ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.15 – 2.18

அத்தியாயம் 2.15 

ஹிந்துயிசம் டுடேயோகி ராம்சுரத்குமாரின் நேர்காணல்

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி டிசம்பர் – 1 , 1989 ல் முடிந்தவுடன், இந்த சாது டிசம்பர் – 8, 1989 ல் ‘ஹிந்துயிசம் டுடே’ பத்திரிகைக்கு அவர்கள் யோகிராம்சுரத்குமார் அவர்களிடம் கேட்க விரும்பிய கேள்விகள் கொண்ட கடிதத்திற்கான பதில் மற்றும் அவர்களின் கேள்விகளுக்கு யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பதில்களோடு எனது குருவை குறித்த ஒரு கட்டுரையும், பகவானிடம் நவம்பர் 20 , 1989 ல் வாசிக்கப்பெற்று, யோகியின் ஒப்புதலோடு அனுப்பப்பட்டது. 

ஹிந்துயிசம் டுடே வில் இருந்து வந்த கடிதம் :

ஓம் சிவமயம்

ஹிந்துயிசம் டுடே 

எடிட்டோரியல் ஆஃபீஸஸ்

போஸ்ட் பாக்ஸ் 157 

ஹனாமௌலு, ஹவாய் 96715 *யு௭ஸ்ஏ

தொலைபேசி : ( 808 ) 822 – 7032 , ஃபேக்ஸ் : ( 808 ) 822 – 4351 

சனிக்கிழமை , செப்டம்பர் 30 , 1989 

பெறுநர் 

பேராசியர் . V. ரங்கராஜன்

சகோதரி நிவேதிதா அகாடமி

திருவல்லிக்கேணி , சென்னை – 600005 

இந்தியா 

பொருள் : யோகி ராம்சுரத்குமார் 

வணக்கம் , பேராசிரியர். ரங்கராஜன், 

மஹா கணபதியின் தாமரை பாதங்களுக்கு வணக்கங்கள்! 

நாங்கள் உங்களின் யோகி ராம்சுரத்குமார் உடனான அனுபவத்தை 1988 நவம்பர் ‘தத்துவ தர்சனா’ இதழில் படித்தோம். மேலும் ஸ்ரீ லங்காவை சேர்ந்த திருமதி. நவரத்தினம் அவர்கள் அருணாச்சலத்தில் தங்கியிருந்த போது யோகி ராம்சுரத்குமார் உடன் பெற்ற அனுபவத்தையும் இன்னொரு அறிக்கை மூலம் கிடைக்கப்பெற்றோம். யோகி ராம்சுரத்குமார் குறித்து ‘ஹிந்துயிசம் டுடே’ வில் எழுத இருக்கிறோம். எங்களுக்கு “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்” என்ற புத்தகத்தையும் அனுப்பவும். 

உங்கள் நூல் மற்றும் ‘தத்துவ தர்சனா’ இதழில் இருக்கும் விவரங்களுக்கு மேலாக, நீங்கள் எங்களின் சார்பாக யோகி ராம்சுரத்குமார் அவர்களை நேர்காணல் செய்வது மிகுந்த பாராட்டுதலுக்குரிய ஒன்றாக இருக்கும். அவரிடம் நாங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் இங்கே தரப்பட்டுள்ளன. 

1. இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு உங்களின் அறிவுரை என்ன? 

2. இந்தியாவிற்கு வெளியே வாழும் இந்துக்களுக்கு உங்களின் அறிவுரை என்ன? 

3. இந்துக்கள் இன்று சந்திக்கும் பெரிய பிரச்சனை என்ன, 1990 களில் எது அவர்களுக்கான பெரும் சவாலாக இருக்கும்? 

4. பெரும்பான்மையான இந்துக்களை சைவ உணவிற்கு எப்படி ஊக்குவிப்பது? 

5. ஒரு மனிதன் வைத்திருக்க வேண்டிய பெரும் ஆன்மீக தரம் என்ன? 

6. உங்களின் புனிதமான ஆன்மீக பணியில் எது பெரும் சவால், எது பெரும் பரிசு? 

7. உங்களின். பெரும் ஏமாற்றம் என்ன? 

8. உங்களின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து ஏதேனும் பகிர இயலுமா? உங்களை இன்றைய பாதைக்கு கொண்டுவந்தது என்ன? 

9. நீங்கள் உங்களின் ஆழமான ஆன்மீக அனுபவங்களை பகிர முடியுமா? 

10. உங்களின் புனிதமான வாழ்க்கையில் மிகுந்த தாக்கம் தந்த முனிவர்கள் யார்? 

11. அருணாச்சலத்திற்கு புனிதப்பயணம் மேற்கொள்வதின் பயன் என்ன? 

12. தங்களுடைய சம்பிரதாயம் என்ன? இஷ்ட தெய்வம்  ஏது? 

13. குழந்தைகளை வளர்ப்பது குறித்து தங்களின் பரிந்துரைகள் என்ன? 

14. கோயில் வழிப்பாட்டின் மதிப்பு என்ன? 

பேராசிரியர் அவர்களே, நீங்கள் பிற பக்தர்களின் யோகியுடனான அனுபவங்களையும் அவர்களின் வாழ்க்கையில் யோகி தந்த மாற்றங்கள் குறித்த தகவல்களையும் அனுப்பலாம். 

யோகி ராம்சுரத்குமார் அவர்களின் முகவரியையும் சேர்த்து அனுப்பவும். 

இறுதியாக, யோகி ராம்சுரத்குமார் அவர்களின் 4 அல்லது ஐந்து நல்ல புகைப்படங்களை அனுப்புங்கள், ஒரு அட்டையில் HH Sri Yogi Ramsuratkumar, The God Child என்று குறிப்பிடப்பட்டிருக்கும் படம் மிகவும் நன்றாக உள்ளது. அதன் மூலப்படிவம் கிடைத்தால் சிறப்பு. அந்த அச்சிடப்பட்ட படத்தில் சிகப்பு வண்ணம் அதிகமாக இருப்பதால் அதனை மீண்டும் மறு உருவாக்கம் செய்ய இயலாது.

இந்த நேர்காணலுக்கான தங்களின் உதவி பெரும் பாராட்டுதலுக்கு உரியது.  இத்தகைய யோகிகள் வெகு சிலரே இந்த உலகில் உள்ளனர். எங்களின் வாசகர்கள் இவரைப்பற்றி அறிய வேண்டும் என நினைக்கிறோம்.

உங்களின் தர்ம சேவையில் , 

‘ஹிந்துயிசம் டுடே’, 

சுவாமி ஆறுமுகம் கதிர் 

நிர்வாக எடிட்டர் 

சாது  ரங்கராஜனின் பதில்:

08.12.1989 

சுவாமி ஆறுமுகம் கதிர்

‘ஹிந்துயிசம் டுடே’ 

போஸ்ட் ஆபிஸ் பாக்ஸ் 157 

ஹனாமௌலு, ஹவாய் 96715, யு௭ஸ்ஏ

மதிப்பிற்குரிய சுவாமிஜி, 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! ஓம் மஹா கணபதயே நமஹ! எனது தாழ்மையான வணக்கங்களை பரம பூஜ்ய சுவாமி சிவசுப்பிரமணியம் அவர்களுக்கும், உங்களுக்கும், அங்கிருக்கும் அனைத்து மதிப்பிற்குரிய சுவாமிஜிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் ! 

இந்த சாது தனது மிகுந்த நன்றியை உங்களின் செப்டம்பர் 30, 1989 தேதியிட்ட கடிதத்திற்கு தெரிவித்துக் கொள்கிறான். எங்களின் குரு யோகி ராம்சுரத்குமார் அவர்களின் 71 வது ஜெயந்திவிழாவை சென்னையிலும் பிற இடங்களிலும்  டிசம்பர் – 1 அன்று கொண்டாடும் பணிகளில் தீவிரமாக இருந்தமையால் உங்களுக்கு உடனடியாக பதில் அளிக்க இயலவில்லை. அதற்காக எங்களது மன்னிப்பை கோருகிறோம். 

‘தத்துவ தர்சனா’ வில் எனது குரு யோகி ராம்சுரத்குமார் குறித்த கட்டுரை தங்களை கவர்ந்தமைக்கு எனது மகிழ்ச்சியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் ‘ஹிந்துயிசம் டுடே’ பத்திரிகையில் வெளியிட எனது குருவைப்பற்றிய விசேஷ கட்டுரையை கேட்டமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஹிந்துயிசம் டுடே’ மற்றும் அதன் வாசகர்களுக்கு எனது குருநாதரின் ஆசிகளுடன் யோகி ராம்சுரத்குமார் குறித்த கட்டுரையை தங்களுக்கு அனுப்பி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இத்துடன் எனது குருவின் சில படங்களை எனது கட்டுரையோடு இணைத்துள்ளேன். இவைகள் தங்கள் ஒப்புதலைப் பெற்று தங்களின் மேலான இதழில் வெளியாகும் என நம்புகிறேன். …..

நாங்கள் தனித்த விமான தபால் மூலம் பின்வரும் புத்தகங்களை அனுப்புவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்:

1. “ஓர் யோகியின் அற்புத தரிசனங்கள்” – சாது. பேராசிரியர் வே. ரங்கராஜன்.

2. “யோகி ராம்சுரத்குமார் – கடவுளின் குழந்தை , திருவண்ணாமலை” – ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன்.

3. “யோகி ராம்சுரத்குமார் உடனான அனுபவங்கள்” – ஹரகோபால் சேபுரி

4. ‘தத்துவ தர்சனா’ இதழ்கள் –  தொகுதி – 5 , 1 முதல் 4 மற்றும் தொகுதி – 6 , 1 முதல் 3 

5. “ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனல்” வெளியிட்ட யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா குறித்த செய்தி தொகுப்புகள். 

அரிசோனாவின், ஹோஹம் கம்யூனிட்டியின் லீ லோசோவிக் உங்களுக்கு “தாவாகோட்டோ” எனும் இதழின் பிரதியை அனுப்பியிருக்கிறார்.

இவையனைத்தும்  தங்களுக்கு கிடைத்தவுடன் தயை கூர்ந்து தங்கள் ஒப்புகையை தெரிவியுங்கள். 

அமைதியாக ஆன்மீக புரட்சியை உருவாக்கி, இந்த மனிதகுலத்தை இறைத்தன்மையை நோக்கி உயர்த்திவரும் பெரிய மஹான்கள் பற்றி ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தி ஹிந்து மத பாரம்பர்யத்தை பகிர்கின்ற தங்களுக்கும் “ஹிந்துயிசம் டுடே” பத்திரிகைக்கும் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் புனித பணிகளுக்கான தேவைகளுக்கு நீங்கள் தேவையெழும் போதெல்லாம் தயவு கூர்ந்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள். 

அங்கிருக்கும் அனைத்து ஆச்சார்யர்களுக்கும் எனது தாழ்மையான வணக்கங்கள், 

இறைசேவையில் உங்களின் ,

சாது பேராசியர். வே. ரங்கராஜன். 

இணைப்பு: மேலே குறிப்பிட்டபடி.” 

யோகி ராம்சுரத்குமார் குறித்த கட்டுரை : 

யோகி ராம்சுரத்குமார்

திருவண்ணாமலையின் தெய்வீக ஒளி

–சாது பேராசியர் வே. ரங்கராஜன்

“புண்யபூமி என்று அழைக்கப்பட தகுதியுடைய ஒரு நிலம், ஆன்மாக்கள் கர்மங்களின் கணக்கு தீர்க்க வந்து பிறக்க வேண்டிய இடம், கடவுளை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் தனது இறுதி வீடு பெறுவதற்கு வந்தடைய வேண்டிய பூமி, மனித இனம் பெருந்தன்மை. தாராளத் தன்மை தூய்மை மற்றும் அமைதி ஆகியவற்றில் உயர்ந்த நிலையை அடைந்துள்ள இடம், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுணர்வு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் நிலம் என்ற ஒன்று இருந்தாள் அதுதான் பாரதம்” என கூறுகிறார் பாரதத்தின் தேசப்பற்று மிக்க துறவியான சுவாமி விவேகானந்தர். பரிணாம வளர்ச்சியில் மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்த கடவுளர்கள் அவதரிக்கும் பூமியாக இது இருந்துள்ளது. இந்த நிலம் மிகச்சரியாக பாரதவர்ஷா — ஒளியின் நிலம் — எனப்படுகிறது. எண்ணற்ற முனிவர்கள், ஞானிகள் வேத காலத்திலிருந்நு, நவீன காலம் வரை தொடர்ச்சியாக இந்த மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளனர். ஆகையினால் இந்த நாடு ‘ரத்னக்ர்பா’ – விலைமதிக்க முடியாத  ராஜரிஷிகளையும், ப்ரம்ம ரிஷிகளையும் தனது கர்ப்பத்தில் சுமந்துள்ள நாடு என அழைக்கப்படுகிறது. 

இந்த புனித பூமியின் பெரும் ஞானிகள். மற்றும் முனிவர்களின் வரிசையில் இன்று நம்மிடையே இருப்பவர் யோகி ராம்சுரத்குமார் மஹராஜ், திருவண்ணாமலையின் கடவுளின் குழந்தை ஆவார். இந்த யோகி மூன்று ஆன்மீக பெரியவர்களான ஸ்ரீ அரவிந்தர், மகரிஷி ரமணா, சுவாமி ராம்தாஸ் ஆகியோரால் வார்க்கப்படும் வாய்ப்பினை பெற்றவராவார். யோகியே இதனைப்பற்றி குறிப்பிடும் போது, “பெரும்பான்மையான மனிதர்கள் தனக்கு மூன்று தந்தைகள் என்று கூறுவதை விரும்புவதில்லை. ஆனால் இந்தப் பிச்சைக்காரனுக்கு மூன்று தந்தைகள். இந்த பிச்சைக்காரனுக்கு நிறைய வேலைகளை இவர்கள் செய்திருக்கிறார்கள். அரவிந்தர் துவக்கினார். ரமணர் சிறிது செய்தார் . ராம்தாஸ் முடித்தார்.“ என்பார். ஸ்ரீ அரவிந்தர் அவருக்கு சத்தியத்தை தேடும் ஞானம் தந்தார், ஸ்ரீ ரமணர் அவரை தபஸ் என்னும் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக ஸ்ரீ ராம்தாஸ் அவருக்கு பக்தியை தந்து தெய்வீக பரவசம் என்ற சாம்ராஜ்யத்திற்குள் உயரவும் வழிவகுத்தனர். 

அருணா என்றால் சூரியன் என்ற ஒரு நிறை ஆற்றலின் தொடர் அசைவு, அசலா என்றால் மலை, அது ஒருபோதும் நகராத ஒன்று. ‘அருணாச்சலா’ என்பது மிகச்சிறந்த கருத்தாக்கம், அது நிலையான பிரம்மம் – பரம்பொருள்– மற்றும் இயக்கம் ஆகிய விழிப்புணர்வு ஆற்றலின் ஒருங்கிணைப்பு, சிவ-சக்தி கலப்பு, ஆகும். அருணாச்சலம் ஒரு முக்கியமான ஜ்யோதிர்லிங்க க்ஷேத்ரம் அல்லது சிவனின் எல்லையற்ற ஒளியின் கோவில். பல அற்புதமான சித்தர்கள் மற்றும் ஆன்மாவை உணர்ந்தவர்களின் இல்லம். இன்று இந்த இடம் மேலும் புனிதமாக, இந்த புனிதப்பயண தலத்தில் இருப்பவரே யோகி ராம்சுரத்குமார். 

யோகி ராம்சுரத்குமார் தன்னை ஒருபோதும் ஞானி என்றோ, யோகி என்றோ, கடவுள் தன்மை கொண்ட மனிதர் என்றோ அழைத்துக் கொண்டதில்லை. அவர் தன்னை பிச்சைக்காரன் என்றழைத்துக் கொள்வதோடு அவ்விதமாகவே இருப்பவர். அவர் எப்போதும் மிக அழுக்கடைந்த உடைகளையும், சீராக இல்லாத தாடியையும், அழுக்கான தலைப்பாகையும் அணிந்து, இரண்டு பனை ஓலை விசிறியை ஒன்றாக கட்டி அத்துடன் ஒரு தேங்காய் சட்டையையும் தனது ஒரு கையில் வைத்திருப்பார்.  ராமநாமத்தை உதடுகள் உச்சரிக்கையில் இன்னொரு கை விரல்களை ஜபமாலையை உருட்டுவதை போல் உருட்டிக் கொண்டிருப்பார். அவர் நடப்பது, பேசுவது, மக்களை சந்திப்பது, அவர்களை அணுகுவது அனைத்தும் அவரது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தி ஈர்க்க வல்லதாக இருக்கும், அவரைப் பற்றி அறிந்துகொள்ள விருப்பம் இல்லாதவர்களுக்கு அவர் ஒரு பித்தன் போல் காட்சியளிப்பார்.

யோகி, மஹாபாரதத்தின் பீஷ்ம பிதாமகரை நினைவுறுத்துவதைப் போல் இருப்பார், இருவரும் அன்னை கங்கையின் புதல்வர்களே. யோகி கங்கைக்கரையின் பனாரஸ் அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர் ஆவார். அவர் கிராம சூழ்நிலையில் வளர்ந்தார். மதம், கலாச்சாரம் போன்றவற்றில் பக்தி நிறைந்தவராக இருந்தார். அன்றைய நாளில் நாட்டில் வீசிய தேசிய உணர்வு அலையில் அவரது தேசப்பற்றும் தேசியத்துடன் அவர் கொண்ட ஆர்வமும் சிறுவயதிலேயே உருவானது. இச்சிறுவனுக்கு சாதுக்கள் மற்றும் சந்நியாசிகளுடனான தொடர்பு அதிகமாக இருந்தது. ஒருநாள் இந்த சிறுவன் கிணற்றில் இருந்து நீரை இறைக்கும் போது, கயிற்றின் மறுமுனையை எதிர்ப்பக்கம் வீச, அது கிணற்றின் மதில் மேல் அமர்ந்திருந்த ஒரு பறவை மீது பட்டு, அந்த பறவை உணர்ச்சியற்று கீழே விழுந்தது அந்த பறவை மரித்துபோனது. கவலைமிகுந்த அந்த சிறுவன் அந்த பறவையை கங்கையின் கரையில் புதைத்தான். அதன்பின் அந்த சிறுவன் மனதில் அமைதி இல்லாமல், சத்தியத்தின் இருப்பை தேடத்துவங்கினான். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில், அவனது தொடர்ச்சியான சாதுக்களுடனான தொடர்பு, அவனுக்குள் ஒரு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இருப்பினும் ஆன்மீக அனுபவம் பெற அவனுக்குள் ஏற்பட்ட தாகம் அச்சிறுவனை தனது இல்லத்தை விட்டு வெளியேறி ஒரு குருவை நோக்கி பயணப்படவும், தேடவும் வைத்தது. 1947 ன் ஒரு இரவில் இந்த இளைய சாதகன் கங்கைக் கரையில் இருந்த ஒரு மகாத்மாவிடம், மஹாயோகி ஸ்ரீ அரவிந்தர் என்ற தேசப்பற்று மிக்க ஒரு துறவி பாண்டிச்சேரியில் இருப்பதையும் அவரிடம் தான் செல்ல விரும்புவதையும் கூறினான். 

ராம்சுரத்குமாருக்கு பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு நவம்பர் 1947 ல் வந்து சேர்ந்தார். பாண்டிச்சேரியில் வாழ்ந்து கொண்டிருந்த அரவிந்தரின் முன்னிலையில் ராம்சுரத்குமார் ஞானம் பெற்ற போதிலும், அவர் தன்னை தனிப்பட்ட முறையில் வழிநடத்தக்கூடிய ஒரு குருவைத் தேடினார். அரவிந்தர் தனது உலகத் தொடர்புகளை முழுவதும் துண்டித்து இருந்தமையால் யோகி ராம்சுரத்குமார் விரும்பிய தனிப்பட்ட கவனத்தை அவருக்கு அளிக்க இயலவில்லை, தென்னாட்டிற்கு கிளம்புவதற்கு முன் வாரணாசியில் யோகி சந்தித்துப் பேசிய அந்த சாது குறிப்பிட்ட இன்னொருவரை யோகி ராம்சுரத்குமார் நினைவு கூர்ந்தார்.  அவர் அருணாச்சலத்தை சேர்ந்த மகரிஷி ரமணர் ஆவார்.

ராம்சுரத்குமார் மகரிஷி ரமணரின் இருப்பிடத்தை அடைந்தார். அவரின் அருகாமை ராம்சுரத்குமாருக்கு தேவையான தபஸ் மற்றும் சாதனாவிற்கான வழிக்காட்டுதல்களை தந்தது. ஆனால் சுய விசாரத்தில் தனது அடையாளத்தை முற்றிலும் இழக்க அந்த இளமையான சாதகனுக்கு இன்னமும் நேரம் கூடவில்லை. அவர் ஞானம் அடையும் முன் பக்தி யோகத்தில் கரைய வேண்டியிருந்தது. எனவே அவரது விதி இன்னொரு அற்புத ஞானியான, வடக்கு கேரளாவின், காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தை சேர்ந்த, சுவாமி ராம்தாஸ் அவர்களை நோக்கி நகர்த்தியது. 

ஸ்ரீ அரவிந்தர், மகரிஷி ரமணர் போல் அல்லாமல், சுவாமி ராம்தாஸ் ராம்சுரத்குமாரை முதல் பார்வையில் ஈர்க்கவில்லை. ராம்சுரத்குமார் காசிக்கு திரும்பி சென்றார். ஆனால் 1948 ல் மூன்று குருமார்களையும் சந்திக்க யோகி ராம்சுரத்குமார் மீண்டும் பயணித்தார். இந்த முறை மகரிஷி ரமணரின் பார்வை யோகிராம்சுரத்குமார் மீது தீவிரமாக விழுந்து அவருள் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த கணத்தில் இருந்து ராம்சுரத்குமாரின் வாழ்வு துறவிலும், சுய விசாரத்திலும் நங்கூரமிட்டது. அதே வருடத்தில் ராம்சுரத்குமார் மீண்டும் ஒருமுறை சுவாமி ராம்தாஸ் அவர்களை சந்திக்க அவரது ஆசிரமத்திற்கு சென்றார். இந்த முறையும் ராம்சுரத்குமார் ராம்தாஸ் உடன் நல்லுறவு கொள்வதை ஏதோவொன்று தடுத்தது. ராம்சுரத்குமார் மீண்டும் வட இந்தியாவிற்கு சென்று ஹிமாலயம் வரை அலைந்து திரியலானார். பனிமலையில் சுற்றித்திரிந்த காலத்தில், 1950-ம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ ரமணர் இருவரும் மஹாசமாதி அடைந்த சேதியை கேட்டு ராம்சுரத்குமார் தனது வாழ்வில் பொன்னான வாய்ப்புகளை இழந்துவிட்டதாக பெரிதும் வருந்தினார். இருக்கும் இன்னொரு வாய்ப்பினையும் நழுவ விட விரும்பாத ராம்சுரத்குமார் காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்திற்கு விரைந்தார். இந்தமுறை சுவாமி ராம்தாஸ் முற்றிலும் வேறுபட்ட மனிதராக ராம்சுரத்குமாருக்கு தோன்றினார். ”ராம்தாஸ் இந்த பிச்சைக்காரனின் தந்தை“ என்று அறிந்து கொண்டார். இந்த ராம்சுரத்குமாரின் மூன்றாவது பயணத்தில் அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு ஏற்பட்டது, அவருக்கு மிக உயர்ந்த மந்திரமான, “ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்“மந்திரத்தின் தீக்ஷை ராமதாஸரால் தரப்பட்டது. குரு சீடனிடம் ஏதேனும் ஒரு இடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை இருபத்துநான்கு மணிநேரமும் உச்சரிக்கச் சொன்னார். ராம்சுரத்குமார் பல நாட்கள் இறை உணர்வோடு இருந்தார். 1952 ல் இந்த முக்கியமான நிகழ்வு நடைப்பெற்றது. 

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது சீடன் நரேந்திரன் எப்போதும் நிர்விகல்ப சமாதியில் மூழ்கியிருப்பதை விரும்பவில்லை. அதைப்போலவே சுவாமி ராம்தாஸ் அவர்களும் தனது சீடன் செயல் உலகிற்கு சென்று, அங்குள்ள குழப்பங்கள் அவரை புடம் போட்டு, ஒரு சிறந்த கருவியாக மாற்றி, பல ஆயிரம் ஆன்மாக்களை வழிநடத்தி அவர்களை ஆன்மீக தேடுதலை நோக்கி நகர்த்த வேண்டும் என முடிவு செய்தார். ராம்தாஸ் ராம்சுரத்குமாரை ஆசிரமத்தை விட்டு வெளியேறும்படி கூறினார். ராம்சுரத்குமார் அதனை நிறைவேற்ற முயன்றபோது ராம்தாஸ் நீ எங்கே போகப்போகிறாய் எனக் கேட்டார். சீடன், “திருவண்ணாமலைக்கு“ என்றார். ஆனால் இறையின் வழிமுறைகள் விவரிக்க முடியாதவையாக இருந்தன. சிறிதும் பணம் வைத்திராத ராம்சுரத்குமார் காஞ்சன்காட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வர ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டன. இந்த நாட்டின் நீள, அகலம் முழுவதும் அவர் பயணித்து, 1959 வசந்த காலத்தில் அவர் திருவண்ணாமலை வந்தடைந்து அற்புத அருணாச்சல மலையின் காலடியில் அவர் நிரந்தரமாக தங்க துவங்கினார். 

அருணாச்சலேஸ்வரரிடம் அடைக்கலம் ஆகிய அந்த இளம் துறவியின் வாழ்க்கை அவ்வளவு சுகமானதாக ஆரம்பத்தில் இருக்கவில்லை. ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு புன்னை மரத்தடியின் கீழே தங்கினார், சில சமயம் அருணாச்சலேஸ்வரர் கோயிலில், சில சமயம் இடுகாட்டில், சிலசமயம். கோயிலின் மண்டபத்தில், என பல இடங்களில் இயற்கையோடு ஒன்றிணைந்து இருந்தார். அவரது பிச்சைக்கார உடை இவருக்கு சமூக விரோதிகளால் சிற்சில பெரிய அளவிலான தொல்லைகளை ஈர்த்தன. ஒரு கூடையில் அவர் சுமந்த நிறைய செய்தித்தாள்கள், உதட்டில் சிகர்ரெட், அழுக்கான தலைப்பாகை, தலையை சுற்றி மலர் மாலைகள் போன்றவற்றுடன் அவர் சாதாரண மக்களுக்கு ஒரு  வேடிக்கையான உருவத்தினராக இருந்தார். 

அவர் திருக்கோயிலூர் ஞானானந்தகிரி சுவாமிகளுக்கு நெருக்கமானவராக இருந்தார். சுவாமிகளுடைய பக்தர்களின் கண் பார்வையிலிருந்து யோகியினுள்  மறைந்திருந்த ஆன்மீகப் பெருமகனார் தப்ப இயலவில்லை. ரமணாச்சரமத்திற்கு கீழை மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்து பயணித்து வரும் பக்தர்கள் சிலரும் பிச்சைக்காரன் உருவில் இருந்த இவருக்குள் ஒரு பெரும் ஞானியை  அடையாளம் கண்டு கொண்டனர். விரைவில், கவிஞர்கள், அறிஞர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், உயர் அதிகாரிகள் என பலதுறைகளை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அவரை அணுகி தங்களின் ஆன்மீக வாழ்க்கைக்குரிய வழிக்காட்டுதல்களை வேண்டினர். தான் ஒரு மகான் அல்ல, சாதாரண பிச்சைக்காரன் தான் என்று அவர் கூறியது பலனளிக்கவில்லை.

அறிஞர்களில் பலர் அவரைப்பற்றி எழுதத் துவங்கியவுடன் யோகி ராம்சுரத்குமார் புகழ்பெற்றவரானார். தமிழின் முன்னணி அறிஞர்களான திரு. கி.வா.ஜெகன்னாதன், திரு.தெ.பொ.மீனாட்சிசுந்தர்ரனார் , மற்றும் திரு. பெரியசாமி தூரன் அவரை பார்த்த மாத்திரத்திலேயே பல கவிதைகளைப் புனைந்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டன் என்ற, அத்வைத வேதாந்தத்தை பின்பற்றும் பக்தர், யோகி ராம்சுரத்குமார் அவர்களின் சரிதமான, “யோகி ராம்சுரத்குமார் – கடவுளின் குழந்தை, திருவண்ணாமலை“ என்ற நூலை எழுதினார் அது பல ஆன்மீக தேடல் மிக்க மேற்கத்தியர்களை ஈர்த்தது. ஹில்டா சார்ல்ட்டன், லீ லோசோவிக், ஆர்தர் ஹில்கோட் மற்றும் பலர் தங்களது பக்தியையும், மரியாதையையும் தங்களின் எழுத்தில் வெளிப்படுத்தினார்கள். 

இந்த எழுத்தாளர் (சாது பேரா. வே. ரங்கராஜன்) கன்னியாக்குமரியை சேர்ந்த அன்னை மாயி என்பவர் மூலம் யோகி ராம்சுரத்குமாரிடம் வழி நடத்தப்பட்டவர். அன்னை மாயி ஒரு பைத்தியக்கார பிச்சைக்கார  பெண்மணியைப் போல் காட்சியளிப்பார். அவர் எப்போதும் நாற்பது ஐம்பது நாய்கள் சூழ இருப்பார். மூன்று கடல்களும் இடைவிடாது இந்தியாவின் பாதங்களை கழுவிவிடும் கன்னியாக்குமரியில் அவர் இருந்தார். குருவின் அளவற்ற கருணையினால் இந்த எழுத்தாளர் குருவின் சரிதமான, “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்“ என்ற நூலை எழுதினான். அது கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பல பக்தர்களையும், சாதகர்களையும், ஈர்த்தது. இந்த எளிய தொண்டனை, குரு தன் பெரும் கருணையால், திருவண்ணாமலை மலைமீது சுவாமி ராம்தாஸ் அமர்ந்து தவம் செய்த ஆலமர குகையில், ராம்தாஸ் அவர்களின் ஜெயந்தி நாளான ஏப்ரல் 26 , 1988 ல், மந்திர தீக்ஷை அளித்து ஒரு சாதுவாக மாற்றினார். மேலும் அளவற்ற கருணையால் இந்த சாதுவை, மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்கள் உலக அமைதிக்காக, “ஒம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்“ என்ற தாரக மந்திரத்தை 15,500 கோடி எண்ணிக்கை ஜெபிப்பது என்று துவங்கிய மாபெரும் ஜெப யக்ஞத்திற்காக, உலக ராம்நாம் இயக்கத்தை நடத்தும் பொறுப்பினை தந்து, அந்த பணியில் ஈடுபட யோகி ராம்சுரத்குமார் வழிகாட்டினார். இந்த இலக்கு குருவின் இதயத்திற்கு நெருக்கமானதும் கூட. 

குருவின் சேதிகளும், அவரது இலக்கும், “ஹிந்துயிசம் டுடே” என்ற பத்திரிகையின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களில் இருந்து சுருக்கமாக தெளிவாகின்றன.

கே: இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு உங்களின் அறிவுரை என்ன ? 

ப: இந்தியாவில் வாழும் இந்துக்கள் தங்களின் தேசம் மற்றும் கலாச்சாரம் குறித்து பெருமை கொள்ளலாம். அவர்கள் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் தர்மத்தின் படி வாழ வேண்டும். ராமநாம ஜபத்தை ஆன்மீக மற்றும் சமூக சேவையாக மேற்கொள்ள வேண்டும். 

கே: இந்தியாவிற்கு வெளியே வாழும் இந்துக்களுக்கு உங்களின் அறிவுரை என்ன? 

ப: உங்களின் கலாச்சார அடையாளத்தை இழக்காமல் உங்களின் கடமையை செய்யுங்கள். ராமநாம ஜபத்தை சொல்லி உவ்களைச்சுற்றி அமைதியை வளர்த்துங்கள். 

கே: இந்துக்கள் இன்று சந்திக்கும் பெரிய பிரச்சனை என்ன? 1990 – களில் எது அவர்களுக்கான பெரும் சவாலாக இருக்கும் ? 

ப: இந்தியாவின் சூழ்நிலைகளுக்கு பொருந்தாத, பொய்யான, வாழ்க்கை மூல்யங்களை பின்பற்றுதல்.

கே : பெரும்பான்மையான இந்துக்களை சைவ உணவிற்கு எப்படி ஊக்குவிப்பது ? 

ப : இந்த கேள்வி எந்த தனிப்பட்ட மதத்திற்கும் உரியதன்று. கல்வியும், விளம்பரமும் சைவ உணவை பரப்புவதற்கான முறையான வழிகள். தனிப்பட்ட மனிதரின் வாழ்வை நீட்டிப்பதற்கும் நல்ல உடல் நலத்திற்கும் சைவ உணவு மிகவும் ஏற்றது. சைவ உணவை உண்பவர்களுக்கு உயிரியல் நிலையில், நிதானம் மற்றும் எல்லா வடிவத்திலும் உள்ள உயிரினங்கள் இடத்திலும் மரியாதை உணர்வு ஆகியவற்றை ஊட்டவல்லது.

கே: ஒரு மனிதன் வைத்திருக்க வேண்டிய பெரும் ஆன்மீக தரம் என்ன ? 

ப: பணிவு, பிறரை மதிக்கும் தன்மை, சுயநலமின்றி கடமைகளை செய்தல். 

கே: உங்களின் புனிதமான ஆன்மீக பணியில் எது பெரும் சவால், எது பெரும் பரிசு? 

ப : உலக அமைதி மற்றும் வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் ஆன்மீக மூல்யங்களை போதித்தல். 

கே : உங்களின். பெரும் ஏமாற்றம் என்ன ? 

ப : அதர்மம். 

கே: உங்களின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து ஏதேனும் பகிர இயலுமா? உங்களை இன்றைய பாதைக்கு கொண்டுவந்தது என்ன? 

ப: ஓர் இறந்த பறவையின் மீதான இரக்கமே திருப்புமுனை, அதனைத் தொடர்ந்து கங்கைகரையோரத்து சாதுக்களுடனான தொடர்பு. 

கே: நீங்கள் உங்களின் ஆழமான இறை உணர்வு அனுபவங்களை பகிர முடியுமா? 

ப: இறை உணர்வு அனுபவங்களை கேட்பவரும் தேவையான முதிர்ச்சியை அடைந்தால் மட்டுமே பகிர இயலும், அனுபவத்தை பகிர்வது குறித்து எந்த அறிவிப்பும் கிடையாது, ஏனெனில் பகிர்தல் என்பதே ஆன்மீக நிலையில் ஒரு அனுபவமே. 

கே: உங்களின் புனிதமான வாழ்க்கையில் மிகுந்த தாக்கம் தந்த முனிவர்கள் யார்? 

ப: ஸ்ரீ அரவிந்தர், பகவான் ரமண மகரிஷி, மற்றும் சுவாமி ராம்தாஸ் போன்றவர்கள் நேரடியாகவும், கபீர்தாஸ், சூர்தாஸ், துளசிதாஸ், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சா, சுவாமி விவேகானந்தா, மற்றும் தெய்வீக அன்னை சாரதாதேவி போன்றவர்கள் மறைமுகமாகவும் தாக்கத்தை அளித்துள்ளனர்.

கே: அருணாச்சலத்திற்கு புனிதப்பயணம் மேற்கொள்வதின் பயன் என்ன ? 

ப: இது அனுபவிக்கப்பட வேண்டியது. இது அருணாச்சலா ரயில் நிலைய கவுண்டர்களிலோ அல்லது வேறு இடத்திலோ விற்கப்படுவதன்று. 

கே: தங்களுடைய சம்பிரதாயம் என்ன? இஷ்ட தெய்வம் எது? 

ப: அனைத்திலிருந்தும் விடுபட்ட ஒருவனுக்கு சம்பிரதாயங்கள் தேவையில்லை. சிவன், ராமன், கிருஷ்ணன் போன்றோர் கலியுகத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தெய்வங்கள்.

கே: குழந்தைகளை வளர்ப்பதற்கான தங்களுடைய பரிந்துரைகள் என்ன? 

ப: அவர்கள் சரியான முறையில் மனதளவிலும், உடலளவிலும் வளர்க்கப்பட்டால் எந்த ஒரு கலாச்சாரத்திற்கும் குழந்தைகளே சிறந்த சொத்துக்கள். 

கே : கோயில் வழிப்பாட்டின் மதிப்பு என்ன ? 

ப: பிண்டத்திற்கும் அண்டத்திற்கும் இடையிலான ஒருமைத்தன்மையை மனமானது உணர உதவுகிறது. இந்தியக் கோயில்கள் கலை, சமூக தொடர்புகள் மற்றும் ஆன்மீக மதிப்புக்களை உள்ளடக்கிய புதையல் இல்லங்கள். 

“ஹிந்துயிசம் டுடே” பின்வரும் கட்டுரையை தனது இதழில் பிரசுரித்தது : 

உலகத்தை சொந்தமாக்கிய ஓர் பிச்சைக்காரன்

அவர் தொடர்ந்து புகைபிடிப்பார், ஒரு கீறல் விழுந்த தேங்காய் சிரட்டையில் உணவை உட்கொள்வார், பனையோலை விசிறியை வீசுவார், கடை வராண்டா, கோயில் பிரகாரம் அல்லது நட்சத்திரம் நிறைந்த வானத்தின் கீழ் தனது படுக்கையை மேற்கொள்வார். ஆனால் யோகி ராம்சுரத்குமார் பயனற்ற நாடோடி அல்ல, அவர் இந்தியாவின் மூன்று அற்புதமான ஸ்ரீ அரவிந்தர், ரமண மகரிஷி, மற்றும் ஸ்ரீ ராம்தாஸ் என்ற  பெரிய பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டங்களை பெற்றவர். ஆனால் 71 வயதில் அந்த மாணவர் இப்போது ஒரு ஆசிரியரும் கூட, அவரது மாணவர்கள் தமிழின் கற்றறிந்தவர் முதல் சாதாரண வேலைக்காரர்கள் என பல வகைகளில் இருப்பார்கள். சில பொன்னான தருணங்களுக்காக அமெரிக்காவின் அரிசோனாவில் இருந்து வெகுதூரம் அவரை நோக்கி சிலர் பயணிப்பர். அவரது பாடங்கள் எளிய, வாழ்நாளுக்கான, பாடங்கள், “தந்தையின் இருப்பை உங்கள் உள்ளும், உங்களை சுற்றியும் உணருங்கள், தெய்வீக வழிக்காட்டுதல்களை எல்லா செயல்களிலும் உணருங்கள். கடவுள் வெகு தொலைவில் இல்லை, அவர் இங்கே நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்கிறார்.” 

தென் இந்தியாவில் திருவண்ணாமலை என்ற நகரத்தில், எங்கே சிவன் ஒளிவடிவமாக தோன்றினாரோ அந்த அருணாச்சல மலையின் பாதங்களில் அவர் இருக்கிறார். அவர் காலை வேளையில் காகங்களின் கரைசல் அல்லது பசியோடு இருக்கும் தெருநாய்கள் அவரிடம் உணவு கேட்டு எழுப்பும் குரல் கேட்டு எழுந்திருப்பார். அவைகளுக்கு தேவையானது கிடைக்கவும் செய்யும். பக்தர்கள் அவரை விடியலில் துவங்கி, இரவு வெகு நேரம் வரை தேடி வருவார்கள். அனைவரிடமும் ஒரே மாதிரியாக “ஏன் என்னிடம் வந்தீர்கள். நானொரு பிச்சைக்காரன், நான் என்ன உங்களுக்கு தர இயலும்?“ என்று வினவிய பின்னும் அங்கேயே இருப்பவர்களை பார்த்து சிரித்தவாறே அவர்களின் நம்பிக்கையை கண்டு ஆசீர்வதிப்பார். 

அவரை பார்ப்பது உத்தரவாதமானதல்ல. இன்றைய நாட்களில் அவர் தங்கியிருக்கும் எளிய அறையின் வெளியே உள்ள இரும்பு கதவின் கம்பிகளின் வழியே அவர் உங்களுக்கு அழைப்பு விட வேண்டும். முதன்முறையாக அங்கு வருபவர்களுக்கு அந்த வாசற்படி தெரு முனையில் உள்ள நாலடுக்கு  கோவில் கோபுரத்தை விட கவர்ச்சிமிக்கதாக தெரியும்.  அவர் அங்கு வீட்டினுள்ளே இல்லை என்று நீங்கள் நினைக்கும் பொழுது அல்லது அவரை காண நீங்கள் தகுதியில்லாதவர் என்று உங்களுக்கு அச்சம் நேரிடும் பொழுது அவர் தோன்றுவார். உங்கள் முன் ஒரு கையில் விசிறியோடு நின்று, இன்னொரு கையால் நீங்கள் ரகசியமாக கொண்டு சென்ற சுமைகளை தூர அனுப்புவது போல காற்றில் வீசி, பின்னர் அவர் சிரித்து உங்களை வழி அனுப்புவார் அல்லது உங்களை உள்ளே அழைப்பார். 

ஆசிரியர் மா நவரத்னம் மற்றும் அவர் கணவர் திரு இத்தகைய அதிர்ஷ்டத்தை பெற்று இந்த குறிப்புகளை வழங்கியுள்ளார்கள். “புன்னை மரத்தின் கீழே, செய்திதாள்களின் மூட்டைகள், உலர்ந்த கிளைகள், பழுத்த இலைகள், அழுகிய குப்பைகள் ஆகியவற்றுக்கு இடையே அவரை நாங்கள் முதன்முறை சந்தித்தோம். அவரது விரல்கள் ஜபமாலையை உருட்டுவது போல் விளையாடிக் கொண்டிருந்தன. உதடுகள், “ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்“ என்று முணுமுணுத்தவண்ணம் இருந்தது. அவரது முன்னிலையில் நாங்கள் பெரிய ஆனந்த அலை எங்கள் மீது அடிப்பதையும், ஒளிரும் நிஜம் எங்கள் உள்ளுணர்வுகளை தொடுவதையும் உணர்ந்தோம். யோகி சிரித்தார், நகைச்சுவையாக பேசினார், புகை பிடிப்பதை ஆனந்தமாக தொடர்ந்தார், அவரது சந்தோஷமான சுதந்திரம் எங்களையும் எங்களது ஆசையின் பிடிப்புகள், தேவைகள், பயம், மன அழுத்தம் மற்றும் பலவீனத்தில் இருந்து விடுவித்தது.” 

இரண்டு வழி உரையாடல் என்பது எப்போதாவது நிகழ்வது எனினும், குமாரி நிவேதிதா ஒருநாள் வெகுளித்தனமாக அவரது நுண்ணிய உணர்வுகளைத் தொட்டு அவரது பிச்சைக்கார அடையாளத்தை சந்தேகப்பட்டார். “ஆக, நீ என்னை நான் பிச்சைக்காரன் என்பதை நம்பமாட்டாய்!“ என அவர் சவாலிட்டார். “நீங்கள் கூறினீர்கள் என்றால்“ என அவள் உடனடியாக முணுமுணுத்தாள். “பின்னர் என்னவென்று நீ நினைத்தாய்?“ “நான் உங்களை ஓர் மகா யோகி என நினைக்கிறேன.” என அவள் அடித்துக் கூறினாள். “யோகி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?“ என அவர் கேட்டார்.  “நீங்கள் இன்பம், வலி, புகழ்ச்சி, கண்டனம் என எதனாலும் பாதிக்கப்படாதவர்….” என அவள் கீதையில் இருந்து மேற்கோள் காட்டினாள். “ஆனால் இந்த கல்லும் அதைப்போலவே இருக்கிறது. அப்போது இதுவும் யோகியா?“, அவர் கேட்டார். “நீங்கள். கல் அல்ல, ஒரு சுத்தியை கொண்டு அடித்தால் கல்லானது உடைந்துவிடும்,“ அவள் வலியுறித்தினாள். “அதுபோலத்தான் என் காலும்“, அவர் பதிலளித்தார். “இல்லை.“ அவள் விவாதித்தாள். “நீங்கள் உடல் அல்ல. அதனால் நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள்“ . “ஆனால் நீ எப்படி நான் அத்தகைய யோகி என்று அறிந்தாய்?” அவர் தூண்டினார். “நீங்கள் டாக்டர். ராதாகிருஷ்ணன் இடம்,. யாரெல்லாம் எவ்விதம் உங்களை நினைக்கிறார்களோ, அவர்களுக்கு அவ்விதமே தோன்றுவேன் என்று கூறினீர்கள்.  அதைப்போலவே நான் உங்களை ஒரு மகா யோகியாக நினைக்கிறேன், எனவே நீங்கள் எனக்கு அற்புத யோகியாக தோன்றுகிறீர்கள்” என்றாள் அவள். அவர் விட்டுக்கொடுத்துவிட்டு சிரித்தார். 

பறவையின் மரணம் திருப்புமுனை

யோகி ராம்சுரத்குமார் 1918 ல் கங்கையின் கரையோர கிராமத்தில் பனாரஸ் அருகே பிறந்தார். சிறுவனாக இருந்தபோதிலும் அவனது ஓய்வு நேரங்களை முனிவர்கள், தவசிகள், சாதுக்கள் என பலரோடு கழிப்பதிலும், பல இரவுகள் துனி முன்னால் அமர்ந்து அவர்கள் கூறும் தெய்வீக அனுபங்களையும், கதைகளையும் கேட்பது வழக்கம். காலை நேரங்களில் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து உணவளிப்பது அவரது விருப்பமாக இருந்தது. 

ஒருநாள் கிணற்றடியில் அவன் தண்ணீர் இறைக்கும் போது அங்கே இருந்த ஒரு சிறுபறவையை தனது கரத்தில் இருந்த கயிற்றின் மறுமுனையால் தாக்க அந்த பறவை இறந்து போனது. அதனைக்கண்ட அவர் நொறுங்கி போனார். கண்களில் நீர் வழிய அதை கங்கைக் கரையோரம் கொண்டு சென்று அங்கே அதற்கு இறுதிச் சடங்கை செய்து கங்கை நீரில் ஒழுக்க விட்டு பின்பும் அவரது கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. இரக்கமே அவரது வாழ்க்கையின் வழிகாட்டி ஆக இருக்கும் என்று உறுதி பூண்டார்

அவர் கல்லூரியில் நல்ல கல்வியை பெற்றிருந்த போதிலும் அதில் அவர் ஆர்வம் கொள்ளவில்லை. கங்கைகரையோர சாதுக்களிடமே அவர் மீண்டும் வந்தடைந்தார். ஒருநாள் இரவு அவர்கள் தென்னிந்தியாவின் இரண்டு சாதுக்களான ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ரமணமகரிஷி பற்றி குறிப்பிட இந்த இளம் சாதகன் அவர்களை தேடி புறப்பட்டான். அவர்களை  அடைந்து அவர்களிடமிருந்து மிகுந்த விழிப்புணர்வு பெற்றான். 1950 களில் பனிபடர்ந்த இமயமலைக்கு பயணம் மேற்கொண்ட போது இவ்விரு குருமார்களும் மஹாசமாதி அடைந்த சேதி கேட்டு, அவர் உடனடியாக மூன்றாவது குருவின் ஆசிரமத்திற்கு விரைந்தார், அவர் ராம்தாஸ் எனும் மஹாத்மா ஆவார். ஏற்கனவே இரண்டுமுறை ராமதாஸரின் ஆசிரமத்தின் படிகளை மிதித்திருந்த ராம்சுரத்குமார், அங்கிருந்து அவசரப்பட்டு கிளம்பி சென்றிருந்தார். அவசரப்பட்டு கிளம்பி சென்றிருந்தார், “அந்த மகா குருவின் அருகாமையில் இருப்பதற்கான  பொன்னான வாய்ப்பினை” இன்னொருமுறை  தவறவிடக்கூடாது என்று அவர் உறுதியாக இருந்தார். ராம்தாஸ் அவரை வரவேற்று அவருக்கு ராமநாம மந்திரத்தின் தீக்ஷை அளித்து, சில காலம் கழித்து அவரை இறைப்பணிக்காக அங்கிருந்து அவருடைய ஆசியுடன் அனுப்பி வைத்தார். இந்தியா முழுவதும் ஏழு ஆண்டுகள். அலைந்து திரிந்து , தன் உள்ளேயும் வெளியேயும் அந்தப் பேரொளியை காணும் சாதனாவை மேற்கொண்ட அவர் இறுதியாக 1959 ல் எங்கே அவரது குரு ரமணர் பல பத்து ஆண்டுகள் தியானம் செய்தாரோ அந்த திருவண்ணாமலையை வந்தடைந்தார். 

வலியத் தாக்கும் ஹிந்து மதம்

யோகி ராம்சுரத்குமாருக்கு எந்த அமைப்பும் இல்லாத போதும் அவரது குரல்,  அவரிடம் தீக்ஷை பெற்ற ஒரே சீடர், சாது பேராசிரியர் ரங்கராஜன் அவர்கள் நிறுவிய, சகோதரி நிவேதிதா அகாடமி வெளியிடும் “தத்துவ தரிசனம்” என்ற காலாண்டு இதழில் தொடர்ந்து எதிரொலிக்கிறது. அகாடமியின் பெருமைமிக்க அமைப்பான யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம், யோகியால் செல்லமாக கடிந்துக்கொள்ளப்பட்டதும் உண்டு: “நமது உண்மையான வேலை பொறியாளர்களை மற்றும் கணிணி அறிவியலாளர்களை உருவாக்குவதன்று, நமது இலக்கு உயர்வானது. மனிதன் கணிணியைச் சார்ந்து இருப்பானெனில் அவனது மனம் சேதமடையும்,” என்பார் அவர். 

“ஹிந்துயிசம் டுடே” , பேராசிரியர் ரங்கராஜன் மூலமாக யோகியின் சில தெளிவான எண்ணங்களை பதிவு செய்துள்ளது: “இந்திய சூழ்நிலைக்கு பொருந்தாத தவறான வாழ்க்கை மூல்யங்களை குருட்டுத்தனமாக பின்பற்றுவதே” இன்றைய ஹிந்துத்துவத்திற்கு பெரும் சவால். பாரம்பரியத்தை எதிரொலிக்கும் வகையில் அவர், “ பணிவு, சுயநலமற்றதன்மை, அடுத்தவரை மதிக்கும் பண்பு, போன்றவற்றை கடமையை ஆற்றும் பொழுது கடைபிடித்தல் என்பதே மிக உயர்ந்த ஆன்மீக பண்பு. பிள்ளைகளை மனதளவிலும், உடலளவிலும் முறையான விதத்தில் வளர்த்தால் அவர்களே எந்த கலாச்சாரத்திற்கும் பெரும் பொக்கிஷம் ஆவார்கள்”, என்கிறார். அவர் தோல் சுருங்கினாலும், தலைமுடி வெண்மையானபோதும், அவர் கண்களில் தீப்பிழம்பு தெரிகிறது. “இந்த காலத்தின் தேவை வலியோர் தாக்கும் ஹிந்து மதம் தான்”, என்று அவர் முழங்கும் பொழுது, இது இந்தப்பிச்சைக்காரன் பிச்சை கேட்பதல்ல, இது அரச கட்டளை“, என்று நீங்கள் உணர்வீர்கள்.

நன்றி : ஹிந்துயிசம் டுடே, ஹவாய்

(“தத்துவ தர்சனா”, ஆகஸ்ட் 1990 – ஜனவரி 1991, தொகுதி 7, எண் 3 & 4 )

அத்தியாயம் 2.16 

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் முதலாமாண்டு விழா

யோகி ஜெயந்தி விழா மற்றும் ராம்நாம் சப்தாஹம் டிசம்பர் – 1, 1989 ல் நிறைவடைந்தப்பின் அது பல யோகி ராம்சுரத்குமார் பக்தர்களின் மனதில் நல்ல தாக்கத்தை தந்திருந்தது. திரு நாகபூஷணம் ரெட்டி திருவண்ணாமலையில் இருந்து யோகி ஜெயந்தி அன்று ரமணாச்ரமத்தில் நடந்த கோடி அர்ச்சனை குறித்து தெரிவித்தார். பின்லாந்தை சேர்ந்த ஒரு பக்தர் திரு. மேயோ இந்த சாதுவை டிசம்பர் – 2 ஆம் தேதி சந்தித்தார். குமாரி விஜயலட்சுமி (தற்பொழுது யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் மாதாஜி விஜயலட்சுமி) தொலைபேசியில் அழைத்து திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்ற தனது ஆவலை தெரிவித்தார். இந்த சாது குருவிற்கு டிசம்பர் – 5 அன்று ஒரு கடிதம் எழுதினார். 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம் ! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

தங்களின் அளவற்ற கருணையாலும் ஆசியாலும் ராமநாம சப்தாஹம் 25- 11 – 1989 முதல்    1- 12 – 1989 வரை சிறப்பாக நிறைவுற்றது. அதனை தொடர்ந்து நடந்த உங்களின் ஜெயந்தி விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த சப்தாஹம் மற்றும் ஜெயந்தி கொண்டாட்டங்களில் அகண்ட ராம்நாம் சொல்லப்பட்டது. 

நாளை குமாரகோவில் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் என்னை பேச அழைத்திருக்கிறார்கள். நான் இன்று மாலை திருநெல்வேலிக்கு எக்ஸ்பிரஸ் மூலமாக கிளம்புகிறேன். நான் 7 அல்லது 8 ஆம் தேதி காலையில் திரும்பி வருவேன். நான் உங்கள் சேதிகளை சரியாகவும், திறம்படவும் குமாரகோவிலில் கூடுகின்ற நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கு தெளிவாக உரைக்க உங்கள் ஆசிகளை வேண்டுகிறேன். 

நாங்கள் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் முதலாமாண்டு விழாவை சென்னையில் 14 ஆம் தேதி டிசம்பர் அன்று கொண்டாட நினைத்திருக்கிறோம். திரு. C. சின்னசாமி, வழக்கறிஞர் மற்றும் திரு. பெரியசாமி தூரன் அவர்களின் மருமகன், மற்றும் திரு. லீ லோசோவிக் அன்றைய கூட்டத்தில் பேச இருக்கின்றனர். அழைப்பிதழின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். 

நான் அங்கே 9 ஆம் தேதி டிசம்பர் 1989 அன்று மதியம் நேரில் வந்து தங்களிடம் ஆசி பெறுவேன். நான் அங்கு, குமாரி . R. விஜயலட்சுமி , IRS, இயக்குனர் வருமான வரித்துறை, அவர்களுடன் வருகிறேன்.  நாங்கள் உங்கள் தரிசனத்தையும் ஆசியையும் பெற விரும்புகிறோம்.

விவேகானந்தா கேந்திராவின் “யுவபாரதி” என்ற மாத இதழ், ஹரகோபால் சேபுரியின், “யோகியுடனான எனது அனுபவங்கள்‘ என்ற புத்தகம் குறித்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. அந்த விமர்சனத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன். 

டாக்டர். C.V.ராதாகிருஷ்ணன் , சிரஞ்சீவி. விவேகானந்தன், குமாரி. நிவேதிதா , திருமதி. பாரதி மற்றும் எனது அன்னை தங்களது நமஸ்காரங்களை தங்களிடம் தெரிவிக்குமாறு கூறினார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

வே. ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டப்படி”

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா, குமாரகோவில் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் பெரிய நிகழ்வாக நடைப்பெற்றது. சாது அங்கே டிசம்பர் 6 ஆம் தேதி புதன்கிழமை காலையில் சென்றடைந்தான். லீ லோசோவிக் ஏற்கனவே அங்கு வந்திருந்தார். சாது குருதேவரின் பாதுகைக்கு பூஜைகள் செய்தார். பின்னர் பொன்.காமராஜ் அவர்களின் பஜன் மற்றும் அன்னையர்கள் நடத்தும் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்றான். சுவாமி அம்பிகானந்தா தலைமையேற்ற கூட்டத்தில் இந்த சாது உரையாற்றினான். திரு. G.சங்கர்ராஜூலு, திரு. ARPN.செண்பக நாடார் மற்றும் பிற பகவானின் முக்கிய பக்தர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர். பின்னர் சாது அவர்களோடு மதுரைக்கு சென்று அடுத்தநாள் சென்னைக்கு திரும்பினான். 

டிசம்பர் 9 சனிக்கிழமை காலையில் சிரஞ்சீவி. விவேகானந்தன், குமாரி.நிவேதிதா மற்றும் குமாரி. விஜயலட்சுமி உடன் சாது திருவண்ணாமலைக்கு கிளம்பினான். யோகியின் இல்லத்திற்கு மதியம் வந்தடைந்தோம். தேவகி மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுஜாதா போன்றவர்கள் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் வெளியே சென்றிருந்தமையால் அங்கே காத்திருந்தனர். சாதுவின் சகோதரர் லட்சுமி காந்தன் மற்றும் மைத்துனி சாரநாயகி போன்றோரும் அங்கே வந்திருந்தனர். பகவான் மாலை 6 மணிக்கு கணேசன் அவர்களோடு வந்தார். காரைவிட்டு அவர் இறங்கியவுடன், இந்த சாதுவிடம் யோகி, “நீ இந்தப்பிச்சைக்காரனை மன்னிக்க வேண்டும்.” என கூறிவிட்டு எனது கையை பிடித்து அவரது இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார். நாங்கள் அனைவரும் அவருடன் இரவு 11.00 மணிவரை இருந்தோம். யோகி, தான் லீ லோசோவிக் மற்றும் பிற வெளிநாட்டு பக்தர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலையாக இருந்ததாகவும், தன்னுடைய கால்களை நீட்டி மடக்கவோ, அவ்வளவு ஏன், மூச்சுவிடக்கூட தனக்கு நேரமில்லை என்றார். யோகி ராம்சுரத்குமார் தனது வாசலில் திரிந்தவாறு இருந்த பக்தர்களை செல்லுமாறு கூறினார். இரண்டு பொறியாளர்களான பக்தர்கள் கல்பாக்கத்தில் இருந்தும், மூன்று பக்தர்கள் சிவகாசியிலிருந்தும் எங்களோடு இணைந்தனர். குரு தனது இடத்தில் அமர்ந்தப்பின் வழக்கம்போல் நிவேதிதாவை கிண்டல் செய்ய துவங்கினார். அவர் “நானொரு பிச்சைக்காரன் என்பது உனக்கு தெரியுமா” என வினவினார். நிவேதிதா அவரை “மகா பிச்சைக்காரன் அத்தோடு மகா யோகி” என்று கூறினாள். அவர் நிவேதிதாவிடம், “தெ.பொ.மீனாட்சிசுந்தரம் என்னை மகா பிச்சைக்காரன் என்கிறார். உனது தந்தை என்னை மகா யோகி என்கிறார். இவற்றில் எது உண்மை?“ என வினவினார். நிவேதிதா, “இரண்டும் உண்மை“ என்றாள். யோகிஜி தன்னிடம் இருந்த குச்சியை நிவேதிதாவிடம் காட்டி சிரித்தவாறே,  “நிவேதிதா தன் தந்தை இதைவிட பெரிய குச்சியை வைத்திருப்பதாக கூறுகிறாள்.” தேவகி யோகிக்கு டிபன் தர முற்பட்டபோது யோகி அவரை கடுமையாக கடிந்து கொண்டார். நிவேதிதா வருத்தப்பட்டார். யோகி சிரித்தவாறே, “நிவேதிதா தேவகியிடம் ஒட்டிக்கொண்டு விட்டாள்” என்று கூற, இந்த சாது யோகியிடம் தேவகி எப்போதும் நிவேதிதாவிற்கே கடிதம் எழுதுவார் என்றார். லீலாவதி என்ற பக்தர் தனக்கு நெல்லிக்காய் சில தொந்தரவுகளை தந்ததாக கூறினார். இந்த சாது, டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு யோகி ராம்சுரத்குமார் கூறியது போல் நெல்லிக்காய் ஒரு சஞ்சீவினி ஆக இருந்தது  என்றும் விவேக்கிடம் தேன் அருந்தும்படி யோகி கூறியபோது அது அவனுக்கு சஞ்சீவினி ஆக இருந்தது என்றும் கூறினான். யோகி மீண்டும் விவேக்கிடம் இரத்த தானம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றார். விவேக் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் அடுத்த செயல் திட்டங்களை யோகியிடம் விளக்கினான். பகவான் சாதுவின் கரங்களைப் பற்றி அதனை அழுத்தி ஆன்மீக அதிர்வுகளை செலுத்த துவங்கினார். சாது யோகியிடம் காஷ்மீர் குறித்த நிலவரங்களை விளக்கினான். பிறகு, ஸ்ரீ அரவிந்தரின் சொற்பொழிவின் சில நகல்களை தந்தான். பகவான் அதனை அங்கிருந்த அனைவருக்கும் விநியோகம் செய்தார். ஒருவர், மாலைகள் போடப்பட்டு யோகி ஒரு சாமியார் போல் காட்சியளிக்கிறார் என்று கூற, உடனடியாக பகவான் தனது கழுத்தில் இருந்து சில மாலைகளை எடுத்து இந்த சாதுவின் கழுத்தில் இட்டு, “இந்தப்பிச்சைக்காரன் ரங்கராஜனை ஒரு சாமியாரைப் போல பார்க்க விரும்புகிறான்“ என்று கூறிவிட்டு உரக்க சிரித்தார். திருப்பனந்தாள் சுவாமி அங்கு வந்தார். பகவான் சகோதரி நிவேதிதா பதிப்பகத்தின் நூல்களை அவரிடம் கொடுத்தார். லீ யோகியின் முன் வந்து ஒரு கடிதம் ஒன்றை வைத்தார். பகவான் வீட்டிற்குள் இருந்து லீ முன்பு எழுதிய கடிதங்களைக் கொண்டு வந்து அவைகளை சாதுவிடம் தந்து படிக்குமாறு கூறினார். பின்னர் அவைகள் அனைத்தையும் நிவேதிதா பதிப்பகத்திற்கு கொடுத்தார். பகவானை குறித்து நாராயணன் எழுதிய புத்தகம் ஒன்றை யோகி ராம்சுரத்குமார் திரும்பக் கொடுத்தார். இரண்டு அன்னையர்கள் யோகியிடம் ஆசிபெற வந்துவிட்டு சென்றனர். யோகி ராம்சுரத்குமார் நிவேதிதாவிடம் திரும்பி, “உனது தந்தையின் பணியினால் பலர் இங்கே கூட்டமாக வருகின்றனர். இது உனது தந்தையின் வேலை. இந்தப்பிச்சைக்காரனுக்கு இப்போது ஓய்வு என்பதே இல்லை”. தேவகி தனக்கு தெரிந்த மாணவர்களை யோகியின் தரிசனத்திற்கு அழைத்துவர அனுமதி கேட்டார். யோகி சரி என்று பதிலளித்தார். மேலும் அவர், “இந்தப்பிச்சைக்காரன் ஏற்கனவே அதிக அழுத்தத்தில் இருக்கிறான். இவர் மேலும் சில மக்களை அழைத்து வர இருக்கிறார், பாருங்கள்“ என்றார். யோகி அனைவரையும் விடைபெறும் முன் ஆசீர்வதித்தார். வழக்கம் போல் சாதுவின் தண்டத்தை எடுத்து ஆசீர்வதித்து அவரிடமே திருப்பி கொடுத்தார். சாது மற்றும் அவருடன் இருந்தவர்கள் அருகில் இருந்த ஒருவரின் இல்லத்தில் இரவு தங்கியிருந்தனர். அதிகாலையில் நிவேதிதாவும், தேவகியும் வெளியே வந்தபோது பகவானும் அவரது இல்லத்தில் இருந்து வெளியே வந்து, “நாம் மிக நன்றாக சந்தித்தோம்“ எனக்கூறி அவர்களை ஆசீர்வதித்து விட்டு நடந்தார். சாதுவும் அவர்களோடு இருந்தவர்களும் நல் அனுபவங்களோடு சென்னை திரும்பினர். 

டிசம்பர் 12 அதிகாலையில் லீ லோசோவிக் மற்றும் அவரது குழுவினர் வந்தடைந்தனர். சாது அவர்களுக்கு மதிய உணவை ஏற்பாடு செய்தார். பிறகு அவர்களுடனும் விவேக் உடனும் சாது திருமுல்லைவாயில் வைஷ்ணவி கோயிலுக்கு சென்றார். அன்னை வசந்தி மற்றும் சுவாமி தேவானந்தா அவர்களை வரவேற்றனர். அடுத்தநாள் அவர்களை சாது கபாலி கோயிலுக்கு அழைத்துச் சென்றேன் அங்கே விஸ்வநாத சிவாச்சாரியார் எங்களை வரவேற்று கோயிலில் மரியாதைகள் செய்தார். பின்னர் அவர்கள் சுவாமி ஹரிதாஸ் கிரியை சந்தித்தனர். அவர்கள் பாரதீய வித்யா பவனுக்கு சென்று விட்டு பின்னர் சகோதரி நிவேதிதா அகாடமிக்கு வந்தனர். 

டிசம்பர் 14 அன்று யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் முதலாமாண்டு கொண்டாடப்பட்டது. ப்ரேமா நடராஜன் அவர்களின் பிரார்த்தனை பாடலுடன் விழா துவங்கப்பட்டது. டாக்டர். ராதாகிருஷ்ணன் கூட்டத்தினரை வரவேற்றார். இந்த சாதுவுடன் புகழ்பெற்ற வர்த்தக யூனியன் தலைவரான திரு. T.V.ஆனந்தன், மற்றும் திரு. C. சின்னசாமி ஆகியோர் இந்த கூட்டத்தில் உரையாற்றி பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு தங்கள் மரியாதையை செலுத்தினர். விவேகானந்தன் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். 

வெள்ளிக்கிழமை , டிசம்பர் 15 , 1989 அன்று சகோதரி நிவேதிதா அகாடமியின் ஒரு மங்களகரமான நாளாக ஆனது. இந்த அகாடமி ஒரு தொண்டு நிறுவனமாக சென்னையில் பதிவாளர் மூலம் பதிவு செய்யப்பட்டது. திரு. பொன்ராஜ் அவர் தயாரித்த பத்திரம் யோகி ராம்சுரத்குமார் இடம் வாசிக்கப்பட்டு முன்பே ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. இரவு உணவை திரு. நாகபூஷணரெட்டி ஏற்பாடு செய்து இந்த சாது, லீ மற்றும் நண்பர்களை மகிழ்வித்தார். டிசம்பர் – 16 அன்று பக்தர்கள் ஒரு மாதத்திற்கு நீளும் ராம்நாம் ஜபத்தை தினமும் மாலை 5.30 மணி முதல் 6.30 வரை திருவல்லிக்கேணி பாண்டுரங்கன் கோயிலில் மங்களகரமான மார்கழி மாதத்தில் நடத்தினர். மொரீஷியஸில் இருந்து வந்த ஒரு பக்தர் சாதுவை சந்தித்தார். டிசம்பர் 19 அன்று வைஷ்ணவி கோயிலைச் சேர்ந்த அன்னை வசந்தி அவர்களுக்காக, யோகி ராம்சுரத்குமார் குறித்த புத்தகங்களை வாங்க, சுவாமி தேவானந்த சரஸ்வதி அவர்கள் இந்த சாதுவின் இல்லத்திற்கு வந்திருந்தார். அவர் தனது கனவில் சாது யோகி ராம்சுரத்குமார் கரங்களைப்பற்றியவாறு யோகியின் இல்லத்தின் படிகளில் அமர்ந்து கொண்டு இன்னொரு கரத்தால் ஆசீர்வதிப்பதைப்போல் கனவு கண்டதாகவும், சில சமயம் கனவு நிஜமாக கூடும் என்றும் கூறினார், எதிர்காலத்தில் யோகியின் இலக்குகளை பரப்பும் பணியில் சாது இருப்பதற்கான முன்னறிவிப்பாகவும் இது இருக்க கூடும். 

ஜனவரி 12, 1990 அன்று சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை தேசிய இளைஞர் தினமாக கொண்டாட அனைத்து தயாரிப்புகளும் முழு வேகத்தில் துவங்கப்பட்டன. டிசம்பர் 23 , 1989 ல் நானும், விவேக்கும் ஒரு முன்னணி வழக்கறிஞர் மற்றும் கல்வியாளரான திரு. N.C.ராகவாச்சாரி அவர்களை சந்தித்தோம். அவர், சுவாமி விவேகானந்தர் குறித்து நடத்தப்படும் பேச்சு போட்டியில் சிறந்த  பேச்சாளரை உருவாக்கும் பள்ளிக்கு ஒரு சுழல் பரிசு கேடயத்தை வழங்க மிக மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். வீட்டிற்கு திரும்பிய சாதுவிற்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இருந்து இந்த சாருவிற்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. இளையராஜா யோகியின் ஒரு பக்தரும் ஆவார். அடுத்தநாள் நானும், விவேக்கும் திரு. இளையராஜா அவர்களின் இல்லத்திற்கு சென்றிருந்தோம். அவரும் அவரது மனைவியும் இந்த சாதுவை அன்போடு வரவேற்றனர். அவர் இந்த சாது , விவேக் மற்றும் நிவேதிதா குறித்து பகவான் மூலம் அறிந்திருந்தார். இது சாது அவரின் இல்லத்தில் இருந்த பூஜை அறைக்குச் சென்று சென்று பூஜை செய்துவிட்டு, அவரையும், அவர் மனைவியையும் ஆசீர்வதித்தான். அவர் யோகி ராம்சுரத்குமாரின் படம் அச்சிடப்பட்ட 500 அழகிய காலண்டர்களை பக்தர்களுக்கு விநியோகம் செய்ய தந்தார். இந்த சாதுவையும், விவேக்கையும் அவர் தனது காரில் திருப்பி அனுப்பி வைத்தார். இதுவொரு பகவானின் லீலையே. இந்த சாது பகவானுக்கு டிசம்பர் 26 அன்று கடிதம் ஒன்றை எழுதி, யோகியின் பக்தர்களான ப்ரீதா மற்றும் அவரது பிள்ளைகள் யோகியின் இல்லத்திற்கு விஜயம் செய்யும் போது அவர்களிடம் கொடுத்தனுப்பினான்:

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

இந்த தாழ்மையான வேலைக்காரன் மிக்க மகிழ்வோடு, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் முதலாமாண்டு விழா சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் டிசம்பர் 14 அன்று நடந்தேறியது என்பதை, தெரிவித்துக் கொள்கிறேன். திரு.T.V.ஆனந்தன் மற்றும் திரு. லீ லோசோவிக் இதில் பங்கு பெற்றனர். 

திரு.N.C.ராகவாச்சாரி என்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் காலம் சென்ற திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் உயிலை செயல்படுத்தும் பொறுப்பு உடையவர், யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயம் ஒன்றை சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளான தேசிய இளைஞர் தினத்தில்,  யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தினரால் நடத்தப்படும், பள்ளிகளுக்கு இடையேயான, சுவாமி விவேகானந்தர் பற்றிய, பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் சிறந்த பேச்சாளருக்கு தருவதாக கூறியிருக்கிறார். இந்த போட்டி 6 ஆம் தேதி ஜனவரி 1990 அன்று நடைபெறும் , ஜூனியர் பிரிவில் ஆரம்பநிலை, இரண்டாம்நிலை பள்ளிக்கூட பிள்ளைகளுக்கும், சீனியர் பிரிவில் மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கூட பிள்ளைகளுக்கும் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாவது, மற்றும் மூன்றாவது பரிசுகள் வழங்கப்படும். சீனியர் பிரிவில் சிறந்த பேச்சாளருக்கு சுழல் கேடயம் வழங்கப்படும். பரிசளிப்பு விழா சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, ஜனவரி 12 ஆம் தேதி, நடைபெறும், அதில் திரு. T.V. ஆனந்தன், மற்றும் திரு. N.C. ராகவாச்சாரி கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்துடன் சென்னை மாநகரின் 300 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் நகல் இணைக்கப்பட்டுள்ளது. பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்குவதற்கான அச்சுப்பணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

திரு. இளையராஜா உங்கள் படம் போடப்பட்ட, 1990 ஆம் வருட காலண்டர்கள் 500 தந்துள்ளார். அவைகளை நாங்கள் ராம்நாம் லிகித ஜபம் மற்றும் ஜப யக்ஞத்தில் பங்கு பெறுபவர்களுக்கு அன்பளிப்பாக தருகிறோம். எங்களின் தினசரி சத்சங்கம் பாண்டுரங்கன் கோயிலில் சிறப்பாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. பல பக்தர்கள் கலந்து கொண்டு குழுவாக ராமநாமத்தை உச்சரிக்கின்றனர். 

சகோதரி நிவேதிதா அகாடமி ஒரு பொது தர்ம டிரஸ்டாக டிசம்பர் 15 அன்று பதிவு செய்யப்பட்டது. சகோதரி நிவேதிதா அகாடமிக்கு வழங்கப்படும் நன்கொடைகள் வருமான வரிவிலக்கு 80 G படிவத்தின் கீழ் பெற  நாங்கள் விண்ணப்பித்திருக்கிறோம். உங்கள் ஆசிகளை நாங்கள் வேண்டுகிறோம். 

அகில இந்திய வானொலி நிலையம், சென்னை – A, “சுவாமி விவேகானந்தரும், அவரது சமூக சேவை நற்செய்திகளும்“ என்ற தலைப்பில் எனது உரையினை விவேகானந்தர் ஜெயந்தி நாளன்று, வெள்ளிக்கிழமை , ஜனவரி 12 , 1990 காலை 8.30 க்கு ஒலிபரப்பும். இதன் ஒலிப்பதிவு நிகழ்ச்சி ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும், நான் அதற்கு முன் அங்கே வந்து உங்கள் ஆசியை பெற விரும்புகிறேன். 

பம்பாய் உயர்நீதி மன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர், சௌ. ரஜினி பாக்வே, எங்களோடு பம்பாய் பணிகளில் தீவிரமாக இணைந்து பணியாற்றுகிறார். அவர் உங்கள் ஆசியைப் பெற சென்னைக்கு டிசம்பர் 29 ஆம் தேதி வருகிறார். அவர் என்னோடு திருவண்ணாமலைக்கு டிசம்பர் 30 அன்று வருவார். நாங்கள் பகலில் அங்கு வந்து சேர்வோம். 

டாக்டர் ராதாகிருஷ்ணன், சிரஞ்சீவி. விவேகானந்தன், குமாரி நிவேதிதா, திருமதி. பாரதி, எனது வயதான அன்னை அனைவரும் தங்களின் நமஸ்காரத்தை தங்களிடம் தெரிவிக்க சொன்னார்கள். நாங்கள் அனைவரும் எங்களின் தாழ்மையான பணிகளில் வெற்றிபெற உங்கள் ஆசிகளை வேண்டுகிறோம்.

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

உங்கள் தாழ்மையான சீடன்,

சாது ரங்கராஜன்.” 

புதன்கிழமை , டிசம்பர் 27 , 1989 ஹனுமந் ஜெயந்தி பாண்டுரங்கன் கோயிலில் சத்சங்கத்தினரால் கொண்டாடப்பட்டது. பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கையில் இந்த சாதுவிற்கு படத்தில் மஹாவீர் ஹனுமனே காட்சியளித்தார். அடுத்தநாளே திருமதி. புஷ்பா ரோகிணி கார்டனில் இருந்து இந்த சாதுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பார்வையில் ஹனுமானாக யோகி ராம்சுரத்குமார் படத்தில் காட்சியளித்ததாக கூறினார். 29 ஆம் தேதி பகவானை பார்த்துவிட்டு வந்த ப்ரீதா, தான் யோகிக்கு ஆரத்தி எடுத்த தட்டில் யோகியின் உருவம் தெரிந்ததாக கூறினார். 

மும்பையில் இருந்து வந்த சௌ. ரஜினி பாக்வே, டயானா போன்றோர், விவேக், நிவேதிதா மற்றும் கீதா ஆகியோருடன் இந்த சாது சனிக்கிழமை, டிசம்பர் 30, 1989 அன்று காலையில் கிளம்பி திருவண்ணாமலை யோகியின் இல்லத்திற்கு மதியம் சென்றடைந்தோம். யோகியின் முன்னர் பெரிய கூட்டம் ஒன்று இருந்தது. இருப்பினும் யோகி என்னையும் என் உடன் இருந்தவர்களையும் அன்போடு வரவேற்றார். மதுரையைச் சேர்ந்த திரு. சங்கர்ராஜூலுவும் அங்கே அமர்ந்திருந்தார். யோகி என்னிடம் அவரை அறிவாயா என வினவினார். இந்த சாது அவரை நன்றாகவே அறிவேன் என்றும் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் குறித்து அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் என்றும் பதிலளித்தான்.  ரஜினி மற்றும் டயானாவை, சாது, யோகியிடம் அறிமுகப்படுத்தினான். பகவான் அவர்களிடம் கணேஷ்புரியில் உள்ள நித்யானந்தா ஆசிரமம் சென்றிருக்கிறீர்களா என வினவினார். மேலும் இந்த சாதுவிடமும் அடுத்தமுறை மும்பை செல்லும்போது கணேஷ்புரி போகும்படி கூறினார். நிச்சயம் செல்வதாக இந்த சாதுவும் உறுதியளித்தான். ரஜினியிடம் யோகி நகைச்சுவையாக ஒரு வழக்கறிஞர் ( Lawyer ) க்கும் ஒரு பொய்யன் ( Liar ) க்கும் உள்ள வேறுபாடு என்னவென்று கேட்டதோடு, வழக்கறிஞர்களும், வியாபாரிகளும் தங்கள் தொழிலில் நேர்மையாக இருக்க முடியாது என்று கூற ரஜினி அதனை ஏற்றதோடு, ஒரு அப்பாவியான மனிதனை காப்பாற்றவும் ஒருவன் பொய்களை கூறவேண்டும் என்று கூறினார். யோகிஜி நிவேதிதாவிடம் நீ வழக்கறிஞராக விரும்புகிறாயா என கேட்டார். இல்லை என நிவேதிதா பதிலளித்தார். யோகி சிரித்தவாறே அன்று அவள் ஒருநாளும் உயர்நீதி மன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக ஆக முடியாது என்றார். விவேக்கிடம் நமது அகாடமி நிவேதிதாவின் பெயரில் இருப்பதில் உனக்கேதும் பொறாமை உண்டா என வினவினார். இந்த சாது உடனடியாக நாங்கள் விவேகானந்தர் ஜெயந்தியையும் கொண்டாடுகிறோம் என்றேன், அதற்கு யோகி, “ஆனாலும் அகாடமி நிவேதிதாவின் பெயரில் தானே உள்ளது” எனக்கூறி உரக்க சிரித்தார். பின்னர் இந்த சாது விவேகானந்தர் ஜெயந்தியின் போட்டி மற்றும் பரிசு குறித்து யோகியிடம் பகிர்ந்தார். யோகி எங்களது முயற்சிகளை ஆசீர்வதித்ததோடு, அந்த பரிசுகளை தரும் முன் அவைகளை தன்னிடம் எடுத்து வரச்சொன்னார். இந்த சாது,  ராஜேஸ்வரி என்கிற அன்னை ராமநாமத்தால் குணமானதை கூறினார். யோகிஜி சங்கர்ராஜூலுவிடம் திரும்பி நகைச்சுவையாக, “ரங்கராஜன் அற்புதங்களை புரிகிறான்“ என்றார். இவையனைத்தும் அவரின் கருணை, ஆசி என இந்த சாது கூற, பகவான் அனைத்தும் தந்தையின் ஆசி, கருணை என்றார். யோகி, ராமாயணத்தில் வரும் சம்பாதியின் சிறகுகள், குரங்குகள் ராம நாமத்தை ஜெபிப்பதை கேட்டதாலேயே, வளர்ந்த நிகழ்வை குறிப்பிட்டார். சாது, பகவானிடம் தான் அகில இந்திய வானொலியில் விவேகானந்தர் ஜெயந்தி அன்று உரை நிகழ்த்த இருப்பதை குறிப்பிட்டார். 

ரஜினி, யோகிக்கு மாலையணிவிக்க விரும்பினார். யோகி அதனை அனுமதித்தார். யோகி அவரோடும், டயானா உடனும் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார். யோகி, ஜெத்மலானி குறித்து கேட்டார். அவர்கள் அவர் உச்சநீதி மன்றத்தில் பணிபுரிவதாகவும், சிலசமயம் மட்டும் உயர்நீதிமன்றம் வருவதாகவும் கூறினார்கள். யோகி அவர்களிடம் நீங்கள் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறீர்களா என கேட்க, ஆம் என்று பதிலளித்தனர். ரஜினியை பகவான் தன்னுடைய புகைப்படம் எடுக்க அனுமதித்தார். 

புத்தாண்டிற்கான ஆசியை பகவானிடம் நாங்கள் பெற்றுக்கொண்டு அவரிடம் இருந்து விடைப்பெற்றோம். நாங்கள் ரமணாச்ரமம் சென்றோம். தேவகி மற்றும் சுஜாதாவை கிருபாவில் சந்தித்தோம். நாங்கள் ஆலமர குகைக்கு சென்றோம் அங்கே சுந்தரம் சுவாமி எங்களை வரவேற்றார். திரு. ஸ்ரீதர குருக்கள் எங்களை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வரவேற்றார் அங்கே இறைவனையும், இறைவியையும் தரிசித்து விட்டு நாங்கள் சென்னை கிளம்பினோம்

அத்தியாயம் 2.17 

சாதுவின் அன்னையின் நித்திய உறக்கம்

“சுவாமி விவேகானந்தரும், அவரது சமூகசேவை நற்செய்திகளும்“ என்ற தலைப்பில் இந்த சாதுவின்  வானொலி உரை, விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு, ஜனவரி 12, 1990 அன்று ஒலிப்பரப்பானது. அதன் ஒலிப்பதிவு ஜனவரி 5 அன்று நடைப்பெற்றது. இந்த சாது தனது தீக்ஷா குரு யோகி ராம்சுரத்குமார், விவேகானந்தர் ஜெயந்தி நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாட அரசு முடிவு செய்த அறிவிப்பின் போது அடைந்த பரவசத்தை நினைவு கூர்ந்தார்:

“சர்வதேச இளைஞர்கள் ஆண்டில், ஜனவரி 12 , 1985 ல், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடிக் கொண்டு இருக்கின்ற நேரத்தில், இரண்டு தென் ஆப்பிரிக்கா பக்தர்கள் எனது குருநாதர் யோகி ராம்சுரத்குமார் அவர்களை திருவண்ணாமலையில் சந்தித்தனர். விவேகானந்தர் ஜெயந்தியை தேசிய இளைஞர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற பாரத அரசின் உத்தரவை கேள்விப்பட்டு யோகி மகிழ்வோடு துள்ளி குதித்ததை கண்டார்கள்.  ‘ஓ! என் விவேகானந்தா, சுவாமி விவேகானந்தா“ என்று வியந்து கூறியதோடு, ‘விவேகானந்தர் நமக்கு மிகச்சிறந்த செயல்முறை வேதாந்தம் என்பதை வழங்கி, ஒட்டுமொத்த மனித குலத்தின் மீட்சிக்கு வழிவகுத்தார்’ என்று முழங்கினார். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம், யோகி, வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் ஒவ்வொருத்தர் உடைய இல்லத்திற்கும் சேவை மற்றும் தியாகம் குறித்த விவேகானந்தரின் செய்தியை கொண்டு செல்ல வேண்டுமென்று வலியுறுத்தியதோடு, ‘இந்த உலகத்திற்கு இந்தியா தருகின்ற அற்புதமான பரிசு இதுவாகவே இருக்கும்’ என்றார். எனது குருவின் கருத்துப்படி பாரத நாட்டின் இலட்சியம் விவேகானந்தர் போன்ற தேசபக்த துறவிகளை உருவாக்குவதே ஆகும். அத்தகையோர் தங்களது சுய விடுதலைக்கு அல்லாமல் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீட்சிக்கும் காரணமாக அமைவார்கள். நமது தேசத்தின் வருங்காலத்தை உருவாக்க நமது எளிய முறைகளில் நாம் முயற்சி செய்வோமாக. உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்ய வரான் நிபோதத — எழுமின், விழிமின், கருதிய கருமம் கைகூடும் வரை அயராது உழைமின்! வந்தே மாதரம்!” 

இந்த சாது வானொலி நிலையத்திற்கு ஒலிப்பதிவு செய்ய சென்ற போது வீணை வித்வான், டாக்டர். S. பாலசந்தர், மற்றும் இசையமைப்பாளர், டாக்டர். S. ராமனாதன், ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றான். அவர்களுக்கு இந்த சாது “ஒரு மகா யோகியின் தரிசனங்கள்“ பாகம் – 1 மற்றும் சில ‘தத்துவ தர்சனா’ இதழ்களையும் பரிசாக வழங்கினான். ஜனவரி 6 ஆம் தேதி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு, பிரபல வழக்கறிஞர் திரு என். சி. ராகவாச்சாரி அவர்கள் நன்கொடையாக அளித்த யோகி ராம்சுரத்குமார் சுழல் கேடயம், மற்றும் யோகி ராம்சுரத்குமார் பரிசுகளுக்கான பேச்சுப்போட்டி, ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் நடைப்பெற்றது. இந்த போட்டி திருவல்லிக்கேணி இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் நடைப்பெற்றது, மாநகரின் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவர்கள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இரண்டு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கான பரிசு யோகி ராம்சுரத்குமார் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டு  ஜனவரி 12 ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த விருந்தினர்கள், திரு. N.C. நாயுடு மற்றும் டாக்டர் மஹேந்திர நாயுடு, போட்டியின் போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

ஜனவரி 7 ஆம் தேதி சங்கத்தின் அலுவலக உறுப்பினர்களான டாக்டர். ராதாகிருஷ்ணன், விவேகானந்தன் மற்றும் நிவேதிதா ஆகியோருடன் டாக்டர். மஹேந்திராவும் திருவண்ணாமலைக்கு பகவானின் ஆசியைப்பெற உடன் சென்றார். பகவானின் பல  பக்தர்களும் திரு. ஃபிரிக் மற்றும் திருமதி. யானா போன்ற வெளிநாட்டு பக்தர்களும் சாதுவின் இல்லத்திற்கு விஜயம் செய்தனர். திருவண்ணாமலை சென்றவர்களின் அனுபவத்தை நிவேதிதா விவரிக்கிறார்:

“யோகியை நாங்கள் காலையில் சந்தித்தோம். எங்களை மாலையில் நாலு மணிக்கு வருமாறு கூறினார். அதுவரை நேரம் கழிக்க, நாங்கள் அருணாச்சல மலை மீது ஏற துவங்கினோம். அங்கே நரிக்குட்டி சுவாமியை சந்தித்துவிட்டு, மலையில் கீழே இறங்கும் போது பெரும் மழையில் மாட்டிக்கொண்டோம். பகவானை அவர் குறிப்பிட்ட நேரத்தில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் நாங்கள் மழையில் நனைந்தவாறே ஈர ஆடையுடன் பகவானின் இல்லத்தை அடைந்தோம். பகவான் வந்து கதவைத் திறந்தார். விவேக் குளிரினால் நடுங்கத்துவங்கினான். விவேக்கின் நிலையைக் கண்ட பகவான் மிகுந்த கவலை கொண்டு விவேக், நிவேதிதாவிடம், “ரங்கராஜன் என்ன நினைப்பான்? அவன் உங்களை இந்தப்பிச்சைக்காரனை தரிசிக்க அனுப்பி வைத்தான். ஆனால் இந்தப்பிச்சைக்காரன் உங்களை காக்கவைத்து, மழையில் நனைய வைத்து விட்டான்” என்று நினைப்பான். அவர் உள்ளே சென்று ஆளுக்கொரு சால்வையை கொண்டு வந்து தந்தார். சால்வையை பயன்படுத்திக் கொண்ட பின்னும் விவேக நடுங்கிக் கொண்டே இருந்தான். பின்னர் யோகி தன்னுடன் எங்களை வருமாறு கூறி உடுப்பி பிருந்தாவன் ஓட்டலுக்கு சென்றார். அங்கே தனது பக்தரும் அந்த ஓட்டலின் உரிமையாளருமான திரு. ராமசந்திர உபாத்யாயாவிடம் அவரது மகன் மற்றும் மகளின் ஆடைகள் விவேக் மற்றும் நிவேதிதா விற்கு பொருந்துமா என கேட்டார். அவைகள் அவர்களுக்கு பொருந்தும் என்று கூறி ராமச்சந்திர உபாத்யாயா அவரது வீட்டிலிருந்து குழந்தைகளின் ஆடைகளை வரவழைத்தார். திரு. ராமசந்திர உபாத்யாயா தனது பிள்ளைகளின் ஆடைகளை எனக்கும் விவேக்கிற்கும் தந்ததோடு, தனது வேட்டிகளை திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர் மஹேந்திரா அவர்களுக்கும் தந்தார். யோகி எங்களை ஓட்டலின் அறை ஒன்றில் சிறிது நேரம் இருக்க வைத்து, சூடான பால் குடிக்க வழங்கினார். நாங்கள் இயல்பான நிலைக்கு திரும்பிவிட்டோம் என்று கண்ட பின்னரே யோகி அவ்விடத்தில் இருந்து நகர்ந்து தன் இடத்திற்கு போனார். நாங்கள் நனைந்ததை தன்னுடைய தவறாகவே அவர் கருதினார். நாங்கள் நலம் ஆகிவிட்டோம் என்று தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள அவர் விரும்பினார், எங்களுக்கு  உணவுகளை ஆர்டர் செய்து, எங்கள் அனைவரையும் இரவு தங்குமாறு கூறினார். கிருஷ்ணர் தனது அன்பிற்குரிய யாதவர் குடும்பங்களை பெரும் மழையில் இருந்து  பாதுகாக்க கோவர்த்தன மலையை குடையாக பிடிக்கவில்லையா? அதுபோல் போல் எங்களையும் மழையில் இருந்து யோகி ராம்சுரத்குமார் காத்தார்.”

 அடுத்த நாள் காலையில் பகவானின் தரிசனத்தை பெற்ற அவர்கள் பகவான் அளித்த தாராளமான பிரசாத பொருட்களுடனும் விவேகானந்த ஜெயந்தி சிறப்பாக நடைபெற பகவானின் ஆசிகளுட னும் அவர்கள் சென்னைக்கு திரும்பினர்.

ஜனவரி 11 , ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு முந்தையநாள்  மாலையில் பகவானின் பக்தரான புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா, இந்த சாதுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது திருவண்ணாமலை பயணம் குறித்தும், யோகியை தரிசித்தது குறித்தும், தனது வாழ்த்தை விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கும் தெரிவித்தார்.  ஜனவரி 12 ஆம் தேதி காலை சென்னை வானொலி நிலையத்தில் இருந்து ஒலி பரப்பப்பட்ட சாதுவின் விவேகானந்தர் பற்றிய சொற்பொழிவை பக்தர்கள் கேட்டனர். யோகி ஒரு டிரான்ஸிஸ்டர் மூலம் சாதுவின் உரையை கேட்டார். விவேகானந்தர் ஜெயந்தி விழா சிறப்பாக இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. யோகியின் பக்தர் மற்றும் தொழிற்சங்க தலைவர், திரு. T.V.ஆனந்தன், தலைமை தாங்கினார். தென்னாப்பிரிக்காவின் நேட்டால் தமிழ் வேத சொஸைட்டியின் தலைவர் திரு. N.C. நாயுடு சிறப்பு பேச்சாளராக இருந்தார். விவேகானந்தன் விருந்தினர்களை வரவேற்றார், சுரேஷ் ராஜ்புரோகித் பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சுழல் கேடயம் மற்றும் பரிசுகள் வெற்றிபெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. விழா முடிந்தப்பின் விவேக், நிவேதிதா , திருமதி. பாரதி ரங்கராஜன் மற்றும் இன்னொரு பக்தரான வசந்தி, யோகியை காண திருவண்ணாமலைக்கு சென்று அவரிடம் விரிவான தகவல்களை வழங்க நினைத்தனர். அவர்கள் ஜனவரி 13 அன்று சென்று யோகியிடம் விவரங்களை தந்துவிட்டு அன்றிரவே திரும்பி வந்தனர். தேவகி 15 ஆம் தேதி இந்த சாதுவின் இல்லத்திற்கு வந்தார். அவருக்கு, சாது, இளையராஜா வழங்கிய யோகியின் படம் அச்சிடப்பட்ட காலண்டர்  பரிசாக அளித்தார். விவேக் மீண்டும் 16 ஆம் தேதி காலை சீனிவாசனுடன் திருவண்ணாமலை சென்றார் . இந்த சாது  , திரு. ARPN. ராஜமாணிக்கம் நாடார் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்திற்கு வழங்கிய பகவான் திருவுருவப் படத்திற்கு கண்ணாடி பெட்டி தயார் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தான். விவேக் மற்றும் சீனிவாசன் யோகியை சந்தித்து வேதபாடசாலை துவக்கும் திட்டம் குறித்து பேசினர். பகவான் விவேக்கிடம் அவனது பொறியியல் படிப்பில் முழு கவனம் செலுத்துமாறு கூறினார். சீனிவாசனிடம் யோகி, இந்த சிந்தனை உயர்ந்ததாக இருப்பினும்,  சாதுவிடம் பேசி வேதபாடசாலை ஆரம்பிப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை அறிந்து கொள்ளுமாறு கூறினார். 

19 ஆம் தேதி பகவானை காணச் சென்ற ப்ரீதா மற்றும் புஷ்பா பகவானின் உருவத்தை அவர்களின் டிபன்பாக்ஸ் மூடி மீது பகவானுக்கு ஆரத்தி எடுக்கையில் பெற்றனர். அந்த டிபன் பாக்ஸ் மூடி சாதுவின் ஆசிரமத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் பின்னால் ஒரு சுவாரஸ்யமான பின்னணி இருக்கிறது. நிவேதிதா அது குறித்து விவரிக்கிறார். 

திருமதி. ப்ரீதா பொன்ராஜ் , திரு.பொன்ராஜ் அவர்களது பிள்ளைகளான நிவேதிதா, மற்றும் அர்ஜூன் உடன் திருவண்ணாமலைக்கு யோகி ராம்சுரத்குமார் தரிசனம் பெற சென்றனர். சாதாரண உரையாடலின் போது, நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும் குமாரி நிவேதிதா யோகி ராம்சுரத்குமாரிடம் தனது கான்வென்ட்டில் ஒரு டீச்சர், “ஜீசஸ் மட்டுமே அற்புதங்களை செய்வார்” என தன்னிடம் கூறியதாக கூறினார். யோகி அதனை கேட்டு, “ ஓ! இதைத்தான் உனது பள்ளியில் உன்னிடம் கூறுகிறார்களா?“ என்று கேட்டுவிட்டு அவர் எந்த பதிலும் கூறவில்லை. திருமதி. சிவசங்கரி என்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் மற்ற பக்தர்களும் அங்கே இருந்தனர். இந்த பக்தர்கள் யோகி ராம்சுரத்குமார் நாமத்தை கூறி முடிக்கையில் அவருக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கம் உடையவர்கள். நிவேதிதாவின் பாட்டி திருமதி. ருக்மணி ஆரத்தி எடுத்தார். அவர்கள் கற்பூரத்தை எரித்து ஆரத்தி காட்ட அவர் யோகிக்கு உணவு கொண்டுவந்திருந்த டிபன் பாக்ஸ் மூடியையே பயன்படுத்தினர். அவர் பெரிய கற்பூரத்தை பயன்படுத்தியதால் அந்த மூடி மிகவும் சூடாக இருந்தது. ஆரத்தி முடிந்தவுடன், யோகி அதனை தன் அருகே வைத்துவிட்டு போகுமாறு கூறினார். சிறிது நேரம் கழித்து யோகிஜி நிவேதிதாவிடம் “ஜீசஸ் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்துபவர் அல்ல” என்றார். அவர் டிபன்பாக்ஸின் மூடியை பார்க்குமாறு கூறினார் அதில் கற்பூரம் எரிந்த தடங்களில் அனைவரும் ஆச்சர்யம் கொள்ளும் வகையில் யோகிஜியின் உருவத்தை அந்த மூடியில் கண்டனர். யோகிஜி தலைப்பாகை மற்றும் சால்வை அணிந்தவாறு அதில் காட்சியளித்தார். யோகிஜி மனம்விட்டு இறையின் லீலையை சந்தோஷத்துடன் சிரித்து அனுபவித்தார். ஜீசஸ் மட்டுமல்ல இந்து கடவுள்களும் அற்புதங்களை நிகழ்த்துவார்கள் என்று கூறி சிறுமி நிவேதிதாவை ஆசீர்வதித்தார்.

20 ஆம் தேதி, ஒரு அழகிய கண்ணாடி பெட்டி, அதன் அடியில் ஒரு மர இழுப்பறையோடு, யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் துணைத்தலைவர் திரு. K.N. வெங்கடராமன் மூலம் வழங்கப்பட்டது. அது இந்த சாதுவின் வீட்டிற்கு வந்தவுடன் அதில் யோகியின் ஆளுயர படம் வைக்கப்பட்டது. ப்ரீதா மற்றும் புஷ்பா தந்த டிபன் பாக்ஸ் மூடி, யோகி தந்த மற்ற பொருட்களுடன் இழுப்பறையில் வைக்கப்பட்டது. மறுபடியும் 26 ஆம் தேதி விவேக், நிவேதிதா, ப்ரீதா மற்றும் பொன்ராஜ் யோகி ராம்சுரத்குமார் அவர்களை காணச் சென்று யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்க விழாவின் புகைப்பட ஆல்பத்தை காட்டினர். யோகி, அவரது ஆளுயர படத்தை வைக்க, திரு. K.N. வெங்கடராமன் தந்த கண்ணாடி பெட்டி குறித்தும் விசாரித்தார். அனைத்து சென்னை பக்தர்களுக்கும் வினியோகம் செய்ய பிரசாதங்களை யோகி தந்தார். 

சாதுவின் இல்லத்திற்கு அடுத்த சில நாட்களில் ஜீனா ரோஜர்ஸ், சுவாமி தேவானந்தா மற்றும் லொரைன் ஷாப்பிரோ போன்ற பக்தர்கள் விஜயம் செய்தனர். பிப்ரவரி 2, 1990 அன்று மாதாஜி கிருஷ்ணாபாய் அவர்களின் மஹாசமாதி நாள் கொண்டாட பட்டது. காலை முதல் மாலை வரை நடந்த நிகழ்ச்சிகளில் பகவானின் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அடுத்தநாள் நிவேதிதா, அவளது தோழிகளான காயத்ரி, மாலினி போன்றோர் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொண்டனர். பகவானிடம் இந்த விழா குறித்து தெரிவித்து அவருடைய ஆசிகளையும் பெற்றனர். பகவான் இந்த சாதுவின் அன்னையின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பிப்ரவரி 5 ஆம் தேதி சுவாமி தேவானந்தா சாதுவின் இல்லத்திற்கு வந்தார். பின்னர், பெர்ரி டேப்மன் மற்றும் ஜோசியா, ஹில்டா சார்ல்டனின் “செயின்ட்ஸ் அலைவ்” என்ற நூலோடு வந்தார்கள். அந்த நூலில் சமகாலத்து புனிதர்களின் சரிதங்கள் தொகுக்கப்பட்டிருந்தன. அதில் யோகி ராம்சுரத்குமாரும் இருந்தார். டேப்மன் திருவண்ணாமலைக்கு பிப்ரவரி 12 அன்று போனார். அவரிடம் சாது ஒரு கடிதம் ஒன்றை எழுதி யோகி ராம்சுரத்குமாரிடம் தரச் சொன்னார். அதில் தனது தாயாரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் தனது அன்னைக்கான ஆசியை வேண்டுவதாகவும் சாது குறிப்பிட்டிருந்தார். பகவானின் சித்தப்படி எல்லாம் நடக்கட்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 19 ஆம் தேதி ராம்நாம் குழுவினர் நீலகிரியில் இருந்து விஜயம் செய்தனர். 

சாது ரங்கராஜனின் பெற்றோர்களான திரு. S.R. வேணுகோபாலன் மற்றும் திருமதி. ஜானகி அம்மாள் ராமசந்திர மூர்த்தியின் பெரும் பக்தர்கள் ஆவார்கள். அவர்கள். எர்ணாகுளத்தில் இருந்த காலம் முதலே இதுவே வழக்கம். திரு. வேணுகோபாலன் கொச்சி துறைமுகத்தில் ஒரு மரைன் சர்வேயராக இருந்தபோதே ஓவ்வொரு ஏகாதசி அன்றும் அவர்கள் வீட்டில், தியாகராஜ சுவாமிகளுக்கு ராமர், சீதை, பரதர், லஷ்மணன், சத்ருக்னன் மற்றும் அனுமன் தரிசனம் அளிப்பதை போன்ற ஒரு படத்தின் முன் அமர்ந்து, அனைத்து தியாகராஜ கீர்த்தனைகளையும் பல மணிநேரங்கள் இரவில் பாடலை பொழிவார்கள். சாதுஜியும் அவரோடு உடன் பிறந்தவர்களும் இந்த ஆன்மாவைக் கிளறும் பாடல்களை கேட்டுக்கொண்டே வளர்ந்தனர். பிற்காலத்தில் பிள்ளைகளோடு சென்னையில் குடியேறிய அன்னை, சாதுஜி யோகியிடம் ராமநாம தீக்ஷை பெற்றது குறித்து பெரிதும் சந்தோஷப்பட்டார். அவர் திருவண்ணாமலைக்கு சென்றபோது பகவானிடம் தனக்கும் தீக்ஷையளிக்க முடியுமா என கேட்டார். பகவான் சிரித்தவாறே அவருக்கு பதிலளித்தார்: “சாஸ்திரங்களின் படி ஒருவன் சன்னியாச தீக்ஷை பெற்றுவிட்டால், அவனது முந்திய தலைமுறை அறுபதும், பிந்திய தலைமுறை அறுபதும் ஆசீர்வதிக்கப்படும். ரங்கராஜன் தீக்ஷை பெற்றதன் காரணமாக, அவர் செய்யும் தவங்களும், அதன் பலனான கனியும் தானாகவே உங்களை வந்தடையும். எனவே தயவு செய்து அவரோடு இணைந்து ராமநாம ஜபம் செய்யுங்கள்.“ அன்னையும் மகிழ்வோடு அந்த அறிவுரையை ஏற்று காலை முதல் இரவு வரை ராமநாமத்தை சொல்வதை தவிர்த்து வேறெந்த வேலையும் செய்யவில்லை, அவர் வாய்மூலமாக ராமநாமத்தை சொல்லி துளசிமாலையை  உருட்டி ராமநாமத்தை எண்ணுவார். அல்லது ராமநாமத்தை லிகித ஜெபமாக எழுதுவார். அவர் மிகுந்த ஆர்வமும், ஊக்கமும் மிக்க ஒருவராக உலக ராமநாம இயக்கத்தில் பங்குபெற்றார். சாதுவின் வீட்டிற்கு வரும் அனைவரும் பெரும்பாலும் அம்மாவை ராமநாமத்தை கூறி துளசி மாலையை உருட்டியவாறோ, அல்லது லிகித நாம ஜெபத்தை எழுதியவாறு இருப்பதைத்தான் பார்த்திருப்பார்கள். ஒரு முறை அவர் குளியறையில் வழுக்கி விழுந்து அவரது வலது முழங்கையில் ஒரு பிசகல் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த போதிலும் அவரால் கைகளை மடக்குவதும், உணவை உட்கொளவதும் சிரமமான விஷயமாகவே இருந்தது. அவர் தனது இடது கையையே பயன்படுத்துவார். இருப்பினும் அவர் வலது கையினால் லிகித நாமஜெபம் எழுதுவதை நிறுத்தவில்லை. ஆகஸ்ட் 17 , 1989 ல் நாங்கள் யோகியை சந்திக்க சென்றபோது,  ஜானகி அம்மாள் தினமும் லிகித நாம ஜபம் செய்கிறாள் என்றேன். அவள் கீழே விழுந்தமையால் அவளது வலது கை முழங்கை மடக்க இயலாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தார். யோகி அவரது கைகளை சில நிமிடங்கள் கவனித்தார். பின்னர் இந்த சாதுவின் சகோதரியை அழைத்து, உள்ளே சென்று தேங்காய் சிரட்டையில் சிறிதளவு தண்ணீரை கொண்டுவருமாறு கூறினார். அவர் அந்த தண்ணீரை தனது உள்ளங்கையில் ஊற்றி, அம்மாவின் வலது  முழங்கையின் அடியே வைத்து, சிறிது நேரம் தியானித்தார். பின்னர் அவர் கைகளை மடக்குமாறு கூறினார். ஆனால் அம்மாவோ தனக்கு மடக்குவதற்கு சிரமமாகவும், வலி மிகுந்தும் இருக்கும் என்று கூறினார். யோகி சிரித்தவாறே, “இல்லையம்மா உனது கரங்கள் இப்போது சரியாகிவிட்டது” என்றார். அவரே முழங்கையை மடக்கினார். தெய்வீக மருத்துவம் டாக்டர்கள் செய்ய முடியாதவைகளை செய்யும். பின்னர் அவர் அம்மாவிடம், “அடுத்த ஆறு மாதங்களை நீ நாம ஜபம் மட்டுமே செய்யலாம். லிகித ஜபம் செய்ய வேண்டியதில்லை.” என்று ஒரு முக்கிய அறிவுரையை கூறினார். இந்த அறிவுரை ஒரு தீர்க்கமான முன்னறிவிப்பாகும். 

1990 களின் துவக்கத்திலிருந்தே அம்மாவின் உடல்நிலை வேகமாக மோசமடைய துவங்கியது. பிப்ரவரி இரண்டாவது வாரம் ‘தத்துவ தர்சனா’ இதழ் வழக்கம் போல் பகவானின் கரங்களால் வெளியிட தயாராகிய நேரத்தில், இந்த சாது பரிமேலழகன் மூலம் பகவானுக்கு ஒரு சேதி அனுப்பினார். தான் மூன்றாவது வாரம் இந்த இதழின் பிரதிகளோடு அவரை சந்திக்க வருவதாக கூறியிருந்தார். ஆனால் பகவான் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், பரிமேலழகனிடம், “ரங்கராஜனால் வர இயலாது போகலாம்“ என்று கூற, அவர் நிச்சயம் புத்தகங்களோடு வருவார் என பக்தர் கூறியிருக்கிறார். பிப்ரவரி 10 ஆம் தேதி இந்த சாதுவின் தாயார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளுக்கு நாள் அவர் உடல்நிலை மோசமாகி ஆபத்தான நிலையை அடைந்தது. பிப்ரவரி 19 – 20 நள்ளிரவில் அவரது இறுதி குறித்த முன்னுணர்வு கிடைக்க, அவர் எழுந்து தனது கட்டிலுக்கு அருகே படுத்திருந்த சாதுவின் சகோதரியை எழுப்பி, அவளை யோகி ராம்சுரத்குமார் பெயரைச் சொல்லி அழைக்கச் சொன்னாள். அவளும் அன்னையின் உத்தரவை ஏற்று, “யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், ஜெய குருராயா“ என கூறி கொண்டிருக்க, திடீரென அம்மா “ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்“ என்று உச்சரித்து அவரது படுக்கையில் சாய்ந்தார். அவரது கடைசி மூச்சு 1.30 A.M க்கு முடிந்தது. 

பரிமேலழகன் பகவானுக்கு தந்திமூலம் அம்மாவின் நித்திய ஓய்வு குறித்து  தெரிவித்தார். பக்தர்கள் அவரது இறுதி ஊர்வலத்திற்கு திரண்டு வந்து ராமநாமத்தை உச்சரித்தனர். அனைத்தும் முடிந்தவுடன் பரிமேலழகன் யோகியை சந்திக்க சென்றார். பகவான் அவரிடம், “அன்னை இந்தப்பிச்சைக்காரனை அழைத்தார், அவர் இந்த மரண உலகத்தில் இருந்து கிளம்பும் போது இவன் அவளருகே இருந்தான்.” என்றிருக்கிறார். 

பிப்ரவரி 24 அன்று, காஞ்சிபுரத்தை சேர்ந்த சுவாமி நித்யசத்வானந்தா ஒரு பக்தருடன் எங்கள் இல்லம் வந்தார். அவர் யோகி ராம்சுரத்குமார் குரல், ஹனுமன் சாலிஸா மற்றும் வீணா லட்சுமண் என்ற தென் ஆப்பிரிக்க பக்தரின் பாடல்கள் போன்றவற்றை பதிவு செய்து கொண்டு சென்றார். ‘தி ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனலி’ல் சாதுவின் தாயார் மறைவு குறித்தும் தகவல் வெளிவந்திருந்த்து. இசையமைப்பாளர் இளையராஜா அவர்களிடம் இருந்து எதிர்பாராத ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சாதுவும் நிவேதிதாவும் அவரது இல்லத்திற்கு சென்றனர். யோகி ராம்சுரத்குமார் தன்னிடம் ஒரு தாராளமான பங்களிப்பை தருமாறு கூறியதாகவும், மேலும் பகவானது அளவற்ற ஆசியையும் பகிர சொன்னதாகவும் கூறினார். இளையராஜா சாதுவிற்கு சிறந்த விருந்தோம்பலை அளித்ததோடு, தனது இல்லத்தில் இருக்கும் கோயிலுக்கும் அழைத்துச் சென்றார். அங்கே இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்காகவும் இந்த சாது பிரார்த்தனை செய்தான். இளையராஜா அவரது கார்மூலம் எங்களது இல்லத்திற்கு எங்களை திருப்பி அனுப்பி வைத்தார். 

25 ஆம் தேதி மெஹர் பாபாவின் பக்தர்கள் ஒரு சிறப்பு சத்சங்கத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் இந்த சாது பேசினார். குமாரி. தேவகி என்னை மார்ச் 2 ஆம் தேதி தொடர்பு கொண்டார். மார்ச் 5 ஆம் தேதி இந்த சாதுபகவானுக்கு ஒரு கடிதம் எழுதி, பகவானின் இல்லத்திற்கு மார்ச் 7 ஆம் தேதி புதன்கிழமை வருவதாக தெரிவித்தார், அவ்விதமே அவர் டாக்டர். C.V. ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது பிள்ளை பாஸ்கர் உடன் யோகியின் இல்லத்திற்கு காலையில் சென்றடைந்தார். யோகி இந்த சாதுவை வரவேற்று கருணையோடு, “அன்னை ஜானகி அம்மாள் குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம். அவர் என் தந்தையோடு கலந்து விட்டார். அவர் எனது தந்தையின் பெயரை இறுதிவரை உச்சரித்தார். அவர் கிளம்பும் முன் அவரது உதட்டில் தந்தையின் பெயர் இருந்தது.“ யோகி சாதுவிடம் அவரது அஸ்தியை ப்ரயாகை அல்லது வாரணாசியில், கங்கை நதியில், கரைக்குமாறு அறிவுறுத்தினார். 

பகவான் பின்னர் எங்களது பணி பற்றி விசாரித்தார். இந்த சாதுவிடம் யோகி, திருச்சூர் டாக்டர். T.I. ராதாகிருஷ்ணன் அவர்களிடம் தொடர்பு கொண்டு, அவர் திருச்சூரில் ஏற்பாடு செய்துள்ள அதிராத்ர சோம யாகம் குறித்து தகவலறிந்து, அதனைப்பற்றி ‘தத்துவ தர்சனா’வில் எழுதுமாறும், நமது செய்தி பிரிவான ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனல் இதழிலும் எழுதுமாறும் கூறினார். இந்த சாதுவிடம் லீ லோசோவிக் அவர்களின் பாடல்களை முழுமையாக ‘தத்துவ தர்சனா’வில் வெளியிடுமாறு கூறினார். மேலும் “கல்கி” தீபாவளி மலர் 1979 மற்றும் 1980 போன்றவற்றை தந்து அதில் ராஜாஜி எழுதிய கதைகளை படிக்குமாறு கூறினார். மேலும் அவர் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை அறியவும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். 

எங்கள் பேச்சு சகோதரி நிவேதிதா அகாடமியின் முன்னேற்றம் குறித்து மாறியது. யோகி, இளையராஜா மற்றும் ARPN. ராஜமாணிக்க நாடார் அவர்களின் பங்களிப்பு குறித்து விசாரித்தார். “நீ எனது தந்தையின் பணியை செய்கிறாய். நிவேதிதா அகாடமி வளர்ந்து அதன் சொந்த இடத்தில் அமையும்“ என்றார். தனக்கு ரூ.116 அனுப்பிய S.V.N. ராவ் அவர்களுக்கு கடிதம் எழுதுமாறு கூறினார். பின்னர் யோகி ராதாகிருஷ்ணன் இடம் அவரது ப்ளாட் பிரச்சனை குறித்து விசாரித்தார். அவரது மகனிடம் வேலை குறித்தும் விசாரித்தார். பிறகு எங்களை அடுத்த நாள் சந்திக்கலாம் என்று கூறி விடை கொடுத்தார். நாங்கள் ஓய்வு எடுக்க செல்லும்  முன், ரமணாச்ரமம், சேஷாத்ரி சுவாமி ஆசிரமம் மற்றும் அருணாச்சலேஸ்வரர் கோயில் போன்ற இடங்களுக்கு சென்றோம். அடுத்தநாள் யோகியின் பக்தரான துவாரகநாத் ரெட்டி மற்றும் சந்தியாவை சந்தித்தோம். பகவான் சாதுவிற்கு தீக்ஷை வழங்கியபோது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிறிஸ்டியையும் சந்தித்தோம். பின்னர் அருணாச்சல மலை ஏறி ஆலமர குகை, விருபாக்‌ஷ குகை, ஸ்கந்தாஸ்ரமம் மற்றும் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்றோம். பிறகு நாங்கள் யோகியின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தோம். யோகி ஹைதராபாத்தில் இருந்து வந்த ஒரு குடும்பத்தை அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு ‘தத்துவ தர்சனா’ பிரதிகளை வழங்கினோம். யோகி என்னிடம் ஏன் விவேக் நிவேதிதா எங்களோடு வரவில்லை என்று வினவினார், அவர்கள் தங்கள் படிப்பின் காரணமாக வரவில்லை என பதிலளித்தேன். அவர் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார் . யோகி சாதுவிடம் வேறு ஏதேனும் குறிப்பாக கேட்க வேண்டியிருக்கிறதா என கேட்டார். சாது, “எங்களது முயற்சிகளுக்கான உங்கள் ஆசிகள்“ என்று கூறினார். பகவான் உடனடியாக, “அதை நீ கேட்க வேண்டியதில்லை. நீ என்னுள் இருக்கிறாய், இந்தப்பிச்சைக்காரன் உன்னுள் இருக்கிறான். நீ எனது தந்தையின் பணியை செய்கிறாய் அது உறுதியாக வெற்றி பெற கூடியது.” என்று கூறினார் நாங்கள் அவரிடம் விடைப்பெற்று சென்னை திரும்பினோம். 

யோகியின் கருணை மற்றும் ஆசியால் சிறப்பு அகண்ட ராம்நாம் ஜப யக்ஞம் திருமதி. ஜானகி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சனிக்கிழமை மார்ச் 10 , 1990 ல் நடைப்பெற்றது. அதில் பல பக்தர்கள் கலந்து கொண்டனர். திரு. வெங்கடேஷ் மற்றும் திரு. முகுந்தன் போன்றோர் ராமேஸ்வரம் சுவாமி விவேகானந்தர் குடிலில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் மூலமாக பகவானுக்கு ஒரு கடிதம் எழுதி அவர்கள் நடத்தும் அனாதை இல்லம் விஷயமாக அவர்கள் லண்டன் மாநகர் செல்ல இருப்பதாகவும் அவர்களுக்கு ஆசி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். சாது பகவானிடம் இந்த அகண்ட நாமத்திற்கு சுவாமி சச்சிதானந்தர் இடமிருந்தும் ஆசிக்கள் வந்ததை தெரிவித்து சுவாமிகளிடம் இருந்து வந்திருந்த கடிதத்தின் நகலையும் அனுப்பினான். இந்த சாது பகவான் சொன்னதைப்போல்  T.I. ராதாகிருஷ்ணன் அவர்களிடம் அதிராத்ர சோம யாகம் மற்றும் வேத கண்காட்சி திருச்சூர் வடக்குந்தன் ஆலயத்தில் நடைபெறுவதை குறித்து விசாரித்து கடிதம் எழுதியதையும் குறிப்பிட்டிருந்தான். 

குரு மஹிமா, குரு மஹிமா, அபார மகிமா குரு மஹிமா !

பகவான் ஆசிரம இடத்தை பார்வையிடுகிறார்

அத்தியாயம் 2.18 

யோகி ராம்சுரத்குமார் நற்செய்திகள்

யோகி ராம்சுரத்குமார் கருணையாலும் ஆசியாலும் அருகில் இருந்தும், தொலைவில் இருந்தும் பல பக்தர்கள் இந்த சாதுவின் இல்லத்திற்கு தினந்தோறும் சத்சங்கத்தில் பங்கு பெறவும், யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் மற்றும் சகோதரி நிவேதிதா அகாடமியில் இணையவும் வந்தவண்ணமிருந்தனர். இளைஞர் சங்கத்தின் மூலம் நகரத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியான சத்சங்கம் மற்றும் ராம்நாம் ஜபம் நடைப்பெற்ற வண்ணம் இருந்தது. சுவீடனில் இருந்து வந்த திரு. ஆந்த்ரே அகாடமியின் இணை உறுப்பினர் ஆனார். குருவின் மீதும் அகாடமி குறித்தும் எழுதப்பட்ட கட்டுரை அவரைப்போன்ற பலரை ஈர்த்தது. மார்ச் 25 , 1989 ல் குமாரி. தேவகி எங்கள் இல்லத்திற்கு யோகியின் புதிய படங்களோடும், அவரது கல்லூரியை சேர்ந்த பட்டு என்பவருக்கான அகாடமியின் வாழ்நாள் சந்தாவையும் கொண்டுவந்திருந்தார். விவேக், நிவேதிதா மற்றும் பாரதி மார்ச் 27 ஆம் தேதி அன்று அகாடமி மற்றும் சங்கம் குறித்து பகவானிடம் பேச திருவண்ணாமலை சென்றிருந்தனர். முன்னாள் காவல்துறை டி.ஜி.பி திரு. ரவீந்திரன் ஐ.பி.எஸ். ஏப்ரல் 3 தேதி சத்சங்கத்தில் கலந்து கொண்டார். ஏப்ரல் 9 ஆம் தேதி ஹனுமந் ஜெயந்தி மற்றும் ராம்தாஸ் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு சிறப்பு சத்சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

குரு என்னிடம் திரு. தெ.பொ.மீ அவர்களின் மகனான T.P.M. ஞானபிரகாசம் எழுதிய, “திருவண்ணாமலையில் ஒரு குழந்தை“ என்ற நூலின் அச்சுப்பணிகளை மேற்கொள்ளுமாறு கூறினார். திரு. ஆர்.கே. ஆழ்வார் குருவின் புகைப்படத்தின் சில நெகட்டிவ்களை அனுப்பினார். திருவண்ணாமலையை சேர்ந்த திரு.ஸ்ரீதர குருக்கள் தனது தந்தையோடு ஏப்ரல் 17 ஆம் தேதி எங்கள் இல்லம் வந்து யோகியின் ஆசிகளை தெரிவித்தார். அடுத்தநாள் பேரா. தேவகி பகவானின் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை எங்களுக்கு பரிசளித்தார். சென்னை கே.கே.நகரில் ஒரு பெரிய ராம்நாம் சங்கீர்த்தனம் இளைஞர் சங்கத்தால் ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்டது. அக்‌ஷய திரிதியை நாள் சகோதரி நிவேதிதா அகாடமியால் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. அதில் இந்த சாது பாரதமாதாவின் வழிபாடு குறித்து பேசினான். மொரீஷியஸின் ஹிந்து சுயம்சேவக் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திரு. மாதவ் பன்ஹட்டி இந்த சாதுவை தொடர்பு கொண்டு தனது யோகி ராம்சுரத்குமார் அவர்களை சந்திக்கும் ஆவலை வெளிப்படுத்தினார். சாது யோகி ராம்சுரத்குமாருக்கு ஒரு விரிவான கடிதம் ஒன்றை ஏப்ரல் 30 , 1990 அன்று பணியின் முன்னேற்றங்கள் குறித்து எழுதினார்: 

“பூஜ்யபாத ஸ்ரீ குருதேவ், 

வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

இந்த தாழ்மையான வேலைக்காரனின், “இன்றைய சமூகத்தில் மனித மூல்யங்கள்“ என்ற வானொலி உரை, சென்னை – A ல் , மே – 4 , 1990 காலை 8.20 அன்று ஒலிபரப்பாகிறது. உங்கள் வழிகாட்டுதல்படி, வேதத்தின் மூல்யங்கள் மற்றும் அவற்றின் இன்றைய முக்கியத்துவம் பற்றியும், வேதங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து தங்களுடைய கருத்துக்களை பற்றியும், பேச இருக்கிறேன். இதன் ஒலிப்பதிவு மே – 2 அன்று காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதற்கு உங்கள் ஆசியை வேண்டுகிறேன். நீங்களும் எனது உரையை மே – 4 காலை 8. 20 மணிக்கு கேட்பீர்கள் என நம்புகிறேன். 

திரு. பரிமேலழகன், திரு. T.P.M. ஞானப்பிரகாசம் அவர்களின் கையெழுத்துப்பிரதியை என்னிடம் தந்த்தோடு தங்களின் உத்தரவையும் என்னிடம் கூறினார். அந்த கையெழுத்துப்பிரதியை பேரா. A.S. ராமமூர்த்தி என்ற ராமகிருஷ்ணா மிஷனின் தமிழ்த்துறை தலைவர் சரிபார்த்து வருகிறார். அவர் ஒரு பன்மொழி பேராசிரியர் மற்றும் ஆன்மீக சாதகரும் ஆவார். எங்கள் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் சேவகரும் ஆவார். அவர் தன் பணியை முடித்தப்பின் நாங்கள் அதனை தங்களிடம் கொண்டு வருகிறோம். 

திரு. T.I. ராதாகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து எந்த அழைப்பிதழும் வராத காரணத்தால், டாக்டர். C.V.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்த சாதுவும் அதிரத்ரா சோம யக்ஞத்தில் பங்குபெற செல்லவில்லை. இருப்பினும் நாங்கள் அந்த யாகம் குறித்த தகவல்களையும், அறிவியல் குறிப்புகளையும் திரட்டி அவர்கள் அனுமதித்தால் வெளியிட தயாராக இருக்கிறோம். 

பூஜ்ய சுவாமி சச்சிதானந்தர் எங்களின் ராமநாம யக்ஞத்தின் முன்னேற்றத்தில் மகிழ்வோடு இருக்கிறார். இருப்பினும் அவரது சமீபத்து “விஷன்” இதழில், ராம்நாம் ஜெபம் சம்பந்தமான அறிக்கைகள் மிக மந்தமாக வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். நான் இத்துடன் அவரது கடிதத்தை  இணைத்துள்ளேன். 

நாங்கள் யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் மூலமாக நடத்தப்படும் ராமநாம சங்கீர்த்தன மகோத்ஸவம் 21 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தினோம். பல பாடகர்கள் தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் பிற பக்தி பாடல்களைப் பாடினர். பின்னர் ஒரு சிறப்பு சத்சங்கம் நடந்தது. அக்‌ஷய திரிதியை முன்னிட்டு 28 ஆம் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பலர் ராம்நாம் இயக்கத்தில் கலந்து கொள்கிறார்கள். நாங்கள் ராம்நாம் இயக்கத்தை பெருமளவில் வளர்த்து, ஜப எண்ணிக்கையை உயர்த்த முழுமூச்சுடன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 

பாண்டிச்சேரியில் புத்தபூர்ணிமா நாளான மே 9 , 1990 அன்று தியானம் குறித்து உரையாற்ற இந்த சாதுவை சுவாமி ஓம்காரனந்தா அழைத்திருக்கிறார். சென்னை சுந்தரம் வளாகத்தில் மே – 14 , 1990 ல்  சத்யசாய் அமைப்பினர், என்னை, “இந்திய கலாச்சாரத்தின் புவியியல் பின்னணி“ என்ற தலைப்பில் உரையாற்ற அழைத்திருக்கின்றனர். இவ்விரு நிகழ்ச்சிக்கும் தங்கள் ஆசியை நான் வேண்டுகிறேன். 

மும்பையில் இருக்கும் நமது ராம்நாம் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்ரீராம் நாயக் என்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர், இன்னொரு பக்தரான திரு. மவ்லங்கர்  என்பவருடன் தங்கள் தரிசனத்தை பெற மே – 17 , 1990 வியாழக்கிழமை வருகின்றனர். நாங்கள் அவர்களின் வருகையை மறுபடியும் தெரிவிக்கிறோம். 

எனது சகோதரியான சௌ. அலமேலு சீனிவாசன் அவர்களின் மகனான திரு. S. தேசிகன் தங்களின் தரிசனத்தை சிலகாலங்களுக்கு முன் பெற்றிருந்தான். அவனுக்கு உங்கள் கருணையால் விஜயவாடாவில் ஒரு என்ஜினியரிங் பிசனஸ் ப்ரோமோட்டர் ஆக வேலை கிடைத்திருக்கிறது. அவன் மே – 4 அன்று கிளம்புகிறான். அவன் பெஸ்வாடா மோட்டார் ஸ்டோர்ஸ், டிரக் & ஃபார்ம் எக்விப்மெண்ட்ஸ் ( டாஃபே ), ஹைதராபாத், என்ற நிறுவனத்தில் புரிய இருக்கும் பணியில் வெற்றிபெற உங்கள் ஆசியை வேண்டி, தங்களிடம் தன் பிரார்த்தனையை சமர்ப்பிக்கிறான்.. 

சிரஞ்சீவி. விவேகானந்தன், மற்றும் குமாரி. நிவேதிதா தங்களது தேர்வுகளை எழுதும் பணியில் மும்முரமாக இருக்கிறார்கள். உங்கள் கருணையால் இன்றுவரை அவர்கள் எழுதிய அனைத்து தேர்வுகளிலும் திறம்பட எழுதியிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் அனைத்து தேர்வுகளும் முடித்தப்பின் அங்கே வருவார்கள். அவர்களும், சௌ.பாரதி, டாக்டர்.C.V.R மற்றும் நமது யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தை சேர்ந்த அனைத்து சேவகர்களும் தங்களது மரியாதையான வணக்கத்தை தங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள். 

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது.ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி. “

சாதுவின் வானொலி உரையான “இன்றைய சமூகத்தில் மனித மூல்யங்கள்“ என்ற உரை பல பக்தர்களை கவர்ந்து, அவர்களில் பலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். திரு. ரவீந்திரன் ஐ.பி.எஸ், சாதுவை மீண்டும் சந்தித்து அந்த உரையை அவரது இதழில் வெளியிட விருப்பம் தெரிவித்தார். பகவானின் மிக நெருக்கமான பக்தர், திரு. சிவராமகிருஷ்ண அய்யர், மே 6 ல் திருக்கோயிலூர் தபோவனத்தில் இருந்து வருகை தந்தார். மே – 9 ல் இந்த சாது பாண்டிச்சேரிக்கு விவேக் உடன் சென்றேன். அரவிந்தர் ஆசிரமம் சென்று ஸ்ரீ அரவிந்தரின் அறையை தரிசித்துவிட்டு, திரு. M.P. பண்டிட் அவர்களை சந்தித்தேன். பகவானின் மற்றொரு பக்தை டாக்டர். சுஜாதா விஜயராகவன்             அவர்களையும் சாது சந்தித்தார். அவர் எழுதிய, “இந்தியாவில் ஆன்மீக மறுமலர்ச்சி” என்ற நூல் நவீன இந்தியாவில் ஆன்மீக மறுமலர்ச்சியில் குருமார்களின் பங்கினை குறிப்பிட்டிருந்தது. அதில் அற்புத ஆன்மீக குருவான யோகி ராம்சுரத்குமார் அவர்கள் பற்றியும் எழுதி இருந்ததோடு அந்த நூலை பகவானுக்கு சமர்ப்பித்திருந்தார். அவரும் ஓம்காரனந்தா ஆசிரமத்தில் அன்று மாலை சாது நிகழ்த்திய உரையை கேட்டு மகிழ்ந்தார்.

மே – 12 ஆம் தேதி விவேக் ஒரு ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தார். இந்த சாது விவேக்கிடம் இது குருவின் கட்டளைக்கு எதிரான செயல் என்று கடிந்துகொண்டான்.  திருவண்ணாமலையில் அமர்ந்திருக்கும் குரு தனது பக்தர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வருகிறார் என்பதை விவேக் அறிந்து கொள்ளும் காலமும் விரைவில் வந்தது. மே – 15 , 1990 அன்று ஒரு சிறப்பு ராம்நாம் சத்சங்கம் மற்றும் சங்கீர்த்தன கொண்டாட்டம் திருவல்லிக்கேணி பாண்டுரங்கன் கோயிலில் நடந்தது. பக்தர்களின் இசைக் கச்சேரி மற்றும் பஜனைகள் மட்டுமல்லாது மும்பையை சேர்ந்த, ராம்நாம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான, திரு .ஸ்ரீராம் நாயக் அவர்களுடைய சொற்பொழிவும் நடைபெற்றது. அன்றைய தினம் சாது பகவானுக்கு எழுதிய கடிதத்தில், அந்த நிகழ்ச்சி பற்றியும், தன்னுடைய அகில இந்திய வானொலி சொற்பொழிவு, ஓம்காரனந்தா ஆசிரமத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு மற்றும் சத்திய சாயி கேந்திரத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு ஆகியவை வெற்றி அடைந்தது குறித்தும் குறிப்பிட்டிருந்தார். இந்த சாது மே – 17 அன்று விவேக், திரு ஸ்ரீராம் நாயக், மற்றும் மும்பையைச் சார்ந்த இன்னொரு பக்தர் திரு மவ்லங்கர் உடன் பயணித்து, திருவண்ணாமலையை அடைந்து, ஹோட்டல் பிருந்தாவனில் தங்கினா். பின்னர் நாங்கள் பகவானின் இல்லத்தை அடைந்தோம். யோகி எங்களை வரவேற்று எங்களிடம் இரண்டுமணி நேரம் செலவழித்தார். முதலில் யோகி விவேக்கை தன் அருகே அமரவைத்து அவனை சிறிது நேரம் தனக்கு விசிறி விடுமாறு சொன்னார்.  பின்னர் யோகி ஒரு கற்பூரத்தை கொண்டு வந்து அதனை கொளுத்த சொன்னார். நாங்கள் அனைவரும் யோகி ஏன் இவ்விதம் செய்கிறார் என எண்ணிக்கொண்டிருக்கையில், பகவான் விவேக் இடம் மிக குளுமையாக, “நிறைய ரத்தம் கொடுத்தமையால் நீ களைப்பாக இருப்பாய், எனவே விசிறியை ராதாகிருஷ்ணன் இடம் கொடு“ என்றார். விவேக்கை பார்த்த முதல் பார்வையிலேயே யோகி ரத்தம் கொடுத்ததை உணர்ந்து கொண்டார் என்பதை இந்த சாது உணர்ந்தான். யோகி, விவேக்கை அதற்கான பிராயச்சித்தம் செய்யவும் வைத்து விட்டார். குருவின் பார்வையில் இருந்து எதுவும் தப்ப இயலாது. பகவான் விவேக்கின் விதிமீறலுக்கு பெரிதும் ஏதும் கூறாமல் பிராயச்சித்தம் செய்ய வைத்தது இந்த சாதுவிற்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்தது. 

யோகிஜி சாதுவை தனது அருகில் அமரவைத்து அவரது கரங்களைப் பற்றி ஆழ்ந்த தியானத்திற்கு அரைமணி நேரத்திற்கும் மேலாக சென்றார். அதன் பிறகு அவர் இரண்டு வாழைப்பழங்களை ஒன்றன்பின் ஒன்றாக உரித்து சாதுவிடம் உண்ண கொடுத்தார். சில பக்தர்கள் அனுப்பியிருந்த சில உலர் கொட்டைகளை உண்ணக் கொடுத்தார். டாக்டர். C.V.ராதாகிருஷ்ணன் இடம் அவர் திரும்பி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். சாது ஸ்ரீராம் நாயக் மற்றும் மவ்லங்கர் போன்றவர்களை யோகியிடம் அறிமுகப்படுத்தினார். நாங்கள்  மும்பையில் நடக்கும் ராம்நாம் குறித்து பேசினோம். யோகி, லீ லோசோவிக் எழுதிய கடிதங்களை சாதுவிடம் தந்தார், விஜயாவிடம் எந்த புத்தகத்தையும் வெளியிட வேண்டாம் என்று கடிதம் எழுதச் சொன்னார். சாதுவின் கடிதம் தாமதமாக வந்தமையால் தான் சாதுவின் ரேடியோ உரையை தவறவிட்டுவிட்டதாக கூறினார். இரண்டு மணிநேரங்கள் யோகியுடன் இருந்துவிட்டு நாங்கள் அறைக்கு திரும்பி ஓய்வெடுத்தோம். அதற்கு முன் யோகியை தரிசிக்க வந்திருந்த பேரா. தேவகியின் சகோதரி வசந்தா மற்றும் அவரது மகளை நாங்கள் சந்தித்தோம். அன்று மாலை நாங்கள் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். நாங்கள் அருணாச்சல மலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை குறித்து கோயிலின் நிர்வாக அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். பின்னர் நாங்கள் ரமணாச்ரமம், சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்திற்கு சென்று கிரிவலமும் வந்தோம். 

வெள்ளிக்கிழமை , மே – 18 அன்று நாங்கள் மீண்டும் குருவை காலையில் தரிசித்தோம். மவ்லங்கர் யோகியிடம் தனது கழுத்துவலி குறித்து கூற, யோகி சில ஆன்மீக குணமாக்கலை மேற்கொண்டார். யோகி, திருக்கோயிலூரை சேர்ந்த திரு. சிவராமகிருஷ்ண அய்யர் இடம் இருந்து ஒரு கடிதம் ஒன்றை பெற்றார். அதை சாதுவிடம் வாசிக்கச் சொன்னார். இந்த சாது யோகியிடம் கேரளாவில் நடந்த அதிராத்ரா சோம யக்ஞத்தில் கலந்து கொள்ள முடியாமை குறித்து கூறினான். பகவான் சாதுவிடம் அழைப்பிதழை எதிர்பாராமல் சென்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டார். சாதுவிடம் யோகி திருவண்ணாமலையில் 20 ஆம் தேதி வரை தங்க இயலுமா என கேட்டார். இந்த சாது யோகியின் கோரிக்கையின் பின் ஏதேனும் காரணம் இருக்கும் என முடிவு செய்து உடனே அதனை ஏற்றார். பகவான் மற்றவர்கள் சென்னை திரும்பலாம் என்றும் அவர்கள் சாதுவிற்காக காத்திருக்க வேண்டியதில்லை என்றும் கூறினார். விவேக் சாதுவுடன் இருக்க விரும்பினான், யோகி சிரித்தவாறே தான் சாதுவைத்தான் இருக்க சொன்னதாக கூறினார். விவேக் உணர்ச்சிவசப்பட்டான். யோகி அவனை அருகில் அழைத்து எட்டு அணாக்களை தந்து, நீ சந்தோஷமாக வீட்டிற்கு போகலாம் என்றார். பக்தர்கள் அனைவரும் சென்றவுடன் யோகி சாதுவுடன் சிறிது நேரம் செலவழித்தார். 

மாலையில் சாது பக்தர்களை ரமணாச்ரமம் அழைத்துச் சென்றார். அங்கே அவர்கள் இரவு உணவை முடித்தனர். யோகி சாதுவை பாலும் , பழங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு சொன்னதால் கணேசன் அதனையே ஏற்பாடு செய்தார். சாது துவாரகநாத், சந்தியா, பேரா. தேவகி, ரோஸோரா மற்றும் அனைத்து பகவானின் பக்தர்களையும் சந்தித்தார். தேவகி சேலத்தில் இருந்து ராமநாம எண்ணிக்கையை கொண்டு வந்திருந்தார். சாது கிறிஸ்டி மற்றும் பத்மா போன்றவர்களை மித்ரா நிலையத்தில் சந்தித்தார். ஆசிரமத்தில் இருந்து வந்தப்பின் அவர் மீண்டும் யோகியின் இல்லத்திற்கு வந்தார். பக்தர்கள் வெளியே காத்திருந்தனர். யோகியின் உதவியாளரான சிவா உள்ளே சென்று யோகியிடம் சாதுவின் வருகையை கூறினார். யோகி எங்களை வெளியே வந்து வரவேற்றார். நாங்கள் இரண்டு மணி நேரம் யோகியின் நாமத்தை கூறி செலவழித்தோம். இந்த சாது பின்னர் தனது அறைக்கு திரும்பினார். 

அடுத்தநாள் காலை இந்த சாது, ஸ்ரீராம் நாயக் மற்றும் மவ்லங்கர் போன்றோர் யோகியின் இல்லத்திற்கு வந்தனர். யோகி தேரடி மண்டபத்தின் மேலே அமர்ந்திருந்தார். இவர்களை பார்த்தவுடன் கீழே இறங்கி வந்தார். எங்களை இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து நாகலட்சுமி, பார்வதி மற்றும் அவரது அன்னை போன்றோர் எங்களோடு இணைந்தனர். பெண்கள் பெரியசாமி தூரன், தெ.பொ.மீ , கி.வா.ஜ ஆகியோரின் பாடல்களைப் பாடினர். யோகி எங்களுக்கு பால் மற்றும் டீ போன்றவற்றை ஆர்டர் செய்தார். இந்த சாது யோகியை பார்த்து ‘எனது நல்லதிர்ஷ்டமே தங்களை குருவாக பெற்றிருக்கிறேன்’ என நினைத்தார். இந்த சாதுவின் எண்ணத்தை படித்த யோகி, பார்வதியின் பக்கம் திரும்பி தனது உரையாடலை துவக்கினார். 

“இங்கே பார், பார்வதி, ரங்கராஜன் ஒரு சன்னியாசி. ஆனால் இந்தப்பிச்சைக்காரனை தனது குரு என்கிறார். எப்படி இந்த அழுக்குப்பிச்சைக்காரன் அவரின் குரு ஆக முடியும்? இது குறித்து நீ ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்புகிறாயா? இது சரியா? “ என்று கூறிவிட்டு சிரிக்கத் தொடங்கினார். பார்வதி பதிலளித்தார். 

“ அவர் மிகச்சரி, சுவாமி. “ 

பகவான் சிரித்தவாறே மீண்டும் கேட்டார். 

“எப்படி ஒரு அழுக்குப்பிச்சைக்காரன் ஒரு சன்னியாசியை சீடனாக கொள்ள முடியும்?“ 

“நீங்கள் சாதாரண பிச்சைக்காரனல்ல. நீங்கள் பிரத்யேகமான பிச்சைக்காரன்“ என்ற அவளின் பதிலைக் கேட்ட யோகி சாதுவின் முதுகிலும், தொடையிலும் கைகளால் தட்டி சிரித்தார். 

நாங்கள் பஜனையை தொடர்ந்தோம். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு பக்தரான கிருஷ்ணசாமி அவரது குடும்பத்துடன் வந்திருந்தார். அவர்கள் ஒரு பிஸ்கெட் பொட்டலத்தை குருவின் முன் வைத்தனர். குரு மூன்று பிஸ்கெட்களை எடுத்தார். அதில் இரண்டை சாதுவிடம் கொடுத்தார். சிவராமகிருஷ்ண அய்யர் எங்களோடு இணைந்தார். ஸ்ரீராம் நாயக் மற்றும் மவ்லங்கர் இருவரும் காஞ்சன்காடு செல்ல இருந்தனர். அவர்களிடம் இந்த சாது, பூஜ்ய சச்சிதானந்த சுவாமிகளுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். சிவராமகிருஷ்ண அய்யர் மற்றும் கண்ணன் இந்த சாதுவை அவரது அறையில் சந்தித்தனர். மாலையில் சாது மீண்டும் குருவிடம் சென்றார். ரோஸாரா மற்றும் சில பக்தர்கள் அங்கே காத்திருந்தனர். ரமணாச்ரமத்தை சேர்ந்த T.R. ஸ்ரீனிவாசன், ”மவுண்டன் பாத்” ஆசிரியர் திரு. கணேசன் வெளிநாடு செல்வது குறித்து கூறி பகவானிடம் ஆசி பெற வந்திருந்தார். குரு சில தகவல்களையும், ஆசியையும் ஸ்ரீனிவாசன் மூலம் கூறினார். நாங்கள் யோகியின் நாமத்தை கூறத்துவங்கினோம். பார்வதி மற்றும் அவரது தாயார் மற்றும் கிறிஸ்டி எங்களோடு இணைந்தனர். திடீரென குரு இந்த சாதுவின் பக்கம் திரும்பி  வினவினார்: 

“என் தந்தை என்னை ராமநாமத்தை உச்சரிக்கச் சொன்னார். ஆனால் இந்த பிச்சைக்காரன் அனைவரிடமும் தனது பெயரை உச்சரிக்கச் சொல்கிறான். அவன் பைத்தியம் தானே? “ 

“இல்லை“, இந்த சாது பதிலளித்தார். 

பார்வதி இணைந்து, “ராம் உங்கள் பெயரில் இருக்கிறது“ என்றார். குரு மீண்டும் சிரித்தார். 

குரு உள்ளே சென்று அவருக்கு வந்த சில கடிதங்களை கொண்டு வந்தார். அவைகளை சாதுவிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அதில் இருந்து ஒரு கடிதம் ஒன்றை எடுத்து தனது சார்பில் அதற்கு சாதுவை பதிலளிக்கச் சொன்னார். சாது அதனை ஏற்றுக் கொண்டார். நாங்கள் தொடர்ந்து நாமஜெபம் உச்சரித்தோம். குரு எங்கள் அனைவருக்கும் பால் ஆர்டர் செய்திருந்தார். திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய துவங்கியது. மின்சாரம் தடைப்பட்டு விளக்குகள் அணைந்தன. பகவான் பார்வதியிடம் திரும்பி, “பார், மழை வந்தால் ஒளியில்லை. பார்வதியின் தந்தை கவலைப்படுவார். நீங்கள் இந்தப் பிச்சைக்காரனிடம் வந்ததால் மழையில் நனைந்து, இருளினால் பீடிக்கப்பட்டீர்கள் என்று நினைத்து மீண்டும் இங்கு வர யோசிப்பீர்கள்” என்றார். 

பார்வதி பதிலளித்தார், “இல்லை சுவாமி. நாங்கள் வருவோம்“ அவளது தாயார் சுந்தரி, “உங்கள் பெயரால் ஒருவன் சம்சார சாகரத்தை கடப்பான் எனில் மழை, இருள் குறித்து கவலைப்பட என்ன இருக்கிறது?“ 

குரு ரங்கராஜனிடம் திரும்பி, “என்ன ரங்கராஜா? அவர்கள் இந்தப்பிச்சைக்காரனின் பெயர் அவர்களை காக்கும் என்கிறார். நீ அப்படி நினைக்கிறாயா? 

“இது குறித்த சந்தேகமே இல்லை“ என இந்த சாது பதிலளித்தார். 

சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்து விளக்கு எரிந்தது. பகவான் இந்த சாதுவிடம் திரும்பி தனது உரையாடலை தொடர்ந்தார்: “எண்ணற்ற பல புனிதர்கள் மறக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் ராமாயணமும், மகாபாரதமும் நினைவில் வைத்திருக்கப்படுகிறது. இந்தப் பிச்சைக்காரன் தனது பித்துநிலையில், ராமாயணமும், மகாபாரதமும் தனது லீலைகள் என்கிறான். நீ அதை சரி என்று நினைக்கிறாயா?“ 

“மஹராஜ், உங்களின் விஸ்வரூபத்தை கண்டவர்கள் நீங்கள் கூறுவதை புரிந்து கொள்வார்கள்“ என்று இந்த சாது பதிலளித்தான். 

“ ஓ! என் தந்தை ராம்தாஸ் தனது விஸ்வரூபத்தை காட்டினார், ஆனால் இந்தப் பிச்சைக்காரனால் அதை செய்ய முடியாது“ என குறிப்பிட்டார். 

“மஹராஜ், உங்கள் கருணையால், எங்களுக்கு அந்த காட்சியை காண தகுதி வரவேண்டும்“ என இந்த சாது பதிலளித்தார். குரு இந்த சாதுவின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்தார். இந்த சாதுவின் மனதில் எல்லாம் அவரே என்ற எண்ணம் தோன்றியபோது, “ரங்கராஜா, என் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறெதுவும் இல்லை, வேறெவரும் இல்லை. இந்தப் பிச்சைக்காரன் சுவாமி ராம்தாஸ் அவர்களின் பாதங்களில் 1952 ல் மரித்துவிட்டான். இப்பொழுது அவர் மட்டிலுமே இருக்கிறார்.“ அவர் மீண்டும் சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்து பிறகு தொடர்ந்தார்: “தந்தையே ரங்கராஜனில் இருக்கிறார். ரங்கராஜனே தந்தையுள் இருக்கிறார். என் தந்தை மட்டுமே இருக்கிறார். அனைத்தும் தந்தையே“. அங்கு கிடந்த சிகரெட் துண்டுகள், எரிந்த சிகரெட் ஆகியவைகளை காட்டி யோகி ராம்சுரத்குமார் மீண்டும் கூறினார்: “அனைத்தும் என் தந்தையே“ 

ஒரே நேரத்தில் சாது அதன் பொருளையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டார். யோகி குப்பைக்கு கூட கொடுக்கும் மரியாதையை புரிந்து கொண்டார். பகவான் எங்களிடம் அவரது பெயரைப் பாடுவது எங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லையா என வினவினார். அனைவரும் இல்லை என்றே பதிலளித்தோம். யோகி கூறினார், இந்த பாடலை சுவர்கள் கூட எதிரொலிப்பதை நான் தூங்கும்போதும் கேட்கிறேன். இந்த சுவர்கள் இந்த பாடலை உள்வாங்கி பின்னர் உமிழ்கின்றது. யோகி பின்னர் கிறிஸ்டியிடம் ராமநாம தாரக மந்திரத்தை காஞ்சன்காடு ஆசிரமத்தின் நடையில் பாடச் சொன்னார் . 

இந்த சாது அவரது பெயர் மிகப்பெரிய விளைவை தருவதாகவும், ஒவ்வொரு வானொலி உரையின் போதும் இந்த சாது இந்த பெயரை வேண்டியே துவங்குவான் என்றார். 

! நீங்கள் இந்தப்பிச்சைக்காரனின் பெயரை நம்பினால், இந்த பெயர் உங்களுக்கு வலிமையைத் தரும். இது தந்தையின் கருணை! நம்பிக்கை தரும் வலிமை! என குறிப்பிட்டதோடு, “ நாம் நமக்கு புலன்கள், அறிவு போன்றவை இருக்கின்றன என்கிறோம். இவைகள் மூலம் நாம் தந்தையை நாம் பார்க்க இயலுமா?“ 

“சரணாகதி மூலமாக மட்டிலுமே மஹராஜ்“, இந்த சாது பதிலளித்தார். 

நம்பிக்கை! அதுவே தேவை. இந்தப்பிச்சைக்காரன் தனது குருவின் வார்த்தையில் நம்பிக்கை வைத்திருந்தான். அவன் அவனது தந்தையை கண்டதில்லை. ஆனால் இந்தப்பிச்சைக்காரன் எனது குரு ராம்தாஸ் அவர்களின் வார்த்தையில் நம்பிக்கை வைத்திருந்தான் என்று பகவான் அடித்துக் கூறினார். 

ஒரு நாய் பகவானின் இல்லத்தின் அருகே வந்தது, பகவான் அதற்கு பாலை ஊற்றினார். இந்த நாய்க்கு கோயிலில் உணவு கிடைக்கவில்லை, அதனால் இங்கு வந்துள்ளது என்று பகவான் கூறினார். இந்த சாதுவின் மனதில் நாமும் இந்த நாயைப்போல் அல்லவோ இருக்கிறோம் என்று தோன்றியது. 

குரு தன்னை அனுப்பிய பிறகு, இந்த சாது அவனது அறைக்கு வந்து சேர்ந்தான். ஓட்டலுக்கு வந்த சாது சென்னை ஆசிரமத்துடன் தொலைபேசியில் பேசிய போது, பத்மநாபன் என்கிற மலேசிய பக்தர் ஒரு கடிதம் ஒன்றை பகவானுக்கு எழுதியிருந்தார் என்ற தகவல் கிடைத்தது. 

அடுத்த நாள், மே 20, இந்த சாதுவிற்கு ஒரு முக்கிய நாள். இந்த சாதுவை அன்றுவரையே திருவண்ணாமலையில் யோகி தங்குமாறு கூறியிருந்தார். விடியற்காலையில் சாது பகவானை சந்தித்து அவருடைய பெயருக்கு ஒரு கடிதம் சென்னை ஆசிரமத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தான். அதனை சென்னை சென்றபிறகு படிக்கலாம் என்றும், அதற்கு தேவைப்பட்டால் பதில் எழுதிவிட்டு தனக்கு பதிலின் ஒரு நகலை அனுப்புமாறும் யோகி கூறினார். பின்னர் சாது தனது உதவியாளரான ஜெயராமன் என்பவரை தனது இல்லத்தில் இருக்குமாறு கூறிவிட்டு, எனது கரங்களைப் பற்றி நடந்து சென்றார். நாங்கள் சிவகாசி நாடார் லாட்ஜ் சென்றோம். முத்து என்ற உதவியாளர் எங்களை வரவேற்றார். ஒரு திருமணம் தரைதளத்தில் நடந்து கொண்டிருந்தது. யோகியின் வருகையை அறிந்த சிலர் அவரது ஆசியை பெற வந்தனர். அங்கே யோகி நான்கு மணிநேரம் சாதுவோடு செலவழித்தார். அங்கே தொடர்ச்சியாக யோகி, “தந்தை மட்டுமே இருக்கிறார்!“ என்று கூறியவண்ணம் இருந்தார். அவர் பகவத்கீதையின் பாடல்களை திரும்பத் திரும்ப கூறினார். 

அநந்யசேதா  ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ | 

தஸ்யாஹம் ஸூலப பார்த நித்யயுக்தஸ்ய யோகிந ||

நித்திய யோகத்திசைந்து , பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் அகப்படுவேன், பார்த்தா. ( பகவத்கீதை 8 – 14 ) 

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே | 

தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம் || 

வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன். ( பகவத்கீதை 9 – 22 ) 

ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸமுத்ரமாப: ப்ரவிஸந்தி யத்வத் | 

தத்வத்காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே ஸாந்திமாப்நோதி காமகாமீ ||

கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலை கொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது அசையாமல் இருப்பவன் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான். (  பகவத்கீதை 2 – 70 ) 

இதுவே ராம்தாஸ் எனக்கு கற்று தந்தது என்றார் யோகி ராம்சுரத்குமார். 

அவர் பாடினார்:

யுக் யுக் ஸே  ஆர்ஜித  ராஷ்ட்ர  தன் ஹை ராம் நாம், ராம் நாம்; 

யுக் யுக் ஸே  பூஜித  தேஷ் தன் ஹை கிருஷ்ண நாம், கிருஷ்ண நாம் ; 

யுக் யுக் ஸே  சேவித  ஜாதி தன் ஹை சிவ நாம், சிவ நாம்; 

யுக் யுக் ஸே  பூஜித  ராஷ்ட்ர  தன் ஹை ராம்  கிருஷ்ண  சிவ நாம், ராம் கிருஷ்ண  சிவ நாம் ! 

இந்த தேசத்தின்  செல்வமாக பல்லாண்டுகளாக சேர்த்தது ‘ராமநாமம்’; இந்த தேசத்தின் செல்வமாக பல்லாண்டு காலமாக வணங்கப்பட்டது  ‘கிருஷ்ணநாமம்’; இந்த தேசத்தின் செல்வமாக பல்லாண்டு காலமாக சமூகத்தால் போற்றப்பட்டது ‘சிவநாமம்’; இந்த தேசத்தின் செல்வமாக பல்லாண்டு காலமாக வணங்கப்பட்டது , ‘ராம – கிருஷ்ண – சிவ நாமம்’. 

அவர் மேலும் யோகி தொடர்ந்து பாடினார். 

ஜெய் ஜெய் பாரத ஜனனி, ஜெய் ஜெய் பாரத மாதா ; 

ஜெய் ஜெய் மாத்ரு பூமி , ஜெய் ஜெய் பித்ரு பூமி ; 

ஜெய் ஜெய் தேவ பூமி , ஜெய் , ஜெய், ஜெய் ! 

அன்னை பாரதத்திற்கு வெற்றி , அன்னை பாரதத்திற்கு வெற்றி ; தந்தை நாட்டிற்கு வெற்றி ; கடவுளின் நிலத்திற்கு வெற்றி , வெற்றி வெற்றி அவளுக்கு வெற்றி ! 

இந்த சாது பகவானிடம் தனது கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட் ) புதுப்பிக்க விண்ணப்பித்திருப்பதாக கூறினார். எனது தந்தை அதனை புதுப்பித்து தருவார் என்று கூறி, எந்த நாடுகளுக்கு சாது செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக கேட்டார். திரு. மகேந்திரா இந்த சாது தென்ஆப்பரிக்காவிற்கு மீண்டும் வரவேண்டும் என்று விரும்புவதாக கூறினார். லண்டனில் இருக்கும் சில நண்பர்களும் அவர் வரவை விரும்புவதாக கூறினார். யோகி சாதுவை வெற்றிகரமான அயல்நாட்டு பயணத்திற்கு ஆசீர்வதித்தார். 

பகவான் ஒரு சிறிய தூக்கத்திற்கு சென்ற போது, இந்த சாது தனது 108 காயத்ரி ஜபம், யோகி ராம்சுரத்குமார் நாம ஜெபம் மற்றும் ராம்நாம் தாரக மந்திர ஜபம் ஆகியவற்றை செய்தார். 

காலை 10 மணிக்கு ஒரு டாக்டர் குடும்பம் வந்தது. பின்னர் கேரளாவின்  டாக்டர். T.I. ராதாகிருஷ்ணன் அவர்களை ஜெயராமன் அழைத்து வந்தார். யோகி சாதுவை அவரிடம் அறிமுகப்படுத்தினார். சாது அவர்களிடம் தான் அதிராத்ரா சோம யாகத்தை தவறவிட்டுவிட்டதையும் தனக்கு அழைப்பிதழ் வராததையும் கூறினார். டாக்டர். ராதாகிருஷ்ணனும் தனக்கு ஹிந்து வாய்ஸ் இன்டர்நேஷனலிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என்று கூறினார். பகவான் ஜெயராமன் இடம் “மவுண்டன் பாத்” ஆசிரியர் கணேசனை அழைத்து வரும்படி கட்டளையிட்டார். நாங்கள் பகவான் முன் அமர்ந்து இருந்த பொழுது அவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது ஆன்மீக ஆற்றலை செலுத்திக் கொண்டிருந்தார். சாதுவின் அருகில் இருந்த குழந்தை ஒன்று தரையில் இருந்த தானியங்களை எடுத்து, சாதுவின் நீட்டிய கரங்களில் போட்டது, பகவான் இதன்மூலம் தொல்லைப்படுத்தப்பட்டதாக நினைத்த சாது கரங்களை எடுத்துக்கொண்டார். பகவான் தான் அந்த குழந்தை மூலமாக சில உதவிகள் பெற நினைத்ததாகவும் ஆனால் இந்த சாது இடைமறித்து விட்டதாகவும் கூறினார். 

சிறிது நேரம் கழித்து பகவான், டாக்டர். T.I ராதாகிருஷ்ணன், கணேசன், ஜெயராமன் மற்றும் இந்த சாது அனைவரும் டாக்டரின் காரில் கணேசன் அவர்களின் ஆனந்தரமணா இல்லத்திற்கு சென்றோம். அங்கே மீதமிருந்த நாளை அதிராத்ரா யக்ஞம் பற்றி பேசி செலவழித்தோம். குரு புகை பிடிக்க விரும்பி டாக்டர். T.I. ராதாகிருஷ்ணன் அவர்களின் அனுமதியை கேட்டார். டாக்டர் சிரித்தவாறே, ஒரு டாக்டராக நான் மக்களை சிகரெட் குடிக்க வேண்டாம் என அறிவுறுத்துவேன். ஆனால் குரு புகைபிடிக்க விரும்பினால் தனக்கு எதிர்ப்புக்கள் ஏதுமில்ல என்றார். மேலும் டாக்டர் தனது சகோதரனின் உடல்நிலையை சீர்செய்ய அவன் புகைப்பிடிப்பதை தான் எவ்விதம் நிறுத்தினேன் என்று விளக்கினார். பகவான் சிரித்துக்கொண்டே டாக்டரிடம் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் நீங்கள் எனக்கு வைத்தியம் பார்ப்பீர்களா என வினவ, டாக்டர், “நிச்சயமாக நான் திருச்சூரில் இருந்து வந்து உங்களை கவனித்துக் கொள்வேன் “ என்று பதிலளித்தார். 

குரு, டாக்டரிடம், காலையில் நாடார் சத்திரத்தில் அமர்ந்திருந்த போது, தனக்கு புகை பிடிக்கும் பழக்கம் எப்படி வந்தது என்று ரங்கராஜனிடம் விளக்கியது குறித்து பேசினார். யோகி, “பப்பா ராம்தாஸ் எனக்கு தீக்ஷை அளித்து ஒரு வாரம் கழித்தே இந்தப்பிச்சைக்காரனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் அவன் பித்து நிலையை அடைந்தபோது வந்தது“ என்றார்.  மேலும் யோகி, “முன்பெல்லாம் யாராவது இந்தப்பிச்சைக்காரன் அருகில் அமர்ந்து புகைப்பிடித்தால் அவனுக்கு தலைவலி வந்துவிடும்“ என்றார். டாக்டர் யோகியிடம் பகவானிடம் ஒரு நாளைக்கு எவ்வளவு சிகரெட்டுக்கள் பிடிக்கிறீர்கள் என கேட்க, “ இந்தப்பிச்சைக்காரனைச்சுற்றி மக்கள் இருக்கையில் அவன் புகைபிடிப்பான். அவன் தனியாக இருக்கும் போது அல்ல,“ என்று யோகி பதிலளித்தார். டாக்டர் குருவிடம் தனது மன்னிப்பை கோரி ஒரு பெரும் இலக்கியவாதியான ஜான்சன் அவர்களின் சிகரெட் குறித்த ஒரு துணுக்கை கூறினார்: “நெருப்பு ஒரு முனையில்,  மற்றொரு முனையில் ஓர் முட்டாள்“ குரு உட்பட நாங்கள் அனைவரும் வெடிச்சிரிப்பை உதிர்த்தோம். 

கணேசன் அதிராத்ர  சோம யாகம் குறித்து டாக்டரிடம் விசாரித்தார். டாக்டர் தனக்கு அரசிடமிருந்து, விஞ்ஞானத் துறை அமைச்சகத்தில் இருந்து, அல்லது சமயத் துறையைச் சார்ந்த தலைவர்களிடம் இருந்தோ எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றார். ஆன்மீக துறையை சேர்ந்த சுவாமி சின்மயானந்தா, சுவாமி விஷ்ணு தேவானந்தா போன்ற ஒரு சிலர் மட்டுமே இந்த யாகத்திற்கு ஆதரவு அளித்தனர் என்றும் கூறினார். “ஆனால் யோகி ராம்சுரத்குமார் மட்டுமே எங்களுக்கான ஊக்கத்தையும், வலிமையையும் யக்ஞம் நடத்துவதற்கு தந்தார். நாங்கள் 15 லட்சம் ரூபாய் செலவு செய்தோம். இந்த யாகம் ஒரு மகத்தான வெற்றி அடைய பகவான் தனது கருணையும் ஆசிகளையும் வழங்கினார். அதனாலேயே அவருக்கு எங்களது நன்றியறிவித்தலை தெரிவிக்க நான் நேரடியாகவே வந்தேன்,” என்றார் டாக்டர். யோகியின் கருணையை குறித்து மேலும் சில விவரங்களை பகிர்ந்தார். யாகத்தின் கடைசிநாள் அன்று பெரும் மழைபொழிவும், கருடனின் தரிசனமும் ஏற்பட்டது. சக்கர நாற்காலியில் இருந்த சுவாமி விஷ்ணுதேவானந்தா கடைசிநாள் அன்று எழுந்து ஒரு நண்பரின் உதவியுடன் நடக்க ஆரம்பித்தார் என்று கூறினார். இந்த சாதுவிற்கு சுவாமி சின்மயானந்தா உடன் இருந்த தொடர்பை பகவான் மூலம் அறிந்த டாக்டர் தனது மகிழ்வை வெளிப்படுத்தினார். இந்த சாது டாக்டரிடம் தனது இளமை காலத்தில் தான் சுவாமிஜியால் புடம் போடப்பட்டதாக கூறினார். 

கணேசனின் தாயார் எங்களுக்கு மதிய உணவை கொண்டு வந்தார். மாலையில் டிபன் எடுத்து வந்தார். டாக்டர் T.I. ராதாகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் பகவானின் கருணையால் யக்ஞம் வெற்றி அடைந்தது என்றார். ஆனால் பகவான் பணிவோடு அதனை மிகைப்படுத்துதல் என்றார். டாக்டர் T.I.R தான் நிதர்சனமான உண்மையை கூறுவதாக சொன்னார். பகவானை பொருத்தவரை அனைத்தும் தந்தையின் லீலையே. ஒரு ஜெர்மன் டாக்டர் வந்திருந்தார். அவரை டாக்டர் T.I.R இடம் அறிமுகப்படுத்தினர். டாக்டர் T.I.R கணேசனின் தாயார் உடல்நிலை குறித்து விசாரித்தார். 

பகவான் மிகுந்த களைப்பாகவும், ஓய்வற்ற தன்மையிலும் காணப்பட்டார். அவர் சிறிதுநேரம் சாய்ந்து ஓய்வெடுத்து கொண்டார். பின்னர் அவர் எழுந்து டாக்டர் T.I.R இடம் தன்னை தனது இல்லத்திற்கு திரும்ப அழைத்து செல்லுமாறு கூறினார். நாங்கள் அனைவரும் யோகிஜியின் இல்லத்திற்கு திரும்பி வந்தோம். அங்கே பல பக்தர்கள் காத்திருந்தனர். டாக்டர்.T.I.R யோகியிடம் இருந்து விடைப்பெற்றார். சாதுவும் டாக்டரின் பாதுகாப்பான திருச்சூர் பயணத்திற்கு வாழ்த்தினான். பகவான் சாதுவிடம் லாட்ஜுக்கு சென்று ஓய்வு எடுத்து விட்டு வருமாறு கூறினார். இந்த சாது லாட்ஜ் அறைக்கு வந்து அந்த நாளின் ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்தான், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அற்புத பக்தரான மகேந்திரநாத் குப்தா பதிவு செய்து எழுதிய, “ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்“ என்ற நூலையே இந்த சாது நினைவில் கொண்டான். அனைத்தையும் எழுதி முடித்தப்பின் இந்த சாது கோயிலுக்கு சென்று தெய்வீக அன்னையின். அலங்காரத்தை பார்த்தான். பின்னர் அவன் பகவானின் இல்லத்திற்கு சென்று அவர் ஓய்வெடுப்பதை பார்த்தான். சாது ஜெயராமனிடம் குரு ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதால் தான் காலையில் வருவதாக கூறினான். அங்கிருந்த மற்ற பக்தர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். 

அடுத்தநாள் காலை இந்த சாது சீக்கிரமாக எழுந்து, தனது ஜப சாதனாக்களை முடித்துவிட்டு பகவானின் இல்லத்திற்கு சென்றான். பகவான் வராண்டாவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். தஞ்சாவூரை சேர்ந்த ராம்தாஸ் என்கிற, ஒரு பள்ளியின் மேலாளர், மற்றும் அவரது இரு நண்பர்களும் யோகியிடம் வந்திருந்தனர். குரு இந்த சாதுவிடம் தான் ஏன் வராண்டாவிற்கு வந்தேன் என விளக்கினார்: “இந்தப்பிச்சைக்காரனை அவ்வப்போது பல மனிதர்கள் பார்க்க வருகிறார்கள், ஒவ்வொரு முறையும் வெளியே வந்து கதவை திறப்பதும், பிறகு உள்ளே போவதும் இந்தப் பிச்சைக்காரனுக்கு சிரமமாக இருப்பதால் இங்கேயே ஓய்வெடுக்கத் துவங்கிவிட்டேன்.” குரு என்னிடம் “நீ சென்னை போக விரும்புகிறாயா?”  எனக்கேட்டார். இந்த சாது நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ அதை செய்கிறேன் என்றான். யோகி டாக்டர்  T.I.R அவர்களை சந்திக்கவே சாதுவை இருக்கச்சொன்னதாகவும், அந்த வேலை முடிந்ததன் காரணமாக அவன் எப்போது வேண்டுமானாலும் கிளம்பலாம் என்றும் கூறினார். யோகி உள்ளே சென்று ஒரு பை நிறைய பிரசாதங்களை சென்னை பக்தர்களுக்கு விநியோகிக்க கொடுத்தார். சாது யோகி இடம் ‘தத்துவ தர்சனா’ இதழ் தயாரானவுடன் வழக்கம்போல் அதனை வெளியிட தான் வருவேன் என்று கூறினான். சாது யோகியிடம் அவருக்கு வந்த கடிதங்களுங்கு அவரின் உத்தரவின்படி பதிலளித்து விடுவதாக கூறினான். அந்த பதில் கடிதங்களை நிவேதிதா அவரது தரிசனத்திற்கு வருகையில் தந்து அனுப்புவதாக இந்த சாது கூறினான். குரு, சாதுவின் தண்டத்தை கையில் எடுத்து அதனை சக்தியூட்டி அவனிடமே தந்தார். சாதுவின் சிரட்டையையும் ஆசீர்வதித்து அவனிடமே தந்தார். கதவருகே நின்று கைகளை உயர்த்தி சாதுவின் உருவம் மறையும் வரை ஆசீர்வதித்து நின்றார்.

அந்த வாரம் முழுவதும் சாது பகவானின் பக்தர்களை வரவேற்பதிலும், அவர்களை பார்த்து அனுப்புவதிலுமே செலவழித்தார். ஸ்ரீராம் நாயக் மற்றும் மவ்லங்கர் மும்பைக்கு திரும்பினர். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த திரு. A.V. ராமமூர்த்தி சாதுவைப் பார்க்க வந்தார். சாது,  இசையமைப்பாளர் இளையராஜாவிடம், தொலைபேசியில், பகவான் அவரிடம் சொல்ல சொன்ன சேதியை சொன்னார். மே 28 , 1990 ல் இந்த சாது பகவானுக்கு ஒரு கடிதம் எழுதினார்: 

“பூஜ்ய ஸ்ரீ குருதேவ், 

 வந்தே மாதரம்! ஓம் நமோ பகவதே யோகி ராம்சுரத்குமாராயா ! ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! உங்களது புனிதமான பாதங்களில் எனது தாழ்மையான வணக்கமும், அடிபணிதலும்!

இந்த தாழ்மையான சீடன் இன்னமும் தங்களின் புனிதமான இருப்பின் முன்னிலையில், திருவண்ணாமலையில் தங்கி இருந்த நான்கு நாட்களின் நினைவுகளோடே இருக்கிறான். நமது பம்பாய் நண்பர்கள் காஞ்சன்காட்டில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு இங்கே திரும்பி வந்து, இன்று காலை பம்பாய் கிளம்பினர். 

இந்த சாது திரு. இளையராஜாவிடம் திரு. ஞானப்பிரகாசத்தின் புத்தகத்தின் பதிப்பு குறித்து பேசினான். அவர் எங்களை புத்தகத்தின் அச்சுப்பணிகளை ஏற்பாடு செய்யுமாறும், அதன் செலவு எவ்வளவு ஆகும் என்று தனக்குத் தெரிவிக்குமாறும் கூறினார். நாங்கள் அப்படியே செய்வோம்.

நீங்கள் உத்தரவிட்டப்படி நாங்கள் கடிதங்களுக்கு பதில் கடிதங்களை எழுதிவிட்டோம். அந்த பதில் கடிதங்களின் நகல்களையும், தங்களுக்கு விலாசமிடப்பட்ட கடிதங்களையும், குமாரி நிவேதிதா உங்களை சந்திக்க வியாழக்கிழமை 31 – 5 – 1990 அன்று அங்கே வருகையில் அவளிடம் தந்து அனுப்புகிறோம்.

திரு. K.P. சிவக்குமார், “மேக் ஹிஸ்டரி”யின் எடிட்டர், தனது மகன் கார்த்திக் உடன் வருகிறார். கார்த்திக் உயநயனம் 20 – 05 – 1990 அன்று நடைப்பெற்றப்பின், நீங்கள் விரும்பியபடி, தங்களை காண வருகிறார்கள். சிவக்குமாரின் மகள் காயத்ரி, மற்றும் நமது யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கத்தின் பக்திநிறைந்த சேவகர்களின் ஒருவர்,. குமாரி லதாவும், குமாரி நிவேதிதா உடன் வருகிறார்கள். நமது காரணங்களுக்காக பக்தியோடு பணிபுரியும் அவர்களுக்கு தயை கூர்ந்து உங்கள் தரிசனத்தை வழங்கவும். 

யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் தங்களது வேத வகுப்புகளை காயத்ரி ஜெயந்தியான 2-6-90 ல் துவக்குகின்றனர். அன்றே ஒரு சிறப்பு சத்சங்கத்தையும் நடத்த இருக்கின்றனர். அதன் அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நாங்கள் உங்களின் ஆசியையும், கருணையையும் வேண்டுகிறோம். சிரஞ்சீவி. விவேக் தனிப்பட்ட முறையில் உங்களிடம் 01-06-90 அன்று நேரில் வந்து உங்கள் ஆசியை வேத வகுப்புகளின் துவக்கத்திற்கு பெறுவார். 

தாழ்மையான வணக்கத்துடன், 

உங்கள் தாழ்மையான சீடன், 

சாது ரங்கராஜன்

இணைப்பு : மேலே குறிப்பிட்டபடி.” 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s