ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.19 – 2.21

அத்தியாயம் 2.19 

பகவான் வெளியிட்ட சகோதரி நிவேதிதா அகாடமியின் வெளியீடுகள்

மே 31 , 1990 அன்று திருமதி. பாரதி, சிரஞ்சீவி விவேக், சௌ. நிவேதிதா ஆகியோர், பகவானுக்கு வந்த கடிதங்களையும், அதற்கு யோகியின் உத்தரவுபடி சாது அனுப்பிய பதில் கடிதங்களின் நகல்களையும் எடுத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு யோகியை காணச் சென்றனர். ஜூன் 2 அன்று சென்னையில் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தால் துவக்கப்படும் வேத வகுப்புகள் குறித்து பகவானுக்கு தெரியப்படுத்தினர். பல இளைஞர்கள்  ருத்ரம், சமகம், சூக்தங்களை கற்க ஆர்வம் காட்டினர். வேத வகுப்புகள் தவிர்த்து சத்சங்க நிகழ்வுகளை பகவான் பக்தர்களின் இல்லங்களில் ஏற்பாடு செய்யும் வேலையில் மும்முரமாக இருந்தனர். நிவேதிதாவும் அவருடன் பணிபுரிபவர்கள் மீண்டும் ஜூன் – 9 அன்று திருவண்ணாமலை சென்று வேத வகுப்புகள் சிறப்பாக நடந்து கொண்டிருப்பதை தெரிவித்தனர். பிரபல எழுத்தாளர் உளுந்தூர்பேட்டை சண்முகம் சாதுவின் இல்லத்திற்கு வந்து பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு குருவிற்கு மரியாதை செலுத்தினார். யோகி ராம்சுரத்குமார் அவர்களின் வழிக்காட்டுதலின்படி இசையமைப்பாளர் இளையராஜா திரு. T.P.M. ஞானப்பிரகாசம் எழுதிய “திருவண்ணாமலையில் ஓர் குழந்தை“ என்ற நூலை சகோதரி நிவேதிதா அகாடமி வெளியிட உதவினார். 

இந்த சாது, விவேக் மற்றும் அருப்புக்கோட்டையை சேர்ந்த A.V. ராமமூர்த்தி ஆகியோருடன் பகவானின் இல்லத்திற்கு ஜூன் – 14 , 1990 அன்று சென்றோம். நாங்கள் பகவானின் இல்லத்திற்கு மாலை வெகு நேரம் கழித்து சென்றடைந்த போதிலும் எங்களை வரவேற்று, சிறிது நேரம் அவரது நாமஜெபம் கூறுமாறு சொல்லிவிட்டு, பின்னர்  எங்களை கிளம்பிச்சென்று ஓய்வெடுத்துக்கொண்டு காலையில் வருமாறு கூறினார். மறுநாள் அவரை காணச்சென்று அவருக்கு மாலை அணிவித்தோம். பின்னர் அவர் எங்களை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். மேற்கு பிரகார சுவற்றின் அருகே அமர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும் அவர் முன் வரிசையாக அமரச்சொன்னார். பின்னர் அவர் எங்கள் பணிகளைப்பற்றி கூறுமாறு சொன்னார். இந்த சாது யோகியிடம், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தில் இருப்பவர்களுக்கு ஒரு பேட்ஜ் தயார் செய்ய விரும்புவதாகவும், அதற்கு யோகியின் ஒரு புகைப்படத்தை தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும், கூறினான். யோகி விவேக்கிடம் தன்முன் புகைப்பட ஆல்பத்தை வைக்கச் சொன்னார், அதில் ஏதேனும் ஒரு பக்கத்தை பிரிக்குமாறு விவேக்கிடம் யோகி கூறினார். அவ்விதமே விவேக் செய்தார், அந்தப்பக்கத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு புகைப்படத்தை விவேக்கை தொடுமாறு யோகி கூறினார். விவேக் அவ்விதமே செய்ய, குரு அந்த புகைப்படத்தை தேர்வு செய்தார். யோகி தனது கையொப்பத்தை அந்த ஆல்பத்தின் முதல் பக்கத்தில் போட்டு அதனை ஆசீர்வதித்து தந்தார். இந்த சாது பகவானிடம் யோகி ஜெயந்தி விழாவை ஒருநாள் நடத்துவதற்கு பதிலாக மூன்று நாட்கள் நடத்தினால், பல வெளியூர்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என்றும், மேலும் அவர்கள் ஜெயந்தியை ஒட்டி நடைபெறும் ராம்நாம் ஜபம், மற்றும் வேத கருத்தரங்கு போன்றவைகளில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் என்றும் கூறினான். பகவான் அதற்கு ஒப்புதல் அளித்ததோடு, “செய். என் தந்தை உன்னை ஆசீர்வதிப்பார்“ என்றார். இந்த சாது யோகியிடம் இளையராஜா செய்த உதவி குறித்தும் கூறினான். 

அதன்பின் யோகி எங்களை கிழக்கு பக்கம் அழைத்துச் சென்று கோபுர வாசலுக்கு அருகே எங்களை ஒரு மரத்தின் கீழே அமர வைத்தார். அங்கே மூன்று பக்தர்களான தேவகி, துவாரகநாத் ரெட்டி மற்றும் சந்தியா போன்றோர் எங்களோடு இணைந்தனர். பகவான் அவர்களை ஆசீர்வதித்து நாம் அனைவரும் அவரது இல்லத்திற்கு போகலாமா என துவாரகநாத் இடம் கேட்டார். அவர் சரியென்று கூற நாங்கள் அனைவரும் இரண்டு கார்களில் பயணித்து துவாரகநாத் ரெட்டி அவர்களின் இல்லத்தை அடைந்தோம். எங்களுக்கு அமருவதற்காக விரிக்கப்பட்ட பாயில் சில எறும்புகள் இருந்தன. யோகி அதனோடு விளையாடத் துவங்கினார். அவரைப் பொறுத்தவரை அந்த சிறிய உயிரினமும் தந்தையே. “தந்தை மட்டிலுமே இருக்கிறார். வேறெவரும் இல்லை. வேறெதுவும் இல்லை“ என்று தொடர்ந்து அவர் கூறியவாறே இருந்தார். துவாரகநாத் சமீபத்தில் எடுக்கப்பட்ட யோகியின் படங்களை அவரிடமே காட்டினார். யோகி துவாரகநாத்தை சிறிது நேரம் உற்று நோக்கிவிட்டு, அவர் வாழ்க்கை அனுபவத்தை கூறுமாறு பணிந்தார். அவரும்.கூறத் தொடங்கினார். பின்னர் குரு இந்த சாது குறித்து கூறத் தொடங்கினார். “உனக்குத் தெரியுமா , ரங்கராஜன் இந்தப்பிச்சைக்காரனுக்காக சில வேலைகளை செய்து வருகிறான். இந்தப்பிச்சைக்காரனுக்கு இவன் நிறைய விளம்பரங்களைத் தருகிறான்.  அவன்து நண்பர்கள் ‘மேக் ஹிஸ்டரி’ என்ற ஒரு பத்திரிகை நடத்தி வருகின்றனர். அவர்களும் இந்தப்பிச்சைக்காரனுக்கு விளம்பரம் தருகின்றனர். இந்தப்பிச்சைக்காரன் ‘வரலாற்றை உருவாக்குகின்றான்’,“ எனக்கூறி அவர் சிரித்தார். மேலும் யோகி தொடர்ந்து, “ரங்கராஜன் ராம்நாம் இயக்கத்திற்கும் சிறந்த பணியை செய்து வருகின்றான்.” இந்த சாது யோகியிடம்,  இந்தியாவில் இருக்கும் பக்தர்களுக்கும் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் பக்தர்களுக்கும், ராம்நாம் இயக்கத்தில் பங்கு கொண்டமைக்கு நன்றி தெரிவித்து 400 கடிதங்கள் எழுதியதாக கூறினார். விவேக் ஒரு கடித நகலை யோகியிடம் தந்து அதனை முழுமையாக வாசித்தார். யோகி மேலும் அவர் பக்தர்களுக்கான பரிந்துரைகளையும் படித்தார். “எது உங்கள் தலைமையகம்“ என கேட்டார், நாங்கள் “மெட்ராஸ்“ என்று பதிலளித்தோம். 

சந்தியா எங்களுக்கு சிறிது மோர் தந்தார். பின்னர் எங்களுக்கு மதிய உணவு பரிமாறினார். நாங்கள் அனைவரும் யோகியின் பக்கத்தில் அமர்ந்து உணவை உட்கொண்டோம். மதிய உணவுக்குப்பின் நாங்கள் அமர்ந்திருந்த வராண்டாவிற்கு வந்தோம். எங்களோடு இணைந்த ராமமூர்த்தியின் நண்பர்கள் “குமுதம்“ இதழின். ஒரு பிரதியை கொண்டு வந்திருந்தனர். அதில் திரு. எம்.எஸ். உதயமூர்த்தி யோகியை குறித்து எழுதியிருந்தார். விவேக் அவருக்காக அதை படித்தான். யோகி உதயமூர்த்தி குறித்து விசாரித்தார். அவரை சந்தித்தது யோகியின் நினைவில் இல்லை. 

சந்தியா யோகியிடம் வந்து விவேக்கை மறுபக்கம் அமரச்சொல்லி தேவகிக்கு இடம் தருவதற்கு அனுமதி கேட்டார். யோகி சிரித்தவாறே, “அவசியமில்லை அவள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம்“ என்றார். சந்தியா புன்னகைத்தவாறே “அநியாயம்” என்றார். பகவான் தன் வெடிச்சிரிப்பை உதிர்த்தார். பின்னர் ரெட்டி பகவானிடம் தனது இல்லத்திற்கு சுவாமி சின்மயானந்தா வந்ததை பற்றி கூறினார். பகவான், “சாதுக்கள் வந்தால் கிரஹஸ்தர்கள் தங்கள் இல்லத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார். யோகி சிரித்தவாறே தொடர்ந்தார்: ”ஆனால் சந்தியா அதை அநியாயம் என்பாள்.“ நாங்கள் அனைவரும் சிரித்தோம். சந்தியா வெட்கமடைந்தாள். அவள் ஒரு டேப்ரிக்கார்டையும், ஓஷோவின் பேச்சு அடங்கிய ஒரு கேசட்டையும் கொண்டுவந்தாள். பகவான் அதனை ரசித்து கேட்டார். எப்போதெல்லாம் ஓஷோ ஒரு கோபமான மனிதரின் செயல்களை விவரித்தாரோ அப்போதெல்லாம் யோகி நகைச்சுவையாக “ஐய்யய்யோ!“ என்றார். அதன்பின் யோகி, ஓஷோவின் பேச்சை முதன்முறையாக கேட்பதாக சொன்னார். “ஆச்சார்யா ரஜனீஷ் ஒர் அற்புத மனிதர், அவர் ஒரு மகாத்மா“ என பகவான் கூறினார். டீயும் சில பழங்களும் எங்களுக்கு வழங்கப்பட்டன. தேவகி தனது கல்லூரி விடுமுறைக்கு பின் மீண்டும் திறக்கப்படுவது குறித்தும், திருவண்ணாமலையை விட்டு போவது குறித்த தனது தயக்கம் குறித்தும் கூறினார். பகவான் அவரை இப்பொழுதே கிளம்ப வேண்டும் என வலியுறுத்தினார். தேவகி பகவானிடம் தனது கல்லூரி சில வேலைகளை தந்திருப்பதாக கூறினார். பகவான் அவரிடம் கல்லூரி முதல்வர் அனுமதித்தால் அவர் தனது வேலைகள் முடியும்வரை இருக்கலாம் என்றார். மேலும் யோகி தொடர்ந்தார், தன்னைப்போன்று மக்கள் சோம்பேறியாக இருப்பதை தான் ஊக்குவிக்கவில்லை என்றார். “நான் துவாரகநாத்தை போன்று ஒரு நல்ல கிரஹஸ்தனுமல்ல, அல்லது ரங்கராஜனைப் போன்று ஒரு நல்ல சன்னியாசியுமல்ல; நஹி காவ் கா குத்தா , நஹி ஜங்கிள் கா ஷேர் ( நாட்டு நாயுமல்ல, காட்டு சிங்கமுமல்ல). அவர் தொடர்ந்து சிரித்தவாறே, தன்னைப்போல் எவரும் சிக்கி தவித்து விழாமல் இருக்கவே விரும்புவதாக கூறினார். அதனாலேயே தேவகி தனது வேலையைத் தொடர வேண்டும் என்றார். நாங்கள் அனைவரும் தேவகியிடம் விடைபெற்றோம். துவாரகநாத் மற்றும் சந்தியா பகவானை அவரது காரில் அழைத்துச் சென்றார்கள். நாங்கள் இன்னொரு காரில் அவரை பின்தொடர்ந்தோம். ரொசாரோ பகவான் இல்லத்திற்கு வெளியே பகவானின் தரிசனத்திற்காக காத்திருந்தார். 

பகவானின் இல்லத்தை அடைந்த பிறகு யோகி முதலில் ராமமூர்த்தி மற்றும் அவரது நண்பர்களை விடை பெற செய்தார். பின்னர் இந்த சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை பெற்று அதனை சக்தியேற்றம் செய்து சாதுவிடம் தந்தார். விவேக் மற்றும் சாதுவை ஆசீர்வதித்து அவர்களை அனுப்பி வைத்தார். 

சென்னை வந்து சேர்ந்தவுடன் இந்த சாது “குமுதம்” பத்திரிக்கையின் பாமா கோபாலன் அவர்களிடம் பேசி, டாக்டர். எம். எஸ்.உதயமூர்த்தி அவர்களுக்கு பகவான் குறித்த கட்டுரையை பாராட்டி ஒரு கடிதம் ஒன்றை எழுதினேன். “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” என்ற நூல் உட்பட சகோதரி நிவேதிதா அகாடமியின் பல நூல்களை அவருக்கு அனுப்பி வைத்தோம். ஜூன் 20 அன்று அருணாச்சலேஸ்வரர் கோயிலின் ஸ்ரீதர குருக்கள்  சாதுவை சந்தித்தார். சாது  ஒரு சிறிய காணிக்கையை பகவானின் பெயரால் கோயிலில் நடக்கும் சுந்தரமூர்த்தி விழாவிற்கு அளித்தான். ஜூன் 24 அன்று பேராசிரியர் தேவகி ராம்நாம் எண்ணிக்கையோடு சேலத்திலிருந்து எனது இல்லத்திற்கு வந்திருந்தார். அன்று மதியம் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் கூட்டம் ஒன்று இளைஞர் சங்கத்தின் எதிர்காலத் திட்டம் குறித்து விவாதிக்க நடத்தப்பட்டது. அனைத்து லிகித ராமநாம நோட்டுகளும் சங்கத்தின் துணைத் தலைவர் திரு. கே.என்.வெங்கடராமன் மூலம் மாம்பலத்தில் உள்ள ராமநாம வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜூன் 29 அன்று அசோக்நகர் அஸ்வமேதா மண்டபத்தில் இந்த சாது பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டேன். யோகி ராம்சுரத்குமார் குறித்தும், ராமநாமம் குறித்தும் இந்த சாது அங்கே பேசினான். ஜூலை 1 அன்று இந்த சாது இளையராஜாவின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டான். “திருவண்ணாமலையில் ஓர் குழந்தை” என்ற நூலிற்கான அச்சு செலவிற்கான தொகையை இளையராஜா முன்பே கூறியிருந்தபடி தந்தார். இந்த சாது அடுத்தநாளே யோகிக்கு கடிதம் ஒன்றை எழுதினான்: 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

இந்த சாது மகிழ்வோடு இந்த தகவலை பரிமாறுகின்றான். நாங்கள் ஐந்து பிரிண்டிங் பிரஸிடம் இருந்து திரு.T.P.M. ஞானப்பிரகாசம் அவர்களின் நூலுக்கு கொட்டேஷன் பெற்றிருந்தோம். நேற்றிரவு நாங்கள் திரு. இளையராஜா உடன் அமர்ந்து அச்சுப்பணிக்கான இறுதிகட்ட வேலைகளை முடிவு செய்தோம். திரு.இளையராஜா உரிய பணத்தை தந்து அச்சுப்பணியை துவக்குமாறு கூறினார். 

தங்களின் ஆசியால் நாங்கள் கையெழுத்து பிரதியை பிரிண்டர் இடம் வேலையை துவங்க தந்திருக்கிறோம். மிக குறுகிய காலத்தில் இப்பணி முடிவடையும் என நம்புகிறோம். அச்சுப்பணி நிறவடைந்தவுடன் நாங்கள் புத்தகத்தோடு தங்களை பார்க்க வருகிறோம்.

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் ராமநாம பிரச்சாரத்தில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. வேத வகுப்புகளிலும், தினமும் நடக்கும் சத்சங்க நிகழ்வுகளிலும் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள். சங்கத்தின் செயல்பாடுகளில் பல பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பங்கு கொள்வதுடன், ராமநாமத்தை மக்களிடம் ஊக்குவிக்க பல குழுக்களை துவக்கியிருக்கிறோம். 

“ஹிந்துயிசம் டுடே” யின் ஆசிரியர் சுவாமி முருகஸ்வாமி, ஹவாய், யு.எஸ்.ஏ யிலிருந்து எழுதிய கடிதத்தின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டப்படி”

ஜூலை 5 அன்று சாது இன்னொரு கடிதம் ஒன்றை பகவானுக்கு அனுப்பினான். அத்துடன், 1986 ல் பகவானை தரிசிக்கும் பாக்கியம் பெற்ற, மலேசியா பக்தர் ஒருவர் எழுதிய கடிதம் ஒன்றையும், பகவானின் சார்பில் சாது அவருக்கு அனுப்பிய பதிலின்  நகலும் உடன் இணைத்திருந்தான். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஆவடியில் ஜூலை – 8 , 1990 அன்று நடைபெற இருக்கும் ஒருநாள் ஆன்மீக புத்துணர்வு முகாம் குறித்து பகவானுக்கு தெரிவித்து, இளைஞர்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் மற்றும் அவரது ஆன்மீக  வளர்ச்சிக்கு ஆசி அளிக்குமாறு வேண்டினான்.

 ஜூலை – 8 அன்று ‘தி இந்து’ செய்தி தாளில் பகவான் குறித்த இளையராஜாவின் கட்டுரை வெளிவந்தது. ஆவடி CVRDE ல் ஆன்மீக புத்துணர்வு சந்திப்பு நடைப்பெற்றது. 

திருமுல்லைவாயிலின் சுவாமி தேவானந்தா, திருமதி. திலகவதி ஐ.பி.எஸ், குமாரி் விஜயலட்சுமி, ஐ.ஆர்.எஸ் மற்றும் பிற முக்கிய பகவானின் பக்தர்கள் இந்த சாதுவுடன் பகவானின் பணியை பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டிருந்தனர். ஆகஸ்ட் 3 , 1990 அன்று திருமதி. பாரதி மற்றும் பேரா. ரங்கநாயகி சீனிவாசன் பகவானின் இல்லத்திற்கு சென்று, பகவானிடம், இந்த சாது, ஆகஸ்ட் – 6 அன்று அங்கு வர இருப்பது குறித்தும், சகோதரி நிவேதிதா அகாடமியின் நூல் வெளியீடுகளான, “திருவண்ணாமலையில் ஓர் குழந்தை”, மற்றும் “Did Swami Vivekananda Give Up Hinduism?” (சுவாமி விவேகானந்தர் ஹிந்துத்துவத்தை விட்டு கொடுத்தாரா?) என்ற பேரா. G.C. அஸ்னானி எழுதிய நூல் ஆகியவற்றை அந்த நாளில் வெளியிட எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். பகவானின்  பரவசமூட்டும் லீலா அனுபவத்தை விவேக் அன்று பெற்றான். விவேக் சென்னை சென்டல் ரயில் நிலையத்தில் மும்பைக்கு புதிய பதிப்பக வெளியீடுகளை அனுப்ப சென்றிருந்தான்.. திரும்பி வருகையில் அவனது பர்ஸ், ஐடென்டிடி கார்ட், மற்றும் பிறவற்றை விவேக் இழந்து கவலைக் கொண்டிருந்தான். இந்த சாது பகவானின் படத்தின் முன்னால் அமர்ந்து யோகியிடம் பிரார்த்தனை செய்தான். பின்!னர் எழுந்து விவேக் இடம் நிச்சயமாக தொலைந்த பர்ஸ் கிடைக்கும் என்றான்.  அடுத்தநாள் காலை முனிரத்தினம் என்ற ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் சென்னை சென்டரல் ஸடேஷனில் அதனை கண்டெடுத்தாக கூறி, அதனை கொண்டு வந்து எங்கள் இல்லத்தில் ஒப்படைத்தார். இது பகவானின் ஒரு லீலை. பாரதி திருவண்ணாமலையில் இருந்து அடுத்தநாள் காலை பகவானின் பிரசாதங்கள் உடன் திரும்பினாள்.. 

ஆகஸ்ட் – 6 அன்று குமாரி.விஜயலட்சுமி பகவானின் சில புகைப்படங்களை பகவானிடம் ஒப்படைக்க அனுப்பினார். சகோதரி நிவேதிதா அகாடமியின் புரவலர் ஆக விஜயலட்சுமி அவர்கள் இணைந்தார். அன்று மதியம் விவேக் மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சிலரும் திருவண்ணாமலைக்கு சென்றோம். நாங்கள் பகவானின் இல்லத்திற்கு இரவு 9.30 மணிக்கு சென்று சேர்ந்தோம். அந்த நேரத்தில் அவர் தெருவின் முனையில் நின்று எதையோ வாங்கி கொண்டு இருந்தார். அவர் எங்களை பார்த்தவுடன் தன் அருகில் என்னை அழைத்தார். வறுத்த பலாக்கொட்டையை வாங்கிய அவர் எங்களை அழைத்துச் சென்று வேர்கடலை விற்கும் கடையில் எங்கள் அனைவருக்கும் ஒரு வறுத்த வேர்கடலை பொட்டலத்தை வாங்கி தந்தார். பின்னர் அவர் எங்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கே கோயில் குளத்தினருகே அமரவைத்து வேர்கடலையை சுவைக்கச் சொன்னார். “இங்கே அமர்ந்திருங்கள். இந்தப்பிச்சைக்காரன் அரைமணி நேரத்தில் வந்துவிடுவான்.” என்றார். அவர் கோயிலுக்குள் சில வேலைகளை முடித்துவிட்டு அரைமணி நேரத்தில் திரும்பிவந்தார். அதுவரை நாங்கள் கோயிலின் பிரகாரத்தின் சுவரை நோக்கியவாறு அமர்ந்து இருந்து நாமஜெபத்தை சொன்னோம். விவேக் இடம் யோகி, “ஏன் நீ பலாக்கொட்டையை சாப்பிடவில்லை என வினவி” அவற்றை பிறரிடம் பகிருமாறு உத்தரவிட்டார். அவரின் உத்தரவுபடி நாங்கள் பலாக்கொட்டைகளை சாப்பிட்டோம். அங்கிருந்த மக்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு குருவோடு நாங்கள் என்ன செய்கிறோம் என்று வேடிக்கை பார்த்தனர். தாரிணி என்ற இளம்பெண், பி.ஏ. இலக்கியம் படிக்கும் பெண், தனது குடும்பத்தடன் வந்திருந்தார். பகவான் அந்தப்பெண்ணோடு உரையாடலை துவக்கினார். குழந்தைபிரசவத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் அவளது சகோதரியை ஆசீர்வதித்தார். அந்த சகோதரியின் கணவன் ஒரு போலீஸ்காரன். அவனின் தந்தை திருவண்ணாமலையின் எஸ்.ஐ. தாரிணிய யோகி சில பாடல்களை பாடுமாறு கூறியதோடு அவள் சாய்பாபாவை சந்தித்திருக்கிறாரா என்று வினவினார். அவள் தான் புட்டபர்த்தி சென்றிருந்த போதும் அவரை சந்தித்ததில்லை என பதிலளித்தார். யோகி அவள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் ஆசீர்வதித்ததோடு, அவளின் மாமனான ஒரு கைரேகை ஜோதிடரையும் ஆசீர்வதித்தார். யோகி சிரித்தவாறே அவனிடம் இந்தப்பிச்சைக்காரனின் எதிர்காலம் குறித்து ஏதேனும் குறிப்பிட இயலுமா எனக்கேட்டார். அவன் யோகியின் கைரேகையை பார்க்க விருப்பம் தெரிவித்தபோது, பகவான் சிரித்தவாறே தனக்கு எங்களோடு வேலையிருப்பதாக கூறினார். அந்த குடும்பம் மீண்டும் யோகியை காலையில் சந்திக்க அனுமதி கேட்க யோகி அதற்கு சம்மதித்தார். அனைவரையும் அனுப்பியப்பின் நாங்கள் கோயிலை விட்டு பகவானுடன் வெளியே வந்தோம். அவர் ஒரு கவரிங் நகைக்கடையில் நுழைந்து சிலபொருட்களை வாங்கிக் கொண்டு அக்கடையின் முதலாளி மற்றும் அங்கே பணிபுரிந்தவர்கள் அனைவரையும் வாழ்த்தினார். அப்போது நேரம் 11.30 மணி. சாத்தியிருந்த பாத்திரக்கடையின் வராண்டாவிற்கு வந்து அமர்ந்தோம். நாங்கள் கொண்டு வந்திருந்த புத்தகக் கட்டினை பிரித்து புத்தகங்களை பகவானிடம் ஒப்படைத்தோம். இந்த சாது யோகியிடம் நாங்கள் மீண்டும் நாளை சந்திக்கிறோம் என்று கூறிவிட்டு ஆசிப்பெற்று கிளம்பியபோது, யோகி நாளை காலை 10 மணிக்கு வருமாறு கூறினார். நாங்கள் அவரிடம் விடைப்பெற்று கிளம்பினோம். வழக்கம்போல் பிருந்தாவன் லாட்ஜ் வந்தபோது அதில் இடம் இல்லை என்பதால், சிவகாசி நாடார் சத்திரம் நோக்கி சென்றோம். அதுவும் கோயிலின் திருவிழா காரணமாக நிரம்பியிருந்தது. இருப்பினும் எங்களுக்கு வராண்டாவில் படுக்க சில தலையணைகள் மற்றும் பாய்கள் தரப்பட்டது. சூரிய உதயம் வரை நாங்கள் ஓய்வெடுத்தோம். 

காலைக்குளியலுக்குப் பிறகு , விவேக் சந்தியாவந்தனமும் 108 காயத்ரி ஜபமும் சொல்ல, இந்த சாது 10,800 காயத்ரி ஜபம் செய்தான். பின்னர் நாங்கள் ஆலமரத்து குகைக்கு சென்றுவிட்டு யோகியின் இல்லத்திற்கு வந்தோம். நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் பெருமகிழ்வோடு வரவேற்ற யோகி ராம்சுரத்குமார், “ரங்கராஜா, நீ ஒரு சிறந்த வேலையை செய்துவிட்டாய். புத்தகம் நன்றாக வந்துள்ளது. அது மிகச்சிறப்பாக வந்துள்ளது. இந்தப்பிச்சைக்காரன் இன்று காலை அதனை பார்த்தான். இந்தப்பிச்சைக்காரன் அதன் முன்னுரையையும், பத்தாம் அத்தியாயத்தையும் ஒருவரை படிக்கச் சொன்னான். முன்னுரை சிறப்பாக உள்ளது. கடைசி அத்தியாயத்தில் இந்தப்பிச்சைக்காரனைப்பற்றி சில தகவல்கள் உள்ளன.” அவர் “திருவண்ணாமலையில் ஓர் குழந்தை” என்ற நூலைக் குறித்து தான் பேசினார். இந்த சாது யோகியிடம் தான் முன்னுரையில் அனைத்து அத்தியாயங்களையும் இணைத்ததாக கூறினார். யோகி இந்த சாதுவை திரும்பத்திரும்ப ஆசீர்வதித்து வேலை சிறப்பாக செய்யப்பட்டதை கூறினார். இந்த சாது யோகியிடம் அவரது கையொப்பம் இட்ட சில பிரதிகளை இளையராஜா, ராமமூர்த்தி, மற்றும் சிலருக்காக கேட்டார். அதனை நிறைவேற்றிய யோகி, “நீ சிறந்த வேலையை செய்து விட்டாய். உனது பணி வளர்வதை என் தந்தை பார்த்துக்கொள்வார். உனது பணிக்கான தேவைகள் அனைத்தையும் தந்தையே உனக்கு தருவார்“ என்றார். யோகி ‘தத்துவ தர்சனா’வின் சில பிரதிகளையும் கையொப்பம் இட்டார். “Did Swami Vivekananda Give Up Hinduism?”  என்ற, பேரா. G.C. அஸ்நானி எழுதி சகோதரி நிவேதிதா அகாடமி வெளியிட்ட நூலிலும் யோகி கையொப்பம் இட்டு தந்தார். இந்த சாது பகவானிடம் ராமகிருஷ்ண மிஷன் இன்று நீதிமன்றத்தில் ராமகிருஷ்ணாயிஸம் என்பது ஹிந்துயிஸம் அல்ல என்றும், மிஷன் சிறுபான்மையினரின் ஒரு நிறுவனமாகும் என்றும் ஒரு வழக்கு கொண்டுவந்துள்ளது என விளக்கினான். பகவான், ராமகிருஷ்ண மிஷனின் நிலைப்பாடு குறித்து தனது வருத்தத்தை தெரிவித்ததோடு, “இவ்விதம் அவர்கள் செயல்படுவது தவறு“ என்றார். பகவானின் கருணையால் உச்ச நீதி மன்றம் ராமகிருஷ்ணா மிஷனின் வாதத்தை நிராகரித்து அவர்களது வழக்கை தள்ளுபடி செய்தது,. பின்னர் மிஷனும் அதனுடைய நிலைபாட்டை கைவிட்டது.

பகவான், யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா டிசம்பர் – 1 அன்று சிறப்பாக நடைபெற ஆசீர்வதித்தார். சாது யோகியிடம் தனது காயத்ரி நாள் முதல் விஜயதசமி நாள் வரையிலான விரதத்தை மேற்கொள்வதை குறித்து கூற, “உண்ணாவிரதம் அல்லது விருந்து உண்பது, எது இந்தப்பிச்சைக்காரனின் பணிக்கு உதவுகிறதோ அதை செய்! சில பழங்களை எடுத்துக்கொள்“ என்றார். யோகி சில திராட்சைப்பழங்களை தந்தார். . எனது வானொலி உரையான, “சுதந்திரத்தின் கருத்துக் கூறுகள்“ என்ற தலைப்பு பற்றி யோகியிடம் கூற, யோகி அதன் நேரம் மற்றும் நாளை குறித்து வைத்துக்கொண்டார். “விவேகானந்தா கேந்திர பத்தரிக்கா” வில் சாதுவின் கட்டுரையான “ராஷ்டிர தர்மத்தின் கருத்துகள்“ என்பதை படித்ததாகவும், “அந்தக் கட்டுரையில் இந்தப்பிச்சைக்காரன் குறித்தும் நீ குறிப்பிட்டிருக்கிறாய்“ என்றும் கூறி யோகி சிரித்தார். சாது யோகியிடம் ஒவ்வொருமுறை பேசும் போதும், எழுதும் போதும், தங்களை அழைக்காமல், நினைக்காமல் எனது மனமானது இருக்காது என்று கூற, யோகி தன் கரங்களை உயர்த்தி புன்னகையோடு ஆசீர்வதித்தார். யோகி சாதுவின் கரங்களைப் பற்றி சிறிது நேரம் தியானித்தார். பின்னர் அவர் விவேக்கிடம், ”நேற்றிரவு நடந்த அனைத்தையும் நீ புரிந்து கொண்டாயா?“ என வினவினார். விவேக் அந்தக் கேள்வியால் குழம்பி நிற்க, பகவான் சிரித்தவாறே தொடர்ந்தார்: ”நீ கண்டவைகள் அனைத்தையும் குறித்து வைத்துக் கொள். அதனை ஒரு கட்டுரையாக்கி ‘தத்துவ தர்சனா’வில் வெளயிடு”. இந்த சாது பகவானிடம் விவேக் “ஹிந்துயிசம் டுடே”வில் எழுத விரும்புகிறான் என்றான். யோகி அதனை ஆசீர்வதித்தார். யோகி எங்களை நீண்ட நேரம் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கூறி அவர் எங்களுக்கு கிளம்ப அனுமதி கொடுத்தார். அவர் இந்த சாதுவின் தண்டத்தையும், தேங்காய் சிரட்டையையும் எடுத்து ஆசீர்வதித்து தந்தார். எங்களை வாசல்வரை வந்து வழியனுப்பி, அவர் கண்களில் இருந்து மறையும் வரை பார்த்தவாறே இருந்தார். 

விவேக் தனது பயண அனுபவத்தை ‘தத்துவ தர்சனா’ இதழில், “குருவின் லீலை“ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையாக எழுதியிருந்தான்: 

“அது 1990 ஆம் ஆண்டின் புனிதமான ச்ராவண பூர்ணிமா நாள். நாங்கள் திருவண்ணாமலைக்கு இரவு 9 மணிக்கு சென்றடைந்தோம். யோகி ராம்சுரத்குமார் எங்களுக்காக காத்திருந்ததைப் போல், கோயிலின் தேரடி அருகே ஒரு பொட்டலத்தில் பலாப்பழத்தின் வறுத்த கொட்டைகளோடு  நின்றிருந்தார். முதலில் எனது தந்தை ( சாது ரங்கராஜன் ) சென்று அவரது பாதங்களை வணங்கினார். அவரைத் தொடர்ந்து பேரா. C.V. ராதாகிருஷ்ணன், திரு. ராஜ்மோகன் மற்றும் நான் அவரது பாதங்களை மரியாதையோடு வணங்கினோம். ராம்ஜி பலாப்பழக் கொட்டை பொட்டலத்தை என்னிடம் ஒப்படைத்தார். 

அவர் எங்களை கோயிலை நோக்கி கூட்டத்தினரிடையே பாத்திரக்கடை மற்றும் பிற கடைகளின் வழியே முன் நடத்திச் சென்றார். அவர் வேகமாக நடந்து சென்றார் அவரைப் பின்தொடர நாங்கள் ஓட வேண்டியிருந்தது. அவர் ஏதோ ஒரு சக்தியால் நிறுத்தப்பட்டதைப் போல் வழியில் இருந்த ஒரு தள்ளுவண்டியில் வறுத்த வேர்கடலை விற்கப்படும் கடையில் நின்று எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேர்க்கடலை பொட்டலம் வாங்கினார். அனைத்து பொட்டலங்களையும் ஒரு கையில் ஏந்திக்கொண்டு அதனை அவர் தோள்பட்டைக்கு மேலே உயர்த்தி அதனை பரிசுபொருளைப் போல் பிடித்துக்கொண்டு கோயிலை நோக்கி நடந்தார். யோகியை கண்ட மக்களில் சிலர் தெருவில் அவருக்கு வழியை விட்டு நின்றனர். கடைகளில் இருந்த சிலர் எழுந்துநின்று அவருக்கு மரியாதையையும், வணக்கத்தையும் செலுத்தினர். யோகி அந்த கடைகளை கடந்து எங்களை கோயிலின் மண்டபத்தை நோக்கி சென்று அதன் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். நாங்கள். அவரை நோக்கியவாறு அமர்ந்தோம். எங்கள் பின்னால் பெரும் ஜனத்திரள் நின்றது. அவர் எழுந்து எங்களிடம் தான் ஒரு அரைமணி நேரத்திற்கு விடைபெறுவதாகவும், திடீரென எங்கள் பக்கம் திரும்பி வேர்க்கடலையை சுட்டிக்காட்டி எங்களிடம், “இது உண்பதற்கு, வைத்துக்கொண்டிருப்பதற்கல்ல“ என்றார். நாங்கள் அனைவரும் அவரது புனிதமான பிரசாதத்தை சாப்பிடத்துவங்கினோம். அவர் மீண்டும் எங்களிடம், “நான் உங்களை விட்டுவிட்டு செல்கிறேன். நான் அரைமணி நேரம் கழித்தோ அதற்கு முன்பாகவோ திரும்பிவிடுவேன்“ என கூறிவிட்டு கோயிலுக்குள் விரைந்தார். 

சிறிதுநேரம் கழித்து யோகி எங்கள் இடத்திற்கு திரும்பிய பொழுது எனது கைகளில் பலாப்பழக் கொட்டையை வைத்திருப்பதைப் கண்டு கடுமையான சொற்களில், “நீ இன்னமும் வைத்திருக்கிறாயா?“ என வினவினார் நான் அவரிடம் பலாப்பழக்கொட்டை உண்பதற்கு கடினமாக இருப்பதாக கூறினேன். யோகி எனக்கு நினைவுப்படுத்தும் வகையில் இந்த கொட்டைகள் வறுக்கப்பட்டிருப்பதாகவும், அதனை என்னால் உண்ண முடியாது எனில், அதனை பிறர்க்கு வினியோகிக்கலாமே என்றார். நாங்கள் அனைவரும் பலாப்பழக்கொட்டைகளை சாப்பிட்டோம். மீதமிருந்த கொட்டைகளை நான் எனது  பையில் வைத்துக் கொண்டேன். 

அதே சமயம் ஒரு ஐம்பது பக்தர்கள் அவரைச்சுற்றி திரண்டனர். அதில் அசாமில் இருந்து வந்திருந்த திரு தேவ் என்பவரும் இருந்தார். திரு. தேவை யோகி எங்களுக்கு அறிமுகப்படுத்தி “தேவ் அசாமை சேர்ந்தவர்“என்றார். யோகி தேவை நோக்கி, “இப்போதெல்லாம் மக்கள் அசாமை, ஆசம் என்றழைக்கிறார்கள், அப்படித்தானே?“ என்று கேட்டுவிட்டு அவரது குழந்தைத்தனமான சிரிப்பை உதிர்த்தார். கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவர் யோகிக்கு பத்து ரூபாயை தந்தார். யோகி, தேவை நோக்கி, “ஒருவன் எனக்கு பத்து ரூபாய் கொடுத்தான். நான் செல்வந்தனாக விரும்புகிறேன். நீ ஒரு தொகையை கொடு. மற்றவர்களும் அதனை பின்பற்ற துவங்குவார்கள். இந்தப்பிச்சைக்காரன் பணக்காரன் ஆகிவிடுவான்” என்றார். நாங்கள் அனைவரும் இதனைக் கேட்டு சிரிக்கத் தொடங்கினோம். 

யோகி கூட்டத்தினரிடையே அமர்ந்திருந்த ஒரு பக்தரை அழைத்தார். அவர் அந்த பக்தரை தன் அருகே அமர வைத்து அவளின் பெயர் என்ன என்று கேட்டார். அவள் “தாரணி“ என்றாள். யோகி அவளிடம் அந்த  பெயரின் உச்சரிப்பை கேட்டு முதல் எழுத்து ‘தா’ வா அல்லது ‘த’ வா என தெளிவுப் படுத்திக்கொண்டார். யோகியின் பேச்சு பணம் குறித்து சறுக்கியது. சாதகர்கள் அவர்களின் சாதனாக்களின் பாதி வழியிலேயே பணத்தின் பின்னால் ஓடுவதைக் குறித்து நையாண்டியோடு குறிப்பிட்டார். அவர், “இந்தப்பிச்சைக்காரன் பணக்காரனாக விரும்புகிறான். நீங்கள். பணம் தருவீர்களா? இந்தப்பிச்சைக்காரன் கடவுள் தேடலோடு துவங்கிவிட்டு, இப்போது காம, குரோதம் போன்றவற்றிற்கு இறையாக விழுந்துவிட்டான். ஆகவே இந்தப்பிச்சைக்காரன் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறான்.” இதனை ஒரு பாடமாக ஆன்மீக பயணத்தின் வழித்தடங்களில் பயணிப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். தாரணியை சுட்டிக்காட்டி அவளைக் குறித்து கூறுமாறு சொன்னார். அவள் தான் சென்னையில் இருந்து வருவதாகவும் அவளது சொந்த ஊர் மதுரை என்றும் அங்கே அவளது பெற்றோர்கள் தற்போதும் வசித்து வருவதாகவும் கூறினாள். தனக்கு நான்கு சகோதரர்கள் இருப்பதாகவும், அவர்களில் இரண்டு பேர்கள் வந்துள்ளதாகவும், சகோதரியின் கணவன் போலீஸ்காரனாக இருப்பதாகவும், அவனது தாய் தன்னோடு வந்திருப்பதாகவும், தாய்மாமன் மற்றும் சிலரும் தன்னோடு வந்திருப்பதாகவும் அவள் கூறினாள். 

யோகி அவளிடம் எவ்விதம் தன்னை அறிந்து கொண்டாய் என வினவினார் அதற்கு அவள் யோகியை, இங்கு கூடியிருந்த கூட்டத்தின் மூலமாகவே அவர் சுவாமி என அறிந்து கொண்டதாகவும் கூறினாள். யோகி அதற்கு, “நான் சுவாமி அல்ல. நானொரு பிச்சைக்காரன். நான் இந்த பிச்சைப்பாத்திரத்திரம் கொண்டு பிச்சையெடுப்பதை நீ காணவில்லையா?“ என்று கேட்டார். யோகி அவளிடம் தனது இல்லத்திற்கு காலையில் வந்திருந்தாயா என வினவ, அவள் தான் காலையில் இல்லத்திற்கு வந்திருந்ததாகவும், ஆனால் அவரை  சந்திக்க முடியவில்லை என்றும் கூறினாள். 

யோகி ராம்சுரத்குமார் அவளிடம் உனக்கு ஏதேனும் பாடல் தெரியுமா என வினவினார். அவள் ஒரு பாடலை பாடினாள். யோகி அவளிடம் “இன்னொன்று“ என்று கூறினார். ஒரு பாடலில் அவள் சத்ய சாய் பாபாவை குறிப்பிட்டாள். யோகி அவளிடம் எப்போதேனும் சாய் பாபாவின் தரிசனத்தை பெற்றிருக்கிறீர்களா என கேட்டார். அதற்கு அவள் தான் பாபாவின் தரிசனத்தை பெற்றதில்லை என்றும், ஆனால் தான் புட்டபர்த்திக்கு சென்றிருந்ததாகவும் கூறினார். 

யோகி அவளிடம் என்ன செய்கிறாய் என வினவினார். அவள் தான் பி.ஏ. (ஆங்கிலம்) முதல் வருடம் சென்னைப் பல்கலைகழகத்தில் படிப்பதாகவும், சகோதரர் ப்ளஸ் டூ படிப்பதாகவும், தான் அஞ்சல்வழிகல்வி பாடத்திட்டத்தில் படிப்பதாகவும் கூறினார். யோகி யாரிடமிருந்தாவது நீ ஏதேனும் வழிக்காட்டுதல்களை பெறுகிறாயா என்று கேட்க அவள் “ஆம்” என்றாள். 

யோகி ராம்சுரத்குமாருக்கு அவள் பிஸ்கெட்களை கொடுத்தாள். அவர் சிலவற்றை தன் சிரட்டையிலும் எடுத்துக்கொண்டார். பின்னர் யோகி அவளிடம், “நான் இவர்கள் அனைவரிலும் இருக்கிறேன் (கூட்டத்தினரை சுட்டிக்காட்டினார்), அவர்களுக்கும் விநியோகம் செய். நான் இந்த வாயின் வழியாக மட்டும் உண்பதில்லை, அனைவரின் வாயின் மூலமும் உண்கிறேன்.“ அவள் அங்கே குழுமியிருந்த அனைவருக்கும் பிஸ்கெட்களை விநியோகம் செய்தாள். 

அவள் தனது மாமாவை அறிமுகப்படுத்தினாள். அவர் ஒரு சோதிடர். அவர் யோகியிடம் தான் கைரேகை சாஸ்திரம் அல்லது சப்தரிஷி நாடிகளை பார்த்து சோதிடம் சொல்வேன் என்றார். தன் தொடர்புடைய ஏதேனும் தகவல்களை அவரால் கூற முடியுமா என யோகி கேட்டார். உடனே யோகியின் நாடியை பார்க்க மரத்தாலான ஒரு அமைவு முன்வைக்கப்பட்டு யோகி இடம் அதில் கை வைக்குமாறு கோரப்பட்டது.. யோகி அதற்கு ஒத்துழைக்காமல் தனது கரங்கள் காணிக்கைகளை உண்டு அழுக்கடைந்து இருப்பதாக கூறினார். 

இரவு 11 மணி ஆனதன் காரணமாக யோகி அவர்களை வழி அனுப்ப விரும்பினார். இரவு நேரங்களில் தங்கும் விடுதிகள் ( உடுப்பி பிருந்தாவன் ) மூடப்பட்டுவிடும். ஆனால் அதே நேரத்தில் யோகிக்கு பழங்களையும், குளிர் பானங்களையும் வாங்குவதற்கு சிலர் சென்றனர். 

தாரணி இந்த மாத பௌர்ணமி முதல் தான் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் தான் திருவண்ணாமலைக்கு வர இருப்பதாக கூற, யோகி அவளின் சந்திப்பிற்கு அனுமதி அளித்தார். அவள் மறுநாள் காலை அவரை சந்திக்க அவரது அனுமதியை கேட்டாள். யோகி அனுமதித்தார்.

அவளது மாமா பழங்கள் போன்ற காணிக்கைகளோடு ஒரு பாக்கெட் சிகரெட்டையும் அவருக்கு கொடுக்க நினைத்தார். அவள், “விளையாட்டுத்தனமாக இருக்காதே“ என்று மாமாவை கடிந்து கொண்டாள். அவன் என்னிடம் யோகிக்கு சிகரெட் பாக்கெட்டை தரலாமா என வினவினான். நான் அவனிடம், “சிலர் அவருக்கு சிகரெட் பாக்கெட் காணிக்கையை தருவதுண்டு. அதனை யோகி ஏற்பதும் உண்டு. இந்த இடம் கோயிலாக இருப்பதால் அவர் ஏற்பாரா இல்லையா என தெரியாது“ என்றேன். 

அவர்கள் யோகியிடம் விடைப்பெற்றப்பின் யோகி என்னை வழிநடத்தி போகுமாறு கூறினார். நாங்கள் கடைகளின் வழியே சென்றோம். பின்னர் அவர் ஒரு கடைக்குள் நுழைந்தார்.  அங்கே அவர் அமர ஒரு சேர் போடப்பட்டது. அந்த கடையின் உரிமையாளர் யோகியின் கழுத்தைச் சுற்றி ஒரு நெக்லெஸ் அணிவித்தார். அதற்குள் கணிசமான கூட்டம் அங்கே கூடி, “ ஓ! நமது விசிறி சாமி இங்கே இருக்கிறார்“ என கூறத்தொடங்கினர். அதற்குள் யோகி  அவ்விடம் விட்டு நகர்ந்தார். அந்த கடையில் கணிசமான வியாபாரம் நடந்தது. 

யோகி என் தந்தையிடம் வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா என வினவினார். எனது தந்தை யோகியிடம், யோகிராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் வெளியீடான, திரு.T.P.M ஞானப்பிரகாசத்தின் “ திருவண்ணாமலையில் ஓர் குழந்தை“ என்ற தமிழ்  நூலின் சில பிரதிகள் கொண்டு வந்திருப்பதாக கூறினார். இது தவிர்த்து எனது தந்தை ஆண்டுதோரும் காயத்ரி முதல் விஜயதசமி வரை அனுஷ்டிக்கும் 55 நாட்கள் உபவாச விரதத்தை அடுத்த நாள் யோகியின் முன்னிலையில் துவக்க விரும்பினார். யோகி எங்கள் அனைவரையும்  காலையில் வருமாறு கூறினார். 

அடுத்தநாள் நாங்கள் காலையில் சென்றபோது. யோகி எனது தந்தையை பாராட்டினார். “ நீ மிகச்சிறந்த வேலையை செய்திருக்கிறாய். இந்தப்புத்தகம் மிக நன்றாக வந்துள்ளது. இந்தப் பிச்சைக்காரன் சில பிரதிகளை சிலரிடம் தந்து இன்று காலையில் அவர்களை முன்னுரை மற்றும் இந்தப்பிச்சைக்காரன் குறித்த கடைசி அத்தியாயத்தையும் படிக்கச் சொன்னேன்.“ 

எனது தந்தை யோகியிடம் சென்னையில் நடக்க இருக்கும் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி குறித்த ஏற்பாடுகள் மற்றும் சகோதரி நிவேதிதா அகாடமியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பகிர்ந்தார். யோகி தனது ஆசியாக,  அந்த தமிழ் புத்தகத்தின் பிரதிகளிலும்,  அகாடமியின் வேறு இரண்டு புத்தக வெளியீடுகள், ‘தத்துவ தர்சனா’ ஆறாவது ஆண்டு இதழ் மற்றும் “Did Swami Vivekananda Give Up Hinduism?”  (சுவாமி விவேகானந்தர் ஹிந்துத்துவத்தை கைவிட்டாரா?) என்ற G.C. அஸ்நானி அவர்கள் எழுதிய நூல், ஆகியவற்றின் பிரதிகளிலும் அவரது கையொப்பத்தை பதித்தார்.

யோகி என் தந்தையை அவரது விரதத்திற்காக ஆசீர்வதித்து, “உண்ணாவிரதமோ, விருந்தோ, எனது தந்தையின் பணியை செய்ய எது உனக்கு  உதவுகிறதோ அதனை செய். நீ எனது தந்தையின் பணியை செய்கிறாய். என் தந்தை உன்னை ஆசீர்வதிப்பார்” என குரு தனது ஆசியை பொழிந்து அவரது முயற்சிகளின் வெற்றிக்கும் ஆசீர்வதித்தார். நாங்கள் அவர் பாதத்தை வணங்கி அவர் அனுமதியைப் பெற்று சென்னைக்கு கிளம்பினோம். 

நாங்கள் முற்றிலும் புத்துணர்வு ஊட்டப்பெற்று, உடலளவிலும், மனதளவிலும் புதிய தெம்புடன் அன்றைய இரவில் நடந்த நிகழ்வுகளையும், பாடங்களையும் நினைவில் அசைப்போட்டவாறு திரும்பினோம். 

ஒரு நாசிக் பக்தரின் கடிதம் ஒன்று யோகி ராம்சுரத்குமார் பெயருக்கு எங்களது முகவரியில் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு பகவானின் ஆசியும், அவர் கூறியபடி பதிலும் அனுப்பப்பட்டது. விவேக் திரு. இளையராஜா அவர்களை ஆகஸ்ட் – 11 அன்று சந்தித்து யோகியின் ஆசிகளை தெரிவித்து, யோகி கையொப்பம் இட்ட தமிழ் நூலின் பிரதிகளை அவரிடம் கொடுத்தான். இந்த சாதுவின் உரை வானொலியில் ஆகஸ்ட் – 14 அன்று ஒலிபரப்பானது. திருவண்ணாமலையில் பணிபுரிந்த திரு. S. கோவிந்தராஜன் என்ற, யோகியின் பக்தரான, ஓய்வு பெற்ற மாவட்ட செஷன்ஸ் நீதிபதி, இந்த சாதுவை சந்தித்து, தனது இல்லத்தில் ராம்நாம் சத்சங்கத்தை நடத்தவேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தினார். திரு. கோவிந்தராஜன் விவேக் உடன் திருவண்ணாமலைக்கு ஆகஸ்ட் – 18 அன்று யோகியின் ஆசியைப் பெற சென்றார். இந்த சாது பகவானுக்கு ஒரு கடிதம் எழுதி அவர்களிடம் தந்து அனுப்பினான்: 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

உங்களின் கருணையாலும் , ஆசியாலும் ஆகஸ்ட் – 14 அன்று வானொலியில் ‘சுதந்திரத்தின் அம்சங்கள்’ என்ற உரை கேட்டவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த உரையை தாங்களும் கேட்டு ஆசீர்வதித்து இருப்பீர்கள் என நம்புகிறேன். 

T.P.M. ஞானப்பிரகாசம் நேற்று மதியம் இங்கு வந்திருந்தார் என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறோம். மதியம் வந்த அவர் மாலைவரை எங்களோடு இருந்தார். அவரது பிரச்சனைகள் குறித்து சுதந்திரமாக பேச இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீங்கள் அவரிடம் பத்து பிரதிகளுக்கு மேல் ஒருமுறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியதையும் பகிர்ந்தார். நான் அவரிடம் பத்து புத்தகங்களையும் ரூ.300 ம் தந்து அனுப்பினேன். விற்பனை நடந்தப்பின் அவ்வப்போது அவரை இங்கே அழைத்து அவருக்குரிய பணத்தை தந்துவிடுகிறோம். அவர் தனக்கு தங்களின் பக்தர்களிடம் மிக குறைந்த அளவு தொடர்பு வைத்திருப்பதால் அந்த நூலிற்கான பிரச்சாரத்திற்கு எங்களாலான அனைத்து உதவிகளையும் அவருக்கு செய்வோம். 

திருவண்ணாமலையில் பணிபுரிந்த திரு.S.கோவிந்தராஜன் என்ற ஓய்வுபெற்ற மாவட்ட செஷன்ஸ் நீதிபதியின் இல்லத்தில் ஒரு சிறப்பு ராம்நாம் சத்சங்கம் நாளை நடைபெற இருக்கிறது, அவர் திருவண்ணாமலையில் பணியில் இருக்கும் போதிருந்தே உங்கள் பக்தராக இருந்திருக்கிறார். அவர் சமீபத்தில் எங்களை  சந்தித்து அவரது இல்லம் இருக்கும் சாஸ்திரி நகர் அடையாரில் ராம்நாம் சத்சங்கத்தை நடத்த அழைத்திருக்கிறார். இந்த நிகழ்வின் வெற்றிக்கு நாங்கள் உங்கள் ஆசியை வேண்டுகிறோம். 

வெவ்வேறு ராம்நாம் பிரச்சார மையங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் உடன் ஒரு கூட்டத்தை சென்னையில் ஆகஸ்ட் – 25 அன்று நடத்துகிறோம். அதில் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி மூன்றுநாள் விழா கொண்டாட்டங்கள் குறித்தும், ராம்நாம் பிரச்சாரத்தின் விரிவாக்கம் குறித்தும் கலந்தாலோசனை செய்கிறோம். உங்கள் கருணையாலும், ஆசியாலும் நாங்கள் எங்களின் முயற்சிகளில் பெரும் வெற்றியை பெறுவோம் என நம்புகிறோம். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்”

ஆகஸ்ட் 19 அன்று அடையாரில் நடந்த ராம்நாம் சத்சங்கம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. பல பக்தர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

Photo

சாது பகவானுக்கு ஆரத்தி எடுக்கிறார்

அத்தியாயம் 2.20 

பகவானின் உடல் நலமின்மையும்,

சிஷ்யனின் சங்கடமும்

ஆகஸ்ட் 19 அன்று விவேக் திருவண்ணாமலையில் இருந்து காலையில் திரும்பினான். அவன் ஒரு கவலையளிக்கத்தக்க செய்தியை கொண்டுவந்திருந்தான். பகவான் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், பகவான் வாந்தி எடுக்கும்போது சிவப்பான நிறத்தில் சில பொருட்கள் இருந்ததாகவும், இது குறித்து பகவானிடம் கேட்டபோது அவர் புன்னகைத்தவாறே தான் சில பழங்களை எடுத்துக் கொண்டதாகவும் அதனாலேயே அவ்விதமாக இருந்ததாகவும் கூறினார். சாதுவின் அண்டைவீட்டுக்காரர்களான பிரசாத் மற்றும் வசந்தி என்ற இரு பக்தர்கள் திருவண்ணாமலையில் அன்று காலை இருந்தனர். அவர்களும் யோகியின் உடல்நிலை குறைவு பற்றி உறுதி செய்தனர். அன்றிரவு இளையராஜா ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் பகவானின் உடல்நலம் குறித்து இந்த சாதுவிடம் விசாரித்தார். இந்த சாது கவலையுற்று இருந்தபோதிலும், குரு தன்னைப் பார்த்துக்கொள்வார் என்றும் அனைத்தும் விரைவில் சரியாகும் என்றும் கூறினான். இருப்பினும் ஆகஸ்ட் 21 அன்று இந்த சாதுவை  திருவண்ணாமலை உடுப்பி பிருந்தாவன் ஓட்டலின் உரிமையாளர் திரு. ராமசந்திர உபாத்யாயா தொலைபேசியில் அழைத்து, நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதாக தகவல் தெரிவித்தார். பகவான் அவரது இல்லத்தின் வராண்டாவில் படுத்து இருப்பதாகவும் அவர் எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார் என்றும், யோகி யாரையும் பார்க்கவும், அவரை கவனித்துக்கொள்ளவும் அனுமதிக்கவில்லை என்றும் கூறி, இந்த சாதுவை உடனே திருவண்ணாமலைக்கு கிளம்பி வருமாறும் உபாத்யாயா அழைத்தார். இந்த சாது மிகுந்த சங்கடத்தில் ஆழ்ந்தான். பகவான் இந்த சாதுவிடம் நிரந்தர உத்தரவாக, எப்போது திருவண்ணாமலை வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே தெரிவித்து விட்டே வரவேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் உபாத்யாயா அதற்கெல்லாம் இப்பொழுது நேரமில்லை என்றும் யோகி எவரையும் அருகே அனுமதிப்பதில்லை என்பதால் உடனே சாது திருவண்ணாமலைக்கு விரைந்து வரவேண்டும் என்றும் கூறினார். இந்த சாது மீண்டும் இளையராஜாவிடம் பேசினார், அவரும். இந்த சாது நிச்சயம் பகவானை காண போகவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். திரு. பாஸ்கர்தாஸ் என்ற பக்தர் தனது கார் மற்றும் ஓட்டுனரை சாது கிளம்ப அனுப்பினார். சாது விவேக் உடன் திருவண்ணாமலைக்கு கிளம்பினான். 

குருவின் இல்லத்தை அடைந்தபோது அவர் வராண்டாவில் பாயில் படுத்திருந்தார். பக்தியோடு யோகிக்கு உணவளிக்கும் சுந்தரி என்ற அம்மையார். அவர் பக்கத்தில் இருந்தாள். அவள் பகவானிடம் சாது வந்திருப்பதாக தெரிவித்தாள். குரு எழுந்திருக்காமலே அவளிடம் சாதுவிடம் பின்னர் வருமாறு கூறினார். பெருமாள், பெருமாளப்பன், உபாத்யாயா போன்ற பக்தர்களும், சாதுவையே யோகி அனுமதிக்கவில்லையே என வருத்தம் கொண்டனர். இருப்பினும் இந்த சாது திருவண்ணாமலையில் தங்குவதற்கு உபாத்யாயா ஏற்பாடு செய்திருந்தார். இந்த சாது மற்ற பக்தர்களான T.R. ஸ்ரீனிவாசன், ரமணாச்ரமம் மணி, திரு. துவாரகநாத் ரெட்டி, மற்றும் சந்தியா போன்றவர்களை சந்தித்து விட்டு இரவு ஓட்டல் பிருந்தாவனில் தங்கினார். 

அடுத்தநாள் காலை, நாங்கள் மீண்டும் பகவானின் இல்லத்திற்கு சென்றோம். சுந்தரி மற்றும் அவரது மகன் அங்கிருந்தனர். அவர்கள் இந்த சாது வந்திருப்பதாக யோகியிடம் கூறினர். யோகி உடனே எங்களை உள்ளே அழைத்தார். சில பக்தர்கள் அங்கே கூடினர். அவர் எங்களிடம் தனக்கு சிறிது ஓய்வு வேண்டும் என்றும், எனவே தான் முழுமையான ஓய்வை ஒரு வாரத்திற்கு எடுத்துக்கொள்ள போவதாகவும் கூறி, “நான்  மிகச்சரியாகவே உள்ளேன்” என்றார். தன்னால் கோயிலுக்கு கூட போக முடியும் என்று கூறிவிட்டு, அனைவரையும் அவ்விடத்தை விட்டு கிளம்புமாறு சொல்லிவிட்டு, என்னையும் விவேக்கையும் அங்கு அமரச்சொல்லி, அவர் மெல்ல எழுந்து சுவற்றில் சாய்ந்து கொண்டே மெல்ல உள்ளே நடந்து சென்றார். சில நிமிடங்களுக்கு பிறகு அவர் ஒரு புதிய ஜிப்பா மற்றும் சால்வையை அணிந்து கொண்டு வெளியே வந்து சாதுவின் முன் அமர்ந்தார். சாதுவின் கரங்களைப் பற்றிக்கொண்டு தனது சட்டைப்பையில் இருந்து மூன்று ஐம்பது ரூபாய் நோட்டுக்களை எடுத்து அதனை சாதுவின் கரங்களில் திணித்து, “நீ இந்தப் பிச்சைக்காரனுக்காக சிறப்பான பணியை செய்தருக்கிறாய். இதனை நீ உன்னோடு வைத்துக்கொள். இந்தப்பிச்சைக்காரன் உன்னிடம் இருந்து பத்து புத்தகங்களை எடுத்துக்கொண்டுள்ளான்.“ இந்த சாது அந்தப்பணத்தைப் பெற தயக்கம் காட்டினான். ஆனால் யோகி மீண்டும், “நீ என் தந்தையின் பணியை செய்கிறாய்“ எனக்கூறி இந்த சாதுவின் கரங்களைப் பிடித்து சில நிமிடங்கள் தியானித்தார். “இந்தப் பிச்சைக்காரன் உன்னை அனுப்பி வைக்கிறான். நீ சென்று என் தந்தையின் பணியை செய்“ எனக் கட்டளையிட்டார். இந்த சாது பகவானிடம் தான் அவரது தேவைக்காக ஒரு காரினை கொண்டு வந்திருப்பதாக சொன்னான். பகவான் சாதுவிடம், “அது அவசியமில்லை. இந்தப்பிச்சைக்காரன் எங்கும் செல்லப்போவதில்லை“ என்றார். இந்த சாது தன்னை மாலைவரை தங்க அனுமதிக்குமாறு கூறினார். பகவான் இந்த சாதுவிற்கு ஒரு அதிர்ச்சியை தந்தார். சென்னையில் அன்று மாலை ஒரு கூட்டத்தில் இந்த சாது பேச வேண்டியிருப்பதை நினைவு கூர்ந்தார். இந்த சாது சென்னை பெரியார் நகரின் விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவில் பேச வேண்டியிருந்தது. பகவானுக்கு அது பற்றிய செய்தி முன்னமேயே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சாது பகவானிடம், தான் நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் நிகழ்வில் தன்னால் கலந்து கொள்ள முடியாத நிலைமை பற்றி தெரிவித்ததாகவும், அவர்களிடம் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள சொன்னதையும் பகிர்ந்தான். பகவான் சாதுவின் நிகழ்ச்சி ரத்தாவதை ஏற்கவில்லை. மேலும் யோகி மீண்டும் வலியுறுத்தி, ”உனது நேரம் அரிதானது. நீ எனது தந்தையின் பணியை செய்ய வேண்டும். நீ தேவையின்றி உனது நேரத்தை இங்கே வீணாக்கக்கூடாது. இந்தப்பிச்சைக்காரன் மிக நன்றாக இருக்கிறான். என் தந்தை என்னை கவனித்துக் கொள்கிறார். நீ இப்பொழுதே சென்னைக்கு போகலாம், எனது தந்தையின் பணியை தொடரலாம் “ என்றார். 

ரெஜினா சாரா ராயன்  என்ற ஆசிரியர் எழுதிய, “Only God – A Biography of Yogi Ramsuratkumar” (ஒரே கடவுள் – யோகி ராம்சுரத்குமார் சரிதம்) எனும் நூலில் இந்த நிகழ்வை பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

பணத்தை திரும்ப பெற மறுத்த யோகி தனது பக்தரிடம், “ரங்கராஜா நீ அந்த கூட்டத்தில் இன்று மாலை உரையாற்ற வேண்டும். அது இந்த பிச்சைக்காரனின் உத்தரவு. நேரம் இப்பொழுது என்ன? “ 

“ஒன்பது மணி பகவான்,“ ரங்கராஜன் பதிலளித்தார். 

“ நீ இப்பொழுது கிளம்பினால் சென்னைக்கு உரிய நேரத்திற்கு திரும்பிவிடலாம். சென்னை அடைய எவ்வளவு மணி நேரம் தேவை?“ 

“கார் மூலமாக சென்றால் மூன்று மணி நேரம்.“ ரங்கராஜன் கூறியதோடு, “நான் எனது மதிய உணவை முடித்துவிட்டு கிளம்புகிறேன்.“ 

யோகி ராம்சுரத்குமார் உடனடியான செயலை கேட்டார்: “இல்லை, இல்லை, இல்லை. நீ இப்பொழுதே கிளம்பு. நீ சென்னைக்கு செல். கூட்டத்தில் கலந்து கொள். அது என் தந்தையின் பணி. என் தந்தை அனைவரையும் பார்த்துக் கொள்வார்“ என்றார்.

எனவே ரங்கராஜன் சென்னைக்கு கிளம்பினான். அந்த கூட்டத்தில் உரையாற்றினான். அது ஆகஸ்ட் 22 , 1990. சாது ஆச்சரியப்படும் வகையில் அந்த விழா அமைப்பாளர்கள் அவருக்கு பதிலாக எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருந்ததே குருவின் கருணை. சரியான நேரத்திற்கு கூட்டத்திற்கு சென்று முக்கிய உரை ஆற்றப்பட்டது. 

இன்னொரு பக்தர்,  ரங்கராஜன் கடவுளின் குழந்தையை ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் விட்டுசென்றதை குறித்து சீற்றம் கொண்டார். ரங்கராஜன் அந்த பக்தரின் எதிர்வினையை கொண்டு ஒரு வேறுபாட்டை உணர்த்துகிறார். “நீ ஒரு பக்தன் “ என்று சாது அந்த மனிதனை குறிப்பிட்டு, “நீ குருவிற்காக எதையும் செய்யலாம். அவர் வாயில் உணவைத் திணிக்கலாம். நீ அவருடனான உனது நடத்தையில் சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் ஒரு சீடன் அப்படி இருக்க முடியாது. அவன் முழுமையாக தனது குருவிற்கு கீழ்படியவேண்டும்.” 

பகவானிடம் இருந்து கிளம்பும் முன் இந்த சாது பகவான் ஜெயந்திக்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் ராம்நாம் ஒருங்கிணைப்பாளர்களின் ஆகஸ்ட் – 25 ஆம் தேதி கூட்டம் பற்றி குறிப்பிட்டான். “உங்கள் அனைவருக்கும் என் தந்தையின் ஆசீர்வாதங்கள்“ என்றார்  பகவான். இந்த சாது தனது விரதம் சுமுகமாக முன்னேறுவது பற்றி குறிப்பிட, “என் தந்தை உன்னைப் பார்த்துக் கொள்வார்“ என்றார் யோகி. நிவேதிதா மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் பிற பணியாளர்கள் குறித்தும் விசாரித்த யோகி தனது ஆசியை இளையராஜா அவர்களுக்கும் தெரிவிக்கச் சொன்னார். சாதுவின் தண்டம் மற்றும் சிரட்டையை கையில் எடுத்து ஆசீர்வதித்ததோடு, சாது மற்றும் விவேக்கை வழி அனுப்பினார்.

வீடு திரும்பியதும், பல பக்தர்கள் சாதுவிடம் யோகியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். இளையராஜா சாதுவிடம், சாது பகவானின் அருகிலேயே இருந்திருக்க வேண்டும் என்று கூற, அதற்கு சாது பதிலளித்தார். இளையராஜா பகவானின் பக்தர் அவர் யோகியை கெஞ்சலாம், பகவானை வற்புறுத்தி உணவை உண்ணவைக்கலாம், சிகிச்சைக்கு வற்புறுத்தலாம். ஆனால் இந்த சாது ஒரு சீடன், அவன் குருவின் உத்தரவுக்கு ஒரு இராணுவ வீரனைப்போல் கீழ்படிதல் வேண்டும். ஒரு குரு, “திரும்பி நட“ என உத்தரவிட்டால் சீடன் அதை பின்பற்ற வேண்டும் என்று கூற, இளையராஜா அதனை ஏற்று, திருவண்ணாமலைக்கு உடனே புறப்படுகிறேன் என்றார். 

ஆகஸ்ட் 24 ஆம் தேதி ராம்நாம் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்திற்கு முன்பு சாதுவிற்கு ஒரு சேதி கிடைத்தது. இளையராஜா பகவானின் இல்லத்திற்கு சென்றார் என்றும், பகவான் “க்ருபா” என்ற துவாரகநாத் ரெட்டி இல்லத்திற்கு ஓய்விற்கும், சிகிச்சைக்கும் ஆக மாற்றப்பட்டார் என்பதும் அந்த சேதி. ராம்நாம் பிரச்சாரத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. அனைத்து முக்கிய பணியாளர்களும் அதில் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் – 31 அன்று இந்த சாது பகவானுக்கு ஒரு விரிவான கடிதம் ஒன்றை எழுதினான்: 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

ஆகஸ்ட் 25 அன்று அகில உலக ராம்நாம் யக்ஞத்தின் அமைப்பாளர்கள் கூட்டம் உங்கள் கருணையாலும், ஆசியாலும் வெற்றிகரமாக நடைப்பெற்றது. நாங்கள் பூஜ்ய மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் இலக்கினை துரிதமாக அடைய எங்கள் அகில உலக பிரச்சாரத்தை விரிவாக்கம் செய்யவும், பிரச்சாரத்தை விரைவாக்கவும் சில முக்கிய முடிவுகளை எடுத்தோம். நாங்கள் ஒவ்வொரு மாகாணத்தின் ராம்நாம் பிரச்சார மையத்திற்கும் ஒரு இலக்கினை நிர்ணயித்து அதனை கண்காணிப்பதை ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைத்துள்ளோம். அத்துடன் ஒவ்வொரு தனித்தனி நபர்களுக்கும் நாங்கள் ஒரு வேண்டுகோளை அனுப்பியிருக்கிறோம். அதில் ராமநாமத்தை அனைவரையும் அதிகரிக்கும்படி கூறியிருக்கிறோம். அதன்மூலம் 40 கோடி இலக்கை பிரதி மாதம் அடையலாம் என்று முடிவு செய்தோம். இறுதியாக பிரச்சாரத்திற்குரிய துண்டுப்பிரசுரம் மற்றும் பிராந்திய மொழிகளில் பிரச்சாரத்திற்கான பொருட்களை ஏற்பாடு செய்வது குறித்து முடிவு செய்தோம். உங்கள் கருணையால் எங்களது முயற்சிகள் வெற்றியடையும் என்றே நம்புகிறோம். 

லக்னோவின் சுவாமி ராம் தீர்த்தா ப்ரதிஷ்டான் இந்த சாதுவை ராம் தீர்த்தா ஜெயந்தி விழாவில் பேச இந்த வருடம் அக்டோபர் 21, 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் அழைத்திருக்கின்றனர். நாங்கள் உங்கள் அனுமதியையும், ஆசியையும் இந்த விழாவில் பங்குபெற கோருகிறோம். ப்ரதிஷ்டானின் நிர்வாகிகளும், பக்தர்களும் நமது ராம்நாம் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த பயணம் எங்களுக்கு வட இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவும் நமது பணியை வட இந்தியாவில் பரப்பவும் வாய்ப்பாக அமையும். 

டிசம்பர் 1 முதல் 3 வரை யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி சென்னையில் கொண்டாட ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்படுகின்றன. ஹோமம், பூஜைகள், சொற்பொழிவுகள் போன்றவை முதல் நாளிலும், வேதங்களைப் பற்றிய கருத்தரங்கு இரண்டாம் நாளிலும், அகில உலக ராம்நாம் மாநாடு மூன்றாவது நாளிலும் நடைபெறும். திருச்சூரைச் சேர்ந்த டாக்டர். T.I. ராதாகிருஷ்ணன் இரண்டாம் நாளில் பங்குப்பெற்று வேதச்சடங்குகளின் அறிவியல் முக்கியத்துவம் குறித்த விவாதங்களை அவர் மேற்கொள்வார். கொண்டாட்டங்கள் ராம்நாம் பிரச்சாரத்தை பெரிய அளவில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விரிவாக்கம் செய்ய ஒரு வாய்ப்பைத் தரும். 

திரு. பிரேமானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த குமாரி ஜீனா ரோஜர்ஸ் தங்களின் ஆசிகளையும் வாழ்த்தையும் ஆசிரமத்தின் முதலாமாண்டு விழாவிற்கு கேட்டிருக்கின்றனர். உங்கள் சார்பில் நாங்கள் ஓர் பதிலை அனுப்பியிருக்கிறோம். அவர்களின் கடிதம் மற்றும் பதிலின் நகலை இத்துடன் இணைத்துள்ளோம். 

பிரான்ஸை சேர்ந்த திரு. கிருஷ்ணா கார்ஸலே சோவாசிங், மலேசியாவின் திரு. பத்மநாதா மற்றும் மும்பையைச் சேர்ந்த செல்வி. ரஜினி பாக்வே போன்றோர் தங்களின் நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். 

நாங்கள் திரு. T.P.M. ஞானப்பிரகாசத்தை மீண்டும் எங்களை செப்டம்பர் முதல் வாரத்தில் சந்திக்குமாறு கடிதம் எழுதியிருக்கிறோம். அவரிடம் இதுவரை கிடைத்த விற்பனைத் தொகையை மற்றும் நூலின் பிரதிகளை கொடுப்போம். அவரை சந்தித்தப்பின் உங்களுக்கு எழுதுகிறோம். 

சத்சங்கத்தில் தினமும் ஆரத்தியுடன் நிறைவடையும்போது உங்கள் புனிதமான பாதங்களில் நாங்கள் வைக்கும் ஒரே பிரார்த்தனை தங்களின் கருணையானது எப்போதும் எங்களுக்கு வேண்டும் என்பதாகும் நாங்கள் எடுத்து செய்கின்ற செயல்களின் மீது உங்கள் ஆசியும், கருணையும், வழிக்காட்டுதல்களும் தேவை. யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்க கூறினர். சிரஞ்சீவி. விவேக், குமாரி  நிவேதிதா மற்றும் திருமதி பாரதி தங்கள் நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் , 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி. “

செப்டம்பர் – 5 அன்று பரிமேலழகன் இந்த சாதுவை தொலைபேசியில் அழைத்து பகவான் தனது சன்னதி தெரு இல்லத்திற்கு  திரும்பி வந்து விட்டதாக கூறினார். ஜஸ்டிஸ் கோவிந்தராஜன் அவர்களும் தொலைபேசியில் அழைத்தார். செப்டம்பர் – 14 அன்று A.V. ராமமூர்த்தியின் நண்பரான கிருஷ்ணன் என்பவர் காந்தம் பொருத்தப்பட்ட யோகியின் புகைப்பட வட்டத்தகடுகள்  ராம்நாம் சொல்லும் பக்தர்களுக்கு வழங்க கொண்டுவந்தார். சென்னை பெசன்ட் நகரில் 16 ஆம் தேதி போதேந்திர சுவாமி அவர்களின் ஆராதனா விழாவில், ராம்நாம் தாரக மந்திரத்தின் சிறப்புகளைப்பற்றி இந்த சாது பேசினார். செப்டம்பரில் 18 ல் மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் ஜெயந்தி அகண்ட ராமநாம ஜபத்தோடு நடைப்பெற்றது பெருமளவில் பக்தர்கள் அதில் கலந்து கொண்டனர். அடுத்தநாள் இந்த சாது பூஜ்ய மாதாஜி ஞானேஸ்வரி அவர்களின் 60 – வது பிறந்தநாள் விழாவிற்கு தனது மரியாதையை ஒரு சேதி மூலம் அனுப்பினான். பல இடங்களில் சிறப்பு சத்சங்கங்கள் நடைபெற்றன. காணிமடத்தின் யோகி ராம்சுரத்குமார் மந்திராலாயத்தின் பொன். காமராஜ், சுவாமி தபஸ்யானந்தா உடன், சாதுவை காண வந்தார். செப்டம்பர் 26 ல் சாது மீண்டும் தனது குருவிற்கு கடிதம் ஒன்றை  எழுதி, தனது 55 நாள் விரதம் விஜயதசமி அன்று முடிவடையும் பொழுது ஆசி வேண்டினான்:  

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

உங்களின் குறைவற்ற ஆசியாலும், கருணையாலும் இந்த சாது தனது 55 வது நாள் உபவாஸத்தை விஜயதசமி நாளில் 29-09-1990 ல் முடிக்கிறான். எனது வாழ்வில் எந்த ஒரு கணமும் உங்கள் நாமத்தையோ, உருவத்தையோ மறக்காமல் இந்த தாழ்மையான வேலைக்காரன் இதயத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என்ற வரத்தை நீங்கள் தந்து ஆசீர்வதியுங்கள். 

திரு. T.P.M. ஞானப்பிரகாசம் என்னை நேற்று  சந்தித்தார். அவருக்கு இன்னொரு 300 ரூபாய் மற்றும் 10 பிரதிகள் புத்தகமும் கொடுத்தோம். அவர் தனது நாளை எங்களோடு செலவழித்தார். நாங்கள் அவருக்கு எங்களாலான உதவிகளை செய்ய முயற்சிக்கிறோம். 

ராம் தீர்த்தா ப்ரதிஷ்டான், இந்த சாது, சுவாமி ராம் தீர்த்தா ஜெயந்தி விழாவில் அக்டோபர் 21, 22 மற்றும் 23 அன்று பங்கேற்பதற்கான  தங்களது அழைப்பை உறுதி செய்துவிட்டனர். பல ராம் நாம் பக்தர்கள், சாதுக்கள், மஹாத்மாக்கள் இதில் பங்கு பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் கலந்து கொள்வது நமது ராமநாம மகாயக்ஞத்தில் பெருமளவில் உதவும் என்பதே விழா அமைப்பாளர்களின் எண்ணம். உங்கள் ஆசியோடும், அனுமதியோடும் இந்த சாது இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள விரும்புகிறான். இந்த பயணத்துடன் சில முக்கிய இடங்களான பனாரஸ், பிரயாக், மற்றும் பிற வட இந்திய பகுதிகளுக்கும் செல்ல இந்த சாது விரும்புகிறான். 

தீவிரமாக செயல்பட்டு, டிசம்பர் 1 முதல் 3 வரை நடக்க இருக்கும்  மூன்றுநாள் யோகி ராம்சுரத்குமார்  ஜெயந்தி விழாவிற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறோம். ஆனந்தாஸ்ரமத்தை சேர்ந்த சுவாமி சச்சிதானந்தர் எங்களின் ராம்நாம் யக்ஞத்தின் பிரச்சார மையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் நடப்பதை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். உங்களைக் குறித்தும் அவர் விசாரித்து இருக்கிறார். லக்னோவின் ராம்தீர்த்தா ப்ரதிஷ்டான் தலைவர் திரு. அயோத்யா நாத் மற்றும் செயலாளர் திரு. ஆர்.கே.லால், புதுடெல்லியில் பாரத் சேவாஸ்ரம் சங்கத்தின் சுவாமி கேசவானந்த்ஜி ஆகியோர் தங்களின் புனிதமான ஆசியை வேண்டி தங்களின் வணக்கங்களை தெரிவித்துள்ளனர். 

விவேக், நிவேதிதா , பாரதி, மற்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் தங்களின் நமஸ்காரத்தை உங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்”

செப்டம்பர் 29 அன்று மங்களகரமான விஜயதசமி நாளில் சாது தனது 55 வது நாள் விரதத்தை பகவானின் பிரார்த்தனையுடன் முடித்தார். சௌ. விஜயலட்சுமி IRS என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அக்டோபர் – 1 அன்று திருவண்ணாமலை செல்ல இருப்பதாக கூறினார். அவர், அக்டோபர் – 1 அன்று, விவேக் மற்றுமொரு பக்தர் ஜெயராமன் ஆகியோருடன் பகவானின் இல்லத்திற்கு காலையில் சென்றனர். விவேக் பகவானிடம் சாதுவின் லக்னோ பயணம் குறித்து பேசினான். பகவான் தனது அனுமதியையும், ஆசியையும் வழங்கினார். விவேக் திரும்பி வந்தவுடன், சாதுவின் லக்னோ பயணத்திற்கு அக்டோபர் 15 – க்கான பயணச்சீட்டினை பதிவு செய்தான். யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினர் யோகியின் திருவுருவப்படத்தை திருவல்லிக்கேணியின் வீதிகளில் உலா வர ஏற்பாடு செய்தனர். இளையராஜா தொலைபேசியில் தொடர்பு கொண்டு யோகி ராம்சுரத்குமார் இல்லத்திற்கு சென்றிருந்தது குறித்து கூறினார். இந்த சாது அக்டோபர் 10 அன்று, பகவானுக்கு, தனது வடநாட்டு பயணத்திற்கு அனுமதி தந்ததற்கு நன்றி தெரிவித்தும், தனது பிற நிகழ்ச்சிகள் குறித்தும், மற்றும் பகவானின் இல்லத்திற்கு சாது அக்டோபர் 13 அன்று வர இருப்பது குறித்தும் கடிதம் எழுதினான்: 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

21 முதல் 23 – 10 – 1990 வரை லக்னோவில் நடக்க இருக்கும்  ராம் தீர்த்த ப்ரதிஷ்டான் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ள இந்த சாதுவிற்கு உங்கள் அனுமதியையும், ஆசியையும் வழங்கியமைக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். 15-10-1990 அன்று இரவு 11.50 மணிக்கு சென்னையில் இருந்து லக்னோ கிளம்பும் லக்னோ எக்ஸ்பிரஸில் எனது பயணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழா முடிந்தப்பின் இந்த சாது ப்ரயாக், காசி, மற்றும் பிற இடங்களுக்கு பயணித்து விட்டு, ஜாம்ஷெட்பூர் பயணிப்பான். ஜாம்ஷெட்பூர்  கத்மாவில் இருக்கும் ஸ்ரீ ராம பாதுகா ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளரான திரு. T. முத்துக்கிருஷ்ணன் சில காலங்களுக்கு முன், 1008 கோடி லிகித ராமநாமத்தை அவர்களின், ‘ஸ்ரீ சஹஸ்ரகோடி ஸ்ரீ ராமநாம பாதுகா ப்ரதிஷ்டா’ வைபவத்திற்கு பெற்று செல்ல சென்னைக்கு வந்திருந்தார்.                                   மேலும் ராமநாம பிரச்சாரத்தை கிழக்கில் நடத்த முழு ஒத்துழைப்பை தர உறுதியும் அளித்தார். இந்த சாதுவும் சென்னை திரும்பும் முன் கல்கத்தா செல்ல விருப்பம் கொண்டுள்ளான், தமிழ்நாட்டில் இந்த சாதுவின் சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடவேண்டும். 

“ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” மூன்றாவது பதிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் தயார் ஆகும். இது லக்னோவின் பக்தர்களுக்கு தீபாவளி நாளில் பரிசளிக்கப்படும். இந்த தாழ்மையான சீடன் 13 – 10 – 1990 அன்று புத்தகத்தின் முதல் பிரதியை தங்களின் பாதங்களில் வைக்கவும், உங்களின் குறைவற்ற ஆசியை இந்த சாதுவின் வடக்கு நோக்கிய பயணத்திற்கு பெறவும் தங்களை காண வருகிறேன். இந்த தாழ்மையான வேலைக்காரனை தயை கூர்ந்து ஆசீர்வதியுங்கள். யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தியை பெரும் கொண்ட்டமாக  டிசம்பர் 1 முதல் 3 வரை 1990 ல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்”

ஒரு மகா யோகியின் தரிசனங்கள் என்ற நூலின் பிரதிகள் அக்டோபர் 13 ஆம் தேதி மதியம் அச்சகத்தில் இருந்து வந்து சேர்ந்தது. இந்த சாது திருவண்ணாமலைக்கு மாலையில் விவேக் மற்றும் நிவேதிதா உடன் கிளம்பி இரவு 10 மணிக்கு பகவானின் இல்லத்தை அடைந்தான். பகவான் வராண்டாவில் படுத்து இருந்தார். பகவானின் உதவியாளர் பகவானை எழுப்பி, “சுவாமி சாது ரங்கராஜன் வந்து இருக்கிறார்“ என்று கூறினார். பகவான் எழுந்து எங்களை உள்ளே வரச்சொன்னார். இந்த சாது பகவானிடம் இரவில் நேரம் தவறி யோகியை தொந்தரவு செய்தமைக்கு மன்னிக்குமாறு கோரினான். அச்சகத்தில் இருந்து புத்தகம் தாமதமாக வந்தமையால் தாங்கள் இந்த நேரத்தில் வந்ததாக கூறினான். ஆனால் யோகி அது குறித்து கவலை கொள்ளாமல் எங்களை அவர்முன் அமரச்சொன்னார். பின்னர் அவர் எழுந்து உள்ளே சென்று பெரியசாமி தூரன் அவர்களின் பாடல்கள் அடங்கிய புத்தகத்தின் இரண்டு பிரதிகளை  கொண்டுவந்தார். பகவான் சாதுவிடம் இந்த புத்தகம் உனக்கு கிடைத்ததா என்று கேட்டார். சாது இல்லையென பதில் அளித்தான். யோகி சாதுவிற்கும், நிவேதிதாவிற்கும் ஒரு புத்தகத்தை பரிசளித்தார். அவர் யோகி ராம்சுரத்குமார் நாமத்தை பாடத்துவங்கினார். நாங்கள் அவரோடு இணைந்தோம். சிறிதுநேரம் கழித்து அவர் தரையில் படுத்து ஒய்வெடுக்கத் துவங்கினார். இந்த சாது உதவியாளர் இடமிருந்து விசிறியை வாங்கி அவருக்கு விசிறிவிடத்துவங்கினான். அவர் 11 மணிக்கு ஒருமுறை எழுந்தார். மீண்டும் தூங்கத்துவங்கினார். மீண்டும் அவர் சிறிது நேரம் கழித்து எழுந்து எங்களிடம் நேரம் என்னவென்று கேட்டார். நாங்கள் பதிலளித்தபோது, அவர் ஆச்சரியத்துடன், “ஓ ! இது 12.10 ( A.M)“ என்றார் .இந்த சாது பல விஷயங்களை பேச வந்ததாகவும் அவன் காலையில் வருவதாகவும் கூறினான். யோகி யாரோ காலையில் வர இருப்பதாகவும் அதனால் நாம் இப்போதே பேசுவோம் என்றும் கூறினார். 

சாது யோகியிடம் தான் 15 ஆம் தேதி லக்னோ கிளம்ப இருப்பதாக கூறினான். பகவான் பயணத் திட்டம் குறித்து கேட்டார். சாது அதற்கு பதிலளித்தார்.  இந்த சாது “லக்னோவில் இருந்து நான் பிரயாகைக்கு செல்ல இருக்கிறேன். அங்கே எனது அன்னையின் அஸ்தியை கரைக்க இருக்கிறேன்“ என்றான். பிரயாகைக்கு பிறகு தான் பனாரஸ், ஜாம்ஷெட்பூர் மற்றும் கல்கத்தாவில் ராம்நாம் பணிக்கு செல்ல இருப்பதாக கூறினான். யோகி ராம் தீர்த்த ப்ரதிஷ்டான் நிகழ்ச்சி குறித்து கேட்டார். மற்றும் ஜாம்ஷெட்பூர், கல்கத்தாவின் அமைப்பாளர்கள் குறித்து கேட்டார். இந்த சாது,  ஜாம்ஷெட்பூர் பாதுகா ஆசிரமம் குறித்தும், கல்கத்தாவின் கணேசன் குறித்தும் குறிப்பிட்டார். யோகி பயண நிகழ்ச்சியை ஆசீர்வதித்தார். இந்த சாது பகவானிடம் தான் அயோத்யா பயணிக்கலாமா எனக்கேட்டார் . யோகி அதற்கு, “அவ்வப்போது தேவைகள் ஏற்படுகையில் தந்தை உனக்கு வழிகாட்டுவார். உனது பயணம் பெரும் வெற்றியடையும்” என்றார். யோகி தனது ஆசியை அயோத்யாநாத், R.K.லால் மற்றும் சுவாமி ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானுக்கும் வழங்கினார். சாது யோகியிடம் ஆவடியில் CVRDE ல் பக்தர்கள் பகவானின் ஜெயந்திக்கு செய்திருந்த ஏற்பாடுகளை குறித்து கூறினான். யோகி, “ டிசம்பர் 1 முதல் 3 வரையான ஜெயந்தி கொண்டாட்டங்கள் பெரியதாக உனக்கு அமையும்“  என்றார். பின்னர் சாது பகவானிடம் ராம்நாம் பிரச்சார பயணத்தை சென்னை முதல் கன்னியாக்குமரி வரை,  திரு.ARPN. ராஜமாணிக்கம் அவர்களின் உதவியோடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறித்தும், அவரும் இதில் இணைவார் என எதிர்பார்ப்பதாகவும், ஓம்பிரகாஷ் யோகினி குமாரக்கோவிலுக்கு அழைத்த அழைப்பிதழ் குறித்தும் சாது யோகியிடம் குறிப்பிட்டார். யோகி ஒரு நிமிடம் யோசித்தார். பின்னர், “நீ சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம். நீ அனைத்து இடங்களுக்கும் செல்லலாம். ஆனால் நீ திருவண்ணாமலையை சுற்றுப்பயணத்தில்  இருந்து விட்டுவிட வேண்டும். நீ இங்கு தனியாக, சுற்றுப்பயணத்திற்குப் பின்னர், வரலாம். சுற்றுப்பயணத்தில் அல்ல“ எனக்கூறி பகவான் தன் ஆசியை ராம்நாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் பொழிந்தார். பின்னர் யோகி, “நாம் சிறந்த முறையில் நேரத்தை செலவழித்தோம். எனவே நாளை காலை மீண்டும் வரவேண்டிய அவசியமில்லை“ எனக்கூறி சாதுவை அவரது பயண நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஆசீர்வதித்தார். சாது பகவானிடம் நிவேதிதா பெற்றதுபோல் விவேக் ஒரு புத்தக பிரதியை பெறவில்லை என்றார். பகவான் உள்ளே சென்று பார்த்தார். சிறிது நேரம் யோசித்து, “உங்களிடம் இரண்டு இருக்கிறது. ஒன்றை விவேக் இடம் பகிரலாம்“ என்றார். பின்னர் நாங்கள் அனைவரும் எழுந்தோம். பகவான் விவேக், நிவேதிதாவை ஆசீர்வதித்து அவர்களது தேர்வு குறித்து விசாரித்தார். யோகி அவர்களிடம் நீங்கள் தேர்வினை சிறப்பாக செய்வீர்கள் என்றார். யோகி சாதுவின் தண்டம் மற்றும் பிக்ஷாப்பாத்திரத்தை எடுத்து ஆசீர்வதித்து அவரிடம் கொடுத்தார். வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தார். நாங்கள் அவரது இல்லத்தை விட்டு வெளியே வந்து முக்கிய சாலையை அடையும் போது, பின்னிரவு பேருந்து புறப்பட தயாராக இருந்தது. நாங்கள் அந்த பேருந்தைப் பிடித்து சென்னைக்கு அதிகாலை 5.30 க்கு வந்து சேர்ந்தோம். 

அத்தியாயம் 2.21 

உ.பி.யின்  தீயில் இருந்து சீடனை பாதுகாத்த குரு

குருவின் இல்லத்தில் இருந்து அதிகாலையில் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 14 1990 ல் திரும்பிய சாது தனது குருவின் சொந்த மாநிலமான உத்திர பிரதேசத்திற்கு செல்வதற்கான பயண ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினான். இந்த சாது யோகியின் முக்கியமான பக்தர்களான திரு. இளையராஜா, விஜயலட்சுமி IRS, மற்றும் திரு. ராஜமாணிக்கம் நாடார் ஆகியோரிடம் இந்த சாதுவின் வடக்கிந்திய பயணம் குறித்து கூறினார். சாது சுவாமி சச்சிதானந்தர்க்கும் அவரது ஆசியை வேண்டி கடிதம் எழுதினார். ராம்நாம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் கடிதம் எழுதியதோடு, ராம்நாம் இயக்கத்தின் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி துண்டுப்பிரசுரங்கள் அவசரமாக தயாரிக்கப்பட்டன. அக்டோபர் 15 அன்று மாலையில் லக்னோ எக்ஸ்பிரஸ் மூலம் லக்னோ செல்லும் சாதுவை, யோகியின் பக்தர்கள் பார்த்து வழியனுப்பினா். இந்த சாது ரயிலில், அன்னை மாயி யோகி ராம்சுரத்குமார், மற்றும் நமது பணிகள் பற்றி அறிய ஆவல் கொண்ட சில புதிய பக்தர்களை சந்தித்தார். அந்தப்பயணமே யோகியின் கருணையின் விளையாடலாகவே அமைந்தது. அக்டோபர் 17 ஆம் தேதி இந்த சாது போபால் ரயில் நிலையத்தில் தனது தண்டம் மற்றும் பிச்சை பாத்திரத்துடன் இறங்கி காபி சாப்பிட ப்ளாட்பார்மில் உள்ள டீக்கடைக்கு சென்றான். அங்கே அன்னை மாயியை போன்ற ஒரு வயதான பெண்மணி அனைவரிடமும் கையில் பிச்சைப்பாத்திரத்துடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இந்த சாது 20 பைசாவை தனது பர்ஸில் இருந்து எடுத்து அவளது பாத்திரத்தில் போட்டான். அவள் இந்த சாதுவின் முகத்தை பார்த்துவிட்டு தனது பாத்திரத்தில் இருந்து 25 பைசாவை எடுத்து இந்த சாது கரங்களில்! வைத்திருந்த பாத்திரத்தில் போட்டுவிட்டு, ஹம் சந்த் லோகோன் ஸே பைசா நஹி லேதே, ஆசீர்வாத் மாங்தே – “நாங்கள் சாதுக்களிடம் இருந்து காசை பெறுவதில்லை. நாங்கள் அவர்களின் ஆசீர்வாதங்களையே பிச்சையாக பெறுவோம்” என்று கூறிவிட்டு நடந்து சென்றார். 

திருமதி. டிசோசா என்ற ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்மணி எங்களோடு கான்பூர் வரை பயணித்தார். தனது இடத்தில் இறங்கும் முன் இந்த சாதுவை  அடிபணிந்து வணங்கினார். லக்னோவை அடைந்தப்பின் இந்த சாதுவை திரு. சிங்கால் என்ற சுவாமி ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானின் செயலாளர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் வரவேற்று அவர்கள் மார்வாரி காலி என்ற இடத்தில் இருக்கும் ப்ரதிஷ்டானின் கார்யலயத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அக்டோபர் 19 வெள்ளிக்கிழமை அன்று சுவாமி ராம் தீர்த்தா அவர்களின் ஜெயந்தி விழாவை ஒட்டி சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி ராம் தீர்த்தா அவர்களுக்கு அஞ்சலியை செலுத்திவிட்டு, யோகி ராம்சுரத்குமார் குறித்தும் பேசினேன். “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” என்ற சிறப்பு பதிப்பு அந்த கூட்டத்தில் குருவின் ஆசியோடு வெளியிடப்பட்டது. கூட்டத்தில் இருந்த பலர் இந்த சாதுவுடன் நள்ளிரவு வரை பேசி, உலக அமைதிக்கான ராம்நாம் இயக்கத்தை முன்னெடுத்து பரப்ப முன்வந்தனர். சுவாமி ராம் தீர்த்தரின் பல முக்கிய பக்தர்கள், விருந்தினர்களாக வந்திருந்த பெரும் துறவியர்கள் மற்றும் ப்ரதிஷ்டானின் தலைவர் திரு. அயோத்யாநாத்ஜி அடுத்த சில நாட்கள் எங்களோடு தங்கினர். திரு. அயோத்யாநாத்ஜி அவர்கள் பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்தும் அவரது சொந்த கிராமம் குறித்தும் அறிந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 20 அன்று இந்த சாது ஒரு பொதுக் கூட்டத்தில்                                                  ஹிந்துத்துவத்தின் பெருமை, ஹிந்து ராஷ்டிரம், மற்றும் பகவான் குறித்தும் பேசினேன். இந்திய அரசின் முன்னாள் கல்வித்துறை ராஜாங்க அமைச்சர் மற்றும் கான்பூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான திரு. பக்த் தர்சன்,, இந்த சாதுவின் ஆங்கில உரையை ஹிந்தியில் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் நன்மைக்காக மொழிப்பெயர்ப்பு செய்தார்.. இது அவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திங்கள்கிழமை அன்று காலையில் ஒரு கலந்துரையாடல்  “ஞானம், பக்தி மற்றும் கர்மா“ என்பது பற்றி நடந்தது. இந்த சாது அதன் முடிவில் யோகி ராம்சுரத்குமார் குறித்து குறிப்பிட்டு அனைவரையும் ஈர்த்தான். சாது, 22 – 10 – 1990 அன்று, பகவானுக்கு இந்த நிகழ்வுகள் குறித்து விவரித்து கடிதம் ஒன்றை எழுதினான்:

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

உங்களின் ஆசியாலும் , கருணையாலும் ராம தீர்த்தா ஜெயந்தி கொண்டாட்டங்கள் பெரிய அளவில் துவங்கின. பல பக்தர்களும், சாதுக்களும் வடஇந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொண்டனர். சென்ற மாலையில் இந்த சாது ஹிந்து பாரம்பர்யம் மற்றும் ஆன்மீக தேசியம் மற்றும் உங்கள் புனிதத்தன்மை குறித்து பேசினான். இந்த உயர்ந்த பார்வையாளர்கள் ஆழமான ஆவலோடு கேட்டனர். அவர்களின் நன்மைக்காக எனது ஆங்கில உரையை, இந்திய அரசின் முன்னால் கல்வித்துறை  ராஜாங்க அமைச்சர் மற்றும் கான்பூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், திரு. பக்த் தர்சன், ஹிந்தியில் மொழிமாற்றம் செய்தார். நமது பணிகள் குறித்த துண்டுப்பிரசுரங்கள் பார்வையாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. மேலும் காலையில் ஒரு தனித்த கலந்துரையாடல் நடக்க இருப்பதும் அங்கே அறிவிக்கப்பட்டது. 

காலையில் கலந்துரையாடலின் தலைமை இந்த சாதுவால் ஏற்கப்பட்டது.. பல சாதுக்களும், பக்தர்களும் இதில் பங்கு கொண்டனர். இறுதியாக கலந்துரையாடலை நிறைவு செய்யும் விதமாக, மையக்கருத்தான “ஞானம், பக்தி மற்றும் கர்மாவின் தொகுப்பு“ பற்றி பேசுகையில் நான் தங்களின் மகிமை மிக்க வாழ்க்கையை ஒரு எடுத்துக்காட்டாகவும், தத்துவார்த்தமாகவும் அங்கே பேசினேன். அது பங்குப்பெற்ற பலரால் பாராட்டப்பட்டது. இப்பொழுது அவர்கள் என்னை அவர்களின் சொந்த ஊர்களுக்கு வரச்சொல்லி உங்களின் சேதியான ராம்நாம் ஜபம் குறித்து பரப்ப வேண்டுகின்றனர். 

விழா முடிந்தவுடன் உடனடியாக இந்த சாது பிரயாகைக்கு கிளம்புகிறான். என்னோடு ப்ரதிஷ்டானின் பொது செயலாளர், திரு. R.K. லால், வருகின்றார். நாங்கள் பனாரஸிற்கும் செல்ல இருக்கிறோம். இந்த சாது, ஜாம்ஷெட்பூர் மற்றும் கல்கத்தா நிகழ்ச்சி குறித்த எந்த உறுதியான தகவலையும் பெறவில்லை. மேலும் பீகாரைச் சேர்ந்த நண்பர்கள் இங்கே ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் இருந்தால் சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம் என்கின்றனர். அவர்களுக்கு யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி டிசம்பரில் முடிந்த பின்னரே நேரத்தை என்னால் ஒதுக்க இயலும். எப்படியும் ஒரிரு நாட்களில் எனது அடுத்த நிகழ்ச்சிகள்  குறித்து முடிவு செய்து விடுவேன். ஆங்கில நாட்காட்டியின்படி இன்று எனக்கு பிறந்தநாள் .எனக்கு ஐம்பது வயது நிறைகிறது. நான் உங்களின் ஆசியை வேண்டுகிறேன். 

அன்புடன், 

சாது ரங்கராஜன்.” 

ராம் தீர்த்தா ஜெயந்தியின் இரண்டாம் நாளான 22 ஆம் தேதி மாலையில் இந்த சாது “நாட்டின் விழிப்புணர்வு“ என்ற உரையை ஆற்றினான். அது ஹிந்தியில் திரு. பக்த் தர்சன் என்பவரால் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது. பிற முக்கிய சாதுக்களும் அந்த விழாவில் பங்கு பெற்றனர். 23 ஆம் தேதி மாலையில் இந்த சாது  “ஹிந்து வாழ்க்கை வழிமுறையும் சேவையின் லட்சியமும்“ என்ற உரை நிகழ்த்தினார். அதையும் திரு. பக்த் தர்சன் மொழிபெயர்த்தார். உரைக்குப்பின் சுவாமி ராம் தீர்த்தரின் உரைகளை நாங்கள் ஒரு சிறிய புத்தகமாக பார்வையாளர்களுக்கு பிரசாதமாக வழங்கினோம். 24 ஆம் தேதி மாலை சிறப்பு ராம்நாம் சத்சங்கம் ஒரு பக்தரின் வீட்டில் நடைப்பெற்றது. 

பகவான் நம்ப முடியாத வழிகளில் தனது லீலையை புரிவார். அக்டோபர் 26 அன்று காலையில் இந்த சாது திரு. R.K. லால் உடன் பிரயாகைக்கு பஸ் பிடித்தார். அந்த நேரத்தில் மொத்த உத்திர பிரதேசமும் பலவிதமான பிரச்சனைகளில் சிக்கி தவித்தது. முதலமைச்சர் முலயாம் சிங் யாதவ் தலைமையிலான அரசு சாதுக்கள், துறவிகள் மற்றும் முனிவர்கள் மீது வன்முறை தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதுக்களும் சந்நியாசிகளும் பஞ்சகோஷி பரிக்ரமாவை அயோத்தியில் நடத்த கரசேவகர்களாக உ.பி.யில் குவிந்திருந்தனர். இதற்கு சில நாட்களுக்கு முன்னதாகத்தான் ராமஜென்ம பூமி ரதயாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்து இறுதியாக உ.பி.யில் நுழைந்தது. பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான திரு. எல்.கே. அத்வானி உ.பி யில் நுழைந்த உடன் அவரை போலீஸ் தடுத்து நிறுத்தி தங்களது காவலில் எடுத்தனர். உ.பி. யின் பல்வேறு இடங்களில் சாதுக்கள், முனிவர்கள், துறவிகள் அயோத்தியை நோக்கி  பேருந்துகள், ரயில்கள், மற்றும் பிற வாகனங்கள் மூலம் பயணிக்கும் அனைவரும் ஆங்காங்கே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சாது பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ரே பரேலி அருகே வரும்போது காவல்துறை பேருந்தை நிறுத்தி சோதனை செய்து, அதில் காவி உடையில் இருந்த இந்த சாதுவை காவலில் எடுத்தனர். அரசு உத்தரவின்படி அந்த மாநிலத்தில் நுழையும் எந்த சாதுவும், சன்னியாசியும் கைது செய்யப்பட வேண்டும் என்பதே காவல்துறையின் பணியாக இருந்தது. திரு. R.K.லால் உ.பி அரசின் ஒரு முன்னாள் அதிகாரியாக இருந்தமையால் அவர் காவல்துறை அதிகாரிகளிடம் இந்த சாது தமிழ்நாட்டில் இருந்து சுவாமி ராம் தீர்த்தா அவர்களின் ஜெயந்தி விழாவிற்காக தங்களின் அழைப்பின் பேரில் வந்திருப்பதாகவும், மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் எந்த நிகழ்விற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார். மேலும் இந்த சாதுவை கைது செய்யக்கூடாது என சக பயணிகளும் காவல் அதிகாரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப, காவல் அதிகாரி கையறுநிலையில் பேருந்து பிரயாகையை அடைந்தவுடன் இந்த சாது கைது செய்யப்படுவார் என்று எச்சரித்தார். பேருந்து பிரயாகைக்குள் நுழைந்தபோது வலது பக்கத்தில் ஒரு பங்களா முன் நிறுத்தப்பட்டது. அந்த பங்களா ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திரு்.T.S. சின்ஹா அவர்களுடையதாகும். திரு. சின்ஹா, திரு. லால் அவர்களின் மகன் திரு.விரேந்திராவின்  மாமனார் ஆவார். அவர் எங்களை அன்போடு வரவேற்றார். சின்ஹா போலீஸ்காரனிடம் சாதுவை தனது பாதுகாப்பில் விட்டுவிட்டு செல்லுமாறு கூறினார். போலீஸ்காரன் அதனை ஏற்று கிளம்பினார். பின்னர் சின்ஹா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சாதுவின் பாதங்களில் பணிந்தனர். அவர் நகைச்சுவையாக “உங்களை போலீஸ் பாதுகாப்பில் வைத்திருப்பதை நான் விரும்பவில்லை, ஆனால் என்னுடைய பாதுகாப்பில் வைத்திருப்பேன்” என்றார். வெளியே இயல்பு நிலை திரும்பும் வரை என்னை அவர் தனது பங்களாவில் விருந்தினராக தங்க வைக்க விரும்பினார். இந்த சாது அவரிடம் ராம்நாம் யக்ஞம் குறித்தும் தனது குரு பற்றியும் குறிப்பிட்டார். சின்ஹா இந்த சாதுவிடம் தான் ராம்நாம் பரப்ப முழுமையாக ஒத்துழைப்பதாக உறுதியளித்தார். அந்த பங்களாவின் நான்கு சுவற்றுக்குள் ராம்நாம் சத்சங்கம் சின்ஹாவின் உறவினர்கள் சூழ,  வெளிச்சூழல் சரியாகும் வரை, சிறப்பாக நடந்தது. 

இந்த சாது திரு. சின்ஹாவிடம் தான் தனது தாயாரின் அஸ்தியை கொண்டு வந்திருப்பதாகவும் அதனை த்ரிவேணி சங்கமத்தில் கரைக்க இருப்பதாகவும், தனது தந்தைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் இவ்விதமாக செய்ததாகவும் கூறினார். திரு. சின்ஹா இந்த சாதுவை திரிவேணி சங்கமத்திற்கு இந்த புனிதப்பணிக்கு அழைத்துச் செல்வதாக கூறினார். அக்டோபர் 27 , 1990 ல் இந்த சாது, திரு. லால், திரு. சின்ஹா , சின்ஹாவின் மகன், மருமகன், பேரன் அனைவரும் சாதுவுடன் திரிவேணி சங்கமம் சென்றனர். அங்கே சென்று அஸ்தியை கரைக்க ஒரு படகை அமர்த்திக் கொண்டோம். சாதுவின் தாயார் கங்கா, யமுனா, சரஸ்வதியில் சங்கமம் ஆனார். பெற்றோர்களுக்கு தர்ப்பணம் செய்தபிறகு பிரயாகை கோட்டை மற்றும் ஹனுமான் கோயிலுக்குச் சென்றுவிட்டு நாங்கள் சின்ஹாவின் இல்லத்திற்கு திரும்பினோம். அந்த முழுநாளும் நாங்கள் அவரோடும், அவர் குடும்பத்தினரோடும் பகவான் யோகி ராம்சுரத்குமார் குறித்தும், ராம்நாம் இயக்கம் குறித்தும் பேசி கழித்தோம். 

திரு. சின்ஹா அடுத்தநாள் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை தனது வீட்டில் நடக்க இருக்கும் ராம்நாம் சத்சங்கத்திற்கு அழைத்தார். சிறந்த அளவில் கூடிய அந்தக் கூட்டத்தில் இந்த சாது யோகி ராம்சுரத்குமார் குறித்தும், ராம்நாம் இயக்கம் குறித்தும் பேசினான். திரு. சின்ஹா அவர்களே முன்னின்று ராம்நாம் இயக்கத்தை தனது மாநிலத்தில்! நடத்தவும், சாதுவின் அடுத்தப்பயணத்தின் போது  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார். சாது அனைவருக்கும் பகவானால் ஆசீர்வதிக்கப்பட்ட, காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தில் இருந்து கொண்டு வந்திருந்த, ஜபமாலைகளை வழங்கி  அவர்களின் ஜப யக்ஞத்தை துவக்கி வைத்தான்.  

அக்டோபர் 29 ல் இந்த சாது சின்ஹா குடும்பத்தினரிடமிருந்து விடைப்பெற்றான். சின்ஹா மற்றும் அவரது மகன், சாதுவையும் திரு லால் அவர்களையும் பத்திரமாக ப்ரயாகை ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து லக்னோவிற்கு வழியனுப்பினர். இடையே, ராஜன் நகர் ரயில் நிலையத்தில் சாது போலீசாரால் சோதனை செய்யப்பட்டு பிறகு யாத்திரை தொடர அனுமதிக்கப்பட்டான். லக்னோவில் சுவாமி ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானின் பக்தர்கள் எங்களை வரவேற்று பத்திரமாக ப்ரதிஷ்டானின் தலைமையகத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அக்டோபர் 30 , 1990 ல் ராம் பக்தர்களான கரசேவகர்கள் அயோத்யா ராம் மந்திரில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். அனைத்து பேருந்து, ரயில்கள் ரத்து செய்யப்பட்ட போதும் கிடைத்த அனைத்துவிதமான வாகனங்கள் மூலமாக அந்த கோயில் நகரத்திற்கு வந்து சேர்ந்தனர். கர சேவகர்கள் காலையில் மந்திரில் இருக்கையில் இந்த சாது ப்ரதிஷ்டானில் அமர்ந்து பக்தர்களோடு ராமநாமத்தை செய்தவண்ணம் இருந்தார். மதியம் செய்தியாக ஆயுதமற்ற கர சேவகர்களை போலீஸார் கடுமையான முறையில் லத்தி சார்ஜ் செய்ததும், துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த சேதியும் கிடைத்தது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் திரு. அசோக் சிங்கால் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது, அயோத்தி ராமர் கோவிலின் உள்ளேயும் வெளியேயும் இருந்த பல ராம பக்தர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பல கரசேவகர்கள் கொல்லப்பட்டதோடு, ராம பக்தர்கள் மற்றும் கரசேவகர்களின் உடல்கள் சரயு ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டன. இந்த செய்தி அறிந்து மொத்த இந்தியாவும் அதிர்ச்சிக்குள்ளானது, உலகின் பல செய்தித் தாள்கள் இது குறித்தும் எழுதின, இந்துக்களின் மீது அயோத்தியில் நடந்து படுகொலை தாக்குதல்கள் பலரை உலுக்கின. செய்தி சானல்கள் இந்த தாக்குதல் குறித்த வீடியோ பதிவுகளை வெளியிட்டன. ஜெயின் ஸ்டுடியோஸ் இது குறித்த விவரமான ஒரு ஆவணப்படம் ஒன்றை எடுத்திருக்கிறது அது இன்றும் யூ ட்யூப்பில் ( https://youtu.be/xD60F8DsaC4 ) உள்ளது.  எங்கும் சோகமும், குழப்பமும் உ.பி முழுக்க நிலவியது. அடுத்த நாள் ப்ரதிஷ்டானை சுற்றியுள்ள வெறிபிடித்த முஸ்லிம்கள் ப்ரதிஷ்டானின் உள்ளே இருப்பவர்களை தாக்க முயற்சித்தனர். அருகாமையிலிருந்த இந்துக்கள் ப்ரதிஷ்டானை பாதுகாக்க துப்பாக்கி, கத்தி மற்றும் லத்திகளை தங்கள் கைகளில் ஏந்தினர். இந்த சாது சென்னைக்கான முன்பதிவு டிக்கெட்டை, ரயில்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக, ரத்து செய்தான். 

நவம்பர் 1 அன்று சிறப்பு ராம்நாம் சத்சங்கம் ஹனுமன் சாலிஸாவுடன் ப்ரதிஷ்டானில் ராமஜென்ம்பூமி போராட்டத்தில் உயிர் இழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைப்பெற்றது. சிறப்பு சத்சங்கம் பல பக்தர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது. இந்த சாது யோகி ராம்சுரத்குமார் அவர்களின் புகைப்படத்தை பலருக்கு வினியோகம் செய்து ராம்நாம் ஜபத்தை ஊக்குவித்தான். வேறு ஒரு டிக்கெட் சென்னை திரும்புவதற்கு லக்னோவில் பெறப்பட்டன. செவ்வாய்க்கிழமை நவம்பர் 6 அன்று, பக்தர்கள் சாதுவை லக்னோ ரயில் நிலையம் வந்து வழி அனுப்பினர். ரயிலில் சக பயணிகளுக்கு யோகி ராம்சுரத்குமார் குறித்த நூல்கள், படங்கள் போன்றவற்றை இந்த சாது தந்தான். சென்னைக்கு வியாழக்கிழமை அன்று இந்த சாது வந்து சேர்ந்தான். அடுத்தநாளே நவம்பர் 9 அன்று இந்த சாது வட இந்தியாவில் நடந்தவைகள் குறித்து ஒரு விரிவான கடிதம் ஒன்றை பகவானுக்கு எழுதினான்:

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

உங்களின் குறைவற்ற கருணையால் இந்த சாது சென்னைக்கு நேற்று மதியம் மிகுந்த பாதுகாப்புடன் வந்து சேர்ந்தான். வெற்றிகரமாகவும், ஆனால் பரபரப்பாகவும் இந்த உ.பி பயணம் அமைந்தது. 

லக்னோவில் ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானில் நடந்த மூன்று நாள், 21 முதல் 23 – 10 – 1990 வரையிலான, விழா மூன்றுநாட்களிலும் பெரும் வெற்றியை பெற்றது. அனைத்து நாட்களிலும் எனது உரைகளை ஹிந்தியில் திரு. பக்த தர்சன் மொழிபெயர்த்தார். அவர் மத்திய அரசின் முன்னாள் இராஜாங்க கல்வி அமைச்சர் மற்றும் கான்பூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் ஆவார். அவர் எனது பேச்சினால் ஈர்க்கப்பட்டு விரைவில் திருவண்ணாமலை வந்து உங்கள் தரிசனத்தை பெற விரும்புகிறார். பல முக்கிய நபர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து வந்து இங்கு கலந்து கொண்ட அவர்கள் எனது உரையை கேட்டுவிட்டு விரைவில் உங்களை திருவண்ணாமலை வந்து தரிசிக்க ஆவல் கொண்டுள்ளனர்

லக்னோவிலிருந்து அலஹாபாத் செல்லும்போது ரே பரேலியில் நான் உ.பி போலீஸின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டேன். அரசின் உத்தரவுபடி காவி உடை அணிந்த அனைத்து சாதுக்களும், சன்னியாசிகளும் கைது செய்யப்பட்டனர். ஆனால் ராம் தீர்த்தா ப்ரதிஷ்டானின் பொது செயலாளர் ஆன திரு. R.K. லால் உ.பி. அரசின், ஓய்வுபெற்ற, கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் ஆவர். அவரும் என்னுடன் அரசின் விரைவுப்பேருந்தில்  பயணித்தவர்களும் தங்கள் போராட்டத்தையும் குரலையும் எழுப்பி இந்த சாது தேவையற்று துன்புறுத்தப்படுத்தக்கூடாது என்று போராடினர். போலீஸ் அந்த பேருந்தை ஒரு எச்சரிக்கையோடு பயணிக்க அனுமதித்தனர். இந்த பேருந்து அலஹாபாத் அடைந்தவுடன் இந்த சாது கைது செய்யப்படுவார் என்று கூறினர். அலஹாபாத்தை பேருந்து நெருங்கும் போது நானும், திரு. லால் அவர்களும் , அலகாபாத்தின் ஒய்வுபெற்ற இணை  ஆட்சியாளர், திரு. T.S. சின்ஹா அவர்களின் பங்களாவின் முன் இறங்கினோம். அவர் எனக்குரிய பாதுகாப்பை அளித்து, அடுத்த மூன்று நாட்களுக்கு என்னை விருந்தினராக நடத்தினார். அவர் தனது காரில் அன்போடு என்னை திரிவேணி சங்கமத்திற்கு அழைத்துச் சென்றதோடு அங்கே எனது அன்னையின் அஸ்தியை கரைக்கவும் உதவி செய்தார். அவரது பங்களாவில் ராம்நாம் சத்சங்கத்தை ஏற்பாடு செய்திருந்தார். பலதரப்பட்ட மக்கள் அதில் கலந்து கொண்டதோடு அவர்கள் தங்களையும், ராம்நாம் ஜப யக்ஞத்தையும்  குறித்து அறிய ஆவல் கொண்டனர். திரு. சின்ஹா அவர்களே இந்த ராமநாம யக்ஞத்தை நடத்த தன்னை ஒருங்கிணைப்பாளராக்கி கொள்வதாகவும் கூறியதோடு, டிசம்பரில் தமிழ்நாட்டிற்கு பயணம் செய்து தங்கள் தரிசனத்தை பெற விரும்புவதாகவும் கூறினர். 

உ.பி. மற்றும் பீஹாரின்  பல்வேறு பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக அனைத்து பஸ் மற்றும் இரயில்கள் ரத்து செய்யப்பட்டன. எனவே இந்த சாது வாரணாசி, ஜாம்ஷெட்பூர் போக இயலாமல் லக்னோவிற்கே திரும்பினான். திரும்பி வருகையில் காவல்துறையினரின் துன்புறுத்தல்கள் இருப்பினும் தவறாக ஏதும் நிகழவில்லை. ஆனால், கருணையற்ற படுகொலைகள் மூலம் நூற்றுக்கணக்கான ராம் பக்தர்கள் அயோத்தியில் அக்டோபர் 30 அன்று கொல்லப்பட்டனர். இந்த சாதுவும் ஒரு அசாதாரண சூழலை சந்தித்தான். 31-10- 1990 அன்று முஸ்லிம்கள் நான் தங்கியிருந்த ப்ரதிஷ்டானை தாக்க முயன்றனர். கணிசமான அளவில் ஹிந்துக்கள் இணைந்து பதில் தாக்குதல் நடத்த தயாரானார்கள். அனைத்து நேரங்களிலும் நான் தங்கள் பெயரையும் , ராம்நாமத்தையும் உச்சரித்து வந்தேன். அதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு படையினர் அவ்விடத்திற்கு வந்து, மோசமான சீரழிவு நிலை தடுக்கப்பட்டது. ஒரு காவல்துறை நபர் எங்களுக்கு பாதுகாப்பிற்கு போடப்பட்டார். கார்த்திகை பௌர்ணமி அன்று நான் கோம்தியில் புனித நீராடவில்லை, ஏனெனில் ஆயிரக்கணக்கான ராம பக்தர்கள் அயோத்தியில் கருணையற்று கொல்லப்பட்டனர். அயோத்தியில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் அப்பாவி சாதுக்களையும், துறவிகளையும் தாக்கியதில் இருந்து, ராம்நாம் ப்ரதிஷ்டானில் நான் தங்கியிருந்த அனைத்து நாட்களிலும் ராமநாமத்தை உச்சரித்தேன். அமைதி திரும்பவும், நாங்கள் தினமும் மாலையில் ராம்நாம் சத்சங்கத்தை மேற்கொண்டோம். சென்னைக்கான ரயில்சேவை மீண்டும் துவக்கமான 6 ஆம் தேதியே  நான் நகரத்தை விட்டு பயணப்பட்டேன். எனது பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், இந்த சாது பல பக்தர்களை நாட்டின் பலபகுதியில் இருந்து இந்த ஜெயந்தி விழாவின் போது சந்தித்தேன். இப்போது நம்மால் உ.பி மற்றும் பீகாரில் ராம்நாம் யக்ஞத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க முடிந்துள்ளது. மேலும் டெல்லி, பீகார், பெங்காள் மாநிலத்தின் பக்தர்களும் தங்களின் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைத்தனர். இந்த சாது அவர்களிடம் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி முடிந்தப்பின் வருவதாக வாக்களித்திருக்கிறான். 

எனது தாமதமான திரும்புதல் எனது தமிழக சுற்றுப்பயணத்தை பாதித்துள்ளது. இருப்பினும் இந்த சாதுவின் சுற்றுப்பயணம் மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், மற்றும் கன்னியாக்குமரி மாவட்டங்களில்  18 – 11 – 1990 முதல் 25 – 11 – 1990 வரை நடைபெறும். நாங்கள் நல்ல கூட்டத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜெயந்தி விழாவிற்கு எதிர்பார்க்கிறோம். எங்களின் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அலுவலர்கள் இந்த பெரும் கொண்டாட்டத்திற்கு தயார் செய்வதில் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். சுவாமி சச்சிதானந்தர் ஒரு சிறப்பு வாழ்த்தினை எங்களின் ராம்நாம் பிரச்சாரத்திற்கு தெரிவித்துள்ளார். 

நமது கேரளா மையம் மலையாளத்தில் ஒரு ராம்நாம் துண்டுபிரசுரத்தை தயார் செய்துள்ளனர். அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். பாலக்காட்டைச் சேர்ந்த திரு. E.S. சிவராமகிருஷ்ண அய்யர், கேரள மையத்தின் ஒருங்கிணைப்பாளர், தங்களின் முயற்சிகளின் வெற்றிக்கு உங்கள் ஆசியை வேண்டி பிரார்த்திப்பதாக  கூறினார்,

இந்த சாதுவின் இதயம் நன்றியுணர்வில் நிரம்பியிருக்கிறது குருதேவ், நீங்களே எனது அருகில் நின்று அனைத்து சூழல்களிலும் என்னை பாதுக்காக்கிறீர்கள். 

எங்கள் அனைவரின் நமஸ்காரங்களும், வணங்குதல்களும், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி”. 

யோகி ராம்சுரத்குமார் மஹராஜ் கி ஜெய் !

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s