ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 3.22

Glimpses of A Great Yogi in Tamil – Part 3
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – III
சீடனின் வழியாக பகவானின் செயல்கள்

ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்

அத்தியாயம் 3.22 

பாரத மாதா குருகுல ஆசிரமத்தின் பூமிபூஜைக்கு பகவானின் ஆசிகள்

புத்தாண்டு 1999 பிறந்தவுடன் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் தேசீய இளைஞர் தினத்தை முன்னிட்டு, யோகி ராம்சுரத்குமார் சுழற்கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்குவதற்கான, நகரத்து மாணவர்களுக்கான, பேச்சுப்போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய,  கடுமையாக பணிபுரிந்தனர். சிரஞ்சீவி் விவேக் மற்றும் சௌ பிரியா, ஞாயிற்றுக்கிழமை , ஜனவரி 10, 1999 அன்று, கலாமந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடக்க இருக்கும் விழாவிற்கு, சென்னை உயர்நீதி மன்றத்தின் மாண்புமிகு நீதிபதி கற்பகவினாயகம் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். சாது பகவானுக்கு ஜனவரி 7 ஆம் தேதி விழா குறித்து கடிதம் ஒன்றை எழுதினார்:

“பூஜ்யபாத குரு மஹராஜ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியால் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம், பதினோறாவது ஆண்டாக சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் தேசீய இளைஞர் தினத்தை முன்னிட்டு, சுவாமிஜி குறித்த பேச்சுப்போட்டியை நகரத்து பிள்ளைகளுக்கு, யோகி ராம்சுரத்குமார் சுழற்கேடயங்கள் மற்றும் விருதுகளுக்காக நடத்த இருக்கிறது. ஜனவர் 10, 1999 அன்று, ராமகிருஷ்ண ஆசிரமத்தின் பூஜ்ய சுவாமி போதமயானந்தா தலைமையில் நடக்கும் விழாவில், சென்னை உயர்நீதி மன்றத்தின் மாண்புமிகு நீதிபதி M.  கற்பகவினாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக இருப்பார். திருவேடகம் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வர், டாக்டர். V.S. நரசிம்மன் முக்கிய உரையாற்றுவார். திரு. விவேகானந்தன், டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன் மற்றும் இந்த சாது உங்கள் ஆசியை இந்த விழாவிற்கு வேண்டுகிறார்கள். இத்துடன் நாங்கள் சுற்றறிக்கை மற்றும் விழாவின் அழைப்பிதழ் போன்றவற்றை இணைத்துள்ளோம்.

அகில இந்திய வானொலி சுவாமி விவேகானந்தர் குறித்த இந்த சாதுவின் உரையை ஜனவரி 12, 1999 அன்று ஒலிபரப்பு செய்ய விருப்பம் கொண்டுள்ளது. இது, கணிசமான இந்திய மக்கள்தொகை காணப்படுகிற, கிழக்காசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் அலைவரிசையில் ஒலிபரப்பாகும். இந்த சாது உங்கள் ஆசியை இந்த நிகழ்ச்சிக்கும் வேண்டுகிறான். 

‘தத்துவதர்சனா’ 15-வது ஆண்டு மலர்  தயாராகி வருகிறது அது, இந்த சாது வெளிநாடுகளுக்கு செல்லும் முன், பிப்ரவரி 1999 ல், வெளியாகும். பூஜ்ய தபஸ்வி பாபா அவர்களின்  “ராம்நாம்” என்ற நூலும் தயாராகி வருகிறது. இதில் ராமசரிதமானஸ் மற்றும் புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, ராம்நாம தாரக மந்திரத்தின் பெருமைகள் குறித்த கட்டுரைகள் அடங்கியுள்ளன. இதனையும் ஆண்டு மலரோடு தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்க இந்த சாது  கொண்டுவருவான். இந்த புத்தகம் பிரத்தியேகமாக ராம்நாம் இயக்கத்தின் பக்தர்களுக்கும், மார்ச் மாதம் மொரிஷியஸ் நடக்கும். ராம்நாம் யக்ஞத்தில் விநியோகிக்கவும் உதவும் என நம்புகிறேன். இதுவரை மொரிஷியஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து உறுதி செய்யப்பட்ட விமான டிக்கெட் கிடைக்கவில்லை, கூடிய விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன். டிக்கெட்டுக்கள் வந்தபின்னர் பிப்ரவரியில் மொரிஷியஸ், மற்றும் மார்ச் முதல் ஜூன் வரை  தென் ஆப்பிரிக்கா செல்ல விசாவினை எடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் இந்த நாட்டைவிட்டு கிளம்பும் முன் பகவானின் தரிசனத்தையும், ஆசியையும் அங்கு  வந்து பெறுவதற்கு வேண்டுகிறோம். 

திருமதி பாரதி, சிரஞ்சீவி விவேகானந்தன், சௌ. நிவேதிதா மற்றும் அவளது குடும்பத்தினர் தங்கள் தாழ்மையான நமஸ்காரங்களை பகவானுக்கும் மற்றும் சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்

இணைப்பு  : மேலே குறிப்பிட்டபடி”

பகவானின் கருணை மற்றும் ஆசியால் விவேகானந்தா ஜெயந்தி மற்றும் தேசீய இளைஞர் தினம் நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக ஜனவரி 10 ஆம் தேதி நடைப்பெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் மூன்று நிலைகளான – சீனியர், ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் நிலைகளில் பங்கேற்றனர். AIR – ன் திரு. அஸ்வினிகுமார் மற்றும் திரு. சக்தி ஸ்ரீனிவாசன், டாக்டர். பவானி, மற்றும் பேரா. பட்டு, மற்றும் YRYA வைச் சேர்ந்த தன்னார்வலர்கள், திரு. ரவி , திரு. சந்திரசேகர், திரு வெங்கடாசலம், சௌ. சுபா மற்றும் சௌ. அனு நீதிபதிகளாக இருந்தனர். டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் சிரஞ்சீவி். விவேக் நிகழ்ச்சியை மிகுந்த திறம்பட நடத்தினர். மாண்புமிகு நீதிபதி. கற்பகவினாயகம், சிறப்பு விருந்தினர் ஆகவும், சுவாமி போதாமயானந்தா தலைவராகவும் மாலை நிகழ்வில் கலந்து கொண்டனர். பரிசுகள் வெற்றிபெற்றவர்களுக்கும், ஆறுதல் பரிசுகள் கலந்து  கொண்டவர்களுக்கும் அனைத்து நிலையிலும் வழங்கப்பட்டது. டாக்டர். V.S. நரசிம்மன்,  திருவேடகம் விவேகானந்த கல்லூரி முன்னாள் துணை முதல்வர், முக்கிய உரை ஆற்றினார். சாது தனது நிறைவு உரையில் சுவாமி விவேகானந்தர் மீது யோகி ராம்சுரத்குமார் கொண்டிருந்த ஆழமான அன்பு குறித்து பேசினார். சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை மத்திய அரசு, தேசீய இளைஞர் தினமாக அறிவித்த போது எப்படி பகவான் ஒரு குழந்தையைப்போல் துள்ளி குதித்தார் என்பதை விளக்கினார். 

திங்கள்கிழமை அன்று சாதுவின் விவேகானந்தர் குறித்த உரையானது AIR ல் திரு. சக்தி ஸ்ரீனிவாசன் மற்றும் சௌ. அஸ்வினி ஒலிப்பதிவு செய்து, விவேகானந்தா ஜெயந்தி நாளான ஜனவரி – 12 ல் ஒலிப்பரப்பானது. அதே நாளில் சாதுவிடம், தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு விடுத்துள்ள அறைகூவல் குறித்து ஒரு நேர்காணல், தொலைபேசி மூலம் AIR ல் மேற்கொள்ளப்பட்டது. சாதுஜி பகவானுக்கு கடிதம் ஒன்றை ஜனவரி – 23 அன்று இந்த நிகழ்ச்சி குறித்து விரிவாக எழுதினார். 

பூஜ்ய ஸ்ரீ குருதேவ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியால் விவேகானந்தா ஜெயந்தி பெரும் வெற்றி பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேச்சுப்கோட்டியில் கலந்து கொண்டனர். அகர்வால் வித்யாலயா மற்றும் RBCC பள்ளியானது யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயத்தை முறையே சீனியர் மற்றும் ஜூனியர் நிலைகளில் பெற்றனர். யோகி ராம்சுரத்குமார் விருதுகள் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. “நீதிபதி திரு. கற்பகவினாயகம், திரு. V.S.நரசிம்மன், சுவாமி போதாமயானந்தா மற்றும் இந்த சாதுவின் உரைகள் பற்றி, “மாம்பலம் டைம்ஸ்“ ல் வெளியான செய்தி, தனியே தபாலில் தங்களின் பார்வைக்காக அனுப்பியுள்ளோம். 

இந்த சாது, பொங்கலை முன்னிட்டு ஜனவரி 26, 1999 அன்று நடக்க இருக்கும் தமிழ் விழாவில் உரையாற்ற, மும்பைக்கு கிளம்புகிறான். சென்னைக்கு ஜனவரி 29 அன்று திரும்பி வருவான். பின்னர், நமது  சகோதரி நிவேதிதா அகாடமி குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம் போன்றவற்றிற்கு, பிப்ரவரி மாத துவக்கத்தில் அடிக்கல் நாட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, நாங்கள் பெங்களூருக்கு செல்வோம்.

மொரிஷியஸின் திரு. C.C. கிருஷ்ணா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் திரு. டெட்டி கொமல்  முறையே ஒரு இமெயில் மற்றும் ஃபேக்ஸ் தகவல்களை அனுப்பினர். அதில், அவர்கள் பிப்ரவரி 25 முதல் ஜூன் 27, 1999 வரை எங்களின் வெளிநாட்டு பயணத்திற்கான திட்டத்தை உறுதி செய்துள்ளனர். நாங்கள் விசா பெறுவதற்கு விண்ணப்பிக்க விமான டிக்கெட்களை விரைவில் அனுப்ப உள்ளனர். நாங்கள் இந்த நாட்டில் இருந்து பயணம் மேற்கொள்ளும் முன். தங்களை வந்து கண்டு தரிசனம் பெறவும், ஆசியை பெறவும் விரும்புகிறோம். அதற்கு முன் எங்களின் ‘தத்துவ தர்சனா’ 15 வது ஆண்டுமலர் மற்றும், பூஜ்ய தபஸ்வி பாபா அவதூத் அவர்களின் “ராம்நாம்” நூலும் தயாராகிவிடும். அவைகளில் முதல் பிரதிகளை தங்களின் பாதங்களில் சமர்ப்பிக்க கொண்டுவருவோம். சௌ நிவேதிதா மற்றும் குழந்தை ஹரிப்ரியா இங்கே குடியரசு தின விடுமுறைக்காக வந்திருக்கிறார்கள். நிவேதிதாவின் கணவன் திரு ரமேஷ் கல்கத்தாவிற்கு அலுவலக பணிக்காக சென்றுள்ளார். அவள், விவேக் மற்றும் பாரதி தங்கள் வணக்கங்களை உங்களுக்கும் சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவிக்க சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். “

சாது தனது மும்பை பயணத்தை மும்பை எக்ஸ்பிரஸில் ஜனவரி 24 , 1999 ஞாயிற்றுக்கிழமை அன்று துவக்கினார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் திரு.நாகராஜ் சாதுவை மும்பையில் அடுத்தநாள் காலையில் வரவேற்றார். தமிழ் சங்கம் பொங்கல் விழாவை சீயோன் கோலிவாடாவில்  உள்ள ஹனுமான் தேல்கியில் சிறப்பாக கொண்டாடியது. அங்கே நாள் முழுக்க கலை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்காக நடந்தன. சாதுஜி மாலையில் கூட்டத்தினரிடையே பொங்கலின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். திரு.A.R. ராவ், சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலர் மற்றும் பகவானின் பக்தர், ஒரு சிறப்பான ராமநாம சத்சங்கத்தை தனது இல்லத்தில் நடத்தினார். பகவானின் பக்தர்களான திரு. மோக்கல், திரு. சாவன் , திரு. T.S. பால் மற்றும் திரு.C.S. ரங்கநாதன் சத்சங்கத்தில் கலந்து கொண்டனர். சாது பகவான் குறித்தும், உலக ராம்நாம் இயக்கம் குறித்தும் பேசினார். திரு. ராவ் ராம்நாம் இயக்கத்தின் மும்பை ஒருங்கிணைப்பாளராக இருக்க சம்மதித்தார். சாது சென்னை எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னைக்கு அடுத்தநாள் திரும்பினார். 

ஆனந்தாஸ்ரமத்தின் திரு ஸ்ரீராம், சுவாமி சச்சிதானந்தர் அவர்களின் அர்ப்பணிப்பின் பொன்விழா ஆண்டு மலரை பூஜ்ய சுவாமிஜி அவர்களின் பிரசாதங்களுடன் திரு. கிருஷ்ணமூர்த்தி மூலம் திங்கள்கிழமை பிப்ரவரி – 1 அன்று கொடுத்தனுப்பினார். சென்னை கம்பன் கழகம், கல்லூரி மாணவர்களுக்கான ஒரு பேச்சுப்போட்டி, திருவள்ளுவரின் ‘வாலறிவன்’ பற்றி, பிப்ரவரி 5 வெள்ளிக்கிழமை அன்று ராணி சீதை ஹாலில் நடத்தியது. அதற்கு சாது நடுவராக அழைக்கப்பட்டிருந்தார். திரு. S.L. பண்டாரி என்ற சேவை மனப்பான்மை கொண்ட வியாபாரி மற்றும் ராம்நாம பக்தர், சாதுவையும் திருநெல்வேலியின் உலக ராமநாம இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. S.G. பத்மநாபன் அவர்களையும் அவரது சென்னை சௌகார் பேட்டை இல்லத்தில் பிப்ரவரி 9 அன்று வரவேற்றார். அவர்  ராமர் பட்டாபிஷேகம் படம் மற்றும், ஆங்கிலம் மற்றும் தேவநாகரி மொழிகளில் அச்சிடப்பட்ட ஹனுமன் சாலீசா அடங்கிய, பிளாஸ்டிக் நாட்காட்டியின்  இரண்டாயிரம் பிரதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ராம்நாம் பக்தர்களுக்கு விநியோகிக்க வழங்கினார். பிப்ரவரி – 10 அன்று சாது பெங்களூருக்கு சென்று பாரதமாதா குருகுல ஆசிரமத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்தார். கட்டிட ஒப்பந்தக்காரர் திரு. கார்த்திக் உடன் கட்டிடத்தின் திட்டம் குறித்து விவாதித்தார். அவைகளை இறுதி செய்துவிட்டு சென்னைக்கு பிப்ரவரி 15 அன்று திரும்பினார். அடுத்தநாள் காளஹஸ்தியை சேர்ந்த திரு. ரமேஷ், ராமநாம பக்தர்களுக்கு வினியோகம் செய்ய டாக்டர் C.V. ராதாகிருஷ்ணன் தயாரித்த, யோகி ராம்சுரத்குமார் படம் அச்சிடப்பட்ட, நாட்காட்டியின் பிரதிகளோடு  வந்தார். அமெரிக்காவில்,  ஹவாயில் இருந்து வெளிவரும், “ஹிந்துயிசம் டுடே” ஆசிரியர் சுவாமி ஆறுமுகம் அவர்களின் பிரத்யேக வேண்டுகோளுக்கிணங்க, சாதுஜி, சகோதரி நிவேதிதா குறித்த கட்டுரை ஒன்றை, பிப்ரவரி – 19 வெள்ளிக்கிழமை அன்று அனுப்பினார். திங்கள்கிழமை , பிப்ரவரி – 22 அன்று சாது பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்:

“பூஜ்யபாத  குருமஹராஜ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் ஆசியினால் எங்களின் சென்றமாத மும்பை பயணம் பெரும் வெற்றி அடைந்தது.  பொங்கல் திருவிழாவில் நான்காயிரம் மும்பை தமிழர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடையே சாது உரையாற்றினார். நாங்கள் திரு. A.R. ராவ் அவர்களின் இல்லத்தில் ஒரு சத்சங்கத்தை நடத்தி அவரை நமது அகாடமியின் ஒருங்கிணைப்பாளராக நியமித்தோம். நாங்கள் திரும்பி வந்தபின்  பெங்களூர் சென்று ‘தத்துவ தர்சனா’ மற்றும் “ராம்நாம்” புத்தக தட்டச்சுப் பிரதிகளை எடுத்துவிட்டு, குருகுல ஆசிரமத்தின் கட்டிடத் திட்டத்தையும் கவனித்துவிட்டு வந்தோம். 

பிப்ரவரி 26 , 1999 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ குலசேகர ஆழ்வாரின் ஜெயந்தி நாளாகிய அன்றைய புனிதநாளில், பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், ஸ்ரீனிவாசாநகரில், சகோதரி நிவேதிதா அகாடமி மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மையத்தின் நூலகம் மற்றும் குருகுல ஆசிரமத்தின் அடிக்கல் நாட்டுவிழாவை நடத்த விருப்பம் கொண்டுள்ளோம். இந்த சாது, திருமதி பாரதி மற்றும் சிரஞ்சீவி விவேக்கும் பெங்களூருக்கு 24 ஆம் தேதி இரவு பயணிக்க இருக்கிறோம். இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணியை அடுத்த யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்குள் முடிக்க நாங்கள் உங்கள் ஆசிர்வாதங்களுக்காக பிரார்த்திக்கிறோம். நாங்கள் சென்னைக்கு பிப்ரவரி 28 அன்று திரும்புவோம் என எதிர்ப்பார்க்கிறோம். நாங்கள் அதன்பின் திருவண்ணாமலைக்கு உங்கள் தரிசனத்தை பெற வருவோம். அப்போது ‘தத்துவ தர்சனா’ மற்றும் “ராம்நாம்” புத்தகத்தையும் உங்கள் பாதங்களில் சமர்ப்பித்து உங்கள் ஆசியைப்பெற்றப்பின் இந்த சாது தனது ஆறாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வான். 

நாங்கள் இன்னமும் விமான டிக்கெட்டை பெறவில்லை. நாங்கள் எங்களது தென். ஆப்பிரிக்கா நண்பர்களிடம் இருந்து பெற்றுள்ள தகவலின்படி, டிக்கெட் டிராவல் ஏஜெண்ட் மூலம் ஏற்பாடாகி உள்ளதாக தெரிகிறது. எந்த நேரத்திலும் வரும் என எதிர்பார்க்கிறோம். அதனை நாங்கள் பெற்றவுடன் மொரிஷியஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து விசாக்களை பெற்று எங்களது விமான பயணநாளை உறுதிசெய்வோம். நாங்கள் பகவானின் ஆசியை பயணத்தின் வெற்றிக்கு வேண்டுகிறோம். மொரிஷியஸ் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம், V.H.P., மற்றும் ஆன்மீக இயக்கங்கள் திட்டமிட்டுள்ள ராமநாம ஜப யக்ஞத்திற்கும், தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஹிந்து விழிப்பு இயக்கம் மற்றும் சகோதரி நிவேதிதா அகாடமியின் நிகழ்ச்சிகள் வெற்றி பெறுவதற்கும் தங்களின் ஆசியை வேண்டுகிறோம். 

நாங்கள் “பூஜ்ய சுவாமி சச்சிதானந்த்ஜி அவர்களின் அர்ப்பணிப்பின் பொன்விழா ஆண்டு மலர்” பிரதியை சுவாமிஜியிடமிருந்து அவரது ஆசீர்வாதத்துடன் பெற்றோம். அதில், உங்கள் உத்தரவின்படி நாங்கள் எழுதிய கட்டுரையை ஆனந்தாஸ்ரமம் வெளியிட்டுள்ளது. பிரதியைப் பெற்றுக் கொண்டு எங்களது நன்றியை தெரிவித்துள்ளோம். 

திருமதி பாரதி, சிரஞ்சீவி் விவேகானந்தன், சௌ நிவேதிதா மற்றும. அவளது குடும்பத்தினர் தங்களின் நமஸ்காரங்களை உங்களுக்கும் சுதாமா சகோதரிகளுக்கும் தெரிவிக்கின்றனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். “

சாது திருமதி. பாரதி , சிரஞ்சீவி். விவேக் மற்றும் திரு. ரமேஷ் பெங்களூருக்கு புதன்கிழமை பிப்ரவரி 24 அன்று காவேரி எக்ஸ்பிரஸ் மூலம் புறப்பட்டு, அவர்கள் அடுத்தநாள் காலையில் சென்றடைந்தனர். பூமி பூஜை, வாஸ்து பூஜை , நவக்ரஹ ஹோமம் மற்றும் விஷ்வக்சேனா ஹோமம் போன்றவை அனைத்தும் மங்களகரமாக, ஸ்ரீநிவாச நகரில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் ஸ்தாபகர், திரு. சம்பத் பட்டர் மூலம் நடத்தப்பட்டது. திரு. கார்த்திக் என்ற ஒப்பந்தக்காரர் இடம், பாரதமாதா குருகுல ஆசிரமத்தின் கட்டுமானத்தை துவங்குவதற்கான முன்பணம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை ஒன்று ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நடத்தப்பட்டது. சனிக்கிழமையன்று சாது அனைத்து பக்தர்களுக்கும் ஆசிரம பணி  துவக்கம் குறித்து தகவல் தெரிவித்தார். திருமதி. பாரதி, சிரஞ்சீவி. விவேக் மற்றும் திரு. ரமேஷ் ஆகியோருடன் சாது, சென்னைக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் மூலம் அடுத்தநாள் காலை திரும்பினார். 

மார்ச் 11, 1999 அன்று நிவேதிதா தொலைபேசியில் அழைத்து, தான் திரு. கிருஷ்ணா கார்ஸில் மூலம் பெற்ற தகவலில், அவர் மொரிஷியஸ் நிகழ்ச்சிகளை, தவிர்க்க இயலாத காரணங்களுக்காக, ஒத்தி வைக்கும்படி கூறியுள்ளதாக தெரிவித்தாள். சாது நிவேதிதாவிடம் ஏற்கனவே மொரிஷியஸிற்கான விமான டிக்கெட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், தான் மொரிஷியஸ் வழியாகவே தென் ஆப்பிரிக்கா செல்லவேண்டும் என்றும் கூறினார். பகவான் விரும்பினால் தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வருகையில் மொரிஷியஸ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்றார். சாதுஜி பகவானுக்கு ஒரு ஃபேக்ஸ் தகவலை, அடுத்தநாள் திருவண்ணாமலைக்கு வருவதாக, மார்ச் 13 அன்று அனுப்பினார். 

சாது திரு. G.V. ஸ்ரீதர், திரு.மோகன் ஆகியோருடன் காரில் திருவண்ணாமலைக்கு மார்ச் – 14 ஞாயிற்றுக்கிழமையன்று சென்று பகவானின் இல்லத்தை காலை 9.30 மணிக்கு அடைந்தார். ஜஸ்டிஸ் அருணாச்சலம் மற்றும் திரு. சக்திவேல் சாதுவை வரவேற்றனர். பகவான் ஆசிரமத்திற்கு வந்தப்பின் சாது ராமநாம ஜெபத்தை பிரார்த்தனை கூடத்தில் முன்நடத்தினார். பின்னர் பகவான் சாதுவை தனதருகே அழைத்தார். சாது தன்னுடன் வந்த பக்தர்களை யோகிக்கு அறிமுகப்படுத்தினார். பகவான் ரவியிடம் சாது அனுப்பியிருந்த நிகழ்ச்சிநிரல் தகவலை கொடுக்குமாறு கூறினார். அது அச்சமயம் அங்கே தயாராக இல்லாதமையால் சாது தனது  தென் ஆப்பரிக்க பயணத்தின் நிகழ்ச்சி நிரலை விளக்கினார். சாது பகவானிடம் தான் 23 ஆம் தேதி சென்னையிலிருந்து மும்பைக்கும், 24 ஆம் தேதி மும்பையில் இருந்து நேரடியாக தென் ஆப்பிரிக்காவிற்கும் செல்வதாக கூறினார். அவரது விமானம் மொரிஷியஸ் வழியாக சென்றாலும் தான் அங்கே தங்கபோவதில்லை என்றும், திரும்பி வருகையில் தான் மொரிஷியஸில் தங்க கூடும் என்றார். பகவான் சாதுவின் பயணத்திட்டத்தை ஆசீர்வதித்து, “என் தந்தை ரங்கராஜன் மேற்கொள்ளும் பணியில் மகிழ்வோடு இருக்கிறார். உனது நிகழ்ச்சி பெரும் வெற்றியடையும்.“ என்றார். பகவான் சென்னையின் ராமநவமி விழா குறித்து கேட்டார். சாது பக்தர்கள் அகண்ட ராமநாமத்தோடு விழா கொண்டாடுவார்கள் என்றார். பகவான் அந்த நிகழ்ச்சியை ஆசீர்வதித்தார். 

சாது, பகவானிடம், பாரதமாதா குருகுல ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் மையத்தின் பூமிபூஜை, பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ஸ்ரீநிவாச நகரில், பகவானின் ஆசி மற்றும் கருணையால் சிறப்பாக நடைப்பெற்றது என்றார். பகவான், “அனைத்தும் தந்தையின் கருணை“ என்றார். பகவான் சாதுவிடம் குருகுல ஆசிரமத்தில் மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்து கேட்டார். சாது, முக்கிய பணி, ஹிந்து சிந்தனை மற்றும் பண்பாடு பற்றி இளைஞர்களுக்கு பயிற்றுவித்து, உள்நாட்டின் பல பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் பிரசாரகர்களாக அனுப்புவது என்றார். பகவான் ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம் குருகுலத்துடன் இணைக்கப்படுமா என்று வினவினார். சாது அவைகள் குருகுல ஆசிரமத்தில் சகோதரி நிவேதிதா அகாடமியின் பகுதியாக செயல்படும் என்றார். பகவான், “என் தந்தை உனது பணியின் வெற்றிக்கு ஆசீர்வதிப்பார்“ என்றார். சாது பகவானிடம் நிவேதிதா கட்டுமானப்பணிகளை கவனித்து வருகிறாள் என்றார். யோகி தனது ஆசிகளை நிவேதிதா, விவேக் மற்றும் பாரதிக்கு வழங்கினார். பகவான் நிவேதிதாவின் குழந்தை ஹரிப்ரியா எனும் சிவா பள்ளிக்கு செல்வதை கேட்டு மகிழ்ந்தார். பகவான் , “அவள் நன்றாக படிப்பாள், ஹரிப்ரியாவிற்கு என் தந்தையின் ஆசிர்வாதங்கள்” என்றார். 

பகவான் தனது கரங்களில் ‘தத்துவ தர்சனா’வின் 15 வது ஆண்டுமலர் 1999 இதழை எடுத்து அதன் அட்டைப்படத்தில் இருந்த ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் அன்னை  புகைப்படத்தை மிகுந்த ஆர்வத்தோடு கவனித்தார். பின்னர் அவர் இந்த இதழில் ஏதேனும் அன்னை குறித்த கட்டுரைகள் இருக்கின்றனவா என்று கேட்டார். சாது அதற்கு பதில் அளிக்கையில், பாரிசில் உள்ள இன்ஸ்டிட்யூட் டே  ரிசர்ச்சஸ் ஏவோல்யூடிவ்ஸ் மற்றும் மைசூரிலுள்ள மீரா அதிதி சென்டர் வெளியிட்டுள்ள “அன்னை பாரதம் — அன்னையின் வார்த்தைகளிலிருந்து ஒரு தேர்வு“ (INDIA THE MOTHER – A Selection From Mother’s Words) என்ற நூல் குறித்த ஒரு விரிவான மதிப்புரை தான் எழுதியுள்ளதாக கூறினார். பகவான் அந்த கட்டுரையை தனக்காக படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சாது அதனை படித்தார். பகவான் பூஜ்ய தபஸ்வி பாபா அவதூத் அவர்களின் ராம்நாம் குறித்த புத்தக பிரதிகளை பார்த்தார். சாது பகவானிடம் இந்த புத்தகம் ராமநாம பக்தர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வினியோகம் செய்வதற்காக அச்சிடப்பட்டதாக கூறினார். பகவான் ‘தத்துவ தர்சனா’ மற்றும் “ராம்நாம்” புத்தகங்களில் கையொப்பம் இட்டு யோகி ராம்சுரத்குமார் இந்தோலாஜிக்கல் ஆராய்ச்சி மைய நூலகத்திற்காக கொடுத்தார். பின்னர் அவர் சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை எடுத்து, “என் தந்தையின் பணிக்கான பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும்“ என்றார். சாது பகவானிடம் வெளிநாட்டவர்களுக்கான ஒரு சேதியை கூறுமாறு கேட்டார். பகவான் அவர்களுக்கான சேதியை கூறுகையில், அவர்கள் எனது தந்தையை பிரார்த்திக்கட்டும். அவரது பெயரை எப்போதும் ஜபிக்கட்டும். அவர்கள். எப்போதும் எனது தந்தையை நினைவில் கொண்டிருக்கட்டும். அவர் இவர்களை கவனித்துக்கொள்வார். என் தந்தை அனைவருக்கும் உரியவர். அதுவே இந்தப்பிச்சைக்காரனின் சேதி !” என்றார். 

சாது பகவானிடம் பகவான் மற்றும் ராமநாமத்தை எங்கும் பரப்புவதற்கான வலிமையை தருமாறு கோரினார். போகி பதிலளிக்கையில், “ நீ எனது தந்தையின் பணியை மிகச்சிறப்பாக செய்வாய் !“ என்றார். சாதுவும் பிற பக்தர்களும் பகவானிடம் விடைப்பெற்று சென்னைக்கு மாலையில் திரும்பினர். வீடு திரும்பியப்பின் சாது விசாவிற்கான ஆவணங்களை தயார் செய்து அவைகளை டெல்லிக்கு அனுப்பினார். சாதுவிற்கு டெல்லியின் விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் இருந்து கிடைத்த சேதியின் படி அவரது விசா 24 ஆம் தேதியே கிடைக்கும் என்று தகவல் கிடைக்க, சாது ஏர் இந்தியாவிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது பயணத்தை விசா கிடைக்கும் வரை ஒத்தி வைக்குமாறு கூறினார். மார்ச் 19 அன்று தென் ஆப்பரிக்காவின் அம்ஷலாளியை சேர்ந்த திரு  ராம்பிரசாத் மற்றும் அவரது மனைவி சாதுவின் இல்லத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் மூலமாக  சாது தென்னாபிரிக்காவில் உள்ள சகோதரர்களுக்கு தனது பயணத்திட்டத்தை தெரிவித்தார். “கிறிஸ்துவ மதமாற்றம் மற்றும் இந்திய தேசியத்திற்கான அச்சுறுத்தல்கள்” குறித்து சாதுவின் பேட்டியை வெளியிட்டு,  பெங்களூரில் இருந்து வெளியாகும் “எமினன்ஸ்” பத்திரிக்கை மார்ச் 22 அன்று, வந்து சேர்ந்தது. மார்ச் 24 அன்று பகவானின் பக்தர்கள் சக்திவேல் மற்றும் பரிமேலழகன் பகவானின் சேதி குறித்த நகலோடு வந்தனர். 

ராமநவமி சிறப்பு சத்சங்கம் அகண்ட ராமநாமத்துடன் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சார்பில் கே.கே.நகர் அய்யப்பன் கோயிலில் நடைப்பெற்றது. இளைஞர் சங்கத்தின் துணைத் தலைவர் திரு. K.N. வெங்கடராமன் மற்றும் திரு B வெங்கடராமன் அதிகாலையில் அகண்ட ராமநாமத்தை முன்நடத்தினர். ராமநாம இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு D.S. கணேசன், மற்றும் சென்னையை சுற்றியிருக்கும் பக்தர்கள் நாள் முழுதும் நடைபெற்ற அகண்ட ராமநாமத்தில் பெருமளவில் கலந்து கொண்டனர். மாலை 5 க்கு நிறைவு விழா நடைப்பெற்றது. சாதுஜி பக்தர்களிடையே அவரது அயல்நாட்டு பணியை குறித்து பேசினார். கோயிலைச் சார்ந்த நம்பூதிரிகள் ராமநவமி விழாவில் கலந்து கொண்டு சிறப்பு தாந்தரீக பூஜையை ராம்பிரானுக்கு மேற்கொண்டார்கள். சாஸ்தா சங்கத்தின் தலைவர் திரு. R.K. பரதன் கோயிலில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததற்கு, சாதுவிற்கும் பகவானின் பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.                              

புதன்கிழமை மார்ச் – 31 அன்று, 115 வது பப்பா ராம்தாஸ் ஜெயந்திவிழா ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திர் ஹாலில், சென்னை ஷெனாய் நகரில், நடைப்பெற்றது. சாதுஜி பப்பா மற்றும் பகவான் பக்தர்களிடையே உரையாற்றுகையில், மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்கள் உலக அமைதிக்காக துவங்கிய நாம ஜெப யக்ஞம்  உலகெங்கும் பரப்புவதற்காக பகவான் சாதுவிற்கு தீக்ஷை அளித்தது குறித்தும், அகில உலக ராமநாம இயக்கம் மற்றும் சாதுவின் தென்ஆப்பரிக்கா பயணம் குறித்தும் பேசினார். ஸ்ரீ குருஜி முரளீதர சுவாமிகளும் கூட்டத்தினரிடையே உரையாற்றினார்.

 . 

குருகுல ஆசிரமத்தின் பணிகள் குறித்த முன்னேற்றம் பற்றி பார்வையிட சாது ஒரு பயணத்தை பெங்களூருக்கு ஏப்ரல் 4, 1999 அன்று மேற்கொண்டு, அடுத்தநாள் சென்னை திரும்பினார். ஏப்ரல் 20, செவ்வாயன்று, சாதுவின் தென் ஆப்பிரிக்கா பயணத்திற்கான விசா, டெல்லியில் உள்ள தென் ஆப்பரிக்க தூதரகத்தில் இருந்து வந்து சேர்ந்தது. சாது, மும்பை பயணத்திற்கு ஜெட் எயர்  விமானசேவை,  மற்றும் தென்னாப்பிரிக்க டர்பனுக்கான பயணத்திற்கு எயர் இந்தியாவுடனும் தொடர்பு கொண்டார். சாது, தாயகத்தை விட்டு புறப்படுவது குறித்த கடிதம் ஒன்றை அடுத்தநாள் பகவானுக்கு எழுதினார்:

“பூஜ்யபாத  குரு மஹராஜ்,

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் !  மா தேவகி மற்றும் அனைத்து சுதாமா சகோதரிகளுக்கும் எனது வணக்கமும், அடிபணிதலும் !

உங்கள் கருணை மற்றும் அளவற்ற ஆசியினால் இந்த சாது இறுதியாக தனது தென் ஆப்பிரிக்கா பயணத்திற்கான விசாவை பெற்றுவிட்டான். இந்த சாதுவின் தென் ஆப்பிரிக்கா பயணம் அங்கு ஹிந்து சமயப் பிரசாரம் செய்வதற்கானதால்,  டில்லியில் உள்ள தென்னாப்பிரிக்க தூதரகம் பிரிட்டோரியாவில் அந்த அரசின் உள்நாட்டு இலாக்காவிற்கு தெரிவித்து அனுமதி கேட்டிருந்தது. தென்னாப்பிரிக்க அரசாங்கம் அனுமதி அளித்ததை  தொடர்ந்து விசா வழங்க ஏற்பாடாயிற்று. சில தாமதங்கள் ஆனபோதும், தென் ஆப்பிரிக்கா அமைச்சகம் பலமுறை நுழைவதற்கான விசாவை தந்துள்ளனர். நேற்று முன்தினம் நாங்கள் விசாவை பெற்றோம். இன்று நாங்கள் எங்களது மும்பை, மொரிஷியஸ் மற்றும் டர்பன் பயணத்திற்கான பயணச்சீட்டுகளை உறுதி செய்தோம், நாளை, 22-4-1999, சென்னையிலிருந்து கிளம்புகிறான். இரவு 7.35 மணிக்கு மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் மூலம் சென்று, அங்கிருந்து 23 ஆம் தேதி காலை 2-45 க்கு ஏர் மொரிஷியஸ் மூலம் மொரிஷியஸிர்கு பயணித்து, 7-15 க்கு மொரிஷியஸ் அடைந்து, அங்கிருந்து 8-20 க்கு கிளம்பி டர்பனுக்கு 10-25 க்கு சென்றடைவோம்  ஏர் இந்தியா, ஏர் மொரிஷியஸ் இடம் இந்த சாதுவிற்கு வி.ஐ.பி சலுகைகளை வழங்குமாறு கூறியிருப்பதால் இந்த சாதுவின் பயணம் மிகவும் சௌகரியமாக அமையும். நாங்கள் உங்கள் ஆசியை உங்களின் பெயரையும், ராமநாமத்தையும் பரப்ப வேண்டுகிறோம். 

நாங்கள் ஜூலை மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்புகையில், மொரிஷியஸில் தங்க எண்ணுகிறோம். நாங்கள் கிருஷ்ணாவிடம் எங்கள் பயணத்திட்டத்தை அறிவித்துவிட்டோம். 

சௌ நிவேதிதா மற்றும் குழந்தை ஹரிப்ரியா, இந்த சாதுவை விமான நிலையத்தில் வழியனுப்ப, இன்று மாலை இங்கு வருகின்றனர். திருமதி. பாரதி, சிரஞ்சீவி. விவேகானந்தன், சௌ.நிவேதிதா மற்றும் அவளின் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் தாழ்மையான நமஸ்காரங்களை பகவானுக்கும், சுதாமா சகோதரிகளுக்கும்  தெரிவிக்கின்றனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்.”

வியாழக்கிழமை , ஏப்ரல் 22 அன்று திருமதி பாரதி, விவேக், ராஜி மற்றும் குழந்தைகள், மற்றும் ஹரிப்ரியா சாதுவை சென்னை விமான நிலையத்தில் 7-35 க்கு மும்பை செல்லும் விமானத்தில் வழியனுப்பினா். திரு ஏ.ஆர். ராவ்,  திரு மோகல், திரு தேஷ்பாண்டே மற்றும் திரு ஷெனாய், மும்பை விமான நிலையத்தில் சாதுவை வரவேற்று,  பின்னர் சர்வதேச விமான நிலையத்தில் காலை 2-30 க்கு மொரீஷியஸுக்கு புறப்படும்  எம் கே ஃபிளைட்  751  விமானத்தை பிடிக்க அங்கு கொண்டு சென்று, வழியனுப்பினார்கள். மொரிஷியஸிற்கு  காலை 7-30 மணிக்கு சென்றடைந்த போதிலும் அங்கு யாரையும் சந்திக்க இயலவில்லை, தொலைபேசியில் பேசவும் முடியவில்லை. இருப்பினும் தென்னாப்பிரிக்க ஸ்டாங்கரை சார்ந்த திரு பிரேம் அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து, அவருடன் எம் கே ஃபிளைட் 845-ல் பயணித்து  காலை 10-35 க்கு டர்பன் சென்றடைந்தோம். சாதுவை டர்பன் விமானநிலையத்தில் திருமதி ஷெரிதா , திரு. டெட்டி, திரு. ட்ரிசேன், திரு கமல் மஹராஜ், திரு. துளஸிதாஸ், திரு. ஜெயராம், சௌ. லோகி மற்றும் அன்னையர்கள் வரவேற்றனர். சாதுவிற்கு பாதபூஜையை விமானநிலையத்திலேயே செய்தனர். சாது அவர்களோடு டோங்காட் வந்தடைந்தார். 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s