The lyrics in Tamil for “Surata Kavacham” on Yogi Ramsuratkumar, written by Sri. Visiri Shankar is given here.
Surata Kavacham or Surata Kavasam is a Hymn in Tamil language written in praise of Yogi Ramsuratkumar, Godchild, Tiruvannamalai. It was recited by the author Sri Visiri Shankar in the Divine presence of Yogi Ramsuratkumar on 16th August 1995. The audio of this song was released by Yogi Ramsuratkumar Gurukshetram, Jaihindpuram, Madurai 625 011 in the year 2014. In this audio, the kavasam has been sung by Sow. K. Maathangi for the music composed by Sri. Nanda. Interested people may approach Sri Visiri Shankar / Yogi Ramsuratkumar Gurukshetram (cell: 99527 25753, 76672 12221, 93441 07298) to get the Audio CD.
The tune of this song, is similar to the famous Skanda Shashti Kavacham by Sri Bala Devaraya Swamigal on Lord Muruga. Like the Skanda Shashti Kavacham, this Surata Kavacham is also a mantra to replace the negative energies with positive energies, for succeeding in our worldly and spiritual pursuits.
Suratha Kavasam Audio can be downloaded from : https://onedrive.live.com/redir?resid=174EB7233AF3CE7%21345
சுரத கவசம் – திருவண்ணாமலை தெய்வகுழந்தை யோகி ராமசுரதகுமார் அவர்களை குறித்து திரு விசிறி சங்கர் இயற்றியது.
Audio Courtesy – Yogi Ramsuratkumar Gurukshetram.
Video Courtesy – Sri Visiri Shankar https://www.youtube.com/channel/UC5B2QUng2Q7d_Fn-ubWJ5KA
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜயகுரு ராயா!
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜயகுரு ராயா!
பச்சைப் பாகை தாங்கிய தலையுடன்
பிச்சை வேடம் பூண்ட முனிவன்
இச்சைகொண்ட எம்மை நாடி
கச்சை கட்டி வருகிறான் தேடி!
தேடி வந்திடும் தெய்வ குமாரா
நாடி எம்மை நாளும் வருக!
வருக வருக சுரதகுமாரா!
வருக வருக யோகி ராமா!
ராம நாமம் நெஞ்சினில் ஓங்க
காமக் குரோதம் கலைந்தே போக
கருணை வடிவினில் அருணையில் வந்த
பெருமையின் நாயக வருக! வருக!
இரட்டை விசிறி ஏந்திய கரத்தில்
சிரட்டை கோலுடன் கயிறும் தாங்கி
மறுகரம் தூக்கி மானுடம் காக்கும்
அறுமுகன் வடிவே அழகே வருக!
இன்பம் சூழும் வேளையில் வருக!
துன்பம் வாட்டும் போதிலும் வருக!
சினமது ஏறும் சிந்தையில் வருக!
குணமது ஆற குருவே வருக!
சரணம் பாதம் என்றே பணிந்திடும்
கரணம் ஒடுங்குங்காலையில் வருக!
நானெனும் ஆணவம் ஓங்கிடும் போது
தானது உதிர்ந்திடு மாலையில் வருக!
வெள்ளைத்தாடி காற்றினில் புரள
கொள்ளை அழகுடன் விசிறியைத் தூக்கி
மெல்ல மெல்ல எம்மை வெல்ல
வந்திடும் சுரத குமரனே வருக!
வருக வருக கங்கையின் புதல்வா
வருக வருக அருணையின் நாதா
வருக வருக கருணையின் கடலே
வருக வருக கதிரொளி நிலவே!
சக்கரவிசிறி கரந்தனில் ஏந்தி
சங்கினையொத்த சிரட்டையுந்தாங்கி
மரகதமாலை கயிற்றினை மார்பில்
வரதமும் அணியும் சுரதனே வருக!
வருக வருக வளர்தமிழ் அழகே!
வருக வருக வரந்தரு முகிலே!
வருக வருக பொதிகையின் தேனே!
வருக வருக புலவர்கள் நாவில்!
உச்சியில் பாகை ஒருதனி அழகில்
மெச்சிடும் வகையில் பச்சையில் தோன்றும்
பரந்த நெற்றி படர்ந்திடும் ஜோதி
நிரந்தரம் அழகில் நிலைத்திடும் ஆடி!
புருவம் இரண்டும் விரிந்திடும் சிறகு
நிறமது கறுப்பு வெள்ளையில் தோன்றும்
விழிகளின் அழகை மொழிந்திட வழியிலை
பழியுண்டு வார்த்தையில் பகர்ந்திட முனைந்தால்
கூரிய நாசி கொண்டிடும் வாசி
நேரிய அழகில் நிறமது ஒளிரும்!
கன்னக் கதுப்பை கிள்ளிட கரங்கள்
சொன்ன சேதி சொல்லிட மறந்தேன்!
வெள்ளை அருவி வீழ்வது போல
கொள்ளை அழகில் குளிர்தரு தாடி
சொல்லத் தமிழில் சொல்லுக்குப் பஞ்சம்
சொல்லா விடிலோ சுட்டிடும் நெஞ்சம் !
மணிமுடி கறுப்பாய் மலையெத் தோன்றும்
அணிந்திடும் பாகை கானகம் ஒக்கும்
வட்டச் சொட்டை பின்புற அழகு
விட்டுச்சென்றிட முடியா அழகு!
இதழ்கள் மறைந்து இதமாய் இருக்கும்
இதழ்கள் மலர்ந்தால் இசையாய் இனிக்கும்
முகமது பார்த்தால் முக்தியே கிடைக்கும்
சுகமது சொர்க்கம் அனுபவம் சொல்லும்!
கழுத்தினில் மாலை வரிசைகள் விளங்க
எழுத்தினில் அடங்கா இனிமையில் துலங்க
துளசிப் படிக தூமணி மாலைகள்
துவளும் அழகுடன் தோள்கள் விளங்க
சாத்திய சால்வை சரிந்திடும் அழகை
ஏற்றிப் பிடிக்கும் இருகரம் தாங்கி
மாற்றிச் சுற்றி மன்னவன் எழுந்தால்
போற்றிடத் தோன்றும் புனிதனின் மார்பை!
முழுக்கைச் சட்டை மூட்டினை மறைக்கும்
மடக்கிய கைகள் உரத்தினைக் காட்டும்
இடது கரத்தில் எல்லாம் இருக்கும்
விசிறி சிரட்டைத் தொகுதிகள் சிறக்கும்!
வலது கரத்தில் இருவிரல் அசைய
தருவது என்ன முத்திரை தானோ!
அல்லியின் மெல்லிய இதழ்களைப் போல
சொல்லிடும் வகையில் சுடர்மணி விரல்கள்!
இடுப்பினில் வேட்டி இறுகவே கட்டி
தொடுத்து இறங்கும் கால்களைச் சூழ்ந்து
அலை அலையாக துணியது ஆக
கலையாய் விளங்கும் கச்சிதமாக!
பாதங்கள் இரண்டு பங்கயம் திரண்டு
ஓதரும் அழகிய உருதனைக் கொண்டு
ராம சுரத குமரனாய் இன்று
வானகம் வந்தது பூமிக்கு நன்று!
மன்னவன் விசிறி மணி முடி காக்க
என்னவன் விசிறி என்றுமே காக்க
நெற்றிப் பரப்பை நேர்பட காக்க
சுற்றியே விசிறி சூழவே காக்க!
நாசியை என்றும் நல்விசிறி காக்க
வீசிடும் விசிறி புருவங்கள் காக்க
பேசிடும் வாயைப் பெருவிசிறி காக்க
பேசா ஞானப் பெருமையில் காக்க!
விழிகள் இரண்டையும் விசிறியே காக்க
விழிகளின் மணிகள் விளங்கவே காக்க
கன்னக் கதுப்பை கைவிசிறி காக்க
மன்னும் விசிறி மலைபோல் காக்க!
இருசெவி இரண்டும் இனிதே காக்க
வருவது விசிறி வரந்தரு விசிறி
ஐந்தனில் நாலை அடக்கிய முகத்தை
பைந்தமிழ் போல பழகியே காக்க!
சங்கு கழுத்தை சடுதியில் காக்க
எங்கும் விசிறி இயைந்தே காக்க
பொங்கும் தோள்களை போற்றியே காக்க
மங்காப் புகழின் விசிறியே காக்க!
திண்ணிய மார்பை திடமுடன் காக்க
திவ்விய விசிறி தினந்தினம் காக்க
அன்னை முலைப்பால் அருந்தவே காக்க
என்னை விசிறி என்றுமே காக்க!
வாழும் வயிற்றை வளமுடன் காக்க
நாளும் துணைவரும் நல்விசிறி காக்க
மழலைகள் பயக்கும் மணிவயிறு காக்க
வளரும் பிறைபோல் வந்தெமை காக்க!
கரங்கள் இரண்டையும் கருணையில் காக்க
வரங்கள் தந்திடும் வல்விசிறி காக்க
பத்து விரல்கள் பங்கய இதழ்கள்
சொத்து எனவே சூழ்ந்தவை காக்க!
ஆணின் பெண்ணின் அடையாளங்கள்
பேணிடும் விசிறி பெரிதே காக்க!
இருதொடை முழங்கால் இறங்கிடும் கணுக்கால்
அருள்தரும் விசிறி அனுதினம் காக்க!
உடலினைத் தாங்கும் ஓரிணை பாதம்
உயர்புகழ் விசிறி உடன்வந்து காக்க!
மாயக் குரங்கெனும் மனமது காக்க
ஓயா விசிறி உணர்ந்தே காக்க!
காலையில் மாலையில் கண்துயில் வேளையில்
வேலையில் ஓய்வினில் விசிறியே காக்க!
காட்டில் மேட்டில் கடும்பகை இருட்டில்
ஏற்றிடும் விசிறி எமையே காக்க!
காக்க காக்க கருணையின் விசிறி
நோக்க நோக்க நோக்கினில் கரைய
தாக்க தாக்க தளைகள் தகர
பார்க்க பார்க்க பரவசமாக!
அழகே! மலரே! அன்பின் கனிவே!
நிலவே குளிரே! நிர்மல ஒளியே!
தேனே! மானே! தெவிட்டா அமுதே!
ஊனே உருக்கும் உள்ளொளி சுடரே!
அகத்தினில் ஆலயம் அழகுற அமைத்து
யுகத்தினில் நீயே கதியெனக் குறித்து
சரணாகதியால் உனையே சேர்ந்து
வரமே கேட்டோம் தருக உவந்து!
திட்டம் போட்டே திருடிடும் கூட்டம்
திடுமென நுழைந்தே தாக்கிடும் கூட்டம்
பட்டப்பகலில் சுட்டுக் கொல்லும்
கெட்ட பயங்கரவாதிகள் ஆட்டம்!
வெறியுடன் திரியும் வீணர்கள் கூட்டம்
குறியென பெண்களை குறித்திடும் நாட்டம்
புலியென நின்றிடும் அடியனைக் கண்டால்
எலியென ஒடுங்கி எடுக்கனும் ஓட்டம்!
ஒருவரை ஒருவர் வெறியுடன் தாக்கும்
கலவர யுத்தக் கொடுமைகள் எல்லாம்
அடியவன் அங்கே எழுந்திடும் வேளையில்
அகன்றிடும் ஆற்றல் அருளிடல் வேண்டும்!
சுட்டிடும் நெருப்பு சூழ்ந்திடும் வெள்ளம்
தந்திடும் விபத்து தவிர்த்திட வேண்டும்!
வாகனம் ஓட்டிடும் வேளையில் நீயென்
சாரதியாய் வந்து காத்திட வேண்டும்!
விஷமுடன் பாம்பு நெருங்கிடும் வேளையில்
விசிறியாய் வந்து காத்திட வேண்டும்!
நீலகண்டன் போல எங்கள்
அமுதம் காத்து அருளிடல் வேண்டும்!
துஷ்ட விலங்குகள் தொலைவினில் நின்றிட
இஷ்டன் நீயெங்கள் அருகினில் வேண்டும்!
கஷ்டம் வந்திடும் வேளையில் கண்ணா
கண்ணீர் துடைக்க வந்திட வேண்டும்!
ஏய்ப்பு இளைப்பு இரத்தக் கொதிப்பு
வலிப்பு சுளிப்பு வாத இழுப்பு
மாரினில் அடைப்பு நாளங்கள் வெடிப்பு
கூறிடில் நோய்கள் கோடியைத் தாண்டும்!
சிகிச்சைகள் பெருக நோய்களும் பெருக
தவிக்கிது உலகம் தருமத்தின் குழப்பம்!
எய்ட்செனும் நோயால் யுகமே நடுங்குது
வைத்தியம் நீதான் வருக! வருக!
நோயும் வரட்டும் நொம்பலம் தரட்டும்
பேயே வரட்டும் பித்தே வரட்டும்
சாவே வரட்டும் சடுதியில் வரட்டும்
நாயேன் சொல்வேன் நாமம் ஒன்றே!
தீதுகள் என்ன தீமொழி என்ன
யாதும் என்னை என்னவே செய்யும்
ஓதும் நாமம் உனதே போதும்
மோதும் அவைகள் பொடிப்பொடியாகும்!
ஒளிதரு சுரனே! உயர்தனி சுரனே!
களிதரு சுரனே! கலி அழி சுரனே!
விண்ணின் சுரனே! விளங்கிடும் சுரனே!
மண்ணைக் காத்திடும் மணியாம் சுரனே!
பிள்ளைகள் நாங்கள் பெரும்பிழை செய்கையில்
கிள்ளை மொழியோய் வந்தெமை காக்க!
அறியா நாங்கள் அறிந்தே இழைக்கும்
குறியா பிழைகள் குறித்தே காக்க!
சுரனே! சுரனே! சுந்தரசுரனே!
சரணே! சரணே! உன்னிரு பதமே!
வரனே! வரனே! வழங்கிடு வரனே!
பரனே! பரனே! பரந்தாமனனே!
பறந்திடும் எனது சிறகுகள் ஒடுக்கி
இருந்திடும் இடத்தில் எனையே இருத்தி
தன்னில் தன்னை தானாய் காணும்
என்னில் என்னாய் இருந்தாய் வாழி!
சுர சுர சுர சுர சுர சுர சுரதா!
வர வர வர வர வர வர வரதா!
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹரனே!
ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெயனே!
கங்கையின் கொடையாய் பிறந்து வந்தாயே!
காசியின் அருளாய் தவழ்ந்து வந்தாயே!
இமயச்சாரலில் நடந்திருந்தாயே!
எமையே ஆளும் சுரத குமாரா!
பாலுக்கு அழுதாய் காஞ்சன் காட்டில்
பாலகன் நீயே சுரத குமாரா!
ராம தாசரின் அரவணைப் பினிலே
ஞானப் பாலினை அருந்தி வந்தாயே!
அண்ணா மலையில் ஆடிடும் குழந்தை
உண்ணும் போதும் உறங்கும் போதும்
தன்னுள் சொல்லிடும் மழலையின் நாதம்
மன்னுயிர் காக்கும் ராம நாமம்!
சுரத குமரனே! சுந்தர ரூபனே!
சுதாமா வதியும் சூட்சும வடிவே!
எங்கள் ராம்ஜி ஆஸ்ரமம் தனிலே
தங்கிடும் யோகி சுரத குமாரா!
கோயில் கொண்ட தெய்வமே எங்கள்
காணி மடத்தின் கருணை நாதா!
தேவகி மாதா விழியென காக்கும்
மூவா முதல்வா சுரத குமாரா!
தேடினேன் தேடினேன் தெய்வத்தை தேடினேன்
நாடினேன் நாடினேன் உன்னையே நாடினேன்
ஆடினேன் ஆடினேன் ஆனந்தத்தில் ஆடினேன்
பாடினேன் பாடினேன் பரவசம் பாடினேன்!
தெய்வக் குழந்தை திருவடி போற்றி!
தேவகி மாதா அருளடி போற்றி!
ராம சுரத குமரா போற்றி!
நாமம் சொல்வோம் உனதே போற்றி!
போற்றி! போற்றி! புனிதா போற்றி!
போற்றி! போற்றி! சுரதா போற்றி!
போற்றி! போற்றி! அருணையே போற்றி!
போற்றி! போற்றி! அருளே போற்றி!
சுரத கவசம் சொல்லிடும் பக்தர்
விரதம் ஒன்றே குருவிடம் பக்தி!
சரணடி சரணடி சரணடி சேர்வோம்!
சரணம்! சரணம்! சுரதா சரணம்!
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜயகுரு ராயா!
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜயகுரு ராயா!
Melodious divine song.jaya Guru Raya.
LikeLike
Thanks for sharing the Tamil lyrics here
Yogi Ramsuratkumar ki Jai
LikeLike