டுரையையும் பகவான் வாசிக்கச் சொன்னார். பகவான் பத்து பிரதிகளில் கையொப்பம் இட்டு குருகுல நூலகத்திற்காக தந்தார். மூன்று பிரதிகளை சுதாமா சகோதரிகளுக்கும், அங்கிருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதியையும் தந்தார்.
பகவான் பக்தர்களின் குடும்பத்தினர் குறித்து விசாரித்து ஒவ்வொருவரையாக ஆசீர்வதித்தார். சாது, பகவானிடம், திரு. அனில் ஸுட்ஷி தன்னை நேற்று தொலைபேசி மூலம் அழைத்து, அவரது வணக்கங்களை பகவானுக்கு தெரிவித்ததாக கூறினார். யோகி அவரை ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் லும்பினி மாநாட்டில் பகிர அவரது சேதி வேண்டினார். பகவான் கூறுகையில், “இந்தப்பிச்சைக்காரனிடம் எதுவுமில்லை. ஆனால் என் தந்தை உன் மூலம் சேதியை தருவார்” என்றார். பின்னர் யோகி சாதுவின் சிரட்டை மற்றும் தண்டத்தை எடுத்து வழக்கம்போல் ஆசீர்வதித்தார். அவர் பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுக்கவும் அனுமதித்தார். எங்கள் அனைவரையும் அவர் ஆசீர்வதித்தப்பின் நாங்கள் அவரிடமிருந்து விடைப்பெற்று திரும்பினோம். உணவு கூடத்தில் பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு, சாதுவிற்க்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மதுரையை சேர்ந்த திரு. N.S. கிருஷ்ணன் தனது மகள் சௌ. ஜானகியின் திருமணம் குறித்து தெரிவித்தார். சாது அப்பெண்ணை ஆசீர்வதித்துவிட்டு, ஆசிரமத்திலிருந்து விடைப்பெற்று சென்னை திரும்பினார்.
சனிக்கிழமை , நவம்பர் 6 , 1999 அன்று சாது, திரு. அஸ்வினி குமாருக்கு, ரேடியோ எஃப்.எம். –ற்காக, தீபாவளி குறித்து ஒரு நேர்காணலை வழங்கினார். திங்கள்கிழமை அன்று சாது, பகவான், சுவாமி சச்சிதானந்தா மற்றும் பூஜ்ய தபஸ்வி பாபா அவர்களுக்கு, தனது நிகழ்ச்சிகள் குறித்து கடிதம் எழுதினார். நவம்பர் – 12 ஆம் தேதி வெள்ளி அன்று, தனது சுயம்சேவக் சகோதரரான திரு. K.E. ராமசாமி அவர்களின் மறைவினை ஒட்டி நடந்த இரங்கல் கூட்டத்தில், விவேகானந்தா கேந்திராவில் பேசினார். மறுநாள் சாது கேப்டவுனில் திருமதி. ப்ரமிளா வஸ்ஸனுக்கு, இதுவரை விமான டிக்கெட் வராததால், இனி விசாவிற்கு விண்ணப்பித்து பயணம் மேற்கொள்ள நேரமில்லாததால், தன்னால் மதங்களின் பார்லிமெண்டில் கலந்துகொள்ள முடியாது என்ற தகவலை தெரிவித்தார். நவம்பர் – 16 அன்று சாது, நேபாளத்திற்கு பயணித்தார். சகோதரி நிவேதிதா அகாடமியின் திரு. மாதவன், சாதுவுடன் கோரக்பூர் – க்கு ரதி சாகர் எக்ஸ்பிரஸில் பயணித்தார். சுவாமிஜிகள் வன்னிய அடிகள், மற்றும் ஊரான் அடிகள் ஆகியோரும், திரு. ராஜேந்திரன் என்பவரும் சாதுவோடு இணைந்தனர். அவர்கள் கோரக்பூரை வியாழக்கிழமை இரவில் அடைந்தனர். அவர்களை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அலுவலக பணியாளர்கள் வரவேற்றனர். அவர்கள் கோரக்பூரின் கோயில் சத்திரத்தில் ஸ்ரீ மஹந்த் அவைத்யநாத் அவர்களின் விருந்தினர்களாக தங்கினர். லக்னோ வி.எச்.பி. யின் பேரா. உஷா மிஸ்ரா போன்றோர் சாதுவோடு இணைந்து. அனைவரும் ஒரு சிறப்பு பேருந்து மூலம், லும்பினிக்கு, வெள்ளிக்கிழமை நவம்பர் 19 ஆம் தேதி கிளம்பினர். ஆசியாவின் பெரும் மதங்களின் மாநாடானது சிறப்பான முறையில் துவக்கப்பட்டது. திரு. அசோக் சிங்கல், திரு. ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் , திரு. பாலகிருஷ்ண நாயக் , வி.எச்.பி. யின் திரு. வேதாந்தம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் -ன் திரு. சூரியநாராயண ராவ், போன்றோரும் பங்குபெற்றனர். திரு. பாண்டே ஞான் ஜகத், புத்த துறவிமடம் தலைவர், மற்றும் தென் ஆப்பிரிக்காவின் திரு. சேஜி கோகுல் அவர்களோடு இணைந்தனர். சாதுஜி சனிக்கிழமை நவம்பர் – 20 அன்று மதிய நேரம், மாநாட்டில், “புத்தமதமும் ஹிந்து கலாச்சாரமும்“ என்ற தலைப்பில் பேசுகையில், பல்வேறு ஹிந்து சமய பிரிவுகளின் பொதுவான பிரச்சனைகள் மற்றும் வேட்கைகள் குறித்து பேசினார். விழாவில் பங்கேற்றவர்கள் சாதுவின் உரையை பாராட்டினர். ஞாயிற்றுக்கிழமையன்று காஞ்சி மடத்தை சேர்ந்த ஸ்ரீ ஜெயேந்திரர் உரையாற்றினார். சாதுஜி, ஊரான் அடிகளின் தமிழ் உரையை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்தார். மதியம் சாதுவும் அவரது குழுவினரும் லும்பினியில் பகவான் புத்தர் பிறந்த இடத்திற்கு சென்றனர். மாலையில் திரு. ஹேம் சர்மா அவர்களின் இல்லத்தில் நடந்த சத்சங்கத்தில் திரு. பாந்தே ஞான் ஜகத் அவர்களும் கலந்து கொண்டார். நவம்பர். – 22 திங்கள்கிழமை அவர்கள் கோரக்பூருக்கு திரும்பினர், அவர்களை திரு. மஹந் அவைத்யநாத், சாதனா பவனில் வரவேற்றார். செவ்வாய்க்கிழமை சாதுஜி, திரு. மாதவன் மற்றும் டாக்டர் கணேஷ் கோரக்பூர் கீதா பிரஸ்ஸிர்க்கு சென்றனர். மதியம் சாதுவும் , மாதவனும் நண்பரிகளிடம் விடைப்பெற்று அவத் எக்ஸ்பிரஸ் மூலம் லக்னோவிற்கு சென்றனர். திரு. லால் குடும்பத்தை சேர்ந்த திரு. விரேந்திரா, திரு. ராஜேந்திரா மற்றும் திரு. விக்கி சாதுவை ரயில்நிலையத்தில் வரவேற்று, திரு லால் அவர்களுடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.. சுவாமி ராம்தீர்த்தா ப்ரதிஷ்டானின் பக்தர்கள் சாதுவிற்கு இனிய வரவேற்பை வழங்கினர். சாது, டாக்டர் உஷா மிஸ்ரா அவர்களின் இல்லத்திற்கு சென்றார். அடுத்தநாள், வியாழக்கிழமை, நவம்பர் 25 அன்று, சாது, லக்னோ பக்தர்களிடம் விடைப்பெற்று, சென்னைக்கு லக்னோ எக்ஸ்பிரஸ் மூலம் திரும்பினார். அவர் சனிக்கிழமை வீட்டை அடைந்தார். திரு. மாதவன் ஒரு விவரமான அறிக்கையை, லும்பினி பயணம் குறித்தும், ஆசியாவின் பெரும் மதங்களுக்கான சர்வதேச மாநாடு குறித்தும் தயாரித்தார்:
“ஆசியாவின் பெரும் மதங்களின் சர்வதேச மாநாடு பகவான் புத்தர் பிறந்த இடமான நேபாளின் லும்பினியில் நவம்பர் 19 , 20 மற்றும் 22 ஆம் தேதி 1999 ல் நடைப்பெற்றது. இந்த மாநாடு, ரோமன் கத்தோலிக்க சர்ச்களின் தலைவரான போப் ஜான் பால் II, நவம்பர் – 5 அன்று புதுடெல்லிக்கு வருகை தந்த பொழுது, வரும் புத்தாயிரமாண்டில் மொத்த ஆசிய கண்டத்தையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவோம் என்று அவர் கூறியதற்கு சவால் விடும் வகையில், நடத்தப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டின் தலைமை புரவலராக ஜகத்குரு சங்கராச்சாரியாரான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் திகழ , பல ஹிந்து , புத்த மற்றும் ஜெயின் ஆன்மீக தலைவர்களும் இதற்கு புரவலர்களாக இருந்தனர். 1994 ல் பாரதத்தின் சாரநாத்தில் முதன்முறையாகவும், 1996 ல் இரண்டாவதாக ஜப்பானிலும், 1997 ல் மோடி நகர், புது டெல்லியில், மூன்றாவது முறையாகவும் இந்த மாநாடு நடைப்பெற்றது. நேபாளில் முதன்முறையாக நடைபெற்றுள்ள இந்த மாநாடு, புத்தாயிரம் ஆண்டில் ஆசியா நாடுகளுக்கு முன் வைக்கப்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
மாநாட்டின் புனிதமான துவக்கவிழா நாளில், புத்தர் பிறந்த புனிதமான இடத்தில் பூஜைகளும், பரிக்ரமாக்களும் நடைப்பெற்றன. காலையில் மாநாடு துவக்கவிழா, சித்தார்த் நகரில் ஒரு திறந்த மைதானத்தில், காஞ்சி பீடத்தின் ஜெயேந்திரர் மூலம் குத்துவிளக்கேற்றப்பட்டு துவக்கப்பட்டது. மதியம் உலகின் ஒரே ஹிந்து நாடான நேபாளின் அரசரான பீரேந்திரா பீர் பிக்ரம் ஷா தேவ் அவர்களின் வாழ்த்துமடல் வாசிக்கப்பட்டது. அதில் அவர், மானிட தொண்டில் ஒரு தனிப்பட்ட பிரிவினர் அல்லது வகுப்பினர் நலனில் மட்டும் அக்கறை காட்டாமல், அனைத்து மக்களுடைய கல்வியின்மை, பசி, மற்றும் வருமை ஆகியவற்றை நீக்குவதற்கு முயற்சி எடுத்தால், மதங்கள் மனித நலன் மற்றும் உலக சமாதானத்திற்கு பெரிதும் உதவ இயலும் என்று அவர் கூறினார். மேலும் அவர் எச்சரிக்கும் வகையில், “நாம் அனைவரும் கவனத்தோடும், அர்ப்பணிப்போடும் இருந்து, நமது விலைமதிப்பற்ற மதங்களின் பாரம்பரியம், சகிப்புத்தன்மை, ஒற்றுமையுணர்வுகளை நமது சமூகத்தில் ஒருங்கிணைக்க வேண்டும்.” என்றார்.
ஸ்ரீ ஜெயேந்திர சங்கராச்சாரியார் கூறுகையில், போப் ஜான் பால் II, மொத்த ஆசிய நாடுகளையும் புத்தாயிரமாண்டில் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றவேண்டும் என்று விடுத்துள்ள சவாலானது, மொத்த ஐரோப்பா மற்றும் அமெரிக்க மக்களில் பலர் ஹிந்து வழிபாட்டிற்கும் , மதத்திற்கும் வருவதைக் கண்ட பதட்டத்தினால் வருவதாகும் என்றார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மக்கள், இந்து மத சிந்தனைகள் , கலாச்சாரங்கள் மற்றும் உலகளாவிய மனித குலத்தின் வாழ்க்கை மூல்யங்களால் கவரப்பட்டு, தன்னிச்சையாக அவற்றை ஏற்றுக்கொண்டு வரும்பொழுது, கிறிஸ்துவ சர்ச்கள், ஏழைகள் மற்றும் கல்வியறிவில்லாதவர்களை கட்டாய த்தாலும் பணத் தூண்டுதல்களாலும் மதம் மாற்றி, அவர்களின் உள்ளத்தில் ஒரு அச்ச உணர்வையும் ஏற்படுத்துகின்றன என்றார்.
துவக்கவிழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் மனிதவளத்துறை அமைச்சரான மாண்புமிகு திரு. முரளி மனோகர் ஜோஷி கூறுகையில் பாரதநாடு புனிதமான நிலம். அதற்கு ஒரு ஆன்மீக கலாச்சாரம் உண்டு, அதுவே மனிதகுல சகோதரத்துவத்திற்கும், மதங்களின் ஒற்றுமைக்கும் அடிப்படையானதாகும் என்றார். அவர் வருகின்ற புத்தாயிரமாண்டில் ஹிந்து தர்மம் முழுவீச்சில் உலகெங்கும் பரவும் என்றார்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் திரு. அசோக் சிங்கல் மாநாட்டில் உரையாற்றுகையில், பாரதமும், நேபாளமும், ஹிந்து வேதங்கள், மற்றும் புத்த மற்றும் ஜெயின ஆன்மீக பாரம்பரியங்களின் மிகப்புராதனமான கேந்திரங்களாக திகழ்ந்து வந்துள்ளன என்றார். இந்தப் பாரம்பரியங்கள் தனித்த அடையாளங்களை கொண்டவை என்றும், இதன் மத தலைவர்கள் தங்களின் பாரம்பரியங்களை பாதுகாப்பதில் தீவிரமாகவும் மிகுந்த விழிப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் கூறினார். இந்த சமய சம்பிரதாயங்களின் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, போப் ஜான் பால் II சவால் விட்டுள்ளபடி ரோமன் கத்தோலிக்க சர்ச்சின், மொத்த ஆசியாவையே கிறிஸ்துவ மதமாக மாற்றும், முயற்சியை முறியடிப்பார்கள் என்றும் கூறினார்
திரு. பாந்தே ஞான் ஜகத் மஹாஸ்தவிர், உலக புத்த கூட்டமைப்பின் தலைவர், பேசுகையில், புத்தமதம் உலகம் எங்கிலும் மக்களை அஹிம்சை மற்றும் இரக்கம் போன்றவற்றின் பாதை மூலம் ஒருங்கிணைத்து , பாரதத்தின் ஆன்மீக பாரம்பரியங்களின் மிக உயர்ந்த சாதனைகளின் சின்னமாக திகழ்கிறது என்றார். மேலும் அவர் புத்தமதத்தின் வேர்கள் ஹிந்து தர்மத்தில் உள்ளதை சுட்டிக்காட்டி, உலகெங்கும் உள்ள பௌத்தர்களும் ஹிந்துக்களும் ஒன்றிணைந்து ஆசியா கண்டம் முழுவதும் பரவியுள்ள இந்த மஹா ஆன்மீக பாரம்பரியங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலை எதிர்கொள்ளுவார்கள் என்றார்.
அர்ஷா வித்யா குருகுலத்தின் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதி பேசுகையில், இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் மதங்கள் வன்முறையின் மூலம் மனிதனை மதம் மாற்றி, அவனது குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து பிரித்து அவனை ஒரு வேற்று கிரகத்து மனிதன் போல் ஆக்குகிறது என்றும், கிரேக்க மற்றும் ரோமர்களின் நாகரீகத்தையும், பண்டைய அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய கலாச்சாரத்தையும் பாரம்பரியங்களையும் கிறிஸ்துவ மதமே அழித்தது என்றும் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ் – ன் அகில பாரத அதிகாரியான திரு. சூரிய நாராயணராவ் தனது உரையில், சுவாமி விவேகானந்தர், “இந்தியர்கள் சங்கரரின் தலையையும், புத்தரின் இதயத்தையும் ஒன்றாக கொண்டிருக்க வேண்டும்” என்று கூறியதை நினைவுறுத்தினார். மேலும் அவர் சுவாமிகள் மீது ஹிந்துக்கள் மட்டுமல்ல, தூர தேசங்களில் வாழும் பௌத்த மதத்தினரும் பெரும் மரியாதை கொண்டிருந்தனர் என்றார்.
சாது. பேராசிரியர் வே. ரங்கராஜன், சகோதரி நிவேதிதா அகாடமியின் ஸ்தாபக அறங்காவலர், அவரது உரையில், பழம்பெரும் சமய நூல்கள் ஆன விஷ்ணு புராணம் மற்றும் பார்ஹஸ்பத்ய சம்ஹிதை போன்றவை, ஞான ஒளியின் தேசமான பாரதத்தின் எல்லையைப் பற்றி குறிப்பிட்டு, இந்த தேசத்தை தாய் நாடாகவும் தெய்வத்திரு நாடாகவும் தொன்று தொட்டு வழிபட்டு வருகின்ற குடிமக்கள் தான் ஹிந்துக்கள் என்று குறிப்பிடுகின்றன என்றார். ஹிந்து கலாசாரம் மற்றும் ஆன்மீக பண்பாடுகளில் இருந்து உருவெடுத்த பல்வேறு மதங்களில் ஒன்றாகும் புத்தமதம், என்றார். அவர் ஜெயதேவரின் “கீத கோவிந்த”த்தில், புத்தர் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக கூறப்படுவதோடு, ஹிந்துக்கள் அவரையும் இந்த நிலத்தின் ஒரு மிகப் புனிதரான ஆன்மீக குருவாக கருதி வணங்கி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார். மேலும் உலகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஹிந்து சமய கல்வித் துறைகளில், வேதத்தை ஏற்றுக் கொள்கின்ற நியாயம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், மீமாம்ஸா, மற்றும் வேதாந்தம், ஆஸ்திக தரிசனங்கள் என்றும், வேதத்தை மறுக்கின்ற பௌத்தம், ஜைனம், சார்வாகம் ஆகியவை நாஸ்திக தரிசனங்கள் என்றும், இவை அனைத்தும் ஹிந்து தர்மத்தின் பல்வேறு பிரிவுகள் தான் என்றும் கற்பிக்கப்படுகிறது என்றார். புத்த மதம், ஜைன மதம், சீக்கியம் ஆகிய வை ஹிந்து தர்மத்திலிருந்து மாறுபட்ட சமயங்கள் என்று கூறுவது முரண்பட்ட கருத்தாகும் என்று அவர் குறிப்பிட்டார். சாதுஜி, 1964 ல், பெரும் ஆன்மீக மற்றும் மத தலைவர்களான, குருஜி M.S. கோல்வால்கர், சுவாமி சின்மயானந்தா, ஆச்சார்யா துளசி, தலாய் லாமா, மாஸ்டர் தாராசிங் போன்ற, பல்வேறு சமய பிரிவுகளான வைஷ்ணவர்கள், சைவர்கள், புத்தமதத்தவர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகியோரின் சமயத் தலைவர்கள் பங்குகொண்ட கூட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டு, அந்தக் கூட்டத்தில் “ஹிந்து” என்ற வார்த்தைக்கு வழங்கப்பட்ட சொற்பொருள்விளக்கம், “பாரதத்தில் உருவெடுத்த புராதன ஆன்மீக வாழ்க்கை மூல்யங்களை மதித்து ஏற்றுக்கொண்டு வாழ்பவர்கள் அனைவரும் ஹிந்துக்கள்” என்பதை சுட்டிக்காட்டினார். புதிய ஐரோப்பிய வரலாற்றாளர்கள் தங்களது ஆய்வுகளில் ஏசுவின் காணாமல் போன வருடங்களான 14 முதல் 29 வயதிலான காலத்தில் அவர் இந்தியாவில் ஹிந்து மற்றும் புத்த மதத்தின் பாரம்பரியங்களைக் கற்றார் என்றும், பின்னர் அவர் சிலுவையில் அறையப்பட்டதாக கூறப்படும் நிகழ்விற்கு பின் தப்பித்து வந்து இந்தியாவில் ஒரு ஹிந்து யோகியாக காஷ்மீரில் வாழ்ந்து, அங்கேயே மறைந்தார் என்றும் கூறுகின்றனர். மேலும், கிறிஸ்தவ மதம் என்பது இயேசு நிறுவியது அல்ல என்றும், செயின்ட் பால் ஏற்படுத்திய தேவாலய அமைப்பின் பேரரசு கோட்பாட்டு இயக்கமாகுமென்றும், குறிப்பிட்டார். ஹிந்து தலைவர்களுக்கு சாது விடுத்த அறைகூவலில் பண்பாடு மற்றும் வாழ்க்கை மூல்யங்களுக்கு ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றுபட்டு எழவேண்டும் எனக் கூறினார்..
அந்த மாநாட்டில் பல அறிஞர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஜப்பான், இந்தோனிசியா, மலேசியா, தாய்லாந்து, கொரியா , மியான்மர் , ஹாங்காங் , ஸ்ரீலங்கா மற்றும் தென் ஆப்பரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர். மாநாடு நிறைவுறும் முன் ஒரு முக்கியமான தீர்மானம் ஒன்றில், இரு நபர் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு, அதன்மூலம் ஆசியாவில் எங்கெல்லாம் கிறிஸ்தவ மதமாற்ற பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என்று கண்டறிந்து அதை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய முயற்சிகள் குறித்து தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் வெளிநாட்டு செயல் தலைவர், டாக்டர் பூபேந்திர குமார் மோடி, மற்றும் ஜப்பானின் டைக்கோஜி கோயிலின் 17 வது ஆசார்யர், தவத்திரு டையன் S. உச்சிடா அந்த குழுவின் இரு உறுப்பினர்கள் ஆவார்கள்.
பல்வேறு நாடுகளிலுள்ள பல சமய குழுக்களின் பிரதிநிதிகள் 500 க்கும் மேற்பட்டவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதோடு, அந்த மாநாட்டையொட்டி நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், “ஹிந்து – பௌத்த தத்துவத்தில் ‘கருணை’ என்ற கருத்தும், நடைமுறையும்” என்பது பற்றி விவாதித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை , நவம்பர் 28 , 1999 அன்று மாலையில், சாது, பாரதி, விவேக் மற்றும் இரண்டு பக்தர்களான வெங்கடேஷ் மற்றும் வேலு உடன், பெங்களூருக்கு காரில் கிளம்பி அங்கே அடுத்தநாள் காலையில் சென்றடைந்தனர். திரு. K.N. வெங்கடராமன், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் உபதலைவர், மற்றும் திரு ஜெயராமன், பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கு வந்தடைந்தனர். புதன்கிழமை, டிசம்பர் – 1 காலையில், திருமதி பவானி அஸ்வினிகுமார், திரு. ஹேமாத்ரி ராவ், திரு ரவி, திருமதி ஜெயஸ்ரீ மற்றும் திரு. G.S. ராமன் போன்றோர் சென்னையிலிருந்தும், திரு. பிரபாகரா மைசூரில் இருந்தும், பெங்களூரில் இருந்த பக்தர்களும் ஆசிரமத்திற்கு வந்திருந்தனர். பகவானின் கருணை மற்றும் ஆசியினால், யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி டிசம்பர் – 1 ,1999 அன்று, பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம், சிறப்பான ஒரு நிகழ்ச்சியில், கிருஷ்ணராஜபுரம் ஸ்ரீனிவாச நகரில், துவக்கப்பட்டது.
யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா, ஒவ்வொரு ஆண்டினைப்போல், நாள் முழுவதும், சென்னை, மைசூர் மற்றும் பெங்களூர் பக்தர்கள் கலந்து கொண்ட அகண்ட ராமநாமம் நடைப்பெற்றது. வழக்கம்போல், கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம் மற்றும் ஆயுஷ் ஹோமம் போன்றவை காலையிலும் மாலையில் பஜனையும் நடைப்பெற்றன.
சுருக்கமான நிறைவுரையில், சாது ரங்கராஜன், தனது குரு யோகி ராம்சுரத்குமார் அவர்களின் கருணையால், தனது முப்பது வருட கனவான, ஒரு புராதன குருகுலமுறையில் செயல்படும் ஒரு மையத்தை அமைப்பது சாத்தியமானது என்றும், இதில் உலகின் பல பகுதிகளில் இருந்து வருகின்ற இளைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டு, நமது அன்னை பாரதத்தின் பண்டைய ரிஷிகளின், மனிதர்களை உருவாக்கும் ஹிந்து பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையை உலகெங்கும் பரப்பும் பணியை மேற்கொள்வார்கள் என்றார். எளிய வாழ்க்கை, மற்றும் உயரிய சிந்தனை இவையே இந்துக்களின் வாழ்க்கை முறையின் அடிப்படை தத்துவங்கள் என்றும், இங்கு பயிற்சி பெறும் இளைஞர்கள் பாரத நாட்டின் உயர்ந்த ஆன்மீகப் பண்பாட்டின் உருவகங்களாக திகழ்வார்கள் என்றும் கூறினார்.
வி.எச்.பி. யின் சர்வதேச செயல் தலைவரான திரு. அசோக் சிங்கல் அனுப்பிய செய்தி மடலில், யோகி ராம்சுரத்குமார் அவர்களின் 82 வது ஜெயந்தி விழா வேளையில், தனது நமஸ்காரம் மற்றும் நீண்ட ஆயுளோடு வாழ தனது வாழ்த்துக்களை யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு தெரிவித்தார். மேலும் பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிகல் ஆராய்ச்சி மையத்தின் வெற்றிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த விழா ஹனுமான் சாலிசா பாடி ஆரத்தியோடு முடிக்கப்பட்டது.
சாது, சென்னைக்கு டிசம்பர் – 2 ஆம் தேதி திரும்பினார். சென்னையின் “தி ஹிந்து” நாளிதழ், பாரதமாதா குருகுல துவக்கவிழா குறித்த செய்தியை வெளியிட்டிருந்தது. சாது, பகவானுக்கு வெள்ளிக்கிழமை டிசம்பர் 10 அன்று, யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா மற்றும் பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இன்டோலோஜிக்கல் ஆராய்ச்சி மையம் துவக்க விழா குறித்தும் தகவல் தெரிவித்தார். மையத்தின் பணிகளை துவங்க டிசம்பர் 11 அன்று தான் மீண்டும் பெங்களூர் செல்ல இருப்பது குறித்தும் அவர் தெரிவித்தார். டிசம்பர் 14, 1999 அன்று திரு. டெட்டி கொமல், திரு. சேகரன் மற்றும் திரு. சுஜன் போன்ற தென் ஆப்பிரிக்கா நண்பர்கள் பாரதமாதா குருகுல மந்திர்க்கு வருகை தந்தனர். திரு. கோவிந்தராவ் மற்றும் பெங்களூரின் ஆனந்தாஸ்ரம சத்சங்க சமிதியை சேர்ந்த ஐந்து பக்தர்கள் சாதுவை சந்தித்து, டிசம்பர் – 27 அன்று பப்பா ராம்தாஸ் அவர்களின் சன்னியாச தின விழாவன்று உரையாற்றுமாறு கேட்டுக்கொண்டனர். வெள்ளிக்கிழமை, திரு. டெட்டி மற்றும் நண்பர்கள் சாதுவிடம் விடைப்பெற்று கிளம்பினர். டிசம்பர் 21 அன்று, சாது சென்னைக்கு, சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா மற்றும் விவேகானந்தர் குறித்த பேச்சுப் போட்டியில் யோகி ராம்சுரத்குமார் சூழல் கேடயங்கள் மற்றும் பரிசுகளை நகர மாணவர்களுக்கு வழங்க, ஏற்பாடுகளுகளை மேற்கொள்ள வந்தார். ஜனவரி 9 , 2000 அன்று அந்த நிகழ்ச்சி நடத்த, திரு. கன்னிகா பரமேஸ்வரி கலைக் கல்லூரி ஏற்பாடு செய்யப்பட்டது. சனிக்கிழமை , டிசம்பர் 25 அன்று சாதுஜி திருவல்லிக்கேணி ஐயப்ப சேவா சங்கத்தில் பகவான் அய்யப்பனின் லட்சார்ச்சனை விழாவில் சபரி மலைக்கு செல்லும் பக்தர்களிடையே உரையாற்றினார். பகவான் யோகி ராம் சுரத் குமாரின் பக்தரான திரு. பாஸ்கரதாஸ், தனது ஃபியட் காரை, சாதுவிற்கு அவரது குருகுல பணிக்காக பரிசளித்தார். மேலும் அவர் திரு. சுரேஷ் என்ற ஓட்டுனரையும் காரை பெங்களூருக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் – 26 அன்று சாது பெங்களூருக்கு காரில் சென்றார். காரில் ஏற்பட்ட சில பழுதின் காரணமாக அவர் கோலாரில் இரவு தங்கி, அடுத்தநாள் பழுது சரியான உடன் பயணத்தை தொடர்ந்து பெங்களூரை அடைந்தார். பெங்களூர் ஆனந்தாஸ்ரம சத்சங்க சமிதியின் திரு. கோவிந்தராவ் மற்றும் திரு. ராமநாராயண் வந்து சாதுவை பப்பா ராம்தாஸ் சன்னியாஸ நாள். விழாவிற்கு அழைத்துச் சென்றனர். சாது பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்து பேசினார். டிசம்பர் – 31, 1999 அன்று, சாது சென்னைக்கு பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் திரும்பினார்.