ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.9 – 2.14

அத்தியாயம் 2.9 

உலக ராம்நாம் இயக்கத்தின் தோற்றம்

தெய்வீக கங்கை கங்கோத்ரியில் ஸ்ரீ ஹரியின் பாதங்களில் சிற்றோடையாக துவங்கி, பெரும் நதியாக வடிவெடுத்து பல மலைகள் கடந்து, சமதளத்தில் பாய்ந்து அன்னை பூமியை வளமாக்கி, வளர்த்து வருகிறது. வயல்களை அது புன்னகைக்க வைக்கிறது. பழத்தோட்டங்களையும், அடர்த்தியான காடுகளையும், கட்டப்பட்ட பெரு நகரங்களையும், சாம்ராஜ்யங்களையும், பேரரசுகளையும் கடந்து இறுதியாக இந்த பூமியை புனிதப்படுத்தி ஆழமான கங்காசாகர். கடலுக்குள் புகுகிறது

ஆனந்தாஸ்ரமத்தை சேர்ந்த மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களால் துவக்கப்பட்ட நாம ஜப யக்ஞ இலக்கை தொலைதூர நிலங்களிலும் பரவச் செய்யும் இந்த சாதுவின் எதிர்கால பணிக்காக, ஆழமான தொலைநோக்குடன், ராமநாம தாரக மந்திரமான, ‘ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்’ என்ற மந்திரத்தில் எனக்கு யோகி தீக்ஷை அளித்தது 1988 ஆம் ஆண்டு பப்பா ராம்தாஸ் ஜெயந்தி விழா அன்று, மாதாஜி மஹா சமாதி ஆவதற்கு பத்து மாதங்களுக்கு முன்னதாகவே நடந்தது. உலக ராம்நாம் இயக்கத்தின் விதை இந்த சாதுவிற்குள், குருவால் மார்ச் 6, 1989 அன்று அவரை சந்தித்தப்போது ஆழமாக என் இதயத்தில் விதைக்கப்பட்டது. இருப்பினும் யோகி இந்த சாதுவிடம், காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தை மாதாஜிக்குப்பின் நிர்வகித்து வரும் பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் அவர்களை தொடர்பு கொண்டு அவரது ஒப்புதலையும் , ஆசியையும் பெற்றுவிட்டே இந்த பிரச்சாரத்தை துவக்க வேண்டும் என்றார். குருவின் ஆசியால் அடுத்த நாளே சாது சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வழி நீலகிரிக்கு புறப்பட்டான். நீலகிரியில் தாங்காடு கிராமத்தில் மார்ச் 13, 1989, அன்று வடுகா சகோதரர்கள் நடத்த இருந்த தீமிதி விழாவில் தலைமை தாங்க இந்த சாது அழைக்கப்பட்டிருந்தார். மார்ச் 9 அன்று இந்த சாது , பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு நீலகிரி தீமிதி விழா முடிந்த உடனேயே காஞ்சங்காடு வருவது குறித்து ஒரு கடிதம் ஒன்றை எழுதினான். அதில் தனது காஞ்சன்காடு பயணத்தின் நோக்கம் ராமநாம ஜப யக்ஞம் விரைவாக துவக்குவதே என்று எழுதியிருந்தான்.

உண்மையில் சாது பகவானிடம் தீக்ஷை பெற்ற உடனேயே ராமநாம பிரசாரத்தை துவக்கி இருந்தார். 1988 ஜூன் மாதம் நீலகிரி தங்காடு கிராமத்தில் ஒரு சிறிய கூட்டத்தில் ராமநாம ஜப இயக்கத்தை திரு. மோகன் என்பவர் தலைமையில் துவக்கி, அவர்களிடம் நாம ஜப எண்ணிக்கையை பெற்று தனக்கு அனுப்பும் பணியை இந்த சாது தந்திருந்தார். அந்த கிராம மக்கள் சீரிய முறையில் இந்த ஜெப சாதனையை துவக்கி இருந்தார்கள். தமிழகத்தில் பல குடும்பங்கள், குடும்பத்தினர் நடத்தும் சத்சங்கங்கள் போன்றவை யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தில் இணைந்திருக்கின்றன. அகில உலக ராமநாம இயக்கத்தை துவங்கும் எண்ணம் இந்த சாதுவின் உள்ளத்தில், குருநாதரை, தீமிதி விழாவிற்கு முன் சந்தித்தபொழுது, உதயமாகியது. தங்காடு கிராமத்தவர்கள் உலக ராம்நாம் இயக்கத்தைப் பற்றி கேள்விப்பட்டு அந்த இயக்கத்தை தங்கள் நீலகிரி மலையில் துவக்கவேண்டும் என்றும் எப்படி கங்கையானது தனது பயணத்தை கங்கோத்ரியில் இருந்து துவங்குகிறதோ , அவ்விதமாக இந்த நிகழ்வு நீலகிரியில் துவங்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். இந்த சாது அவர்களின் கோரிக்கையை ஒப்புக்கொண்டு மோகன் என்பவரை என்னுடன் காஞ்சன்காடு வந்து பூஜ்ய சுவாமி சச்சிதானந்தாவிடம் ஒரு முறையான ஒப்புதலை பெற்றுவிட்டு பின்னர் இந்த இயக்கத்தின் துவக்கம் குறித்து அறிவிக்கலாம் என்றேன். 

இந்த சாது தங்காடு கிராமத்தில் உள்ள கோயிலின் சமூக பிரார்த்தனை கூடத்தில் பக்தி யோகா குறித்த உரையை மார்ச் 7 1989 ல் துவக்கினான். ஐப யக்ஞத்தின் முக்கியத்துவத்தை இந்த விரிவுரைகளில் அழுத்தமாக பதிவு செய்தேன். ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய ஜெயராம் என்ற தாரக மந்திரத்தை ஏற்கனவே லிகித ஜபமாக எழுதிய பிள்ளைகள் தங்களின் நோட்டு புத்தகங்களோடு வந்தனர். அவர்களுக்கு ‘தத்துவ தர்சனா’ இதழை நாங்கள் பரிசளித்தோம். மார்ச் 10 தேதி அந்த கிராமத்தின் மூத்தவர்கள் தீமிதி திருவிழாவிற்கான மரங்களை கொண்டுவர காட்டுக்கு சென்றபோது இந்த சாதுவும் அவர்களோடு கலந்து கொண்டான். மார்ச் 11 ஆம் தேதி பக்தி யோகம் குறித்த எனது இறுதி உரையை முடித்தேன், பக்தர்கள் தங்களின் நாம ஜப எண்ணிக்கை 30,000 என்பதை முன் வந்து அறிவித்தனர். தங்காடு மோகன் தங்கள் கிராமத்து மக்களின் இலக்கு ஒரு கோடி நாம ஜபம் என அறிவித்தார். அடுத்தநாள் ஒரு அன்னையை நாங்கள் அந்த கிராமத்தில் சந்தித்தோம். அவர் தனது கனவில் ஒரு சன்னியாசி தோன்றியதாகவும் அவர் தன்னை ராமநாம ஜப சாதனாவில் ஈடுபடும்படி கூறியதாகவும் பகிர்ந்தார். கிருத்திகை பூஜை அந்த கிராமத்தின் கோயிலில் மாலை  நடைபெற்றது, அந்த கிராமத்தின் தலைவரான திரு. கணபதி இந்த சாதுவை கௌரவித்தார். மார்ச் 13 , 1989 அன்று காலையில் நீலகிரியை சேர்ந்த பல மக்கள் அந்த கிராமத்திற்கு தீமிதி திருவிழாவை காண வந்திருந்தனர். இரவு முழுவதும் பல மரத்துண்டங்கள் எரிக்கப்பட்டு, நெருப்பு கங்குகள் மண்ணின் வைரங்களாக மின்னின. அந்த கடும் வெப்பத்தை பொருட்படுத்தாமல் பலர் அந்த குண்டத்தில் தீ மிதிக்க தயாரானார்கள். அந்த தீ மிதி, ‘பூ மிதி’ என்று அழைக்கப்படும் மக்கள் பூவினை மிதிப்பது போல் தீயினை பக்தியோடு மிதித்து நடப்பார்கள். இந்த சாது அந்த குண்டத்தின் தலைப்பகுதியில் நின்று கொண்டிருக்க, பக்தர்கள் வந்து வணங்கி ஒருவர்பின் ஒருவராக தீ மிதிக்க இறங்கினர். அவர்கள் கையில் ஒவ்வொருவரும் புனிதமாக கருதப்பட்ட ஒரு பிரம்பை வைத்திருந்தனர். இந்த சாது 1985-ல், இந்திய பெருங்கடலில் மொரீஷியஸ் அருகில் உள்ள ரீயூனியன் தீவுகளுக்கு சென்றபொழுது அந்த தீவுகளில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் இருந்து சென்ற புலம் பெயர்ந்த மக்கள், பூ குண்டம் என்ற நிகழ்வில் அங்கே அந்த தீ மிதியை நடத்துவதை அறிந்தான். நம்பிக்கை மலையை அசைக்கும்,  நெருப்பை மலராக்கும், அறிவியலும், காரணங்களும் ஆழமான நம்பிக்கை மற்றும் பக்தியின் முன் ஊமையாகி போகும். அடுத்தநாள் அந்த கிராம மக்களிடம் விடைபெறும் முன் அந்த கிராமத்தின் மூத்தவரான யோகி சுவாமி என்பவர் வந்து இந்த சாதுவிடம் குண்டம் மிதியில் பயன்படுத்தப்பட்ட பிரம்பை மிக மரியாதையோடு தந்தார். நான் அதை பக்தியுடன் பெற்றுக் கொண்டேன். நான் மோகனோடு நீலகிரியில் இருந்து கோயம்புத்தூர் வந்து அங்கிருந்த விஸவநாத் என்ற ஒரு பக்தரின் வீட்டில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு இரவு கேரளாவில் உள்ள காஞ்சன்காட்டிற்கு சென்றோம். 

இந்த சாதுவும், மோகனும் ஆனந்தாஸ்ரமத்தில் மார்ச் 15 , 1989 ல் அன்போடு வரவேற்கப்பட்டோம். பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் நாங்கள் தங்குவதற்கு ஒரு குடிலை ஏற்பாடு செய்தார். காலை கடமைகளுக்குப்பின், பிரார்த்தனை மற்றும் காலை உணவிற்குப்பின், இந்த சாது சுவாமி சச்சிதானந்தர் உடன் பூஜ்ய மாதாஜியின் சமாதி மந்திர்க்கான அடிக்கல் நாட்டும் விழாவில் இணைந்தான். அடுத்தநாள் நாங்கள் ஆனந்தாஸ்ரமத்திலிருந்து யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினோம். அதன்பின் நாங்கள் சுவாமி சச்சிதானந்தர் உடன் அமர்ந்து உலக ராமநாம் இயக்கத்தை யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் மூலம் ஆரம்பிக்க இருப்பது குறித்து பேசினோம். சுவாமி சச்சிதானந்தர் அதனை ஆசீர்வதித்ததோடு மட்டுமல்லாமல் தினமும் குறைந்தபட்சம் 108 முறை லிகித ஜபம் வாய்மொழியான ஜபத்தோடு செய்வதற்கு பக்தர்களிடம் கூற வேண்டும் என்றும் கூறினார். அடுத்தநாள் காலை நாங்கள் பூஜ்ய மாதாஜி அவர்களின் அறைக்கு சென்று அவரது படத்துக்கு முன் எங்களின் முயற்சிகள் வெற்றிபெற ஆசீர்வதிக்குமாறு பிரார்த்தனை செய்தோம். நாங்கள் மேலும் சிறிது நேரம் சுவாமி சச்சிதானந்தர் உடன் செலவழித்து விவரமான திட்டங்களை பேசினோம். யோகியிடம் நான் தீக்ஷை பெற்ற ஆலமரத்து குகை நிகழ்வின் போது உடனிருந்த பின்லாந்தை சேர்ந்த கிறிஸ்டி ( சிவப்ரியா ) நாங்கள் காஞ்சன்காட்டில் இருந்தபோது அங்கே வந்திருந்தார். சனிக்கிழமை நாங்கள் கிளம்பும் முன் இந்த சாதுவும், மோகனும் சுவாமிஜியால் அழைக்கப்பட்டு, அவர் ஒரு கட்டு துளசி மாலைகளையும், புகைப்பட கட்டுக்களையும் ராமநாம பிரசாரத்தின் போது பயன்படுத்த எங்களிடம் வழங்கினார். அவர் நாங்கள் திரும்புவதற்கான ரயில் டிக்கெட்களையும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் நாங்கள் பணம் தர முயன்றபோது அதனை அவர் வாங்க மறுத்தார். அன்று மாலை நாங்கள் ஹோம மந்திர், மாதாஜியின் சமாதி மற்றும் பிரார்த்தனை கூடத்திற்குச் சென்று வழிபட்ட பிறகு சுவாமிஜியை சந்தித்து விடைபெற்றோம். அவரிடம் இந்த சாது சேலத்தில் கன்னியாக்குமரி மாயம்மாவையும் பிறகு திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் அவர்களையும் சந்திக்க இருப்பதாக கூறினோம். சுவாமிஜி எங்களுக்கு இரண்டு பிரசாத பைகளை தந்ததோடு, அன்னை மாயி மற்றும் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கும் பிரசாத பைகளை தந்தார். 

நாங்கள் காஞ்சன்காட்டில் இருந்து சேலம் வந்து அங்கே இருக்கும் சாரதா கல்லூரியின் பேராசிரியர்களான தேவகி மற்றும் கமலா என்ற யோகி ராம்சுரத்குமார் பக்தர்களை சந்தித்தோம். அவர்கள் இருவரும் எங்களின் ராமநாம ஜப சாதனாவில் இருப்பவர்கள். பேராசிரியர் கமலா எங்களோடு ஏற்காடு மலையடிவாரத்தில் இருக்கும் மாயம்மாவின் இருப்பிடத்திற்கு வந்தார். நாங்கள் மதிய நேரத்தை அன்னை மாயி உடன் செலவழித்து அவரிடம் ஆனந்தாஸ்ரம பிரசாதங்களை தந்தோம். பின்னர் அவரின் பிரசாதங்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்று கிளம்பினோம். பேராசிரியர் தேவகி மற்றும் பேராசிரியர் கமலா எங்களுக்காக மதிய உணவை அவர்களது கல்லூரியின் தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்திருந்தனர். மதிய உணவிற்கு பிறகு அவர்களிடம் விடைப்பெற்று நாங்கள் திருவண்ணாமலைக்கு பயணித்தோம். 

நாங்கள் பகவான் யோகி ராம்சுரத்குமார் இல்லத்திற்கு இரவு 7.30 மணிக்கு வந்தடைந்தோம். பகவான் எங்களை அன்போடும், கருணையோடும் வரவேற்றார், ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவருடன் நாங்கள் செலவழித்தோம். இந்த சாது நீலகிரி தீமிதி திருவிழா மற்றும் காஞ்சன்காடு பயணம் குறித்து யோகியிடம் விவரித்தான். யோகி என்னிடம் சுவாமி சச்சிதானந்தர் உடன் நடந்த பேச்சின் விவரங்களை கேட்டறிந்தார். யோகி, சுவாமி சச்சிதானந்தர் உலக ராம்நாம் இயக்கத்தை ஆசீர்வதித்தது குறித்தும், துளசி மாலைகள் மற்றும் படங்களை பிரசாரத்தின் போது விநியோகிக்க  தந்தது குறித்தும் பெரு மகிழ்ச்சி கொண்டார். நாங்கள் யோகியின் முன்னர் ஆனந்தாஸ்ரம பிரசாதங்களையும், தீமிதி திருவிழாவிற்குப்பின் நான் பெற்ற புனிதமான பிரம்பினையும் வைத்தோம். பகவான் தனது குருவின் ஆசிரமத்தில் இருந்து பிரசாதம் பெற்றமைக்கு மகிழ்ந்தார். அவர் தனது உள்ளங்கைகளில் பிரம்பினை எடுத்து மேலும் கீழும் நகர்த்தி, அதனை சக்தியேற்றம் செய்தார். அதன் பின் யோகி தனது இடது கரத்தால் எனது கைகளை பிடித்துக் கொண்டு, வலது கரத்தில் பிரம்பினை உயரே தூக்கி பிடித்தார். அவர் தனது கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்த தியான நிலைக்குச் சென்றார். பின்னர் அந்த பிரம்பினை சாதுவிடம் தந்த யோகி அதனை அவர் எனக்கு அளித்த பிக்ஷா பாத்திரத்துடன் சேர்த்து யக்ஞ தண்டமாக நான் ராம நாம பிரசாரத்திற்காக செல்லும் இடங்களில் எல்லாம் கொண்டு செல்ல உத்தரவிட்டார். யோகி தொடர்ந்து எனது கரங்களைப் பிடித்து எதிர்காலங்களில் நான் செய்ய இருக்கும் செயல்களுக்கு தேவையான ஆற்றலை சக்தியேற்றமாக செய்தார். உலக அமைதிக்கான மாதாஜியின் 15,500 கோடி நாம ஜப யக்ஞத்தை பரப்பும் பணியை நாங்கள் கையில் எடுத்துக் கொண்டமைக்காக எங்களை பாராட்டினார். நாங்கள் கிளம்பும் நேரத்தில் அங்கே வந்த நிவேதிதா மற்றும் விவேகானந்தனை ஆசீர்வதித்ததோடு, அவர்களை தொடர்ந்து யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் பணிகளை தொடருமாறு கூறினார். எங்களை மீண்டும் அடுத்த நாள் கலையில் வருமாறு கூறினார். 

திங்கள்கிழமை , மார்ச் 20, 1989 ன் விடியல் வழக்கத்திற்கு மாறாக பிரகாசமாக இருந்தது. இந்த சாதுவின் வாழ்க்கையில் அவன் புரிய இருக்கும் பெரும் சாதனையின் விடியலாக அது இருந்தது. காலைக்கடமைகளை முடித்துவிட்டு நாங்கள் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். அங்கே இருந்த அர்ச்சகர் எங்களை கருவறைக்கு அழைத்துச் சென்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளை செய்தார். அங்கிருந்து பின்னர் இந்த சாது யோகியின் இல்லத்திற்கு சென்றான். அங்கே யோகி என்னை எதிர்கொண்டு அழைத்து தன் அருகில் அமரவைத்துக் கொண்டு எனது கரங்களை பற்றிக் கொண்டார். அனைத்து பக்தர்களும் யோகியிடம் பேசிக் கொண்டிருந்த போதும் எனது கரங்களை பற்றியவாறே இருந்தார். உலக ராம்நாம் இயக்கத்தை துவக்குவது மிகச்சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி என்று யோகி முன்மொழிந்தார். “யாரெல்லாம் இந்த யக்ஞத்தில் பங்குகொள்கிறார்களோ அவர்கள் எனது தந்தையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மேலும் அது பப்பா ராம்தாஸ் அவர்களிடமிருந்து தீக்ஷை  பெறுவதற்கு இணையான ஒன்றாகும்.” பின்னர் அவர் துளசிதாசரின் ராமசரித மானஸ் காவியத்தில் இருந்து ஒரு பாடலை பாடினார். 

ராம நாம மனி தீப தரு ஜீஹ தேஹரீம் த்வார் | 

துளஸீ பீதர் பாஹேரஹும்  ஜௌம் சாஹஸி உஜியார்  ||

( பாலகாண்டம் , தோஹா 21 ) 

பின்னர் அவரே அதன் பொருளையும்  கூறினார். துளசிதாசர் கூறுகிறார் , நீ உள்ளும், புறமும் வெளிச்சம் பெற விரும்பினால், உன் வாய் என்ற வாசற்படியில், நாக்கு என்ற இடைகழியில் ராம நாமம் என்ற ரத்ன தீபத்தை வைத்துவிடு. பின்னர் அவர் ‘ஏக ஸ்லோகி ராமாயண‘த்தைப் பாடினார். 

அதௌ ராம தபோ வனாதி கமனம் ஹத்துவா ம்ரிகம் காஞ்சனம் 

வைதேகி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரிவ சம்பாஷணம் | 

வாலி நிக்ரஹணம் சமுத்ரதரணம் லங்காபுரீதாஹனம் 

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம் ||” 

“ராமனின் வனவாசம், பொன்மானை கொல்லுதல், வைதேகியின் கடத்தல், ஜடாயுவின் மரணம், சுக்ரீவனுடன் பேச்சு, வாலியை நிர்மூலமாக்கல், கடலினை கடப்பது, லங்காபுரி எரித்தல், அதன்பின் ராவணனையும் கும்பகர்ணனையும் அழித்தல் — இதுவே ராமாயணம்.” 

பகவான் பகவத்கீதையின், ““யக்ஞானானம் ஜப யக்ஞோஸ்மி என்ற ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார். யோகி விவேக் மற்றும் நிவேதிதாவிடம், “மாதாஜி உலக அமைதிக்கான தனது இலக்கான 15,500 கோடி நாம ஜபத்தில்  பத்தில் ஒரு பங்கை

முடிக்க 26 வருடங்கள் ஆகியுள்ளது. இந்த வேகத்தில் இதை முடிக்க 200 வருடங்கள் தேவைப்படும். இப்பொழுது ரங்கராஜன் இந்த யக்ஞத்தை நடத்த ஒரு இயக்கத்தை உலகமெங்கும் தொடங்கியிருக்கிறார். எனவே இன்னும் 20 வருடங்களில் இது முடியலாம். விவேக்கின் இளைஞர் சங்கம் அவருக்கு உதவ இருக்கிறது. என் தந்தை ரங்கராஜன் இந்த பணியை முடிப்பதை பார்ப்பார். எதை அடைய முடியுமோ, அது சிறப்பாய் இருக்கும்.” 

பகவான் இந்த சாதுவிடம் எனது மும்பை பயணம் குறித்தும், அங்கே ராமநாம ஜப யக்ஞத்தை துவக்குவது குறித்தும் கேட்டார். இந்த சாது, ”ஓர் யோகியின் அற்புத தரிசனங்கள்“ என்ற நூலை அச்சிட்ட திரு. A.R. ராவ் என்பவர் மும்பையில் எனது வருகைக்காக காத்திருக்கிறார் என பதிலளித்தேன். 

யோகிஜி, வஜ்ரேஸவரியைச் சேர்ந்த சுவாமி நித்யானந்தா எழுதிய ,’வாய்ஸ் ஆஃப் தி செல்ஃப்’ என்ற புத்தகத்தை நிவேதிதாவிடம் தந்து , ஏதேனும் ஒரு பக்கத்தை எடுத்து அதனை படிக்குமாறு கூறினார். நிவேதிதா அந்த புத்தகத்தை திறந்ததும் அதில் ஜபம் பற்றிய மேற்கோள் ஒன்றை கண்டு அதை வாசித்தார். அதில் ஜபம் குறித்து எழுதப்பட்டிருந்தது. “ஜபம் என்பது கைகளாலோ, வாயாலோ செய்யப்படுவதன்று. சிவம் என்பது மனதால் அறியப்படுவதன்று. கர்மா என்பது

கைகளாலோ, கால்களாலோ செய்யப்படுவதன்று. ஓ மனமே, ஆசையற்ற தன்மையுடன் செயல்படு. ஆசையற்ற தன்மையை பெற்று பிற அனைத்தையும் கருத்தில் கொள்.” பகவான் எங்கள் அனைவரையும் ஆளுக்கொரு மேற்கோளினை படிக்கச் சொன்னார். பகவான் எங்களிடம் துவாரகநாத் ரெட்டி மற்றும் சுஜாதா எனும் இரண்டு பக்தர்களின் வருகை குறித்து கூறினார், துவாரகநாத் மற்றும் அவரது மகளான சந்தியா இருவரும் ரமணரின் பக்தர்கள் ஆவார்கள். இந்த சாது யோகியிடம் தனது சென்னை இல்லத்திற்கு பேராசிரியைகள் தேவகி மற்றும் சுஜாதா ஆகியோர் வந்திருந்தார்கள் என்றும், தானும் மோகனும் சேலம் சென்றபோது சாரதா கல்லூரியின் விடுதியில் தங்களுக்கு மதிய உணவை தேவகி வழங்கினார் என்றும் கூறினார். யோகி தனது கரங்களில் சுவாமி சச்சிதானந்தர் வழங்கிய மாலை, மற்றும் படங்களை எடுத்து ஆசீர்வதித்து சாதுவிடம் தந்தார். யோகி திரு. மோகன் அவர்களுக்கும் ஆசி வழங்கி நீலகிரியில் ராமநாம பிரச்சாரத்தை துவங்க சொன்னார். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள், அதன் தலைவர் டாக்டர். C.V.ராதாகிருஷ்ணன், மிகுந்த தீவிரத்தோடு நாமஜபம் மற்றும் லிகித ஜபத்தை மேற்கொண்ட இந்த சாதுவின் அன்னை ஜானகி அம்மாள், பாரதி ரங்கராஜன் மற்றும் சாதுவின் சகோதரி அலமேலு என அனைவருக்கும் தனது ஆசியை பொழிந்தார். யோகி இந்த சாதுவிடம் எனது அன்னை மற்றும் சகோதரியை அழைத்துவரச் சொன்னார். 

எனது குருவிடமிருந்து விடைபெறுகையில் நான் அந்த நாளை ஒரு அற்புத நாளாக நினைத்தேன். மகா யோகி என்னை எனது வாழ்க்கையில் ஒரு பெரும் இலக்குடன் வெளியே அனுப்பியதாக உணர்ந்தேன். அருணாச்சலத்தை விட்டு புறப்படும் முன் நாங்கள் உண்ணாமலை அம்மன் சன்னதிக்கும் சென்றோம். மோகன் நீலகிரி செல்ல சேலம் நோக்கி பயணம் மேற்கொண்டார். இந்த சாதுவும் பிள்ளைகளும் சென்னை திரும்பினோம். 

உலக ராம்நாம் இயக்கத்தின் வேலைகள் முழு வேகத்துடன் துவங்கப்பட்டன, நாங்கள் பிரச்சாரத்திற்கு தேவையான துண்டுப்பிரசுரங்களை தயார் செய்தோம். சாதுஜி துவக்கப்பட்ட வேலைகள் குறித்து இந்த பின்வரும் கடிதத்தை மார்ச் 28 , 1989 ல் யோகிக்கு எழுதினார் : 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும் ! 

இன்று காலை, எனது இளைய சகோதரி திருமதி. அலமேலு சீனிவாசன் அவர்களுக்கு, பொது சுகாதார மையத்தின் மருத்துவர்களால் மிகப்பெரிய மற்றும் சிக்கலான கருப்பை நீக்க அறுவை சிகிச்சை, தங்களின் அளவற்ற கருணையாலும், ஆசியாலும், வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அவள் தற்சமயம் தேறி வருகிறாள். எங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் அன்பான கருணைக்கு, எங்கள் நன்றியோடு கூடிய நமஸ்காரத்தை சமர்ப்பிக்கிறோம். 

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் ராமநாம யக்ஞத்தின் பணிகளை துவக்கி விட்டார்கள். சனிக்கிழமை அன்று ஒரு சிறப்பு சத்சங்கம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் டாக்டர்.C.V. ராதாகிருஷ்ணன் தாங்கள் அளித்த பிரசாதங்களை அன்று கலந்து கொண்ட உறுப்பினர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சில பக்தர்களுக்கும் வழங்கினார். லிகித நாம ஜபம் எழுத நோட்டு புத்தகங்களும், மவுனமான மந்திரஜபத்திற்கு துளசிமாலையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

‘மேக் ஹிஸ்டரி’ என்ற காலாண்டு இதழில் அகில உலக ராம்நாம் பிரசாரம் குறித்து வந்த ஒரு சேதியை வெளியிடுகின்றது. அதை துண்டுப்பிரசுரமாகவும் அடித்து இந்தியா முழுமைக்கும் மற்றும் அகில உலக அளவிலும் வழங்க நமது இளைஞர்கள் தயாராக உள்ளனர். அதன் பிரதி ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

அகில இந்திய வானொலி, நேற்று, ‘அறிவியலும், ஆன்மீகமும்’ என்ற தலைப்பில் எனது உரையை ஒலிப்பதிவு செய்தது. இது முன்னாள் ராஷ்டிரபதி டாக்டர். S.ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு நாளன்று, ஏப்ரல் 17, 1989 அன்று, சென்னை – A நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு ஒலிபரப்பாகும். உங்களது தெய்வீக பெயரோடு துவங்கிய  எனது  பேச்சு, பாரதத்தின் இலக்கான ‘மனிதர்களை உருவாக்கும் பொறியியல்’ குறித்த தங்களது கருத்துக்களுடன் நிறைவேறியது. நான் எனது உரையின் எழுத்து வடிவத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன். ஏப்ரல் 17 அன்று எனது உரையை நீங்கள் கேட்டு இந்த தாழ்மையான சீடனை ஆசீர்வதிப்பீர்கள் என நம்புகிறேன். 

நான் பம்பாய்க்கு வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை பயணம் செய்ய பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளேன் நான் அது உறுதியாவதற்கு காத்திருக்கிறேன். திரு. A.R. ராவ் எனது வருகைக்காக தேவையான ஏற்பாடுகளை செய்து மும்பையில் ராம்நாம் பிரசாரம் செய்ய காத்திருக்கிறார். நாங்கள் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இங்கே திரும்புவோம். நாங்கள் திரும்பிய பிறகு, நான் தங்களை சந்தித்து முன்னேற்றங்கள் குறித்து விளக்குகிறேன். எங்களது முயற்சிகளின் வெற்றிக்கு உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

தாழ்மையான வணக்கங்களுடன்,

உங்கள் மிக்க கீழ்படிந்த சீடன், 

V. ரங்கராஜன்

இணைப்புக்கள் : மேற்குறிப்பிட்ட படி”

ராமநாமத்திற்கு ஓர் உலக இயக்கம்

ராமநாமம் பஜரே மானஸா!” – “ஓ மனமே, புனிதமான ராமநாமத்தை உச்சரி“ என்று நாத உபாசக துறவி தியாகராஜர் கூறுகிறார்.“ அவர் அறைகூவல் விடுக்கின்றார்: “இந்த அரிய மனித உடலை பெற்றுள்ளதால், சந்தேகங்களை அகற்றி, நீங்கள் முக்தி மூலம் ஆசீர்வதிக்கப்பட பிரார்த்தனை செய்யவும். வைதேஹியின் பாக்கியம் என அழைத்து அவர் பெயரை ஜபியுங்கள்.” 

உடல், மனம் மற்றும் அறிவின் நோய்கள் தீர பல்லாண்டு காலமாக ராமநாமமே ஆன்மீக ஆற்றல் வழங்கும் அமுதமாக திகழ்கிறது. ஈசன் பார்வதியுடனான  தனது தெய்வீக உரையாடலில் ராமனின் பெயர் ஆயிரம் விஷ்ணுவின் நாமங்களுக்கு இணை என்கிறார். வெறுமனே அதனை கூறியதோடு அல்லாமல், அவரே மஹாவீர ஆஞ்சனேயராக அவதரித்து ராமநாமத்தின் திறனை வலிமையை கடலினை ஒரே ஒரு தாண்டுதலில் கடந்தும், மலையை ஒரு கையில் தூக்கியும் நமக்கு காட்டியிருக்கிறார். யாரெல்லாம் ராமனுக்கு சேவை செய்தார்களோ அவர்கள் அனைவரும் அவருடன் வைகுண்டத்திற்கு செல்ல விரும்பியபோது ராமாயணத்தின் பெரும் வீரனான ஹனுமான் மட்டும் சிரஞ்சீவியாக உலகிலேயே இருந்து ராமநாமத்தை பரப்ப முடிவெடுத்தார்,

எண்ணற்ற முனிவர்களும், துறவிகளும் இந்த பாரத தேசத்தில் ஆன்மீக சூழலை ராம நாமத்தின் அதிர்வுகள் மூலம் பல்லாண்டுகளாக பரப்பி வருகின்றனர்.. சத்ரபதி சிவாஜியின் குருவான சமர்த்த ராமதாசர் “ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்” என்ற ராமநாம தாரகத்தை உபதேசித்து, இந்து சமூகத்தில் ஒரு மின்சார பாய்ச்சலை ஏற்படுத்தி,. அந்நிய சக்திகளை விரட்டி இந்து சாம்ராஜயத்தை நிறுவியது.  நவீன காலத்தில் சமுதாயத்தில் விழிப்பு ஏற்படுத்தவும் தியாக உணர்வு உருவாக்கவும் ராமநாமத்தை பயன்படுத்தி அதன் ஆற்றலை நிரூபித்தவர் மகாத்மா காந்தி. “உங்கள் இதயம் நிறைந்த ராமநாமத்தை கூறுவதென்பது , ஒரு ஒப்பில்லாத சக்தியிடம் இருந்து சக்தியை பெறுவதைப் போன்றதாகும். அணுசக்தியும் இதனோடு ஒப்பிட முடியாத ஒன்று. இந்த சக்தி அனைத்து வலிகளையும் நீக்கவல்ல சக்தி கொண்டது“ என காந்திஜி அறிவிக்கிறார். 

பெரும் துறவியான, காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தைச் சேர்ந்த, சுவாமி ராம்தாஸ் ராமநாமத்தை உலகங்கும் பரப்பினார். காஞ்சன்காடு ஆசிரமம் எப்போதும், இரவும், பகலும் , உலகமெங்கிலும் இருந்துவரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் “ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்” என்ற நாம ஜபத்தில் மூழ்கியிருக்கும். சுவாமி ராம்தாஸ் அடுத்த தலைமுறைக்கு தந்த விலைமதிப்பற்ற மரபு இது. பிப்ரவரி 12 , 1989 ல் மஹாசமாதி ஆன, சுவாமி ராம்தாஸ் அவர்களின் சிஷ்யை ஆன மாதாஜி கிருஷ்ணாபாய் இந்த உலகமே ராமநாம ஒலியில் திளைக்க வேண்டுமென்று சங்கல்பம் எடுத்தார், இந்த உலகத்தின் அமைதிக்காக 15,500 கோடி ராமநாம தாரகத்தை உலகமெங்கும் மக்கள் உச்சரிக்க வேண்டும் என நினைத்தார். அவரது வாழ்நாளில் 1757 கோடி நாமம் நிறைவேறிவிட்டது. 

திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் சுவாமி ராம்தாஸின் சீடர், மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் பக்தர். அவர் தனது குரு ராம்தாஸ் மூலம் தீக்ஷை பெற்றது முதல் தனது ஒவ்வொரு உள் மூச்சு, வெளி மூச்சிலும் தெய்வீக மந்திரமான ராமநாமத்தையே மூன்று தசாப்தமாக சுவாசித்து வருகிறார். இன்று அவரது கனவு இந்த தலைமுறைக்குள்ளாகவே மாதாஜியின் 15,500 கோடி ராம நாம ஜபமானது பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதாகும்.. இது உலகளாவிய பிரச்சாரத்தின் மூலமே சாத்தியப்படும். ஹிந்து சமூகத்தின் ஒவ்வொரு நபரும், அவர் உலகின் எந்த பகுதியை சேர்ந்தவராக இருப்பினும், இதில் பங்கு கொண்டால் மட்டுமே இது சாத்தியம். இந்த லட்சியத்துடன் அவர் தனது சிஷ்யனான சாது ரங்கராஜனை நாடு முழுதும் மற்றும் வெளிநாடுகளிலும் இந்த நாம ஜப இயக்கத்தை பரப்ப முயற்சி எடுக்குமாறு கட்டளையிட்டுள்ளார். ‘தத்துவ தர்சனா’, சகோதரி நிவேதிதா அகாடமி, மற்றும் நமது வலிமையான இளைஞர் பிரிவான, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம், என அனைத்தும் இந்த இலக்கை நிறைவேற்ற முடுக்கி விடப்பட்டுள்ளன. ராமசந்திர பிரபு பெரும் காரியமான சேது பந்தனம் செய்யும் போது ஏளிய அணிலும் அதற்கு உதவியது போல், யோகி ராம்சுரத்குமாரின் இந்த புனிதமான பணிக்கு குருநாதன் காலடியில் எங்களை சமர்ப்பித்து கொள்கிறோம். குருவின் கருணையால் பாரத தேசத்திற்கு உள்ளேயும் வெளிநாடுகளிலும் உள்ள பாரத அன்னையின் புதல்வர்கள் உதவியை பெற விழைகிறோம். ராமசந்திரபிரபுவின் மகிமை பொருந்திய இந்த மந்திரமான ,’ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்’ நம்மை இணைக்கட்டும். 

யக்ஞானானம் ஜப யக்ஞோஸ்மி – “யக்ஞங்களில் நான் ஜப யக்ஞமாக இருக்கிறேன்” — என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில் உரைக்கிறார். ராமநாமத்தை ஜபிப்பதே பெரும் வேள்வி. இந்த மகாயக்ஞத்தில் கலந்து கொள்வது எனது குரு சுவாமி ராம்தாஸிடம்  இருந்து நேரடியாக தீக்ஷை பெறுவதைப் போன்றதாகும். என் தந்தை இந்த மகாயக்ஞத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் எல்லா வளங்களும் வந்து சேரும் என ஆசீர்வதிக்கிறார்.“

யோகி ராம்சுரத்குமார்

பங்கு பெறுபவர்களுக்கான வழிக்காட்டுதல்கள்

சர்வதேச ராம்நாம் மகாயக்ஞத்தில் பங்குபெறுபவர்களுக்கான வழிக்காட்டுதல்கள் : 

1. ‘ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்’ என்ற மந்திரத்தை உங்களுக்கு வசதியான எந்த மொழியிலும் எழுதலாம். குறைந்தபட்சமாக 108 முறையாவது தினமும் எழுத முயலுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு உச்சரியுங்கள். 

2. நீங்கள் எழுதிய லிகித ஜபம் மற்றும் தினமும் உச்சரித்த ஜபத்தின் எண்ணிக்கையை யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்திற்கு உங்கள் முழு பெயர் மற்றும் விலாசத்துடன் அனுப்புங்கள். 

3. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அகண்ட ராமநாம ஜப யக்ஞத்தை (குழுவாக ராம நாம ஜபத்தை சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை கூறல்) ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் பகுதிகளில் உங்களால் இயன்றவரை பக்தர்களை ஊக்கப்படுத்தி இந்த புனிதமான யக்ஞத்தில் இணைக்க வையுங்கள். 

வந்தே மாதரம் !

சென்னையிலிருந்து வெளிவரும் நாளிதழ் “இந்தியன் எக்ஸ்பிரஸ்”, வெள்ளிக்கிழமை , ஏப்ரல் 14 , 1989 அன்று இந்த ராமநாம மஹாயக்ஞம் குறித்து செய்தி வெளியிட்டது: 

சர்வதேச ராம்நாம் மகாயக்ஞம் என்பது கேரளா, காஞ்சன்காடு , ஆனந்தாஸ்ரமத்தைச் சேர்ந்த காலமான அன்னை கிருஷ்ணாபாய் அவர்களால் உலக அமைதிக்காக துவக்கப்பட்டது. இதன் இலக்கு 15,500 கோடி ராமநாமத்தை (அதாவது , ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்) சேகரித்தல். பிப்ரவரி 10 வரை 1757 கோடி நாம ஜபம் முடிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலையைச் சேர்ந்த சுவாமி ராம்தாஸ் அவர்களின் சீடனும், மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் பக்தனுமான யோகி ராம்சுரத்குமார், இப்பொழுது தனது சீடனான சகோதரி நிவேதிதா அகாடமியின் சாது பேராசிரியர் வே. ரங்கராஜன் (118, பெரிய தெரு, திருவல்லிக்கேணி , சென்னை – 5) அவர்களிடம் இந்த மகாயக்ஞம் குறித்த ஒரு உலகளாவிய பிரசாரத்தை மேற்கொள்ளும்படி ஆணையிட்டுள்ளார். இந்த ஆணைப்படி, சாது ரங்கராஜன், தற்போதைய காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தின் தலைவரான சுவாமி சச்சிதானந்தர் அவர்களின் ஆசியோடு  இந்தப் பணியை துவக்கியிருக்கிறார்.

திருவண்ணாமலை , ஓயா மடத்தில் ஜனவரி 1 மற்றும் 2 ஆம் தேதி 1994 ஆம் ஆண்டு யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட அகண்ட ராமநாம யக்ஞத்தில் யோகி ராம்சுரத்குமார்.  

அத்தியாயம் 2.10 

ராம்நாம் எனும் சுடரின் பரவல்

பூஜ்யபாத குருதேவ் அவர்களின் ஆசி மற்றும் கருணையால் இந்த சாது மும்பைக்கு ஏப்ரல் 1 முதல் 7 ஆம் தேதி வரை 1989 ல் பயணம் மேற்கொண்டு ராம்நாம் இயக்கத்தை அங்கே பெரும் வெற்றியோடு துவக்கினான். உடனடியாக அங்கேயிருந்து திரும்பியபின் ஏப்ரல் 11 அன்று 1989 ல் இந்த சாது ஒரு விரிவான கடிதம் ஒன்றை தனது மும்பை பயணம் குறித்து எழுதினான்:

பூஜய ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

உங்கள் கருணையாலும், ஆசியாலும் அறுவை சிகிச்சைக்கு ஆட்பட்ட எனது சகோதரி திருமதி. அலமேலு சீனிவாசன் உடல்நிலை தேறி, இன்று காலை மருத்தவனையில் இருந்து திரும்பி வந்தார். அவர் சிறிது காலம் படுக்கையில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனது தாயாரும், சகோதரியும் நீண்ட காலமாக தங்களின் தரிசனத்தை பெற ஆவல் கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் என் சகோதரி பயணிக்க தயார் ஆனவுடன் திருவண்ணாமலைக்கு வருவார்கள். 

தங்களின் ஆசியால் எனது மும்பை மற்றும் புனே பயணங்கள் பெறும் வெற்றியடைந்தன. நாங்கள் அங்கே பலதரப்பட்ட வாழ்க்கையை வாழும் மக்களிடையே ராமநாமத்தை பரப்பி, அவர்கள் நாம ஜபம் மற்றும் லிகித ஜபம் செய்ய தேவையான உட்கருவை உருவாக்கினோம். அவர்கள் மீண்டும் ஜூலை மாதம் என்னை அங்கே அகண்ட ராமநாம ஜபம் வெவ்வேறு குழுக்களால் நடத்தப்பெறும் போது வரச்சொன்னார்கள். உயர்நீதிமன்ற வழக்கறிஞரான திரு. ஸ்ரீராம் நாயக், மற்றும் திரு. V.V. நாராயணசுவாமி என்ற முன்னாள் சிறப்பு எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்ரேட் போன்றோர் யக்ஞத்தை மும்பையில் ஏற்பாடு செய்தனர்.  பேராசிரியர். G.C. அஸ்னானி புனேயில் நாம ஜெப யக்ஞத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளார் அவர்கள் அனைவரும் திருவண்ணாமலைக்கு வந்து தங்கள் தரிசனத்தை பெற ஆவலாக இருக்கின்றனர், அது விரைவில் நிறைவேறும் என்றே நம்புகிறேன். மனோரமா பிரஸ்ஸை சேர்ந்த திரு. A.R. ராவ் தற்சமயம் மும்பையில் இருக்கிறார். அவர்களின் குடும்பம் எனக்கு சிறப்பானதொரு விருந்தோம்பலை தந்தனர். திரு.ராவ் எனக்காக ஜீப் ஓட்டி எனது பயணத்தை இலகுவாக மாற்றினார். அவரும் அவரது குடும்பமும் 16 – 4 – 1989 ல் சென்னை வருகின்றனர். பின்னர் அவர்கள் தங்கள் தரிசனத்திற்கும் வருவார்கள். 

டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கமும் தினமும் ராமநாம பிரச்சாரம் மற்றும் சத்சங்களை நடத்தி வருகின்றனர். அவர்களும் தங்களை திருவண்ணாமலை வந்து தரிசிக்க திட்டமிட்டுள்ளனர். 

“மேக் ஹிஸ்டரி” என்ற இதழில் ராம்நாம் மகாயக்ஞம் குறித்த ஒரு கட்டுரை, லீ லோசோவிக் அவர்களின் நேர்காணல், மற்றும் எனது மகாத்மா காந்தி குறித்த உரையின் எழுத்து வடிவம் என அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பிரதி தங்களின் ஆசிக்காக அனுப்பப்பட்டுள்ளது. எனது இன்னொரு வானொலி உரையான “அறிவியலும், ஆன்மீகமும்” , ஏப்ரல் 17 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சென்னை நிலையம் – A வில் ஒலிப்பரப்பு ஆகிறது. அதனை நீங்கள் கேட்டு ஆசீர்வதிக்க வேண்டும். 

‘தத்துவ தர்சனா’ வின் இதழ் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது தற்சமயம் அச்சில் உள்ளது, அது வெளிவந்தவுடன் தங்களை தொடர்பு கொள்கிறேன். 

நிவேதிதா, விவேக், பாரதி, எனது தாயார் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் உறுப்பினர்கள் தங்கள் நமஸ்காரத்தை உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க வணக்கங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். 

ஏப்ரல் 13, 1989 அன்று இந்த சாது ஒரு இனிய ஆச்சர்யத்தை சந்தித்தான். யோகி “ராம்சுரத்குமார் கடவுளின் குழந்தை திருவண்ணாமலை” என்ற யோகி குறித்த முதல் நூலை எழுதிய அமெரிக்காவின் டெக்ஸாஸை சேர்ந்த ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் என்பவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதில் அவர் தனக்கு “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” என்ற நூல் மற்றும் ‘தத்துவ தர்சனாவின்’ பிரதிகள் தனக்கு வேண்டும் என்று கோரியிருந்தார். யோகியின் மூலம் எனக்கு தீக்ஷை அளிக்கப்பட்டது குறித்து அவர் தன் மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார், மேலும் தனது வணக்கத்தை எங்களது குருவிற்கு வழங்கியிருந்தார். 

அந்தவாரம் முழுவதும், “யோகி ராம்சுரத்குமாருடனான அனுபவங்கள்” என்ற நூலின் ஆசிரியரும், இன்னொரு பக்தருமான ஹரகோபால் சேபுரி அவர்களின் நூல் அச்சிடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டிருந்தேன். அந்த நூலை சகோதரி நிவேதிதா அகாடமி வெளியிட்டது. திரு. யோகன் என்ற ஜெர்மனியை சேர்ந்த பக்தர் யோகிஜியின் தரிசனத்தை திருவண்ணாமலையில் பெற்று இந்த சாதுவை காண ஏப்ரல் 17 அன்று வந்தார். அதே நாளில் வானொலியில் எனது உரையான அறிவியலும், ஆன்மீகமும் ஒலிபரப்பானது. அடுத்தநாள் பகவானின் பக்தரான E.R.நாராயணன் என்பவர் இந்த சாதுவின் உரையை சென்னை பெரியார் நகரில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஏற்பாடு செய்திருந்தார். அங்கே இந்த சாது யோகி ராம்சுரத்குமார் குறித்து பேசி அங்கிருந்தவர்களின் மனதில் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினான். 

ஏப்ரல் 19, 1989 , சேலம் , சாரதா கல்லூரியின் பேராசிரியை ஆன தேவகி எனது இல்லத்திற்கு தங்களது ராமநாமங்களை சமர்ப்பிக்க குருவின் வழிகாட்டுதலின் படி வந்திருந்தனர். அவர், அவர்களோடு பணிபுரிந்தவர்கள், மற்றும் அவர்களின் மாணவர்கள் எழுதிய நாமங்களை பெற்றுக்கொண்டோம். அடுத்தநாள் இன்னொரு பக்தரான சென்னையைச் சேர்ந்த செல்லைய்யா தேவர் என்பவர் எனது இல்லத்திற்கு வந்து யோகியின் வண்ணப்படங்களை ராம்நாம் பிரச்சாரத்தின் போது விநியோகம் செய்ய உதவுவதாக கூறினார். 

ஏப்ரல் 24, 1989 ல் இந்த சாது ஹரகோபால் சேபுரியின் புத்தகத்தை அனுப்பி, பகவானுக்கு ஒரு கடிதம் ஒன்றையும் அனுப்பினான்: 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

இன்று நாங்கள் புத்தக தபால் மூலம் “யோகி ராம்சுரத்குமாருடனான அனுபவங்கள்” என்ற, ஹரகோபால் சேபுரியின், நூலை அனுப்பியுள்ளோம். வண்ண அட்டைப்படத்துடன் அந்த நூலை வெளியிட்டிருக்கிறோம். திரு.ஹரகோபால் இங்கு நேற்று வந்திருந்தார். சென்ற வாரம் குமாரி தேவகி எங்கள் இல்லத்திற்கு வந்து சேலத்தில் அவர் பெற்ற ராமநாம எண்ணிக்கையை தந்துவிட்டு சென்றார். அன்பிற்குரிய திரு.ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் டெக்சாஸில் இருந்து எழுதிய கடிதம் ஒன்றில் தன்னுடைய வணக்கத்தை உங்களுக்கு தெரிவித்தார். அவர் எங்களிடம் எங்கள் நூல்கள் மற்றும் பத்திரிகையின் பிரதிகளை அனுப்புமாறு கேட்டிருந்தார். அவைகளை நான் அனுப்பி வைத்திருக்கிறேன். 

தங்கள் எல்லையற்ற கருணையால் ராமநாம பிரச்சாரம் தினமும் நல்ல வேகத்தை பெற்று பலர் இந்த யக்ஞத்தில் இணைத்திருக்கின்றனர். எங்களின் துடிப்பான இளைஞர்கள் தங்களின் விடுமுறையை இந்த யக்ஞத்தின் பணிகளில் செலவழித்து வருகின்றனர். 

இந்த தாழ்மையான சீடனுக்கு தாங்கள் சென்ற வருடம் ஏப்ரல் 26 அன்று தீக்ஷை அளித்தீர்கள் இன்றோடு இந்த சீடன் ஒருவருடத்தை நிறைவு செய்கிறான். நான் இந்த நாளில் உங்களோடு இருப்பதையே பெரிதும் விரும்பினேன். ஆனால் இளைஞர்கள் ராம்தாஸ் ஜெயந்தியை முன்னிட்டு அகண்ட ராமநாமஜபத்தை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், இரவு 6 மணியிலிருந்து 7 மணிவரை சிறப்பு சத்சங்கத்தையும் .ஏற்பாடு செய்திருக்கின்றனர். நான் அவர்களுடன் இருக்க வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவ இருப்பதால் என்னால் அங்கு வர இயலவில்லை. நாங்கள் அகண்ட நாமம் சொல்லும்போது நீங்கள் எங்களோடு இருப்பீர்கள். இந்த தாய் மண்ணிற்கு கொண்டாடுவதற்கான எங்களது முயற்சிகளுக்கும், எங்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உங்கள் ஆசிகளை வேண்டி பிரார்த்திக்கிறேன். 

‘தத்துவ தர்சனா’ இதழின் ஐந்தாம் ஆண்டு சிறப்பு மலர் பூஜ்ய மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு அக்ஷய  திரிதியை நாளான மே – 8 அன்று வெளிவர இருக்கிறது. அதற்கான அச்சு வேலைகளை அதற்கு முன் முடித்து, முதல் இதழை உங்களிடம் அந்த மங்களகரமான நாளில் கொண்டு வருவோம் என நம்புகிறோம். 

எனது வயதான தாயார் திருமதி். ஜானகி அம்மாள், திருமதி. பாரதி, சிரஞ்சீவி. விவேக், குமாரி. நிவேதிதா, சகோதரி. திருமதி. அலமேலு சீனிவாசன் மற்றும் அவரது குடும்பம், டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன், மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தை சேர்ந்த அனைவரும் தங்கள் நமஸ்காரங்களை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன். “

பப்பா ராம்தாஸ் ஜெயந்தி மற்றும் இந்த சாதுவின் முதல் வருட தீக்ஷை நாள் இரண்டும் ஏப்ரல் 26 , 1989 ல் கொண்டாடப்பட்டப்பின் இந்த சாது பகவானுக்கு அந்த நாளின் நிகழ்வு குறித்த அறிக்கையை அடுத்தநாள் கடிதமாக எழுதினான்:

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராய! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

சுவாமி ராம்தாஸ் ஜெயந்தி நேற்று இங்கே அகண்ட ராம நாமத்துடன் நடைப்பெற்றது. பல புதிய பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். பர்மாவை சேர்ந்த சுவாமி ராக்கால் சந்திர பரமஹம்சா என்பவர் தங்களை ஏற்கனவே ஒருமுறை திருவண்ணாமலையில் சந்தித்தவர். தங்கள் சிறப்புக்களையும் , ராமநாம ஜபத்தின் மகிமைகளையும் குறித்து இந்த யக்ஞத்தில் பங்கு கொண்ட அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பேசினார். 

இன்று ஒரு கடிதம் தங்கள் பெயர் குறிப்பிடப்பட்டு குன்னூரில் இருந்து எங்களிடம் வந்தது. அதனை உங்களுக்கு இத்துடன் அனுப்பியுள்ளேன். 

சென்னை சத்யசாய் அமைப்பை சேர்ந்த செயலாளரான திரு. வெங்கடேசன் நேற்றைய சத்சங்கத்தில் கலந்து கொண்டார். அவர்கள்  ‘சுந்தரம்’ என்ற, சென்னையின் சத்ய சாய் அமைப்பின் தலைமை இடத்தில்’ இந்த சாதுவை ஹிந்து தர்மம் பற்றி மே – 15 , 1989 அன்று பேச அழைத்திருக்கிறார்கள். நான் உங்கள் ஆசியை வேண்டுகிறேன். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன் 

சாது ரங்கராஜன்

இணைப்பு : ஒரு இன்லேண்ட் கடிதம். “

நீலகிரி குன்னூரை சேர்ந்த நிர்மலா மெஹபூபானி என்பவர் ஒரு கடிதத்தில் தான், பப்பா ராம்தாஸ் மற்றும் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின், சிஷ்யையாக சிறுவயது முதல் இருந்துள்ளதாகவும், தான் உலக ராமநாம இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவதாகவும், பகவானின் ஆசியை வேண்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். பாரதி ரங்கராஜன் மற்றும் விவேக் திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 29, 1989 சனிக்கிழமை அன்று சென்றனர். பகவான் விவேக்கிடம் நிர்மலா அனுப்பிய கடிதத்தை திரும்ப தந்து, சாதுவையே தனது சார்பாக பதிலை அனுப்பும்படி சொன்னார். யோகி தனது தந்தை அவரை ஆசீர்வதிப்பதாகவும், உலக ராமநாம இயக்கம் குறித்து மேலும் விவரங்களை அறிய நீலகரியில் உள்ள தங்காடு மோகன் அவர்களை தொடர்பு கொள்ளுமாறும் என்னை பதில் எழுதச் சொன்னார். பகவான் எலுமிச்சம்பழம் மற்றும் மாம்பழங்களை பிரசாதமாக பாரதி மற்றும் விவேக்கிடம் தந்தார், மேலும் அவர்களிடம் ரூ.10 தந்து அவர்களை மதிய உணவை எடுத்துக்கொள்ளுமாறு கூறுனார். குருவின் ஆணைப்படி இந்த சாது நிர்மலாவிற்கு எழுதி அதன் நகலை தங்காடு மோகனுக்கும், எங்கள் பதிப்பகத்தின் சில பிரதிகளை நிர்மலா அவர்களுக்கும் அனுப்பினேன்.  

‘தத்துவ தர்சனா’ ஐந்தாவது ஆண்டிதழ் 1989, மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு அக்ஷய திருதியை நாளில் மே 8, 1989–ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.  இந்த சாதுவுடன், நிவேதிதாவும்  திருவண்ணாமலைக்கு செல்ல இணைந்தாள். நாங்கள் காலையில் கிளம்பி அங்கே மதியம் சென்றடைந்தோம். நைஜீரியாவை சேர்ந்த ஒரு தம்பதியினர் அங்கே இருந்தனர். நாங்கள் சென்னையிலிருந்து கொண்டு சென்ற சில சாக்லேட்டுக்கள் மற்றும் உலர் திராட்சைகளை யோகியின் முன் வைத்தோம். அவர் ராமநாமத்தை சிறிது நேரம் உச்சரித்த வண்ணம் இருந்தார். பின்னர் அவர் எழுந்து உள்ளே சென்று அரவிந்தர் ஆசிரமத்தின் சில பேப்பர்களை கொண்டு வந்து எங்களிடம் தந்தார். யாரோ சிலர் அந்த பேப்பர்களை அவரிடம் வினியோகம் செய்ய தந்திருக்கின்றனர். பின்னர் நாங்கள் அவரது பாதங்களில் ‘தத்துவ தர்சனா’ ஐந்தாவது ஆண்டிதழ் 1989,  பிரதிகளை வைத்தோம். உலக ராமநாம இயக்கத்தின் துண்டுபிரசுரங்களின் சில பிரதிகள், சென்னை பாரதீய வித்யாபவனின்  ராஜாஜி கல்லூரியின் ஊடகத்துறை மாணவர்கள் உருவாக்கிய ஒரு சிறிய புத்தகம் போன்றவை வைக்கப்பட்டன. இந்த கல்லூரியில் இந்த சாது இந்திய கலாச்சார பாரம்பரியத்தை குறித்து பாடம் நடத்தியிருக்கிறான். அந்த புத்தகத்தில் இந்த சாது “பாரதியம்” என்பது என்ன என்று விளக்கி எழுதியிருந்தான். பகவான் ‘தத்துவ தரிசனம்’ மலரில், தலையங்கம், லக்னோவை சேர்ந்த ராமதீர்த்த பிரதிஷ்டானின் தலைவர் திரு. அயோத்யா நாத் என்பவர் சுவாமி ராம்தீர்த்தர் பற்றி எழுதியிருந்த கட்டுரை, மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் செய்திகள் ஆகியவற்றை படிக்கச் சொன்னார். பகவான் முழங்கினார்: “இதுவே ராமனும் , கிருஷ்ணனும் அவதாரம் எடுக்க வேண்டிய காலம். ராக்ஷஸர்கள்  அறிவியலில் முன்னேற்றம் கண்டு இந்தியாவின் முனிவர்களை விழுங்க முயல்கிறார்கள். இறைவன் உறுதியளித்திருக்கிறார், 

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் | 

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய துஷ்க்ருதாம் 

தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||’

–‘ஹே பாரத, எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து, அதர்மம் தலை விரித்தாடுகிறதோ அப்பொழுதெல்லாம் அதர்மத்தை பிடுங்கி எறிய நான் எனக்கு உருவம் அளித்து  கொள்கிறேன். சாதுக்களை காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன்.’ ஒருவேளை நமது பிரார்த்னைகள் உண்மையானதாக இல்லையோ என்னவோ! அதனால்தான் அவதாரங்கள் இன்னமும் வரவில்லை போலும். ஆனால் அவர் எப்பொழுது நிலைமை மோசமடைகிறதோ அப்போது வருவார்.” 

பகவானின் உதவியாளரான ஜெயராமன் வந்தார். பகவான் அவரிடம் எலுமிச்சை சாற்றினை தேனோடு கலந்து எங்கள் அனைவருக்கும் தருமாறு கூறினார். யோகி, டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன் குறித்து விசாரித்தார். இந்த சாது யோகியிடம் அவர் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்க பணிகளில் மூழ்கி இருப்பதாகவும், அதன் வேலைகளில் நடந்த முன்னேற்றங்களையும், தெரிவித்தேன். யோகி எங்களிடம் நீலகிரியில் நடக்கும் பணிகள், எனது வானொலி பேச்சு, மற்றும் பம்பாய் நிகழ்வுகள் குறித்தும் விசாரித்தார். நீலகிரி நிர்மலாவிற்கு அவர் சார்பில் பதில் கடிதம். அனுப்பப்பட்டுவிட்டதா என கேட்டார். விவேக்கின் தேர்வுக்கான தயார்நிலை குறித்தும் விசாரித்த யோகி அவனது தேர்வுகளில் சிறப்பாக அவன் செயல்படுவான் என ஆசீர்வதித்தார். இந்த சாது அனுப்பியிருந்த ஒரு சிறிய புத்தமான பாரத் சேவாஸ்ரம சங்கத்தை சேர்ந்த சுவாமி ப்ரணவானந்தா அவர்களின் நூலை படித்ததாக கூறி அவரைப்பற்றியும் விசாரித்தார் . பின்னர் அவர் எங்கள் அனைவரையும், “ யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார் , யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா” என பாடச்சொன்னார். அவர் அங்கிருந்த அனைவருக்கும் ‘தத்துவ தர்சனா’ இதழ்களையும், உலக ராமநாம இயக்கத்தின் துண்டுபிரசுரங்களையும் விநியோகித்தார். இந்த சாது, நாடு முழுக்க யார் லிகித ஜபத்தையும், வாய்மொழி ஜபத்தையும் செய்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் விநியோகிக்க, ராமநாமத்தை எழுத நோட்டு புத்தகங்களையும், யோகியின் படத்தையும் அச்சிடப்போவதாக கூறினான்.  யோகி அந்த திட்டத்தை ஆசீர்வதித்தார். எங்களைத் தவிர அங்கிருக்கும் அனைவரையும் யோகி அனுப்பி வைத்தார் . பின்னர் அவர் சில ‘தத்துவ தர்சனா’ பிரதிகளை எடுத்து அவைகளின் முதல் பக்கத்தில் தனது கையொப்பத்தை இட்டார். அவர் எப்போதெல்லாம் ‘தத்துவ தரிசனம்’ இதழின் அச்சிடப்பட்ட முதல் பிரதி அவர் முன் வைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இவ்விதம் கையொப்பம் இட்டு அவரது கரங்களில் அந்த நூலை வெளியிடுவார். யோகி, பாரதீய வித்யா பவன் மாணவர்களின் சிறு புத்தகத்திலும் தனது கையொப்பங்களை இட்டார். நாங்கள் அவரிடமிருந்து விடைபெறும் முன் அவர் எங்களுக்கு கற்கண்டு, திராட்சை, மாம்பழம் போன்றவற்றை பிரசாதமாக வழங்கினார். எங்கள் இதயங்களில் நாங்கள், குரு மஹிமா , குரு மஹிமா, அபார மஹிமா குரு மஹிமா என உச்சரித்தோம். 

அத்தியாயம் 2.11 

இறங்கி வந்த தெய்வீக கருணை

குருவின் தெய்வீக கருணை சீடனை நோக்கி இறங்கி வருகையில் அது மிக கனமான மழையாக பொழியும். எப்படி புனித கங்கை இமாலயத்திலிருந்து இறங்கி மலைகளின் வழியே வந்து சமதள பரப்புகளில் வாழ்க்கையை வளர்த்து, ஊட்டம் அளிக்கிறதோ, கங்கையில் மூழ்கி எழுகின்ற பக்தி கொண்ட ஆன்மாவானது  ஆனந்தமயமான கடலில் திளைக்கின்றதோ அதுபோலவே குருவின் கருணையானது சிஷ்யனை ஆனந்த நிலையின்   உச்சத்திற்கும் பெரும் வெற்றிக்கும் அழைத்துச் செல்லும். யோகி ராம்சுரத்குமாரின் இளைஞர் சங்கத்தை துவக்கியதும், உலக ராமநாம இயக்கத்தை துவக்கியதும் இந்த சாதுவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை நிகழ்வு என்பது மட்டுமல்லாது, இந்த சாது மூலம் துவக்கப்பட்ட சகோதரி நிவேதிதா அகாடமியின் வரலாற்றிலும் ஒரு முக்கியமான நிகழ்வு. இந்த சாதுவின் செயல்பாடுகளில் மிகவும் மகிழ்வோடு ஈர்க்கப்பட்டு உலகத்தின் பல மூலை முடுக்குகளிலிருந்தும் பலர் இந்த இந்த இயக்கத்தில் வந்து இணைந்தனர். இந்த தாழ்மையான, எளிமையான சாதுவின் இல்லம் ஒரு வாடகை வீடு,. இந்த 118, பெரியதெரு, திருவல்லிக்கேணி, சென்னை–5 என்ற விலாசம் உடைய வீட்டின் மேல்மாடியின் பின்புறமாக அமைந்த இரண்டு அறைகள் கொண்டது. குருநாதரின் கட்டளையை ஏற்று அவரது வழிகாட்டுதலின்படி இந்த சாது மேற்கொண்ட புனிதப் பணியில் தங்களை இணைத்துக்கொள்ள ஏராளமான பார்வையாளர்கள், காலையிலும், இரவிலும் மிகத் தொலைவில் இருந்து இந்த சாதுவின் இல்லத்திற்கு வருகை தந்தனர். பலதரப்பட்ட வாழ்க்கைகளை கொண்ட மக்களான, மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.௭ஸ், மற்றும் ஐ.ஆர்.எஸ் அலுவலர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணியாற்றுபவர்கள் இந்த இடத்திற்கு வந்தனர். அரிசோனாவைச் சேர்ந்த ஹோஹம் சமூகத்தின் உறுப்பினர்களான திரு. லீ லோசோவிக் மற்றும் மிஸ். கேத்தரின் போன்றோர்களுக்கு இது முற்றிலும் ஒரு புதிய அனுபவமாகும். அவர்கள் மிகவும் குறுகலான தெருக்களின் வழியே நடந்து வந்து , வழியில் சாணியும் , சேற்றையும் மிதித்து இந்த சாதுவின் வீட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்கள் இந்த சங்கடங்கள் குறித்து கவலை கொள்ளவில்லை. இந்த சாதுவின் இல்லத்தில் தினமும் மாலையில் ராமநாமம் ஒலிக்கும், அனைத்து மாதமும் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை அகண்ட ராம நாம ஜெபம் நடைபெறும். அந்த வீட்டில் விருந்தினர்களாக வரும் பக்தர்கள் எவரானாலும் அவர்கள் தரையில் விரிக்கப்பட்டிருக்கும் கோரைப்பாய் மீதே அமர்வார்கள். சாமானியர்களுக்கும், உயர்ந்த நிலையில் உள்ளவர்களும் இதே விதமான வரவேற்பே நடந்தது, வருபவர்களை அமர வைக்க அங்கு சோஃபா  மற்றும் நாற்காலி ஏதுமில்லை. வருபவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து இந்த சாது தனது குருவிடம் புகார் அளிக்கையில், யோகி ராம்சுரத்குமார், “என் தந்தை சரியான நேரத்தில் தேவைகளை பூர்த்தி செய்வார்” என்றார். அந்த நேரத்தில் பகவானுக்கே சன்னதிதெரு வீட்டைத்தவிர வேறு எந்த ஆசிரமும் திருவண்ணாமலையில் இல்லை. அங்கே அவர் பக்தர்களை வரவேற்று வராண்டாவில் அல்லது அருகில் இருக்கும் பாத்திரக்கடை வாசலில் சந்திப்பார். குருவிற்காக தனது அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு எந்த வருமானமும் இன்றி குருவிற்கு சேவை செய்ய முன் வந்த தனது சிஷ்யனிடம், தனது தந்தையின் அருள் கிட்டும் வரை காத்திருக்க அவர் கூறியதில் தவறில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார், 

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா : பர்யுபாஸதே | 

தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம் ||”

“வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் அன்றாட நலன்களைக் காக்க நானே பொறுப்பாவேன்.” பகவான் யோகி ராம்சுரத்குமார் இந்த வாக்குறுதியை தனது பக்தனின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அக்கறையை மேற்கொண்டு நிரூபித்து வருகிறார். 

சுவாமிஜி ராக்கால் சந்திரா பரமஹம்சா மற்றும் கல்பாக்கம் சித்தர் சுவாமிகள் போன்றோர் இந்த சாதுவின் திருவல்லிக்கேணி வீட்டிற்கு அவ்வப்போது வருவார்கள். பகவானின் பக்தர்கள் மட்டுமன்றி பிற ஆசிரமத்தை, ஆன்மீக குழுக்களை, சேர்ந்தவர்களும் இந்த சாதுவை பார்க்க வந்தார்கள். சத்ய சாய் அமைப்பு , மெஹர் பாபா ஆசிரமம் போன்றவை இந்த சாதுவை விரிவுரையாற்ற அழைத்தனர். இது போன்ற பல வழிகளில் ராம்நாம் இயக்கத்தில் பலர் பங்கு கொண்டனர். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மூலம் இந்த சாதுவின் இல்லத்தில் நடைப்பெற்ற ஒவ்வொரு நிகழ்வும் முறையே யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவரது ஆசி கோரப்பட்டது. 

ராம்நாம் இயக்கம் வளர்ந்து வெகுவேகமாக முன்னேற துவங்கியவுடன் அதற்கு தேவையான லிகித நாம ஜப நோட்டுப்புத்தகங்கள், ராமர் படங்கள், பகவான் யோகி ராம்சுரத்குமார் படங்கள் அச்சிடும் தேவை ஏற்பட்டது, ஆனந்தாஸ்ரமத்தில் இருந்து பெறப்பட்ட துளசி மாலைகள் போன்றவைகள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. ராமநாமத்தின் முக்கியத்துவம் மற்றும் உலக ராம்நாம் இயக்கம் குறித்த துண்டுப்பிரசுரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன. மே 20 , 1989 ல் சேலம் சாரதா கல்லூரியை சேர்ந்த பேராசிரியை தேவகி இந்த சாதுவை சந்தித்து சில துண்டு பிரசுரங்கள், மாலைகள் மற்றும் யோகியின் புகைப்பட நெகட்டிவ் போன்றவற்றை  அவருடைய இடத்தில் பிரச்சாரத்தை நடத்துவதற்காக பெற்றுக்கொண்டார். இந்த சாதுவிடம் இருந்து புத்த பூர்ணிமா நாளில்  தீக்ஷை பெற்ற திரு. ஹேமாத்ரி ராவ் என்ற பக்தர். அவரது தீக்ஷை நாளின் ஆண்டுவிழா அன்று, தனது காணிக்கைகளை தந்தார். அடுத்த நாளே இந்த சாது கடிதம் ஒன்றை ஆனந்தாஸ்ரமத்தை சேர்ந்த சுவாமி சச்சிதானந்தர் மற்றும் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு எழுதினான். அதில் ராம்நாம் இயக்கத்தின் தற்போதைய முன்னேற்றங்களை குறிப்பிட்டிருந்தான்: 

“பூஜ்யபாத யோகி ராம்சுரத்குமார் மஹராஜ் , 

90 , சன்னதி தெரு, 

திருவண்ணாமலை – 606 601 

பூஜ்யபாத  குருதேவ், 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான அடிபணிதலும்! 

தங்கள் கருணையாலும், ஆசியாலும் ராம்நாம் ஜபமானது இன்றோடு 23,22,177 (23 லட்சம்) நிறைவடைந்து இருக்கிறது. இன்னமும் நீலகிரி போன்ற இடங்களில் இருந்து தகவல்கள் வரவேண்டியுள்ளது. அங்கேயெல்லாம் ராம்நாம் முழுவீச்சில் சொல்லப்படுகிறது. 

சத்யசாய் அமைப்பில் எனது உரை வெற்றிகரமாக நடந்தது. நான் தங்களின் புனிதத்தன்மை குறித்தும் ராம்நாம் யக்ஞம் பக்தியுள்ள இளைஞர் மற்றும் இளைஞிகளால் துவக்கப்பட்டதையும் பகிர்ந்தேன் பலர் எங்களோடு இணைவதற்கு முன் வந்துள்ளனர். திருமதி. ரங்கநாயகி ஸ்ரீனிவாசன், திரு. ஸ்ரீனிவாசன் , திரு. நாகபூஷண் ரெட்டி ( பிராந்திய மேலாளர், இந்திய உணவுக்கழகம் ) அவரது மகள் குமாரி அனிதா, மற்றும் அவர்களின் உறவினர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், சிரஞ்சீவி. விவேக் என்னுடன் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தான். 

சேலம் சாரதா கல்லூரியின் குமாரி தேவகி நேற்று இங்கே வந்திருந்தார். அவர் ராமநாம யக்ஞத்திற்கு பெரும் பிரச்சாரம் செய்வதோடு அவருடைய தாக்கத்தால் பலர் ராம்நாமத்தை ஜெபமாகும் எழுத்து வடிவிலும் செய்துவருகின்றனர். 

நீலகிரியில் இருந்து எனக்கு கிடைத்த தந்தியின் படி நீலகிரியின் பல்வேறு இடங்களில் ராம்நாம் யக்ஞம் பிரச்சாரத்திற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நாளை காலை நான் நீலகிரிக்கு கோவை எக்ஸ்பிரஸ் மூலம்  செல்கிறேன். என்னுடன் குமாரி நிவேதிதாவும் வருகிறார். ஒருவாரம் அல்லது பத்து நாட்கள் நீலகிரியில் இருந்துவிட்டு, நாங்கள் ஆனந்தாஸ்ரமத்திற்கு சென்று பூஜ்ய சுவாமி சச்சிதானந்தரிடம் இதுவரை நடந்த முன்னேற்றங்கள் குறித்து விளக்குவோம். ஜூன் முதல் வாரத்தில் நாங்கள் சென்னை திரும்புவோம். சென்னை திரும்பிய உடன் திருவண்ணாமலைக்கு பயணித்து உங்களிடம் அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க நினைத்துள்ளோம். 

திரு.நாகபூஷண் ரெட்டி மற்றும் குடும்பம் திருவண்ணாமலைக்கு உங்கள் தரிசனத்தை பெற 26-05-1989 வருகின்றனர். அவர்கள் நீலகிரியில் எங்களை 29-05-1989 ல் திங்கள்கிழமை அன்று சந்திப்பார்கள். 

சிரஞ்சீவி. விவேக், குமாரி. நிவேதிதா, திருமதி.பாரதி, எனது அன்னை ஜானகி அம்மாள், டாக்டர்.C.V.ராதாகிருஷ்ணன், திரு.A.R.ராவ் என அனைவரும். தங்களது நமஸ்காரங்களை உங்களுக்கு தெரிவித்தனர். திரு. லீ லோசோவிக் நவம்பர் 25 அன்று இங்கு வருவதாக கடிதம் எழுதியுள்ளார். அவர் திருவண்ணாமலைக்கு டிசம்பர் 7-ல் வருவார். நாங்கள் அவரது நிகழ்ச்சிகளை யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சார்பில் நடத்த விரும்புகிறோம்.

நமஸ்காரங்களுடன்,

உங்கள் சேவையில்,

V.ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”

மே 22 , 1989 அன்று இந்த சாது நிவேதிதா உடன் கோவை மற்றும் மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி சென்று அங்கே மாலையில் சேர்ந்தான். மணியட்டி என்ற கிராமத்தில் ஒரு பெரிய வரவேற்பு ராம்நாம் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிராமத்து மக்கள் ஆர்வத்தோடு ராம நாமத்தை கூறியதோடு சாதுவை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் நிகழ்ச்சி ஓரணள்ளி  கிராமத்தில் நடைப்பெற்றது. மே 24 அன்று பிரசாரமானது தங்காடு கிராமத்தின் கோயிலில் நடைப்பெற்றது. நிவேதிதாவும் அந்த கூட்டத்தினரிடையே இறையின் பெயர் பற்றி உரையாற்றினார். 26 ஆம் தேதி மணியட்டி கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது, அடுத்த நாள் நாங்கள் கண்ணேரியை அடைந்தோம். மே 28 அன்று நிகழ்ச்சி மண்தனை கிராமத்தில் நடந்தது. நிவேதிதா அங்கும் உரையாற்றினாள். கோத்தகிரியில் உள்ள ஓம்கார் ஆசிரமத்தைச் சார்ந்த திரு குருஸ்வாமி என்பவரிடமிருந்து செய்தி வந்தது. ஆந்திர மாநிலத்தில் காக்கிநாடா விலுள்ள  சங்காவரம் என்ற இடத்திலுள்ள ஆசிரமத்தின் தலைமை பீடத்தின் மாதாஜி ஞானேஸ்வரி கோத்தகிரி வந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். சாது அந்த அன்னைக்கு கடிதம் எழுதினார். கோத்துமுடியில் மாலையில் சத்ய சாய் அமைப்பின் மூலம் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே சாது சத்யசாய் பாபா குறித்தும், யோகி ராம்சுரத்குமார் குறித்தும் ஆற்றிய உரையில் அங்கேயிருந்த பக்தர்கள் ஈர்க்கப்பட்டு ராம்நாம் இயக்கத்தில் அவர்களே முன்வந்து இணைந்தனர். 

மே 29 , திங்கள்கிழமை திரு. நாகபூஷண் ரெட்டி எங்களை ஊட்டியில் உள்ள இந்திய உணவுக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் வரவேற்றார். அவர் தனது சேலம் மற்றும் திருவண்ணாமலை பயணம் குறித்து விவரித்தார். சேலத்தில் அவர் மாயம்மாவை தரிசித்த போதும் , அவரால் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமாரை தரிசிக்க இயலவில்லை என்று கூற, இந்த சாது அவரிடம் கோவை புரவிப்பாளையம் கோடி சுவாமிகள் அவர்களை தரிசித்த பின் இன்னொரு முறை திருவண்ணாமலை பயணம் மேற்கொள்ளும் படி கூறினான். பிறகு இந்த  சாதுவும் கூட்டாளிகளும் நுந்தலா விற்கு சென்றனர். அங்கே வீடு வீடாக சென்று ராமநாமத்தை பரப்பினோம். மதியம் கிராமத்தினர் கூடிய ஒரு கூட்டத்தில் திரு. H.M. ராஜூ எம்.எல்.ஏ., இந்த சாது, மற்றும் குமாரி நிவேதிதா உரையாற்றினோம். ராம்நாம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தங்காடு மோகன் எங்களை அறிமுகம் செய்தார். அன்று மாலை காட்டேரி கிராமத்தில் அந்த கிராமத்தின் மணியக்காரர் அரை லட்சம் லிகித ராம நாமத்தை வழங்கினார். அடுத்தநாள் நாங்கள் ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ ப்லிம் தொழிற்சாலைக்கு சென்றோம். ஒரு தொழிலதிபரான சரன்தாஸ் என்ற பக்தரும் அவர் மனைவியும்  எங்களை ஓட்டல்  தமிழ்நாட்டில் மதிய உணவு தந்து மகிழ்வித்தனர். 

மே 31 , 1989 அன்று கோத்தகிரியில் உள்ள சுவாமி ஓம்கார் ஆசிரமத்தின் கிளையில் அன்னை ஞானேஸ்வரி என்னையும், ராம்நாம் இயக்கத்தின் மற்றவர்களையும் வரவேற்றார். துறவு, சேவை, மற்றும் எளிமையின் உருவமான மாதாஜி, அவரே பணிவோடு எங்களுக்கு மதிய உணவை பரிமாறினார். இரவு கள்ளக்கோரையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதுவே நீலகிரியில் நடந்த சிறப்பான கூட்டம். அது நள்ளிரவு வரை நடந்தது. இந்த சாதுவின் உரையானது பதிவு செய்யப்பட்டது, உரையில் உபநிஷத்துக்களின் கதைகள் சேர்த்து பேசப்பட்டது. அடுத்த நாள் தங்காடு மற்றும் ஊட்டியை சேர்ந்த பக்தர்களால் அன்போடு நாங்கள் வழியனுப்பி வைக்கப்பட்டோம். அங்கிருந்து கோவைக்கு பேருந்திலும், பின்னர் அங்கிருந்து சென்னைக்கு ரயிலிலும் பயணித்தோம். நாங்கள் வீடு வந்து சேர்ந்ததும் , நிவேதிதாவிற்கு ஒரு சந்தோஷமான சேதி காத்திருந்தது. யோகியின் கருணையால் நிவேதிதா அவளது ப்ளஸ் டூவில் 1200 க்கு 930 மதிப்பெண் பெற்றிருந்தாள். அவள் உடனே பகவானுக்கு அந்த சேதியை தெரிவித்தாள். 

பக்தர்கள் பலர் மாலை சத்சங்கத்திற்கு வரத்தொடங்கினார்கள். எங்கள் இல்லத்திற்கு வந்த விருந்தினர்களில் மதுரை டிவைன் லைஃப் சொஸைட்டியைச் சேர்ந்த சுவாமி விமலானந்தா மற்றும் ரீயூனியன் ஐலண்டை  சார்ந்த பிரம்மச்சாரி அத்வயா ( இப்போது அத்வயானந்தா ) போன்றவர்களும் அடங்குவார்கள். ஓர் அதிசியத்தக்க சம்பவம் ராம்நாம் ஜப யக்ஞத்தில் நடந்தது. ஜூன் 23, 1989 ல் நாங்கள் எங்களின் ராமநாம எண்ணிக்கையை பூஜ்ய ஸ்ரீ சச்சிதானந்தருக்கு அனுப்புகையில் தவறுதலாக 23 லட்சம் நாமஜபம் இரண்டுமுறை கணக்கில் எடுத்துக்கொண்டது கண்டறியப்பட்டது. அதனை நாங்கள் எண்ணிக்கை தகவலை அவருக்கு அனுப்பிய பிறகே கண்டறிந்தோம். நாங்கள் பகவான் யோகி ராம்சுரத்குமாரிடம் எங்கள் தவறுக்கு மன்னிக்குமாறும் இந்த தவறை அடுத்த அறிக்கையில் சரிசெய்து விடுவதாகவும் பிரார்த்தனை செய்தோம். எங்கள் பிரார்த்தனைக்கு உடனே யோகி ராம்சுரத்குமார் செவி சாய்த்தார். பேராசிரியர். தேவகி எங்கள் இல்லத்திற்கு ஜூன் 24 ஆம் தேதி வந்தார். அவர் தன்னோடு சேலம் பக்தர்களின் 23 லட்சம் லிகித நாம ஜபம் மற்றும் வாய்மொழி ஜப எண்ணிக்கையை கொண்டு வந்திருந்தார். இது யோகியின் தெய்வீக லீலைகளில் ஒன்று. 

பாண்டிச்சேரி பல்கலைகழகத்தின்  பேராசிரியர் ஆன டாக்டர். சுஜாதா விஜயராகவன் பேராசிரியர். தேவகியின் நெருங்கிய நண்பர் மற்றும் பகவானின் தீவிர பக்தர். அவர் ஜூன் 29 அன்று எங்கள் இல்லத்திற்கு வருகை தந்தார். இந்த சாதுவின் ‘வாழ்க்கை மூலியங்களின் மதிப்பு சார்ந்த கல்வி’ என்ற தலைப்பில் உரை அகில இந்திய வானொலியால் பதிவு செய்யப்பட்டது. இந்த சாது ஒரு நண்பரின் சதாபிக்ஷேகத்திற்காக கொச்சியில் ஒரு பக்தரால் அழைக்கப்பட்டார். ஆனந்தாஸ்ரம பயணமும் முடிவு செய்யப்பட்டது. இந்த சாது பகவானுக்கு ஜூலை 6 1989 ல் ஒரு கடிதம் எழுதினான். 

“பூஜ்யபாத யோகி ராம்சுரத்குமார் மஹராஜ்,

திருவண்ணாமலை. 

பூஜ்யபாத  குருதேவ், 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

தங்களின் அளவற்ற கருணை மற்றும் ஆசியால், குமாரி நிவேதிதா பி.எஸ்.சி. (கணிதம்) உடன் கணிணி அறிவியல் (துணைப்பாடம்) படிப்பில் சென்னை வள்ளியம்மை கல்லூரியில் சேர்ந்துவிட்டாள். (பின்னர் அவள் ராணிமேரி கல்லூரிக்கு மாறினாள்). திருமதி ரங்கநாயகி சீனிவாசன் மற்றும் திரு. V.R.சீனிவாசன் இருவரும் அவளை சேர்ப்பதற்காக  அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டனர். இங்கு சென்றவாரம் வந்திருந்த டாக்டர்.சுஜாதா விஜயராகவன் நிவேதிதாவிற்கு தனது அன்பையும், வாழ்த்தையும் வெளிப்படுத்தியதோடு அவளுக்கு தேவையான புத்தகங்களையும் அனுப்பியுள்ளார். அவளது கல்வி வாழ்க்கை வெற்றிபெற உங்கள் ஆசிகளை வேண்டி நாங்கள் பிரார்த்திக்கிறோம். 

பேராசிரியர். தேவகி, 15 நாட்களுக்கு முன்பு, இங்கே 23 லட்சம் ராமநாமத்தை எங்களுக்கு அது அவசியமாக தேவைப்பட்ட நேரத்தில் கொண்டு வந்து தந்தார். அதற்கு முந்தைய நாளே நாங்கள் தவறான கணக்கீட்டினால் 23 லட்சம் ராமநாம கணக்கை அதிகமாக சுவாமி சச்சிதானந்தர் இடம் அளித்திருந்தோம். அதனை பின்னரே அறிந்து உங்களிடம் பிரார்த்தனையும் வைத்திருந்தோம். அந்த தவறான கணக்கினால் ஏற்பட்ட குறைப்பாட்டை நேர் செய்ய பேராசிரியர். தேவகி அளித்த 23 லட்சம் லிகித நாம ஜப நோட்டுக்கள் உதவின. உங்களுடைய பெரும் கருணையால் எங்களது தவற்றிலிருந்து நாங்கள் காப்பாற்றப்பட்டோம்.  நமது பக்தர்களால் செய்யப்பட்ட லிகித ஜபமும், நாம ஜபமும் ஒரு கோடியை கடந்துவிட்டன. தற்சமயம் ராமநாம பிரச்சாரம் காட்டுத்தீயை போல் பரவி வருகிறது. நீலகிரியில் திரு.B. மோகன் நடத்தும் இந்த பிரச்சாரம் 20 லட்சம் லிகித ஜபத்தை கடந்துள்ளது. திரு.மோகன் மற்றும் மூன்று பக்தர்கள் நீலகிரியில் இருந்து வருகின்றனர். அவர்கள் என்னுடன் தங்கள் தரிசனத்திற்கும் உங்களிடம் நமது முன்னேற்றங்களை குறிப்பிடவும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 9 ஆம் தேதி ஜூலை 1989 அன்று திருவண்ணாமலை வருகிறார்கள்.

திரு. V.R.சீனிவாசன் மற்றும் நான் கொச்சினுக்கு ஜூலை 10 ஆம் தேதி செல்ல இருக்கிறோம். திரு. V.S.நாராயணசுவாமி ஐயர் அவர்களின் சதாபிஷேகம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் காசர்கோடில் நடக்க இருக்கிறது. காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்திற்கு 14 அல்லது 15 ஆம் தேதி சென்று சிலநாட்கள் அங்கே தங்கி வருவோம். பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் என்னை அங்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நமது பணியில் பெரு மகிழ்வு கொண்டிருக்கிறார்.

மற்றவை நேரில்.

உங்கள் அன்பான சீடன் ,

சாது ரங்கராஜன்.” 

ஜூலை – 8 ஆம் தேதி ராம்நாம் இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நீலகிரியின் பக்தர்கள் உடன் ஒரு கூட்டம் நடைப்பெற்றது. ராமநாம பணியை துரிதமாக்க ஒரு விவரமான திட்டம் உருவாக்கப்பட்டது. பகவானின் பக்தரான திரு. செல்லையா தேவர் யோகியின் புகைப்படத்தை அச்சிட்டு பக்தர்களிடம் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தார்.

ஜூலை – 10 , 1989 ல் விவேக், நிவேதிதா, மற்றும் நீலகிரியில் இருந்து வந்த பக்தர்களுடன் அதிகாலையில் இந்த சாது திருவண்ணாமலைக்கு பயணித்தோம். நாங்கள் யோகியின் இல்லத்திற்கு மதியம் சென்று சேர்ந்தோம். நாங்கள் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை பகவானுடன் இருந்தோம். நாங்கள் அங்கே சென்றபோது அங்கே ஏழு அல்லது எட்டு பக்தர்கள் யோகியுடன் அமர்ந்நிருந்தனர். நாங்கள் கொண்டு சென்றிருந்த வாழைப்பழங்களை யோகியின் முன் வைத்தோம். நாங்கள் அனைவரும் சிறிது நேரம் ராமநாமத்தை உச்சரித்தோம். பிறகு யோகி சில வாழைப்பழங்களை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கிவிட்டு அவர்களை விடைபெறுமாறு கூறி அனுப்பினார். பின்னர் இந்த சாது நீலகிரியில் இருந்து வந்த பக்தர்களை யோகியிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் வேலைகளை அறிந்து கொண்டு யோகி பெருமகிழ்வு கொண்டார். பின்னர் அவர் எங்களை இரு புதிய மந்திரங்களை உச்சரிக்க சொன்னார். “ ஜெயது ஜெயது , ஜெயது ஜெயது ராமசுரதகுமார யோகி, ராமசுரதகுமார யோகி “ மற்றும் “ ராம ராம, ராம ராம, ராம ராம, ராம், ராம ராம, ராம ராம, ராம ராம ராம்”. யோகி ராம்சுரத்குமார் நிவேதிதாவிடம் இதனை தொடர்ந்து பயிற்சி செய்ய கூறினார். இந்த சாது யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் முன்னேற்றங்கள் குறித்து விவரித்தேன். அவர் மகிழ்வோடு அறிக்கையை பெற்றார். இந்த சாது பூஜ்ய சுவாமி சச்சிதானந்தரின் கடிதத்தை படித்தான், யோகி மகிழ்ந்ததோடு அதில் நிவேதிதா “தெய்வீக ஆனந்தத்திற்கு” சுவாமிஜியின் ஆசிகளைப் பெற்றது குறித்து மகிழ்ந்தார். குமாரக்கோவிலில் உள்ள ஓம்பிரகாஷ் யோகினியின் ராம்ஜி ஆசிரமத்திற்கு ராம நாமம் எழுதிய லிகித நாப ஜப நோட்டுக்களை அனுப்புவதற்கு அனுமதி தந்தார். நீலகிரியில் இருந்து வந்த பக்தர்களிடம், “ரங்கராஜன் ராமநாம பிரச்சாரத்தை பெரிய அளவில் எடுத்து செய்கிறார். டிசம்பர் 1999 க்கு முன் மாதாஜி கிருஷ்ணாபாயின் இலக்கில் குறைந்த பட்சம் ¼ பங்கு முடிக்கப்பட வேண்டும். 21 ஆம் நூற்றாண்டில் நாம் ராம்ராஜ்யத்தை இங்கே காண்போம்.” நாங்கள் பகவானிடம் அவரது உத்தரவை நிறைவேற்ற பாடுபடுவோம் என உறுதியளித்தோம். யோகி தனது கரங்களை உயர்த்தி எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் ராமநாமத்தை உச்சரித்தோம். பகவான், நந்தி கிராமத்தில் பதினான்கு வருடங்கள் தங்கியிருந்து ராமநாமத்தை தொடர்ச்சியாக உச்சரித்து ராமனின் தரிசனத்தை பெற்ற பரதன், அசோகவனத்தில் அமர்ந்து தொடர்ச்சியாக ராம நாமத்தை ஜபித்த சீதை, ராமநாமத்தை தொடர்ச்சியாக உச்சரித்த சமர்த்த ராம்தாஸ் மற்றும் பப்பா ராம்தாஸ் போன்றோர் மீது ராமநாமத்தின் தாக்கம் குறித்து பேசினார்.

இந்த சாதுவின் கொச்சின் மற்றும் காஞ்சன்காடு பயணங்கள் யோகியால் ஆசீர்வதிக்கப்பட்டதோடு, அங்கே ஆனந்தாஸ்ரமத்தில் தொடர்ச்சியாக 72 மணிநேரம் தங்குமாறும், வேறு ஏதேனும் நிகழ்ச்சிகள் இடையூறாக இருக்குமெனில் அவைகளை நீக்குமாறும் இந்த சாது அறிவுறுத்தப்பட்டார். அவ்விதமே செய்வதாக இந்த சாது உறுதியளித்தார். அவர் அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதித்தார். விவேக்கை நோக்கி யோகி,  “ விவேக், விஸ்வேஸ்வரய்யா போல், ஒரு அற்புத கட்டிட பொறியாளர் ஆகி கங்கையையும், காவேரியையும் இணைத்து மகாகவி சுப்ரமணிய பாரதியின் கனவை நிறைவேற்றுவான்“ என்றார். அவர் கண்ணி பொறியியல் படிப்பிற்கான இடத்தை விலைகொடுத்து வாங்க வேண்டாம் என்றார். யோகி, நிவேதிதாவை ராமானுஜம் போன்ற பெரும் கணிதமேதையாக ஆக ஆசி கூறினார். மேலும் அவர் நிவேதிதாவிடம் ராம நாமத்தை ஆய்வு செய்ய சொன்னார். தனது இல்லத்திற்கு சாதுவின் தாயார் வருவதைக் குறித்து தனக்கு எழுதுமாறும் நிவேதிதாவிடம் கூறினார். மேலும் யோகி இந்த சாதுவிடம் சுவாமி சச்சிதானந்தர் எழுதிய ராம்நாம் குறித்த கடிதத்தை, ‘தி விஷன்’ என்ற இதழில் இருந்து படிக்குமாறு கூறினார். யோகி, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம், உலக ராம்நாம் இயக்கம் போன்றவற்றின் கிளைகளை திறக்கவும், லிகித நாம ஜப நோட்டுக்கள், துண்டுப்பிரசுரங்கள், புகைப்படங்கள் போன்றவைகளை அச்சிட்டுக்கொள்ளவும், விநியோகம் செய்யவும்  அனுமதியளித்தார். “மேக் ஹிஸ்டரி” இதழில் வெளியான. ‘நீலகிரியின் படுகர்கள்’ குறித்த இந்த சாதுவின் கட்டுரையை படிக்கச் சொன்னார். அவர் அனைத்து படுகர் இன பக்தர்களையும் ஆசீர்வதித்தார். குறிப்பாக உடல்நலம் சரியில்லாத சுசீலாவை ஆசீர்வதித்தார். அவர் விரைவில் நலம் பெற்று திரும்ப, தனது மருந்தான பழங்களையும், தண்ணீரையும் தந்து, அவர் விரைவில் குணமடைவார் என உறுதியளித்தார். அவர் சசீலாவை பதினைந்து நாட்கள் கழித்து தனக்கு கடிதம் எழுதுமாறு கூறினார். 

பகவான் இந்த சாதுவை திரு. அன்பழகன் என்பவரிடம் அறிமுகப்படுத்தினார், இவர் முன்பு யோகியை தரிசிக்க வந்த  கேரளாவின் முன்னாள் கவர்னரான திரு.P. ராமச்சந்திரன் அவர்களின் மருமகன் ஆவார். திரு. அன்பழகன் தான் ஏற்கனவே சாதுவை திருவல்லிக்கேணியில் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் துவக்கவிழாவில் பார்த்திருப்பதாக கூறினார். சகோதரி நிவேதிதா பதிப்பகத்தின் சில புத்தகங்களோடு, “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்“ என்ற நூலும் யோகியிடம் தரப்பட, யோகி அதனை திரு. ராமச்சந்திரன் அவர்களுக்கு தனது ஆசியுடன் வழங்க தனது ஆசியுடன் வழங்க. அவர்கள் சென்றப்பின் யோகி எங்களோடு சிறிது நேரம் செலவழித்தார். அவர் இந்த சாதுவின் கரங்களை தொடர்ந்து பற்றியிருந்தார். ராமநாம இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய யோகி, பேராசிரியர். தேவகி, டாக்டர். சுஜாதா, டாக்டர். ராதாகிருஷ்ணன், பேராசிரியர். ரங்கநாயகி ஸ்ரீனிவாசன் மற்றும் திரு. V.R. ஸ்ரீனிவாசன் போன்றோர் ராமநாம பணியில் ஈடுபடுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த குழு, “உயர் சக்தி கமிட்டி” ஆகும் என்றும் கூறினார். நிவேதிதா, டாக்டர்.சுஜாதா தனக்கு புடவைகளும், புத்தகங்களும் தந்ததை யோகியிடம் குறிப்பிட்டார். யோகி அந்த சகோதரத்துவம் பற்றி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். யோகி குறைந்தபட்சம் மாதாஜி கிருஷ்ணாபாயின்  15,500 கோடி ராம நாமத்தில் ¼ பங்கு இலக்கையாவது முடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த சாது இந்த சேதியை உலகம் எங்கும் கொண்டு சென்று சேர்ப்பார் எனவும், 1999 ல் அமைதி இறங்கி வரும் என்றும் யோகி கூறினார். விவேக்கிடம் திரும்பிய யோகி, “நமக்கு இராணுவ பொறியாளர்கள் தேவையில்லை, மனிதர்களை உருவாக்கும் பொறியாளர்களே தேவை“ என்றார். யோகி விவேக்கிடம். கட்டிட பொறியியலில் கவனம் செலுத்தச் சொன்னார். பின்னர் தேவையெனில் கணிணி அறிவியலை ஏதேனும் நிறுவனத்தில் படிக்கச்சொன்னார். “தந்தை உன்னை அற்புத கட்டிட பொறியாளராகவே விதித்திருக்கிறார்” என்றார் யோகி. 

மூன்று மணியளவில் அவர் எங்கள் அனைவரையும் அனுப்பினார். இந்த சாது அவர் முன்னிலையில் பெரும் அமைதியையும், சந்தோஷத்தையும் உணர்ந்தான். ராமநாம இயக்கம் பெரும் வெற்றி அடைய அவர் ஆசி அளித்தது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. இந்த சந்திப்பு ராமநாம பக்தர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று, அகில உலக ராமநாம இயக்கத்திற்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் அளிக்கக்கூடியதாக இந்த சந்திப்பு அமைந்தது. இந்த சந்திப்பிற்குப்பின் எங்கள் நண்பர் மற்றும் நலம் விரும்பியுமான நரிக்குட்டி சுவாமிகளை சந்தித்து விட்டு நாங்கள் சென்னை திரும்பினோம். 

அத்தியாயம் 2.12 

பகவான் தெய்வீக மருத்துவர்

ஜூலை – 18 , 1989 அன்று யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் குரு பூஜையை யோகி ராம்சுரத்குமார் க்ருபா என்ற பெயர்கொண்ட, திரு.V.R.ஸ்ரீனிவாசன் மற்றும் திருமதி. ரங்கநாயகி ஸ்ரீனிவாசன் அவர்களின் சென்னை இல்லத்தில், கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதற்குமுன் இந்த சாது எர்ணாகுளம் சென்று V.S.நரசிம்மசுவாமி என்ற பக்தரின் சஷ்டியப்தபூர்த்தியில் கலந்து கொண்டு பின்னர் அங்கிருந்து காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தான். இந்த பயணத்தில் என்னோடு திரு. சீனிவாசன் இணைந்தார். அவரோடு ஜூலை – 10 அன்று கிளம்பி அடுத்தநாள் எர்ணாகுளம் சென்றேன். இந்த சாதுவிற்கு ஒரு தனித்த சிறப்பான வாய்ப்பு, அவன் பிறந்த ஊருக்கு பயணிக்கவும், தனது பிள்ளைப்பருவ நட்புக்களை சந்திக்கவும் இது வாய்ப்பாக அமைந்தது. அந்த இளமைக்கால நண்பர்களும் சாதுவிற்கு சிறப்பான வரவேற்பினை தந்தனர். தங்களது நண்பன் சாதுவாகி யோகி ராம்சுரத்குமார் மூலம் தீக்ஷையளிக்கப்பட்டு இருப்பதை நண்பர்கள் வியந்து பார்த்தனர். இந்த சாது குருவாயூர் கோயிலுக்குச் சென்றான். அஞ்சம் மாதவன் நம்பூதிரி இல்லம், பின்னர் கொடுங்கலூர் பகவதி கோயில், மற்றும் திருவஞ்சிக்குளம் சென்று கொச்சின் திரும்பும் போது ஒரு எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டது. V.R. சீனிவாசனுக்கு கடுமையான நெஞ்சுவலி நாங்கள் பரவூர் என்ற ஊரை நெருங்கும் போது அவருக்கு ஏற்பட்டது. அவரை உடனடியாக ஒரு மருத்துவமனையில் சேர்த்து ஒரு இதய நிபுணர் கண்காணிப்பில் வைத்தோம். அவர் படுக்கையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சலைன் ஏற்றப்பட்டது. இந்த சாது அவரை கவனித்துக்கொள்ளுமாறு யோகி ராம்சுரத்குமாரிடம் பிரார்த்தனை செய்துவிட்டு அவரை மருத்தவமனையில் சேர்த்துவிட்டு நான் கொச்சினுக்கு திரு.நாராயணசாமியின் சஷ்டியப்தபூர்த்தி விழாவில் காலையில் கலந்து கொள்ள விரைந்தேன். அந்த விழா முடிந்தவுடன் நான் பரவூர் திரும்பினேன். டாக்டர்கள் அவரை சிறிதுகாலம் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியதையும் புறக்கணித்து நான் யோகி ராம்சுரத்குமார் கைகளில் அவரை ஒப்படைத்து விட்டு அவரை மருத்துவமனையில் இருந்து விடுவித்தேன். பகவானின் கருணை வேலை செய்ய தொடங்கியது. சீனிவாசன் உடல் நலம் தேறி சாதாரண நிலைக்கு வந்தார். இந்த சாது அடுத்தநாளே நண்பர்களின் வீட்டுக்கு பயணப்பட்டான். தனக்கு மிகவும் நெருக்கமான சின்மயா குடும்பத்திற்கும் சென்றான். இந்த சாதுவின் சிக்‌ஷா குருவான சுவாமி சின்மயானந்தரின் சீடரான திருமதி. ஜானகி N. மேனன் என்பவரை மீண்டும் சந்தித்தேன். என் இளமைக்காலத்தில் எனது வீட்டிற்கு சுவாமி சின்மயானந்தாவை அழைத்து வந்திருக்கிறார். அதுவே இந்த சாதுவின் வாழ்வின் திருப்புமுனை. கொச்சின் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு நானும், சீனிவாசனும் காஞ்சன்காடு சென்றோம். எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பும் முன் இந்த சாது யோகி ராம்சுரத்குமாரின் திருவுருவப்படத்தை தனது பள்ளித் தோழனும், தனது இளமைக்காலத்தில் 20 வருடங்கள் இருந்த வீட்டின் உரிமையாளருமான திரு. நாராயணன் என்பவரின் வீட்டில் திறந்து வைத்தான். 

நாங்கள் காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்திற்கு ஜூலை–14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வந்தடைந்தோம். எங்களை சுவாமி சச்சிதானந்தர் வரவேற்றார். நாங்கள் அவரோடு சிறிது நேரமும், மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் அறையில் இருந்த ஒரு பீஹார் சுவாமி மற்றும் இரண்டு பக்தர்கள் உடன் யோகி ராம்சுரத்குமார் தலைமையில் நடத்தப்படும் ராம்நாம் இயக்கம் குறித்து விவாதித்தோம். சுவாமி சச்சிதானந்தர் இந்த இயக்கம் உலகம். எங்கும் பரவ அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என இந்த சாதுவிடம் கூறினார். நாங்கள் இரண்டு நாட்கள் சென்னையிலிருந்து வந்து ஆசிரமத்தில் தங்கியிருந்த பக்தர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு ராமநாமத்தை பரப்ப எடுக்க வேண்டிய திட்டங்களை வகுத்தோம். ஞாயிற்றுக்கிழமை ஜூலை – 16 ஆம் தேதி இந்த சாது பகவான் நித்யானந்தா அவர்களின் குருவனம் என்ற இடத்திற்கு கிறிஸ்டி (சிவப்ரியா) மற்றும் சீனிவாசன் உடன், ஆற்றை ஒரு படகில் கடந்து பகவான் அமர்ந்து தியானம் செய்த இடத்திற்கு சென்றோம். பின்னர் நித்யானந்தா ஆசிரமம் சென்று அங்கே நித்யானந்தா மற்றும் ஞானானந்தா அவர்களின் கோயிலில் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தோம். பின்னர் ஆனந்தாஸ்ரமத்திற்கு திரும்பி பக்தர்களோடு ராம்நாம் இயக்கம் குறித்து உரையாடினோம். திங்கள்கிழமை நாங்கள் கிளம்பும் முன் சுவாமி சச்சிதானந்தரை மாதாஜியின் அறையில் சந்தித்தோம். சுவாமிஜி மாலைகளையும் சிறிய புத்தகங்களையும் ராம்நாம் யக்ஞத்தில் பங்கு பெறுபவர்களுக்கு தருவதற்கு தந்து அனுப்பினார் . நாங்கள் அவரிடம் ராம்நாம் துண்டுபிரசுரங்களை அச்சிடுதல் குறித்து பேசினோம். பின்னர் அவரிடமிருந்து விடைப்பெற்று சென்னை திரும்பினோம். 

நாங்கள் சென்னைக்கு குறித்த நேரத்தில் திரும்பி குருபூஜையை யோகி ராம்சுரத்குமார் க்ருபா இல்லத்தில் ஜூலை–18 அன்று திட்டமிட்டபடி கொண்டாடினோம். அதில் கணிசமான அளவு பக்தர்களும், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினரும் கலந்து கொண்டு ராமநாம யக்ஞம் நடத்தினர். 

அரிசோனா, ஹோஹம்  கம்யூனிட்டி தனது ராமநாம எண்ணிக்கையை முதல் முறையாக அனுப்பி கடல்கடந்த நாடுகளின் கணக்கை துவக்கியது. விவேகானந்தன் மற்றும் E.R.நாராயணன் தங்களின் எண்ணமாக ரத்த தான பிரசாரத்தை யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் மூலம் நடத்த எண்ணம் கொண்டனர். ஏற்கனவே இந்த சங்கத்தினர் மருத்துவமனைகளுக்கு சென்று ராமநாம ஜபத்தை செய்து வந்தனர். நோயாளிகளையும் ராமநாமத்தை சொல்ல ஊக்குவித்தனர். இதற்கிடையில் திருவண்ணாமலை கோயிலின் குருக்கள் மகன் மற்றும் சில பக்தர்கள் பிரபல பாடகரான கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் கச்சேரி கோயிலில் நடக்கிறது என்பதற்காக என்னை அழைக்க வந்தனர் . நான் இதுவரை நடந்த முன்னேற்றங்கள் குறித்தும், குறிப்பாக காஞ்சன்காடு பயணம் குறித்தும் ஒரு கடிதம் ஒன்றை பகவானுக்கு 31 – 07 – 1989 அன்று எழுதினேன்: 

“பூஜ்யபாத  குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

காஞ்சன்காட்டில் இருந்து திரும்பியபிறகு திரு. V.R. சீனிவாசன் எழுதிய கடிதம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். நீங்கள் கூறியபடி நாங்கள் சுவாமி சச்சிதானந்தர் உடன் மூன்று நாட்கள் செலவழித்தோம். அது எங்களுக்கு அன்பான பரிமாறலாக அமைந்தது. திரு. சீனிவாசனுக்கு நாங்கள் கேரளாவில் பயணிக்கும் போது இருதய கோளாறு ஏற்பட்டது ஆனால் உங்கள் கருணையாலும், ஆசியாலும் அவர் முற்றிலும் அதிலிருந்து பன்னிரண்டு மணி நேரத்தில் மீண்டார். அவரை டாக்டர்களின் அறிவுறுத்தலையும் மீறி என்னோடு அழைத்துச் சென்றேன் அவர் எந்த விதமான தொல்லைகளும் இன்றி மீதமுள்ள பயணத்தில் என்னோடு இருந்தது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. 

நேற்று திரு. ராம காசிவிஸ்வேஸ்வரன் மற்றும் திரு. P.T. ரமேஷ் இருவரும் திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்திருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவிழாவின் அழைப்பிதழையும், சுவரொட்டிகளையும் கொடுத்துவிட்டு எனக்கு அழைப்பு விடுத்திருந்தனர். எனவே 9 ஆம் தேதி ஆகஸ்ட் அன்று இரவில் நிகழ்ச்சி நடக்க இருப்பதால்  காலை அங்கு வர எண்ணியிருக்கிறேன் அப்போது உங்கள் தரிசனத்தை பெற்றுவிட்டு உங்களிடம் ராம்நாம் இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து விவரிக்கிறேன். என்னுடைய வயதான தாயார், டாக்டர். C.V.ராதாகிருஷ்ணன், மற்றும் நமது அச்சகத்தார் திரு. A.R.ராவ் தங்களை காண விரும்புவதால் திரு.ராவின் காரில் நாங்கள் உங்கள் தரிசனம் பெற வருவோம். 

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கமும் அதனுடன் வேறு சில சகோதர சேவை மையங்களுடன் இணைந்து, ஆகஸ்ட்–6 தேதி, நமது தாய்நாட்டின் 42 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஒரு இரத்த தான பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இது குறித்த ஒரு சுற்றறிக்கையின் நகலை உங்களுக்கு அனுப்பி உங்கள் ஆசியை அவர்கள் வேண்டி உள்ளார்கள். 

ராம்நாம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாங்கள் பக்தர்களின் இல்லங்களில் அவ்வப்போது சிறப்பு சத்சங்கங்களை நடத்த துவங்கி உள்ளோம். இது தவிர்த்து எனது இல்லத்தில் தினமும் சத்சங்கமும் நடைபெற்று வருகிறது. கடைசியாக,  குரு பூஜை தினத்தில், திரு. சீனிவாசன் இல்லத்தில் சத்சங்கம் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது. அடுத்த சத்சங்கம் மைலாப்பூர் வாழ் பக்தர்களான திருமதி. ப்ரீதா மற்றும் திரு. பொன்ராஜ் என்பவர்களின் வீட்டில் ஆகஸ்ட்– 5 ல் நடைபெற இருக்கிறது. அதன் வெற்றிக்கு உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் எங்களது காஞ்சன்காடு பயணம் குறித்து அவரது மகிழ்வை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தின் நகல்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர் ஒவ்வொரு மாதமும் செய்கின்ற ஜபத்தின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என விரும்பியிருக்கிறார். தற்சமயம் பெரும்பாலான பக்தர்கள் லிகித நாம ஜபம் செய்வதன் காரணமாக, பிரதி மாத சராசரி 50 லட்சமே வரும். நாங்கள் பக்தர்கள் அதிகமாக நாம ஜபம் சொல்லுமாறு ஊக்குவிக்கிறோம். அதன்மூலம் பிரதிமாதம் ஒரு கோடி இலக்கினை அடுத்தமாதம் முதல் அடைய இயலும். தற்சமயம் இப்பணி காட்டுத்தீயைப் போல் கேரளா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், காஷ்மீர், மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் பரவி வருகிறது. K.பாலசந்திரன் என்ற ஓர் பக்தர் தற்சமயம் காஞ்சன்காடு முதல் கன்னியாக்குமரி வரை பாத யாத்திரை மேற்கொண்டு ராமநாம யக்ஞத்தை பரப்பி வருகிறார். அவர் உங்கள் ஆசியை வேண்டுகிறார். நாங்கள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் லிகித நாம ஜபத்தை பெற துவங்கியிருக்கிறோம். 

டிவைன் லைஃப் சொஸைட்டியின் குரலாக ஒலிக்கும் ‘வாய்ஸ் ஆஃப் சிவானந்தா’ பத்திரிகையில் நமது ராமநாம யக்ஞம் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது. உலகம் முழுவதும் செல்லும் இதன்மூலம் நமது இயக்கத்திற்கு உலகம் எங்கும் பரவி இருக்கும் சிவானந்தா ஆசிரமம் மூலம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நினைக்கிறேன். திரு. A.V.குப்புசாமி, இந்த இதழின் ஆசிரியர், தங்களுக்கு ஒரு பிரதியை அனுப்புமாறு கூறினார். இந்த கடிதத்துடன் அதனை இணைத்துள்ளேன். நமது இறைபணியில் உதவும் சுவாமி சிவானந்தா பக்தர்களுக்கு தங்கள் ஆசியை வழங்க நான் பிரார்த்திக்கிறேன். 

குமாரி நிவேதிதா தற்சமயம் வீட்டிற்கு மிக அருகில் இருக்கிற ராணி மேரி கல்லூரியில் படிக்கிறாள், எனவே அவளுக்கு ராம்நாம் பிரச்சாரத்திற்கு உதவ நேரம் கிடைக்கிறது. சிரஞ்சீவி விவேகானந்தன் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் பணிகளில் தீவிரமாக இருக்கிறான். இளைஞர்கள் இங்கிருக்கும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எல்லா வாரமும் சென்று உங்கள் வாழ்த்துக்களை அங்குள்ள நோயாளிகளுக்கு அவர்கள் விரைவில் குணமடைய தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தந்த தகவலின் படி பல நோயாளிகள் ராமநாம பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர். எனவே இந்த இளைஞர்களின் மருத்துவமனை பணிகள் சிறப்பாகவே உள்ளன. 

எனது அன்னை, விவேக், நிவேதிதா, திருமதி பாரதி, மற்ற பக்தர்கள் அனைவரும் தங்கள் நமஸ்காரங்களை உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள். 

உங்கள் புனிதமான பாதங்களில் சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன்,

V.ரங்கராஜன்

இணைப்பு : மேற்குறிப்பிட்ட படி”

அடுத்தடுத்த நாட்களில் பிரவாகமாம பக்தர்கள் இந்த சாதுவின் இல்லத்திற்கு ராம்நாம் சத்சங்கத்திற்கு வந்தனர். அந்த பார்வையாளர்களில் முக்கியமானவர்கள் சுவாமி ராக்கால் சந்திரா பரமஹம்சா என்றழைக்கப்படும் பர்மா சுவாமி, குருவால் அனுப்பப்பட்ட ஒரு அமெரிக்க பக்தர் ஹெர்பர்ட், நர்மதா நதிக்கரையில் இருந்து வந்த சுவாமி அர்ஜூன் தேவ் ஆகியோர் ஆவர். ப்ரீதா பொன்ராஜ் இல்லத்தில் ஆகஸ்ட்– 5 ஆம் தேதி நடந்த சிறப்பு சத்சங்கம் சிறப்பான முறையில் பல பக்தர்களின் பங்கெடுப்பால் நன்றாக நடந்தது. ஆகஸ்ட்– 9 அன்று நாங்கள் திருவண்ணாமலை சென்றபோது யோகி என்னையும், விவேகானந்தனையும் அன்போடு வரவேற்றார். நாங்கள் அவரோடு இரண்டு மணிநேரங்கள் செலவழித்து காஞ்சன்காடு பயணம் குறித்து விவரித்தேன். குருவனம் மற்றும் நித்யானந்தா ஆசிரமத்திற்கு நான் கிறிஸ்டியுடன் பயணித்தது அவருக்கு மகிழ்வை தந்தது. யோகி சீனிவாசன் உடல்நிலை குறித்தும் விசாரித்தார். மேலும் யோகி என்னிடம் ஆனந்தாஸ்ரமத்தில் ஏதேனும் உரையாற்றினாயா என வினவினார். நான் அவரிடம் நாங்கள் பஜனையில் மட்டுமே ஈடுபட்டோம் என்று பதிலளித்தேன். யோகி அதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். நாங்கள் ப்ரீதா பொன்ராஜ் அவர்களின் இல்லத்தில் நடந்த சிறப்பு குருபூஜை விழா குறித்து அவரிடம் கூறினோம். 

இந்த சாது யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் மூலம் விவேக் மற்றும் அவனது நண்பர்கள் நடத்திய ரத்த தான பிரச்சாரம் பற்றி குறிப்பிட்டபோது, யோகியிடம் இருந்து எதிர்பாராத ஒரு கருத்து எதிர்நிலை ஏற்பட்டது. விவேக் ரத்த தானம் செய்தான் என்று சாது குறிப்பிட்டவுடன் யோகி விவேக்கை அழைத்து அருகில் அமர வைத்தார். யோகி விவேக்கின் கரங்களைப் பற்றி எந்த இடத்தில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டது என்று வினவி அந்த இடத்தை காட்டுமாறு கூறினார். விவேக் அந்த இடத்தை காட்ட, யோகி தனது உள்ளங்கையை வைத்து அழுத்தி ஆழமான தியானநிலைக்கு சென்றார். பின்னர் யோகி கண்களை திறந்து விவேக்கிடம் தனது பிச்சை பாத்திரத்தை காட்டி, எடுக்கப்பட்ட ரத்தத்தின் அளவு இந்த சிரட்டை நிரம்ப இருக்குமா என வினவினார். விவேக் சிரித்தவாறே இதைவிட மிக குறைவு என்றான். பின்னர் பகவான் பாரத மாதா குறித்த ஒரு பாடலை பாடி, இந்த நிலத்திற்காக உயர்ந்த மனிதர்கள், உயர்ந்த தியாகங்களை செய்துள்ளார்கள். தேவர்களின் ஆசி வேண்டி நடத்தப்பட்டுள்ள விஸ்வஜித் யாகம் மற்றும் இராமபிரானின் யாகங்கள் நடைபெற்றுள்ளன. யோகி விவேக்கிடம் ரத்த தானம் செய்தப்பின் எவ்விதம் உணர்ந்தாய் என கேட்டார். தான் நன்றாக இருந்ததாக கூறினான். யோகி சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு விவேக்கிடம், “இனிமேல் ரத்ததானம் செய்யாதே, விவேக்!“ என்றார். விவேக் சற்று அதிர்ச்சியுற,  யோகி மேலும் தொடர்ந்தார், “பல மக்களிடம் நிறைய ரத்தம் எதற்கும் பயனில்லாமல் இருக்கிறது. அவர்கள் இரத்ததானம் செய்யட்டும். இந்தப்பிச்சைக்காரனுக்கு உன்னுடைய இரத்தம், எலும்பு, சதைகள் மற்ற அனைத்தும் உயரிய காரணங்களுக்கு தேவைப்படுகிறது.” என்றார். மேலும் யோகி நிவேதிதா ரத்த தானம் செய்தாளா  என வினவினார். விவேக் இல்லை என பதிலளித்தான். யோகி பேசாமல் பேசிய செய்தி மிகவும் தெளிவானது. யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் தனது கவனத்தை வேறெவற்றிலும் செலுத்தக்கூடாது. அதனுடைய முக்கிய நோக்கம் ஆன்மீகம் மற்றும் தேசீயத்தை கட்டமைக்க, உலக ராம்நாம் இயக்கம், விவேகானந்தா ஜெயந்தி போன்றவற்றை கொண்டுதலே. மற்ற மதசார்ப்பற்ற, சமூக சேவைகளை பிற சமூக சேவை நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் போதும் என்பதே யோகி எங்களுக்கு உணர்த்திய சேதி. 

திரு.A.R.ராவ் அவர்களுக்கு சிலமுக்கிய பணிகள் இருப்பதனால் அவரால் எங்களோடு இணைய முடியவில்லை, மற்றும் அவர் வராத காரணமாக எனது அன்னையையும் அழைத்து வரவில்லை என்று பகவானிடம் கூறினேன். திரு.ராவ் தனது அச்சக பணியை சென்னையில் நிறுத்திவிட்டு மும்பை செல்ல திட்டமிட்டுள்ளார். மேலும் பகவானிடம் இந்த சாது ‘தத்துவ தர்சனா’ துவக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அச்சக பணிகளை செய்து வந்த திரு.ராவ் வேறு இடத்திற்கு செல்வது எனக்கு பெரும் இழப்பு என்று கூறினேன். யோகி, “எனது தந்தை உனது பணிக்கு உதவ இருக்கிறார்“ என்று உறுதியளித்தார். யோகி திடீரென உள்ளே சென்று வெளியே வரும் போது ஒரு கத்தையாக நூறு ரூபாய் மற்றும் ஐம்பது ரூபாய் நோட்டுக்களை கொண்டுவந்து  இந்த சாதுவின் கைகளில் திணித்ததோடு, “இதனை உன்னிடம் வைத்துக்கொள். இதனை எந்த காரணத்திற்கும் பயன்படுத்தலாம்” என்றார். மேலும் யோகி, “தந்தையின் உதவி நமக்கு வருகின்றவரை, நாம் மனிதர்களின் உதவியைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை“ என்றார். இந்த சாது யோகியிடம் வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் பல இடங்களிலிருந்தும், இந்த சாதுவின் இல்லத்திற்கு தினமும் ராம்நாம் சத்சங்கத்திற்கு பலர் வருகிறார்கள் என்றும் கூறினான். ராமநாம இயக்கம் வேகமாக பரவுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக யோகி கூறினார்.

யோகி சாதுவை நோக்கி திருவண்ணாமலை குருக்கள் ஜேசுதாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நாங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளாரா என கேட்டார். இந்த சாது யோகியிடம் நாங்கள் இங்கே தங்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா? என கேட்டேன். யோகி “ஆம்” என்றார். யோகி பின்னர் எனக்கும், விவேக்கிற்கும் வீட்டிற்குள் இருந்து மோர் எடுத்து வந்து எங்களுக்கு கொடுத்து மகிழ்வித்தார். லீ லோசோவிக் எழுதிய சில பாடல்களையும் கொண்டுவந்து இந்த சாதுவிடம் தந்தார். இந்த சாது லீ லோசோவிக் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகவடிவில் கொண்டுவருவதாக உறுதியளித்தான். யோகி தனது பெரும்பாலான நேரத்தை விவேக்கிடம் செலவழித்து அவனது உடல்நலம் குறித்து விசாரித்தார். பக்தர்களுக்கு விநியோகம் செய்ய சுவாமி சச்சிதானந்தர் தந்த மாலைகளை நாங்கள் யோகியிடம் சமர்ப்பித்தோம். அவைகளை அவர் கரங்களில் எடுத்து ஆசி வழங்கினார். நாங்கள். சுவாமி மதுரானாந்தாவின் பஜனையை ஏற்பாடு செய்திருப்பதாக கூறினோம். யோகி தான் அவரை சந்தித்தது இல்லையென்றும் ஆனால் அவரது பஜனைகள் குறித்து  கேட்டுள்ளதாகவும் கூறினார். 

நாங்கள் அவரிடமிருந்து விடைப்பெற்று சுந்தர குருக்கள் இல்லம் சென்றோம். அவர் எங்களை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் விருந்தினர் இல்லமான அப்பர் இல்லத்திற்கு தங்குவதற்கு அழைத்துச் சென்றார். அங்கே நாங்கள் ஒய்வு எடுத்துக் கொண்டு பின்னர் கோயிலின் முன் இருக்கும் பந்தலுக்கு சென்றோம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் விழாவை முன்னிட்டு அங்கே திரு. K.J. அவர்களின் இசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பகவான் மேடையில் அமர்ந்திருந்தார். எங்களுக்கு மேடையின் பக்கத்தில் இடம் அளிக்கப்பட்டது. மேடைக்கு வந்த ஜேசுதாஸ் யோகியை வணங்கி தனது இருக்கையில் அமர்ந்தார். அவரைச்சுற்றி மற்ற பக்கவாத்திய நிபுணர்களும் அமர்ந்தனர்.  ஜேசுதாஸ் இசைக்கச்சேரியை துவங்கினார். இந்த நிகழ்ச்சி மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. விழாவில் எனது குரு யோகி ராம்சுரத்குமார் கௌரவிக்கப்பட்டார். விழா முடிந்தப்பின் இந்த சாது, விவேக் மற்றும் யோகியின் உதவியாளர் ஜெயராமன் உடன் யோகியின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தோம். பகவான் எங்கள் அனைவருக்கும் பால் வழங்க ஏற்பாடு செய்தார். யோகி மீண்டும் விவேக்கின் உடல்நலம் குறித்து விசாரித்தார். நள்ளிரவு ஆகிவிட்டதன் காரணமாக நாங்கள் யோகியிடம் இருந்து விடைப்பெற்றோம். யோகி எங்கே தங்க இருக்கிறீர்கள் என கேட்டார். நாங்கள் அப்பர் ( Appar )  இல்லத்தில் என பதிலளித்தோம். யோகி இந்த அப்பர் என்ற வார்த்தையில் விளையாடினார். ஜேசுதாஸே ஓட்டலில் தங்குகிறார், ஆனால் எங்களது தங்குமிடமோ அப்பர் ( Upper ) இல்லம் என்றார். யோகியிடம் விடைப்பெற்று நாங்கள் அப்பர் இல்லம் வந்தோம். ஆனால் ஏற்கனவே தங்கும் இல்லத்தின் கதவுகள் மூடப்பட்டிருப்பதால், அருகில் இருந்த உண்ணாமலை அம்மன் லாட்ஜை சேர்ந்த திரு. ராஜேந்திரன் எங்களுக்கு தங்க இடம் தந்தார். 

காலையில் எழுந்து குளித்துவிட்டு, சந்தியாவந்தனம் செய்துவிட்டு ராஜேந்திரனிடமிருந்து விடைப்பெற்று யோகியின் இல்லத்திற்கு சென்றோம். யோகி எங்களை வரவேற்று விவேக்கின் உடல்நிலை குறித்து விசாரித்தார். பின்னர் விவேக்கின் கரங்களைப்பற்றி சிறிது நேரம் தியானித்தார். இந்த சாது விவேக்கின் உடல்நிலை குறித்து பகவான் திரும்பத்திரும்ப விசாரிப்பதில் ஏதேனும் ஒரு முக்கியத்துவம் இருக்கும் என நம்பினான். எங்கள் பேச்சு முந்தையநாள் மாலை நிகழ்ந்த இசைக்கச்சேரி குறித்து திரும்பியது. பகவான் குறித்து ஜேசுதாஸ் திருநெல்வேலியில் கேள்விப்பட்டு அங்கிருந்து அவர் திருவண்ணாமலைக்கு தன் தரினத்திற்காக வந்ததாக யோகி கூறினார். மேலும், யோகி ஜேசுதாஸிடம் ஒரு கிறிஸ்துவராக இருந்து கொண்டு எப்படி இந்துக் கடவுள்கள் குறித்து பாடுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் தனது தந்தையின் காலத்திலிருந்தே அதனை செய்வதாக கூறினார். அவர் பகவானுக்காக சில பாடல்களையும் பாடினார். பொன்.காமராஜ் காணிமடம் மந்திராலயம் கட்ட பொருள் ஈட்ட முயன்றபோது ஜேசுதாஸ் அவர்களின் இசை நிகழ்ச்சிக்கு அவரை தொடர்பு கொண்டார். அப்போது ஜேசுதாஸ் பகவானிடம் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டிருக்கிறார். அருணாச்சலேஸ்வரர் கோயிலின் குருக்கள் ஜேசுதாஸ் அவர்களை இசைக்கச்சேரிக்கு தொடர்பு கொண்டபோதும் , ஜேசுதாஸ் பகவானின் அனுமதியைப் பெற்றிருக்கிறார். யோகி, “நேற்றைய சந்திப்பு எங்களின் மூன்றாவது சந்திப்பு” எனக்கூறினார். 

யோகி இந்த சாதுவிடம் நித்யானந்தா ஆசிரமம் குறித்தும் காஞ்சன்காடு பாலிடெக்னிக் குறித்தும் விசாரித்தார். யோகி சாதுவை ஆலந்திக்கு விஜயம் செய்யும்படி அறிவுரை கூறினார். யோகி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஆயிரம் கோடி நாம ஜபத்தை முடிக்க ஆசி வழங்கினார். யோகி, “தவ சுப நாமே காஹே“ என்று பாடி, இந்த சாது ராமநாமத்தை பரப்புவதில் சிறப்பான பணி புரிவதாக கூறினார். இந்த சாது யோகியிடம் சென்றவருடம் போலவே காயத்ரி முதல் விஜயதசமி வரை விரதம் இருக்க அனுமதி கேட்டான். சென்ற வருட விரத அனுபவங்களை நீண்ட நேரம் கேட்டபிறகு யோகி இந்த சாது இந்த வருடமும் விரதம் இருக்க அனுமதித்தார். இந்த சாது அவரிடம் காயத்ரி நாளன்று முன்னரே அறிவித்துவிட்டு தான் வருவதாக யோகியிடம் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை உங்கள் தரிசனத்தை பெற நிவேதிதா வருவார் என இந்த சாது தெரிவித்தான். நாங்கள் அவரிடம் பிரசாதங்களை பெற்றுக்கொண்டு சென்னை திரும்பினோம் . யோகி பிரசாதங்களை சென்னை பக்தர்களுக்கு விநியோகிக்க கொடுத்தார். 

சனிக்கிழமை, ஆகஸ்ட் 12 , 1989 ல் சுவாமி மதுரானந்தா அவர்களின் பஜனை நிகழ்ச்சி எங்கள் இல்லத்தில் பகவானின் கருணையால் நடைப்பெற்றது. நகரத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து ராம்நாம் கூற இணைந்தனர். பஜன் நள்ளிரவு வரை தொடர்ந்தது, சுவாமி எங்களோடு இரவு உணவை உட்கொண்டார். ஞாயிற்றுக்கிழமை காலையில் நிவேதிதா தனது நண்பர்கள் குழுவோடு திருவண்ணாமலைக்கு பகவானின் தரிசனத்தை பெற சென்றனர். அவர்கள் பகவானுடன் சிறப்பாக நேரத்தை செலவழித்தனர். பின்னர் யோகி லீ லோசோவிக் அவர்களின் வருகை குறித்து யோகி நிவேதிதாவிடம் விசாரித்தார். சாதுவின் மேற்கோளான, “பகவான் ராமநாமத்தையே உள், வெளி மூச்சாக சுவாசிக்கிறார்” என்பதைக் குறிப்பிட்டு உரக்க சிரித்த யோகி , “மிக்க கவித்துவமானது“ என்றார். யோகி ராம்சுரத்குமார் பேட்ஜ் ராம்நாம் பிரசாரத்திற்கு தயாரிக்கப்பட்டதை பாராட்டி ஆசீர்வதித்தார். சிரவண பூர்ணிமா அன்று இந்த சாது யோகியின் அருகில் இருப்பான் என்று உறுதி அளித்த பின் நிவேதிதாவின் குழுவினர் விடைப்பெற்று திங்கள்கிழமை அதிகாலையில் வீடு வந்து சேர்ந்தனர். 

ஆகஸ்ட் – 16 ஆம் தேதி 1989 அன்று சிரவண பௌர்ணமி நாள், இந்த சாது உபாகர்மம், யக்ஞோபவீத தாரணம், தர்ப்பணம் போன்ற சடங்குகளை காலையில் முடித்துவிட்டு திருவண்ணாமலை பயணத்திற்கு தயாரானேன். இந்த சாதுவின் அன்னை ஜானகி அம்மாள், சகோதரி அலமேலு, விவேக் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தை சேர்ந்த சில உறுப்பினர்களும் இந்த சாதுவுடன் இணைந்தனர். நாங்கள் மாலை யோகியின் இல்லம் அடைந்தோம். இந்த சாது அனைவரையும் லாட்ஜ்ல் விட்டப்பின் தனியே யோகியை பார்க்கச் சென்றேன். அவர் ஓய்வு எடுக்க சென்றுவிட்டார் என அறிந்து நான் அறைக்கு திரும்பினேன். விவேக்கிற்கு இடைவிடாத இறுமலோடு உடல்நலம் பாதிக்கப்பட்டது. 

அதிகாலையில் நாங்கள் சந்தியாவந்தனம் முடித்துவிட்டு யோகியின் இல்லத்திற்கு சென்றோம். அவர் எங்களை காத்திருந்து அன்போடு வரவேற்றார். அவர் C.V.ராதாகிருஷ்ணன் மற்றும் விவேக்கின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவர் எனது அன்னை மற்றும் சகோதரி மீது ஆசியை பொழிந்தார். அனைத்து நோய்களுக்கும் ஏற்ற சஞ்சீவினி மருந்து ராமநாமம் என்றார். ஒரு பக்தர் ஒரு பெரிய மாலையை கொண்டு வந்து யோகியின் கழுத்தில் போட்டார், யோகி அதனை சிறிது நேரம் தன் கழுத்தில் வைத்திருந்து விட்டு அதனை கழற்றி எனது தாயாருக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அவர் எங்கள் அனைவருக்கும் பால் மற்றும் டீ தந்தார். பின்னர் அவர் எங்களை கோயிலுக்கு செல்லுமாறு கூறினார். அங்கே இந்த சாதுவும், விவேக்கும் காயத்ரி ஜபம் செய்தோம். மற்றவர்கள் கோயிலை வலம் வந்து திரும்பி வருவதற்கு முன் நாங்கள் காயத்ரி ஜெபத்தை முடித்தோம். பின்னர் நாங்கள் மீண்டும் யோகியின் இல்லம் வந்தோம்.  அவர் முன்னிலையில் நாங்கள் ராமநாமத்தை இரண்டு மணிநேரம் உச்சரித்தோம். அவர் ராமநாம இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலைநாடுகளின் உலகாயத சக்திகளின் தாக்குதலால் உலக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து கூறிவிட்டு பாரதம் உயிர்த்தெழ வேண்டிய அவசியம் குறித்து  வற்புறுத்தினார். ஆன்மீகத்திற்கும் உலகியிலுக்கும. இடையே நடக்கும் நேரடி போர் குறித்து குறிப்பிட்டு இந்த போரில் இறுதியாக ஆன்மீகமே வெல்லும் என்றார். 

இந்த சாது பகவானிடம் தனது உடல்நிலை குறைபாட்டிற்கும் இடையே எனது தாயார் ஜானகி அம்மாள் தினமும் லிகிதநாம ஜபம் செய்கிறாள் என்றேன். அவள் கீழே விழுந்தமையால் அவளது வலது கை முழங்கை மடக்க இயலாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தார். யோகி அவரது கைகளை சில நிமிடங்கள் கவனித்தார். பின்னர் இந்த சாதுவின் சகோதரியை அழைத்து, உள்ளே சென்று தேங்காய் சிரட்டையில் சிறிதளவு தண்ணீரை கொண்டுவருமாறு கூறினார். அவர் அந்த தண்ணீரை தனது உள்ளங்கையில் ஊற்றி, அம்மாவின் வலது  முழங்கையின் கீழே தனது கையை வைத்து சிறிது நேரம் தியானித்தார். பின்னர் அவர் கைகளை மடக்குமாறு கூறினார். ஆனால் அம்மாவோ தனக்கு மடக்குவதற்கு சிரமமாகவும், வலி மிகுந்தும் இருக்கும் என்று கூறினார். யோகி சிரித்தவாறே, “இல்லையம்மா உனது கரங்கள் இப்போது சரியாகிவிட்டது.” என்றார். அவரே முழங்கையை மடக்கினார். தெய்வீக மருத்துவம் டாக்டர்கள் செய்ய முடியாதவைகளை செய்யும். பின்னர் அவர் அம்மாவிடம், “அடுத்த ஆறு மாதங்களில் நீ நாம ஜபம் மட்டுமே செய்யலாம். லிகித ஜபம் செய்ய வேண்டியதில்லை” என்று ஒரு முக்கிய அறிவுரையை கூறினார். 

சாதுவிடம் திரும்பிய யோகி காயத்ரி முதல் விஜயதசமி வரை விரதம் கடைபிடிக்குமாறு கூறினார். நெல்லிக்காய் பொடியை தந்து விரதத்தை துவக்கி வைத்தார். மேலும் சாதுவிடம் தினமும் நெல்லிப்பொடியை எடுத்துக்கொள்ளுமாறு கூறினார். ராமநாமத்திற்கு அடுத்து நெல்லிக்காய் அனைத்து நோய்களுக்குமான சிறந்த சஞ்சீவினி என்றும் எனவே அதனை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டு எனது பணிக்கான ஆற்றலை பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார். 

பகவானோடு சிறந்த நேரத்தை செலவழித்து, பக்தர்களின் அனைத்து குடும்பத்தினருக்கும் பகவானின் ஆசிகளைப் பெற்று நாங்கள் அனைவரும் சென்னை திரும்பினோம். 

அத்தியாயம் 2.13 

சீடனின் பிறந்தநாளில் குருவின் ஆசி

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கிடைத்த குருவின் ஆசியானது அவர்களை ஊக்குவித்து, தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு ராமநாமத்தை சொல்லும் உத்வேகம் அளிக்கச் செய்தது. லீ லோசோவிக் போன்ற அயல்நாட்டு பக்தர்கள் தொடர்பில் இருந்தனர். சகோதரி நிவேதிதா அகாடமி மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் பற்றிய செய்திகள், ஹிந்து உலகத்தில் நிகழும் பல்வேறு சேதிகளை அவர்களுடனும் மற்ற உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஹிந்து சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ள, யோகியின் ஆசியோடு “,ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனல்” என்ற செய்தி தொடர்பு சேவை துவங்க முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 2 , 1989 ல் ரேவதி ரகுநாதன் என்ற பக்தரின் வீட்டில் சிறப்பு சத்சங்கம் நடத்தப்பட்டது. இளைஞர் சங்க உறுப்பினர்களுடன் சுவாமி ராக்கால் சந்திர பரமஹம்சா அவர்களும் அதில் கலந்து கொண்டார். அடுத்தநாளே சென்னை பெரியார் நகரில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

திரு. சங்கர் சாஸ்திரி , ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் ஒரு மூத்த பிரச்சாரகர். மேலும் அவர் விஸ்வ இந்து பரிஷத்தில் அகில இந்திய செயலாளராகவும், சுவாமி விவேகானந்தர மெடிக்கல் மிஷனில் பொதுச்செயலாளராகவும் இருந்தவர்.  அவர்  யோகி ராம்சுரத்குமார் அவர்களின் தரிசனத்தை பெற விரும்பினார். திருமதி. பாரதி ரங்கராஜன் மற்றும் விவேகானந்தன் அவரை திருவண்ணாமலைக்கு செப்டம்பர் 4, 1989 திங்கள்கிழமை அழைத்துச் சென்றனர். வில் ஸுல்கோஸ்கி என்ற அமெரிக்க பக்தர் எங்களது பதிப்பத்தின் பகவான் மீதான நூல்களைக் கேட்டிருந்தார். நூல்களின் மொத்த தொகுப்பையும் அவருக்கு அனுப்ப நாங்கள் ஏற்பாடு செய்தோம். ரொசோரா மற்றும் கிறிஸ்டியுடன் யோகியின் தரிசனத்தை பெற்ற சேக்ரட் ஹார்ட் லெப்ரசி சென்டரை சேர்ந்த மதர் கிறிஸ்டினா இந்த சாதுவை சந்திக்க திருவல்லிக்கேணிக்கு வந்தார். யோகி தன்னை தரிசிக்க வந்த ஒரு தம்பதியினரை, மராட்டி மொழியில் ராமநாம பிரச்சாரத்திற்கான துண்டுப்பிரசுரங்களை சாதுவிடம் சேர்க்க, சாதுவை சந்திக்க அனுப்பினார்.. இந்த சாதுவால் பாரதீய வித்யாபவனின் ராஜாஜி கல்லூரியில், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் பற்றி நடத்தப்பட்ட தொடர் சொற்பொழிவுகள் பல இளைஞர்களை ஈர்த்து அவர்களை யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தில் இணைத்து, யோகி ராம்சுரத்குமார் அவர்களை அறியும் ஆவலையும் அவர்கள் உள்ளத்தில் தூண்டின. செப்டம்பர் 28, 1989 ல் இந்த சாது பகவானுக்கு பணிகளில் நடந்திருக்கும் முன்னேற்றங்கள் குறித்து ஒரு கடிதம். எழுதினான்: 

“பூஜ்யபாத  குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

உங்கள் கருணையாலும், ஆசியாலும் எனது விரதம் தொடருகிறது. விஜயதசமி அன்று முடிவடையும், எனது உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. எனது பணிகள் எந்த தடையும் இன்றி தொடர்கிறது. மற்ற அனைவரும் நலம். 

சென்னை, ரோகிணி கார்டன்ஸ் விநாயகர் கோவிலில், பூஜ்ய மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் ஜெயந்தி விழாவையொட்டி, நாளை காலை முதல் மாலை வரை அகண்டநாம ஜபம் திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாம யக்ஞம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்த கடிதத்துடன் அதுபற்றிய ஒரு சுற்றறிக்கையை அனுப்புகின்றோம்.

‘தத்துவ தர்சனா’வின் ராம்நாம் சிறப்பிதழ் ஒன்றை விஜயதசமி அன்று வெளிக்கொண்டுவர இருக்கிறோம். ஆன்மீக, கலாச்சார, மற்றும் மதம் சார்ந்த செய்திகளுக்கு பெருமளவு முக்கியத்துவம் அளிப்பதோடு, சர்வதேச ராம்நாம் யக்ஞத்தையும் பற்றி பிரசாரம் செய்யவும் ‘ஹிந்து வாய்ஸ் இண்டர்நேஷனல்’ என்ற ஒரு செய்தி பிரிவையும் துவக்குகின்றோம்,. 

இந்த சாது புத்தக தபால் மூலம் ஒரு மலரை அனுப்பியிருக்கிறான். அந்த மலரை இந்த தாழ்மையான சாது,  கணேஷ் சதுர்த்தியை முன்னிட்டு பொது மக்கள் வழிபட திருவல்லிக்கேணியில் நிறுவப்பட்ட 16 அடி விநாயகர் சிலையின் வழிப்பாட்டு விழாவிற்காக வெளியிடப்பட்டது, இந்த சிலை ஊர்வலமாக கடந்த 10 தேதி எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. 

அகில இந்திய வானொலி நிலையம் – ஏ எனது உரையான “தேசப்பற்றின் ஆன்மீக அடிப்படைகள்” என்ற உரையை திங்கள்கிழமை, அக்டோபர் 30, 1989 அன்று காலை 8.20 க்கு ஒலிபரப்ப இருக்கிறது. அக்டோபர் 31 அன்று திருமதி இந்திரா காந்தியின் உயிர் துறப்பை நினைவு கூறும் ஒரு வார நிகழ்வின் தொடர்புடைய ஒலிபரப்பு இது. 

இந்த தாழ்மையான சீடனின் உரையை நீங்கள் தயைக்கூரந்து கேட்டு , இந்த அன்னைபூமிக்கு சிறந்த சேவையை தொடர்ந்து புரிய என்னை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும். 

எனது அன்னை, விவேக், திருமதி பாரதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் தங்களின் தாழ்மையான நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். எங்களால் தினந்தோறும் நடத்தப்படும் சத்சங்கம் மற்றும் பஜனைகளில் பலர் பங்கு கொள்கின்றனர். நியூயார்க்கைச் சேர்ந்த திரு. வில் ஸுல்கோஸ்கி , அரிசோனா ஹோம் கம்யூனிட்டியைச் சேர்ந்த சௌ. சீதா போன்றோர் தங்கள் வணக்கத்தை உங்களிடம் தெரிவிக்குமாறு எழுதியிருந்தனர். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்

உங்கள் தாழ்மையான சீடன் 

சாது ரங்கராஜன்

இணைப்பு  : மேலே குறிப்பிட்டபடி”

மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் ஜெயந்தி விழா சிறப்பான முறையில் அகண்ட நாம ஜபத்துடன் பல பக்தர்கள் கலந்து கொள்ள வெற்றிகரமாக நடந்தது. விவேகானந்தன் மற்றும் நாராயணன் இருவரும் காந்தி ஜெயந்தி அக்டோபர் – 2 அன்று திருவண்ணாமலைக்கு சென்றனர். யோகி அவர்களை காந்திசிலையின் அருகில் இருந்து வரவேற்றார். யோகி காந்திசிலைக்கு காலையில் மாலைகள் அணிவிக்கும் நிகழ்வில் பங்குபெற காத்திருந்தார். மதிய நேரத்தில் பக்தர்கள் யோகியை தரிசிக்க வந்தனர் . அப்போது யோகி ராம்சுரத்குமார் நகைச்சுவையாக, “ஏழை மக்களுக்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது. ஆனால் இந்த பிச்சைக்காரனை விட்டுவிட்டனர்” என்றார். 

அக்டோபர் 10 , 1989 அன்று இந்த சாது தனது 55 ஆவது நாள் உண்ணாவிரதத்தை பார்த்தசாரதி கோயில் பிரசாதத்துடன் முடித்துக் கொண்டான்.  ஃப்ரை கே. குல்மான் என்ற வெளிநாட்டு பக்தர் யோகியை திருவண்ணாமலையில் சந்தித்தார், அவரை எனது இல்லத்திற்கு யோகி ராம்சுரத்குமார் குறித்த புத்தகங்களை பெற எனது வீட்டிற்கு யோகி அனுப்பி வைத்தார். யோகியின் அருளால் எனது, “தேசப்பற்றின் ஆன்மீக அடிப்படைகள்” என்ற உரை அக்டோபர் – 13 அன்று அகில இந்திய வானொலி நிலையத்தால் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அக்டோபர் 16 அன்று ஒரு சிறப்பு சத்சங்கம் சென்னை ரோகிணி கார்டனில் நடைப்பெற்றது அதில் காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தைச் சேர்ந்த சுவாமி மதுரானந்தா கலந்து கொண்டார். அக்டோபர் 18 அன்று சேலம் சாரதா கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர். தேவகி தனது குழுவினரால் 46 லட்சம் ராம்நாம் ஜெபம் செய்யப்பட்டிருப்பதாக அறிக்கையை தந்தார். திரு. பொன்ராஜ் என்கிற சார்ட்டட் அக்கவுண்டன்ட் மூலம் சகோதரி நிவேதிதா அகாடமியின் ட்ரஸ்ட் டீட்  தயாரிக்கப்பட்டது. அவரும் பகவானின் பக்தரே. இறுதி வடிவம் பெற்ற அறக்கட்டளை ஆவணத்தை பகவானின் ஆசியை பெறவும், அவரின் ஒப்புதலைப் பெறவும் பகவானுக்கு அக்டோபர் 20 தேதி நாங்கள் ஒரு கடிதம் எழுதினோம் : 

“பூஜ்யபாத  குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

உங்கள் கருணையாலும், ஆசியாலும் எனது 55 நாள் உண்ணாவிரதம் வெற்றிகரமாக விஜயதசமி நன்னாளில் அக்டோபர் 10, 1989 அன்று நிறைவடைந்தது.

‘தத்துவ தர்சனா’ ராம்நாம் சிறப்பிதழ் மற்றும் ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனல் என்ற செய்தி பத்திரிக்கையின் முதல் பிரதியும் தயாராக உள்ளது. நான் 21 ஆம் தேதி அக்டோபர் சனிக்கிழமை மாலையில் அங்கே வருகிறேன். இந்த இரண்டு இதழ்களின் முதல் பிரதியை உங்கள் பாதங்களில் வைத்து ஆசிபெற விரும்புகிறேன். திரு. பொன்ராஜ் என்ற சார்ட்டட் அக்கவுண்டன்ட் எங்கள் பணிகளில் உதவுவதோடு, அவரது இல்லத்தில் இரண்டு சத்சங்கங்களை நடத்த                          யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்திற்கு உதவினார். அவரும், டாக்டர். C.V.ராதாகிருஷ்ணனும் என்னோடு உங்கள் தரிசனம் பெற வருவார்கள். மேலும் சகோதரி நிவேதிதா அகாடமியை ஒரு சேவா டிரஸ்ட் ஆக மாற்றுவது குறித்தும் தங்களிடம் பேச விரும்புகிறோம். 

‘தேசப்பற்றின் ஆன்மீக அடிப்படைகள்’ என்ற எனது வானொலி உரை 30 ஆம் தேதி அக்டோபர் காலை 8.20 மணிக்கு, சென்னை – A வில் ஒலிபரப்பு ஆகும். இதில் உங்களுடைய, இந்த தேசத்தின் மீதான அன்பு மற்றும் மக்களின் மீதான அன்பு ஆகியவற்றை குறித்து டாக்டர் சுஜாதா விஜயராகவன் அவர்களின் நூலில் இருந்து மேற்கோள் காட்டி பேசினேன். மேலும் புதிய இந்தியாவை உருவாக்க ஆன்மீக மூல்யங்களின் அவசியம் குறித்து இந்திரா காந்தியின் அழுத்தமான வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி பேசினேன். தாங்கள் இந்த உரையைக் கேட்டு ஆசீர்வதிப்பீர்கள் என்றே நம்புகிறேன். 

“ஹிந்துயிசம் டுடே” என்ற மிக புகழ்பெற்ற அகில உலக மாத இதழ் மொரீஷியஸில் இருந்து வெளிவருகிறது. அமெரிக்காவில் ஹவாய் நகரை தலைமை இடமாக கொண்ட சைவ சித்தாந்த சர்ச் என்ற அமைப்பின் தலைவர் H.H. சுவாமி சிவாய சுப்பிரமணியம் இதை வெளியிடுகிறார். அந்தப் பத்திரிகையின் ஆசிரியரிடமிருந்து வந்துள்ள ஒரு கடிதத்தில், உங்களைப் பற்றி ஒரு கட்டுரையும் அத்துடன் உங்கள் புகைப்படம் ஒன்றையும் அனுப்புமாறு வேண்டிக் கொண்டுள்ளார். அத்துடன் தங்களுடைய கருத்துக்கள் குறித்து தங்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளையும் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். இது குறித்து நான் என்ன செய்ய வேண்டும் என்று தங்களுடைய கட்டளையை வேண்டுகிறேன். நேரில் இது குறித்து நான் உங்களிடம் பேசுகிறேன். சுவாமி மதுரானந்தா இங்கே திங்கள்கிழமை அன்று வந்திருந்தார், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மூலம் ஒரு இனிமையான பஜனும், சத்சங்கமும் நடைப்பெற்றது. நல்ல கூட்டமும் கூடியது. 

குமாரி நிவேதிதா மற்றும் விவேக்கின் நண்பர்கள் டாக்டர்.C.V.ராதாகிருஷ்ணன் அவர்களின் வழிக்காட்டுதலின் படி மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளுக்கு தங்கள் பிரசாதங்களை தருவதோடு அவர்களை ராம்நாம் சொல்லவும் ஊக்குவிக்கின்றனர். ராம நாம யக்ஞம் துரிதமாகி இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அயல்நாடுகளில் இருந்தும் ராம்நாம் பொழிகிறது. பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் எங்கள் பணி குறித்த மகிழ்ச்சியை கடிதம் மூலம் தெரிவித்தார். தங்களின் ஆசியாலும், கருணையாலுமே நாங்கள் எங்களது தாழ்மையான பணியை இந்த பெரும் இலட்சியத்திற்காக செய்ய முடிகிறது. இந்ந கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த திரு. தியாகராஜன் என்னை தொலைபேசி மூலம் அழைத்து தனது நமஸ்காரத்தை உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார். மேலும் அவர் அடுத்த வருடம் இந்தியாவிற்கு வந்து தங்கள் தரிசனத்தை பெறுவதாகவும் கூறினார். 

திரு லீ லோசோவிக் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அவரும் அவரது நண்பர்களும் சென்னைக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நவம்பர் 26 மதியம் வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். நாங்கள் நவம்பர் 25 அன்று ராம்நாம் சப்தாஹம் துவங்க இருக்கிறோம், அது தங்கள் பிறந்தநாளான டிசம்பர் – 1 அன்று முடிவடையும். இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தலைவரான திரு. M.P. நாராயணன் சென்னையில் நடக்கும் சப்தாஹத்தில் பங்கு பெறுவதாக கூறியுள்ளார். 

மற்றவை நேரில் 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டப்படி”

இந்த கடிதம் யோகி ராம்சுரத்குமாருக்கு அனுப்பிய அடுத்தநாளே சாதுவின் பயணத்திட்டத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. பாரதீய வித்யா பவனை சேர்ந்த ஒரு மாணவன் சாதுவிடம் 150 மாணவர்களுக்கு ராமாயணம் வகுப்பு அக்டோபர் 21 அன்று எடுக்க வேண்டியிருப்பதை நினைவூட்டினார். இந்த சாது யோகியிடம் அக்டோபர் 22 ஆம் தேதி வருவதாக கூறி மன்றாடினேன். மேலும் அந்த கடிதத்தில், “அக்டோபர் 22 ஆம் தேதி, நான் 49 வயதை முடித்து 50 வது வயதிற்குள் நுழைகிறேன். இது ஆங்கில நாள்காட்டியின் படி, இந்து பஞ்சாங்கத்தின் படி இன்று ஆருத்ரா நட்சத்திரம், எனது ஜென்ம நட்சத்திரம், நான் உங்களது கருணையையும், ஆசியையும் வேண்டி பிரார்த்திக்கிறேன்“  என்று எழுதியிருந்தேன்.

அக்டோபர் 22, 1989 இந்த சாதுவின் ஐம்பதாவது பிறந்தநாள் அன்று, நாங்கள் அதிகாலையில் திருவண்ணாமலைக்கு சென்றோம். விவேகானந்தன், ஆடிட்டர் பொன்ராஜ், டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் பாஸ்கர் இந்த சாதுவுடன் இணைந்தனர். திருவண்ணாமலையை அடைந்தபோது, இந்த சாதுவின் மூத்த சகோதரர் லட்சுமிகாந்தன் எங்களோடு இணைந்தார். நாங்கள் அனைவரும் குருவின் இல்லத்திற்கு சென்றோம். அங்கே பெரும் கூட்டம் இருந்தது. குரு எங்கள் அனைவரையும் வரவேற்றார். நாங்கள். அனைவரும் அமர்ந்தோம். இந்த வருகையை குறித்து முன்பே எழுதியிருந்தீர்களா என யோகி விவேக்கிடம் கேட்டார். இந்த சாது யோகியிடம் நாங்கள் இரண்டு கடிதங்கள் அனுப்பியதாக கூறி, கடிதங்களின் உள்ளடக்கத்தையும் விவரித்தான். யோகி இதுவரை தான் எந்த கடிதத்தையும் பெறவில்லையென்றும், பெற்றிருப்பின் எங்களை வரவேற்க தான் தன்னை தயார் படுத்திக்கொண்டிருப்பேன் என்றும் கூறினார். பொன்.காமராஜ் தன்னை சந்திக்க வந்து இருந்ததாக கூறினார். பொன் காமராஜ் தனது இல்லத்திற்கும் வந்திருந்ததாகவும், அவரிடமும் எனது திருவண்ணாமலை பயணம் பற்றி பகிர்ந்ததாகவும் இந்த சாது பகிர்ந்தான். யோகி காலை ஆறு மணியில் இருந்து தான் எதையும் உட்கொள்ளவில்லை என்றும், காலையில் பொன் காமராஜ் வந்தது முதல் இதுவரை தொடர்ந்து பக்தர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். அங்கிருந்த கஜராஜ் இடம் தனக்கு சில சப்பாத்திகளைத் தருமாறு கூறினார். காலை உணவையே யோகி மதிய நேரத்தில் எடுத்துக் கொண்டார். இந்த சாது தனது சகோதரர் லட்சுமிகாந்தன் உட்பட, தன்னோடு வந்திருந்தவர்களை யோகியிடம் அறிமுகப்படுத்தினார். பின்னர் சில வருமானவரி துறை அதிகாரிகள் வந்து செல்வி. விஜயலட்சுமி IRS (தற்சமயம் இவர் அன்னை விஜயலட்சுமி ஆக திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் இருக்கிறார்) அவர்கள் தரிசிக்க வருவதாக யோகியிடம் கூறினர். அவர் வந்தபோது யோகி அவர்களை வரவேற்றார். அதன்பின் இந்த சாது, ‘தத்துவ தர்சனா’ ராம்நாம் சிறப்பிதழையும், ‘ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனல்’ என்ற செய்திப் பத்திரிகையின் முதல் இதழையும் யோகியின் பாதங்களில் சமர்ப்பித்தான். யோகி அதனை ஒரு முறை பார்த்துவிட்டு, யோகி தனக்கு வந்திருந்த, நியூயார்க்கின் வுட்ஸ்டாக்கை சேர்ந்த கோல்டன் க்வெஸ்ட் என்ற பதிப்பகம் வெளியிட்டிருந்த, ஹில்டா சார்ல்ட்டன் எழுதிய, “செயின்ட்ஸ் அலைவ்“ என்ற நூலை சாதுவிடம் காண்பித்தார். சாது அந்த நூலை தன்னோடு வந்திருந்த நண்பர்களிடம் காட்டினார். விஜயலட்சுமி யோகியிடம் ஒரு பரிசு பொட்டலத்தை வழங்கினார், இன்னொரு பரிசு பொட்டலத்தில் மூன்று புடவைகள் இருந்தன அதனையும் யோகியிடம் தந்து அவர் விரும்பும் எவருக்கேனும் விநியோகிக்குமாறு கூறினார். யோகி தனக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை ஏற்றார். பின்னர் அந்த இரண்டாது பொட்டலத்தை ஆசீர்வதித்து அவரிடமே தந்துவிட்டு, “இவைகளை விநியோகம் செய்வது இந்தப்பிச்சைக்காரனின் வேலையல்ல. என் தந்தை இந்தப்பிச்சைக்காரனுக்கு வேறு வேலைகளை தந்திருக்கிறார்“ என்று நகைச்சுவையாக கூறினார். தனக்கு பரிசளிக்கப்படும் எதனையும் ஏற்கும் சுயநலக்காரன் தான் என்றும், ஆனால் அவைகளை பிறர்க்கு ஒருபோதும் தந்ததில்லை என்றும், ஹர்ஷத் பண்டிட் என்பவர் தனக்கு பரிசளித்த சில நூறு ரூபாய் மதிப்புள்ள உடைகளை தான் திருப்பி தந்துவிட்டதாகவும் கூறினார். தனது காலடியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை சுட்டிக்காட்டி இவைகளை ஆசீர்வதித்து திருப்பி தந்துவிடுவேன், எதனையும் நான் விநியோகம் செய்வதில்லை என்றார். தன் முன்னால் தனது படத்தை அச்சடித்த நாட்காட்டிகள் வைக்கப்பட்டதாகவும், அதனை பெறுவதற்கு பெரும் கூட்டம் கூடியதாகவும் அந்த கூட்டத்தை தன்னால் சமாளிக்க இயலவில்லை என்றும் யோகி முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். 

விஜயலட்சுமி குருவிடம் தியானம் செய்யும் போது தன்னால் மனதை ஒருநிலை படுத்த முடியவில்லை என்றும் மனம் அங்கிங்கும் அலைகிறது என்றும் கூற, யோகி பதிலளித்தார், “ மனம் எங்கு வேண்டுமானாலும் ஓடட்டும், நடுக்கடலில் பறக்கும் பறவையானது அங்குமிங்கும் பறந்தாலும் இறுதியில் கப்பலின் கொடிமரத்தை நோக்கியே திரும்பவும் வருவதைப்போலத்தான், இறுதியாக மனம் ராமன் இருக்கும் இதயத்தை நோக்கியே வரவேண்டும், மனம் எங்கு அலைந்தாலும் , எங்கும் கடவுளே இருக்கிறார், நாம் அதுகுறித்து கவலை கொள்ள வேண்டாம்.” பகவான் சூர்தாஸ் அவர்களின் மேற்கோளை கூறி, “நமது மனம் எங்கு அலைந்தாலும், உதடு மட்டும் இறைவனின் பெயரை இயந்திரத்தனமாக உச்சரித்தவாறே இருக்க வேண்டும்” என்றார். அந்த அம்மையார் நம்பிக்கையை வைத்திருத்தல் கடினம் என்றார். பகவான் கீதையை மேற்கோள் காட்டி, “ஸம்ஸயாத்மா விநஸ்யதி“ என்றார். அந்த அம்மையார் தனக்கு விளங்கவில்லை என்று கூற, இந்த சாது இடைமறித்து, “ஐயத்தை இயல்பாக கொண்டவன் அழிந்து போகிறான்“ என கூற, அவர் தான் ஒருபோதும் சந்தேகப்படுவதில்லை என்றும், ஆனால் பிரச்சனைகள் வருகையில் மனமானது பலவீனமடைகிறது என்றும் கூறினார். இந்த சாது அதனை இதுவே “அர்ஜூன விஷாதயோகம்“ – அர்ஜூனனின் அவநம்பிக்கை என்றான். குருவோ, ஒருவன் எல்லா நேரமும் அறுதியான நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்றார். 

விஜயலட்சுமி குருவிடம் இந்த சாது குறித்து தான் தேவகி மூலம் அறிந்ததாக கூறினார். இந்த சாது தனது பதிப்பகத்தின் நூல்களை அவரிடம் தந்தான். அவர் தான் தேவகி மூலமாக, “ஒரு மகா யோகியின் அற்புத தரிசனங்கள்“ என்ற நூலை பெற்றுவிட்டதாக கூறினார். அவர் இந்த சாதுவிற்கு சில காணிக்கைகளை தர விரும்பினார், சாது அதனை பின்னர் தருமாறு கூறினார். யோகி அவரை ராம்நாம் கூறுமாறு சொன்னார். இந்த சாது அவரிடம் பொன்ராஜ், ராதாகிருஷ்ணன், காந்தன் மற்றும் விவேக் போன்றவர்களை அறிமுகப்படுத்தினான். காந்தனை இந்த சாது மூத்த சகோதரர் என அறிமுகப்படுத்தும் போது, யோகி அவர் குறித்த விவரங்களை கேட்டார். இந்த சாது யோகியிடம் காந்தன் திருவண்ணாமலையில் கருவூல அதிகாரி பதவி வகிப்பதாகவும், அவர் தனியே ஒரு அறையில் தங்கியிருப்பதாகவும், அவர் இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்றும கூற, யோகி இப்போது நன்றாக இருக்கிறாரா என்று கேட்டார். அப்போது காந்தன், இப்போதும் சில தொல்லைகள் இருப்பதாக கூறினார். பகவான் அவரை தன் அருகே வரவழைத்து அமரவைத்தார். அவரது கைகளைப் பிடித்த யோகி அவருக்குள் சில வேலைகளை துவங்கினார். காந்தன் யோகியிடம் தான் நடக்கும் போது வலியும், அதிகமான இதயத்துடிப்பும் இருப்பதாக கூறினார். பகவான் அவரை எழுந்து சிறிது தூரம் நடக்கச் சொன்னதோடு, அவரது அதிகமான இதயத்துடிப்பின் காலத்தை கவனிக்குமாறு கூறினார். பின்னர் யோகி காந்தனிடம் தன்னோடு அவ்வப்போது தொடர்பில் இருக்குமாறு கூறினார். காந்தனும் யோகியை மீண்டும் சந்திப்பதாக வாக்குறுதியளித்தார். 

பகவான் ராம்நாம் ஜப யக்ஞத்தின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியை தெரிவித்தார். இந்த சாது ‘தத்துவ தர்சனா’வின் சிறப்பிதழில் இருந்த தலையங்கத்தை படித்தார். அதில் இருந்த பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் அவர்களின் செய்தியையும் பகவான் ஆர்வத்துடன் கேட்டார். விஜயலட்சுமி உடன் இருந்த ஒரு சார்ட்டட் அக்கவுண்டன்ட் தனது தலையில் இருந்த கட்டியானது யோகியின் கருணையால் நீங்கியது என்றார். ராதாகிருஷ்ணனும், ஈரோட்டை சேர்ந்த பேராசிரியர் பாலசுப்ரமணியன் பகவானின் கருணையால் குணமாகிவிட்டதாக கூறினர். பகவானும் தன் தந்தையின் கருணையை காந்தனும் பெற வேண்டும் என கூறினார். ஆனால் முழுமையான குணமடைய சில காலங்கள் ஆகும் என்றார்.  பகவான் எங்களிடம் விசிறி படம் போட்ட தீப்பெட்டியை காட்டினார். 

இந்த சாது பகவானிடம் ராம்நாம் சப்தாஹம் மற்றும் லீ லோசோவிக் நிகழ்ச்சி குறித்தும் கூறினான். தேவகி மற்றும் சந்தியா அவர்கள் தந்த ராம்நாம் பங்களிப்பு குறித்தும் நாங்கள் கூறினோம். நாங்கள் இந்த சாதுவின் வானொலி உரைகள் பற்றி யோகிடமும், விஜயலட்சுமி அவர்களிடமும் கூறினோம்.

யோகி, விஜயலட்சுமியிடம், வரி என்ற பெயரில் அரசு அனைத்தையும் எடுத்துக் கொண்டால் மக்கள் என்ன செய்வார்கள் என வினவினார். அதற்கு விஜயலட்சுமி மற்றும் பொன்ராஜூம் இந்தியாவில் வரிவிதிப்பு மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மிக குறைவே என குறிப்பிட்டனர்.

விஜயலட்சுமி விடைபெறும் முன் ஆடிட்டர் தனக்கு ஒரு பிரதி ‘தத்துவ தர்சனா’ வேண்டுமென கேட்டார், பகவான் அதனை அவரிடம் கொடுத்தார். விஜயலட்சுமி சென்றபின் பகவான் மேலும் சிறிது நேரம் எங்களோடு செலவிட்டார். யோகி எழுந்து காந்தன் முன் அமர்ந்து கொண்டார். பகவான் விவேக்கிடம் இந்த சாதுவின் யக்ஞ தண்டத்தை எடுக்கச் சொன்னார். பகவான் இந்த சாதுவிடம் அதனை தொட வேண்டாம் என்று கூறினார். விவேக் அந்த தண்டத்தை எடுத்து யோகியின் கரங்களில் கொடுத்தார். பகவான், “இது சந்நியாச தண்டம். இந்தப்பிச்சைக்காரன் சந்நியாசி அல்ல, ஆனால் ரங்கராஜன் ஒரு சந்நியாசி அதனால் அவர் இதனை வைத்திருக்கிறார். இந்தப்பிச்சைக்காரன் இதனை கைகளில் வைத்துக்கொண்டிருப்பதாலேயே அவன் சந்நியாசி ஆவதில்லை.” யோகி சிரித்தவாறே இந்த சாதுவிடம் கமண்டலம் இன்னும் வரவில்லை என்றார். இந்த சாது யோகி தந்த கொட்டாங்குச்சியை காட்டினான். யோகி இது கமண்டலம் ஆகாது என்றார்.

பகவான் இந்த சாதுவின் பணியைக் குறித்து பேசினார். எவ்விதம், “ஒரு மகா யோகியின் அற்புத தரிசனங்கள்“ என்ற புத்தகம் பலரை ஈர்த்தது என்று குறிப்பிட்டார். அவர் பாஸ்கரை அழைத்து தன் அருகில் அமரச்சொல்லி உனது தந்தையிடம் நீ தத்துவங்களைக் கற்றுக் கொண்டாயா என வினவினார். பாஸ்கர் தனக்கு வணிகவியல் மற்றும் விளையாட்டில் ஆர்வம் என்றார். இந்த சாது பகவானின் அருளால் மற்றும் ஆசியால், பாஸ்கர் மலேசியாவில் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டார் என கூறினான் பகவான் பின்னர் விளையாட்டு குறித்து பேசத் தொடங்கினார் . டாக்டர். ராதாகிருஷ்ணன் யோகியிடம் ரக்பி என்ற விளையாட்டு கால்பந்தைவிட மிகவும் முரட்டுத்தனம் மிகுந்த தீவிரமான விளையாட்டு என்றார். யோகி ராம்சுரத்குமார் நகைச்சுவையாக சுவாமி விவேகானந்தர் நம்மை மிகுந்த தாக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கச் சொல்கிறார் என்றார். 

யோகிஜி விவேக் இடம் திரும்பி அவனது உடல்நலம் குறித்து விசாரித்தார். யோகி மேலும் சாதுவின் தாயார், பாரதி மற்றும் நிவேதிதா குறித்து விசாரித்தார். நிவேதிதாவின் படிப்பு குறித்த கேள்விகளை கேட்டார். அவர்கள் ஏற்பாடு செய்த இரத்த தான பிரச்சாரம் குறித்து நினைவு கூர்ந்தார் பகவான். இனி இது போன்ற பிரச்சாரங்கள் இளைஞர் சங்கம் செய்யவேண்டாம் என்றார். இந்த சாது தங்களின் அறிவுரைப்படி இனி ராம்நாம் பிரச்சாரத்தில் மட்டுமே கவனம் கவனம் செலுத்த வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக கூறினார். அனைத்து ஆற்றல்களும் ஆன்மீக செயல்களுக்கு தேவை என யோகி கூறினார். அவர் மீண்டும் காந்தனை தனது அருகில் அமரச்சொன்னார், அவரிடம் ஒரு உரித்த வாழைப்பழத்தை தந்தார். அதனை அவரது கைகளில் வைத்து அவருக்காக பிரார்த்தனை செய்தார்.

இந்த சாது யோகியிடம் “ஹிந்துயிசம் டுடே” என்ற பத்திரிகையிலிருந்து வந்த கடிதம் குறித்து பேசினார், அதனை அவரிடம் படித்துக் காட்டினார். அனைத்து கேள்விகளையும் கேட்ட யோகி , சாதுவிடம் அதற்கான பதில்களை தனது சார்பில் தயாரிக்கச் சொல்லி அதனை அனுப்பும் முன் தன்னிடம் காட்டுமாறு கூறினார். மேலும் அவர் ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் எழுதிய “யோகி ராம்சுரத்குமார் – கடவுளின் குழந்தை – திருவண்ணாமலை“  புத்தகத்தின் சில பிரதிகள், பகவானின் புகைப்படங்கள் மற்றும் சில காலம் முன்பு அச்சிடப்பட்ட பகவானின் செய்தி ஆகியவற்றை சாதுவிடம் கொடுத்து அவைகளையும் அந்த இதழிற்கு அனுப்புமாறு கூறினார். ‘தத்துவ தர்சனா’வில் வெளிவந்த சில கட்டுரைகள், லீ லோசோவிக் அவர்களின் சில கவிதைகள், மற்றும் ஹில்டா சார்ல்டன் அவர்களின் நூல் ஆகியவற்றையும் அனுப்பி வைக்குமாறு கூறினார். 

பகவான் பின்னர், சகோதரி நிவேதிதா அகாடமியின் ட்ரஸ்ட் டீட் ஆவணத்தை மிக பொறுமையாக கேட்டார். அதனை பதிவு செய்யும் முன் ஒரு வழக்கறிஞரிடம் சரிபார்க்குமாறு கூறினார்.  சாது விவேக்கை டிரஸ்டியாக நியமிக்கப் போவதாக கூறினார். யோகி விவேக்கிடம் அவனது தந்தை இந்த ட்ரஸ்ட்டை உருவாக்குவதை அவன் ஏற்றுக் கொண்டுள்ளானா என்று கேட்டபோது, தான் முற்றிலும் ஏற்பதாக விவேக் கூறினான். மேலும் சாதுவின் உடமைகள் எதையும் தான் உரிமை கோருவதில்லை என்று கூற யோகி மகிழ்வோடு அவனை ஆசீர்வதித்தார். 

இந்த சாது பகவானிடம் பாரதீய வித்யா பவனின் சென்னை ராஜாஜி கல்லூரியில் சிலர் யோகியை தரிசிக்க விரும்புவதாக கூறினான். யோகி அவர்களை தீபாவளிக்குப்பின் தகவல் தெரிவித்துவிட்டு அழைத்து வருமாறு கூறினார். யோகி இந்த சாது செய்யும் தாழ்மையான பணிகளுக்கு ஆசீர்வாதம் தந்தார். 

கஜராஜ் மற்றும் அவரது பேரன் யோகிராம் இருவரையும் அனுப்பும் முன் யோகி நகைச்சுவையாக கஜராஜ் இடம், கஜராணி எங்கே என வினவினார். யோகி அந்த குடும்பத்தை ஆசீர்வதித்தார். அவர் சிறுவனிடமிருந்து மூக்குக்கண்ணாடியை எடுத்து ஆசீர்வதித்தார். கேரளாவின் முன்னாள் கவர்னர் திரு.P.ராமச்சந்திரன் அவர்களின் மருமகனான அன்பழகன் அங்கே வந்தார். பகவான் இந்த சாதுவிடம் இவரை உனக்கு நினைவில் இருக்கிறதா என கேட்டு முன்னர் நடந்த சந்திப்பை நினைவூட்டினார். 

இந்த சாதுவை வழியனுப்பும் முன், பகவான் ஒரு பெரிய மாலையை எடுத்து இந்த சாதுவின் கழுத்தில் போட்டார். இந்த சாதுவை அவனது பிறந்தநாளில் ஆசீர்வதித்தார். தனது முன்னர் இருந்த அனைத்து பழங்களையும் எடுத்து விவேக் வைத்திருந்த பையில் திணித்து அந்த பிரசாதங்களை அனைவருக்கும் விநியோகிக்க தந்தார். நாங்கள் அனைவரும் அவரை வணங்கினோம். அவரது ஆசிகளைப் பெற்று கிளம்பினோம். பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு நாங்கள் திருவண்ணாமலையில் இருந்து கிளம்பி சென்னைக்கு நள்ளிரவிற்கு முன் வந்து சேர்ந்தோம். 

இந்த சாதுவின் ஐம்பதாவது பிறந்தநாள் அன்று முழுமையான ஆனந்தம் மற்றும் தெய்வீக அனுபவத்தைப் பெற்று நான், “யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா“ என உச்சரித்தவாறே  இரவில் எனது படுக்கைக்கு சென்றேன். 

அத்தியாயம் 2.14 

ராம்நாம் சப்தாஹம் மற்றும்

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி

சென்னை, திருவல்லிக்கேணியின் மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் இருக்கும் இரட்டை அறைகள் கொண்ட சாது ரங்கராஜன் அவர்களின் இல்லத்திற்கு, அருகில் இருந்தும் மற்றும் தொலைதூரத்தில் இருந்தும், பல யோகி ராம்சுரத்குமார் பக்தர்களும், பிறரும்  தீவிரமான ராமநாம இயக்கத்தில் பங்கு கொள்ள வந்தவண்ணம் இருந்தனர். பலரின் வருகையால் ஈர்க்கப்பட்டு அக்கம்பக்கம் உள்ளவர்களும் ராம்நாம் யக்ஞத்தில் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் செயல்களில் ஈடுபட்டனர். அக்டோபர் 30, 1989 அன்று இந்த சாது வானொலியில் “தேசப்பற்றின் ஆன்மீக அடிப்படைகள்” குறித்து பேசிய உரை ஒலிபரப்பு ஆன அதே நாளில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு எடுத்துச் செல்லப்பட, செங்கல் வடிவுள்ள ராம சீலா என்னும் நீரில் மிதக்கும் கல் இந்த சாதுவின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அந்த சிலைக்கு பூஜை செய்ய பல இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து சேர்ந்தனர். ராம்நாம் பல இடங்களில் இருந்தும், அயல்நாட்டில் இருந்தும் வந்தது. பிரதிமாதம் 1 கோடி ராம நாம எண்ணிக்கை சேர்ந்தது. ஒவ்வொரு மாதமும் இந்த எண்ணிக்கை பூஜ்ய சுவாமி சச்சிதானந்தருக்கு அனுப்பி, மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்கள் துவக்கிய “உலக அமைதிக்கான நாம ஜப யக்ஞம்“ ஜப எண்ணிக்கையில் இணைக்கப்பட்டது. 

ராம்நாம் சப்தாஹம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கையில், இந்த சாது, நவம்பர் 4 , 1989 அன்று, பணிகள் குறித்த ஒரு விவரமான கடிதம் ஒன்றை பகவானுக்கு எழுதினான்”

”பூஜ்யபாத  குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

திரு. குருராஜ், அப்யாஸி , சகஜ் மார்க், 85 , முதல் ‘R’ ப்ளாக், ராஜாஜி நகர், பெங்களூர் , 560 010,        என்ற விலாசத்தில் இருந்து, உங்கள் பெயரில் அனுப்பப்பட்ட  கடிதம் ஒன்று, எங்கள் முகவரிக்கு வந்திருந்தது. அதனை உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.. 

ஹவாயில் இருந்து ‘ஹிந்துயிசம் டுடே’ அனுப்பிய கேள்விகளுக்கு நாங்கள் பதில்களை தயாரித்து வருகிறோம். அதனை அவர்களுக்கு அனுப்பும் முன் உங்களின் ஒப்புதலுக்காக கொண்டுவருவோம். நாங்கள் திரு. லீ இடம் அவரது “தாவோகோடோ” இதழில் தங்களைப்பற்றி எழுதியவைகளையும் “ஹிந்துயிசம் டுடே“ இதழுக்கு அனுப்புமாறும், ஹில்டா சார்ல்டன் புத்தகத்தை எங்களுக்கு கொண்டு வருமாறும் கூறியிருக்கிறோம். 

நாங்கள் 3000 பிரதிகள் யோகி ராம்சுரத்குமார் அருளிச் செய்துள்ள “தெய்வீக நாமம்” என்ற கட்டுரையை அச்சிட்டிருக்கிறோம். இது ‘தத்துவ தர்சனா’வின் ‘நான்காவது ஆண்டு மலர் 1988’ – ல் வெளியான தெய்வீக செய்தியின் மறுபதிப்பு. இதனை நாங்கள் அக்டோபர் 22 ல் அங்கு வரும்போது தங்களிடம் காட்டுகிறோம். இதனை நாங்கள் ராம்நாம் மஹாயக்ஞம் துண்டுப்பிரசுரத்துடன் விநியோகிக்க இருக்கிறோம். 

உங்கள் கருணையால் இந்த பணிகள் விரைவாகவே நடந்து வருகின்றன. அக்டோபரில் நாங்கள் ஒரு கோடியே நான்கு லட்சம் எண்ணிக்கையை ஆனந்தாஸ்ரமத்திற்கு தந்தோம். நவம்பரில் அதனைவிட கூடுதலாகவே தருவோம், ஏனெனில் இந்த மாதம் ஒரு வாரம் முழுக்க அகண்ட ராம்நாம் பிரச்சாரம் இருக்கிறது, இது உங்கள் ஜெயந்தி விழாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதற்குமுன் உங்களை சந்திக்க வருவோம் என நம்புகிறோம்.

எனது அன்னை, விவேக், திருமதி. பாரதி, டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் தங்களின் தாழ்மையான நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் சேவையில், 

சாது ரங்கராஜன். 

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் கூட்டம் நவம்பர் – 11 ல் நடந்தது. அதில் ராம்நாம் சப்தாஹம் குறித்த நிகழ்ச்சி நிரல்கள் திட்டமிடப்பட்டன. திருவல்லிக்கேணியில் உள்ள பாண்டுரங்க மந்திர் சப்தாஹத்திற்கும், NKT மகளிர் உயர்நிலைப்பள்ளி கலையரங்கம் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கும் இடங்களாக நிச்சயிக்கப்பட்டது. இந்த சாது இன்னொரு கடிதம் ஒன்றை நவம்பர் – 17 அன்று யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு எழுதினான். 

“பூஜ்யபாத  குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்! 

ராம்நாம் சப்தாஹம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை உங்கள் கருணையால் திட்டமிடப்பட்டுள்ளன. திருவல்லிக்கேணியில் உள்ள பாண்டுரங்க மந்திர் சப்தாஹத்திற்கும், NKT மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆடிட்டோரியம் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்திக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அனைத்து துறைகளில் இருந்தும் முக்கியமானவர்களை இந்த கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள அழைத்திருக்கிறோம். நாங்கள் ராம்நாம் லிகித ஜப போட்டியை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், ராம்நாம் பஜனை போட்டியை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வைத்துள்ளோம். 

நானும் விவேக்கும் அங்கே திங்கள்கிழமை நவம்பர் 20 அன்று பகல் வருவதாக இருக்கிறோம், உங்கள் ஆசிகளை எங்கள் முயற்சிகளுக்கு பெற வருகிறோம். எனது தந்தையின் சிரார்த்தமும் இதே நாளில் வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் செய்ததைப் போல் இந்த ஆண்டும் எனது தாழ்மையான காணிக்கையை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்க நினைக்கிறேன். நீங்கள் அதனை ஏற்று இந்த சாதுவை ஆசீர்வதிக்க வேண்டும். 

நாளை நான் 250 ஆசிரியர்களுக்கு உரையாற்ற விவேகானந்தா கல்வி கழகத்தால்  அழைக்கப்பட்டிருக்கிறேன். தேசப்பற்றின் ஆன்மீக அடிப்படைகள் குறித்தே பேச இருக்கிறேன். தங்கள் ஆசியை இதற்கு வேண்டுகின்றேன். 

சாந்தி ஆசிரமத்தைச் சேர்ந்த பூஜ்ய மாதாஜி ஞானேஸ்வரி எழுதிய கடிதம் ஒன்றில் அவர் உங்களின் புனிதமான வருகை அவரது ஆசிரமத்திற்கு நிகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்திருக்கிறார். பூஜ்ய சுவாமி சிவானந்தா, பப்பா ராம்தாஸ், மாதாஜி கிருஷ்ணாபாய், மற்றும் சுவாமி சச்சிதானந்தர் போன்றோர் அவரது ஆசிரமத்திற்கு வருகை தந்து புனிதப்படுத்தியிருக்கின்றனர் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே நீங்களும் அவரது இடத்திற்கு வந்து புனிதப்படுத்த வேண்டும் என விரும்புகிறார். அவரது கடிதத்தின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். 

பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் நமது ராமநாம பிரச்சாரத்தின் முன்னேற்றம் குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். ராம்நாம் சப்தாஹம் மற்றும் ஜெயந்தி விழாவிற்கான ஆசியையும் அவர் தெரிவித்திருக்கிறார். அவரது கடிதத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

நான் ‘ஹிந்துயிசம் டுடே’ என்ற இதழின் கேள்விக்கான பதில்களின் வரைவு நகலையும், தங்களைப் பற்றிய ஒரு  கட்டுரையையும் தங்களின் ஒப்புதலை பெறுவதற்கு கொண்டு வருகிறேன். 

மற்றவை நேரில்,

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன். “

நவம்பர் 20 , 1989 ல் இந்த சாது விவேக், நிவேதிதா மற்றும் டாக்டர். ராதாகிருஷ்ணன் திருவண்ணாமலைக்கு சென்றோம். அன்று எனது தந்தையின் சிரார்த்தம் என்பதால் சில பழங்களையும், காபியை மட்டும் காலையில் எடுத்துக் கொண்டான். மதியம் திருவண்ணாமலையை அடைந்தோம். பகவான் எங்களை மாலை 4 மணிக்கு வரச்சொன்னார். நாங்கள் கோயிலுக்கு சென்றோம், இந்த சாது கங்கை தீர்த்தத்தில் தனது தந்தைக்கு தர்ப்பணம் செய்தான். நாங்கள் கிறிஸ்டி, ஓம், ரொசோர, போன்ற பக்தர்களின் இல்லத்திற்கு சென்றோம். துவாரகநாத் ரெட்டி மற்றும் அவரது மகள் சந்தியா ஆகியோரை சந்தித்தோம். கோயிலில் தரிசனத்தை முடித்தப்பின் யோகியின் இல்லத்திற்குச் சென்றோம். பகவான் எங்களை வரவேற்றார். நாங்கள் வந்து சேர்ந்த பின்னரே எங்கள் கடிதம் வந்து சேர்ந்ததாக கூறினார். பகவான் இந்த சாது தந்தைக்கு தர்ப்பணம் செய்து விட்ட காரணத்தால் ஏதேனும் ஒரு உணவை சிறிதளவேனும் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்த சாது யோகிக்கு காணிக்கையை வழங்க, அதனை தனது கரங்களில் பெற்றுக் கொண்ட யோகி, “உனது தந்தை இதனை ஏற்றுக்கொண்டார்“ என்றார் அதன்பின் இந்த சாது பிருந்தாவன் ஓட்டலுக்கு சென்று மிகவும் லேசான உணவை எடுத்துக்கொண்டான். நாங்கள் திரும்பி வருகையில் விவேக் ‘ஹிந்துயிசம் டுடே’ என்ற பத்திரிகையிலிருந்து, யோகியிடம் பதில் வேண்டி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுதப்பட்ட பதில்களை படித்துக் கொண்டிருந்தான். அதனை நாங்கள் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் உதவியோடு தயாரித்தோம். யோகி எங்களை மூன்று முறை அதனை படிக்கச் சொல்லிவிட்டு பின்னர் அதற்கு ஒப்புதலையும், ஆசியையும் வழங்கினார். அதனை ஹவாய்க்கு அனுப்புமாறும் கூறினார். எங்களின் “தெய்வீக நாமம்” என்ற துண்டுபிரசங்களை பார்த்து அதில் நிறுத்தற்குறிகளை திருத்தினார். நாங்கள் அவரிடம் டாக்டர். K. வெங்கடசுப்புரமணியம், யோகி ராம்சுரத்குமார் குறித்த ஒரு கருத்தரங்கினை டெல்லியில் நடத்தலாம் என்ற தனது திட்டத்தைக் கூறியுள்ளதாக, தெரிவித்தோம். யோகி அதனை அங்கீகரிக்க மறுத்ததோடு, பாண்டிச்சேரியில் ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்தரங்கினையும் அவர் கடுமையாக விமர்சித்தார். 

நாங்கள் அன்னை ஞானேஸ்வரி அவர்களின் கடிதம் பற்றி கூற யோகி தனது தந்தையின் ஆசியை அவர்களுக்கு தெரிவித்து விடும்படி கூறினார். தேசியத்தின் ஆன்மீக அடிப்படை குறித்த எனது வானொலி உரையை கேட்டதாக யோகி  கூறினார், பின்னர் எங்களை கோயிலுக்கு அழைத்துச்சென்று என்னை அங்கிருக்கும் நிர்வாக அலுவலரிடம் அறிமுகப்படுத்தினார். நாங்கள் எங்கள் பதிப்பகத்தின் சில புத்தகங்கள் மற்றும் சில துண்டுபிரசுரங்களையும் அவரிடம் தந்தோம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் லிங்கமாக வழிபட்டு சுற்றிவரும் அருணாச்சல மலைமீது சில தொழிலதிபர்கள் தங்கள் விளம்பரங்களை வைத்து அசுத்தப்படுத்தி உள்ளது பற்றி கூறினோம். அது போன்ற செயல்களை தடுப்பதாக கூறி பகவானிடம் உறுதியளித்தார். கோயில் குளத்தில் மீன் பிடிப்பதையும் அனுமதிக்க மாட்டோம் என பகவானிடம் அவர் உறுதியளித்தார். 

நாங்கள் நீண்ட நேரம் பகவானுடன் கோயிலில் அமர்ந்திருந்தோம். அதன்பின் அவர் கோயிலைச் சுற்றி அழைத்துச் சென்றார். என்னையும், விவேக்கையும் அவரது பக்கத்தில் அமரச்சொன்னார். பகவான் நீண்ட நேரம் இந்த சாதுவின் கரங்களைப் பற்றி இருந்தபோது போது, பரவமான ஒரு ஆன்மீக ஆற்றல் என்னுள் செலுத்தப படுவதை இந்த சாது உணர்ந்தான். பகவான் தன்னிடம் ஆசிபெற வந்த ஒரு அன்னையை ஆசீர்வதித்து அவரை தொடர்ந்து தனது பெயரை உச்சரிக்கச் சொன்னார். இந்த சாதுவும் அவர் பெயரை உச்சரித்தான். பின்னர் அவர் எங்களை அவரது இல்லத்திற்கு அழைத்து வந்தார். சென்னையை சேர்ந்த ப்ரீதா பொன்ராஜ் கொடுத்து அனுப்பி இருந்த உணவை எடுத்துக்கொண்டு எங்களிடம் பாத்திரங்களை திருப்பித்தந்தார். நாங்கள் சண்டிகரை சேர்ந்த ப்ரேம்நாத் மகசீன் என்பவர் காஷ்மீர் நிலை குறித்து எழுதிய கடிதத்தைப் பற்றி பகவானிடம் பேசினோம். பகவான், “காஷ்மீரின் பிரச்சனைகள் தீர்ப்பதை என் தந்தை பார்த்துக்கொள்வார்“ என்றார். நாங்கள் ராம்சிலை ஊர்வலம் சென்னையில் நடந்தது குறித்து அவரிடம் பேசினோம். நவம்பர் 19 ராம்சிலை ஊர்வலத்திற்கு ஏற்பட்ட தடைகள் பற்றியும், போலீஸ் அதிகாரிகள் அதைத் தடுத்து விவேக் மற்றும் தொண்டர்களை சில மணி நேரம் சிறை பிடித்து வைத்திருந்தது குறித்தும் பகவானிடம் கூறினோம்,. யோகி ராம்சுரத்குமார் அயோத்தியில் ராமர் கோயில் நிச்சயம் வரும் என்று உறுதி கூறினார். கிளம்பும் முன் விவேக் அவரிடம் தனது தேர்வுகளின் வெற்றிக்கு ஆசி பெற்றான். நிவேதிதாவிற்கு ஆசி வழங்கும் போது யோகி மீண்டும், “நான் ஒரு பிச்சைக்காரன் என்பது உனக்குத் தெரியுமா?“ என்றார். நிவேதிதா பகவான் மீதான ஒரு தமிழ்பாடலின் வரியான, “யாதும் தரும் யாசகா போற்றி“ என்று கூற யோகி தனது வெடிச்சிரிப்பை உதிர்த்தார். நாங்கள் இரவு 7.30 மணிக்கு அவரிடமிருந்து விடைப்பெற்றோம் அவர் வாசல்வரை வந்து வழியனுப்பினார். 

பகவானின் ஆசி ராம்நாம் சப்தாஹத்திற்கு ஒரு அன்பு காணிக்கையின் வடிவில் வந்தது. நவம்பர் 23 அன்று பேராசிரியர். தேவகி இந்த சாதுவின் இல்லத்திற்கு ரூ.812 / – கொண்டு வந்தார் அதனை பகவான் எங்களிடம் ஒப்படைக்க சொன்னதாக கூறினார். அவர் எங்களுடன் முற்பகல் நேரத்தை செலவழித்தார். நாங்கள் அவரின் நெருங்கிய நண்பரான சௌ. விஜயலட்சுமி இடம் தொலைபேசி வாயிலாக பேசினோம். நிவேதிதா “ஹிந்துயிசம் டுடே” என்ற பத்திரிகைக்கான கட்டுரையை தட்டச்சு செய்ய துவங்கினார். அடுத்தநாள் பகவானின் இன்னொரு பக்தரான திரு. E.R. நாராயணன் தனது கவிதை தொகுப்பான “யோகி ராம்சுரத்குமார் — திருவண்ணாமலையின் கடவுளின் குழந்தை“ என்ற நூலை கொண்டுவந்தார், அந்த நூலுக்கு முன்னுரையை இந்த சாது வழங்கியிருந்தான். அவர் என்னிடம் மூன்று பிரதிகளையும் முதல் இரண்டு பிரதிகள் விற்ற பணத்தையும் தந்துவிட்டுச் சென்றார். 

ராம்நாம் சப்தாஹம் சனிக்கிழமை நவம்பர் 25 , 1989 ல் துவக்கப்பட்டது. நகரின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் பங்குகொண்ட அகண்ட ராம நாமம் காலை முதல் மாலை வரை நடந்தது பிறகு ஹனுமன் சாலிசா, ஆரத்தி ஆகியவைகளுடன் நிறைவுற்றது. அடுத்தநாள் எங்களோடு இணைந்த லீ லோசோவிக் அடுத்த இரண்டு நாட்களும் அகண்டநாமத்தில் எங்களொடு இருந்தார். லீ லோசோவிக் பக்தர்களிடம் நவம்பர் 27 மாலை உரையாற்றினார். அவரும் அவரது குழுவும் அடுத்தநாள் எங்களிடமிருந்து விடைபெற்றனர். சப்தாஹத்தின் அனைத்து நாட்களிலும் வெவ்வேறு பஜனை குழுக்கள் மற்றும் மாதர் சங்க குழுக்களால் அகண்ட நாம பஜன் நடைப்பெற்றது. பல பள்ளியை சேர்ந்த பிள்ளைகள் தங்கள் பெற்றோர் உடன் வந்து சத்சங்கம் மற்றும் ராம்நாம் ஜபத்தில் இணைந்தனர். 

பகவானின் ஜெயந்தியான டிசம்பர் – 1 அன்று மதியம் யோகி ராம்சுரத்குமார், பப்பா ராமதாஸ், மாதாஜி கிருஷ்ணா பாய், மற்றும் தியாகராஜ சுவாமிகள் ஆகியோருடைய திருஉருவ படங்களுடன் ஒரு பெரிய ஊர்வலம் நடைப்பெற்றது. திருவல்லிக்கேணியின் பல தெருக்களின் வழியாக இறுதியாக N.K.திருமலாசார் பெண்கள் உயர்நிலை பள்ளியை அடைந்தது. அங்கே யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் என்ற வண்ணமயமான பதாகை வரவேற்றது. இந்த சாது பகவானின் விருப்படி அந்த விழாவிற்கு தலைமை தாங்கினான். இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முக்கிய நபர்கள் , பாண்டிச்சேரியின் முன்னாள் இணை வேந்தரான டாக்டர் .K. வெங்கடசுப்பிரமணியன், வருமான வரித்துறை கமிஷனரான சௌ. விஜயலட்சுமி, மற்றும் திரு. V.R. நாகசுப்பிரமணியன் ஆவர், பகவானைப் பற்றி உளம் உருக கவிதைகள் புனைந்து, பல பெரும் பாடகர்கள் அவைகளை பாடி, பகவானின் பக்தர்களின் உள்ளத்தைக் கவர்ந்து, பகவானின் ஆசியையும் பெற்ற கவிஞர் திரு. பெரியசாமி தூரன் அவர்களின் மகளான திருமதி. சாரதாமணி சின்னசாமி வழங்கிய. இசையுடன் கலந்த பஜனும் பாடலும், ஆன்மாவை கிளறச்செய்தன. பகவானின் ஜெயந்தி விழா மிக வெற்றிகரமாக நிறைவுற்றது. 

யோகி ராம்சுரத்குமார் , மா தேவகி, ஜஸ்டிஸ் அருணாச்சலம் , N.S.மணி

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s