Glimpses of A Great Yogi in Tamil – Part 2
Currently being shared for proof reading!
Full Book – https://yogiramsuratkumarblog.wordpress.com/glimpses-of-a-great-yogi-in-tamil/
ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – II
சீடன் கண்ட தீக்ஷா குரு
ஆங்கில மூலம் : சாது பேராசிரியர். V. ரங்கராஜன்
தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்
அத்தியாயம் 2.1
குருவே தாய், குருவே அரசன்
மே – 12, 1988ல் இந்த சாது குருவைக்காண அவரது இல்லத்திற்கு சென்றான். இதற்கு முன்னதாக ஏப்ரல் 28, 1988ல் வியாழக்கிழமையில், திருவண்ணாமலை பப்பா ராம்தாஸ் அவர்களின் குகையில் யோகியாரிடம் தீக்ஷை பெற்றிருந்தேன் பெற்றிருந்தேன். தத்துவ தர்சனின் சிறப்பிதழில் திடீரென, எதிர்பாராமல் நடந்த தீக்ஷை நிகழ்ச்சி குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்தது. மேலும் அவ்விதழின் தலையங்கத்தில், “பிச்சை எடுக்கும் உரிமை” என்ற தலைப்பில் யோகியின் கட்டளைப்படி, இந்த சாதுவால் எழுதப்பட்ட கட்டுரையும் இருந்தது. இந்த இதழ் பாண்டிச்சேரியில் உள்ள யோகியின் பக்தர்களின் சபையில் வெளியிடப்பட்ட உடனேயே, மே – 8 ஆம் தேதியே, யோகியிடம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் சாதுவும் சில பிரதிகள் அடங்கிய கட்டுக்களை எடுத்துக் கொண்டு, யோகியை தரிசிக்க ஆர்வம் கொண்டிருந்த இளம் பக்தரான V. ரங்கநாதன் என்பவரையும், சாதுவின் மகனான விவேகானந்தனையும் அழைத்துக் கொண்டு சென்னையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு கிளம்பி இரவு 7.30 மணிக்கு திருவண்ணாமலை அடைந்தார். சாது எப்போதும் தனது வருகை குறித்து முன்பே யோகிக்கு தெரிவிப்பதன் காரணமாக, யோகி அவர்களுக்காக காத்திருந்தார். இந்த பயணம் குறித்து ரங்கநாதன் என்ற பக்தர் தத்துவ தர்சன் இதழில் எழுதும் போது, “நாங்கள் இரண்டு முறைக்கு மேல் அவரது வீட்டின் கதவை தட்டவில்லை, முகத்தில் புன்னகை தழுவ கதவைத் திறக்க வந்த யோகி, எங்கள் வரவை எதிர்ப்பார்த்தது போல் இருந்தது. நாங்கள் அனைவரும் அவர் பாதங்களில் பணிந்தோம். பின்னர் யோகி பேராசியர் ரங்கராஜனின் உடல் நலம் குறித்தும், அவர் திட்டமிடப்பட்டிருந்த ட்ரினிடாட் மற்றும் பிற நாடுகளின் பயணம் குறித்தும் விசாரித்தார். யோகி ஒரு தாயானவள் தனது பிள்ளைகளை வரவேற்பதைப் போல் வரவேற்றார்.”
திருவண்ணாமலைக்கு வரும் முன் சாது எழுதிய இரண்டாவது கடிதம் பகவானின் கரங்களை ஏனோ அடையவில்லை. அதில் சாது, திருமதி. இந்திராணி என்பவர் ட்ரினிடாட்டில் இருந்து யோகியை காண வருவதாக எழுதியிருந்தார். மேலும் சாது யோகியிடம் நேற்று தனக்கு வந்த தொலைபேசி அழைப்பின்படி, திருமதி. இந்திராணி வந்து கொண்டிருப்பதாகவும் அவர் நாளை திருவண்ணாமலை வந்து தங்களோடு இணைவார் என்றும் தெரிவித்தார். யோகி அனைவரையும் வராண்டாவில் அமரவைத்துவிட்டு அவர் படியில் அமர்ந்து கொண்டார், அதுவே அவரது சிம்மாசனம். சாது யோகியிடம் பாண்டிச்சேரி சந்திப்பு குறித்து விளக்கினார். யோகி சாதுவிடம் அவரது எதிர்கால நிகழ்ச்சிகள் குறித்து கேட்டதோடு, அவரது அனைத்து விரிவுரைகளும், நிகழ்ச்சிகளும் வெற்றி பெற வாழ்த்தினார். மேலும் சாதுவின் பணிகளுக்கு உதவுவதற்காக ரங்கநாதனையும் யோகி ஆசீர்வதித்தார்.
ரங்கநாதன் அன்றைய நிகழ்வுகளைக்குறித்து விவரிக்கையில் குறிப்பிடுகிறார்: “யோகி ராம்சுரத்குமார் தத்துவ தர்சன் இதழ் குறித்து விசாரித்தார். சாது புதிய இதழான பிப்ரவரி – ஜூன் 1988 இதழின் சில பிரதிகளை யோகியிடம் தர, யோகி அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை அங்கிருப்பவர்களுக்கு விநியோகம் செய்யச் சொன்னார். யோகி பேராசிரியரை அவரது தீக்ஷை குறித்த கட்டுரை மற்றும் தலையங்கமான, “பிச்சை எடுக்கும் உரிமை” என்ற கட்டுரையையும் வாசிக்கச் சொன்னார். இந்த இதழ் வெளியிட ஆகும் செலவு குறித்தும், அதனை எவ்வாறு நிறைவேற்ற முடிகிறது என யோகி கேட்க, சாது தனது சில நண்பர்கள் உதவுவதாக சொன்னார். யோகி அதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்ததோடு, மேலும் நிறைய சந்தாதாரர்கள் வரவேண்டும் என ஆசீர்வதித்தார்.
“நாங்கள் அனைவரும் ஒர் வரிசையில் அமருமாறு சொல்லப்பட்டோம். பேராசிரியர் வரிசையின் தலைப்பகுதியில் அமர்ந்திருந்தார். இன்னொரு நபரை, யோகி எனதருகில் அமரச்சொன்னார். யோகி பின்னர் ராமநாமத்தை உரத்த குரலில் பாடத்துவங்க, நாங்கள் அனைவரும் அவரோடு இணைந்தோம். எனக்கு அருகில் இருந்தவரை அழைத்த யோகி, அவரைச் சென்று தேரடி மண்டபத்தில் இருக்கும் ஒரு சிறுவனை அழைத்து வருமாறு சொன்னார். அந்தச் சிறுவன் வந்தப்பிறகு அவனை சென்று சில கோப்பைகள் பால் வாங்கி வருமாறு சொன்னார். அந்தச் சிறுவன் சென்றபிறகு பாடல் துவங்கியது. நாங்கள் சிறிதுநேரம் ராமநாமத்தையும், பின்னர் அன்னை பாரதம் குறித்த பாடல்களையும் பாடினோம். பின்னர் யோகி பேராசிரியரின் விரிவுரைகள் குறித்தும் விசாரித்தார், பின்னர் மிகத் தெளிவான குரலில், ‘என் தந்தை உன்னை ஆசீர்வதிக்கிறார் ! உனது விரிவுரைகள் அனைத்தும் மகத்தான வெற்றியை அடையும். ஆனால் நீ விரிவுரைகளை துவங்கும் முன், சாத்தியமெனில், இந்தப் பிச்சைக்காரனின் பெயரை ஒருமுறை நினைவில் கொள்ளவும். என் தந்தை உடனடியாக உனக்கான உதவிகளை உடனடியாக அனுப்புவார்.’ பேராசிரியர், பாண்டிச்சேரியில் நடந்த சமீபத்து விரிவுரை மற்றும் யோகி குறித்த அவரது பேச்சு குறித்தும் விளக்கியதோடு, தட்சிணாமூர்த்தியில் தொடங்கி யோகி ராம்சுரத்குமார் வரையிலான குரு பரம்பரை வரிசைக்கு ஒரு வணக்கம் செலுத்தும் பாடலை அங்கு பாடியதையும் விளக்க யோகி தனது கரங்களை உயர்த்தி ஆசீர்வதித்தார்.”
“பேராசிரியர் தனது சமீபத்து இதழை அச்சடிக்க சில பொருளாதார நெருக்கடிகள் வந்ததாகவும், அதனை தான் யோகியின் பெயரை உச்சரித்து உதவிகளைப் பெற்றதாகவும் கூறினார். யோகி, “ எப்போதெல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ, அப்போது இந்தப் பிச்சைக்காரனை நம்பிக்கையோடு அழையுங்கள். என் தந்தை உடனடியாக உங்களுக்கு உதவுவார். எனக்கும் எனது தந்தைக்குமிடையே ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. யாரெல்லாம் என் பெயரை, அழைக்கிறார்களோ, என் தந்தை உடனடியாக உதவியை அனுப்புவார்.’ யோகி ராம்சுரத்குமார் எழுந்தார். தனது வீட்டிற்குள் நுழைந்து, எங்களுக்காக ஒரு பழைய பாடல் ஒன்றின் பிரதி ஒன்றை அவர் எடுத்து வந்தார். அது ஆர்தர் ஹில்கோட் என்ற ஆஸ்திரேலிய பக்தர் எழுதிய பாடல். அது யோகியின் நாமத்தின் மகிமையை கூறியது. அதனை யோகி பேராசிரியரிடம் தந்து அவரை சிறிது காலம் வைத்திருக்கச் சொன்னார்.
அந்த ஆங்கிலப்பாடலின் தமிழ் மொழிப்பெயர்ப்பு:
யோகி ராம்சுரத்குமார்
– ஆர்தர் ஹில்கோட்
ஆஸ்திரேலியாவிலிருந்து நான் பயணித்திருந்தாலும்
உண்மையில் நான் வெகுதூரம் பயணித்திருந்தேன்
வழியில் வந்த ஒரு புனிதமான மனிதர்
யோகி ராம்சுரத்குமார்.
அவரோடு அமைதியில் அமர்ந்தேன்
அன்பை உள்ளுக்குள் கனமாக உணர்ந்தேன்
இறுதியில் நான் அவர் முன்பிருந்தேன்
நான் நீண்ட நேரம் காத்திருந்தேன்.
பலமுறை நான் அவரது ஆசியை பெற்றிருக்கிறேன்
என்னுள் இருக்கும் கடவுள் அசைந்தது
அமைதியில் ஒரு தூண்டல்
தானாகவே நிகழ்ந்தது.
அவர் கூறினார் “எப்பொழுது உனக்கு ஒரு பிரச்சனையெனில்,
அதற்கு நீங்கள் அடிபணிந்து விடுவீர்கள் என உணர்ந்தால்,
நீங்கள் என் பெயரை ஒருமுறை அழையுங்கள்
என் தந்தையே வருவார்”
பின்வந்த வாரத்தில் பிரச்சினை வந்தபோது
அதனை என்னால் தாங்க முடியாமல்
நான் யோகியின் பெயரைச் சொல்லி அழைத்தேன்.
அடுத்த கணம் – நான் தந்தையின் பாதுகாப்பில் இருந்தேன்.
நான் எனது மிகுந்த நன்றியை தினமும்
வழங்கப்பட்டு வரும் அருளுக்காக சமர்ப்பிக்கிறேன்.
கண்களை மூடி அமர்ந்தால்
நான் யோகியின் புனித முகத்தைப் பார்க்கிறேன்.
நான் ஏன் இவ்விதம் தொலைதூரத்திலிருந்து
இவ்வளவு தூரம் கொண்டு வரப்பட்டேன் என
அடிக்கடி ஆச்சரியப்பட்டேன்.
ஆனாலும் நான் அவரை எப்போதும் அன்புடனே பார்ப்பேன்.
–யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு.
“ஒரு மனிதன் எங்களோடு இணைந்து வரிசையில் அமர்ந்தார். வெளியே சென்றிருந்த சிறுவன் சில கோப்பைகள் பாலோடு வந்தான். யோகிக்கு கொண்டு வந்த பால் எனக்கு பிரசாதமாக கிடைக்குமா என்று ஆர்வத்தோடு எண்ணிக்கொண்டிருக்க, ஆச்சர்யமூட்டும் வகையில் யோகி பேராசிரியரின் மகனான விவேக் இடம், அங்கிருக்கும் அனைவர் முன்பும் ஒரு கோப்பை பால் வைக்குமாறு கூறினார். அங்கிருந்தவர்களுக்கு போதுமான அளவு கோப்பையும், பாலும் இருந்தது. பேராசிரியர் ஒரு சிரட்டையை பாலினை ஊற்றுவதற்காக கொண்டுவந்து தர அதில் பால் ஊற்றப்பட்ட சிரட்டையை கையில் வாங்கி அதிலிருந்து சிறிது பாலை தனது சிரட்டையில் ஊற்றிக் கொண்டு அதனை ஆசீர்வதித்து கொடுத்தார். குரு ஆசீர்வதித்த சிரட்டைக்கும் பார்வை இருக்கும் என்பது போல் அந்த சிரட்டையில் கண்களைப் போன்று இரண்டு அடையாளங்கள் இருந்ததை நாங்கள் அந்த சிரட டையை கவனித்து கண்டறிந்தோம்.
“யோகி தனது தெய்வீக குரலால் ராமநாமத்தை பாடத்துவங்கினார். அவரது ஆன்மாவைக் கிளறும் தெய்வீக குரலானது ஆன்மாவை ஊடுருவும் வண்ணம் அமைந்தது. நாங்கள் வேறு உலகத்திற்குள் பிரவேசித்தோம். எங்கள் குருவே, தெய்வீகத்தாயாகவும் இருப்பவர். மிகுந்த இரக்கத்துடனும், கருணையுடனும் அந்நாளின் அனைத்து தேவைகளையும் எங்களுக்கு பூர்த்தி செய்தார். நமக்கான தேவை என்பதே அவர் முன்னிலையில் இருக்காது. யோகியின் இருப்பினால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிரப்பப் பட்டிருந்தோம். “
பகவான் ஒரு பக்தரை சாதுவுடன் அனுப்பி உடுப்பி பிருந்தாவன் ஓட்டலில் எங்களுக்கான அறைகளை இரவு தங்கவதற்காக பதிவு செய்யச் சொன்னார். யோகி விவேக்கிடம் ட்ரினிடாடை சேர்ந்த திருமதி. இந்திராணி அவர்களின் வருகை மற்றும் அடுத்த நாளுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் விசாரித்தார். யோகி நாங்கள் அனைவரும் ரமணாச்ரமம் சென்று அங்கே நடக்கும் ஆராதனைவிழாவில் கலந்து கொள்ளவேண்டும் என விரும்பினார். சாது சென்ற பிறகு, யோகி வராண்டாவில் சிறது நேரம் அமர்ந்து ஆழமாக தனக்குள் மூழ்கினார். சிறிது நேரம் கழித்து சாதுவும், அவரோடு சென்று வந்த நண்பரும் திரும்பி வந்துவிட, நாங்கள் அனைவரும் பாடத்துவங்கினோம். எங்கள் அனைவருக்கும் மெல்ல பசியெடுக்கத்துவங்கியது. உடனே யோகி எங்களோடு இருந்த ஒருவரை அழைத்து அவரிடம் சிறிதளவு பணம் தந்து, அவரிடம் அனைவரும் சாப்பிடுவதற்கு ஏதேனும் வாங்கிவருமாறு கூறினார். அந்த மனிதர் சென்றவுடன், யோகி, “நாம் ஒன்றாக செலவிட இன்னும் சிறிது நேரம் இருக்கிறது“ என்று கூற நாங்கள். தொடர்ந்து பாடினோம். யோகி திடீரென எழுந்து, வீட்டிற்குள் சென்றார், உள்ளேயிருந்து ஒரு பொரி பொட்டலமும் தண்ணீரும் கொண்டுவந்தார். ரங்கநாதனிடம் அதனைத்தந்து அனைவருக்கும் கைநிறைய பொரியை வழங்குமாறும் கூறிவிட்டு யோகியும் சிறிதளவு எடுத்துக் கொண்டார். எங்கள் அனைவருக்கும் தண்ணீர் குடிப்பதற்கு தந்தார். நாங்கள் தொடர்ந்து நாங்கள் ராமநாமத்தையும், பாரதமாதா மீதான பஜனைகளைப் பாடினோம்.
யோகி, சாதுவிற்கு தீக்ஷை தந்தபிறகு அவரது இல்லத்தில் தந்த முதல் இரவு உணவு குறித்து ரங்கநாதன் விவரிக்கிறார்: “யோகி அனுப்பிய மனிதர் எங்களுக்கு உண்பதற்கான உணவைக் கொண்டு வந்தார். யோகி பேராசிரியரின் உணவை அவரிடம் தந்து எங்களையும் உண்ணுமாறு கூறினார். நாங்கள் இனி சாப்பிட முடியாது என்ற நிலையில், யோகி, “வருந்தாதீர்கள், உங்களால் உண்ண முடியவில்லையெனில், பசுவிற்கு கொடுத்து விடுங்கள்” என்றார். ஒரு பசு யோகியின் இல்லத்தின் அருகே நின்றிருந்தது. அவர் எங்களது கரங்களை கழுவிக் கொள்ள தண்ணீரைத் தந்தார். நாங்கள் மேலும் சிறிது நேரம் அவரோடு அமர்ந்திருந்தோம். மொத்த நேரமும் நாங்கள் ராமநாமத்தை சொன்னோம். அதன்பிறகு யோகி எங்களை தங்கும் விடுதிக்கு சென்று ஓய்வெடுக்குமாறு கூறினார். நாங்கள் யோகியின் பாதங்களில் விழுந்து வணங்கி விடைப்பெற்றோம்.” சாதுவிற்கு மறக்க இயலாத நினைவாக அந்த இரவுணவு அமைந்தது. யோகி சாதுவினருகே அவரது சிம்மாசனமான படிக்கட்டில் அமர்ந்து கொண்டார். தனது சீடனான சாதுவின் தட்டிலிருந்த சாம்பார் மற்றும் சட்டினியில் ஊறிய தோசையை, சாது முழுங்க தயங்கியபோது யோகி அதனை எடுத்து சாப்பிட்டார். மூன்று மணிநேரம் யோகியோடு செலவழித்தப்பின் நாங்கள் எங்கள் அறைக்கு வந்து சேர்ந்தோம்.
சாது மறுநாள் காலை எழுந்து தனது வழக்கமான சடங்குகளான சந்தியாவந்தனம் போன்றவற்றை முடித்தார். சாது விவேக் மற்றும் ரங்கநாதனை ரயில் நிலையம் சென்று திருமதி. இந்திராணியை அழைத்துவரச் சொன்னார். ஆனால் இன்ப அதிர்ச்சியாக சாதுவின் குருவான யோகி ராம்சுரத்குமார் ரங்கராஜன் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அதிகாலையிலேயே வந்து சேர்ந்தார். சாது அவரை வரவேற்று தனது படுக்கையில் அவரை அமரவைத்தார். அதே நேரத்தில் விவேக், ரங்கநாதனுடன் திருமதி. இந்திராணியும் வந்து சேர்ந்தார். நாங்கள் எங்கள் அனைவருக்கும் காபியை ஆர்டர் செய்தோம். பகவான் கூறினார், “இந்தப் பிச்சைக்காரன் உங்களோடு கோயிலுக்குச் சென்று அங்கே சிறிது நேரம் செலவழிக்க விரும்புகிறான். நீங்கள் அனைவரும் தயாராக இருக்கிறீர்களெனில், நாம் அனைவரும் அங்கே இப்போதே போகலாம்.” என்றார். ரங்கநாதன் மட்டும் குளியலை முடிக்காதமையால் சிறிது தயங்கினார். அதற்கு பகவான், அனைவரும் தயாராகும் வரை தான் காத்திருப்பதாக கூறினார். நாங்கள் அமர்ந்து சிறிது நேரம் ராமநாமத்தை சொன்னோம். ரங்கநாதன் தயாரானவுடன், பகவான் எழுந்து எங்களை அறையை பூட்டிவிட்டு தன்னோடு வருமாறு கூறினார்.
யோகி கோயிலுக்குச் செல்லும் போது ஒரு அரசனைப்போல் ராஜநடைப்போட்டுச் சென்றார். நாங்கள் அவரைப் பின்தொடர்ந்து ஒரு உண்மையுள்ள ஊழியனைப் போல் சென்றோம். ரங்கநாதன் இதைப்பற்றிக் குறிப்பிடும்போது மிகச்சரியாக கூறுகிறார்: “ நேற்று அவர் ஒரு இரக்கமுள்ள தாயாக முன்னிரவில் காட்சியளித்தார். ஆனால் இப்போதோ அவர் அனைத்து சக்திகளும் கொண்ட அரசனைப் போல் காட்சியளித்தார்”. அவர் கோயிலுக்குள் நுழையும் போது, அது ஜூலியஸ் சீசர், ரோம நாட்டின் அரண்மனைக்குள் நுழைவதைப் போல் இருந்தது. கோயில் இருக்கும் சாலையின் இரண்டு புறங்களிலும் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்கள் அவரை கைகளைக் கூப்பி வணங்கினர், யோகியும் பதிலுக்கு அவர்களை தன் கரங்களை உயர்த்தி ஆசீர்வதித்ததோடு, அங்கிருந்த அனைவரின் முகத்தையும் ஆர்வத்தோடு பார்த்தார். தனது பாதங்களில் விழுந்து வணங்கிய பக்தர்களையும் அவர் ஆசீர்வதித்தார்.
கோயிலின் வளாகத்தில் நுழைந்த யோகி, வலது புறமாக திரும்பி எங்களை பிரகாரத்தின் ஒரு மூலையை நோக்கி வழிநடத்தினார். அவர் பிரகாரத்தின் வெளியே நின்று கொண்டிருந்த பெரிய மரத்தை பார்க்குமாறு சொன்னார். இரண்டு பெரிய தேன் கூடுகளும் அதிலிருந்து தேனானது சொட்டிக்கொண்டும் இருந்தது. யோகி அவைகளை தனது அரசவையின் பெருமை மிகுந்த உடைமை என்பதைப் போல் பார்த்தார். யோகி அந்த தேன் கூடானது துவக்கப்பட்டது முதல் அடைந்த வளர்ச்சியை தொடர்ந்து கவனித்திருப்பார் என்றே தோன்றியது. இயற்கை அன்னையின் சுயநலமில்லாத கொடையைக் கண்டு வியந்த யோகி அதிலிருந்து அனைவரும் பாடம் கற்க வேண்டும் என விரும்பினார்.. தேன்கூடுகளை சிறிதுநேரம் கவனித்துக் கொண்டிருந்த யோகி எங்களை நேரடியாக கோயிலின் உள்ளே இருக்கும் தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு அழைத்துச் சென்றார். தட்சிணாமூர்த்தி கோயிலின் ஸ்தல விருட்சமான மகிழமரத்திற்கு கீழே இருக்கும் சன்னதி ஆகும். நாங்கள் அனைவரும் தட்சிணாமூர்த்தியின் சீடர்களைப் போல் அவர்முன் அமர்ந்தோம். சிறிது நேரம் யோகி மௌனத்தில் ஆழ்ந்திருந்தார், நாங்கள் அனைவரும் அவரது ஞானவார்த்தைகளை கேட்க காத்திருந்தோம். அவர் எங்களிணம் பேசத் தொடங்கினார். அவர் பேசிய தலைப்பு, “வலியத்தாக்கும் ஹிந்துமதம்“. யோகி, “வலிமையே மதம். எது பலவீனமாக்குகிறதோ அது மதமல்ல.” சாது, சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை யோகி எதிரொலிப்பதாக உணர்ந்தார். மேலும் யோகி, “ ஆத்மனே, நான், சதையல்ல” யோகி எங்களை நோக்கி, “சந்தனக்குழம்பு மிகவும் குளிர்ச்சியானது. ஆனால் இரண்டு சந்தனக்கட்டைகளை ஒன்றாக உரசினால், அதிலிருந்து தீப்பொறி வரும்.” மேலும், “ இன்றைய தேவை, “வலியத்தாக்கும் ஹிந்துமதம்“. நீங்கள் தொடர்ந்து பாவம் செய்ய முடியாது, என் தந்தை, சிவா, மிகுந்த இரக்கம் உடையவர். அவர் மிகுந்த பொறுமையுடையவர். ஆனால் அவர் கோபம் அடைந்தால், எங்கும் பேரழிவே. மஹாபிரளயமே.”
திடீரென அங்கே வந்த ஒரு வயதான பெண்மணி, யோகியின் பாதங்களில் விழுந்து வணங்கி, பகவானிடம் தனது புகார்களை சொல்லத் துவங்கினாள், “சுவாமி, போனவாரம் முழுவதும் நான் இங்கு வந்து உங்களைத் தேடினேன் சுவாமி, ஆனால் உங்களை பார்க்கவே முடியவில்லை சுவாமி“ என்றாள். அவள் சுவாமி என குறிப்பிட்டது யோகியை, ஆனால் யோகியோ சிரித்தபடியே அவளது வார்த்தைக் கொண்டு வேறுவிதமாக விளையாடினார். “நீங்கள் இங்கே ஒருவாரமாகத்தான் சுவாமியைத் தேடி வருகிறீர்கள், ஆனால் நானோ சுவாமியை நீண்ட காலமாக தேடி வருகிறேன், இதுவரை என்னால் கண்டறிய முடியவில்லை.” என்று கூறிய யோகி சிறிய இடைவெளி விட்டு, “அவர் இங்கேதான் எங்கோ இருக்க வேண்டும். நீ அவரைத்தேடு, நானும் தேடுகிறேன். சிலர் அவர் இங்கே இல்லை என்கின்றனர். ஆனாம் நாம் அவர் இங்குதான் எங்கேயோ இருக்கிறார் என நினைக்கிறோம். இங்கே அவர் இல்லை என்று சொல்வது தவறு. நமக்கு நம்பிக்கையிருக்குமெனில், அவரை நம்பிக்கையோடு தேடுங்கள். நாம் நிச்சயம் அவரை கண்டுபிடிப்போம். நீ இந்த வழியாகச் சென்று அவரைத்தேடு, நான் அந்த வழியாகச் சென்று அவரைத் தேடுகிறேன். நாம் நிச்சயமாக அவரை கண்டறிவோம். அவரை நாம் இழக்கமாட்டோம். அவர் நிச்சயமாக இங்கேதான் எங்கேயோ இருக்கிறார். “ என்று கூறிவிட்டு யோகி இடைவிடாது சிரிக்கத் தொடங்கினார்.
யோகி எங்களை நோக்கித் திரும்பி பின்வருமாறு தொடர்ந்தார், “வலிமை மட்டிலுமே மதம். பலவீனமாக்கும் எதுவும் மதமல்ல. நீங்கள் அனைவரும் மிகுந்த சக்தி கொண்டவர்கள், நீங்கள் அனைத்தும் அறிந்தவர்கள், நீங்கள் பரிபூரண ஆனந்தமானவர்கள். அவநம்பிக்கை கொண்டவர்களாக இருக்காதீர்கள். நீங்கள் அவநம்பிக்கை கொண்டிருந்தால், அனைத்தையும் இழப்பீர்கள். நீங்கள் ஆத்மன் என்று நம்புகிறீர்கள் அல்லவா. அதனை உங்களிடமே சொல்லுங்கள். பல வருடங்களாக அதனை சொல்லி வாருங்கள். அதன்பின் என்ன நடக்கிறதென்று பாருங்கள்.”
ரங்கநாதன் மிக மிருதுவாக இந்த இடத்தில் குறுக்கிட்டு, “ஆன்மாவிற்கு துணிவிருக்கிறது, ஆனால் சதையோ பலவீனமாயிருக்கிறது“ என்று கூற, யோகி பதிலளித்தார், “ஆமாம். சதை பலவீனமானதுதான். இந்த உடல் அழுகக்கூடியதே. அதனால்தான் நான் உங்களை ஆத்மனோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளச் சொல்கிறேன். நானொரு ஆத்மன் எனச் சொல்லுங்கள், அதன்பின் என்ன நடக்கிறதென்று பாருங்கள்.”
குருவிடமிருந்து வழிந்த ஏராளமான இந்த ஞானம் குறித்து ரங்கநாதன் பின்வருமாறு குறிப்பிடுகிறார், ”அவர் உயர்ந்த உண்மைகளை எளிய வார்த்தைகளில் எங்களுக்கு பகிர்ந்தார். அவர் எங்களுக்கு அறிவை தந்தார். முந்தையநாள் இரவு அவர் எங்களுக்கு உணவையும், தங்குமிடத்தையும் தந்தார், அடுத்தநாளே எது உண்மையான அறிவோ அதனை தந்தார். வேறென்ன நாம் அவரிடம் கேட்க வேண்டியுள்ளது?”
இந்திராணி தன்னுடைய மங்களகரமான, தங்கத்திலான, தாலியை யோகி ஆசீர்வதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சாதுவிடம் வைக்க அதனை அவர் யோகியிடம் சமர்ப்பித்தார். யோகி தாலியை தனது கரங்களில் பெற்று சூரியனை நோக்கி உயர்த்திப் பிடித்து சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்து அதனை இந்திராணியிடம் தந்து அதனை உடனே அணிந்துக் கொள்ளச் சொன்னார்.
பின்னர் யோகி எங்களை கோயிலைச் சுற்றி அழைத்துக் கொண்டு சென்று மேற்கு புறத்தில் அமர செய்து, அருணாச்சல மலையின் நுனியை கவனிக்குமாறு உத்தரவிட்டார், அவரும் அதனை ஐந்தில் இருந்து பத்து நிமிடங்கள் வரை கவனித்த பின், “வலிமையே மதம்” என்று திரும்பத் திரும்ப கூறினார். கோயிலை சுற்றிவருகையில் யோகி, “ஒரே நிலையில் இருக்கவே முடியாது, ஒன்று நீங்கள் விரிவடைய வேண்டும் அல்லது சுருங்க வேண்டும். நாம் விரிவடைய இதுவே நேரம்.” என கூறி எங்கள் இலக்கை யோகி ராம்சுரத்குமார் காட்டினார்.
கோயிலை பிரதட்சணமாக வந்து வடக்கு வாசலை அடையும் போது, யோகி எங்களை ரமணாச்ரமத்தில் நடக்கும் ஆராதனா விழாவில் கலந்து கொள்ள செல்லுமாறு கூறிவிட்டு, எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு அவர் கோயிலுக்குள் நடந்து சென்றார்.
இந்த சாது விவேக், ரங்கநாதன் மற்றும் இந்திராணி உடன் ரமணாச்ரமம் நோக்கி நடந்தான். அங்கிருக்கும் ஆசிரம அதிகாரிகளுடன் சிறிது நேரம் செலவழித்தப்பின், விருந்தினர்கள், மற்றும் சென்னையைச் சேர்ந்த சுவாமி தேவானந்தா ஆகியோருடன் சிறிது நேரம் கழித்து விட்டு, நாங்கள் அனைவரும் மேற்கு புறத்தில் உள்ள பேய் கோபுரம் நோக்கி நடந்து மலையேற துவங்கினோம். விவேக், இந்திராணியை தங்கும் அறைக்கு அனுப்பிவிட்டு, இந்த சாதுவோடும், ரங்கநாதனோடும் இணைந்தார். நாங்கள் ஆலமர குகைக்குச் சென்றோம். எங்கே யோகி இந்த சாதுவிற்கு தீக்ஷை அளிப்பு நிகழ்த்தினாரோ அங்கே சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு, மலையைவிட்டு இறங்கினோம். நாங்கள் கோயிலைச் சுற்றி இருக்கும் சில பக்தர்களின் இல்லங்களுக்குச் சென்றோம். அதன்பின் மீண்டும் யோகியின் இல்லத்திற்கு திரும்பி அவருடன் மாலைநேரத்தை செலவிட நினைத்தோம்.
யோகியின் இல்லத்திற்கு மாலை ஆறுமணிக்கு வந்து சேர்ந்தோம். யோகி வாசலில் எங்களுக்காக காத்திருப்பது போல் அமர்ந்திருந்தார். அவர் தனது வழக்கமான தலைப்பாகையை அணிந்திருக்காமல் தனது தலைக்கேசத்தை அவிழ்த்து விட்டிருந்தார். அவர் ஸ்ரீ அரவிந்தரைப்போல் காட்சியளித்தார். அவர் எங்களை வராண்டாவில் அமரச்சொல்லிவிட்டு எங்களை ஆர்வமாக கவனிக்கத் தொடங்கினார். ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அதிஷ்டானத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், பக்தருமான திரு. வீரராகவன் தனது மனைவியோடும், தனது தாயாரோடும் வந்T யோகியிடம் அதிஷ்டான சஞ்சிகையின் சில இதழ்களை தந்தார்.
ஒரு பால்காரர் யோகியின் வாசலுக்கு வந்து நின்றார். யோகி விவேக்கிடம் தனது மண்பானையில் பாலை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். விவேக் பாலைப்பெற்று யோகியிடம் தர, யோகி அந்த பானையிலிருந்து நேரடியாகவே பாலை அருந்தத்தொடங்கினார். அங்கிருந்த ஒரு பெண் பக்தர் யோகியிடம் பாலை காய்ச்சி தரட்டுமா என்று வினவ, யோகி அவரிடம், “இந்தப்பிச்சைக்காரன் தனக்கு என்ன கிடைக்கிறதோ அதனை அப்படியே எடுத்துக் கொள்வான். அவன் அனைத்தையும், எதையும் எடுத்துக் கொள்வான்.”
ரங்கநாதன் அதன்பின் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறார். “யோகி வந்திருந்த வழக்கறிஞரிடம் பேராசிரியரை அறிமுகப் படுத்தினார். அந்த வழக்கறிஞர், பேராசிரியர் குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆவல் கொண்டபோது, யோகி பேராசிரியரிடம் சகோதரி நிவேதிதா அகாடமி மூலம் செய்யப்படும் வேலைகள் குறித்து விளக்குமாறு கூறினார். பேராசிரியரும் வழக்கறிஞரிடம் அகாடமியின் செயல்பாடுகள் குறித்தும், எப்படி அது துவங்கப்பட்டு எவ்விதம் ஆன்மீக தேசியவாதம் புதுப்பிக்கப்படுகிறது என்பது குறித்தும், யோகியின் ஆசியால் அகாடமியின் இதழான தத்துவ தர்சன் துவக்கப்பட்டது குறித்தும் பகிர, யோகி தனது தலையை அசைத்து அதனை ஆமோதித்தார். வழக்கறிஞர் தத்துவ தர்சன் இதழுக்கு சந்தாதாரர் ஆக விரும்புவதாக கூற, யோகி, “ஆம் எங்களுக்கு நிறைய சந்தாதாரர்கள்” தேவை என்றார். யோகி வழக்கறிஞரிடமிருந்து பணத்தைப் பெற்றார் அது ஒரு ஆண்டு சந்தாவைவிட அதிகமாகவே இருந்தது. யோகி அதனை ஆசீர்வதித்து பேராசிரியரிடம் தந்தார். சாதுவின் கரங்களை சிறிது நேரம் பற்றியிருந்து யோகி தியானித்தார். யோகிஜி வழக்கறிஞரிடம் பேராசிரியரின் விரிவுரைக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பரிந்துரைத்தார். யோகி, சாதுவின் பணிகள் ஒருபோதும் பணத்திற்காக சிரமம் கொள்ளாது என்றும், தனது தந்தை சாதுவின் உன்னதமான பணிகளுக்கு எப்போதும் உதவுவார் என்றும் ஆசீர்வதித்தார்.“
ரங்கநாதன் யோகியுடன் நடந்த எங்களுடைய சந்திப்பு குறித்த கட்டுரையை எழுதி முடிக்கும்போது, “குரு எங்களுக்கு உணவு, இருப்பிடம், அறிவு இவைகளோடு செல்வத்தையும் கொடுத்தார். பின்னர் அனைவரையும் அனுப்பிவிட்டு, யோகி எங்களிடம் வேறெதாவது வேண்டுமா என வினவினார். வேறென்ன அவரிடம் கேட்பது? அவர் எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து அனுப்பினார்“ என்று குறிப்பிடுகிறார்.
யோகியிடம் விடைப்பெற்ற நாங்கள் எங்கள் அறைக்கு வந்து சென்னை திரும்புவதற்காக பொருட்களை அடுக்கினோம். இந்திராணி பெங்களூர் சென்றார், நாங்கள் சென்னைக்கான பேருந்தைப் பிடித்தோம். பயணத்தின் போது எங்கள் அனைவரின் எண்ணமும் யோகியின் முன்னிலையில் நாங்கள் பெற்ற இறையனுபவத்தை மையப்படுத்தியே இருந்தது.
ஜெயது ஜெயது ராமசுரதகுமார யோகி, ராமசுரதகுமார யோகி!
One thought on “ஒரு மகா யோகியின் தரிசனங்கள் – 2.1”